லீ குவான் இயூவுக்கு அஞ்சலி

Lee_Kuan_Singapore_Tamil_Nadu_Premier_President_Anjali

தலைவர்கள் மறைந்தால் இரங்கற்செய்திகள் வருவது புதிதல்ல. ஆனால் சிங்கப்பூரில் தன் 91 ஆம் வயதில் கடந்த திங்கட்கிழமை (23/03/2015) அதிகாலை உயிர்நீத்த சிங்கப்பூர் தஞ்ஜோங்பாகார் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான லீ குவான் இயூவுக்கான இரங்கலில் அமெரிக்க அதிபர் ஒபாமா, ‘மிஷலும் நானும் ஆழ்ந்த வருத்தமடைந்திருக்கிறோம். இவருடன் நான் 2009ல் நிகழ்த்திய உரையாடல்கள் அமெரிக்காவின் ஆசியபசிபிக் கொள்கை வகுப்பில் மிகமுக்கியப் பங்காற்றியிருக்கின்றன. தலைமுறைகளால் நினைவுகூரப்படப் போகும் பேராற்றல் மிக்க வரலாற்று மனிதரின் மறைவு,’ என்றும், மன்னார்குடி தாலுக்கா பரவாக்கோட்டையில் முருகையன் -பாக்கியலட்சுமி குடும்பத்தினரால் டீக்கடை, பேருந்து நிறுத்தங்களில் ‘இமயம் சரிந்தது. எங்களை வாழவைத்த தலைவனுக்குக் கண்ணீர் அஞ்சலி,’ என்றும் பிளக்ஸ்பேனர்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டிருப்பது வரலாற்றில் ஒருவேளை முதன்முறையாக இருக்கக்கூடும். யாரிந்த லீ குவான் இயூ?
வேண்டவே வேண்டாம் என்று கெஞ்சியும், காலத்தின் கட்டாயத்தால் ஆகஸ்ட் 9, 1965ல் தன்மேல் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட சுதந்திரத்தைச் சுமந்துகொண்டு சிங்கப்பூர் ஓடத்தொடங்கியது…அல்ல, தவழ ஆரம்பித்தது இவரது தலைமையில்தான். இந்த லீ குவான் இயூதான் சிங்கப்பூரின் முதல் பிரதமர். எந்த வலிவுமில்லாமல் குறைமாதத்தில் பிறந்துவிட்ட சிங்கப்பூர் என்ற சவலைப்பிள்ளையை மருந்து, உணவு, கல்வி என்று படிப்படியாகத் தன்பொறுப்பில் உரமேற்றி, ஒழுக்கத்தையும் போதித்து, திடகாத்திரமான பணக்கார வாலிபனாக மாற்றிவிட்டுத் தன் தலைமைப் பொறுப்பிலிருந்து 1990ல் விலகிக்கொண்ட ஒருவரை சிங்கப்பூரின் தந்தை என்று அழைப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. இன்னும் சில மாதங்களில் தன் பொன்விழாக் கொண்டாட்டத்திற்கு உற்சாகமாக ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் சிங்கப்பூருக்கு ஐம்பதாண்டுகள் கழித்துக் காலம் – மீண்டும் அந்நாடு கேட்கவிரும்பாத ஒரு செய்தியை, இம்முறை – லீயின் மறைவுச்செய்தியை அளித்துச்சென்றிருக்கிறது. விரும்பிப் பெறாததாலோ என்னவோ இன்றளவும் சுதந்திரதினமாக அல்லாமல் தேசிய தினமாகவே இந்நாள் சிங்கப்பூரில் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் ஆளுகைக்குட்பட்ட நாட்டில், வசதியான குடும்பத்தில் பிறந்தது முதல் இங்கிலாந்தில் சட்டம் படித்தது, கடவுள் நம்பிக்கை இல்லாதது, பிறந்த நாட்டுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் அரசியலுக்கு வந்தது, அந்த நாட்டுக்கே முதல் பிரதமராக ஆகி, சுமார் இருபது இருபத்தைந்தாண்டுகள் அதே பதவியில் வெற்றிகரமாக நீடிக்க முடிந்தது வரை நேருவுக்கும் லீயிக்கும் இயற்கையிலேயே அமைந்திருந்த பல யதேச்சையான ஒற்றுமைகள் போலவே அவர்களிடமிருந்து மக்கள் எதிர்பார்த்ததும் கொள்கையளவில் ஒன்றுதான்; தங்களுக்கும் தங்கள் சந்ததிகளுக்கும் பாதுகாப்புடன் கூடிய வளமான எதிர்காலம். ஆனால் அதில் ஒருவருக்குத்தான் அதைத்தன் காலத்திலேயே நிறைவேற்றித் தந்துவிட்டுப் புன்முறுவலுடன் ‘என் வேலைமுடிந்தது; திருப்தி,’ என்று விடைபெற வாய்த்திருக்கிறது.
வேலையென்றால் சாதாரண வேலையல்ல; 1960களில் இருபதுலட்சம் மனிதவளத்தையும் கப்பல் போக்குவரத்துக்கு ஏதுவான கேந்திர ரீதியான முக்கியத்துத்தையும் தவிர வேறு எந்தவிதமான இயற்கை வளமும் அறவே அற்றுப்போன, மீன்பிடிப்பதையும் மலேசியாவில் உற்பத்திசெய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்வதையும் தவிர்த்து வேறு எதற்கும் லாயக்கில்லை என்று ஒதுக்கப்பட்ட, சுமார் 600 சதுர கி.மீ துண்டு நிலத்தையும், அதன் மக்களையும் அடுத்த ஐம்பதே வருடங்களில் உலகத்தில் வாழ்வதற்கு உகந்த முதல் பத்து நாடுகளில் இடம்பெறச்செய்ய அஸ்திவாரமிட்ட வேலை. நீண்ட ஆரோக்கியமான ஆயுட்காலம், அறிவுத்திறன் (கல்வி), வாழ்க்கைத்தரம் (வருமானம்) ஆகிய மூன்றையும் கணக்கில்கொண்டு Human Development Index என்ற குறியீட்டால் – இது இந்தியப்பொருளாதார நிபுணர் அமர்த்யா சென்னும் பாகிஸ்தான் பொருளாதார நிபுணர் மஹ்பூப் உல் ஹக்கும் சேர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித்திட்டத்துக்காக உருவாக்கியது – அளவிடப்பட்டு நாடுகள் வாழ்வதற்கு உகந்ததாக வரிசைப்படுத்தப்படும் இம்முறையில் ஒரு கனவுதேசம் பெறக்கூடிய உச்சபட்ச மதிப்பு, ஒன்று. 2014ல் ஒன்பதாம் இடத்திலிருந்த சிங்கப்பூர் பெற்றிருந்தது 0.901. முதலிடம் பெற்ற நாடு நார்வே, 0.944. மற்ற எட்டு நாடுகள் ஆஸ்திரேலியா, ஸ்விட்ஜர்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, நியூஸிலாந்து, கனடா, டென்மார்க். புரிந்திருக்கும்; ஆம், கிட்டத்தட்ட ஐநூறுகோடிப்பேர் வாழும் ஆசியக்கண்டத்தின் ஒரே பிரதிநிதியாக வெறும் ஐம்பதுலட்சம் பேர் வசிக்கும், உலக வரைபடத்தில் பூதக்கண்ணாடி வைத்துப்பார்க்கவேண்டிய அளவுக்குச் சிறிய, சிங்கப்பூரை இடம்பெறச்செய்த மந்திரவேலை.
இப்பத்து நாடுகளையும் அதன் வரலாறு, வளங்கள், இனங்கள், மொழிகள் இவற்றுடன் ஆராய்ந்து இவ்வெற்றியைப் பொதுமைப்படுத்தவியலும் ஒருவர் அதிகபட்சமாக முயன்றாலும் சிங்கப்பூரை விதிவிலக்கு என்று ஒதுக்கிவிடுவதைத்தவிர வேறுவகையில் பொதுமையை விளக்குவது கடினம். அப்படியொரு விதிவிலக்கான வேலை. அதற்கான உழைப்பு லீ என்ற ஒரு தனிமனிதரிடமிருந்து மட்டும் வந்ததல்ல; கடந்த ஐம்பது வருடகாலத்தில் லட்சக்கணக்காண உள்நாட்டு, வெளிநாட்டினரிடமிருந்து வந்திருக்கிறது. ஆயினும் அவ்வுழைப்பில் ஒரு துளியும் சிதறிவிடாமல் ஒரே இலக்கை நோக்கிப்பயணிக்கச் சட்டமும் சட்டகமும் உறுதியாக அமைக்கப்பட்டது அவரது தலைமையில்தான்.
சில பத்தாண்டுகளில் குடிசை வீடுகளை அகற்றி அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டிவிடலாம், அதில் சுத்தமான குடிநீரையும் மின்சாரத்தையும் அல்லும்பகலும் தடையில்லாமல் வழங்கலாம், தரமான சாலைகளை அமைத்துவிடலாம், பொதுப்போக்குவரத்தை மேம்படுத்திவிடலாம், பள்ளிக்கல்லூரிகளையும், மருத்துவமனைகளையும் விமானதளத்தையும் அமைத்துவிடலாம், வெளிநாட்டு முதலீடுகளைக்கூட ஈர்த்துவிடலாம், பணம் பத்துஞ்செய்யும். ஆனால் லீயிற்காகக் காத்திருந்த மற்ற கேள்விகள் அவ்வளவு எளிதானதாக இல்லை; மூன்று பெரிய – சீன, மலாய, இந்திய – நாடுகளிலிருந்து தத்தம் கலாச்சாரங்களுடனும், அடையாளங்களுடனும், மொழிகளுடனும் பிரிந்துவந்து இச்சிறியதீவில் கூடியிருக்கும் மக்களை எப்படி ஒன்றிணைத்து ஒரே குறிக்கோளை நோக்கிச்செலுத்துவது? அதுவும் பிரிட்டிஷாரால் நூறுவருடங்களாக இம்மூன்று இனங்களும் இச்சிறியதீவிலும் – வழக்கம்போல் – தனித்தனிக் குடியிருப்புகளாகவே ஆக்கப்பட்டு, ஊழலில் வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட நிலையில் அவர்களை மாற்றுவது எளிதா? பெரும்பான்மை இனச் சீனர்களுக்குப் பன்றிக்கறி உயிர். முஸ்லிம்களான மலாய்க்காரர்களுக்கு அது தகாதது. அவர்களிருவரும் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள் ஆனால் இந்துக்களுக்குப் பாவம். இவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் பணியமர்த்தி, சாப்பிடச்செய்து, பழகச்செய்து, வம்புதும்பில்லாமல் தொழில்களை நடத்தி லாபம்பார்த்துவிடமுடியுமா? சீன, மலாய், தமிழ் இவற்றில் எதை அதிகாரபூர்வமான மொழியாகப் புழங்குவது? எதில் கல்விகற்பது? சாலைகளில் எச்சில்துப்புவோரையும், மலஜலம் கழிப்போரையும், குப்பை கொட்டுவோரையும் அரசு எத்தனை பேரை நியமித்துக் கண்காணித்துத் திருத்தமுடியும்? கையிலிருக்கும் ஒரே வளமான – குறைந்த எண்ணிக்கையிலான – மனிதவளத்தில் பாதிப்பேர் பெண்கள். அவர்களை விட்டுவிட இயலாது. இவர்களை எப்படி ஆண்களுக்குச் சரிசமமாக எல்லாவற்றிலும் பங்குபெறத் தயார்செய்வது? அப்படிப் பங்கேற்றுவிடும் நிலையில் அவர்களின் பாதுகாப்புக்கு என்ன செய்வது? போன்றவை அக்கேள்விகள்.
ஆனால் இவற்றையெல்லாம் சிறுதுரும்புகளாக மாற்றிவிடக்கூடிய ஒரு தாய்க்கேள்வி அல்லது பயம் லீயின் அடிமனதில் ஆகஸ்ட் 9, 1965 க்குப்பிறகு கனன்றுகொண்டிருந்தது; சிங்கப்பூரில் அப்போது எவருமே அதிகபட்சம் சில தலைமுறைகளாகத்தான் அங்கே வசித்துவருகின்றனர். அதுவும் இன்றைய மலேசியாவோடு சேர்ந்த மலாயாவின் ஒரு பகுதியாக இருப்பதை நம்பித்தான். இவர்கள் அல்லது இவர்களது முன்னோர்கள் ஆயிரமாயிரமாண்டுகள் வரலாறுள்ள தங்கள் தோற்றுவாய் நாடுகளைக் கைவிட்டு இங்கு இடம்பெயரக்காரணம் தாங்களாகப் பெரும்பொருளீட்டிவிடும் ஆசையினாலோ அல்லது பிரிட்டிஷார் கொடுத்த (பொய்யான) உத்தரவாதத்தின் பேரிலோதான். ஒருவேளை குறுகியகாலத்தில் சிங்கப்பூர் சொந்தக்காலில் நின்று சமாளித்துப் பொருளாதார ரீதியில் வளரத்தொடங்காவிட்டால் இவர்கள் நேரத்தை வீணடிக்காமல் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு புறப்பட்ட இடங்களுக்கே போய்ச்சேர பெரிதாகச் சிந்திக்கவேண்டியிருக்காது என்பதே அது. இம்மக்கள் இருமுனைக்கத்தி போன்றவர்கள். வளமான எதிர்காலத்தைக் கனவுகளில் சுமந்துகொண்டு முன்னேறத்துடிக்கும் பல இன மக்களை இச்சிறுதீவு ஒன்றாய்க்கூட்டியிருப்பது பலமென்றால் அதற்கு என்றென்றைக்குமாக அவர்கள் காத்திருக்கமாட்டார்கள் என்பது ஆபத்தான பலவீனம். அப்படியொரு நிலை வரும்பட்சத்தில் நூறு வருடங்களுக்குமுன் மீன்பிடிக்க இருந்த அளவுக்காவது ஆட்கள் அத்தீவில் மிஞ்சுவார்களா என்பது கேள்விக்குறி. முக்கியமாக, வரலாற்றில் சிங்கப்பூர் காணாமல் போனது லீயின் தலைமையில் என்று பதிவாகக்கூடும். அதைவிட மோசமான ஒரு கொடுங்கனவு லீயிற்கும் அவர் சகாக்களுக்கும் இருந்திருக்க முடியாது. ஏப்ரல் 26, 1967ல் தொழிற் சங்கக்கூட்டத்தில் ஆற்றிய உரையில் லீ சொன்னது;

“In the course of the next few years that “we” will be defined with greater clarity. And that “we” does not only depend on your being born and bred here or having taken citizenship, but on your own conviction that Singapore is your future. It is the people with this conviction who are with me. And I will look after them as I am quite sure they will help me look after themselves. And we shall look after one another till end of time.”

இதை ஆழமாக உணர்ந்திருந்ததால் லீ தன்சகாக்களுடன் செய்யவேண்டியதைப் பையச்செய்து முடித்தால் போதும் என்பதற்கிடமில்லாமல் எதையும் மின்னல் வேகத்தில் செய்துகாட்ட வேண்டியிருந்தது. இக்கால கட்டத்தில் அடிக்கடி முயற்சிப்போர் (triers) மற்றும் வெளியேறுவோர் (quitters) குறித்த உணர்ச்சிமிகு ஒப்பீடுகளையும் லீயின் உரைகளில் காணமுடிகிறது. இக்கேள்விகளுக்கும் இவற்றைப் போன்றே சிக்கலான மற்றகேள்விகளுக்கும் கூட சிங்கப்பூர் லீயின் தலைமையில் சில பத்தாண்டுகளிலேயே ஆச்சரியப்படத்தக்க வகையில் தெளிவான விடைகளைக்கண்டதே இந்த ரசவாதியின் கொள்கை முடிவுகளை உலகத்தின் கூர்மையான மூளைகளெல்லாம் கூர்ந்து ஆராயக் காரணம். ஒபாமா ஆலோசனை கேட்டதற்கும் காரணம். லீ அப்படி என்னதான் செய்து இக்கேள்விகளுக்கு விடையளித்தார்? எப்படி சாதித்தார்? அந்த வெற்றிச் சூத்திரத்தை அவர் வெகு எளிது என்று சொல்லியிருக்கிறார்; ஊழலற்ற அரசு, தகுதியின் அடிப்படையில் மட்டுமே அமைந்த முன்னுரிமை, பின்புலங்களின் அவசியமில்லாமல் அனைவருக்கும் முன்னேற சமமான வாய்ப்பு இவற்றையே அவர் சொல்லிக்கொண்டிருந்தார், சிலசமயங்களில் விரிவாகவும் பலசமயங்களில் சுருக்கமாகவும்.
உலக நாடுகளைப்பற்றியும், தண்டனைகள், ஜனநாயகம் என்று எதைக்குறித்தும் தனக்கென்று ஒரு தனிப்பார்வை இவருக்கிருந்தது. அவற்றைக்குறித்த விமர்சனங்கள் அனேகம். ஆனால் அதை எக்காலத்திலும் இவர் சட்டை செய்ததில்லை. அந்த வகையில் ஒரு ஜனநாயக சர்வாதிகாரியாகவும் இவர் வர்ணிக்கப்பட்டிருக்கிறார். இவரிடம் கேட்கபட்ட கேள்விகளுக்கெல்லாம் எந்தத் தயக்கமுமின்றி இவரளித்த பதில்கள் சுவாரஸ்யமானவை. இரண்டு வருடங்களுக்குமுன் ஒருவர் லீயிடம் கேட்டார் (வீடியோ இணைப்பு) இந்தியாவை உங்களிடம் தந்தால் அதை சிங்கப்பூராக மாற்றித்தருவீர்களா என்று. அது எந்த ஒரு தனிமனிதனாலும் முடியாத செயல் என்று சொல்லும் லீ இந்தியா ஒரே நாடாக இருந்தால் அதை மாற்றிவிடலாம் ஆனால் அது பல இந்தியாக்களின் தொகுப்பு என்று பேசினார்.

அவரது கடைசிப்புத்தகமான One man’s view of the world-ல் இந்தியா அதன் அபரிமிதமான வேறுபாடுகளுடன் உடைந்து சிதறிவிடாமல் இவ்வளவுதூரம் முன்னேறி வந்திருப்பதே மிகப் பெரியசாதனை. அது தன்போக்கில் வளர்வதே சரியானவழி என்றும் சீனாவை இந்தியாவுடன் ஒப்பிடுவது காலாவதியாகி விட்டதைச் சுட்டிக்காட்டி பொருளாதார, ஆயுதபலத்தில் அதை இனி அமெரிக்காவிடம் மட்டுமே ஒப்பிடமுடியுமென்பதையும் சொல்லியிருக்கிறார். சீனாவும் ஜப்பானும் அணு ஆயுதப்போரில் இறங்கினால் இருவரும் பரஸ்பரம் குண்டுகள் வீசிக்கொள்ளும் நிலையில் ஜப்பானிடம் முழுமையாக இடமும் மக்களும் அழிந்து போனபின்னும் சீனாவிடம் மிச்சமிருக்குமென்பதால் அது புத்திசாலித்தனமான போராக இருக்காது என்று – நம்மூர் டீக்கடைகளில் பேசிக்கொண்டிருப்பார்களே அதுபோல – ஒரு கேள்விக்கு பதில் சொல்லியிருந்தார். ஆனால் அடுத்ததாக அணுகுண்டு வெடிக்குமானால் அது மத்தியக்கிழக்கில்தான் வெடிக்கும் என்று அங்கு நிலவும் நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலையைக் காரணம் காட்டியிருந்தார்.
வளர்ந்த நாடுகள் கொலைக்குற்றத்திற்குக் கூட மரணதண்டனையைப் படிப்படியாகக் கைவிட்டுவரும் நிலையில் சிங்கப்பூர் 15கிராம் ஹெராயின் வைத்திருந்தால் தூக்கில் தொங்கவிடுவது நியாயமா என்று கேட்கப்பட்டதற்கு வாய்ப்பிருந்தால் ஒருமுறைக்குமேலும் அவர்களைத் தூக்கிலிட விருப்பம் தெரிவித்த லீ போதைப்பொருள் எப்படி தனிமனிதன், குடும்பம், சமூகம், நாடு என்று படிப்படியாகக் குலைக்கும் என்பதை விளக்கியிருந்தார். இந்த வெளிப்படைத்தன்மையும் எதையும் நடைமுறைச் சாத்தியங்களுடனேயே பார்ப்பதும் இந்த லட்சியவாதியின் ஒரு யதார்த்த முகம்.
பத்திரிகையில் கேலிச்சித்திரங்கள் தலைவர்கள் மீது வரையப்படுவதில் லீயிற்கு உடன்பாடில்லை. சிங்கப்பூர் செய்தித்தாட்களில் அவை வருவதுமில்லை. அதைத் தினசரி பார்த்துவந்தால் மக்களிடம் அத்தலைவர் சீரியஸாக எதுவும் சொன்னால் எடுபடாது என்பது இவர் வாதம். இவருடைய அரசியல் எதிரிகளை மானநஷ்ட வழக்குப்போட்டு மஞ்சள்கடுதாசி கொடுக்கவைத்து அதனால் அவர்களைத் தேர்தலில் நிற்கவியலாமற் செய்துவிடும் உத்தியைக் கையாண்டதாக ஒரு குற்றச்சாட்டு இவர் மீதுண்டு. நான் யாரையும் ஆதாரமின்றி அப்படிப்பேசுவதில்லை. ஆகவே அவர்களிடம் நான் அதையே எதிர்பார்க்கிறேன். அது கிடைக்காவிடில் நீதிமன்றத்தை நாடுவதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை என்பது இவர் கட்சி. அமெரிக்க அதிபரைக் காட்டிலும் சிங்கப்பூர் பிரதமருக்குச் சம்பளம் அதிகம். அமைச்சர்களுக்கும் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்குச் சம்பளமுண்டு. ஆகத் தகுதியானவர்களை அரசியலுக்குக் கொண்டுவர கொடுக்க வேண்டியது இவ்விலை என்பது லீயின் சமாதானம். ஊழல் எண்ணம் வராமலிருக்கவும் இது உதவக்கூடும் என்று நினைத்திருக்கலாம். அரசியல் தியாகமனப்பான்மையுடன் செய்யவேண்டிய சேவையில்லையா என்றுகேட்டால் அவர் பதில் இவ்வமைச்சர்கள் தங்கள் துறைகளில் வல்லுனர்களாததால் அரசியலுக்கு வராதபட்சத்தில் இதைவிட அதிகம் சம்பாதித்திருப்பார்கள் என்பதால் அதைவிட்டுக் கொடுத்திருப்பதே போதுமான சேவை என்பது இவர் பதில்.
தனிவாழ்க்கையில் நல்ல மகனாக, கணவராக, தந்தையாக இருந்திருக்கிறார். கூடப்பிறந்தவர்கள், மனைவி, பிள்ளைகள் ஆகியோரிடமிருந்து பலசந்தர்ப்பங்களில் வெளியான தகவல்கள் இதை மெய்ப்பிக்கின்றன. தான் எவ்வளவு தர்க்கரீதியாக ஆராய்ந்தறிந்து முடிவுகளை எடுப்பவனாயினும் பலநேரங்களில் தன் மனைவியின் உள்ளுணர்வு அடிப்படையிலான முடிவு துல்லியமாக இருந்ததை எழுதும் லீ அதன்பொருட்டு மனைவியிடம் தன் சிக்கல்களை விவாதித்ததையும் எழுதுகிறார். தொடர்ந்து சிகரெட் பிடிப்பவராக இருந்தவர், தான் அதன் கட்டுப்பாட்டிற்குள் செல்வதை உணர்ந்ததும் முற்றாக நிறுத்திவிட்டிருக்கிறார். சிகரெட்டின் தீமைகள் சந்தேகத்திற்கிடமின்றி விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டதும் இவரது முடிவுக்குக்காரணம். பயணங்களின்போது ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கினாலும் தன் உள்ளாடைகளைத் தானே துவைத்தணிந்தது செய்தியாக வெளியாகியிருந்தது. அவ்விடுதிகளில் உள்ளாடைச் சலவைக்கு ஆகும் செலவில் புதிதாக வாங்கிக்கொள்ளலாம் என்பதால் இம்முடிவு. ஆங்கிலத்தை வீட்டுமொழியாகப்பேசும் பெற்றோர்களுக்குப்பிறந்து, பள்ளியிலும் ஆங்கிலக் கல்வி பயின்று, இங்கிலாந்தில் சட்டம் பயின்று சிங்கப்பூர் திரும்பிய லீ தன் நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் சீன, மலாய் மொழிகளைத் தீவிரமாகக் கற்க ஆரம்பித்து அவற்றில் நல்ல தேர்ச்சி பெற்று உரைகளையும் உரையாடல்களையும் நிகழ்த்தியது அனைவரும் கற்கவேண்டிய பாடம். My lifelong challenge : Singapore’s bilingual journey என்ற புத்தகத்தில் தன் எண்பதுகளிலும்கூட மொழிக் கற்றலைத் தொடர்ந்ததையும் அதை மேலும் கணிணியைக் கற்று சிலமென்பொருட்கள் வழியாகச் செம்மைப்படுத்திக் கொண்டதையும் விரிவாக எழுதியிருக்கிறார்.
பெண்கல்வி பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்கும், அதன்மூலம் அந்தக் குடும்பத்தின் வளர்ச்சிக்கும், குடும்பங்கள் முன்னேறுவதால் நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுப்பதைப் பரிந்துரைத்து அதை முன்னால் நின்று நடத்திக்காட்டியவர் லீ. ஆனால் அதன் பக்கவிளைவாக குழந்தை பிறப்பு (toral fertility rate) குறைந்துபோய்விட்டது என்பதையும், சிங்கப்பூரும் இன்னபிற முதலாம் உலக நாடுகளும் விரைந்து மூப்படையும் சமூகமாக மாறுவதால் நம் சந்ததியினருக்கு ஏற்படப்போகும் சிக்கல்களையும் தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் பேசிவந்தார். இதற்குத் தன்னால் ஏதும் செய்யவியலாது; ஒவ்வொரு சிங்கப்பூரரும் தன் திருமணத்தின்மூலம் குறைந்தது இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதுதான் இதற்கு ஒரே தீர்வு என்று சொல்லிவிட்டார். லீயால் தீர்க்கமுடியாத பிரச்சனைகளும் சிங்கப்பூருக்கு உண்டு என்பதை உலகம் ஒருவழியாகத் தெரிந்துகொண்டது! அதெல்லாம் சரிதான்.
ஆனால் மன்னார்குடி தாலுக்கா பரவாக்கோட்டையைச் சேர்ந்த முருகையன் பாக்கியலட்சுமி தம்பதியினரும் அவர்கள் குடும்பத்தாரும் ஏன் இவரின் மறைவுக்குக் கண்ணீர் விட்டனர்? அவர்களைத் தொடர்புகொண்டு கேட்கவில்லையாயினும் ஓரளவுக்குத்துல்லியமாகவே கூட நம்மால் ஊகித்துக்கொண்டுவிட முடியும். அவர்கள் குடும்பத்தில் பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த ஒருவர் சிங்கப்பூரில் ஷிப்யார்டுக்கோ கட்டிடவேலைக்கோ பணிக்கு வந்திருப்பார். மாதம் சுமார் இருபதாயிரம் போலச் சேமித்து பத்துப்பதினைந்தாண்டுகளில் குடும்பம் நீண்டகாலமாகப் பட்டிருந்த கடனைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்திருப்பார். தாய், தமக்கை, தங்கையின் நகைகளை அடகுக்கடையிலிருந்து திருப்பியிருப்பார். ஒருவேளை அவர்கள் வம்சாவழியிலேயே முதன்முறையாக மழையில் ஒழுகாத ஒரு சிறிய வீட்டைக்கூடக் கட்டியிருப்பார். தனக்குக் கிடைக்காத தரமான கல்வியைத் தன் குழந்தைகளுக்குக் கொடுத்திருப்பார். ஒரு சிறிய தொழில் தொடங்கி உள்ளூரில் தலைநிமிர்ந்திருப்பார். அதற்கு சிங்கப்பூர் ஒரு காரணமாக இருந்திருந்தாலும் லீ பிரதமர் பதவியைத் துறந்து 25 ஆண்டுகளாகிவிட்டதே? நிச்சயம் பரவாக்கோட்டைக்காரர் சிங்கப்பூரில் பணியைத்துவங்குவதற்கு முன்னதாகவே லீ தலைமைப்பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டிருக்கக் கூடும். பிறகு ஏன் லீயை வாழவைத்த தெய்வமாக அவரும் அவர் குடும்பமும் வணங்கவேண்டும்? ஒரேயொரு விளக்கம்தான் இருக்கிறது. அது தற்போது பிரதமராக இருக்கும் லீ சியன் லூங் (லீ குவான் இயூவின் மூத்தமகன்) தன் தந்தையின் மறைவுக்குப்பின் சிங்கப்பூரர்களுக்கு அளித்த செய்தியில் சொன்னது; “பல வெளி நாட்டினருக்கு லீ வேறு, சிங்கப்பூர் வேறல்ல; லீதான் சிங்கப்பூர்.”
விதியென்பது முன்பே விதிக்கப்பட்டதல்ல; நம் விதியின் சிற்பி நாமே என்பதையே தன் சுவாசமாக ஆக்கி அதை மெய்ப்பித்தும் காட்டிய லீ குவான் இயூவுக்கு அஞ்சலிகள்!

Singapore_Lee_Kuan_Yew_Economist_Growth_GDP

0 Replies to “லீ குவான் இயூவுக்கு அஞ்சலி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.