சலவை

iron box

தனது இரு சக்கர வாகனத்தை ‘மேன்ஷனி’ன் கீழ்த்தள ஓரத்து நடையில் நிறுத்தினான் முத்துக் குமார். இரண்டாம் மாடியில் உள்ள தன் அறைக்குப் போகவில்லை. வெள்ளிக் கிழமை. வெக்காளியம்மன் கோயிலுக்கு வாகனங்களும் நடையாய்ச் செல்வோருமாய் நெரிசல். சிரமப் பட்டு சந்தின் மறுபக்கம் வந்து நேரே நடந்து ஜீயபுரம் செல்லும் சாலையில் திரும்பினான். இரவு மணி எட்டு. வெப்பம் தணிந்த பாடில்லை. வியர்த்துக் கொட்டியது.
சாலையில் நடந்த படி முதல் சந்து இரண்டாம் சந்து என்று கவனித்து வந்தான். இரண்டுமே மிகவும் குறுகியவை. மூன்றாவது சுமாரான அகலம் உள்ளது. அங்கே முனையிலேயே இஸ்திரி வண்டி நிற்கிறது. ஆள் இல்லை. அக்கம் பக்கம் போயிருப்பாரோ? அரையிருட்டில் அவர் எப்போதும் ஏற்றி வைக்கும் காடா விளக்கு இருக்கும். அதுவுமில்லை. வண்டியை நெருங்கும் முன் காதருகே ஹாரன் அடித்து ஒரு இரண்டு சக்கரக்காரன் முறைத்தபடி கடந்து போனான். வண்டியில் ஏற்கனவே ஒரு கட்டைப் பை துணி பிதுங்கக் கேட்பாரற்றுக் கிடந்தது . இஸ்திரிப் பெட்டி வெளியே இல்லை. அப்படியென்றால் இன்றைக்கும் ஆள் வரவில்லை என்றே பொருள். பதட்டத்தின் ஸ்ருதி மீண்டும் அதிகரித்தது.
இன்று மாலை நான்கு மணி சுமாருக்கு எந்தப் பதட்டமும் இல்லை. உருவாகிவரும் குடியிருப்பில் தனது வீட்டின் வரை நகலில் மாற்றம் கேட்ட ஒருவர் வந்து போனார். அதற்கு அடுத்து ‘டைல்ஸ்’ எங்கே தனது ரசனைக்குக் கிடைக்கும் என்று ஒரு அம்மாள் ஒரு மணி நேரம் கேள்விகளால் துளைத்துச் சென்றார். அவராலும் பதட்டமில்லை. ஆறு மணிக்கு தான் ஒரு குறுஞ்செய்தியால் சாந்தி பதட்டத்தைத் துவக்கி வைத்தாள். ” சவுதி அனுப்பும் மும்பை நிறுவனத்திடம் பேசினீர்களா?”  “இல்லை””பேசுங்கள். ஞாயிறு அன்று நேர்முகத்தில் கலந்து கொள்ளுங்கள். முடிவைப் பிறகு எடுக்கலாம்”
அவன் பதில் அனுப்பவில்லை. சாந்திக்கு ஒரு ‘சிவில் என்ஜினீயர்’ 20000 மாத சம்பளத்தில் திருச்சியில் திண்டாடுவது பிடிக்கவில்லை. சவுதியால் நம் திருமணம் தள்ளிப் போகும் என்று கூட மிரட்டிப் பார்த்து விட்டான். அவள் மசியவில்லை. இந்த நிறுவனத்தில் தன்னை மரியாதையாக நடத்துகிறார்கள். கொஞ்சம் அனுபவம் பெற்றால் சென்னையில் பெரிய ‘பில்டர்’ நிறுவனங்களில் வேலைக்குப் போகலாம். சவுதி போனால் இப்படி மலைக் கோட்டை ரயிலில் ஏறி மறு நாள் காலை அப்பாஅம்மாவை , மாலை சாந்தியைப் பார்க்க முடியுமா? திருச்சி ஏனோ அவனுக்குப் பிடித்தே போயிருந்தது. இங்கேயே சாந்தியுடன் குடும்பம் நடத்தினாலும் குறைந்த வாடகைக்கு எத்தனையோ வீடுகள். சிறியாதாய் ஒன்றைக் கட்டியே குடியேறலாம்.
அவன் பதிலை அவள் எதிர்பார்க்கவா போகிறாள்? கண்டிப்பாக இல்லை. அவன் போவான் என்று அவளுக்குத் தெரியும் . ஒரு நாள் மும்பை போய் வர விமான டிக்கெட் பணம் அங்கே நேர்முகம் முடிந்ததும் தருவார்கள். ஏனோ சவுதி போவது இவ்வளவு அவசரமெனத் தோன்றவில்லை. இந்த நிமிடம் இஸ்திரி போட்ட துணியே இல்லை.
மூன்று நாளாக இஸ்திரிக் கடை திறக்கவில்லை. இஸ்திரிக்காரர் இப்படிச் செய்வது முதல் முறையில்லை. சர்க்கரை நோய். சில சமயம் ஒரு வாரம் வரை கடையை அடைத்திருக்கிறார். அடுத்த சந்தில் இன்னொரு ஆள் இருக்கிறார். ஒரு முறை கொடுத்த போது “இனி வாடிக்கையாக வர்றதா இருந்தாச் செய்யலாம்” என்று அவன் கண்களை நோக்கினார். தலையாட்டினான். ஆனால் பழைய இஸ்திர்க்காரர் கண்ணில் படும்படி அவரது சந்தைத் தாண்டிச் செல்ல மனதுக்கு ஒப்பவில்லை. அவரும் ஈரெட்டாய் கடை போடுவதை நிறுத்தவில்லை. அவர் இல்லாவிட்டால் துணியை வண்டியில் வைக்கக் கூடாது என்று காலையில் வெறும் கையுடன் வந்து எட்டிப் பார்த்தான். அவர் இல்லை. ஐந்தாறு பேண்ட் மற்றும் சட்டைகள் இஸ்திரி போட வேண்டும். ஞாயிறு நேர்முகத்துக்குத் தேவையான நல்ல சட்டையும் இஸ்திரி செய்தால் தான் போடக்கூடியது.
முனைக் கடையில் அவன் தலையைப் பார்த்த உடனேயே தேனீர் போடத் துவங்கி விட்டார். தேனீர் குடிக்கும் போது அவனுக்கு மனம் இளகியது போலத் தோன்றியது. சாந்தியை எப்படியாவது சமாதானம் செய்து கொள்ளலாம். அறைக்கு வந்து உடை மாற்றி துண்டு, சோப் எடுத்து மறுபடி அறையைப் பூட்டி வாளியிலேயே சாவியை போட்டு குளியலறையை அடையும் போதே கைபேசி ஒலித்தது. குளித்து விட்டு வந்தான். இரவு ஒன்பது மணி. மும்பையிலிருந்து தான் அவன் விட்ட அழைப்பு. அழைத்தான். ஞாயிறு வருவதை உறுதி செய்கிறீர்களா என்று கேட்ட போது தன்னையும் அறியாமல் சரி என்றான். விமானப் பயணத்தை நாளைக்கு அலுவலகம் போகும் வழியில் “டிரேவெல்ஸ்” மூலம் செய்ய வேண்டும். இரவு குறுஞ்செய்தி பார்த்து சாந்தி மகிழ்ந்து “நீங்கள் போவீர்கள். எனக்குத் தெரியும்” என்று பதில் அனுப்பினாள்.
விடியற்காலை நான்கு மணிக்கு மின் தடையில் வியர்த்து எழுந்தான். இஸ்திரி போட வேண்டிய துணிப்பை காலை இடறியது. மெழுகு வர்த்திய ஏற்றி வைத்து நாளை மும்பைக்குப் போக ஏன் இப்போது “ஆன் லைனி”ல் டிக்கெட் போடக் கூடாது என்று ஒரு யோசனை. மடிக்கணினியை இயக்கினான். கொஞ்சம் பேட்டரி இருந்தது. இணையதளத்துக்கான “டேடா கார்டை” ச் சொறுகினான். ஏகப்பட்ட சலுகைகளுடன் நிறைய விமான சேவைகள். ஞாயிறு இரவு நேரமாகும் என்று வேலை வாய்ப்பு நிறுவனம் எச்சரித்திருந்தது. திங்கள் காலை கிளம்பும் விமானத்தில் வந்து சென்னையில் மாறி மதியம் திருச்சி வந்து விடலாம். எதாவது சொல்லி மேனஜரை சமாளிக்கலாம். போக வர டிக்கெட்டை “கிரெடிட் கார்டில்” உறுதி செய்தான். இன்று நள்ளிரவு திருச்சியில் இருந்து மும்பைக்கு விமானம். அம்மாவிடம் எதுவுமே சொல்லாமல் இவ்வளவு தூரம் போய் வருவதா? திருச்சி ஆபிஸ் விஷயமாகப் போய் வருவதாகச் சொல்ல வேண்டியதுதான்.
விடியும் போது தான் இஸ்திரித் துணி விஷயம் பெரிய பிரச்சனையோ என்று பட்டது. வேறு வழியில்லையென்றால் மாலை புதிதாக வாங்கலாம். அப்படியும் திங்கட் கிழமை போடத் துணியே இல்லை. திடீரெனத் துணியில் பணம் போட மனம் ஒப்பவுமில்லை. சாந்தி தன்னை மூச்சுவிட முடியாத அளவு பதட்டமான வாரக்கடைசிக்குத் தள்ளி விட்டாள்.
டீ குடித்து விட்டு வாடிக்கையான கடையை எட்டிப் பார்த்தான். ஆளைக் காணோம். 7 மணிக்கு துணிகளை எடுத்துக் கொண்டு நேரே அடுத்த சந்தில் நுழைந்தான். அந்த சந்தின் இஸ்திரிக்காரர் சுறுசுறுப்பாக இஸ்திரி போட்ட படி இருந்தார். மெதுவாகச் சென்று அவர் எதிரே நின்றான். அவர் கண்டு கொள்ளவே இல்லை. எஃப் எம்மில் உற்சாகமாக ஒரு அறிவிப்பாளர் சாரதாஸில் ஆடித் தள்ளுபடி என்று விவரித்துக் கொண்டிருந்தார். தொண்டையைச் செருமிக் கொண்டு “கொஞ்சம் அர்ஜென்ட்” என்றான். அவர் தனது வண்டிக்குக் கீழே உள்ள பைகளைக் காட்டி “நெறைய வேலை இருக்கு. முடியாது” என்றார். மூக்கை உடைத்தது போல இருந்தது. கெஞ்சவும் கௌரவம் இடம் கொடுக்கவில்லை. “சரி எடுத்திக்கிட்டுப் போறேன்” என்று திரும்பினான். சில தப்படிகள் நடந்தான். “ஸார் ” என்று அழைத்தார். “இந்த ஒரு தடவை மட்டும் செய்து தர்றேன்” என்றார்.
கைப்பேசியில் சிறு சிணுங்கல். சாந்திதான். “ரெடி தானே?” என்று குறுஞ்செய்தி. இஸ்திரிக்காரரைப் பொறாமையோடு திரும்பிப் பார்த்து விட்டு மேலே நடந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.