காதலாகி…

sunset2

ராஜ்ஸ்ரீயுடன் அவன் அறிமுகம் ஆனது மேற்கு மாதுங்கா சிட்டிலைட் தியேட்டரில் ‘அந்த 7 நாட்கள்’ என்ற படத்தின் இடைவேளையின்போது. கிங்சர்க்கிள் அரோராவில் தவறவிட்டுப்பின் மீள்சுற்றில் ஞாயிறு காலைக்காட்சியில் இங்கே திரையிட ‘தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதியென்னவோ’ என்ற பாடலுக்காகவே அவன் நெடுந்தூரம் நடந்து வந்திருந்தான்.
முன்பே சிலமுறை அவன் வசித்திருந்த கோலிவாடா CGS பகுதியில் அவளைப் பார்த்திருக்கிறான். தோழிகள் பக்கம்வர தெருவை அடைத்தவாறு அவள் கல்லூரிக்குப் போய்வருகையில்.. சயான் தமிழ்ச்சங்க நூலகத்தில் சிலமுறை..
இன்றுதான் அவளைக் கூர்ந்து நோக்கினான். அழகிய முகம்; எடுப்பான நாசி. எனினும் அவனுள் யாதொரு கிளர்ச்சியும் எழாத ஒல்லியான தேகக்கட்டு. அவன் பார்வையைத் தவிர்க்காமல் அவளும் அவனை நோக்கிப் புன்சிரிக்க திகைத்துப் போனான். இந்தப் புன்னகை பின்னால் வேறு யாரையாவது பார்த்தா என்று திரும்ப, யாருமில்லை.
அவன் பதைப்பை அதிகரிக்கும்படி புன்னகை மாறாமல் கையில் தேனீர்க்கோப்பையுடன் அவனை நோக்கி வந்தாள் அவள்.
என்ன கிருஷ்ணா சார் வரலையா உங்ககூட?
இல்ல அவன் வரல. அவனுக்கு இன்னிக்கு ஆபிஸ்ல அர்ஜண்டா வேலைன்னு போயிருக்கான் என்று தடுமாறினான். இவளுக்கு எப்படி அவன் அறைநண்பன் கிருஷ்ணமூர்த்தியைத் தெரியும்! கேட்போம்.
நீங்களும் செக்டார் சிக்ஸில இருக்கீங்க இல்ல? பாத்திருக்கன்.
ஹலோ நீங்க இருக்க அதே பில்டிங்ல H5-லதான் நாங்க இருக்கோம் என்றாள் அவள்.
கோலிவாடா தொடங்கி அண்டாப்ஹில் வரை சென்ட்ரல் கவர்மெண்ட் ஸ்டாஃப் காலனி என்று 7 செக்டார்களில் விரிந்திருந்த மலையாளிகளும் தமிழரும் நிறைந்திருந்த மாகடலில் ஒரு வீடு பார்த்து அவனும் அவன் நண்பனும் குடிபோய் இரண்டு மாதங்களாகி இருக்கும்.
அவனைப் போலன்றி கிருஷ்ணா எவரிடமும் எளிதில் பழகும் தன்மையன். பல வீடுகளில் சுலபமாய்ப் புகுந்து புறப்பட்டு வந்தமைக்கு திருமணவானவன் என்பதும் ஒரு காரணம். அக்கம்பக்க வீடுகளில் என்ன வேணும் காபி ஹார்லிக்ஸ் என்று யாராவது மாமி கேட்டால் ஆட்சேபணை இல்லன்ன ரெண்டும் கொடுக்கலாம் என்று அதிர வைப்பவன். அவன் பெயர் தெரிந்திருப்பதில் ஆச்சரியமில்லை.
அம்மா தம்பி ஃப்ரெண்ட்ஸ்லாம் வந்துருக்காங்க, தேடுவாங்க, வரேன் என்று சொல்லிப் போனாள் அவள்.
படத்தின் க்ளைமாக்ஸில் நாயகன் தமிழ்ப்பண்பாட்டைக் காப்பாற்றி வசனம் பேசிமுடிக்க நொந்துபோய் வெளியே வந்தான்.
ஹலோ மங்தாஹைகியா அங்கிள் என்று ஒரு சிறுவனின் குரல்கேட்டுத் திரும்பினான். அவள் பின்னால் வந்த அந்தச் சிறுவனை வீட்டருகே பலமுறை பார்த்திருக்கிறான்.
இந்த வீட்டுக்குக் குடிபோன புதிதில், அவன் துணிகளை இஸ்திரி போட்டு எடுத்து வந்த உபி பையா ஒருவரிடம் ஹிந்தி பேசக்கற்றுக் கொண்ட பெருமையில் ‘கித்னா ருபியா மங்தாஹைரே தேரெகோ’ என்றவன் சொன்னதற்கு சினந்துபோன அவர் ‘பெஹலா பராபர் தம்மிஜ்ஸே பாத்கர்ணா சீக்கோ’ என்று காசுகூட வாங்காமல் கத்திவிட்டுப் போக, பக்கத்து வீடுகளில் பலர் அதைப் பார்த்துச் சிரித்துப்பின் சமாதானம் செய்து வைத்தனர். இந்தப்பயல் அங்கிருந்திருப்பான் போல. அன்றிலிருந்து அவனை எங்கே எப்போது பார்த்தாலும் ‘ஹாய் அங்கிள் மங்தாஹைகியா’ என்று கிண்டலடித்து ஓடிப்போவான் இந்தக் குறும்பன். இவள் தம்பியா இவன்!
பின்னால் அவள் அம்மா தோழியர் என்று பெரிய பட்டாளமே வர அவனிடம் அறிமுகம் செய்தாள். அவனைப்பற்றி அவர்களுக்கு ஏற்கனவே தெரியும் என்பதும் ஆச்சர்யம்.
சரிங்க பார்க்கலாம் என்று வணக்கம் சொல்லி அவன் மாஹிம் பக்கம் நகர ‘என்ன அந்தப்பக்கமா போய் ப்ரிட்ஜ் வழியா நடந்தா போகப்போறிங்க’ என்றாள். Z வடிவில் அதிநீளத்தில் மாதுங்காவின் மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் ரயில்வே பாலத்தைக் கடந்து கிங்சர்க்கிள் வழியே சுமார் நான்கு கிலோமீட்டர் நடக்க வேண்டும். பெரும்பாலும் அவன் நடந்து போவதே வழக்கம்.
எங்க கூடயே வாங்க இந்தப்பக்கம் சிவாஜிபார்க் வழியா லெப்ட்ல திரும்பி தாதர் போய் பஸ்ஸில் போகலாம் என்றழைத்தாள். மறுக்கமுடியாமல் அவர்களுடன் சேர்ந்து நடந்தான்.
அவள் அம்மா படமுடிவில் அழுதுவிட்டதைச் சொல்லிச் சொல்லி தோழியரிடம் கிண்டலடித்துக் கொண்டே வந்தாள் அவள்.
சும்மா இரும்மா. நம்ம ஊர்ல தாலின்னா தாலிதான். ரொம்பப் புனிதமான விஷயம்மா அது. இதெல்லாம் உங்களுக்கு இப்ப புரியாது என்ற அம்மாவைப் பார்த்து அம்மா ஸ்டுபிட் எண்டிங்மா. நீங்க சரியான சென்டிமா என்றவள் சொன்னது அம்பிகா போன்ற பேரழகியை தாலி சென்டிமென்ட் சொல்லிப் பிரிந்து போன காதலனை எண்ணிக் கடுப்பிலிருந்த அவனுக்குப் பிடித்துப் போனது.
மேற்குதாதரிலிருந்து அண்டாப்ஹில்லுக்குப் போகும் 171 எண் மாடிபஸ்ஸைப் பிடித்து மேலேறி அனைவருக்கும் சேர்த்தே பயணச்சீட்டை வாங்கினான் அவன்.
அவர்கள் அரட்டை தொடர்ந்தவண்ணம் இருந்தது. தோழிகளிடம் அவள் சரளமாய் ஹிந்தியில் பேசுவதைப் பார்த்தான். அவள் அம்மா அவன் அருகில் அமர்ந்திருந்தாள்.
நீங்க சென்னையில் எங்கே என்றதற்கு அந்த அம்மா பிறந்ததே மும்பை என்றும் அவர்கள் 30களில் தமிழகத்தை விட்டு இடம் பெயர்ந்த குடும்பமென்றும் அறிய வியந்து போனான். எப்படி நீங்கள் இவ்வளவு நன்றாகத் தமிழ் பேசுகிறீர்கள் என்று மேலும் கேட்க அவர் வடாலாவில் தமிழ்ப்பள்ளியில் படித்தவர் என்றும், ராஜ்ஸ்ரீயும் SIWS – பள்ளியில் தமிழை ஒரு பாடமாகப் படித்தவள் என்பதால் அவளுக்குத் தமிழில் பேச மட்டுமின்றி மிக நன்றாகப் படிக்கவும் எழுதவும் தெரியும் என்றார்.
நீங்க தமிழில் கவிதையெல்லாம் எழுதுவீங்கன்னு கிருஷ்ணமூர்த்தி சொன்னார் உங்க அளவுக்கெல்லாம் எங்களுக்குப் புலமையில்லை என்று மேலும் சொல்ல அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கவிதை என்ற பெயரில் கணையாழியில் ஒருமுறை பிரசுரமாகியிருந்த மூன்றுவரிச் சொல்துண்டுகளை அவனே நிராகரித்து வைத்திருந்தான். அதைப்போய் பெரிதாய் அவன் நண்பன் தம்பட்டம் அடித்து வைத்திருப்பது அவனுக்குச் செய்தியாய் இருந்தது. இன்னும் என்னென்ன சொல்லி வைத்திருக்கிறானோ பாவி!
அவர்கள் கட்டிடம் சதுர வடிவிலானது. நடுவில் பெரிய தாழ்வாரம் போல் பொது இடம் விடப்பட்டு நான்கு பக்கமும் இரண்டிரண்டாய் மூன்றடுக்குகளில் 24 வீடுகள். மத்திய அரசில் பணியில் இருப்போர் சிலரே வசித்தனர். பெரும்பாலும் வாடகைக்கு விட்டு எங்கோ இருப்பவர். ராஜ்ஸ்ரீயின் வீடு அவனிருந்த இரண்டாம் மாடியில் எதிர்சாரியில் இருந்தது. அவள் அப்பாவும் இன்முகமாயிருந்தார். கிருஷ்ணாவுடன் அவனும் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி போய்வர ஆரம்பித்தான்.
அவனைக் கவர்ந்தது அவர்கள் வீட்டிலிருந்த ஏராளமான கிராமபோன் இசைத்தட்டுகள். ஆவலாய்ப் பார்க்க, காதலிக்க நேரமில்லை பாடல்கள் மற்றும் திருவிளையாடல் வசனம் என்று தமிழில் இரண்டைத் தவிர மற்றவை அனைத்தும் பழைய ஹிந்திப்பாடல்கள்.
அவனிடமிருந்த ட்ரான்ஸிஸ்டரில் இரவுவேளையில் இலங்கை ஒலிபரப்பில் சன்னமாய் ஒலிக்கும் அந்தக்கால தமிழ்ப்பாடல்கள் அவனை மயக்கிலாழ்த்தியிருந்த காலகட்டமது.

  • இன்பமான இரவிதுவே..,
  • உலவும் தென்றல் காற்றினிலே..,
  • கண்ணாலே நான் கண்ட கனவில்..

– என்று அவனுக்குப் பிடித்த பாடல்கள் பல அவள் அப்பாவுக்கும் பிடிக்கும் என்றார்.
இசைத்தட்டுகளை பொக்கிஷம் போல் வைத்திருந்தார் அவர். அதிலும் அழுகுரலாகவே ஒலிக்கும் ஓர் ஒலித்தட்டை அவர் வீட்டில் இருக்கும் போதெல்லாம் ஓடவிட்டுக் கண்மூடியிருப்பார்.
அவள் வீட்டில் கேட்டிருந்த அந்த அழுகுரல் பாட்டேல்லாம் பின்னாளில் அவனுக்கும் பிடித்துப்போனது. குறிப்பாய் ’மத்கர் சாஜ் சிங்கார் சுந்தரி’ என்ற பாடலை. அடிக்கடி முணுமுணுப்பதைப் பார்த்து என்ன உங்களுக்கும் ஜக்மோஹன் பைத்தியம் பிடிச்சுருச்சா என்றாள் ராஜ்ஸ்ரீ.

oOo

ராஜ்ஸ்ரீ, அவள் தோழிகள் மற்றும் தோழர்கள் எல்லாம் அவனுக்கும் நட்பான நாள்முதலாய் அவன் ஹிந்தியில் திருத்தமாய்ப் பேசுவதற்குக் கற்றுக்கொள்ளத் தொடங்கினான். அவனைவிட வயதில் இளையவராய் இருப்பினும் அவர்கள் பன்மொழி வல்லுநராய் இருந்தனர்.
தேரேகோ, மேரேகோ, காய்கோ, அபுன் போன்ற மராத்தி கலந்த மும்பையின் கொச்சைமொழியில் பேசுவதைக் கவனத்துடன் தவிர்த்து இணையான ஹிந்திச் சொற்களைக் கற்றுக் கொண்டான்.
எனக்கு வேண்டாம் என்பதற்கு அபுன்கோ நை மங்க்தாஹைவை விடுத்து முஜே நஹி சாஹியே என்றவன் சொல்லத் தொடங்க, அவன் அலுவல்வட்டத்திலும் மதிப்புயர்வதைக் கண்டான்.
அடுத்தபடியாய் தன்மை, முன்னிலை, படர்க்கையில் ஆண்பாலும் பெண்பாலும் மாறுவது குழப்பம்தர அவர்களே அதையும் தெளிவித்தார்கள். மே போல்தா ஹும் என்றால் பெண்பாலில் மே போல்தீஹும் என்றாவதையும் அந்தப் பிரயோகமே காலம் மற்றும் ஒருமை பன்மைகேற்ப மேலும் மாறுவதும் தமிழிலும் ஆங்கிலத்திலும் கண்டிராத சவாலாய் இருந்தது. கற்றான்.
ஆனால் அஃறிணையில் பால்வேற்றுமைதான் மிகப்பெரிய சவாலாய் இருந்தது. வண்டி வந்து கொண்டிருக்கிறா *ள் * என்று ஏன் சொல்ல வேண்டும் என்றதற்கு ராஜ்ஸ்ரீ விளக்கம் சொல்லி அப்படிப் பிரியும் பொருள்களின் பட்டியலைக் கற்றுத் தந்தாள். அதன் அடிப்படையே சிவசக்தி என்றும் அசையும் பொருள்கள் சக்தி – பெண்பால்; அசையாப் பொருள்கள் சிவம் – ஆண்பால் என்றவள் பதிய வைத்தாள்.
மேலும் கற்றுத் தெளியவும், இலக்கணம் தாண்டிச் சரளமாய்ப் பேசவும் அவன் ஹிந்திப்படங்களைப் பார்க்க வேண்டும் என்றும் ஆனால் அவர்களையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அவள் ஒருமுறை வேடிக்கையாய்ச் சொல்ல, அவன் மாதம் ஒரு படமாவது அவர்களை அழைத்துச் செல்லத் தொடங்கினான்.
படம் பார்த்துத் திரும்புகையில் மாடிப்பேருந்தில் அப்படப்பாடல்களை அவர்கள் பாடிக் கொண்டே வருவார்கள். பெரும்பாலும் அவன் வெட்கித் தனித்திருப்பான். இல்லை வரிகளுக்கான பொருளைக் கேட்டுக் கொள்வான்.
அப்படித்தான் ஒருமுறை Manzil Manzil – என்ற படம் பார்த்துத் திரும்புகையில் அவர்கள் ‘ஓ மேரி ஜான்’ என்று பிரபலமாகியிருந்த பாடலைக் கும்பலாய்ப் பாடத் தொடங்க இடையில் ‘ஜிஸ்தின்ஸே தேகா யாரா துஜே மன்ஸில் மன்ஸில் புகாரா துஜே’ என்றவன் அடியெடுக்க ‘வாஹ்ரே வா காயக்’ என்று வாழ்த்தி அவனை முதன்முறையாய் அங்கீகரித்தனர். ராஜ்ஸ்ரீ மட்டும் அமைதியாய் அவனை நேரே உற்றுப் பார்த்துத் தலைகவிழ்ந்து கொண்டது ஏதோ உறுத்துதலைத் தந்தது.

oOo

அந்த அடுக்ககத்தின் நடுவே பெரிய முற்றம் போலிருந்த பகுதியில் சில மாலைப் பொழுதுகளில் அரட்டை ஓய்ந்தபின்னர் இளைஞர்கள் கூட்டம் பாட்டுக் கச்சேரி நடத்துவது வழக்கமாயிருந்தது. பெரும்பாலும் திரையிசை. சில சமயங்களில் பெரியவர்களும் சேர்ந்து கொள்வர். ராஜ்ஸ்ரீயின் அப்பா நன்றாகப் பாடுவார்.
ஒரு முழுநிலவு நாளன்று நிலவுப்பாடல்களைப் பாடலாம் என்று முடிவாக ராஜ்ஸ்ரீயும் தோழிகளும் எல்லோர்க்கும் அழைப்பு விடுத்தனர். அவன் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற பாடலைத் தேர்ந்து சொல்ல ஏதாவதொரு ஹிந்திப்பாடலைப் பாடச் சொன்னாள் ராஜ்ஸ்ரீ.
யோசித்து அவனுக்கு மிகப்படித்த சித்சோர் படப்பாடலான ‘து ஜோ மேரே சுர் மே சுர் மிலாலே சங்க் கா லே’ என்ற பாடலைப் பாடுவதாய்ச் சொல்ல, அவனுடன் மணிஷா என்ற குஜராத்திப் பெண் சேர்ந்து பாடுவதாய் முடிவாக அவர்கள் சேர்ந்து சிலமுறை பாடிப்பார்த்தனர். கடினமான சாஸ்த்ரியபாணிப் பாடலது.

ராஜ்ஸ்ரீயின் அம்மாவும் அப்பாவும் ‘சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ’ என்ற பாடலை அற்புதமாகப் பாடிமுடிக்க தொடந்து கிருஷ்ணா ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ என்று உருக்கமாய்ப் பாடினான்.
அவனுடன் சேர்ந்து பாடுவதாயிருந்த மணிஷா அடுத்து இன்னொரு இளைஞனுடன் சேர்ந்து ‘ஆஜா சனம் மதுரசாந்தினி மே ஹம்’ என்று பாடத் தொடங்க, அருகில் அமர்ந்திருந்த ராஜ்ஸ்ரீ அவனுடன் தான் சேர்ந்து பாடுவதாகக் கிசுகிசுத்தாள். இது ஏதோ சரியில்லையே என்று அவனுக்குப் படபடப்பாயிருந்தாலும் அடுத்து அவளுடன் சேர்ந்து தன்னை மறந்து பாடத் தொடங்கினான்.
அந்தப்பாடலில் வரும் ‘சாந்தினி ராத்தோ மே ஹாத் லியே ஹாத்தோமே தூபேரஹேங் ஏக் தூஸ்ரேகி ரஸ்பரி பாத்தோமே’ (நிலவிரவில் கைகோத்து ரசம்ததும்பும் சுவைப்பேச்சினில் மூழ்கியிருப்போமே) என்ற வரியே அவனுக்குக் கிறக்கமானது. கைதட்டல்களூடே பாடிமுடிக்க ராஜ்ஸ்ரீயின் அம்மா முதலில் வந்து பாராட்டினார்.
இது நிகழ்ந்த சில தினங்களில் ஓரிரவு அவனும் கிருஷ்ணாவும் வழக்கம்போல் சண்முகானந்தா ஹால் பகுதியிலிருந்த மெஸ் ஒன்றுக்குச் சாப்பிடப் போகையில் ‘எப்படா பத்திரிகை கொடுக்கப்போற மச்சான்’ என்றான் கிருஷ்ணா. என்னடா பத்திரிகை என்று அதிர்ந்து கேட்க ‘உன் கல்யாண மஞ்சப்பத்திரிகைடா. உனக்கும் ராஜ்ஸ்ரீக்கும் நல்ல பொருத்தம்னு அவங்கம்மா சொல்லிக்கிட்டே இருக்காங்களே தெரியாதா. இன்னிக்கு உன் வீட்டு அட்ரஸ் கேட்டிருக்காங்க. சென்னைக்கே போய் உங்க வீட்ல பேசப்போறதா சொன்னாங்க. கொடுத்து வெச்சவன்டா நீ’ என்றான் சிரித்துக்கொண்டே.

oOo

தன் விருப்பத்தைக் கேட்காமல் ராஜ்ஸ்ரீயின் அம்மா இப்படி முனைந்திருக்கும் திட்டம் மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மெஸ்ஸிலிருந்து திரும்புகையில் இவனும் இதற்கு உடந்தையாய்ப் பேசுகிறானே என்று வழியெல்லாம் கிருஷ்ணாவைத் திட்டித் தீர்த்தான்.
‘ஏண்டா அந்தம்மாவுக்குதான் அறிவில்லாம என் அட்ரஸைக் கேட்டா நீ கொடுப்பியா? இது என்ன கல்யாணம் கட்டுற வயசாடா எனக்கு? இன்னும் வாழ்க்கைல சாதிக்க வேண்டிய எவ்ளோ இருக்கு.. அந்தப்பொண்ணோ தேர்ட் இயர் படிச்சுட்டிருக்கிற சின்னப்பொண்ணு.. 18 வயசிருக்குமாடா அவளுக்கு? அவ மனசில இப்படி ஆசையத் தூண்டி.. கொடுமடா.. நான் வேற மேல படிக்கணும்னு இருக்கன்..’ என்றவன் புலம்பிக் கொண்டே வர, கிருஷ்ணமூர்த்தி ‘சரிடா இதுக்கு மேல உன் இஷ்டம். ராஜ்ஸ்ரீ ரொம்ப நல்ல பொண்ணுடா. அவங்களே ஆசைப்பட்டு உன்னை மாப்ளையாக்க வந்தா உனக்கு ஏத்தமாப் போச்சு. நான்லாம் ரொம்பநாள் தேடி பொண்ணு கிடைக்காம அவஸ்தைப்பட்டு கல்யாணம் பண்ணவன்ற முறைல மனசுல பட்டதச் சொன்னன்’ என்றவன் அவர்கள் வீடு திரும்பிய இரண்டாம் நிமிடம் ராஜ்ஸ்ரீயின் அப்பாவைக் கூட்டி வந்தான்.
‘அங்கிள், இவனுக்கு இப்ப கல்யாணத்துல இஷ்டமில்லன்னு சொல்றான். இதுக்குமேல நீங்களே பேசிக்கிங்க’ என்று சொல்லிக் கடுப்புடன் வெளியே போய்விட்டான்.
அவன் என்ன சொல்வதென்று திகைத்துப்பின் சுதாரித்து கிருஷ்ணாவிடம் சொன்ன காரணங்களையே திக்கித்திணறி சொல்லி முடித்தான். ராஜ்ஸ்ரீயின் அப்பா எவ்வித முகமாற்றமுமின்றிக் கேட்டுவிட்டு உரக்கச் சிரித்ததும்தான் அவனுக்கு உயிர்வந்தது.
‘நானும் நீங்க சொன்னததான் சொல்லிட்டிருந்தன். She is too young to marry. அவ அம்மாவுக்குதான் என்னவோ அவசரம். Its ok. நான் சொல்லிக்கிறன். நீங்க டென்ஷன் ஆகாதீங்க’ என்றார். எழுந்து நின்று, ‘இப்ப இல்லன்ன என்ன. நீங்க எங்க போய்டப் போறீங்க. நாங்க எங்க போகப் போறோம், மெதுவாப் பாத்துக்கலாம்’ என்றவர் சொல்லிப்போக மீண்டும் அவனுக்குக் காய்ச்சல் வரும் போலிருந்தது.

oOo

பின்னர் அவன் அண்டாப்ஹில்லில் இருந்தவரை அவர்கள் வீட்டுப்பக்கம் போவதையே தவிர்த்திருந்தான். ராஜ்ஸ்ரீயும் எப்போதாவது கண்ணில்படும்போது ஹை என்று சோகமாய்ச் சிரிப்புதிர்த்துக் கடந்து போவதும், அவள் தோழிகளும் அவனைப் புறக்கணிப்பதும் அவன் துக்கத்தை மேலும் அதிகரிக்க வைத்தது.
முன்பே அவனுக்கு ஒர்லியில் அவன் நிறுவனத்தின் குடியிருப்பிலேயே வீடு ஒதுக்கப்பட்டிருந்தாலும் பழகிய சூழலையும், அருகாமை தென்னிந்திய உணவகங்களையும் கருதி அதுவரை போகாமல் இருந்தான். இடையில் கிருஷ்ணாவின் மனைவி சென்னையிலிருந்து மாற்றலாகி மும்பைக்கு வரப்போகும் செய்திவர, நீ இனிமே உன் ஃபேமிலியோட இங்கய இருந்துக்கடா என்று சொல்லிவிட்டு திடீரென்று ஒருநாள் அவன் பெட்டி படுக்கையைத் திரட்டிக் கொண்டு ஒர்லிக்கு இடம் மாறிப்போனான்.
சின்னாளில் அவனுடன் பணிபுரிந்த மார்வாடிகளும், மராத்தியரும், பீஹாரிகளும், பெங்காலிகளும் அவன் உறவாகிப் போயினர். அங்குதான் அவன் ஒரு சிவராத்திரியன்று பாங் என்ற அதிபோதை பானத்தை முதலில் ருசிபார்த்ததும். பகாசுரப்பசியில் உண்டுவந்து சுருண்டுறங்கிய ஞாபகம். உடல் என்ற கிளிக்கூண்டை விட்டு உலகைச் சுற்றிவந்த அற்புத அனுபவத்தை அடுத்தநாள் கிருஷ்ணாவிடம் தொலைபேசிப் பகிர்ந்து கொண்டபோது அன்றுமாலை மனைவியுடன் அவனைப் பார்க்க வருவதாய்ச் சொன்னான் கிருஷ்ணா.
பணிமுடித்துத் திரும்பியவன் குளித்துவந்து உடை மாற்றுகையில் சத்தம் கேட்டு கதவைத் திறந்தால் கிருஷ்ணா, அவன் மனைவி, பின்னால் ராஜ்ஸ்ரீயா இது!
முதன்முதலாய் அவளைப் புடவையில் அடையாளமே தெரியவில்லை. மூக்குத்தியும் புதிதாய் இருந்தது. உள் அறையில் அவர்களை உட்காரச் சொல்லிவிட்டுவந்த கிருஷ்ணா ‘ஏண்டா நாயே இதுக்குதான் தனியா இங்க ஓடிவந்தியா’ என்று காதோரம் கடிந்து சொல்ல ‘இல்லடா அது சும்மா பிரசாதமின்னு சாப்டதுடா. விட்றா இனிமே சாப்பிடல. இவள ஏண்டா கூட்டி வந்தே’ என்று சொல்லி அறைக்குள் அமர்ந்திருந்த ராஜ்ஸ்ரீயை மீண்டும் பிரமித்து நோக்கினான். கிருஷ்ணாவின் மனைவி அவன் பார்வையைப் புரிந்தவள்போல், ‘ராஜ்ஸ்ரீ புடவை கட்டினா ஸ்மிதா படீல் மாதிரியே இருக்கா இல்ல’ என்றாள்.
அவனுக்கு ஸ்மிதாவைப் பிடிக்காது என்று தெரிந்த கிருஷ்ணா எங்கே சொல்லிவிடப் போகிறானோ என்று பதைப்புடன் பார்க்க முகம் திருப்பிச் சிரித்திருந்தான் கிருஷ்ணா.
அவன் வீட்டருகில் நடைதூரத்திலிருந்த சிவன் கோயிலுக்கு அவர்களை அழைத்துப் போனான். பாண்டுரங் மார்க்கில் தூர்தர்ஷன் நிலையம் கடந்து, அன்னிபெஸன்ட் நெடுஞ்சாலையில் க்ளாக்ஸோ கம்பெனி எதிரே ஒர்லி கடற்கரைப்பக்கம் உள்ளடங்கிய சோலைக்குள் கேதாரேஸ்வர் மஹாதேவாலயம் என்ற எழில்மிகுந்த ஆலயம் அது.
ஜெய்போலேநாத் என்று ஒரு குஜராத்திக்கூட்டம் சிவலிங்கத்தைக் கட்டித்தழுவி வணங்கிப் போக ஆலயத்தில் வேறு அரவமில்லை. வெளியே வந்து அவனையும் ராஜ்ஸ்ரீயையும் தனியே விட்டு தள்ளிப்போய் கிருஷ்ணா மனைவியுடன் ஏதோ கதைத்திருந்தான்.
பவழமல்லி மரத்தடியில் சற்றுமுன் பெய்த தூறலில் லேசாய் நனைந்திருந்த மேடை மீது அவன் அமர ராஜ்ஸ்ரீ எதிரில் நின்றாள்.
கோயில் சுவரில் வரைந்திருந்த மயங்கிக்கிடக்கும் சிவத்தின்மீது காலை வைத்து அகோரமாய் நாக்கைத் துருத்தி நின்றிருந்த காளியின் படத்தைப் பார்த்திருந்தான் அவன்.
சொல்ல நினைத்த சொற்களெல்லாம் சுருண்டு பந்தாகி நெஞ்சை அடைக்க ‘ஸாரிமா’ என்றான்.
எதுக்கு ஸாரி. எங்க அம்மா மேலதான் தப்பு..
இல்ல. அதுக்குள்ள கல்யாணம் அது இதுன்னு ஆரம்பிச்சு பயமாயிருச்சு..
உங்களுக்கு பயமா.. உண்மைல என்ன காரணம்னு எனக்குத் தெரியும் என்றாள்.
நிமிர்ந்தவள் கண்களை நேராய்ப் பார்த்தான்.
மையிட்டிருந்தாள்.
மாலை வெளிச்சத்தில் கருவிழியோரம் ஈரம் பளபளத்தது.
‘என்னுள் கசியும் அன்பையே குழைத்து நீ கண்களில் தீட்டி வருவாயோடி’
‘மேரி ப்ரீத்கா காஜல் தும் அப்னே நயனோமே மலே ஆனா’ – என்று எத்தனையோ முறை பொருள் விளங்காமலும் விளங்கியும் பாடிய வரி அவன்முன் உயிர்பெற்று நிற்பதைக் கண்டான்.

அவன் நேர்ப்பார்வையில் நாணித்திரும்பி ‘எனக்குத் தெரியும்’ என்று மீண்டும் முணுமுணுத்தாள் அவள்.
என்ன தெரியும் உனக்கு?
I know.. You were never interested in me..
என்றவள் மெல்லத்தான் சொன்னாலும் அது சாட்டையடியாய் அவனைத் தாக்கியது.
அவனை விடலைச்சிறுவனாக்கிக் கனிந்து முதிர்ந்து நிற்கும் பெண்மையின் பேரழகின்முன் கூசிக்குறுகி நின்றான் ஒருகணம்.
அடுத்த கணம், கைப்பிடியில் அடங்கும் போலிருந்த அந்தக் கொடியிடையாளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

oOo

0 Replies to “காதலாகி…”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.