கலைஞர்களை மதிக்கும் சமூகம் உன்னதமான விழுமியங்களை உள்ளடக்கியது என்பது கேட்பதற்கு மேன்மையான கருத்து போலத்தெரிந்தாலும் நடைமுறை சாத்தியம் உள்ளதா என்பதைச் சோதிக்க முடியாது. பண்டைய காலகட்டம் என்பது மிக மேன்மையான சமூகமாக இருந்திருக்கிறது எனப் பொதுவாகக் கொண்டாலும் அங்கே கலைஞர்களுக்கு எந்தளவு மதிப்பு இருந்தது எனத் திட்டவட்டமாக அறிந்துகொள்ளவது சிரமமே. பெருங்கவிஞனான கம்பன் கூட தனது புரவலரான சடையப்ப வள்ளலை பல கம்பராமாயணப் பாடல்களில் புகழ்ந்துள்ளார். தமிழில் புலவர்களின் சொல்லுக்கு மதிப்பிருந்த அளவிற்கு அவர்களது வாழ்வின் தரம் மேம்பட்டு இருந்ததா எனத் தெரியவில்லை.
கடந்த வியாழக்கிழமை (26-03) இறந்துபோன ஸ்வீடன் நாட்டுக் கவிஞர் டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமர் அந்த நாட்டின் சக இசைக்கலைஞர்களுக்கும் இருந்த உறவு தனித்துவமான ஒன்று. கவிதைகளுக்காக நோபல் பரிசு வாங்கிய டொமஸ் டிரான்ஸ்றாமர் நல்ல திறமையான பியானோ கலைஞராகவும் இருந்திருக்கிறார். அவரது 59 ஆவது வயதில் பக்கவாதம் வந்து வலது கையை உபயோகிக்க முடியாமல் போனபோது ஸ்வீடன் நாட்டின் இசை அமைப்பாளர்கள் இடது கையால் வாசிக்கும் பியானோ இசையை டொமஸுக்காக எழுதினர். கலைஞர்களுக்கு இடையே நிலவிய சுமுகமான உறவுக்கான சமீபத்திய எடுத்துக்காட்டாக இதைப் பார்க்கலாம். இது ஒரு தனிப்பட்ட உறவாக இல்லாமல் ஒரு கலாச்சார அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இதனால், அவரது இறப்பு ஸ்வீடன் நாட்டில் எப்பேர்ப்பட்ட இழப்பைத் தந்திருக்கும் என்பதை நாம் உணர முடிகிறது.
சொல்வனத்தில் வெளியான அவரது மொழிபெயர்ப்புக் கவிதைகளை இங்கு வாசிக்கலாம்.
- வெளியே, வெட்டவெளியில்: தமிழாக்கம் : ச.அனுக்ரஹா, நந்தின் அரங்கன்
- வெர்மீயர்
அவரைப் பற்றி சில குறிப்புகள்:
மணவாழ்க்கை குறித்து
“நீங்கள் இருவரும் ஆறு வாரத்திற்கு ஒரு முறை மட்டும் பார்த்துக் கொண்டால், தம்பதியராக அமோகமாக வாழ்வீர்கள்… ஆறு வாரத்திற்கு மேல் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.”
கார்டியனில் இருந்து
“தூய்மையான ஸ்வீடிஷ் மொழியில் எந்தவித தேவையில்லாத ஒப்பனையும் இல்லாமல் அவர் எழுதினார். இயற்கையைப் பற்றிய அவருடைய விவரிப்புகள் ஜப்பானிய ஓவியம் போல் உயிர் ஊட்டத்தோடும் அதே சமயம் மட்டுப்படுத்திய மொழியும் வைத்திருந்தது. 1954ல் அவருடைய பதினேழு கவிதைகள் வெளியான தருணத்தில் இருந்தே அவருக்கு பல பரிசுகளும் பரவலான பாராட்டுகளும் வந்து சேர ஆரம்பித்தன. அவருடைய ஆக்கங்கள் அறுபது மொழிக்கு மேல் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.”
நியு யார்க் ரிவ்யு ஆஃப் புக்ஸ் பதிவில் இருந்து
ஐம்பத்தைந்து ஆண்டுக்கால டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமர் கவிதைகளில் சில ஒற்றுமைகளைப் பார்க்கலாம்: அவருடைய தாய்நாடான ஸ்வீடனின் கரடுமுரடான கடலோர நிலப்பரப்பு; அங்கே இருக்கும் கறுப்பு வார்கால் மரங்களும் கற்பகதரு மரங்களும்; சடாரென்று வரும் வெளிச்சமும், இடி மழை சூறாவளிகளும்; அமைதியற்ற கடல்; முடிவற்ற பனிக்காலங்கள்; இவையெல்லாம் நேரடியான மொழியில், ஆர்வத்தை ஓரிடத்தில் குவிக்கும் தொனியில், பாசாங்கற்ற வெளிப்பாடாக பிரதிபலிக்கும். அவரை ’பருந்துப் புலவர்’ (buzzard poet) எனச் சொல்கிறார்கள். தன்னுடைய நிலப்பரப்பில் திருகாணிக் கண்களைக் கொண்டு ஞானத்தைத் துளையூசியாகத் தைத்துக் கொடுக்கிறார். துவக்கத்தில் வெளிப்படையாகவும் உருவமற்றதாகவும் தெரிந்தது – இப்பொழுது ஆரவாரத்தைக் கண்டு அஞ்சும் பார்வையாக புரிந்து கொள்ள முடிகிறது. முதலில் எளிமையாகவும் சிக்கனமாகவும் அறியப்பட்ட குரல் – இப்பொழுது புத்திசாலித்தனமாகவும், சிலிர்ப்பூட்டும் நெருக்கமாகவும் புலப்படுகிறது. அவருடைய எழுத்தில் சித்தர்களின் வேதம் போல் ஆன்மிக ஓட்டம் இருந்தாலும் மதப்பற்று இல்லாமல் இருக்கும். அவருக்கு வேற்றுமைகளை அறிவதில் ஆர்வம் இருந்தது. அந்த வித்தியாசங்களை மனிதர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதைச் சொன்னார். அதன் மூலம் நம்முடைய உள் திருகல்களை தெரிந்து கொண்டு, சுழல்மையத்தை கண்டுணரலாம்.