எ மோஸ்ட் வாண்டட் மான் – திரைப்படம் பற்றி
இந்தியப் பயணத்தின் பொழுது விமானத்தில் நான்கைந்து சினிமாக்கள் பார்த்தேன். அவற்றுள் உருப்படியாக இருந்தவை எ மோஸ்ட்வாண்ட்டட் மேன் என்ற ஆங்கிலப் படமும் சதுரங்க வேட்டை என்ற தமிழ்ப் படமும்தான்.
இந்தப் படத்தை முதலில் பார்க்கத் தூண்டுதலாக இருந்தவர் அதன் பிரதான நடிகரான ஃபிலிப் ஸீமோர் ஹாஃப்மேன். அநாயாசமாக நடிப்பவர். மேலும் இது என் அபிமான உளவுக் கதை நாவலாசிரியரான ஜான் லெ காரீ -யின் சமீபத்திய நாவல் என்பது மேலும் ஆவலைத் தூண்டியது.
ஜான் லெ காரீ என்ற புனைபெயர் கொண்ட டேவிட் ஜான் மூர் கார்ன்வெல், பிரிட்டனின் வெளியுறவுத் துறையின் கீழ் வரும் எம்ஐ 5 மற்றும் எம்ஐ 6 என்ற உளவு அமைப்புகளில் பணியாற்றியவர். பின்னர் வெளியே வந்து தன் அனுபவங்களை நாவல்களாக எழுதியவர். நாடுகளுக்கிடையேயான ஒற்று வேலைகளைக் குறித்து மிக நுட்பமாக எழுதும் வெகு சில நாவலாசிரியர்களில் லெ காரீ ஒருவர். அவரது நாவல்களை ஃப்ரட்ரிக் ஃபோர்ஸைத், கென் ஃபோலெட் போன்றவர்களின் விறுவிறுப்பான நடையுள்ள நாவல்களுடன் ஒப்பிட முடியாது. இவை ஜேம்ஸ் பாண்ட் பாணி ஒற்றர் கதைகளோ அல்லது பாட்ரியாட்டிக் கேம்ஸ் அல்லது போர்ன் ஐடன்டிடி வகை சாகசக் கதைகளோ அல்ல.
லெ காரீயின் பெருமளவு நாவல்கள் அமெரிக்க நேச நாடுகளுக்கும் சோவியத் நாடுகளுக்கும் இடையேயான பனிப் போர் காலத்து உளவு வேலைகள் குறித்தவையே. பெரும்பாலும் அவரது நாவல்கள் இரண்டு தரப்பு ஆட்களும் எதிரி நாடுகளுக்குள் ஊடுருவி, அங்கு இரு தரப்புக்கும் ஒற்றராக இருப்பவர்கள் பற்றியும், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்கு சோவியத் யூனியனின் முக்கியமான ஒற்றர்களைக் கடத்தியோ, மனம் மாற்றியோ, மிரட்டியோ கொண்டு வருவது குறித்தும், பிரிட்டனின் உளவுப் படைகளுக்குள் நுழைந்து ரகசியங்களைக் கடத்தும் சோவியத் ஒற்றர்கள் குறித்துமோ இருக்கும்.
அவரது கார்லாவின் முத்தொடர் நாவல்கள் மிகவும் பிரபலமானவை. பி பி சி ஒளிபரப்பு நிறுவனத்தால் மினி தொடர்களாகவும், வேறு அமைப்புகளால் சினிமாக்களாகவும் எடுக்கப் பட்ட அவை, த ஆனரபிள் ஸ்கூல் பாய், டிங்கர் டெய்லர் சோல்ஜர் ஸ்பை மற்றும் ஸ்மைலீஸ் பீப்பல் என்ற மூன்று நாவல்கள். கார்லா எனப்படும் சோவியத் உளவுப் படையின் முக்கியத் தலைவனும் பிரிட்டனின் எம் ஐ 5 தரப்பின் முக்கிய ஒற்றரான ஜார்ஜ் ஸ்மைலி என்பவரும் நடத்தும் நிழல் யுத்தங்களே அந்த மூன்று உளவாளி நாவல்களின் கதைகள். இறுதியில் கார்லாவா, ஸ்மைலியா, யார் வெல்கிறார்கள்? லெ காரீ வித்தியாசமான நாவலாசிரியர் என்கிறார்களே. அப்படியானால் யாராவது வெல்கிறார்களா, இல்லையா?
லெ காரீயின் நாவல்கள் மிக மிக நிதானமானவை. அவற்றில் துப்பாக்கிகள் அரிதாகவே வரும். அவையும் வெடிப்பதில்லை. விறுவிறுப்பான கார் துரத்தல்களோ, துப்பாக்கிச் சண்டைகளோ, குறைத் துணி அணியும் அழகிகளோ அவர் கதைகளில் இருப்பதில்லை. அவரது பாத்திரங்கள் வெகு நிஜமானவை, சாதாரண மனிதர் போன்றவை. சிக்கலான முடிச்சுகளை நாம் எளிதில் ஊகித்துப் புரிந்து கொண்டுவிடா வண்ணம் வடிவமைத்திருப்பார்.
ஏனெனில் ஒற்றர்களின் வாழ்க்கை ஜேம்ஸ் பாண்ட் படங்களில் உள்ளது போல கவர்ச்சியான வாழ்க்கை அல்ல. அவர்களின் வாழ்வு சலிப்பு நிறைந்தது, சோகமயமானது. கடுமையான மனச் சிக்கல்களையும், அகப் போராட்டங்களையும் கொண்டது. கூர்மையான மதி நுட்பமும் சமயோசிதமும் தியாகங்களையும் கோருவது. மாட்டிக் கொண்டால் அவர்களை அனுப்பியவர்கள் எவரும் பின் நின்று பாதுகாக்க மாட்டார்கள். ஆபத்துகள் எந்நேரமும் பின் தொடருகையில் ஆதரவு என்பது மிகக் குறைவாகவே உள்ள மோசமான நிலையில் அந்தரத்தில் கட்டிய கயிறு மேல் நடப்பது போன்ற வாழ்க்கை.
இந்த எதார்த்தத்தைச் சித்திரிக்க முயலும் லெ காரீயின் நாவல்களில் உள்ளவை மிகுந்த மன அழுத்தம் உடைய பாத்திரங்கள். பனிப் போரின் அர்த்தமின்மையை, புலம் தெரியாத புதிர் நிலைகளை அவர் மீண்டும் மீண்டும் வர்ணிக்கும் சாம்பல் நிற வானங்களின் மூலம் அழுத்தமாகச் சொல்லிக் கொண்டேயிருப்பார். தெளிவான இலக்கற்ற, முடிவற்ற இழுபறிப் போர்களின் அர்த்தமின்மையை, அபத்தத்தை பூடகமான கேள்விகளால் தெளிவாக்குவார்.
அவரது ஜார்ஜ் ஸ்மைலி நாவல்களில், முதலில் வந்த த ஸ்பை ஹூ கேம் இன் ஃப்ரம் த கோல்ட் என்ற பிரபலமான நாவலில் இந்த அர்த்தமற்ற போர் பற்றி ஆழமான விமர்சனங்களை அவர் வைத்திருப்பார். அந்த நாவல், ஒரு கருப்பு வெள்ளைப் படமாக 60களின் பிரபல நடிகரான ரிச்சர்ட் பர்ட்டன் நடித்த சினிமாவாகவும் வந்தது. உளவு நாவல்களில் படிக்க வேண்டிய முக்கியமான ஒன்று. பின் நாட்களில், இந்த உளவு வேலைகளைக் கிண்டல் செய்து, த டெய்லர் ஆஃப் பேனமா என்றொரு நாவலை எழுதியுள்ளார். அதுவும் சினிமாவாக எடுக்கப் பட்டது.
லெ காரீயின் பத்து நாவல்கள் சினிமாக்களாகி நல்ல வரவேற்பைப் பெற்றவை. விருதுகளையும் பெற்றவை. அவரது முக்கியமான பாத்திரமான ஜார்ஜ் ஸ்மைலியாக, அபாரமான பிரிட்டிஷ் நடிகரான அலெக் கின்னஸ் நடித்த பிபிஸி நெடுந்தொடர் பரவலாகப் பார்வையாளர்களின் அபிமானத்தை அடைந்தது. பின்னர், டிங்கர் டெய்லர் சோல்ஜர் ஸ்பை நாவல் ஹாலிவுட்டில் முழுச் சினிமாவாக ஆக்கப்பட்ட போதிலும் ஸ்மைலி பாத்திரத்தின் அழுத்தத்தையும் முழுமையையும் வேறு எவராலும் கொணர முடியவில்லை. கின்னஸுக்காகவே உருவாக்கப்பட்ட பாத்திரமாக அது அமைந்து விட்டது. லெ காரீயின் நாவல்களை அந்த பிபிஸி தொடர் மட்டுமே முழுமையாக பிரதிபலித்தது. நாவல்களின் சிறந்த நகலாக அந்த தொடர் இருந்தது.
அமெரிக்க/பிரிட்டன் சோவியத் பனிப்போர் முடிந்து புதிதாக எழுந்த தொழில் நுட்பங்கள் உளவு வேலைகளின் அடிப்படைகளையே மாற்றிய பின்னர் லெ காரீ பனிப் போர் உளவு நாவல்களை எழுதுவதில் இருந்து விலகி பிரிட்டன் ஒற்று அமைப்பின் பலவீனங்களை கிண்டல் அடிக்கும் நாவல்களையும், பெரும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் ஊழல்கள் குறித்தும், சமீப காலத்திய பயங்கரவாத அச்சுறுத்தல்களை உளவு பார்க்கும் விதங்கள் குறித்தும் அவரது நாவல்களில் எழுதி வருகிறார். அவற்றுள் கான்ஸ்ட்டன்ட் கார்ட்னர் என்ற நாவலும் அதைப் படமாக்கிய சினிமாவும் பெரும் வரவேற்பைப் பெற்றவை.
அவர் களத்தையும், பாத்திரங்களையும் மாற்றிக் கொண்டு உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பாக 2008ல் எழுதிய நாவல் எ மோஸ்ட் வான்ட்டட் மேன். அது சென்ற ஆண்டு ஆன்ட்டொன் கொர்பெய்ன் என்ற டச்சு இயக்குனரால் சினிமாவாக எடுக்கப்பட்டது. ஜார்ஜ் க்ளூனி நடித்த த அமெரிக்கன் என்ற த்ரில்லர் படத்தை இயக்கிய அதே இயக்குனர் இவர்.
எ மோஸ்ட் வாண்ட்டட் மேன் ஜெர்மனியில் ஜிஹாதிகளின் தலைநகரமான ஹாம்பர்க் நகரில் நடக்கிறது. ஜெர்மனியிலும் பிற ஐரோப்பிய நாடுகளைப் போலவே அகதிகளுக்கு இடம் கொடுக்கிறார்கள். அமெரிக்க இரட்டைக் கோபுரம் தாக்கப் பட்ட பொழுது அதற்கான திட்டங்கள் போட்ட இடமும் அதற்கான நபர்கள் படித்த இடமும் இதே நகரம் தான். அமெரிக்காவின் ரெட்டைக் கோபுரத் தாக்குதல் தொடர்பான ஹாம்பர்க் என்னும் டாக்குமெண்ட்டரியில் இவற்றை விரிவாகக் காண்பிக்கிறார்கள். ஜெர்மனியின் மசூதிகளில் தீவீர வஹாப்பிய முல்லாக்கள் அங்கு படிக்க வரும் முஸ்லீம்களிடம் வெறியைத் தூண்டி அவர்களை தங்கள் நாசகாரத் திட்டங்களுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரம் கிட்டத்தட்ட ஒரு இஸ்லாமிய பயங்கரவாதி உற்பத்தி நகரமாகவே மாறி விட்டிருக்கிறது. நியூயார்க்கின் ரெட்டைக் கோபுரங்களைத் தாக்கியதில் முக்கியமான இஸ்லாமிய பயங்கரவாதிகளாகிய மொகமது ஆட்டா, மார்வான் அல்ஷேஹ்ஹி மற்றும் ராம்ஸி ஆகிய மூவரையும் ஹாம்பர்க் நகரின் ஒரு முல்லா இந்த முக்கியமான தாக்குதலுக்காக தயார் செய்கிறார். இது ஒரு டாக்குடிராமாவாகவும் எடுக்கப் பட்டுள்ளது. த மோஸ்ட் வாண்டட் மேன் பார்த்து விட்டு இந்த ஹாம்பர்க் செல்லையும் பார்க்கலாம். இரண்டும் தொடர்புடைய சினிமாக்களே.
ரெட்டைக் கோபுரத் தாக்குதலில் பங்கு கொண்ட பயங்கரவாதிகள் அந்தத் திட்டம் தீட்டியது தங்களது கொல்லைப் புறத்தில் என்பதை தாமதமாக உணரும் ஜெர்மானியர்கள் லேசாகச் சுதாரித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தவொரு முஸ்லீமிடமும் லேசாக ஜிஹாதி சாயல் தெரிந்தாலும் நாடு கடத்தி விடுகிறார்கள்
இஸ்லாமிய பயங்கரவாதத்தைத் தங்கள் நிலத்தில் இருந்து அகற்றவும் முளையிலேயே அடையாளம் கண்டு கிள்ளி எடுக்கவும், ஜெர்மனி பயங்கரவாதத் தடுப்புக்கான உளவு அமைப்பு ஒன்றை நிறுவுகிறது. இது ஒரு ரகசிய உளவு அமைப்பு. தனது எம் ஐ 5 அனுபவத்தின் அடிப்படையில் ஜெர்மன் உளவு அமைப்பு இயங்கும் விதம் குறித்து கிட்டத்தட்ட தனது ஜார்ஜ் ஸ்மைலி ஒற்று நாவல் பாணியிலேயே களத்தையும் பங்கு கொள்ளும் தரப்புகளையும் மாற்றிக் கொண்டு இந்த நாவலை லெ காரீ எழுதியுள்ளார். மேற்கு மற்றும் சோவியத் பாணி ஒற்று வேலைகள் மிகவும் நிதானமான வேலைகள். கொக்கின் தலையில் வெண்ணையை வைத்து பிடிப்பது என்பார்களே, அது போன்ற நெடுங்கால உளவு வேலைகளாகவே இருக்கும். அவ்வளவு சிரமம் எடுத்தும் இறுதியில் பெரிய பலன்களை அபூர்வமாகவே சாதிப்பார்கள். மற்றபடி பெரும்பாலான உளவு முயற்சிகள் காசுக்குப் பிடித்த சனியாகவே இருக்கும். லெ காரீ இதையே டெய்லர் ஆஃப் பனாமாவில் கிண்டல் அடித்திருப்பார். ஜெர்மனியின் பயங்கரவாதத் தடுப்பு உளவுப் பிரிவும் லெ காரீயின் பழைய எம்ஐ 5 பாணி ஒற்று வேலைகளில் ஈடுபடுபவதாக மிக விரிவாகச் சித்திரிக்கின்றார்.
குந்த்தர் பாஹ்மேன் ( GüntherBachmann) ஜெர்மனியின் இஸ்லாமிய பயங்கரவாதத் தடுப்பு உளவுப் பிரிவின் தலைவர். அவரது உளவு பாணிகள் நிதானமானவை, சம்பிரதாயங்களை மீறியவை. அவருக்கு ஒரு சிறிய குழுவும் அதை விடச் சிறிய நிதி ஆதாரமும் அளிக்கப்பட்டு ஜெர்மனியில் இஸ்லாமிய பயங்கரவாதப் பரவலைத் தடுக்கும் பணி அளிக்கப்படுகிறது. இந்த குந்தர் பாத்திரத்தில் ஹாஃப்மேன் நடித்துள்ளார். அவர் லெ காரீயின் பழைய எம்ஐ 5 ஒற்றரான ஜார்ஜ் ஸ்மைலியையே வெகுவாக நினைவு படுத்துகிறார். ஸ்மைலிக்குப் பதிலாக குந்த்தரையும், லண்டனுக்குப் பதிலாக ஹாம்பர்கையும் சோவியத் யூனியனுக்குப் பதிலாக இஸ்லாமிய பயங்கரவாதத்தையும் லெ காரீ இடப் பெயர்வு செய்து தனது பழைய நாவல் ஒன்றை மீள்பதிப்பு செய்திருப்பதாகவே தோன்றுகிறது.
குந்த்தரின் உளவு அமைப்பு ஜெர்மனியில் இருந்து கொண்டு ஜிஹாதிகளுக்கு உதவி செய்யும் ஒரு முக்கியமான இஸ்லாமிய அறிஞரை உளவு பார்த்து வருகிறது. இந்த அறிஞரைப் போன்ற ஒருவரே அதே ஹாம்பர்கில் முன்பு முகமது ஆட்டா போன்ற பயங்கரவாதிகளை உருவாக்கியவர் என்பது இங்கு தொடர்புள்ள ஒரு விஷயம். அதே சமயத்தில் ஜெர்மனியின் துறைமுக நகரமான ஹாம்பர்கில் ஒரு செசன்ய முஸ்லீம் சட்ட விரோதமாக கப்பலில் ஒளிந்து கொண்டு உள்ளே நுழைகிறான். அவன் ஒரு செசன்யா பயங்கரவாதி என்றும் அவனை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று ஜெர்மனியின் உள் துறை மற்றும் போலீஸ் விரும்புகிறது
அவன் ஜெர்மனியின் ஒருபெரிய வங்கியில் தனது அப்பா ஒளித்து வைத்திருந்த பணத்தைப் பெறுவதற்காக வருகிறான். ஆனால் தனது தந்தை பயங்கரவாத வழிகள் மூலமாக அந்தப் பணத்தை ஈட்டியிருக்கிறார் என்பதை அறிய வந்தவுடன் அது இஸ்லாமுக்கு எதிரானது என்று தீர்மானித்து பணத்தை வேண்டாம் என்று திடீரெனச் சொல்லி அறக்கட்டளை அமைப்புகளுக்குக் கொடுக்க விரும்புகிறான். இந்திய சினிமாக்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளைக் காட்டுவதை ஈடு செய்வதற்காக அவர்களைப் பிடிக்கும் நல்ல முஸ்லீமை, போலீஸ் கதாநாயகனாகக் காட்டி நடுநிலை ஜல்லி அடிப்பது போலவே இந்த செசன்ய தீவீரவாதியைக் காட்டி ஜல்லி அடித்துக் கொள்கிறார்கள்.
ஆனால் குந்த்தர் தலமையிலான இஸ்லாமிய பயங்கரவாத எதிர்ப்பு உளவு அமைப்பு அந்த செசன்யர் இஸ்லாமிய அறக் கட்டளைகளுக்குப் பெரும் நிதியை விநியோகிக்க இருப்பதை ஒற்று வேலைகள் செய்து கண்டு பிடிக்கிறது. அவனையும் அந்த பணத்தையும் கொண்டே பயங்கரவாதத்திற்கு நிதி ஏற்பாடுகள் செய்யும் அந்த இஸ்லாமிய அறிஞரையும், அவர் உதவி செய்கிற அமைப்புகளையும் கண்டு பிடிக்க ஒரு விரிவான திட்டம் போடுகிறது. செசன்யரின் பணத்தை அந்த இஸ்லாமிய முல்லாவிடம் ஒப்படைக்க வைத்து அவர் எந்த எந்த அமைப்புகளுக்கு அந்த நிதியை பிரித்து அளிக்கிறார் என்பதைக் கொண்டு அந்த என் ஜி ஓக்களின் பின்புலன்களை ஆராய்ந்து அவர்களின் சங்கிலித் தொடர்களைப் பின் தொடர்ந்து அதன் பின்னால் உள்ள பல்வேறு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடன் ஆதாரத்த்துடன் கண்டு பிடித்து சம்பந்தப் பட்டவர்களைக் கண்டு பிடித்து கைது செய்து இஸ்லாமிய பயங்கரவாத நிதிக் கட்டமைப்புகளை ஒழித்து விடலாம் என்பது குந்த்தரின் திட்டம்.
எல்லாம் சரியாகவே நடக்கிறது. பணம் ஒரு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பிற்குச் சென்ற பிறகு அதன் பின்னால் உள்ள அனைத்து பயங்கரவாதிகளையும் கைது செய்ய ஒரு விரிவான கொக்குத் தலை வெண்ணை திட்டத்தை குந்த்தரின் படை தீட்டியிருக்கிறது.
ஆனால் ஜெர்மானிய போலீஸ் அதிரடியாக நடவடிக்கை எடுக்கிறது. இந்த கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிக்கும் வேலையே வேண்டாம். முஸ்லீமா? சந்தேகமா? குந்த்தரின் படை கஷ்டப்பட்டு அந்த இஸ்லாமிய அறிஞரிடம் பணத்தைச் சேர்க்க ஏற்பாடு செய்து விட்டு, அவரைப் பின் தொடர எத்தனிக்கும் பொழுது, ஜெர்மனின் போலீஸ் உள்ளே புகுந்து அவரைக் கைது செய்து, உடனடியாகக் குண்டுகட்டாகத் தூக்கிக் கொண்டு போய் வெளியே எறி என்று நாடு கடத்தி விடுகிறார்கள். குந்த்தரின் திட்டங்கள் அனைத்தும் பாழாகி, கடும் கோபத்திலும் இயலாமையிலும் விரக்தியிலும் குந்த்தர் உடைந்து போய் நிற்கிறார். மிக ரகசியமாகச் செய்யப்படும் உளவு வேலைகளின் முடிவுகள் அனேக நேரம் வெற்றிக்கான எதிர்பார்ப்பை நிறைவேற்ற இயலாதவை என்ற நிதர்சனத்தைத் தெளிவாகக் காண்பிக்கின்றார்கள்.
இந்தப் படத்தில் உளவு அமைப்புகள் வேவு பார்க்கும் விதங்களும் அவர்கள் எதிரிகளுக்கு தம் கழுத்தில் தாமே சுருக்கிட்டுக் கொள்ள வகையாக அளிக்கும் நீளமான கயிறுகளும், உலக அளவில் இஸ்லாமிய ஜிஹாதிகளுக்கு பணம் வரும் வழிகளும் விரிவாகக் காண்பிக்கப் படுகின்றன. நல்ல த்ரில்லர். உளவு அமைப்பு இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதற்கான காரணம் வலுவாகச் சொல்லப் படவில்லை. அமெரிக்கர்களும் இதில் தலையிட்டு தங்களுக்கும் அனைத்து தகவல்களும் வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.
லெ காரீயின் நாவல்கள் படிப்பதற்கு மிகுந்த கவனத்தையும் நிதானத்தையும் கோருபவை. அவரது படங்களை சினிமாவாக எடுக்கும் பொழுது அவரும் ஒரு தயாரிப்பாளராக இணைந்து கொள்கிறார் அதன் மூலம் சினிமா நாவலில் இருந்து விலகிச் செல்லாமல் உறுதி செய்து கொள்கிறார். அவரது நாவல்களின் நுண்ணிய சிக்கல்களை சினிமாவுக்குள் கொணரும் பொழுது சில இடைவெளிகளும் விலகல்களும் நிகழ்ந்து விடுகின்றன. இந்த சினிமாவும் அதற்கு விதி விலக்கு அல்ல. பல காட்சிகளில் தொடர்ச்சிகளில் நாவலின் சிக்கலை அப்படியே மாற்றுவதற்குத் தவறி விடுகிறார்கள். அதனால் சில இடைவெளிகள் விழுந்து விடுகின்றன. அது இந்தச் சினிமாவின் பெரும் பலவீனமாகி விடுகிறது.
உளவு அமைப்பின் தலைவராக ஃபிலிப் சைமன் ஹாஃப்மேன் நடிப்பதற்காகவாவது இந்தப் படத்தைக் காணலாம். மேலும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை உலக உளவு அமைப்புகள் கையாளும் விதங்களையும் விரிவாகக் காண்பிக்கிறார்கள். நிறைய செக்குலர் ஜல்லிகளும் உள்ளன. இந்த ஜல்லிகள் இருக்கும் வரை மேற்கு நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியே.
ஜான் லெ காரீயின் நாவல்களைப் படித்து விட்டு அந்த பாத்திரங்களையும் இடங்களும் நமக்குள் ஏற்படுத்தியிருக்கும் பிம்பங்களை சினிமாவில் எவ்வளவு துரம் தத்ரூபமாக எடுத்திருக்கிறார்கள் என்று அவதானிப்பது ஒரு சுவாரசியமான அனுபவம். இந்த சினிமா அந்த அனுபவத்திற்குப் பங்கம் விளைவிக்கவில்லை.
இந்திய பயங்கரவாத உளவு தடுப்பு அமைப்புகளும் ரா போன்ற உளவு அமைப்புகளும் பற்றி மக்களுக்கு உருப்படியான தகவல் அளிக்க விரும்புவோர் கவனிக்க வேண்டிய ஒரு சினிமா இது. பாருங்கள்!