இரு சுருள் வளைய சர்ச்சை மற்றும் மூலக்கூறு உயிரியல் வளர்ச்சியை முன் வைத்து…
தரமுள்ள பொருட்கள் தாமே கவனத்தைக் கவர்வதில்லை. ஆடம்பரமும், அர்த்தமற்ற வார்த்தை ஜாலங்களும்தான் உலகெங்குமே முதல் வரிசைகளைப் பிடித்துக் கொள்கின்றன. அறிவியலில் கூட உலகில் உடனே கவனத்தைக் கவர்வன பெரும்பாலும் இப்படி இன்றைய trend ஐப் பின்பற்றும் ஆய்வுகள்தாம். அவைதாம் செய்தித்தாள், தொலைக்காட்சி, வலை விடியோக்கள், டெட் பேச்சுகள் என்று பெருமைப்படுத்தப்படுகின்றன.
ஆனால் நெடு நோக்கில் நிற்பன என்னவோ வேறு விதமான ஆய்வுகள், செயல்கள், எழுத்து.
இன்றைய சூழலில் அரசியலும், சினிமாவும், அடையாள அதிகாரப் போட்டிகளும் மட்டுமே கவனம் பெறும் தமிழ்ச் சூழலில் இத்தகைய கட்டுரைகளுக்குச் சில நூறு வாசகர்கள் கிட்டுவதே அதிசயம். ஒரு வேளை அச்சுப் பத்திரிகை எதிலாவது ஒரு லட்சம் பிரதியாவது விற்கும் பத்திரிகையாகவும் அது இருந்தால் பத்தாயிரம் பேர் படிப்பார்கள். அவர்களிலும் ஒரு பத்துப் பேர்தான் கடிதம் எழுதித் தம் பாராட்டை/ விமர்சனத்தைத் தெரிவிப்பார்கள்.
நமக்குத்தான் எதார்த்தம் இப்படி என்ற நிதானமும், நம் செயல்பாட்டில் விடாப்பிடிவாதமும், மேன்மேலும் வாசக சௌகரியத்தை எப்படிக் கூட்டுவது, அதே நேரம் எதையும் மலினப்படுத்தாமல் எழுதுவது என்ற தேடல் இருந்து கொண்டேயிருப்பது அவசியம். ஒரு கட்டத்தில் அது உங்களுக்குச் சுலபமாகக் கைவசப்பட்டு விடும். அப்போதும் பரபரப்பான பத்திரிகை அல்லது சூடான வலைப்பதிவு அளவு வாசகக் கூட்டம் வராது.
அவை உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு, பலவகைக் காழ்ப்புகளைத் தீயாக வளர்க்கும் இடங்கள். முக்கியமான பிரச்சினைகள் மேம்போக்கான விவரங்களால் பேசப்பட்டு, பலனற்ற வாதப் பிரதிவாதங்களில் சிக்கி முகம் கிட்டாது மடியும். நாளைக்கு வேறொரு புதுக் கலவரம், களேபரம், உணர்ச்சிப் பெருக்கு, வாதப் பிரதிவாதம்.
வாழ்வின் தரை எதார்த்தம் அதன் போக்கில் இந்த மேதாவிகளை உதாசீனம் செய்து பிரவகிக்கும். அதன் மீது எந்தத் தாக்கமும் இல்லாதவர்கள் தாம் என்ற நிதர்சனம் இல்லாதவர்கள் இவர்கள். தம் இருப்புக்கு நியாயம் கற்பித்துக் கொண்டு வாழ்ந்து தொலைக்க ஒரு சீட்டுக் கட்டுக் கோட்டை கட்டி அதற்குள் அட்டைக் கத்திகளைச் சுழற்றிக் கொண்டு நாடகம் நடத்துகிறார்கள். தினமொரு நாடகம் அரங்கேறும். வலைத்தளங்களில் வேடிக்கை நாடுவோர் வந்து குமிவர். காற்றுக் குமிழிகள் புறப்பட்டு மேலெழுந்து வெடித்து மறையும்.
அவற்றுக்கும் நீங்கள் கருதி எழுதும் கருக்களுக்கும் அதிகத் தொடர்பில்லை. அப்பொருட்களும், அவற்றை அணுகும் விதமும், சென்று சேர விரும்பும் வாசகர்களும் – எல்லாவற்றின் கூட்டுத் தாக்கம் பெரும் எண்ணிக்கை வாசகரைக் கொணர முடியாதது.
ஆனால் வாசிக்கும் சில நூறு பேரில் பலர் இதையெல்லாம் இங்கிலிஷில் சுலபமாகப் படித்து விடலாமே எதற்குத் தமிழில் எழுதுவது என்று கூட நினைப்பாராயிருக்கும். நம்மில் பலருக்கு இதையெல்லாம் தமிழில் கொணர்வதின் சமூகக் கட்டாயம் என்னவென்று இன்னும் தெளிவாயில்லை. மாணவரும், இளைஞரும் இரட்டை மொழிப் பரிச்சயம் உள்ளவரென்பதால் அதில் உலகளாவிய ஒரு மொழி இன்னொன்றை அடித்துப் போட்டு விடுகிறது.
அந்த மனத் தடையையும் நாம் உடைத்து முன்னேக வேண்டி இருக்கிறது.
அன்புடன்,
மைத்ரேயன்
oOo
மிகவும் பயனுள்ள கட்டுரை.
“மாற்று உட்கரு அமிலம், ஒற்றை சுருளுடன் (single helix) , குறைவான நீளத்துடனும் இருக்கும். அத்துடன், இது மூன்று பேஸ்கள் (அதாவது A, C, G, ) மட்டுமே கொண்டது.”
RNA வும் நான்கு பேஸ்கள் கொண்டதே. ஒரே வேறுபாடு U (Uracil) மட்டுமே. அதாவது A U G C. DNA வில் இது A T G C.
– சோழகக்கொண்டல்
oOo
‘அருந்தவப்பன்றி’ – சுப்பிரமணிய பாரதி
பாரதி பற்றிய மாறுபட்ட பதிவு.பாரதியின் மனநிலையை ,கவிபுனையா காலத்தின் உளவியலை விவரித்திருப்பது வியப்பூட்டியது.கலைஞர்களின் மாறுபட்ட இயல்புகள்,தனித்துவம் பாரதியின் ஆளுமையை காண்பிக்கிறது.மீண்டும் அவன் எட்டயபுரம் ஜமீனுடன் இணையாத ஆண்மை,ஆசிரியனாகப் போராடுதல் அனைத்தையும் கட்டுரை நன்றாகக் கூறுகிறது.
நன்றி
மோனிகா மாறன்.
oOo
ராய் மாக்ஸம் நேர்காணல்
அன்புள்ள கிரிதரன், பிரபு இருவருக்கும்
ராய் அவர்களுடன் நீங்கள் எடுத்திருக்கும் நேர்காணல் மிகச்சிறப்பாக உள்ளது. முழு நேர்காணலை ஒரே வாசிப்பில் ஒரு முறையும், கிழக்கிந்திய கம்பெனிபற்றிய செய்திகள், ஜப்பானின் உயிர் ஆயுத முயற்சிகள், பூலன் தேவிபற்றிய செய்திகள் என தேர்ந்தெடுத்த பகுதிகளை இன்னொருமுறையுமாக இருமுறை படித்துவிட்டேன். சமீபத்தில் நான் படித்த நேர்காணலில் இந்த அளவுக்கு எதுவும் என்னைக் கவரவில்லை. ஒரு புனைகதைபோல ஏராளமான திருப்பங்களோடும் நிகழ்ச்சிகளோடும் ராயுடைய வாழ்க்கை ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா என விரிந்துசெல்கிறது. இந்தியாவை நோக்கி அவர் கவனத்தைத் திருப்பிவிட்ட கணம் ஒரு முக்கியமான தருணம் என்றே சொல்லவேண்டும். அவருடைய இந்தியப்பயணம் நிகழ்ந்திருக்காவிட்டால், இந்த உப்புவேலியைப்பற்றிய தகவல் நமக்குத் தெரிந்திராமலேயே போயிருக்கும். பயணங்கள்மீது தீராத விருப்பத்துடன் உள்ள ராயின் அனுபவக்குறிப்புகள் நமக்கு நிச்சயம் துணையாக இருக்கும். அவருடைய உப்புவேலி நூல் வெளிவர உள்ள இத்தருணத்தில் இந்த நேர்காணல் அவரைப்பற்றி மேலும் பல விஷயங்களை அறிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துகள்.
அன்புடன்
பாவண்ணன்
oOo
திருவரங்கன் உலா
அருமையான விமர்சனம் செய்திருக்கிறார் ஓப்லா விஸ்வேஷ்.
புத்தக, திரைப்பட விமர்சனங்கள் என்றால் புத்தகத்தின் அல்லது திரைப்படத்தின் கதையை சொல்லுவது என்கிற தவறான வழக்கத்தை இந்த விமர்சனம் தகர்த்து எறிந்திருக்கிறது.
ஒரு படைப்பின் பின்புலம், கட்டமைப்பு, அதன் பின் உள்ள உழைப்பு, அப்படைப்பு சார்ந்த மற்ற தகவல்கள் இவை இவ்விமர்சனத்தில் பேசப்பட்டு ஒரு விமர்சனத்தின் சில கூறுகளோடு இது அமைந்திருக்கிறது.
ஸ்ரீரங்கம் கோயிலை முகமதியர் மட்டுமல்ல டச்சுக்காரர்களும் ஆக்கிரமித்து இருந்தார்கள். சமயபுரம் மாரியம்மன் கோயிலையும் அவர்கள் ஆக்கிரமித்து இருந்தார்கள். இந்த நாவலின் முன்னுரையில் அது பற்றிய தகவலைத் தந்திருக்கிறார் ஸ்ரீரங்கம் வேணுகோபாலனாக அவதாரம் எடுத்த அந்த உயிரோட்டமுள்ள மனிதர்.
புஷ்பா தங்கத்துரையாக தன் நாவல்களில் தசையாட விட்டவர் தானாடா விட்டாலும் தசையாடியதால் உருவான இந்நாவல் கலாச்சார மீம்களின்மேல் நம்பிக்கையை, எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.
இந்த நன்னம்பிக்கையை நினைவுபடுத்தும் ஓப்லா விஷ்வேஷுக்கு நன்றிகள்.
இதைப் போன்ற நேர்மறை உணர்வுதரும் விமர்சனங்களையும், விமர்சகர்களையும் சொல்வனம் ஊக்குவிக்காவிட்டால் வேறு யாரும் ஊக்குவிக்கப் போவதில்லை.
தாய்த் தமிழ் மரபிற்காக நம் முன்னோர்கள் பட்ட வேதனைகளைப் படித்து உளம் உகுக்கும்போது, அந்த உன்னத உணர்வில் கழிவுநீர் கொட்டியதுபோன்ற சமகாலக் கருத்து இருப்பது, நம் முன்னோரின் உழைப்பு வீணாகியதோ என்று வேதனை தருகிறது.
கொலை, கொள்ளை, கற்பழிப்புகளில் இருந்து தமது முன்னோரைக் காப்பாற்றிய சக மனிதரைக்கூட தமிழரல்லாதவர் என்கிற ஒரே காரணத்திற்காக வெறுக்க வேண்டும் என்கிற நிலையில் தற்காலக் கால்வெல்ட் தமிழகமும், மெக்காலேபுத்திரத் தமிழர்களும் இருப்பது வெட்கத்தையும், வேதனையையும் தருகிறது.
வேற்று இன, மொழிகள் புழங்கும் இலங்கையிலும், வியட்நாமிலும், மலேசியாவிலும், மும்பையிலும், டெல்லியிலும், இந்தோனேஷியாவிலும், கனடாவிலும் தமிழர் ஆதிக்கம் அதிகம் இருப்பதைக் கண்டு பெருமையுடன் சிலிர்க்கும் இக்காலத் தமிழர்களுக்கு மற்ற இன, மொழியினர் தமிழ்நாட்டில் இருப்பதே குமட்டலைத் தருகிறது என்பது முள்முரணாக இருக்கிறது.
தாய்த் தமிழ் மரபு செத்துப்போன இந்த மண்ணில் இனி கற்றாழையும் விளையாது.
ஓம் கலாச்சார மீம்களே சரணம், சரணம் !
ஆனந்த்ஜி
oOo
மிகவும் அழகான, பொருத்தமான மதிப்புரை. அந்தக் காலத்து மீ.ப.சோமு, அகிலன், நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், கல்கி, விக்கிரமன் இவர்களின் சரித்திர நாவல்களுக்கு அப்புறம் என்னை மிகவும் கவர்ந்த எழுத்து ஸ்ரீ வேணுகோபாலனுடையது. இந்தத் திருவரங்கன் உலாவை நானும் சமீபத்தில் இன்னும் ஒருமுறை திரும்பப் படித்தேன். அற்புதமான சரித்திர நாவல். ஒவ்வொரு பகுதி கண்களில் நீரையே வரவழைத்து விடும். அடியார்கள் ஸ்ரீரங்கன் பால் கொண்ட ஆழ்ந்த அன்பா, இல்லை, மிக நுணுக்கமான சரித்திர விளக்கங்களா, ஆசிரியர் அவற்றை விவரித்துள்ள முறை மனதைத் தொடும். அவருடைய ‘கள்ளழகர் காதலி’ இன்னொரு அற்புதமான எழுத்தோவியம்.
இந்த மதிப்புரைக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.
– மீனாக்ஷி பாலகணேஷ்