அறம் செய்த அறம்

காண்டம்: பால காண்டம்
படலம்: குலமுறை கிளத்துப் படலம்

நண்பர் ப்ரகாஷ் சங்கரன் அவர்களின் ஒரு சிறுகதையைப் படித்துக்கொண்டிருந்தேன். கதையின் கரு, நடை பற்றி ஏதும் சொல்வதற்கு முன் ஒன்று கவனித்தேன். உணவை குறிப்பிடும் இடங்களில் (பருப்பு சாதத்தில் நிறைய நெய் ஊற்றிப் பிசைந்து, தட்டின் ஓரத்தில் கொஞ்சமாக வத்தல் குழம்பை ஊற்றி, சுட்ட அப்பளமும், வாழைக்காய் கறியும்) அத்தனை துல்லியமாக வர்ணித்திருந்தார். நிச்சயம் இந்தக் கதையை எழுதும் போது எழுத்தாளர் பசியில் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அவர் பருப்பு சாதமும் வத்தக்குழம்பும் சுலபத்தில் கிடைக்காத ஒரு செக்கோஸ்லாவாகியா நகரத்தில்தான் இருக்கிறார்!

சில படைப்புகளை படிக்கும் போதே படைப்பாளிகளின்  சூழ்நிலையைப் பற்றி மனதில் ஒரு வரி தனியாக, தொலைக்காட்சி சேனல்களில் அடியில் “முக்கியச் செய்திகள்” ஓடுவது போல் ஓடிக்கொண்டே இருக்கும்.

கம்பராமாயணத்தைப் படிக்க ஆரம்பித்து சில அமர்வுகளிலேயே தோன்றியது, கம்பனின் பார்வை ஒரு drone camera பார்வை அல்லது பெருங் கழுகுப் பார்வை என்று. எதையும் “உலகத்தோடு” அல்லது உலகம் யாவையுமாகத்தான் பார்க்கிறார்.

மேலும், கடலை ஒட்டிய பெரிய மலைத் துண்டின் உச்சி மேல் இருப்பிடம் அமைத்து அங்கிருந்து தினமும் கடலை நோக்கி அமர்ந்துதான்  கம்பராமாயணம் இயற்றியிருப்பாரோ என்று தோன்றியது!

கடல், கருங்கடல் ஆழி என்று பாடல்களில் தொடர்ந்து குறிப்பிடப்பட்டுக்கொண்டே வருகின்றன. சந்தனம் தொட்ட விரல்களால் தொடப்பட்ட இடங்களெல்லாம் மணப்பது போல், பாடல்களில் எங்கும் அவர் அகம் முழுவதும் பரந்த, “உலகம் யாவையும்” பார்வையும், பெருங்கடலும்…

இன்றைய பகுதிக்காக எடுத்துக்கொண்ட இராமபிரான் பிறந்த பாடலிலும் கருங்கடல் தவறாமல் குறிப்பிடப்படுகிறது.

விரிந்திடு தீவினை செய்த
   வெவ்விய தீவினையாலும்.
அருங் கடை இல் மறை அறைந்த
   அறம் செய்த அறத்தாலும்.
இருங் கடகக் கரதலத்து இவ்
   எழுத அரிய திருமேனிக்
கருங்கடலைச் செங் கனி வாய்க்
   கவுசலை என்பாள் பயந்தாள்.

விரிந்திடு தீவினை செய்த வெவ்விய தீவினையாலும் – உலகம் முழுவதும் விரிந்து பரவியிருக்கிற தீவினைகள் செய்த மொத்த தீவினையாலும், பாவத்தாலும்;

அருங் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும் – தருமங்கள் செய்த தருமத்தாலும்;

இருங் கடகக் கரதலத்து – இரு கரங்களிலும் கடகம் என்னும் அணி அணிந்த கைகளைக்கொண்ட;

எழுத அரிய திருமேனிக்கருங்கடலைச் – சித்திரத்தில் எழுத முடியாத அழகிய உடலையும்  கருங்கடல் போன்ற கரிய நிறமுமுடைய இராமனை;

செங் கனி வாய்க்   கவுசலை என்பாள் பயந்தாள் – சிவந்த வாய் கொண்ட கவுசலை பெற்றாள்.

உலகம் முழுவதும் விரிந்திருக்கும் தீவினைகள் செய்த மொத்த தீவினையாலும், வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் தருமங்கள் செய்த தருமத்தாலும் இராமன் பிறந்தார் என்று படிக்கும்போது இதில் தென்படும் அழகியலை எண்ணி நிச்சயம் புன்னகைக்கிறோம்.

   ‘தீவினை  செய்த  தீவினையாலும் அறம்  செய்த  அறத்தாலும் பயந்தாள்’ …அட! கம்பரோ, எப்போதோ எங்கேயோ போய்விட்டார்!

oOo

சென்ற பாடலின் போது விளையாட்டாய் ஓர் கற்பனை செய்தேன் இல்லையா, கம்பனின் இருப்பிடம் கடலை ஒட்டிய மலை முகடாகத்தான் இருக்கவேண்டும் என்று.  அந்த கற்பனையை வளர்த்துக்கொண்டால் கீழ்க்கண்ட பாடலை இன்னும் ரசிக்க முடியும் என்று தோன்றுகிறது.

BlackSea

தசரதரின் புதல்வர்களான இராமன், பரதன், இலக்குவன், சத்துருக்கன் கல்வி கற்று வளர்வதை  குறிப்பிடும் கீழ்கண்ட பாடலை எழுதும் போது அந்த குடிலில் பௌர்ணமி இரவில் வெளிவந்து கடலையும் திங்களையும் ஒரு சேரக் கண்டிருக்க கூடும்.

தலை ஆய பேர் உணர்வின்
   கலைமகட்குத் தலைவர் ஆய்.
சிலை ஆயும் தனு வேதம்
   தெவ்வரைப்போல் பணி செய்ய.
கலை ஆழிக் கதிர்த் திங்கள்
உதயத்தில் கலித்து ஓங்கும்
   அலை ஆழி என வளர்ந்தார் –
மறை நான்கும் அனையார்கள்.      

மறை    நான்கும்  அனையார்கள்–  நான்கு   வேதங்களையும் போன்ற அந்த ராஜகுமாரர் நால்வரும்;

சிலை   ஆயும் தனு வேதம்  –  வில்  திறத்தை  ஆராய்ந்து  கூறும் தனுர்  வேதமானது;

தெவ்வரைப் போல் பணி செய்ய – தோற்ற பகைவர்   குற்றேவல் செய்வது  போல் பணி செய்ய;

தலை ஆய பேர் உணர்வின் – முதன்மையானதும், முதிர்ந்த அறிவில்;

கலைமகட்குத் தலைவர் ஆய் – –   கலைமகளுக்கும் மேம்பட்டவராய்/கலைமகளுக்கும் தலைவரான குருவின் மேற்பார்வையில்/பயிற்சியில்;

கலை ஆழிக் கதிர்த் திங்கள் உதயத்தில் – கலைகள் நிறைந்த வட்டவடிவமான ஒளியையுடைய முழு நிலவின் உதயத்தில்;

கலித்து ஓங்கும்  அலை ஆழி என வளர்ந்தார் – ஆர்ப்பரித்துப் பொங்கும் அலைகள் கொண்ட பெருங்கடலைப் போன்று வளர்ந்து வந்தார்கள்;

அறிவில் முதிர்ந்த ஆசிரியர் முன்னிலையில்/மேற்பார்வையில்  அறிவு அலைகள்  பொங்க அந்த அரச குமாரர்கள் வளர்ந்து வந்தனர் என்பதை நிலவு உதயத்தில் ஆர்ப்பரிக்கும் அலைகள் எனக் குறிப்பிடுகிறார்.

சிறுவயதில் நாம் கடற்கரையை நெருங்க நெருங்க, அலைகள் எங்கு உருவாகின்றன என்பதை ஒரு முறையாவது கவனிக்க முயன்றிருப்போம். தூரத்தில் அலைகள் ஏதோ ஓரிடத்தில் மெல்லத் திரள ஆரம்பிக்கின்றன. கரையை நெருங்க நெருங்க, திரண்டு உற்சாகமாக சக அலைகளோடு இணைந்து இன்னும் பெரியதாய் வளர்ந்து படு உற்சாக கூச்சல்களோடு  உயர்ந்து வருகின்றன.

ராமனும் சகோதரர்களும் வளர்ந்து வருவதை இப்படி ஆர்ப்பரிக்கும் ஆழி அலைகள் வளர்ந்து வருவதோடு ஒப்பிட ஒருவர் முழுத் திங்கள் உதயத்தில் உற்சாக அலைகளின் ஆர்ப்பரிப்பை நிச்சயம் மலை முகட்டிலிருந்து ரசித்திருக்க வேண்டும்!

oOo

இராமன் தாடகையின் மீது எய்த அம்பின் சிறப்பைக் கூறும் கீழ் வரும் பாடலை தேர்ந்தெடுத்ததற்குக்  “கடல்” தான் காரணம் என்றாலும்ராமன் எத்தனை ராமனடி என்பது போல் இந்தப்பாடலில் “உருவ” என்னும் வார்த்தை எத்தனை எத்தனை “உருவ”!

அலை உருவக் கடல் உருவத்து
ஆண்தகைதன் நீண்டு உயர்ந்த
நிலை உருவப் புய வலியை
நீ உருவ நோக்கு ஐயா!
உலை உருவக் கனல் உமிழ் கண்
தாடகைதன் உரம் உருவி
மலை உருவி மரம் உருவி
மண் உருவிற்று ஒரு வாளி!

அலை உருவம் கடல் உருவத்துஅலைகளின் வடிவமாகக்காட்சியளிக்கின்ற கடல்போன்ற   கரிய திருமேனியுடைய

ஆண் தகைதன் நீண்டு  உயர்ந்த  – ஆண்மைத் தன்மையுள்ள  இந்த இராமனது நெடிதாக  உயர்ந்துள்ள;

நிலைஉருவப்புயம்  வலியை  நிலையான  அழகுடைய  தோள்களின் ஆற்றலை;

நீஉருவநோக்குநீ உற்றுப் பார்ப்பாயாக மன்னவனே!;

ஒருவாளி – (இராமனது  தோள்  வலியால் எய்யப்பட்ட) அம்பு ஒன்றுதான்

உலை உருவம் கனல்  உமிழ் கண்    உலைக்  களத்திலுள்ள  சிவந்த நெருப்பைக் கக்குகின்ற கண்களையுடைய

தாடகை  தன் உரன் உருவி  தாடகையினது மார்பை ஊடுருவி;

மலை உருவி – (அடுத்து  நின்ற);மலைகளையும் ஊடுருவி;

மரம் உருவி    பல மரங்களையும் ஊடுருவி;

மண் உருவிற்று – (எதிரே வேறு   பொருள் இல்லாமையால்) நிலத்தையும் துளைத்துச் சென்றது

ஒரே அம்புதான் – தாடகையின் மார்பைத் ஊடுருவி, பின் நின்ற மலைகளை ஊடுருவி,  மரங்களை ஊடுருவி பின் கடைசியில் மண்ணையும் ஊடுறுருவிச்செல்கிறது.

ஒரே வார்த்தைதான் – “உருவ”, அலை உருவமாகவும், கடல் உருவமாகவும் நிலையான அழகாகவும், உலைக்களமாகவும் மாறி பின் வாசகரின் நெஞ்சங்களையும் ஊடுருவுகிறது.

ராமனைப் போலவே கம்பனுக்கும் ஒரு வார்த்தை போதும்!

oOo