Ecce Homo (இவன் மனிதன்!)

அலைகளின் மீது  ஆடிக்கொண்டிருந்த வைரங்களை நள்ளிரவில் யாருமற்ற தனிமையில் கப்பலின் மேல்தளத்திலிருந்து சிந்தனை ஏதுமின்றி சில நொடிகள் பார்த்திருந்தான். வைரம் நீரில் மிதக்காதென்ற தர்க்கம் சட்டென மின்னலைப் போல் தோன்றி மறைய தலையை உயர்த்தி வானத்தை அண்ணாந்து பார்த்தான். நட்சத்திரங்கள் அவன் முட்டாள்தனத்தை எள்ளி நகைப்பதைக் கண்டு தனக்குத் தானே சிரித்துக்கொண்டான்.

கப்பலில் பயணிப்பது  ஒரு வித பயம் கலந்த ஆச்சரியத்தை அவனுக்கு அளித்துக் கொண்டே இருந்தது. ஆங்கிலத்தில் பேசும்போது ஒவ்வொரு வாக்கியத்தையும் தன்னுள் ஒரு முறையேனும் ஒத்திகை செய்த பிறகே அவனால் சகபயணிகளுடன் உரையாட முடிந்தது. அறையை விட்டு வெளியே சென்று மற்றவர்களுடன் சகஜமாக பழகும்படி மஜும்தார்  அவனை வற்புறுத்திக் கொண்டிருந்தார். ஆனால் அதைச் செய்வதற்கு அவனுக்கு இன்னமும் தயக்கமாகத்தான் இருந்தது. மஜும்தார் கூடவே பயணிப்பது அவனது அதிர்ஷ்டமே. கப்பல் பணியாளர் குழுவிலிருந்த இந்தியர்களைத் தாஜா செய்து அவர்தான் இவனுக்காக “தால்” சமைத்துத்தர வழிசெய்தார்.

பெரும் தடைகளை மீறித்தான் அவனால் இப்பயணத்தை மேற்கொள்ள முடிந்தது. அம்மா அவன் கடல்கடந்து அயல்நாடு செல்வதை மிகவுமே அஞ்சினாள். மது, மாது, மாமிசப் பேய்களால் அவன் அலைக்கழிக்கப்படுவது போல் அவள் நாள்தோறும் கனவு கண்டாள். அவன் அப்பாவின் மறைவிற்குப் பிறகு இவன் மீதான அவளது அக்கறை இன்னமும் அதிகரித்திருந்தது. அப்பாவின் கடைசி ஆசை இது என்று இவனும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். அது அவள் பதற்றத்தை குறைத்ததே ஒழிய முற்றிலும் அகற்றவில்லை.  இம்மாதிரியான அன்பு அழுத்தங்களின் சுமையைத் தாங்க மாட்டாது அவனும் பலமுறை அவள் மீது கோபமுற்று அதற்காக பின்னால் வருந்தியும் இருக்கிறான். பேச்சார்ஜி ஸ்வாமியிடம் அவனளித்த மூன்று சத்தியப் பிரமாணங்களே அவளை ஒரு வழியாக சமாதானப்படுத்தின.

மேலும் அம்மூன்று பேய்களும் நண்பன் மேதாப் அவனுக்கு ஏற்கனவே அறிமுகப்ப்டுத்தியவைதானே! இன்றும் அச்சம்பவங்களைப் பற்றிய நினைவு அவனைக் கூசித் தலைகுனிய வைத்தது. இரவில்,ஆற்றங்கரையில், தனிமையான ஓர் இடத்தில் திருடர்களைப் போல் அண்ணனும் அவனும் மேதாபை சந்திப்பதற்காக ஒரு முறை ஓடினார்கள். மேதாப் கொண்டு வந்திருந்த ஆட்டிறைச்சி பதப்படுத்தப்பட்ட செருப்புத் தோல் போல் கடினமாக இருந்தது. மதுவோ ஏதோவொரு கசப்பான மருந்தை நினைவூட்டியது.  அன்றிரவு கனவில் ஒரு ஆடு அவன் வயிற்றிலிருந்து வீலென்று கதறியதை நினைத்தால்கூட அவனுக்கு வேர்த்து விடும். ஆனால் இதற்குப் பிறகும் மேதாப் சமைத்துக் கொடுத்த பிற புலால் உணவு வகைகளை அவனால் ருசித்துப் புசிக்க முடிந்தது. மேதாபின், உடல் வாகும் சுவாரசியமான பேச்சும் அவனை வசீகரித்திருந்த காலம். புலால் தன்னையும் மேதாபைப் போல் பலசாலி ஆக்கும் என்ற நம்பிக்கை அவனுள் மிக ஆழமாகவே  வேரூன்றி இருந்தது. எனினும் வீட்டில் இரவு உணவை அவன் தவிர்ப்பதற்கான காரணங்களை அம்மா துருவித் துருவிக் கேட்டபோது அவன் கூறிய பொய்கள் இரவு முழுதும் குற்றவுணர்வுகளில் ஆழ்த்திவிடும்.. சில நாட்கள் மேதாபை தவிர்க்க முயற்சிப்பான். ஆனால் விளக்கால் ஈர்க்கப்படும் விட்டில் பூச்சியைப் போல் மீண்டும் மீண்டும் மேதாபின் வலையில் சிக்கிக் கொள்வது அவனுக்கு ஏதோ ஒரு விதத்தில் சுகத்தை அளித்தது.

மேதாபும் மிக நுட்பமாக அவனது ஈர்ப்பை பயன்படுத்திக் கொண்டான். மனைவிக்கும் இவனுக்குமிடையே நிலவிய அந்தரங்கமான சிக்கல்களை இவன் பகிர்ந்து கொண்டபோது மேதாப் அதை ஊதி வளர்த்து, அவனது ஆண்மைக்கே விடுக்கப்பட்ட சவாலாக மாற்றி உருவகித்தான். இப்படிப்பட்ட ஒரு குழம்பிய மனநிலையில்தான் இவனை வேசி வீட்டிற்கு போவதற்கு அவனால் சம்மதிக்க வைக்க முடிந்தது. படுக்கையில் அவளுடன் அமர்ந்திருக்கையில் பயத்தால் உறைந்து இவனுக்கு வேர்க்கத் தொடங்கியது. வாயைத் திறந்து ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை. இறுதியில் அவள் மிக கொச்சையான வார்த்தைகளால் திட்டி, இவனை வெளியே தள்ளி கதவை  தாழிட்டு\விட்டாள். அவமானத்தால் இவனது ஆண்மை சுருங்கியதை இப்போது பல நூறு மைல்களுக்கு அப்பால் அலைகளில் மிதந்து செல்லும் இந்த கப்பலில்கூட அவனால் துல்லியமாக மீண்டும் உணர முடிந்தது.

குற்றவுணர்விலிருந்து மீள்வதற்காக எண்ணங்களின்  ஓட்டத்தை திசைதிருப்பினான். மனைவியின் முகம் சட்டென காரணமின்றி அவன் கண் முன் வந்தது. பாவம் அவள், சரியாக விடைபெற்றுக் கொள்வதற்குக்கூட இவனால் முடியவில்லை. பல காலம் பிரிந்திருக்கப் போவதை எண்ணி, உடம்பின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கே அவனுக்கு நேரமிருந்தது. ஏழேழு ஜென்மங்கள் தன்னுடன் சேர்ந்து வாழ உறுதி பூண்டவளுக்கு இவன் வெளிநாடு செல்வதை பற்றிய முடிவில் ஒரு பங்குமில்லை என்பதை நினைக்கையில் அவனுக்கு வருத்தமாக இருந்தது.  மற்ற இந்தியப் பெண்களைப் போல் அவள் பயந்த சுபாவமானவளும் அல்ல.

கல்யாணம் ஆன புதிதில் அவன் எவ்வளவு கூறியும் நண்பர்கள் உறவினர் வீடுகளுக்கு அவனது அனுமதியின்றி ஓடியவள், கணக்கையும் ஆங்கிலத்தையும் கற்றுத் தருவதற்காக அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளை தனது வீண் பிடிவாதத்தால் முறியடித்தவள். இவனைப் போல் பாம்பையும் பேயையும் கண்டு அஞ்சாதவள், இரவில் துணையின்றி இருளில் செல்பவள். அப்படிப்பட்ட துணிச்சல்காரி, தன்னிடம் ஆலோசிக்காமலே அயல் நாடு செல்ல முடிவெடுத்த கணவனிடம் அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லாதது புதிராக இருந்தது.

அன்னியோன்யமாக பேசுவதற்குத் தேவையான தனிமை அவர்களுக்கு அமையவேயில்லை என்பதென்னவோ உண்மைதான். ஆனால் இரவில் படுக்கையறையில் பேசலாமென்றால் இவனுள் கொழுந்துவிட்டெரியும் காமந்திரங்கள் அவர்களிடையே படுத்தபடி பல்லிளிக்கும். படுக்கையறை சல்லாபங்களை நினைக்க நினைக்க அவனுடல் சூடேறிக் குளிர்ந்தது. சட்டென ஒரு எண்ணமெழ, தனது கேபினை நோக்கி விரைவாகப் படிகளில் இறங்கினான்,. மஜும்தார் இன்னமும் நண்பர்களுடன் கிளப்பில் பிரிட்ஜ் ஆடிக்கொண்டுதான் இருப்பார் என்ற எதிர்பார்ப்புடன்…

oOo

செப்டெம்பர் 29, கப்பல் டில்பரியில் கரையேறியது. மஜும்தாரும் இவனும் அப்துல் மாஜித் என்ற சகபயணியும் ரயிலேறி லண்டன், டிரஃபால்கர் சதுக்கத்தை வந்தடைந்தார்கள். அதன்பின் ஒரு குதிரைவண்டியில் விக்டோரியா ஹோட்டல் வரை சவாரி. விக்டோரியா ஹோட்டலின் ஆடம்பரமும் ,எண்ணற்ற விளக்குகளும், மின் உயர்த்திகளும் அவனுக்கு பிரமிப்பூட்டின. ஆனால் மாஜித்கான் தனது பந்தாவிற்கு ஏற்ப அவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த இரண்டாவது மாடி அறைகளின் வாடகையோ அவனை கவலைக்குள்ளாக்கியது.

மாலையில் பிராஞ்ஜீவன் அவனை சந்திக்க வந்திருந்தார். தொப்பியை அவரது அனுமதியின்றி கையிலெடுத்து அதன் மென்மயிரை இவன் தடவிப்பார்த்தது அவருக்கு எரிச்சல் ஏற்படுத்தியது. பழக்கவழக்கங்களும் இங்கிதங்களும் இங்கிலாண்டில் எவ்வளவு முக்கியம் என்பதை முதல் முறையாக அறிந்து கொண்டான். ஆனால் பிராஞ்ஜீவன் உண்மையில் நட்புரிமையுடன் மிகவும் இயல்பாகவே பழகினார்.

அவர்தான் அவனை ஓர் ஆங்கிலேயர் இல்லத்தில் சட்டம் பயிலும் மாணவன் சுக்லாவுடன் சேர்ந்து வாடகை செலுத்தும் விருந்தினராகத் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் அவன் மனம் தன் வீட்டையும் குடும்பத்தையும் நினைத்து நினைத்து ஏங்கியது.  அம்மாவின் அன்பு, மனைவி, குழந்தை இவையனைத்தும் தனியாகவும், ஒன்றோடொன்று இணைந்தும் அவன் கனவில் வந்து வதைத்தன. அன்னிய இடத்தின் புது பழக்க வழக்கங்களும், உப்பு சப்பில்லாத உணவும் இந்த ஏக்கத்தை இன்னமும் கூராக்கி வலியை அதிகரித்தன. கன்னத்தில் கண்ணீர் தாரை தாரையாக ஓட அவன் நள்ளிரவில் விழித்தெழுவது வழக்கமாகியது.

சுக்லாவிற்கும் அவனுக்குமிடையே நடந்த உரையாடல்கள் அனேகமாக அவனது சைவ உணவுமுறைக்கான காரணங்களில்தான் சென்று முடியும்.

“இங்குள்ள நிலவரத்தைப் பற்றி படிப்பறிவில்லாத உன் அம்மாவுக்கு என்ன தெரியும். அவளை சமாதானம் செய்வதற்காக நீ அளித்த சத்தியங்களை இங்கே கட்டி அழுது கொண்டிருப்பதைப் போல் முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. மேலும் அசைவம் உனக்கு ஏற்கனவே பழக்கமானதுதானே. எங்கு அது தேவையில்லையோ அங்கு அதை ருசித்து சாப்பிட்டுவிட்டு இங்கு வந்து பழைய பஞ்சாங்கத்தைப் போல் அடம் பிடிக்கிறாய். உனக்கே இது பைத்தியக்காரத்தனமாகத் தெரியவில்லையா ?” என்று சுக்லா ஒரு தேர்ந்த வக்கீலைப் போல் வாதம் செய்தான். பெந்தமின் பயன்பாட்டுக் கோட்பாட்டியல் என்ற புத்தகத்திலிருந்து பல பத்திகளை சத்தமாக படித்துக் காட்டினான்.

“என்னை மன்னித்து விடுங்கள். புலால் அத்தியாவசியம் என்று நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் கொடுத்த வாக்கை என்னால் மீற முடியாது. நான் ஒரு பிடிவாதமான முட்டாளாகவே இருந்துவிட்டுப் போகிறேன். பராவாயில்லை… “என்று பரிதாபமாக இவன் கெஞ்சினான்.

வாதம் செய்வதை தவிர்ப்பதற்காகவே சில நாட்கள் இவன் வெஸ்ட் கென்சிங்டனிலிருந்து நெடுந்தூரம் கால்நடையாகவே சென்று வருவான். இவ்வாறு நடந்து சென்று கொண்டிருக்கையில்தான் ஃபாரிங்க்டன் தெருவில் சென்ட்ரல் என்ற சைவ உணவகத்தை கண்டுபிடித்தான். ஒரு குழந்தை தனக்கு வேண்டியது கிடைக்கையில் எவ்வாறு மகிழ்ச்சி அடையுமோ அதே போல் இவனும் மகிழ்வுற்று, இங்கிலாண்டில் முதல்முறையாக வயிறு முட்ட சாப்பிட்டான். உணவறைக்கு வெளியே விற்பனை அடுக்ககத்தில் வைக்கப்பட்டிருந்த  ஹென்றி ஸால்டின் Plea for Vegetarianism என்ற புத்தகம் அவனைக் கவர்ந்தது. அதை ஒரே மூச்சில் படித்து முடித்தான்.

எப்போதும் போல் இப்புத்தகமும் அவனுக்கு புதியதொரு வாசலைத் திறந்து வைத்தது. இது வரையில், அம்மாவிற்கு அளித்த சத்தியத்திற்கும் அப்பால், உடலை வலுப்படுத்துவதற்கு புலால் உண்பது அவசியம் என்றும், தானும் பிற்காலத்தில் அசைவ உணவு உண்ணும் பழக்கத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் இத்தனை நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தான். ஸால்டின் புத்தகம் இந்த எண்ணத்தைத் தகர்த்தெறிந்து அவனை தாவரவுணவின் பக்கம் முடிவாகத் திருப்பியது. சாப்பாடு விஷயத்தில் இன்னும் பல புதிய சோதனைகளை மேற்கொள்வதற்கான பாதையை அவனுக்குக் காட்டியது.

இவன் இவ்வாறு ‘கண்டகண்ட” புத்தகங்களைப் படித்து “கிறுக்கு” பிடித்து அலைவதைக் கண்டு சுக்லா கலவரமடைந்தான். படாடோபமும் ஆடம்பரமும் இவனை எப்போதுமே வசீகரித்தவை என்பதை அறிந்திருந்ததால் ஹால்பர்ன் உணவகத்திற்கு அழைத்துச் சென்றான், அருமையான உயர்தர உணவும், நட்புரிமையுடன் அளிக்கப்பட்ட அறிவுரையும் இவனை திசை திருப்பிவிடும் என்ற நம்பிக்கையில். அவன் நினைத்த மாதிரியே உணவகத்தின் பிரம்மாண்டம் இவனை பிரமிப்பில் ஆழ்த்தியதைக் கண்டு சுக்லா மேலும் நம்பிக்கையுற்றான். வெய்ட்டர் ஸுப்பை மேஜையில் மீது வைத்துவிட்டுத் திரும்புகையில் “இந்த ஸூப் வெஜிடேரியன்தானே ?”.என்று இவன் கேட்டபோது, அவன் உதடுகளில் ஓடிய ஏளனமான  புன்னகையைக் காண சுக்லா தவறவில்லை. கோபம் தலைக்கேற இவனைப் பார்த்து.

“நீயெல்லாம் நாகரீகமான சமூகத்திற்கு லாயக்கானவனில்லை. வெளியே வேறெங்காவது சென்று உணவருந்திவிட்டு வெளியே காத்திரு “ என்று கடுமையாகக் கூறினான்.

அவமானமும் துக்கமும் அலைக்கழிக்க அருகிலிருந்த சைவ உணவகத்திற்கு  சென்றான். அது மூடப்பட்டிருந்ததால் திரும்பி வந்து சுக்லாவிற்காக ஹோல்பர்ன் உணவகத்திற்கு வெளியே காத்திருந்தான். அதன்பின் அவர்களிருவரும் ஒரு நாடகம் பார்க்கச் சென்றார்கள். பசி மீண்டும் மீண்டும் சற்று முன் நடந்தவற்றை நினைவுபடுத்திக் கொண்டிருந்ததையும் மீறி அவனால் நாடகத்தை ரசிக்க முடிந்தது. அதன் பிற்கு அவர்கள் அதைப் பற்றி பேசிக்கொள்ளவில்லை என்றாலும் சுக்லாவிடம் தான் ஒரு கனவானைப் போல், நாகரீகமாக நடந்துகொள்ள முயற்சிக்கப் போவதாக உறுதியளித்தான்.

அதன்படி தன்னிடமிருந்த பொருத்தமேயில்லாத ஸூட்டுக்களை எல்லாம் பழைய துணிக்கடையொன்றில் விற்றுவிட்டு பாண்ட் ஸ்டிரீட்டிலிருந்த ஆர்மி & நேவி கடையிலிருந்து பத்து பவுண்டிற்கு “ஈவினிங்க்” ஸூட்டொன்றை வாங்கிக் கொண்டான். ரெடிமேட் டைக்களைத் தூக்கி எறிந்துவிட்டு டை கட்டிக் கொள்ளும் கலையை மணிக்கணக்காகப் பழகினான். கடிகாரம் கட்ட தங்கத்தாலான இரட்டைவடச் சங்கிலி வேண்டுமென்று லக்ஷ்மி அண்ணனுக்கு கேட்டெழுதினான். ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்களுக்கு பெரிய கண்ணாடியொன்றிற்கு முன் நின்று  கொண்டு டையையும் தலை வகிடையும் சரி செய்து கொண்டான். இவை போதாதென்று பிரென்சு, நடனம், வயலின், பேச்சுக்கலை ஆகியவற்றிற்கு தனக்கென்று தனியாகப் பயிற்றுபவர்களை அமைத்துக் கொண்டான். சுக்லா முன் ஒரு ஆங்கிலேயக் கனவானாக நடந்துகொள்ள வேண்டும் என்ற வெறி அவனை ஆட்டிப் படைத்தது.

பேச்சுக்கலையில் தேர்ச்சி பெறுவதற்காக பெல்லின் Standard Elocutionist என்ற பாடப் புத்தகத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ ஓர் அசரீரியைப் போல் அவனுக்குள் ஒரு எண்ணம் ஒலித்தது. “ஆங்கிலத்தில் பெரிய பேச்சாளராகி எனக்கு என்னவாகப் போகிறது. நடனத்தால் அல்ல எனது ஆளுமையால் மட்டுமே நான் கனவானாக முடியும். வீட்டில் மிகவும் கஷ்டப்பட்டு எனக்கு அனுப்பி வைக்கும் பணத்தை நானிங்கு ஊதாரித்தனமாக செலவழித்துக் கொண்டிருக்கிறேன். இங்கு படிக்க வந்தேன், அதை ஒழுங்காகச் செய்வதே என் கடமை” என்று தனக்குத் தானே புத்திமதி கூறிக் கொண்டான். மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்துச் சிரித்தான். “இந்த கோட்டு சூட்டில் நான் அழகாகவே இருக்கிறேன்!. பாரிஸ்டர்களுக்கு  உடை முக்கியம்தானே” என்று சமாதானமும் செய்து கொண்டான்.

oOo

தாவர உணவு மட்டும் சாப்பிடுபவர்களுக்கான ஒரு முகாமில் கலந்து கொள்வதற்காக பிரைட்டன் சென்றிருந்தபோதுதான் ஜேன் அவனுக்கு பரிச்சயமானாள். பிரெஞ்ச்சில் இருந்த மெனுவை படிக்கத் தெரியாமல் திணறிக் கொண்டிருந்தபோது அவள்தான் உதவினாள். அப்படித் தொடங்கிய சந்திப்பு அவனை அவள் தன் வீட்டிற்கு அழைக்கும் அளவிற்கு ஒரு நட்பாக வெகு விரைவிலேயே மாறியது. அவள் வீட்டிற்கு சென்ற ஒவ்வொரு முறையும் அவளுடன் ஓர் இளம் நங்கையும் கூடவே இருந்தது அவனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அவர்களிருவரையும் தனியே பேச விட்டு ஜேன் நெடு நேரம் ஏதோ ஒரு சாக்கு சொல்லி மறைந்து விடுவாள். முதலில் இவனுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தினாலும் அழகான இளம் பெண்ணொருத்தியுடன் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருப்பது சுவாரசியமாக இருந்தது. ஒரு நாள் அப்பெண் படுக்கையில் தன்னுடன் ஆடைகளின்றிப் படுத்திருப்பது போல் கனவு தோன்றியபோது திடுக்கிட்டு எழுந்தான். உடல் முழுதும் வியர்த்திருந்தது. சகதியில் நெளிந்து செல்லும் ஒரு புழுவாக தன்னை உணர்ந்தான். குற்றவுணர்வால் சுருங்கி கேவிக் கேவி அழுதான். தனக்குக் கல்யாணமாகி இந்தியாவில் மனைவியும் குழந்தையும் இருக்கிறார்கள் என்ற உண்மையை அவர்களிடம் மறைத்தது எவ்வளவு பெரிய கயமைத்தனம் என்பதை உணர்ந்தான்.

நேரில் சென்று தனது தவறை ஏற்றுக் கொள்வதற்கு  துணிவில்லாததால் ஒரு கடிதத்தில் அதைச் சுட்டிக் காட்டி மன்னிப்புக் கோரினான். அதைப் படித்துவிட்டு அவர்களிருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள் என்று ஜேன் பதில் கடிதத்தில் எழுதியிருந்ததைப் படித்த பிறகுதான் அவனால் ஓரளவிற்கு நிம்மதியாகத் தூங்க முடிந்தது.

ஜூன் மாதம் நடக்கவிருந்த லண்டன் மெட்ரிகுலேஷன் தேர்வுகள் அவன் மனதை இவ்வகையான குழப்பங்களிருந்து திசைதிருப்பி ஒரு திடமான இலக்கை அளித்தது. அத்தேர்வில் வெற்றி பெற்றது அவனுக்கு பெருமையையும், இங்கிலாண்டில் செய்ய வந்ததை கடமை வழுவாமல் சரிவரச் செய்துகொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கையையும் அளித்தது. இந்தப் புத்துணர்ச்சி தாவரவுணவு இயக்கத்தில் மேலும் மும்முரமாக பங்கேற்பதற்கான சுதந்திரத்தையும் அவனுக்கு அளித்தது.

இவ்வியக்கத்தின் மூலமாகத்தான் அவனுக்கு ஓல்டன்ஃபீல்டின் நட்பும் கிட்டியது. ஓல்டன்ஃபீல்டு The Vegetarian என்ற இதழின் பதிப்பாசிரியராக பொறுப்பேற்றிருந்தார். முதல் முறையாக ஒரு ஆங்கிலேயருடன் சரிசமமாக இவனால் பேசமுடிந்தது மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தது. மதம் சார்ந்த அவனது குழப்பங்களை அவருடன் இயல்பாகவே விவாதிக்க முடிந்தது. அவர் அவனை கிறித்துவத்திற்கு மதம்மாற அன்புடன் வற்புறுத்தினார். அதை அவனும் மிக  மரியாதையுடன் தட்டிக் கழித்து வந்தான். அவன் அங்கு அப்போது நடந்து கொண்டிருந்த தியோஸொபிஸ்டுகள் கூட்டங்களுக்கு போய்க் கொண்டிருந்தான். அவர்கள் ஹிந்து மதத்தின் பல கூறுகளை ஏற்றுக் கொண்டது அவன் கொண்டிருந்த முதிரா எண்ணங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்தியது. மேலும் அவன் மதித்த ஆங்கிலேய படிப்பாளிகளே புலால் உண்ணாதிருத்தலை ஒரு முற்போக்கு சித்தாந்தமாக கருதும்போது, காலகாலமாக அதை ஓர் அடிப்படை ஒழுக்கமாக வலியுறுத்தி வந்த அவன் மதம் எப்படி முற்றிலும் தவறாக இருக்க முடியும்  என்று தன்னையே கேள்விகேட்டுக் கொண்டான். ஓல்டன்ஃபீல்டுடன் மணிக்கணக்காக இதைப் பற்றி விவாதித்தது அவன் கருத்துக்களை மேலும் கூர்படுத்தியது. உரையாடல்களின் சாரத்தை தொகுத்துக் கொள்வதற்காகவே பல மைல்கள் நடந்தான். பத்து இருபது மைல் தொலைவிற்குள்ளிருந்த சைவ உணவகங்கள் அனைத்துமே அவனுக்கு அத்துப்படியாயின. ஓல்டென்ஃபீல்டும் அவரது நண்பர்களும் தந்த தூண்டுதலால் அவன் பொதுக் கூட்டங்களில் பேசத் தொடங்கியபோது இக்கருத்துக்களை அவன் மேலும் விரிவுபடுத்திக் கொண்டான்.

உடலும் நடையால் வலுப்பெற்றிருந்ததை அவனால் உணர முடிந்தது. புலால் மட்டுமே உடலை பலப்படுத்தும் என்று மேதாப் அடித்துச் சொன்னபோது வாயடைத்து நின்ற நாட்களை எண்ணி தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான். மேதாப்! சற்று நாட்களுக்கு முன்வரையிலும்கூட இவனிடம் பணம் கேட்டு எழுதியிருந்த மேதாப்! ஓடியும், நீந்தியும் சாகசங்களை அசாத்தியமாக செய்த மேதாப். தன்னை வேசியிடம் மீகக் கீழ்த்தரமான வசைகளை வாங்க வைத்த புண்னியவான்!. திடமான உடலுடன் கடுகளவேனும் மனவுறுதியும், ஒழுக்கமும் இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பான். முட்டாள்!

oOo

டிசெம்பர் மாதம் வழக்கறிஞர் தகுதிக்கான இறுதித் தேர்வுகளில் வெற்றி பெற்றான். மூன்று வருடங்களாக ஓடிக்கொண்டிருந்த தொலைதூர ஓட்டப் பந்தயத்தின் இலக்கை ஒரு வழியாக அடைந்தது அவனுக்கு ஒரே சமயத்தில் நிறைவையும் சோர்வையும் அளித்தது. இந்தியாவிற்குத் திரும்பிச் செல்வதைப் பற்றிச் சிந்திப்பதைத் தவிர்ப்பதற்காகவே வெஜிடேரியன் குழுமமொன்றில் பேசுவதற்காக போர்ட்ஸ்மவுத்திற்குச் சென்றான். இங்கிலாண்டிற்கு கப்பலில் அவனுடன் பயணித்த மஜும்தாரும் அக்குழுமத்திற்கு வந்திருந்தார். கூட்டம் முடிந்து மாலையில் இருவரும் விடுதி நடத்திக்கொண்டிருந்த பெண்மணியுடன் இளைப்பாருவதற்காக  பிரிட்ஜ் ஆடினார்கள். வாளிப்பான தனது உடலின் வளைவுகளை நன்றாக வெளிக்காட்டிக் கொள்வதற்காகவே அவள் கவர்ச்சிகரமாக உடையணிந்திருந்தாள். இவனது கவனம் முழுதும் அவளது செழித்த முலைகளின் மீது குவிந்திருந்தது. அவர்கள் மேஜையில் பேச்சு விரசமாகிக் கொண்டே சென்றது. அவளை இரவில் தனது அறைக்கு வரவழைப்பதற்காக ஜாடைமாடையாக பேச்சுக் கொடுத்தான். அவளும் அதற்கு சம்மதிப்பதைப் போல் பதிலளித்தாள்.

 மஜும்தார் ஒன்றும் சொல்லாமல் ஆட்டத்தில் மும்முரமாக இருப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தார். இவன் சல்லாபத்தை மேலும் அதிகரிக்க  மேஜைக்கடியே அவளது காலை தனது காலால் உரச முயற்சித்தான். மஜுர் சட்டென அவன் காலை உதறியபடியே “என்ன தம்பி, பேய் கீய் பிடிச்சிருச்சா?, ஆடியது போதும், கிளம்பு “ என்று கூறினார். கடவுளே நேரில் வந்து தான் படுகுழியில் விழவிருந்ததைத் தடுத்தது போல் இவனுக்கு ஒரு பிரமை ஏற்பட்டது. முகம் அவமானத்தால் சிவக்க, இருக்கையிலிருந்து எழுந்தான். அபபெண்மனி அவனை புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். மஜும்தார் அவனை மேலே அறைக்குச் செல்லும்படி கண்களால் ஜாடை செய்தார். எதுவுமே கூறாமல் இவனும் மௌனமாக படியேறிச் சென்றான்.

சாக்கடையில் விழுந்தெழுந்ததைப் போல் அவன் உடல் முழுதும் அருவறுப்பான ஏதோவொன்று பரவியது. அம்மாவிற்கும் மனைவிக்கும் கொடுத்த வாக்குறுதிகள் கண்ணெதிரே வந்து பரிதாபமாகச் சிரித்தன. கன்னத்தில் ஓடிய நீரைத் துடைப்பதற்கு முயற்சிக்காமலே கருவிலிருக்கும் சிசுவைப் போல் படுக்கையில் சுருண்டு படுத்தான்.

oOo

ஆழ்கடலின் அலைகள் முட்டி மோதினாலும் கப்பல் தனது இலக்கை நோக்கி தீர்மானத்துடன் சென்று கொண்டிருந்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு லண்டனை விட்டுப் பிரிவது அவனுக்கு வருத்தத்தை அளித்தது. ஓல்டன்ஃபீல்டும் மற்ற நண்பர்களும் அவனுக்காக ஹோல்போர்ன் ஓட்டலில் பிரிவு உபசார விழாவொன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஹோல்போர்னில் முதல் முறையாக வெஜிடேரியன் உணவு மட்டுமே அளிக்கப்பட்ட விழாவாக அது அமைந்திருந்தது அவனுக்கு பெருமையாக இருந்தது. அதே ஹோட்டலிலிருந்துதானே சுக்லா அவனை நாகரீகமறியாதவன் என்று ஏசி வெளியே போகச் செய்தான்!. அந்த சுக்லாவும் விடையனுப்ப வந்தது அவனுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. புதிய நட்புகள், கலாச்சார நுணுக்கங்கள், படிப்பு, வெஜிடேரியன் இயக்கம், கனவில்கூட எதிர்பார்க்காத மேடைப் பேச்சுக்கள் அனைத்துமே இப்போது மூர்க்கமான அவ்வலைகளின் மீது ஒரு மெல்லிய கனவைப் போலிருந்தன. கடல் கடந்து அவன் ஒரு புது மனிதனாகத்தான் திரும்பிச் செல்கிறான். ஆனால் கரையில் அவனுக்காக அவனது பழைய உலகம் காத்துக் கொண்டிருக்கிறது.  கடல் கடப்பதே பாவம் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் அவனது ஜாதிக்காரர்கள். அவன் கொடுத்த சத்தியங்களையே மலை போல நம்பிக் கொண்டிருக்கும் அம்மா. இவர்கள் மத்தியில் அவனால் ஒரு வழக்கறிஞராக பணியாற்ற முடியுமா ?

அவன் கருத்துக்களை புரிந்துகொள்ளக் கூடிய நண்பர்களின் வட்டம் மீண்டும் கிட்டுமா ? ஓல்டென்ஃபீல்ட்! எப்படிப்பட்ட நண்பன். இந்தியாவில் அவரைப் போல் யார் இருக்கிறார்கள்? மேதாபா ?  அதை நினைக்கையில் அவனுக்கு சிரிப்பு வந்தது. நினைவுகளும், எதிர்காலத்தைப் பற்றிய அச்சங்களும் அடுத்தடுத்து மனதில் வந்தபடி இருக்க, தன்னையே அறியாது தூங்கிவிட்டான். காலையில் கப்பல் கரையை நெருங்குகையில் மேதாப் தன்னை ஒரு பாவப் படுகுழியில் தள்ளுவதாய் கனவு கண்டு திடுக்கிட்டு கண்விழித்தான். சிறிது நேரத்தில் எண்ணச் சங்கிலியை தொடர்ந்தபடியே கரையை காண்பதற்காக மேல்தளத்திற்கு சென்றான். உண்மையில் யாரைக் கண்டு அவன் அஞ்சினான் ? மேதாபையா ? ஹும், அவன் என்ன செய்யமுடியும், பாவம், மிஞ்சி மிஞ்சி போனால் பணம் கேட்டு நச்சரிப்பான். அவ்வளவுதான். மேலும் இங்கிலாண்டில் தூண்டுதல் இல்லாமல் தன்னிச்சையாக அக்குழியில் விழ ஆசைப்பட்டவன்தானே இவன்.. ஆனால் ஒவ்வொரு முறையும் விழுவதற்கு முன் அவனுள் ஏதோ ஒன்று அவனைத் தடுத்தி நிறுத்தியிருக்கிறது. அதை மட்டும்  இனம் கண்டுவிட்டால் அவனால் எப்பேற்பட்ட இடரையும் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவனுள் ஓர் அற்புதமான மலரைப் போல் விரிந்தது. துறைமுகத்திலிருந்து பல குரல்கள் பேரலையாக எழும்பி அவனைத் தாக்கின. அவற்றைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே அந்த மலரில் லயித்திருந்தான். அவளுக்களித்த வாக்குறுதிகளை அவன் காப்பாற்றிவிட்டான் என்பதை கேட்கையில் அம்மா எவ்வளவு பூரிப்படைவாள் என்பதை நினைத்துப் பார்த்தான். அந்த பூரிப்பின் சாரமும் ஏதோ ஒரு வகையில் அம்மலரின் ஆன்மாவில் கலந்திருந்ததை உணர்ந்தான். அதன்பின் அம்மலர் அவன் மனைவின் முகமாக மாறியது.

gandhi1

கஸ்தூர் ! கஸ்தூர் ! என்று தனக்குள்ளேயே அவள் பெயரை வாஞ்சையுடன் கூறிக் கொண்டான்.

மோஹன் ! மோஹன் ! கீழிருந்து கணீரென்று எழுந்த அந்த பரிச்சயமான குரல் அவனை அவனுள்ளிலிருந்து வெளிக் கொணர்ந்தது.

கீழே அண்ணன் லக்ஷ்மிதாஸ் இவனை நோக்கி கைகளை பலமாக ஆட்டிக் கொண்டிருந்தார். அவரை அடையாளம் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் இவன் வேகமாக அவரை நோக்கி மரப்பலகையின் மீது ஓடினான்.

இவனை அவர் கைகளால் சற்று பின்னே தள்ளி தலைமுதல் கால் வரை ஒரு முறை நன்றாகப் பார்வையிட்டார். பின்னர், “அம்மா…” என்று தொடங்கியவர் அதை முடிப்பதற்கு திராணி இல்லாதவர் போல் அவன் தோள்களைத் தழுவி அழத் தொடங்கினார்.
***

[ஆசிரியர் குறிப்பு: இந்தக் கதை இம்மனிதனது வாழ்க்கைக் குறிப்புகளிலிருந்தும், இவனது பேரன் ராஜ்மோஹன் இம்மனிதனைப் பற்றி எழுதிய சரிதையிலிருந்தும் பெற்ற தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது.]

0 Replies to “Ecce Homo (இவன் மனிதன்!)”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.