மார்க்சிய அடிப்படை: சொல்வது ஒன்று செய்வது ஒன்று

ஒரு பத்தி இந்தக் கட்டுரை இறுதியில் இப்படி முடிகிறது. இதில் வரும் மார்க்ஸ் என்ற பெயர் தவறான திக்கில் நம்மைச் செலுத்தக் கூடும். மேற்கில் எழுத்தாளர்கள் சில சமயம் ஒரு மனிதரின் ‘கடைசிப் பெயர்’ என்று அழைக்கப்படும் குடும்பப் பெயர்/ குழுப் பெயரையே அம்மனிதரின் பெயராகப் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக கார்ல் மார்க்ஸ் என்பாரை, மார்க்ஸ் என்றே இப்போது உலகம் பூரா அறிகிறது. இதற்குக் காரணம் அப்படி முதலில் மேற்கில் எழுதப்பட்டதுதான். மார்க்ஸ் என்பது குடும்பப் பெயர். ஒவ்வொரு முறையும் மார்க்ஸ் என்று நாம் சொல்லும்போது கார்ல் என்பாரைச் சொல்ல முயல்கிறோம், ஆனால் ஒரு குடும்பக் கூட்டத்தையே ஒரு பெயரில் அழைக்கும் வேலையாகத்தான் அது இருக்கிறது.
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது எலியனார் மார்க்ஸ் என்கிற பெண்ணின் கடிதம். இவர் தாடி மார்க்ஸின் புத்திரி (அ) மகள். [கார்ல் என்பாரின் அப்பாவுக்குத் தாடி இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் கார்லுக்கு இருந்த தாடியை உலகம் அறியும், அதனால் அந்தத் தாடி, தத்துவ, பொருளாதார, வரலாற்றுத் துறைகளை குழப்பி அடித்த தாடியாக இருப்பதால், தாடி =  கார்ல் என்று நாம் எல்லாரும் உடனே அறிகிறோம்.] இவருடைய வரலாறு பற்றிய சமீபத்துப் புத்தகத்தின் மதிப்புரை இங்கு கொடுக்கப்படும் கட்டுரை. அதில் கடைசி பத்தி இந்த மேற்கோள். [இந்த வரியில் சொல்லப்படும் மார்க்ஸ் என்பது எலியனார் என்பாரைச் சுட்டும். தாடிக்காரரை அல்ல.]

Marx writes in 1892 to her sister Laura: “Is it not wonderful when you come to look at things squarely in the face, how rarely we seem to practice all the fine things we preach to others?” It was all too prescient an insight.

இதுதானே மார்க்சியத்தின், மார்க்சியரின் அடிப்படைப் பிரச்சினையே. சொல்வதற்கும் செய்வதற்கும் சம்பந்தமில்லாது இருப்பதோடு, அதற்கு நாற்பது ஐம்பது ஆண்டுகள் கட்டுரை, கடிதம், விமர்சனம், உரை நிகழ்த்தல் என்று என்னென்ன விதங்களில் எல்லாம் சாத்தியமோ அவற்றை எல்லாம் பயன்படுத்தி, நொள்ளைக் காரணங்களை எல்லாம் சொல்பவர்கள் அவர்கள். ஆனால் தாம் செய்தது பெரும் தவறு என்று ஒரு போதும் உண்மையாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள். உண்மையாக ஒத்துக் கொண்டால் அப்புறம் அடுத்த மணியிலேயே வேதாளம் முருங்கை மரத்தில் மறுபடி ஏறிக் கொள்வது எப்படி நேரும்? [மார்க்சியத்தை மனதில் வைத்துத்தான் நம்மவர்கள் வேதாளம்/ விக்கிரமாதித்தன் கதையைச் சொல்லி வைத்தார்கள் போலிருக்கிறது. ]
உலகில் உள்ள மற்ற அனைவரும் கருத்து நேர்மையோடு நடக்காதவர்கள் என்றே தொடர்ந்து கரித்துக் கொட்டும் அமில நாக்கு விமர்சகர்கள் அவர்கள். ஆனால், அறம், ஒழுக்கம் என்பன எல்லாம் பூர்சுவா நாகரீகத்தின் பொய்மைகள், சட்டம் என்பது ஒடுக்கப் பயன்படும் ஆயுதம், உழைப்பு என்பது சுரண்டல் என்றெல்லாம் போதித்து விட்டு, ஆட்சிக்கு வந்து தாம் சொல்லும் அறம், ஒழுக்கம், சட்டம், உழைப்பு ஆகியனவற்றை இப்போது தமது ஆட்சிக்கு, அரசுக்காக மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதோடு, அப்படி ஒத்துக் கொள்ளாதவர்களை வெஞ்சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்யும் அருமையான சிந்தனை/ செயல் ஆளர்கள் மார்க்சியர்.
இதுதான் உலகெங்கும் இவர்களின் காலடித் தடம். எலியனாரின் புலம்பல் மொத்த மார்க்சியரின் வரலாறு பூராவுமான நடத்தைக்கும் கருக்காகப் பொருந்தும்.
இங்கு எலியனார் சொல்லிப் புலம்புவது தம் தனி நபர் வாழ்வின் பிரச்சினைகள் பற்றி என்றாலும், இந்தப் புலம்பல் அவர் எத்தனை naive சிந்தனையாளர் என்றுதான் சுட்டுகிறது. உலகுக்கு விமர்சன பூர்வமாகச் சிந்திப்பது எத்தனை அவசியம் என்று போதித்தவர் இவர், இவரைச் சுற்றி வாழ்ந்த பல அத்யந்த நண்பர்கள், துணைவர்கள் என்பதைப் பார்த்தால் இது எல்லாமே ஒரு அபத்த நாடகம், சாமுவெல் பெக்கெட்டுடைய நாடகத்துக்குச் சற்றும் குறைவில்லாத வாழ்க்கை என்றுதான் நாம் கருத வேண்டி இருக்கிறது. புத்தகம் எழுதியவருடன் எடுத்த பேட்டி:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.