எண்ணெய்யும் தண்ணீரும்: அரபிக்கடலிலோர் அர்த்த ராத்திரியில்..

அது ஒரு செவ்வாய்க்கிழமை. வழக்கப்படி காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை பணி புரிந்து முடிந்தபின் இரண்டு தளங்கள் மேலே தங்கி வசிக்குமிடம் (Living Quarters) இருக்கும் பகுதிக்கு சென்று குளித்து முடித்து, இலவச  கேண்டீனில் மூக்குப்பிடிக்க ஒரு பிடி பிடித்தபின், மிஸ்டர் இந்தியா ஹிந்திப் படம் பாத்துவிட்டு 10:30 மணி வாக்கில் அறைக்கு திரும்பி படுத்து தூங்க ஆரம்பித்திருந்தோம்.

nightplatform

அழகான சுத்தமான அறைகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், பிளாட்பார்மில் இடம் குறைவுதான் என்பதால் ஒரு அறைக்கு நான்கு பங்க் படுக்கைகள் பக்கத்திற்கு இரண்டாக எதிரெதிரே அமைக்கப்பட்டிருக்கும். அதைத்தவிர அறைக்குள் விளக்குடன் கூடிய ஒரு சின்ன மேஜை, ஒரு உருளும் நாற்காலி, நான்கு சிறு அலமாரிகள். இவ்வளவுதான்.அதனால்  பொதுவாக படிக்க, கடிதங்கள் எழுத,  தூங்க மட்டும்தான் அறைக்கு வருவோம். மற்ற சமயங்களில் அறைக்கு வெளியேதான் எங்காவது சுற்றிக்கொண்டிருப்போம்.

room

 எங்கள் அறையில் அன்று மூன்று பொறியாளர்கள் தூங்கிக்கொண்டிருதோம். 11 மணிக்கு அறையில் இருந்த ஃபோன் அடித்தது. நான்தான் எடுத்தேன். கூப்பிட்டது கட்டுப்பாட்டு அறையில் (Control Room) நைட் டியூட்டியில் இருந்த ராஜேஷ் கட்கர்.  பஞ்சாபி வாசனை அடித்த ஹிந்தியில், “சுந்தர், சீயரா யாங்கியிலிருந்து எண்ணெய் வரவு 10 நிமிடத்திற்கு முன் நின்று விட்டது. சிரமத்திற்கு மன்னித்துவிட்டு முழிச்சுக்கோ” என்றான். தூங்கி வழிந்து கொண்டிருந்த நான் சரிதான் போ என்று எழுந்து உட்கார்ந்து, ரூமில் இருந்த மற்ற இருவரையும் எழுப்பி விஷயத்தைச்சொன்னேன்.
நாங்கள் பணி புரியும் பிளாட்பார்மை சுற்றி பத்து பதினைந்து கிலோமீட்டர் தூரங்களில் அமைக்கப்பட்டு எங்கள் பிளாட்பார்முக்கு எண்ணை அனுப்பிக்கொண்டிருக்கும் ஆளில்லா பிளாட்பார்ம் ஒவ்வொன்றிற்கும் ஒரு இரண்டெழுத்து பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். வயர்லெஸ் ரேடியோ தொடர்பு வழியே பேசும்போது சாதாரணமாக பின்னனியில் கேட்கும் கொரகொரப்பில் M அல்லது N போன்ற எழுத்துக்கள் ஒரே மாதிரியாய் கேட்கும் என்பதால், உலக அளவில் ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் அந்த எழுத்திலேயே ஆரம்பிக்கும் பெயர் ஒன்றை கொடுத்து உபயோகிப்பது குழப்பங்களைத் தவிர்க்க உருவாக்கப்பட்ட ஒரு வழக்கம். அதன்படி சீயரா யாங்கி என்பது பத்து கிலோமீட்டர் தள்ளி இருந்த SY என்ற ஆளில்லா பிளாட்பார்மை குறிக்கும் பெயர்.
மணிக்கு மணி எண்ணை உற்பத்தி குறைந்து விடாமல் பார்த்துக்கொண்டால்தான் மாதாந்திர உற்பத்தி இலக்குகளை பிடிக்க முடியும் என்பதால், இரவு நேரங்களில்  எண்ணெய் வருவது நின்று விட்டால்  மறுநாள் வரை பொறுத்திருந்து பகல் நேரத்தில் நல்ல சூரிய வெளிச்சத்தில் ஹெலிகாப்டரில் போய் இறங்கி  சாவகாசமாய் என்ன ஆயிற்று என்று ஆராய்வதெல்லாம் சரி வராது. இரவோ பகலோ உடனே கிளம்பி பழுதுகளை சரி செய்ய ஓட வேண்டும். எனவே அடுத்த அரைமணிக்குள் யூனிஃபார்மை மாட்டிக்கொண்டு கீழ் தளத்தில் இருந்த ஆய்வகத்துக்கு போய் தேவையான கருவிகளை அதற்கான பையில் போட்டு எடுத்துக்கொண்டு கிளம்பினேன். மின்னணுவியல்/கருவியியல் துறையில் இருந்து நானும், ராஜாராம் குப்தா என்ற உ.பி. மாநிலத்தை சேர்ந்த என் குழுவிலிருந்த இன்னொரு இளநிலை பொறியாளரும்,  இயந்திரவியல் துறையில் இருந்து அஞ்சன் பர்தொளை என்ற ஒரு அஸ்ஸாம் மாநில பொறியாளருமாக மூன்று பேர் கொண்ட எங்கள் குழு  பிளாட்பார்மின் உச்சி தளத்திற்கு வந்து சேர்ந்தபோது மணி 11:30.
கடலில் இருந்து சுமார் 150 அடி உயரத்தில் மொட்டை மாடி போல் இருந்த அந்த தளத்தில்தான் ஹெலிகாப்டெர்கள் வந்திறங்கும் ஹெலிபேட் இருந்தது. ஆனால் சுற்றிக்கொண்டு இருக்கும் எல்லா ஹெலிகாப்டெர்களும் பிளாட்பார்ம் ரேடியோ ஆபிசர்களுக்கு குட் நைட் சொல்லிவிட்டு மாலை ஐந்து மணிவாக்கில்  மும்பைக்கு திரும்ப பறந்து போய்விடும். இந்த மாதிரி 11 மணிக்கு ஆளில்லா பிளாட்பார்ம் எதற்காவது போக வேண்டும் என்றால் படத்தில் உள்ளது போன்ற குட்டி சரக்குக்கப்பல்களே கதி.

OffshoreShip

பிளாட்பார்மில் நைட் டியூட்டி குழுவினர் மட்டுமே இயங்கி கொண்டிருந்ததால் ஆள் நடமாட்டம் கொஞ்சம் கம்மியாய் இருந்தது. சில்லென்ற காற்று வீச பிளாட்பார்மில் ஓடிக்கொண்டு இருந்த பல்வேறு சக்தி வாய்ந்த  ஜெனரேட்டர்கள், பம்ப்புகள், கம்ப்ரஷெர்கள் எல்லாம் சேர்த்து போட்டுக்கொண்டிருந்த ஹோ வென்ற சத்தம் கீழிருந்து வந்து கொண்டிருந்தது. பிளாட்பார்ம் முழுவதும் ஜகஜ்ஜோதியாய் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தாலும், நாங்கள் இருந்தது மொட்டை மாடி என்பதால் அவ்வளவு வெளிச்சம்  இல்லை. மற்றபடி சுற்றிலும் கடல், கும்மிருட்டு. பேருக்கு தூரத்து நிலவொளி கடல் மேலும் விழுந்து அசைந்து கொண்டிருந்தது.
ஐந்து நிமிடத்தில் கீழே ஒரு குட்டிக்கப்பல் வந்து சேர, அதே சமயம் கிரேன் ஆபரேட்டர் தியாகராஜன் மொட்டை மாடிக்கு வந்து என்னிடம், “என்ன சார்? நடு ராத்திரி, சீயரா யாங்கி விஜயமா?” என்று குசலம் விசாரித்துவிட்டு கிரேன் காபினுக்குள் போய் உட்கார்ந்து கிரேன் எஞ்சினை கிளப்பினார். அதற்குள் கேண்டீனில் இருந்து எங்கள் மூவருக்கும் சாப்பாடு ரெடி செய்து மூன்று டிஃப்பன் கேரியரில் போட்டு அனுப்பி இருந்தார்கள். நாங்கள் மூவரும் எங்கள் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு, அணிந்திருந்த லைஃப் ஜாக்கெட்டை  சரிசெய்துகொண்டு எங்களுக்கு அருகில் இருந்த பெரிய வட்டமான ஒரு கூடையில் (அதை ஒரு வளையம் என்றுதான் சொல்ல வேண்டும்) ஏறி, டூல் பாக்ஸ்சையும் சாப்பாட்டையும் வட்டத்தின் நடுவே வைத்துவிட்டு அதிலிருந்து புறப்பட்ட கயிறுகளை பிடித்துக்கொண்டு நின்றோம். தியாகராஜன் கிரேனில் இருந்த வயர்லெஸ் வழியே  கீழே காத்துக்கொண்டிருந்த கப்பலின் கேப்டனுடன் பேசிவிட்டு, ஒரு பெரிய விளக்கை எங்கள் பக்கம் திருப்பி, லவுட்ஸ்பீக்கர் வழியே “ரெடியா?”  என்றார். நான் வலது கையால் ஒரு தம்ப்ஸ்அப் காட்டிவிட்டு திரும்ப இரண்டு கைகளாலும் கயிறுகளை பிடித்துக்கொண்டேன். அவர் மெல்ல கிரேனின் பூமை (Boom)  உயர்த்தவும்,  தளர்ந்திருந்த கயிறு விறைத்துக்கொண்டு எங்கள் மூவரையும் பிளாட்பார்ம் மொட்டைமாடி தளத்தில் இருந்து அனாயாசமாக தூக்கியது.

basket

அடுத்த நிமிடம் பிளாட்பார்மில் இருந்து இருபதடி உயரத்தில் நாங்கள் தொங்கிக்கொண்டிருக்க  தியாகராஜன்  கிரேனின் பூமை கிடைமட்டமாக (horizontally)  திருப்பவும் பிளாட்பார்ம் எங்களுக்கு கீழே இருந்து விலகிக்கொண்டது. ஏறக்குறைய அருகிலுள்ள படத்தில் இருப்பது போல்தான், ஆனால் இதெல்லாம் நடப்பது நள்ளிரவில், கும்மிருட்டில். ஒரு தும்மல் வந்து கையை விட்டால் நேராக 200 அடி கீழே இருக்கும் கடலுக்குள் போய்  விழுவோம்! அப்படியெல்லாம் யாரும் அசட்டுத்தனம் ஏதும் செய்யவில்லை. எனவே அடுத்த சில நிமிடங்களில் அவர் கிரேன் கயிற்றை இறக்க பிளாட்பார்ம்மின் மூன்றாம் தளம், இரண்டாம் தளம், முதல் தளம் என்று எங்கள் கூடை இறங்கிக்கொண்டே வந்தது. இரண்டாவது தளத்தை கடந்தபோது அங்கே ஓடும் ஜெனரேட்டர்களின் எக்ஸாஸ்ட் காற்றில் இருந்து வந்த வெப்பம் சில வினாடிகளுக்கு எங்களை தழுவி இதமளித்து, நாங்கள் முதல் தளம் அளவுக்கு இறங்கியதும் விடை பெற்றது. திரும்ப சில்லென்ற கடல் காற்று வீச, இரண்டொரு நிமிடங்களில் அந்த சின்னக்கப்பலின்  தளத்தில் எங்கள் கூடை தொம்மென்று இடிக்க தியாகராஜன் கயிற்றை இன்னும் கொஞ்சம் இறக்கி கிரேனை நிறுத்தினார். பிளாட்பார்ம் போல் இல்லாமல் அலைகளுக்கேத்தபடி உயர்ந்து தாழ்ந்து ஆடிக்கொண்டிருந்த கப்பலின் தளத்தில் நாங்கள் மூவரும் குதித்து இறங்கி, எங்கள் டூல் பாக்ஸ், சாப்பாடு, வாக்கி டாக்கி, ஃபிளாஷ் லைட் இத்யாதி  சமாச்சாரங்களை எடுத்துக்கொண்டு விலக, தியாகராஜன் ஆணைகளுக்கு உட்பட்டு கிரேன் கூடை எழுந்து பிளட்பார்முக்கு திரும்ப போய் விட்டது.
பிளாட்பார்ம் ரேடியோ ஆபிசருக்கு பை சொல்லிவிட்டு  கேப்டன் கப்பலின்  எஞ்சினை முடுக்கவும், அதன் பெரிய ப்ரோபெல்லர்கள் கீழே சுற்ற ஆரம்பிக்க, நிறைய நுரையுடன் கப்பல் திரும்பி SY பிளாட்பார்மை நோக்கி விரைந்தது. கப்பல் பணியாளர்கள் எங்களை வரவேற்று அதிலிருந்த ஒரு குட்டி சமையலறைக்கு கூட்டிச்சென்றார்கள். குளிருக்கு இதமாக ஆளுக்கு ஒரு போர்ன்விட்டா போட்டு எடுத்துக்கொண்டு மேலே போய் என்ஜின் ரூமில் இருந்த கேப்டனை பார்த்து ஒரு ஹலோ சொல்லிவிட்டு உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அந்த கப்பல் அலைகளின் மேல் தவ்வித்தவ்வி குதித்து  விரைந்து SY போய் சேர அரை மணியானது.
ஆளில்லா பிளாட்பார்ம் என்று அவை அழைக்கப்படுவதற்கு காரணம் அங்கே யாரும் தொடர்ந்து வசித்து பணி புரிவதில்லை என்பதால்தானே? அதனால் அதை நெருங்கியவுடன் நம்மை மாலை போட்டு வரவேற்கவோ, கிரேன் கூடையை இறக்கி உள்ளே அழைத்துக்கொள்ளவோ யாரும் காத்திருக்க மாட்டார்கள்.  கப்பலில் இருந்து பிளாட்பார்முக்கு செல்ல, பாலம் மாதிரியும் எதுவும் கிடையாது. ஆகவே கப்பலின் கேப்டன் முடிந்த அளவு கப்பலை  பிளாட்பார்மின் அடித்தளத்துக்கு அருகே கொண்டு செல்வார். கப்பலில் இருந்து பார்க்கும்போது இத்தகைய ஆளில்லா பிளாட்பார்மின் கடலுக்கருகே இருக்கும் அடித்தளம் எப்படி இருக்கும் என்று அருகிலுள்ள படத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

tarzanswing

 அலைகளின் ஆர்பாட்டம் அதிகம் இல்லை என்றால் கப்பலுக்கும் அந்த தளத்துக்கும் இடையே இரண்டடி தூரம்தான் இருக்கும். ஒரு சின்ன குதி குதித்து போய் விடலாம்.  அலைகள் பெரிதாக அடித்துக்கொண்டிருந்தால் கப்பலுக்கோ பிளட்பார்முக்கோ சேதம் ஏதும் ஆகாமல் இருப்பதற்காக பத்து பதினைந்து அடி தள்ளி நிறுத்த வேண்டியிருக்கும். அன்றிருந்த அலைகளின் காரணமாக கப்பல் பத்தடி தள்ளியே நின்று ஆடிக்கொண்டு இருந்தது. கப்பலில் இருந்து ஒரு கொக்கியுடன் கூடிய ஒரு நீண்ட குச்சியால் பிளாட்பார்மில் தொங்கிக்கொண்டிருக்கும் தாம்புக்கயிறு ஒன்றை மாட்டி இழுத்து கப்பலுக்கு கொண்டுவந்து அதைப்பிடித்தபடி ஒவ்வொருவராய் நாங்கள் மூவரும் டார்ஜான் போல் ஒரு ஜம்ப் செய்து பிளாட்பார்மில் போய் குதித்தோம்! அடுத்து கப்பல் பணியாளர்கள் உதவியுடன் அதே கயிற்றில் கட்டி ஒவ்வொன்றாக டூல் பாக்ஸ், சாப்பாட்டு கேரியர், இத்யாதிகளையும் பிளாட்பார்ம் பக்கம் தருவித்துக்கொண்டு, கப்பலுக்கு டாட்டா சொன்னோம். எங்கள் வேலை முடியும் வரை பாதுகாப்புக்காக கப்பல் அங்கேயே இருக்க வேண்டும் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எந்த ஒரு இரவிலும் கப்பல் காத்திருந்த சரித்திரமே கிடையாது! எங்களை தனியே விட்டுவிட்டு வேறு வேலைகளை பார்க்க கப்பல் போய்விடும். தேவையானபோது வாக்கி டாக்கி வழியே திரும்ப அதனை அழைத்துக்கொள்ள வேண்டும். பதினைந்து கிலோமீட்டர்  தூரத்தில் நாங்கள் பணி புரியும் பிளாட்பார்ம் விளக்குகள் இருண்ட கடலின் நடுவே நின்றுகொண்டிருந்த எங்களைப்பார்த்து கண் சிமிட்டிக்கொண்டிருந்தன.

unmanned2

சாதாரணமாக பராமரிப்பு வேலைகள் செய்ய பகல் நேரங்களில் மாதம் ஒருமுறை இந்த பிளாட்பார்ம்களுக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்குவோம். அப்போதெல்லாம் கடலின் அடியிலிருந்து மேலே வந்து குழாய்களின் வழியாக பணியாளர்கள் பணி புரியும் பெரிய பிளட்பார்முக்கு ஓடிக்கொண்டிருக்கும் எண்ணெய் + எரிவாயுவின் சத்தம் உஸ் உஸ் என்று பெரிய ஆரவாரத்துடன் எங்களை வரவேற்கும். சுமாராக மூன்று வினாடிகளுக்கு ஒரு முறை உயர்ந்து தாழ்ந்து திரும்பத்திரும்ப விடாமல் ஒலிக்கும் அந்தப்பெரிய  உஸ் உஸ் சத்தம் எங்கள் காதுகளுக்கு ஒரு இனிய இசையாய்  “எல்லாம் நலம்” என்று தெரியப்படுத்தும் ஒரு அறிவிப்பு. எண்ணெய் ஓட்டம் நின்று போய் இருந்ததால், அந்த ஒலி இல்லாமல்அங்கு நிலவிய அமைதி ஏதோ சரியில்லை என்பதை நினைவுபடுத்தியது. இல்லாத அந்த ஓசையில் சாதாரணமாக அமிழ்ந்து மறைந்து விடும் அலைகளின் சளக் சளக் சப்தத்தை அந்த அமைதி அதிகப்படுத்திக்காட்டி எங்களை வினோதமாய் உணர வைத்தது! இறங்கியவுடன் வேறு விபரீத காட்சிகள்  எதுவும் தென்படாததால், எங்கள் கை விளக்குகளால் படிந்திருந்த இருட்டை கொஞ்சம் தள்ளிவிட்டு, எங்கேயும் விழுந்து வைக்காமல் படிகளில் ஏறி முதல் தளத்துக்கு போனோம்.
இந்த பிளாட்பார்ம்களுக்கு மும்பையில் இருந்து மின்சார இணைப்பெல்லாம் கொடுக்க முடியாது. எனவே மின்சாரம் வேண்டும் என்றால் ஜெனரேட்டர்களைத்தான் நம்பியாக வேண்டும். பணியாளர்கள் உள்ள பெரிய பிளாட்பார்ம்களில் பல மின்னியல் பொறியாளர்கள் பார்த்து பராமரிக்கும் பெரிய ஜெனெரட்டர்கள் 24 மணி நேரமும் ஓடி தேவையான மின்சாரத்தை வழங்கிக்கொண்டிருக்கும். இந்த ஆளில்லா பிளாட்பார்ம்களில் அதெல்லாம் கிடையாது. அதற்கு பதில் பெட்ரோலில் ஓடும் ஜெனெரட்டர் ஒன்று தேவையானால் உபயோகித்துக்கொள்ள அமைக்கப்பட்டிருக்கும். எனக்கு தெரிந்தவரை இந்த ஜெனெரட்டர்களை யாரும் சரியாக பராமரிப்பதில்லை. எனவே ஆளில்லா பிளாட்பார்ம்களில் அவை ஒழுங்காக ஓடி நான் பார்த்ததே இல்லை! அவை ஓடி எல்லா விளக்குகளும் எரிந்தால் வேலை செய்ய வசதியாக இருக்கும். எனவே இங்கேயும் சும்மா உட்கார்ந்திருந்த ஜெனரேட்டரை இயக்க சில நிமிடங்கள் முயற்சித்துப்பார்த்து விட்டு, அது ஒன்றும் இயங்கும் போல் தோன்றாததால் முயற்சியை கை விட்டோம். கை விளக்குகளே கதி!
ஆட்களோ மின்சாரமோ இல்லாமல் இந்த பிளாட்பார்ம்கள் ஒரு தன்னிறைவான (Self-Contained) முறையில் இயங்குவதற்காக வடிவமைக்கப்பட்டவை என்பதால், கீழிருந்து வரும் குழம்பை ஒரு டேங்கில் போட்டு, அதிலிருந்து எரிவாயுவை கொஞ்சம் பிரித்தெடுத்து, சுத்தமாய் வடிகட்டி இன்னொரு வாயு டேங்கில் (Gas Tank) அழுத்தத்துடன் நிரப்பி வைத்திருப்பார்கள். இந்த டேங்க் ஒரு பேட்டரிக்கு சமம். அழுத்தம் வோல்டேஜுக்கும்,  வாயு மின்சாரத்துக்கும் இணை என்று சொல்லலாம். மின்சாரமளவுக்கு வேகமாக வாயுவினால் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பாய முடியாது என்றாலும், இந்த பிளாட்பார்முக்குள் உள்ள கருவிகளை இயக்க இந்த அமைப்பு போதுமானது!
சென்ற அத்தியாயங்களில் நாம் பார்த்த நிலத்தடி பாதுகாப்பு வால்வ்  (Subsurface Safety Valve அல்லது SSSV) மற்றும் நில மேற்பரப்பு பாதுகாப்பு வால்வ் (Surface Safety Valve அல்லது SSV)  இவற்றை எல்லாம் இயக்க மின்சாரத்திற்கு பதில் வாயுவினாலேயே இயங்கும் பேனல் (Pneumatic Control Panel) ஒன்று அமைத்திருப்பார்கள்.
wellheadcontrolpanel
அந்த பேனலுக்கு சென்று நிலைமை என்ன என்று ஆராய்ந்தபோது கிணறுகள் நின்று போனதின் காரணம் நிலத்தடி பாதுகாப்பு வால்வுகள் அனைத்தும் மூடப்பட்டதுதான் என்று தெரிந்தது. அவை ஏன் மூடப்பட்டன என்றால் அந்த பேனலில் இருந்து நிலத்தடி பாதுகாப்பு வால்வுகளுக்கு போக வேண்டிய அழுத்தத்தை சென்ற அத்தியாயத்தில் பார்த்த அந்த கையடக்கமான குட்டி பம்ப் (பெரும்பாலும் ஹாஸ்கல் என்ற நிறுவனத்தின் தயாரிப்பு) கொடுக்காததால்தான். அதில் இருந்து ஹைடிராலிக் எண்ணையை எடுத்துச்செல்லும் ஓர் கால் அங்குல ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் குழாய் கசிய ஆரம்பிக்க நாளடைவில் அந்தக்கசிவு பெரிதாகி அந்த குட்டி  பம்ப்  அழுத்தத்தை பராமரிக்க முயன்று  முடியாமல் சோர்ந்து படுத்து விட்டதால் வந்த விளைவு இது. அந்த பேனலுக்குள் உள்ள அடித்தரையில் நாலைந்து லிட்டர் எண்ணை கசிந்து தேங்கியிருந்தது. விஷயம் புரிந்தவுடன்,ராஜாராம், அஞ்சன், நான் மூவருமாக செயல்பட ஆரம்பித்தோம். நல்ல வேளையாக கையோடு கொண்டுவந்திருந்த மாற்று ஹாஸ்கல் பம்ப்பை பொறுத்தி புதிய குழாய்களை அமைத்து, கசிந்த எண்ணையை திரும்ப எடுத்து வடிகட்டி அதற்கான சிறிய டேங்கில் திரும்ப ஊற்றினோம்.

haskel

இதெல்லாம் முடிந்தபின், மின்சார ஸ்விட்ச்சை ஆன் செய்வதற்கு இணையாக, எரிவாயுவை அந்த வாயு டேங்கிலிருந்து இந்த பம்ப்பிற்குள் செலுத்தும் ஒரு குட்டி  வால்வை திறக்கவும், பட் பட் பட் பட் என்று பம்ப் இயங்கி அடுத்த ஐந்து நிமிடங்களில் ஹைடிராலிக் அழுத்தத்தை திரும்ப 2100 பியெஸ்ஐக்கு கொண்டு செல்ல, SSSV வால்வுகள் எங்கோ கடலுக்கடியில் திறக்கவும் ஒரு பெரிய தொடர்ந்த புஸ் சத்தத்துடன் எண்ணெய் குழம்பு பாய ஆரம்பித்தது. யே என்று குஷியாய் எல்லோரும் ஹை ஃபைவ் கொடுத்துக்கொண்டோம்! நடுநடுவே  எங்கள் பிளாட்பார்மின் கண்ட்ரோல் ரூமில் இருந்த ராஜேஷுடன் பேசி நிலமையை நாங்கள் அவ்வப்போது தெரியப்படுத்திக்கொண்டே இருந்ததால், எங்கள் வாக்கி டாக்கி வழியே பம்ப் இயங்கும் பட் பட் சத்தத்தில் இருந்து எண்ணை பாயும் புஸ் சத்தம் வரை எல்லாவற்றையும் கண்ட்ரோல் அறையிலும் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். எனவே அங்கேயும் இணையான ஹைஃபைவ்கள் பறந்தன. அடுத்த 15 நிமிடங்களில் மெதுவாக  எல்லா அழுத்தங்களும் சீராகவே,  திரும்ப ஒரே ரிதமாக 3 வினாடிகளுக்கு ஒரு முறை உஸ் உஸ் ரீங்காரம் நிலைநாட்டப்பட்டு எல்லாம் நார்மலுக்கு வந்து எண்ணெய் வழக்கம்போல் பெரிய பிளாட்பார்முக்கு ஒழுங்காக பாய ஆரம்பித்தது.
ஒயர்லெஸ் வழியே கப்பலைத் திரும்பக் கூப்பிட்டு விட்டு, காத்திருந்த சமயத்தில் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை மங்கிய நிலவொளியில் சாப்பிட்டோம். கப்பல் வந்ததும் திரும்ப பிளாட்பார்மின் கீழ் தளத்திற்கு விரைந்து,  டார்ஜான் ஊஞ்சல் ஆடித் திரும்பிப் போய் குதித்தோம். கப்பல் எங்களை மறுபடி எங்கள் பிளாட்பார்முக்கு அழைத்துச்செல்லவும், தியாகராஜன் தயவில் கிரேன் கூடையில் ஏறி மொட்டை மாடிக்குத் தூக்கப்பட்டு, சாமான்களை ஆய்வகத்தில் போட்டுவிட்டு உடை மாற்றிப் படுக்கையில் சென்று விழுந்தபோது புதன்கிழமை காலை மணி ஆறாகி சூரியன் உதித்துச் சிரித்துக் கொண்டிருந்தது.
(தொடரும்)

0 Replies to “எண்ணெய்யும் தண்ணீரும்: அரபிக்கடலிலோர் அர்த்த ராத்திரியில்..”

  1. மிக சுவாரசியமான நடை. எண்ணெய் துரப்பண மேடையின் சூழலையும் அதன் தட்ப வெட்ப்பங்களையும் வெகு அழகாக உங்கள் எழுத்தினால் படம் பிடித்திருக்கிறீர்கள். குறிப்பாக கீழேயிறங்கும் பொழுது வீசும் குளிர் வெப்பக் காற்று, ஓசைகள் என்று உணர முடிந்தது, உங்களுடன் அந்த இரவில் பயணித்து பணிபுரிந்த ஒரு அனுபவத்தை அளிக்கிறது. உங்கள் பழைய பதிவுகளையும் படிக்க வேண்டும்.
    ச.திருமலைராஜன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.