லத்தின் அமெரிக்காவின் பாதை

லத்தின் அமெரிக்கா என்றழைக்கப்படும் தென் அமெரிக்கக் கண்டம் கடந்த நூற்றாண்டில் பெரு நேரமும் அமெரிக்கா, யூரொப்பிய நாடுகளின் கைப்பாவையாகச் செயல்பட்ட சர்வாதிகாரிகள், இனவெறியர்கள், கிருஸ்தவத் தீவிர வாதிகள், தவிர மோசமான ராணுவம் ஆகியவற்றிடம் சிக்கித் திண்டாடியது. மக்கள் அந்தக் கண்டம் முழுதும் வறுமையில் வாடினார்கள், கடும் வன்முறையில் சிக்கித் தவித்தார்கள். இத்தனைக்கும் பெரும் நிலப்பரப்பும், ஏராளமான கனிம வளங்களும் மிகக் குறைவான மக்கள் தொகையும் கொண்ட கண்டம் அது. உலகிலேயே மிக வசதியான வாழ்க்கை நடத்துபவர்களாக இந்தக் கண்டத்து மக்கள் இருந்திருக்க வேண்டும். உலக வல்லரசுகளின் பேராசையும் ஆதிக்க வெறியும் மதத்தின் குருட்டுத் தனமும் இம்மக்களை ஓட்டாண்டிகளாக ஆக்கி வைத்திருந்தன. கடந்த இருபதாண்டுகளில் அமெரிக்காவின் கவனம் மேற்காசியா/ இஸ்லாமிய நாடுகள்/ எரிபொருளுக்கான போர்கள் என வேறு திக்கில் திரும்பவும், லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு மூச்சு விடச் சற்று அவகாசம் கிட்டியது. அம்மக்கள் பல நாடுகளிலும் இடது சாரி அரசுகளையும், கட்சிகளையும் ஆதரித்து தேர்தல்களில் வாக்களித்து கொஞ்சம் போல ஜன நாயக வெளியை அனுபவித்தனர், சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துவங்கினர். ஆனால் இடது சாரிகளுக்கு ஜன நாயகம் என்ற அமைப்பு, அரசியல் நடவடிக்கை மீது உலக முதலிய முதலைகளுக்கு எத்தனை வெறுப்பு உண்டோ அதே அளவு அல்லது அதற்குச் சற்றும் சளைக்காத அளவு உண்டு. எனவே வெகு சீக்கிரத்தில் லத்தின் அமெரிக்க நாடுகளில் இடது சாரி அரசுகள் வன்முறை, அடக்கு முறை, தேர்தல்களில் தில்லு முல்லு (நம் ஊர் சி பி எம் அரசுகளுக்குத் தெரியாத தந்திரங்களா, தேர்தல் தில்லு முல்லு என்பது பால பாடமாயிற்றே) ஆகியன வழியே ஆட்சியில் எப்படி நீடித்திருப்பது என்பதையே யோசிக்கத் துவங்கினர். அப்புறம் நம் நாட்டில் திராவிடக் கட்சிகள், காங்கிரஸ் கட்சி ஆகிய புல்லுருவி அரசியலாளர்களுக்குத் தெரிந்த ஒரு சுலபமான கொள்ளை அடிப்பு நடப்பு முறை இருக்கவே இருக்கிறது- இலவசங்கள் என்ற பெயரில் வாக்கு வங்கிகளைத் தயாரித்து வைத்துக் கொள்வது.
இதையும் அந்தக் கண்டத்தில் பல அரசுகள், அரசியல் கட்சிகள் இப்போது நடைமுறையில் வைத்திருக்கின்றன. இதற்கிடையில் மண்ணின் மைந்தர்கள் என்ற வழக்கமான பாசிசத்து அடக்கு முறையும் கையிலெடுத்தன இவை. கனிம வளங்களைக் கைப்பற்ற மேற்கின் பெரும் நிறுவனங்கள் ஒரு புறம் வன்முறையாளர், கூலிப்படையினர் இத்தியாதியினரை அவிழ்த்து விட்டிருக்க, ஆட்சியைச் சரிவர நடத்தத் தெரியாத இடது சாரி அரசுகள் முக்குக்கு முக்கு பானர் வைத்து பிரச்சாரமே ஆட்சி என்று பிரமையில் மக்களை வைத்து ஆளும் திராவிடக் கட்சிகளைப் போலவே ஆட்சி நடத்தினர். இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?
இங்கு உலக முதலியத்தின் பிரச்சாரக் கருவியாகச் செயல்பட்டு, மூன்றாம் உலக நாடுகளைத் தொடர்ந்து இழிவு செய்வதையே தன் தொழில் திறமை எனக்கருதி நடக்கும் பத்திரிகையான ‘தி எகானமிஸ்ட்’ பத்திரிகை ரொம்பவே மனம் சங்கடப்படுகிறது. ஒப்பனைதான் பாக்கி. அப்படி ஒரு நடிப்பு, நாம் கை தட்டவே வேண்டும். லத்தின் அமெரிக்க நாடுகளில் முன்னேற்றம் நின்று தேக்க நிலை வந்து விட்டதாம். பத்திரிகை ரொம்ப வருந்துகிறது. அதனாலேயே இதைச் சந்தேகிக்கத் தோன்றுகிறது. ஆனாலும் இது எத்தனை உண்மை என்பதைப் பிறகு பார்க்கலாம். இப்போதைக்கு தன்னளவில் இரண்டாம் உலக நாடாக இழிந்து போய்க் கொண்டிருக்கும் பிரிட்டனின் முக்கியப் பத்திரிகையான தி எகானமிஸ்ட்டின் கருத்தைக் கவனிப்போம். ஏன் லத்தின் அமெரிக்கா தேங்கி விட்டது? கட்டுரையைப் படித்தால் தெரிய வாய்ப்புண்டு.
கீழே பொலிவியா நாட்டில் குழந்தைப் பிறப்பு குறித்த நியு யார்க் டைம்ஸின் சிறப்பு புகைப்படங்கள் பதிவைக் காணலாம்:

Bolivia_Rail_Road