ஆண்ட்ரூ நிக்கல் (Andrew Niccol) என்னும் திரைப்படக்காரரை எனக்கு ரொம்ப நாளாகவேத் தெரியும். அமெரிக்கா வந்த புதிதில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெள்ளித்திரையில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தபோது, ’த ட்ரூமன் ஷோ’ (The Truman Show) திரைப்படத்தை எழுதியவர் என்ற முறையில் எனக்கு ஆண்ட்ரு அறிமுகமானார். வாழ்க்கையே ஒரு நாடக மேடை. நாம் எல்லாம் எங்கிருந்தோ ஆட்டுவிக்கப்படுகிறோம். அதை தொலைக்காட்சிக்காக நிஜ நாடகமாக எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை இந்தக் கால ரியாலிடி தொடர்கள் வருவதற்கு ரொம்ப காலம் முன்பே திரையில் காண்பித்தவர்.
ஆண்ட்ரூவின் அடுத்த படம் எப்பொழுது வரும் எனக் காத்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நாள் கழித்து கேட்டக்கா (Gattaca) வந்தவுடன் என்னுடைய சிந்தனையை எரியூட்ட வந்த ஜோதிப்பிழம்பாகவே ஆண்ட்ரூ தெரி
கேட்டக்கா படம் எதிர்கால மக்களை குறித்தது. அறிவியல் புனைகதை வகையைச் சேர்ந்தது. வருங்காலத்தில் அனைத்து குழந்தைகளும் செயற்கை முறையிலேயே கருத்தரிக்கப்படுகின்றது. பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என்பது முதல், அறிவாளியா, விஞ்ஞானியா, விளையாட்டு வீரனா, அறிவியல் மேதையா, பங்குச்சந்தை வித்தகரா, எவ்வளவு வயது வாழலாம், என்ன நிறக் கண், எவ்வளவு உயரம், முக்கிய உறுப்புகளின் அங்க அளவுகள் வரை அனைத்தும் தீர்மானிக்கப்பட்ட பின்பே செயற்கை முறையில் குழந்தை பிறக்கிறது. இவ்வாறு பிறப்பவர்களின் தகுதியை முன்கூட்டியே நிர்ணயித்து, என்ன வேலை, என்ன படிப்பு, எப்பொழுது ப்ரமோஷன் என்பது வரை கரு அளவில் இருக்கையிலேயே அட்டவணை போட்டு பெற்றோர், பள்ளி, கல்லூரி, கம்பெனி, கோல்·ப் க்ளப் என அனைவருக்கும் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து விடுகிறார்கள்.
இந்த மாதிரி செயற்கை குழந்தை வேண்டாம், இயற்கையான கருத்தரிப்பே வேண்டும் என்று பிறக்கும் குழந்தைகளுக்கு சமுதாயத்தில் மவுசு கிடையாது. ஊனப்பட்டவர்களைப் போல் பார்க்கப்படும் அவர்கள், தகுதியிருந்தாலும் தாழ்த்தியே வைக்கப்படுகிறார்கள். கதையின் நாயகன் இயற்கை முறையில் பிறந்தவன். வில்லனாக வருபவன் அவனுடைய தம்பி. செயற்கை முறையில் பிறந்தவன். முன்கதைச் சுருக்கம் இவ்வளவு போதும்.
கதையில் ஒரு காட்சி: அண்ணன், தம்பி இருவரும் சிறு வயது முதலே, ஆற்றில் நீச்சல் போட்டி நடத்திக் கொள்கிறார்கள். ஒவ்வொரு தடவையும் இயற்கை முறையில் பிறந்து சாதாரண மானுடர்களுக்கு வரும் நோய்களால் தாக்கப்பட்டு, கண் பார்வைக் குறைச்சலினால் கண்ணாடி போட்டுக் கொண்டு, மலேரியா முதல் ஜாண்டிஸ் வரை எல்லா வைரஸ்களும் குடியிருக்கும் அண்ணனே வெல்கிறான். அற்புதமான உடற்கட்டு, உறுதியான மனநலன், திரண்ட தோள்கள், நல்ல பாக்டீரியாக்கள் மட்டுமே உடலில் வைத்த செயற்கை தம்பி எல்லா நீச்சலோட்ட போட்டிகளிலும், அனைத்து வயதிலும் தோற்கிறான்.
எப்படி?
படத்தின் இறுதியில் தெரியும், பாருங்கள்.
கேட்டக்காவில் பேசப்படுபவை மூன்று விஷயங்கள்:
1. மரபணுப் பொறியியல் (genetic engineering) வளர்ச்சி அடைவதால் வரும் விழுமிய மாற்றங்களும், அதனால் உண்டாகும் சட்டம் சார்ந்த சிக்கல்களும்
2. ஏற்றத்தாழ்வுகள் இன்று ’பணத்தால்’ ஏற்படுகின்றன; அவையே மரபணு வேறுபாடுகளால் ஏற்பட்டால்?
3. கடவுள் மனிதரைப் படைக்கிறார்; குறைகளோடு உண்டாக்குகிறார். அறிவியல் அந்தக் குறைகளை நீக்கி, கடவுளுக்கே கடவுள் ஆகிறது. மதம் போச்சு; விஞ்ஞானம் பீடம் ஏறுகிறது.
நேரத்தில் (In Time) படத்திலும் இதே போல் மூன்று கருப்பொருள்கள் உலவுகின்றன:
1. விஞ்ஞான வளர்ச்சியினால் யாருமே முதுமை அடைவதில்லை. வயதானவர்கள் கூட இளமையாக இருக்கிறார்கள். ஆனால், நேரம் = பணம்.
2. ஏற்றத்தாழ்வுகள் இன்று ’பணத்தால்’ ஏற்படுகின்றன; அவையே ‘நேரம்‘ கிட்டுவதில் ஏற்பட்டால்?
3. இரண்டு படங்களுமே பிறழ்ந்த உலகை, டிஸ்டோபிய சமூகத்தை முன்வைக்கின்றன. மரபணு வளர்ச்சியினால், சௌக்கியமற்றவர்களும் சுகமடையலாம் என நினைப்பது உடோப்பியா. மரபணு வளர்ச்சியினால், சௌக்கியமற்றவர்கள் மேலும் பலவீனமாவார்கள் என நினைப்பது டிஸ்டோபியா .
நேரத்தில் (In Time) கதை உலகில் உள்ள எல்லோரும் தங்களுடைய இருபத்தைந்தாம் வயது வரை வழக்கம் போல் வளர்கிறார்கள். அவர்களுடைய 25ஆம் வயது நிறைந்தவுடன், அவர்களுக்கு ஒரே ஒரு வருடம் மட்டுமே ஆயுள் காலம் தரப்படும். அதன் பிறகு, தன்னுடைய ஆயுளை உழைத்துச் சம்பாதிக்கலாம்; பிறரிடமிருந்து திருடி எடுக்கலாம்; கடன் வாங்கலாம்; வங்கியில் சேமிக்கலாம்.
ஒவ்வொருவருடைய கையிலும் அவர்களுடைய ஆயுள்கணக்கு சின்னத்திரையில் காட்டப்படும். இன்னும் இந்த உலகத்தில் எவ்வளவு நேரம் பாக்கி இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக எல்லோருக்கும் தெரியும். அந்த உலகில், உடலும் அங்கங்களும் மூப்பே அடையாது; மாறவே மாறாது. ‘என்றும் 25’ ஆக, இளமையாக ஜொலிக்கும். ஆனால், உரிய நேரத்திற்குள் அடுத்த நொடியை செலுத்திக் கொள்ளாவிட்டால், செத்துவிடுவார்கள்.
எவ்வளவு நேரம் கையில் வைத்து இருக்கிறோமோ, அத்தனைக்கு நாம் பணக்காரர்.
தற்போதைய அறிவியல் ஆராய்ச்சியின்படி மனிதனின் ஆயுளை அதிகரிப்பதற்கு எல்லாவிதமான சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன. சில காலம் முன்பு வரை சஷ்டியப்த பூர்த்தி கண்டாலே பெரிய விஷயமாக இருந்தது. இப்பொழுது ஓரளவு உடல் ஆரோக்கியத்துடன் ஆயிரம் பிறை காணுகிற சதாபிஷேகம் சாதாரணமாகி இருக்கிறது. இது இன்னும் 100 வயது, 120 வயது என அதிகரிக்கும். ஆனால், படத்தில் உள்ளது போல் மார்க்கண்டேய தேகக்கட்டு செய்யும் வித்தையை விஞ்ஞானம் இப்போதைக்குக் கண்டுபிடிக்கப் போவதில்லை. நிரந்தர இளமையோடு இருக்கும் எந்த உயிரினத்தையும் அறிவியல் கண்டிருக்கிறதா என்று தெரியவில்லை, அப்படி ஒன்றிருப்பது ஐயமே.
படத்தின் கதாநாயகனாக ஜஸ்டின் டிம்பர்லேக் (Justin Timberlake) நடித்திருக்கிறார். கொஞ்சம் அடிதடி; நிறைய துள்ளல்; அவ்வப்போது காதல் பார்வை என செவ்வனே தனக்கு இடப்பட்ட வேலையை நிறைவேற்றுகிறார். இவருக்கு அம்மாவாக, அவரை விட எடுப்பான தோற்றத்துடன் ஒலிவியா (Olivia Wilde) வருகிறார். திரைப்படத்தில் அம்மாவாக நடிக்கும் ஒலிவியா, மகனாக நடிக்கும் ஜஸ்டின் டிம்பர்லேக்கை விட, நிஜத்தில் மூன்று வயது சிறியவர். அப்படியானால், இந்தப் படம் எவ்வளவு பசுமையாக இருக்க முடியும் என நினைத்துப் பாருங்கள்!
நிஜத்தில் திரைப்பட நடிகர்கள் இளமையாக இருந்தாலும், அவர்கள் வாழும் சூழல் நரகம் போலவே காண்பிக்கப்படுகிறது. தினப்படி பெற்று, பஞ்சத்தில் வாடும் மனிதர்களைக் காட்டுகிறார்கள். தினசரி உழைக்க வேண்டும், அதற்கு பன்னிரெண்டு மணி நேரம் சம்பளமாகத் தரப்படும். மீண்டும் அடுத்த நாள் உழைக்க வேண்டும். உழைக்காவிட்டால் செத்துவிடுவோம்.
ஆனால், பணக்காரர்களுக்கு அந்த நிலைமை அல்ல. அவர்கள் கோடி கோடியாக மணித்துளிகளை வங்கியில் சேமித்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஏழு மணி நேரம் நிம்மதியாக உறங்குவார்கள். ஒவ்வொரு சாப்பாட்டையும் ருசித்துப் புசிக்கிறார்கள். அவசர அவசரமாக ஓடிக் கொண்டே வாழ்க்கையை நடத்துவதில்லை. நேரமின்மையைப் பற்றிக் கவலைப்படாமல் நேரத்தைச் செலவழிக்கிறார்கள்.
அந்தப் பணக்காரர்கள் ஏழு கண்டம் தாண்டி வசிக்கிறார்கள். அந்த இடத்துக்குப் போவதற்கு பல்லாண்டுகள் செலவாகும். அவ்வளவு நேரம் எந்த உழைப்பாளியின் கையிலும் கிடையாது. எனவே, பாட்டாளிகள் தங்களுடைய தொழிற்சாலை நகரத்திலேயே உழலுகிறார்கள். அவர்களை அவ்வாறு கீழ்மையான நிலையில் வைத்திருக்கும் செல்வந்தர்கள், வேறொரு தூரத்துச் சொர்க்கத்தில் நிம்மதியாக நடமாடுகிறார்கள்.
திடீரென்று ஒரு நாள் நூறாண்டுகளைக் கையில் வைத்திருக்கும் செல்வந்தபுரி வாசியான ஹென்ரி என்பவருக்கு வாழ்க்கை சலித்து விடுகிறது. இத்தனை நேரத்தை வைத்துக் கொண்டு சுதந்திரமாக எங்கும் சென்று வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடியவில்லையே என எல்லாமே அனர்த்தமாக இருப்பதாக உணர்கிறார்.
இந்தத் தருணத்தில் ஹென்றி ஹாமில்டன் பேசும் வசனம் நம்மை உசுப்பும்:
ஹென்றி: “சிலர் அமரராக வாழ, பலர் இறக்க வேண்டும்.”
ஜஸ்டின்: “ஒரு எழவும் புரியலே!”
ஹென்றி: “உனக்கு நிஜமாகவே புரியலே… இல்லியா? எல்லோரும் என்றென்றும் வாழ முடியாது. பல்லாயிரம் கோடிப் பேர்களை எங்கே வைத்துக் கொள்வோம்? எதற்காக தடைக்கற்கள் போட்டு ஏழெட்டு அடுக்கு தாண்டி இருக்கும் தூரத்து ஊர்களை உண்டாக்கி அங்கே தங்கி இருக்கோம்? அனுதினமும் சேரியில் வாடகையும் அத்தியாவசியப் பொருளும் விலை உயர்ந்து கொண்டே போகிறதே… ஏன்? உயிர் வாழ இயலாமல் குடிமக்கள் சாகணும். அப்பொழுதுதான் நான் வைத்திருக்கும் மில்லியன் பத்திரமாக என்கிட்டயே இருக்கும். உனக்கு தினசரிக் கவலை மட்டுமே மிஞ்சி இருக்கும். உண்மையைச் சொன்னால்… எல்லோருக்கும் வேணுங்கிற அளவு இங்க எல்லாமே நிறைந்திருக்கிறது. யாருமே பட்டினியாலோ பற்றாக்குறையினாலோ சாக வேண்டாம். என்னிடம் இருக்கும் இத்தனை ஆண்டுக்காலம் என்னும் அரியபொருள், உன்னிடம் இருந்தால், நீ என்ன செய்வாய்?”
அதன் பிறகு ஜஸ்டின் என்ன ஆகிறான்? எவ்வாறு உலகை மாற்றப் பார்க்கிறான்? நேரம் பறிபோகாமல் எப்படி முழுக்க உபயோகிக்கிறான்? அதனால் நேரும் விளைவுகள் என்ன என்று படம் தொடர்கிறது.
பிலிப் கே டிக் புத்தகத்தைப் படிப்பது போல் இருக்கிறது.
‘நேரமே இல்லை… நான் ரொம்ப பிஸி!’ என்கிறேன். குழந்தையோடு உல்லாசமாக காலம் போக்க அவகாசம் கிடையாது. அலுவலில் ஏதாவது உதவி கேட்டால், தட்டிக் கழிக்கிறேன். கொஞ்சம் வரும் நாயை புறந்தள்ளுகிறேன். சவரம் செய்ய நேரம் கிடைக்கவில்லை. காரோட்டிக் கொண்டே காலை உணவு. வேலை விஷயமாக தொலைபேசிக் கொண்டே மதிய உணவு. டிவியைப் பராக்கு பார்த்துக் கொண்டு இரவு உணவு.
உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் எந்தவொரு சிரமமும் இன்றி ஆயிரமாயிரம் ஆண்டு காலம் வாழ முடியும் என்னும் உலகை இந்தப் படம் கற்பனை செய்கிறது. மனிதனின் நுகர்வுக்காக பொருள் தயாரிப்பில் உண்டாகும் நச்சுப் பொருள் மாசுபடுத்தலால் உலக வெம்மையாக்கம், உணவுப் பொருள் விலையேற்றம், சுவாசிக்கும் காற்றும் மாசுபடுதல், நிலத்தில் வாழ இடமில்லாமல் போகுதல் போன்ற அச்சுறுத்தல்களால், உழைப்பாளி ஏழைகள் கொத்தடிமைகளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். உலகெங்கும் இப்பொழுதே ஏழு பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இப்படியே வளர்ந்து கொண்டிருந்தால் என்னாவது? இந்த வாழ்வு கேடாக ஆக, மனிதருக்கு உயிர்ப்பெருக்கத்துக்கான உந்துதல் குறையாமல் இருப்பது எப்படி? வசதி அதிகமாகக் கிட்டும் நாடுகளில் மனிதருக்குத் தம்மைப் பிரதி செய்ய உந்துதல் குறைவாக இருப்பது எப்படி?
நேரத்தில் (In Time) திரைப்படத்தில் எல்லாவற்றுக்கும் நேரம் மட்டுமே மூலதனம். காபி வாங்க வேண்டுமா? நான்கு நிமிடம் கொடுக்க வேண்டும். கார் வாங்க வேண்டுமா? அறுபது ஆண்டுகள் கொடுக்க வேண்டும். அதெல்லாம் நன்றாக இருக்கின்றன. ஆனால், ஒரு மாமியார் – மருமகள் பிரச்சினையையே சமாளிக்க முடியாமல் பத்திரிகைகளுக்கு எழுதி யோசனை கேட்பவர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். இந்தத் திரைப்படச் சித்திரிப்பில், ஒரு காட்சியில் பத்து பாட்டிகள், அவர்களின் மாமியார்கள், அவர்களின் மருமகள்கள் எல்லோரும் ஒன்று கூடும் இடத்தில் நடக்கும் வம்புகளையும் அரங்கேறும் கலகங்களையும் ஆள் மாறாட்ட வித்தகர் கிரேசி மோகன் நன்றாக படம் பிடித்திருப்பார். ’இன் டைம்’ பட இயக்குனர் நிக்கோல் தவறவிட்டுவிட்டார். [ஒரு வேளை அதுதான் கோடம்பாக்கத்துக்கும், லாஸ் ஏஞ்சல்ஸுக்கும் உள்ள வித்தியாசமோ?]
நாயகியை முதன் முறையாக அறிமுகம் செய்யும் போது நாயகியின் தந்தை இவ்வாறு சொல்கிறார்: “பார்ப்பதற்கே என்னவோ தர்மசங்கடமா இருக்கிறது… இல்லையா! மண்டையில் என்ன என்னவோ ஓடுகிறது. அவள் என்னுடைய மகளா? பாட்டியா? என்னை விட நூறு வயது பெரியவரும் நானும் என்னுடைய மகனும் ஒரே மாதிரி உடல்பொலிவோடு இருக்கிறோமே”.
***
அது மட்டுமல்ல. வேறு சில குழப்பங்களும் படத்தில் உண்டு.
அரிதான விஷயங்களுக்கு நிறைய செலவு செய்ய வேண்டும் என்பது உண்மை. தொப்பை போட்ட பணக்காரர் போல் உப்பியிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்த காலம் போய், தட்டையான டிவி தோன்றிய போது, புது மாடல் டிவிக்கு எக்கச்சக்கமாய் பணம் கேட்டார்கள். மடிக்கணினி என்பது அலுவலகத்தினர் கொடுத்தால் மட்டுமே கட்டுப்படியாகும் என்று இருந்த காலமும் நினைவில் இருக்கிறது. செங்கல் போன்ற செல்பேசிகள் கூட ஆயிரக்கணக்கான டாலர் விலை வைத்து விற்கப்பட்டதைப் பார்த்திருக்கிறேன். வயாக்ரா போன்ற சொகுசு மாத்திரைகள் எட்டாக்கனியாக இருந்த காலமும் உண்டு. ஆனால், நாளடைவில், அந்த நுட்பங்கள் சல்லிசான விலையில் பலருக்கும் அனுகூலமான இடத்தில் நிறைய விற்பனையாகும் பண்டம் ஆக மாறுகின்றன.
’இன் டைம்’ படம் இதைக் கருத்தில் கொள்ளவில்லை. எப்போதும் நேரம் என்பதும், மரபணுவால் நீண்ட காலம் வாழ்வதும் கொடிய விலை கொடுத்து வாங்கும் பண்டமாகவே நிலைத்து இருக்கும் என்னும் கருதுபொருளை நினைக்கிறது. நிறைய விற்பனை ஆனால், நிறைய இலாபம்; நிறைய பேருக்கு விற்றால், இன்னும் நிறைய இலாபம் என்று எண்ணும் முதலிய சூத்திரம் கொண்ட நாட்டில் இது போன்ற கொள்கை செல்லுபடியாகாது.
அடுத்ததாக, நேரம் என்பது பண்டமாற்றுப் பொருள் அல்ல. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குக் கொடுத்தால்தான் சரிப்படும் என்று சொல்வது படத்திற்கு சுவாரசியமாக இருக்கும். ஆனால், நிஜத்தில் பொருத்தமாக இல்லை. வானத்தில் இருந்து மழை பொழிந்தால், அது என் மேல் ஒரு துளி, பக்கத்தில் இருப்பவனுக்கும் ஒரே துளி என எண்ணியெண்ணிக் கணக்கு பார்த்து விழுவதில்லை. மொத்தமாகப் பொழியும். எவ்வளவு நனைகிறோமோ, அவ்வளவு குளிர்ச்சி.
நண்பருடன் திரைப்படத்தை பார்த்து முடித்தவுடன் என்னிடம் கேட்டார்: “உனக்கு சோஷலிஸம் ரொம்பப் பிடிக்குமா? இருப்பவனிடம் இருந்து திருடி இல்லாதவனிடம் தானமாகக் கொடுக்கிறான். ஆனால், இல்லாதவனிடம் இருந்து கொள்ளை அடிக்க திருடர்கள் இருக்கிறார்கள். வரிச்சுமையை அதிகரிக்க அரசாங்கம் இருக்கிறது. பொருளாதாரத்தை பலவீனமாக்கும் நிதி நிறுவனங்கள், செல்வந்தருக்கு உவப்பான திட்டங்களையேப் போடுகின்றன. மார்க்சிஸத்தைப் பிரச்சாரம் பண்ணும் படம்!”
அவர் சொன்னது சரியே. தொழிலாளிகளின் ஒரே பலம் அவர்களுடைய உழைப்பு மட்டுமே என்று கார்ல் மார்க்ஸ் சொன்னார். அந்த உழைப்பை முடிந்த மட்டும் உறிஞ்ச முயல்வதே முதலாளித்துவத்தின் நோக்கம் என்றார். உழைப்பாளி உயிர் வாழத் தேவையானதையும், உழைக்க உந்துதல் வரப் போதுமானவரையும் — முதலியம் விட்டுவைக்கும் என்றார் மார்க்ஸ். நேரத்தில் (In Time) திரைப்படத்தில் அந்த முதலீட்டின் பலம் வெகு சிலர் கையில் இருக்கிறது. அவர்களுக்கு இதயம் இருந்தாலும், இரக்கம் கிடையாது. அடிமைகளாகவே பாட்டாளி வர்க்கத்தை நடத்துகிறார்கள். ’மூலதனத்திற்கு இறப்பே கிடையாது; அதை வைத்திருப்போர் இறக்கலாம்,’ என்றார் மார்க்ஸ். ‘நேரம் போவதே தெரியாது; அதை பயன்படுத்தத் தெரியாதவர்தான் ஏழைகள்,’ என்கிறார் இயக்குநர் நிக்கொல்.