பங்களாதேஷ் பயணம்

bangladesh3போன ஆகஸ்டிலேயே பங்களாதேஷ் போகவேண்டியது… தள்ளிப்போட்டிருந்தேன். வேறு யாராவது சென்று வேலையை முடித்துவிட மாட்டார்களா? என்ற நப்பாசை. கிடுக்கிப்பிடியாகப் பிடித்து இந்த வருடம் போக நேர்ந்துவிட்டது.
டாக்காவின், இன்றைய ஹஸ்ரத் சஹஜ்லால் பன்னாட்டு விமான நிலையம், 1982வின் சென்னை விமான நிலையத்தை நினைவுபடுத்தும். ஹஜ் யாத்திரை செல்வோர்கள், வெளி நாடுகளில் வேலைபார்க்கும் பங்களாதேஷிகள் என்ற கூட்டத்தைத் தவிர பிறநாட்டு மக்களில் வியாபாரத்திற்கு வரும் இந்தியர்கள் அதிகம். மொத்த பயணிகளில் இந்திய வியாபாரிகள் கிட்டத்தட்ட 20% சதவீதம் என்கிறார்கள். எனது விமானத்தில் அன்று பங்களாதேஷிகளே அதிகம் இருந்தனர். பெரும்பாலும் அரபு நாடுகளிலிருந்து வருபவர்கள். துபாய் ட்யூட்டி ஃப்ரீயின் ப்ளாஸ்டிக் பைகள் பல தென்பட்டன.
இமிக்ரேஷன் வரிசையில் அயல்நாட்டுக் குடியேறி பங்களாதேஷிகளுக்கு  சம விகிதமாக இரு வரிசைகள் ஒதுக்கியிருக்கின்றனர். நாட்டின் 17% வருவாய் அவர்கள் அனுப்பும் பணத்திலிருந்தே வருகிறது. வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்கமாட்டார்களா, பின்னே? கிட்டத்தட்ட 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 2012ல் அந்த நாட்டிற்கு, வெளிநாட்டிலுள்ளவர்கள் அனுப்பிய பணம் வந்திருக்கிறது.
இத்தனைக்கும் இந்த புலம்பெயர்வோர் அதிகம் திறமை படைத்த, அதிகம் வருவாய் ஈட்டுகிற மக்களில்லை. சென்றவர்களில் டாக்டர்கள், பொறியியல் வல்லுநர்கள், மாலுமிகள் எனப்பார்த்தால் 2% மட்டுமே. தையல் , கட்டிடப் பணியாளர்கள், பராமரிப்புத் துறை , ஓட்டல் சேவை என்று பார்த்தால் 17% மக்கள் மட்டுமே. மீதம் 81% மக்கள் திறனற்ற எடுபிடி வேலைகள், வீட்டுப் பராமரிப்பு வேலைகள், கால்நடை மேய்ப்பது என்ற அதிகம் வருவாயற்ற துறைகளிலேயே சென்றிருக்கிறார்கள். புலம்பெயர்ந்தவர்களில் 90% ஆண்கள். பெண்கள் பிறநாடுகளில் பாலின வண்புணர்வு, அடிமைத்தனம் போன்ற கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதால் பெண்கள் செல்லத் தடைவிதித்த அரசு, 2007ல் அந்த கெடுபிடிகளைத் தளர்த்தியது. பணம் வரவேண்டுமென்ற நோக்கம் மட்டுமே இதற்கு காரணம். இன்று புலம்பெயர்பவர்களில் 5% பெண்கள்.
பொருளீட்டியவர்களில் பலர் மீண்டுவந்து வெளிநாட்டில் வளர்த்த திறமையை உள்நாட்டில் வேலை வாய்ப்பிற்குப் பயன்படுத்த முயல்கின்றனர். ஆடை ஏற்றுமதி, கட்டிடத் துறைகளில் இவர்களுக்கு வாய்ப்பு அதிகம். இதனால் அரசின் அயல்நாட்டு வருவாய் சற்றே குறைந்திருக்கிறது.

bangladesh1

இத்தனை மக்கள் சென்றிருப்பதில், மத்திய ஆசிய நாடுகள் முதலிடம் வகிக்கின்றன. இஸ்லாமியர் என்ற ஒரே காரணம் கொண்டு இம்மக்கள் நாம் நன்றாக நடத்தப்படுவோம் என்ற நம்பிக்கையில் கிளம்புகின்றனர். அங்கு கிட்டத்தட்ட அடிமை நிலையில் நடத்தப்படுபவர்கள், வேறு வழியின்றி கஷ்டங்களைச் சகித்துக் கொண்டு வருவாய்க்காக வாடுகின்றனர். பங்களாதேஷில் இப்படி வேலைக்கு ஆளெடுத்துப் பிற நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வியாபாரம் பெரும் தொழில். தொழிலாளிகள் தேர்வு என்ற போர்வையில் நடத்தப்படும் அடிமை வியாபரமே இது. இந்தியாவை விடப் பல மடங்கு பெரிய நிலையில் இது நடத்தப்படுகிறது. அரசு பல கெடுபிடிகளை விதித்திருந்தாலும், லஞ்சம் தலைவிரித்து ஆடும் நாட்டில் எதுவும் சாத்தியம்.
ஒரு சுவாரசியமான தகவலை நண்பர் அன்வர் ரஹ்மான் சொன்னார். ”1948ல் இங்கிலாந்து, பெருமளவில் உழைக்கும் மக்கள் தேவையில் இருந்தது. எனவே பிற காலனி நாடுகளிலிருந்து குறைந்த சம்பளத்தில் உடலுழைப்பிற்கு மக்களை இங்கிலாந்தில் தடையின்றி குடியேற அனுமதித்தது. இந்தியா, மேற்கு பாக்கிஸ்தான், கிழக்குப் பாக்கிஸ்தானிலிருந்து பெருவாரியாக மக்கள் இங்கிலாந்தில் குடியேறினர். அதில் மேற்குப் பாக்கிஸ்தான், தனது நாட்டின் மலிவான உழைப்பாளிகள் தேவைக்காகவும், தன் மக்கள் இங்கிலாந்தில் குடியேறப் போட்டி குறைவாக இருக்கவும், பெங்காலிகளுக்கு பாஸ்போர்ட் தருவதை குறைத்தது. இதில் கோபமுற்ற பெங்காலிகள் முதன்முறையாக ’இன , மொழி கலாச்சார அடையாளம் என்பது மத அடையாளத்தை விட முக்கியம் ’ என்பதை உணர்ந்தனர். இந்த வெறுப்பு 1972 போருக்கு வித்திட்டது.” அன்று குடிபெயர்ந்த கிழக்குப் பாகிஸ்தானிகள் பெரும்பாலும் சில்ஹெட் பகுதியிலிருந்து போனவர்கள். அதிகம் படிப்பறிவில்லாததால், உடலுழைப்பை மட்டுமே நம்பி ஒரு கூட்டமாக வாழ்ந்தனர்.  இதனால் அவர்களது கலாச்சார மொழி அடையாளங்கள் இன்றுவரை மாறாதிருக்கின்றன.
பங்களாதேஷின் மக்கள்தொகையில் 90% சூன்னி இஸ்லாமியர். சிறுபான்மையர் மீது வெறுப்பின் வழியான தாக்குதல்கள் இன்றும் தொடர்கின்றன. பல இந்து, கிறித்துவ குடும்பங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் தாக்குதல்களினின்று தப்ப இயலும் என்பதால் மதம் மாறுகின்றன. இந்தச் சூழலில் கெடுபிடியான மதச் சார்பான பழக்கங்களையே அரசு, தனியார் துறைகளிலும் காணமுடியும் என்ற எண்ணம் கொண்டுதான் எனது அலுவலகப் பணிகளைத் தொடங்கினேன்.

bangladesh4

டாக்காவிலிருந்து 70 கி,.மீ தொலைவில் இருந்த ஒரு மருந்துத் தொழிற்சாலையில் ஒரு மென்பொருள் குறித்தான என் விரிவுரையும், செயல்விளக்கமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கம்பெனியின் தரக்கட்டுப்பாடு, தர உறுதித்துறைகள் மற்றும் உற்பத்தித்துறையின் முக்கிய மேலாளர்கள் கொண்டிருந்த கூட்டத்தில் 40% உறுப்பினர்கள், பெண்கள். இது இந்திய மருந்து தயாரிப்பு கம்பெனிகளை ஒப்பு நோக்குகையில் பல மடங்கு அதிகம். அந்தப் பெண்களில் பலரும் தைரியமாகக் கலந்துரையாடி, தங்களது துறை சார்ந்த திறமையையும், ஆளுமைத் திறமையையும் வெளிப்படுத்தியது வியப்பாகவும், நிறைவாகவும் இருந்தது. வெறுமே , ஒரு ஒதுக்கீட்டு நிர்ப்பந்தத்தினால் நாற்காலியை நிரப்பும் வகையில் இவர்கள் அந்தப் பதவிகளில் வந்தமரவில்லை. ஆரோக்கியமான போட்டிச் சூழலில் அவர்கள் மேலே வந்திருக்கிறார்கள். சமூகம் அதற்கு இடமளித்திருக்கிறது.
சிறுபான்மையர் நிலையென்ன? அன்று தொட்டு நாலு நாட்கள் நான் சென்ற நிறுவனங்கள் பலவற்றில் ( 90%க்கும் மேல்) , கணிப்பொறி, தகவல் தொடர்புத்துறையில் மேலாளர்கள் இந்துக்கள். ஒரு நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடுத் துறையின் தலைமை மேலாளராக ஒரு திருமதி. சுமா கோஷ் இருந்தார். பாரம்பரிய உடையான சேலை கட்டி, பொட்டு வைத்துக்கொண்டு அந்தப் பெண்மணி அமர்ந்திருந்தது, இந்திய நிறுவனங்களைப் போலவே இருந்தது.
இந்த அனுபவங்கள், பங்களாதேஷ் குறித்தான என் முன்முடிவுகளை மாற்றியது. கற்றவர்கள்,  திறமையாளர்கள் என்ற ஒரு தட்டில் போட்டி கடுமையாக இருக்கிறது. ஆனால் திறமைக்கு , பாலின வேறுபாட்டைவிட, மதத்தைவிட மதிப்பிருக்கிறது. ஒருவேளை உலகளாவிய போட்டியை சந்திக்கும் நிறுவனங்கள், வெளிநாடுகளிலிருந்து வந்து பணிபுரியும் மேலாளர்கள் கொண்டு வந்த நல்ல நிர்வாகப் பழக்கங்கள் காரணமாக இவ்விளைவுகள் இருக்கலாம். இதே ஆரோக்கியமான சூழல் மத்திய ரகத் தட்டில், கீழ்த்தட்டில் இருக்குமா என்று தெரியவில்லை. நான் உரையாடிய அளவில்  இல்லையென்றே தோன்றுகிறது.
இந்த திறமைசாலி ஊழியர்களின் வருவாய் , அவர்களுக்கு இணையாக இந்தியாவில் வேலைபார்ப்பவர்களின் வருவாய்க்கு கிட்டத்தட்ட சம நிலையில் இருக்கிறது. விலைவாசி, சேமிப்பு விகிதம், குழந்தைகளின் கல்வி, இருப்பிடம் என்பதன் விலை என்று பார்த்தால் ,  செலவுக்கும், வருவாய்க்குமான விகிதம் இந்தியாவிலிருந்து சற்றே அதிகம்தான். ஆனால் இதனை அந்நாட்டின் மொத்த வருவாய், விலைவாசி நிலையிலிருந்தும் , தட்டுப்பாடுகளிலிருந்தும் நோக்க வேண்டும்.
உதாரணமாக குடிநீர் என்பதை எடுத்துக்கொள்வோம். கங்கையின் பிரிவான பத்மாவும், ப்ரம்மபுத்ரா நதியும்  பங்களாதேஷ் முழுதும் பரவி நீர் நிறைத்திருக்கின்றன. எண்ணற்ற கிளை நதிகள் உள்ளன. ஆனால் சுத்தமான குடிநீர் என்பது டாக்காவிலும் எளிதில் கிடைப்பதில்லை. நிலத்தடிநீரையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். அதுவும் மிகவும் கீழ் மட்டத்தில் போய் பெருமளவில் மாசுகளுடன், ஆர்சனிக் போன்ற விஷத்தன்மை கொண்ட தனிமங்கள் கொண்டதாக வருகிறது. பங்களாதேஷில் ஆர்செனிக் விஷத்தின் அபாயம் பெருமளவில் இருக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் ஒரு லிட்டருக்கு 35 டாக்கா ( 28 ரூபாய்கள்) என்ற அளவில் வாங்கினேன். இந்த விலை அதிகம் என்று எடுத்துக்கொண்டாலும், சராசரி பங்களாதேஷிக்கு இதன் அரை விலையும் அதிகம்தான்.
உள்நாட்டு வளர்ச்சி என்ற பெயரில் கட்டிடம் கட்டுதலைப் பெரியதொழிலாக டாக்காவின் புறநகர்கள் காட்டுகின்றன. ஆஷுலி என்ற புறநகர்ப்பகுதிக்கும் டாக்காவுக்கும் இடையே பெருமளவில் மண் குவிக்கப்பட்டு, புழுதி பறந்துகொண்டிருந்தது. “இங்கு கட்டிடம் கட்டுவதற்கு  துரக் ஆற்றிலிருந்து மண் எடுக்கிறார்கள். அதுதான் நீங்கள் பார்ப்பது” என்றார் ஹலீம் என்ற நண்பர்.
“ஆறு எங்கே இருக்கிற்து?” என்றேன்.
“ அது இறந்துவிட்டது. நாம் போய்க்கொண்டிருக்கும் சாலை , ஆற்றின் கரையில் கட்டப்பட்டதுதான். வலதுபுறம் நீங்கள் பார்ப்பது ஆறாக இருந்தது சில வருடங்கள் முன்பு வரை” என்றார் ஹலீம் பெருமூச்செறிந்தபடி. ஆஷூலி அருகே சாலையின் இருபுறமும் பெரும் செங்கற்சூளைகள், கரும்புகையை கக்கிக்கொண்டிருந்தன. மண்ணும், செங்கலும், புகையுமாக அந்த இடமே ஒரு மயானக்காடாக , பொய்நிகழ்வாகத் தோன்றியது.
“சாலையால் ஆற்றிற்கு வரும், ஆற்றிலிருந்து பிரியும் நீர்ப்பகுதிகளை அடைத்துவிட்டனர். வற்றியதும், பில்டர்கள், அருகிலிருக்கும் விளை நிலங்களை அடிமட்ட விலையில் வேளாண்மக்களிடம் இருந்து வாங்கினார்கள். அந்த மக்கள், தையல் தொழிலையும், கட்டிடத் தொழிலையும் மேற்கொள்கின்றனர். இங்கிருக்கும் ஆடை உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்களில் பெருமளவில் அவர்கள்தான் பணியாற்றுகின்றனர். நிலங்களுக்கு சொந்தக்காரர்களாக இருந்தவர்கள், இன்று அதே நிலத்தில் இருக்கும் அசுரக் கட்டிடங்களில் அடிமைகளாக வேலை பார்க்கின்றனர்.”
“இந்த ஆறு அடைபட்டதால் பெருமளவில் சுற்று சூழல் பாதிக்கப்படுமே?” என்றேன் கவலையுடன். பெரிய ஆறாக இருந்திருக்க வேண்டும். மலை போல் மண் குவிந்துகிடந்தது.
“ஆம். இரு முறை பெரும் வெள்ளங்கள் வந்தால் போதும்.பேராசையில் அரசும், பில்டர்களின் லாபியும் கண்மூடித்தனமாக இந்த பேரழிவைக் கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள். வளர்ச்சி என்ற பெயரில் இன்று நடப்பது, நாளை அழிவில் கொண்டு வந்து சேர்க்கும்,” என்றார் ஹலீம்.
”என்.ஜி.ஓக்கள், சுற்றுச்சூழல் காப்பு அமைப்புகள் பலமாக இங்கு உருவாகவில்லை. உருவாக விடவில்லை என்பதான் சரி,” என்றார் ரசூல் என்ற நண்பர்.
டாக்காவில் பல பல்கலைக்கழகங்கள். இரண்டு அடுக்குமாடிக் கட்டிடங்கள் கொண்ட வளாகம் , பனானி என்ற குடியிருப்புப் பகுதியில் ஒரு பல்கலைக் கழகமென போர்டு போட்டிருந்தது. அடுத்தடுத்த தெருக்களில் இரு பல்கலைக்கழகங்கள். சூட் கோட் போட்ட இளைஞர்கள், இளைஞிகள் சகஜமாக திறந்த சைக்கிள் ரிக்‌ஷாவில் அமர்ந்து சென்று கொண்டிருந்தனர். ஒருவேளை கல்லூரி என்பதைத்தான் பல்கலைக்கழகம் என்று சொல்கிறார்களோ? என்று சந்தேகம் வந்தது. ”இல்லை,” என்றார் ரசூல்.
“பல்கலைக் கழகங்களில் படிப்பு விலை உயர்ந்தது. இவற்றில் பெரும்பாலும் தனியார் கல்விக்கூடங்கள். சில, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களோடு தொடர்பு கொண்டவை. மத்திய வர்க்க பங்களாதேஷி, தன் குழந்தைகளை எப்பாடுபட்டாவது படிக்க வைத்து வெளிநாடு அனுப்பிவிட துடிக்கிறான். அந்த ஆசைகளை நன்கு புரிந்து கொண்டு அதில் பணம் பண்ணும் தனியார் நிறுவனங்கள் பல, ” என்றார் அவர் வெறுப்போடு. அவரது பையன் ஒரு கல்லூரியில் படித்துவருகிறான். படிப்பு முடிந்ததும் எம்.பி.ஏ படிக்க வைக்கவேண்டும் என நினைத்திருக்கிறார்.
கனரக மற்றும் பெரும் அளவிலான உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் பங்களாதேஷில் குறைவு. மருந்துத் துறை, ஆடை ஏற்றுமதி, தோல் பொருட்கள் ஏற்றுமதி என்பதைத் தவிர பிற துறைகள் குறைவு. சில்ஹெட் பக்கம் இயற்கை எரிவாயு கிடைக்கிறது என்றாலும் அதன் அளவு குறைவே. எனவே படித்ததும், வியாபாரம் என்பதே சிறந்தது என்று பலரும் நினைக்கின்றனர். மேற்கொண்டு துறை அறிவை விருத்தி செய்தல் என்பதற்கான வாய்ப்புகளும் காரணங்களும் குறைவு என்பதால் உற்பத்தி தொழில் நிறுவனங்களில் கல்லூரிப்படிப்பின்பின் வேலையில் சேர்ந்துவிடுகின்றனர். மெத்தப்படித்தவர்கள் என்று மேலாளர் அளவில் பலர் இல்லை. முனைவர் பட்டம் பெற்றவர்கள் 1% மட்டுமே ஆய்வு மேலாளர் பதவிகளில் இருக்கின்றனர்.  மேல் பதவிகளில் முதுகலைப்பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கையும் 20%க்கும் குறைவுதான்.
ஜனவரி முதல் நாடுமுழுதும் கடையடைப்புப் போராட்டமென்பது இயல்பு வாழ்வை முடக்கியிருக்கிறது. வெறுத்துப் போய் மக்கள் தைரியமாக இயங்கத் தொடங்கியிருக்கிறார்கள். காலை 9 மணிக்கு மேல் மாலை 6 மணிக்குள் தொழில், வியாபாரம் நடக்கிறது.” ஓட்டல் பகுதியைத் தாண்டி குறுக்கு சாலைகளில் செல்லவேண்டாம்” என்று நண்பர்கள் என்னை எச்சரித்திருந்தனர். மால்களிலும் செல்ல வேண்டாமென்றனர். கடைசி நாள் ஏர்ப்போர்ட் செல்லும் வழியில் ஒரு கடையில் , வந்ததன் அடையாளமாக சில பொருட்கள் வாங்கினேன். இந்தியாவில் விலையை ஒப்பிடும்போது அவை ஒன்றும் மலிவல்ல.
சாதாரண பங்களாதேஷி, இந்தியாவை நல்ல நட்பு நாடாகவே பார்க்கிறான். அஸ்ஸாம் எல்லைகள், இந்தியாவின் வடகிழக்கு மாநில எல்லைகள் தவிர பிற மாநிலங்கள் குறித்து அவர்கள் நட்பாகவே நினைக்கின்றனர்.  சட்டப்புறம்பாக இந்தியாவுக்குள் ஊடுருவது  தவறென்று அவர்கள் நினைக்கவில்லை. ”வறுமை. எங்க போவோம்?” என்பதாக அவர்களது பொதுவான பதிலாக இருக்கிறது. இந்தியாவுக்குள் வருவதே, அரபு நாடுகளுக்கு புலம் பெயர்வதற்காகத்தான் என்கின்றனர். இது உண்மையில்லை என்பது அவர்களுக்கும் தெரியும். பெரிய நாடான இந்தியாவுக்கு பங்களாதேஷிகள் ஒரு பாரமில்லை என்பது அவர்கள் வாதம்.
”இந்தியாவில் இந்தியர்களுக்கே  வேலையில்லாத நிலையில் அங்கு ஊடுருவி வருவது தவிர்க்கப்படவேண்டுமில்லையா?” என்று நான் கேட்டபோது . “ சேர்ந்து உண்போம், பாய். சேர்ந்து உழைப்போம்” என்று தியரிட்டிக்கலாக , உணர்வு பூர்வமாக பேசுகிறார்கள். மதம் குறித்த கேள்விகளை கவனமாகத் தவிர்ப்பதை உணர்ந்தேன். மம்தா பானர்ஜீ குறித்து ஒரு வெறுப்பு நிலை கண்டேன். இந்திய அரசியலை மேல்மட்ட பங்களாதேஷி உன்னிப்பாகக் கவனிக்கிறான், பாலிவுட் பாடல்காட்சிகளைப் போலவே அதையும் தீவிரமாக அலசுகிறான். தமிழ்நாட்டில் மூன்றாம்தர மலையாளப்படங்களின் போஸ்டர்களைப்போல பெங்காலிப் பட போஸ்டர்கள் சுவர்களில் நிறைந்திருக்கின்றன.

bangladesh5

வன்முறை நாடளவில் கட்டவிழ்ந்து கிடக்கும் நிலையில், இறந்தவர்களின் பெயர்களில் சிறுபான்மை இந்துக்களின் பெயர் அதிகம் காணப்படுகிறது. கடைசிநாள் விமானநிலையம் செல்லும் வழியில், சற்று தொலைவில் புகை எழுந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். “ பெட்ரோல் பாம் இல்லை”என்றார் டிரைவர். “வெடிச்சத்தம் கேக்கலை பாருங்க. குப்பையப் போட்டு எரிச்சிருப்பாங்க”  பகல் பன்னிரெண்டு மணிக்கு யார் குப்பையை எரிப்பார்கள் என்று கேட்க நினைத்து அடக்கிக்கொண்டேன். அது ஒரு வெடிகுண்டாக  இருந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கு முந்திய நாள்தான் , டீலர் ஒருவரின் நண்பர் தொழுகைக்குச் சென்று திரும்பும்போது, பெட்ரோல் பாம் வெடித்ததில் காலை இழந்திருந்தார்.
சோனார் பெங்கால் என்ற அகண்ட பெங்காலியக் கனவு இன்றைய  பங்களாதேஷின் மூலம் நிறைவேறப்போவதில்லை.  அவர்களுக்கு அதில் விருப்பமும் இல்லை. தனி நாடாக  இருக்கவும், பணம் சேர்க்கவும் முயல்கிறார்கள். இது தனிமனிதப் பொருளாசை மட்டுமே. ஆனால், அரசியல் அமைப்புகள் அங்கு நிலையாக செயல்படுமானால், மதத் தீவிரவாதம் அங்கு கட்டுப்படுமானால், இன்னொரு தாய்லாந்து உருவாகும் சாத்தியக்கூறு இருக்கிறது.
 

0 Replies to “பங்களாதேஷ் பயணம்”

  1. //அரசியல் அமைப்புகள் அங்கு நிலையாக செயல்படுமானால், மதத் தீவிரவாதம் அங்கு கட்டுப்படுமானால், இன்னொரு தாய்லாந்து உருவாகும் சாத்தியக்கூறு இருக்கிறது. – See more at: http://solvanam.com/?p=38700#sthash.89on2Xk0.dpuf//
    நல்ல அலசல். மதவெறி என்பது அவர்களின் ரத்தத்தில் ஊறியது, அவர்கள் சாலையோரஹ்தில் குப்பை பொறுக்குபவனாய் இருந்தாலும், மேலாளராக இருந்தாலும் மதமே முக்கியம்.
    மத்திய கிழக்கு முழுக்க மற்றும் இங்கே ஈராக்கில் பெங்காலிகளே அதிகம். மனிதனாகக்கூட மதிக்காத அரபிகளிடம் வீட்டு வேலையும், மூன்றாந்தர துப்புரவு கம்பெனிகளில் சாலையோர பூங்காக்களையும்,சாலைகளையும் பராமரிக்கின்றனர். அவர்கள் ஊர் காசுக்கு 2 லட்சம் ஏஜெண்ட்டுக்கு கொடுத்துவிட்டு ஈராக்கில் 300 டாலருக்கு வேலை செய்கிறார்கள்.
    தாய்லாந்தாக மாறுவது என்பது நீங்கள் பங்களாதெஷை ஒரு உற்பத்தி மையமாக காண்பதாக நினைக்கிறேன். பங்களாதேஷ் அப்படி ஆவதற்கான வாய்ப்பு குறைவு என்பதே என் கணிப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.