இன்று மதிய உணவின்போது மனைவியின் வழக்கமான குறை கூறும் படலம் தொடங்கியபோது இவனுக்கு ஏனோ வழக்கத்திற்கு மாறாக சிரிப்பு வந்தது. ஏனென்றால் இதே போன்ற சம்பவம் இவனது இளம்பிராயத்திலும் நடந்ததுண்டு. இன்னும்கூட நன்றாக நினைவிருக்கிறது இவனுக்கு. அப்பொழுது இவனுக்கு நான்கு வயதென்றும்,மணிக்கு ஐந்து வயதென்றும் நினைவு. அப்பொழுது பாலர் பள்ளி, ஏரிக்கரையின் அருகில், பெருமாள் கோயிலுக்கு நேரெதிராக ஈச்சாங்காடு செல்லும் சாலையையொட்டியிருந்த அந்தப் பழங்காலக் கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருந்தது.
ஏறத்தாழ முன்னூறு குடும்பங்கள் வசித்த அந்தச் சிறிய கிராமத்தில் எப்படியும் நாற்பது குழந்தைகளுக்குக் குறைவில்லாமல் தினமும் அந்த அரசுப் பாலர் பள்ளியை நம்பி இருந்தன. பரம்பரைத்தொழிலுக்கு வம்படியாகப் பழக்கப்படுத்தப்பட்ட பல தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தைகளும், பரம்பரைச் செருக்கு நிறைந்த மேல்வகுப்பினர் தங்களின் குழந்தைகளை அனுப்புவது இழுக்கு என்று கருதியதால் சில குழந்தைகளும், படித்துப் பாழாவதை விட மாடு மேய்த்து ஆளாவான் அல்லது காடு கரை பார்த்தாலே போதும் என் பிள்ளையின் காலம் கழியும் என்று என்னும் பெற்றோர்களின் பிள்ளைகளும் இப்பாலர் பள்ளிக்கு வருவதே இல்லை. ஆனால் வருகைப்பதிவேட்டில் அவர்களின் பெயர்களும் உண்டு, தினமும் வந்ததாகக் கணக்கும் உண்டு.
வார நாட்களில் மதியம் ஒரு மணிக்கு உணவும், இரண்டு மணியிலிருந்து மூன்றரைவரை உறங்கவும் வைத்து வீட்டிற்கு விரட்டி விடுவார்கள். உணவு என்றால் கட்டிடத்திற்கு பின்புறம் கிடைக்கும் கீரை வகைகளும், அந்தந்த பருவங்களில் மலிவாகக் கிடைக்கும் காய்களும் கலந்து பொங்கிய எப்பொழுதும் ஒரு சொல்லெணா வாடை வீசும் சோறு. சனி ஞாயிறுகளில் சோற்று நேரத்திற்கு மட்டும் வந்தால் போதுமானது. விசேஷ நாட்களில் அழைத்தாலும் எந்தக் குழந்தையும் வருவதில்லையாதலால், அன்று மட்டும் விடுமுறை. கட்டிடம் மிகப்பழமையான மங்களூர் ஓடு வேய்ந்த கூரை கொண்டது. எப்பொழுதும் வெய்யிலும் மழையும் ஒழுககூடியது. ஆதலால் அடைமழைக்காலங்களில் எல்லா நாட்களும் சனி ஞாயிறுகள்தான். குழந்தைகள் கோணிச்சாக்கு அல்லது சாப்பிடும் தட்டினைத் தலையில் கவிழ்த்துக்கொண்டே வந்து, ஒழுகும் கூரையையும் பொருட்படுத்தாது நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டுப் போவார்கள்.
சுதந்திர மற்றும் குடியரசு தினங்களில் மட்டும் ஊரின் மத்தியில் இயங்கும் பெரிய பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று வரிசையில் நிற்க வைத்து, கொடி ஏற்றியவுடன் மிட்டாய் தருவார்கள். அதன் பின் மதிய உணவிற்கு பெரிய பள்ளிக்கூடம் மூடிக்கொள்ள, பாலர் பள்ளியில் மட்டும் உணவு வேளையின்போது அன்றைக்கு வடைபாயசம் போடுவார்கள். அன்று மட்டும் கட்டிடம் முழுக்கக் குழந்தைகள் நிறைந்திருப்பார்கள். வழக்கமான சோறு பரிமாறப்பட்டுச் சாப்பிட்டு முடித்தவுடன், அனைவரும் சாப்பிட்ட தட்டை கழுவிக்கொண்டு வந்து வரிசையில் அமர்ந்தவுடன், அன்று மட்டும் அமர்ந்த இடத்திற்கே வந்து பரிமாறுவார்கள்.
நீர்த்த அரிசிக்கஞ்சிப் போன்ற பாயசம் கொண்டு வருகையிலேயே இனிப்பு வாடை மூக்கைத் துளைக்கும். இரண்டு அகப்பை பாயசம் விட்டு இரண்டு பெரிய அளவிலான புங்கக் காய்களை போன்ற பருப்பு வடைகளையும் போடுவார்கள். தங்களுக்கான பங்கு வந்ததும் குழந்தைகள் எதையும் யாரையும் பொருட்படுத்தாது தட்டைத்தூக்கிக்கொண்டு தங்களது இல்லம் நோக்கிப் பறந்து விடுவார்கள். சிலர் அங்கேயே இருந்து அடுத்தச் சுற்றில் இன்னும் கொஞ்சம் கிடைக்குமா என்று பார்ப்பார்கள். இவன் இரண்டாம் ரகம். பருப்பு,வெங்காயம்,பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலை கலந்து இலேசாகக் கருகல் வாடை அடிக்கும் அந்த வடை அமிழ்தமாக அடித்தொண்டைவரை ருசிக்கும் இவனுக்கு. பாயசத்தை ஒரு சொட்டு விடாமல் குடித்த பின் தட்டை கையால் வழித்து நக்குவான். இருந்தாலும் போதாமல் இன்னும் கொஞ்சம் கிடைக்காதா என்று ஏங்குவான்.
ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு முன்பு இரண்டு மூன்று வருடங்களுக்கு மட்டுமே நீடித்த சிறிய பஞ்சம் வந்தது. அதைப் பஞ்சம் என்பதைவிட ஒரு சிறிய வறட்சி என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால்இந்தப் பஞ்சத்தால் யாரும் ஊரைவிட்டுப் போகவில்லை. ஆடு மாடுகளை அடித்துத் தின்னவில்லை. பெற்ற பிள்ளைகளை பத்து வராகன்களுக்கு யாரும் விலை பேசி விற்கவில்லை. வானம் பொய்த்ததால் வந்த வறட்சியே தவிர மக்களின் மனங்கள் வறண்டுவிடவில்லை. ஊரைச்சுற்றி இருந்த சிறிய குன்றுகள் மொட்டை அடிக்கப்பட்டன. தோப்புத்துறவுகள் வெட்டி விலை பேசப்பட்டன. மழையின்றி வந்த வறட்சியைப்போக்க மழைதரும் மரங்கள் அழிக்கப்பட்டன. பரம்பரை கவுரவம் பேசியவர்களின் கர்வம்ஆட்டம் கண்டது. காணி நிலம் போதும் என்றிருந்தவர்கள் மாட்டுச்சாணியில் வரட்டித் தட்டஆரம்பித்தார்கள்.
வருகைப்பதிவேடு முற்றிலும் நிறைந்தது. பாலர்ப ள்ளி உணவு வேளையின்போது மட்டும் பெருமாள்கோயிலின் பிரகாரத்திற்கு மாற்றப்பட்டது. தானியக்குதிர்கள் வற்றிப்போக, வகுப்புப் பாகுபாடின்றி விறகு வெட்டவும் காட்டுக் கிழங்கு வெட்டவுமாக ஆலாய்ப் பறந்தார்கள். நல்ல வேளையாக மேலைநாட்டிலிருந்து தானமாகக் கிடைத்த கோதுமை மூட்டை மூட்டையாக வந்து இறங்கியது. பெருமாள்கோயிலின் பின்புறம் உள்ள பஞ்சாயத்துக் கட்டிடத்தில் அடுக்கி வைக்கப்பட்டன. ஊரின் மராமத்துப் பணிகளுக்கான கூலியாக ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து உலையில் கொதிக்க ஆரம்பித்தது கோதுமை. அப்பொழுதுவரை கோதுமையின் வாசம் கூட அறியாத ஊராதலால் அதை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் (அவர்களுக்கு சப்பாத்தி,ரொட்டி போன்ற பெயர்கள்கூட அறிமுகம் ஆகியிருக்கவில்லை) சிலர் சோற்றைப்போலப் பொங்க, சிலர் அரைத்துக் களி கிண்டினார்கள். சிலர் வறுத்து அரைத்து உப்புமா கிண்டினார்கள். மொத்தத்தில் வயிறு நிறைந்தது. பசிபறந்தது. அந்த சமயத்தில் மட்டும் மராமத்துப் பணிகள் என்ற பெயரில், இல்லாத குளங்கள் தூர்வாரப்பட்டன. வாழ்பவர்களுக்காகப் போய்ச் சேருபவர்களின் வழிகள் செப்பனிடப்பட்டன.
இவனது வீட்டிலிருந்து அம்மாவும் அப்பாவும் தினமும் போனார்கள். அம்மாவிற்கு இரண்டு படிகளும்,அப்பாவிற்கு மூன்று படிகளுமாக மொத்தம் ஐந்து படிகள் கோதுமை வருமானம். விடுமுறைகளில் அண்ணன்களும் போகத்தொடங்க, கோதுமை வரும்படி அதிகமானது. மற்ற செலவினங்களுக்காக ஆடுகள் சில உருப்படிகளை விற்று இவனது குடும்பம் சமாளித்துக்கொண்டது. இவனுக்கும் மணிக்கும் மதியவேளையில் நெல்லிச்சோறும், காலை மற்றும் இரவு வேளைகளில் கோதுமைச்சோறுமாக வயிறு நிறைந்தது.
அந்தச் சமயத்தில்தான் அந்த வருடத்திற்கான சுதந்திரதினம் வந்தது. வழக்கத்தை விடவும் கூட்டம்அதிகமாக இருக்குமென்பதால் இவர்களுக்கு வடை,பாயசம் கிடைக்காமல் போகலாம் என்ற அச்சத்தால், பதினோரு மணிக்கே பாலர் பள்ளிக்கு வந்து விட்டார்கள். அப்பொழுதுதான் வடைக்கு மாவரைத்துக்கொண்டிருந்தார்கள். சிறார்கள் பள்ளியிலிருந்து சற்றுச் தொலைவில் அமர்ந்து பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டுமிருந்தார்கள். அனைவரின் சிந்தனையிலும்,பேச்சிலும் வடை, பாயசமே ஓடிக்கொண்டிருந்தது. இவன் குதிர் நிறைய வடையும் அண்டா நிறைய பாயசமும் கிடைத்தால் நன்றாக இருக்குமே,தினமும் யாருக்கும் தராமல் தான் மட்டும் தின்னலாமே என்றெண்ணிக்கொண்டான்.
பசி வயிறைக் கிள்ள ஆரம்பித்தது. வடைப் பொறித்து எடுக்கும் சப்தமும் வாசனையும் ஒருங்கே கலந்து வர, இவர்கள் அனைவரும் வடை, பாயசம் சாப்பிடப்போவதை நினைத்து சப்புக்கொட்டினார்கள். மணி இவனைப்பார்த்து சொன்னான்:
”தம்பி, வடை, பாயசம் வாங்குனவுடன, நம்மவூட்டுக்கு எடுத்துட்டுப்போய் திங்கலாண்டா. நேத்துத் தம்பா(இவர்களது எதிர்வீட்டுப்பையன், பெரிய பள்ளிக்கூடத்தில் படிப்பவன்) எனக்கு முட்டாயி தராம காமிச்சு காமிச்சித் தின்னான். இன்னைக்கி நாம அவனுக்கு வடை பாயசம் தராம காமிச்சு காமிச்சித் திம்போம், என்ன?”
இவனும் சரியென்று தலை அசைத்தான்.
சாப்பாடு போடுவதற்கான அறிகுறிகள் தென்பட, இவனும் மணியும் ஓடிச்சென்று முதல் வரிசையில் இடம் பிடித்து அமர்ந்தார்கள். முதலில் வழக்கமான சோற்றை வாங்கி வேண்டாவெறுப்பாக வேக வேகமாகத்தின்று முடித்து, சாப்பிட்ட தட்டைக் கழுவி வந்து அமர்ந்தார்கள். மற்ற அனைவரும் சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. பாயசம் ஊற்ற ஆரம்பித்தார்கள். முதலில் இவர்கள் அமர்ந்திருந்த வரிசைக்கு ஊற்றித் தொடர்ந்து மற்ற வரிசைக்கும் ஊற்றிக் கொண்டுபோக, அவரைத் தொடர்ந்து ஒருவர் வடை போட்டுக்கொண்டு வர ஆரம்பித்தார். இரண்டிரண்டாக மிகக் கவனமாக ஒவ்வொரு தட்டிலும் வடைகளை இட்டுவர, இவன் தட்டில் மட்டும் கவனச்சிதறலாக மூன்று வடைகள் விழுந்தன. அவ்வளவுதான், அனைவரும் இவனை அதிர்ஷ்டக்காரனாகப்பார்க்க, வடையிட்டவர் மேற்பார்வையாளரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். அதிகமாகக் கிடத்த வடைகளைப் பிடுங்கிக்கொள்வார்களோ என்று பயந்து இவன் தட்டைத் தூக்கி கொண்டு ஓட, மணியும் தனது தட்டைத் தூக்கிக்கொண்டு உடன் வர, எதிரே வந்தவர்களின் பார்வையும்,வாயும் ஒருசேரக் கேட்டன.
”என்னடா இன்னக்கி வடை, பாயசமா?!”
இவர்களும் “ஆமாம்” என்றபடியே தட்டை மறைக்க முடியாமல் மறைத்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினார்கள்.
வீட்டை நெருங்க நெருங்க கை வலிக்கவே இருவரும் தங்களது தட்டை தலையில்வைத்துக்கொண்டனர். வீட்டை நெருங்குகையில் எதிர்வீட்டின் திண்ணையில் தம்பா அமர்ந்திருப்பது தெரிந்தது. உடனே இருவருக்கும் மனதில் எக்காளம் பொங்கியது.
திடீரென எங்கிருந்தோ ஒரு சேரப் பறந்து வந்த காகங்கள் இருவரின் தட்டிலிருந்தும் வடைகளைக்கவ்விக் கொண்டு பறக்க, அதிர்ச்சியில் இருவரின் தட்டுக்களும் ஒரு சேர தலை குப்புற மண்ணில் விழுந்தது. பிறகென்ன? அடுத்த அரை மணி நேரத்திற்கு இவர்களிருவரின் அழுகையும், தம்பா மற்றும் இன்ன பிறரின் எக்காளமும் அந்த இடத்தையே நிறைத்தன. அம்மா வந்து ஆளுக்கு இரண்டு பூசைகள் வைக்கும்வரை இந்த அழுகை தொடர்ந்தது. சோற்றுக்கே வழியற்ற பஞ்ச காலத்தில் வடை பாயசத்தை காகங்களுக்குத் தாரை வார்த்ததற்காக மேலும் இரண்டு நாட்கள் வசவுகள் தொடர்ந்தன.
கால ஓட்டத்தில் வலிகள் மறந்து போக, எப்பொழுது நினைத்தாலும் மெல்ல சிரிப்பு உதடுகளில் அரும்பும் சம்பவம் அது. மெல்லச் சிரித்துக் கொண்டே தன் மனைவியிடம் கேட்டான் அவன் “காக்கா வடயப் புடுங்கினவுடன பாப்பா அழுதுச்சா?”
“இல்லங்க. ஒரு மாதிரி மொகம் வாடிப்போன மாதிரி இருந்திச்சி. அப்புறம் கையக் கைய ஆட்டி காக்காவ ஓட்டுற மாதிரி ஏதோ செஞ்சிச்சி. ”
இவனுக்கு சற்றே ஆறுதலாக இருந்தது. நல்லவேளை வடை போனதின் வருத்தமோ, ஏக்கமோ தனது மகளுக்கு இல்லையென்று எண்ணி மகிழ்ந்தான். எந்த சாமி புண்ணியமோ இவனுக்கு தினமும் வேண்டுமானாலும் கூட வடை, பாயசம் செய்து சாப்பிடும் அளவிற்கு வசதிகள் இப்பொழுது உண்டு. ஆதலால் ஒருவேளை இவனது மகளுக்கு அந்த ஏக்கம் ஏற்பட்டாலும் உடனடியாகத் தீர்க்க முடியும் என்று மகிழ்ச்சி கொண்டான். இருப்பினும் இன்னமும் கூட இவனுக்கு வடை, பாயசம் என்பது மிகுந்த விருப்பதிற்கு உகந்த உணவே. இப்பொழுதும் கூட வடை, பாயசம் என்றாலே இவனுக்கு வாய்க்குள் எச்சிலூறும்.
அந்த வாரத்தின் ஞாயிறன்று வீட்டில் வடை பாயசம் செய்திருக்க, அதே பழைய ஆர்வத்துடன்சாப்பிட்டு முடித்தான். சாப்பிட்டவுடன் மெல்ல காற்றாட உண்டமயக்கம் தீர முற்றத்தில் கயிற்றுக் கட்டிலிட்டு சாய்ந்திருந்தான். இவனின் மகள் மெல்ல ஒரு வடையை மறைத்து வைத்து எடுத்து வருவதைப் பார்த்து ஆச்சரியமடைந்தான். இவனை கவனியாமல் அவள் மெல்ல வடையை கையில் வைத்துக் கொண்டு மெல்ல வானை நோக்கி கையை அசைத்தாள். இவன் பார்த்துக் கொண்டே இருந்தான். மணித்துளிகள் மெல்லக் கரைந்தன. இறுதியில் இவன் முகம் வியப்பிலாழ்ந்தது. எங்கிருந்தோ பறந்து வந்த காகம் ஒன்று அவளின் கையிலிருந்த வடையைக் கவ்விக்கொண்டு பறக்க, அவள் சந்தோசத்தில் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தாள்.