கவிதைகள்

பூனைச் சொப்பனம்

எண்ணெய்ப்புகை காரம் இழுத்து
வெளியெறியும் மின் போக்கிவழி
கரேலென்று உள்நுழைந்து
தொலைக்காட்சி அட்டைமேல்
சுருண்டு துயிலும் அது.
தடைப்பட்ட மின்சாரம் வேர்வையூற்ற
சமையலறை இருளில்
தாகமடக்க நீர்விழுங்கி
மல்லாந்திருக்கும் போது
பரணில் மின்னும் இரட்டை வைரம்
படபடவெனப் பதட்டமூட்டும்.
என்னசைவு கண்டு வெருண்டு
உருண்டு புரண்டு அட்டை சரசரக்க
மின் இறகசைத்து நுழைந்து
வெளிப்பறக்கும் கருமூட்டையாய் அது.
வரவு தடுக்க வெண்குழல் எரித்தும்
வந்த மின்சாரம் பிடித்து விசிறியசைத்தும்
விழித்து விழித்து நான் காணும் சொப்பனத்தில்
எத்தனையோ கடவு தாண்டியும்
பதுங்கிப் பதுங்கி இருக்குமந்த கறுப்புப் பூனை
– தேனம்மை லெக்ஷ்மணன்

oOo

இப்போதெல்லாம் . . .

இப்போதெல்லாம்
நிறைய வாசிக்கிறேன்
நிறைய எழுதுகிறேன்
நண்பர்களுடன், குடும்பத்தாருடன்
நிறைய நேரம் செலவிடுகிறேன்.

நிறைய புதிய முகங்கள் பார்க்கிறேன்
நிறைய புதிய குரல்கள் கேட்கிறேன்
நான் வசிக்கும் அதே தெருவின் கடைக்கோடிவீட்டின்
ஹார்மோனிய இசைவகுப்புகளின் ஸ்வரவரிசைகள்
என் காதுகளில் விழுகின்றன.

Sticky_Notes_Facebook_Walls_Posts_Social_Media_No_Time_Busy_Todo_Calendar_Life

கேபிள் டிவிக்காரர்
பால்காரர்
தபால்காரர்
இஸ்திரிக்கு துணி வாங்க வரும் இளைஞன்
இவர்களை குசலம் விசாரிக்கிறேன்

பண்பலை அல்லாத வானொலியில்
தேடிப் பிடித்து சங்கீதம் கேட்கிறேன்
பத்மராஜனின் திரைப்படங்களை
மீண்டும் பார்க்கத் துவங்கியிருக்கிறேன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு
நெஞ்சிலாடும் பூ ஒன்று
ஈரவிழிக்காவியங்கள்
மணிப்பூர் மாமியார்
படப்பாடல்களை
ஒலிக்கவிட்டு ரசிக்கிறேன்.

மகன் எந்த வகுப்பில் படிக்கிறான்
என்கிற கேள்விக்கு யோசிக்காமல்
பதில் சொல்கிறேன்.
முதுகுக்குப் பின்னால் மட்டுமே
உணர்ந்து பழகியிருந்த
மனைவின் கோபப்பார்வையை
இப்போது நேருக்கு நேராக
எதிர்கொண்டு தலைகுனிகிறேன்.

நட்சத்திரங்கள், நிலா பார்க்கிறேன்
செவ்வானத்தில் வெள்ளைப் பறவைக் கூட்டத்தைப் பார்த்து
பால்ய நினைவு திரும்பி
கொக்கே கொக்கே பூ போடு என்று
கைகள் நீட்டிச் சிரிக்கிறேன்

எப்போதும் கட்டிப் போடப்பட்டிருக்கும்
மாடிவீட்டு லாப்ரடார் டாமியை
அவிழ்த்து விட்டு,
ஓடிப்பிடித்து விளையாடுகிறேன்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக
இப்போதெல்லாம்
ஒருநாளைக்கு
ஒரே ஒரு முறைதான்
என் கைபேசிக்கு மின்னூட்டுகிறேன்.

ஆம்.
நான் என் முகநூல் கணக்கை
முடக்கிவிட்டேன்.

– சுகா

oOo

இருப்பதிலேயே கடினமானது

ஒரே பானத்தை
பலமணி வரும்படி
மெதுவாக
அருந்தவேண்டும்.
வாதத்தில் பிழை சுட்டல்
ஆகாது
கோபத்தில் எதிராளியை
அறையவும் முடியாது
ஒருபோதும்.
பண்பற்றது
இருவர் மேசையில்
ஒருவர் உண்பது.
நொறுக்குத்தீனியால்
பசியை அணைத்தபடி
சொல்லாடல் முழுதையும்
கேட்க வேண்டும்
கதவுகள் அடைத்த குறுகிய தெருவின் –
ஈசல் மொய்த்த விளக்கின் நிழலில்
விருப்புத்தீர குரைக்க காத்திருக்கும்
நாய்களின் நடுவில்
இன்னொரு உடலையும்
சுமந்தபடி செல்ல வேண்டும்
அழைப்புமணி அழுத்தி
யாரவது வரும்வரையும்
வந்தபின்னும்
கூனிக்குறுகி
குற்றம் இழைத்ததுபோல்
நிற்க வேண்டும்
ஒருவழியாய்
உடலை கையளித்து
அறைந்துமூடும் கதவின்முன்
புன்னகையை வரவழைத்து
படியிறங்கி வரவேண்டும்
வீடு திரும்பியபின்
நண்பனின் கையறுநிலையின்
கசப்பு தீர
நள்ளிரவில் குளிக்க வேண்டும்
தூக்கமின்றி புரண்ட
பின்னிரவின் காலையில்
முன்னதாக எழுந்து
அவன் வாந்தியின் வாடை போக
ஆடைகளை
துவைக்கவேண்டும்
மறுநாளும் அதேபோல
தொலைபேசி அழைக்கையில்
மறக்காமல் பணம் எடுத்து
விரைந்து உடன்செல்ல வேண்டும்.
குடிகாரனின் நண்பனாக இருப்பது
குடிகாரனாக இருப்பதை விட
கடினமானது.
இன்றின் வரஇயலாமையை
ஏதாவதொரு பொய்சொல்லி
எப்படியாவது நிறுவி விடலாம்தான்.
இன்றிரவு
அவன் உடலை
அவன் வீட்டில்
வேறு யார் கையளிப்பார்?
வேணுகோபால் தயாநிதி

0 Replies to “கவிதைகள்”

  1. ஆம்.
    நான் என் முகநூல் கணக்கை
    முடக்கிவிட்டேன்.
    பல இணைய புரட்சிகளில், போராட்டங்களில் பங்கு கொள்ளும்
    வாய்ப்பு , வேடிக்கை பார்க்கும் வாய்ப்பை இழந்து விட்டீர்களே (விட்டோமோ)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.