ராய் மாக்ஸம் நேர்காணல்

FullSizeRender

(ரா.கிரிதரன், கேஷவ், பிரபு.ஆர், சிவா கிருஷ்ணமூர்த்தி, முத்து கிருஷ்ணன்)

“என்ன உங்க குரூப்பில் பெண்கள் கிடையாதா? இதே கேரளா இலக்கிய நிகழ்வுன்னா நிறைய பெண்கள் வந்திருப்பார்கள் இல்லையா? ” என, சந்தித்த முதல் சில நொடிகளிலேயே ஆரம்பத் தடைகளை உடைத்தார் எழுத்தாளர் ராய் மாக்ஸம் என்றால் சுவாரஸ்யத்துக்காகத் தொடங்கிய வரிகள் போலிருக்கும். ஆனால் அதுதான் நடந்தது. குளிர் கால லண்டனில் அபூர்வமாக அமையும் நறுக் வெயில் கூடிய ஞாயிற்றுக்கிழமை. மார்லபோர்ன் பகுதியிலிருந்த அடுக்குக்கட்டிடத்தில் டெர்ரி அறை நேர்காணலுக்காக பதிவு செய்யப்பட்டிருந்தது. குழப்பமில்லாது கிடைத்த கார் நிறுத்துமிடங்களும், சரியான எண்ணிக்கையில் சேர்ந்த கூட்டமும், முடிவு செய்யப்பட்டிருந்த நேரத்தில் துவங்கிய சந்திப்பும், சோம்பல் போர்த்தியிருந்த ஞாயிறு காலையில் நடக்கும் கனவோ எனும் மயக்கத்தை உண்டு செய்தது.

“நிஜமாகவே பேட்டி தான் எடுக்கப்போகிறீர்களா?”, என இரண்டு முறை கேட்டு ஊர்ஜிதம் செய்து கொண்ட ராய் தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார். இயல்பாக விழுந்த கூன், சற்றே தளர்ந்த நடை, பேசும்போது தொண்டையில் ஆடும் சதை என எழுபது வயது கடந்த அடையாளங்கள். அவரது கண்களின் கூர்மைக்கு வயதில்லை. கேட்கும் சக்திக்குக் குறைவில்லை. 1960கள் முதல் பல நாடுகளில் வேலை செய்த அனுபவங்களைப் பிசிறில்லாமல் நினைவு வைத்திருக்கும் ஞாபக சக்தி.

ஜெயமோகன் எழுதிய “உலகின் மிகப் பெரிய வேலி” கட்டுரை வழியாக அறிமுகமான ராய் மாக்ஸம் எழுதிய புத்தகங்கள் சிலவற்றை நாங்கள் படித்திருந்தோம். பயணக்கட்டுரைகள் போலத் தோற்றமளிக்கும் அவரது தேடல் அனுபவங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்படாத பக்கங்களுக்கான ஆவணங்களாகவும் இருக்கின்றன. The Great Hedge of India, Outlaw: India’s Bandit Queen and Me,  A Brief History of Tea போன்ற அபுனைவு புத்தகங்களும், The East India Company Wife எனும் நாவலும் எழுதியுள்ளார்.

வரலாற்று நூல்களை எழுதியவராக அறியப்பட்ட ராய் மாக்ஸம், பலவேறு துறைகளில் வேலை செய்துள்ளார். ஆப்ரிக்காவில் தேயிலைத் தோட்டங்களில் வேளாண்மை நிபுணராகவும், ஆப்ரிக்கக் கலைப் பொருட்கள் விற்பனை செய்வதும் , புத்தகங்களைக் கோர்க்கும் பணியிலும், பழைய புத்தகங்களை அழிவிலிருந்து மீட்டுருவாக்கம் செய்வதும் எனத் தொடர்பற்ற பல துறைகளில்  இருந்துள்ளார்.  கிழக்கிந்திய கம்பெனியின் ஊழல்களைப் பற்றியும், பின் காலனிய உலகங்களில் நடக்கும் சுரண்டல் பற்றியும் புத்தகங்கள் எழுதியுள்ளார். இந்தியாவில் பூலான் தேவியோடு பயணம் செய்த அனுபவம் பற்றியும் , அவரோடு நண்பராக இருந்த நாட்களைப் பற்றியும் எங்கள் சந்திப்பில் மிகவும் சுவாரஸ்யமாகப் பேசினார்.

1960களில் ஆப்ரிக்காவுக்குச் செல்லும்வரை ஷேக்ஸ்பியரின் சொந்த ஊரான ஸ்டிராட்ஃபோர்ட் அப்பான் ஏவனிலும்,greathedge லண்டனிலும் படிப்பை முடித்திருந்த ராய் மாக்ஸம் இளமையில் எதிர்காலத்திட்டங்கள் பெரியதாக வைத்திருக்கவில்லை. ஆப்ரிக்காவின் நிலப்பகுதியைப் பற்றிப் படித்ததினால் அதில் ஆர்வம் வந்து மூன்று வருட தற்காலிக வேலையை ஏற்றுக்கொண்டார். அங்கு ஒரு ஆங்கிலத் தனியார் நிறுவனத்துக்காக வேலை செய்திருந்தபோது உலகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த மக்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக, குஜராத்திகளோடும் தமிழர்களோடும் வேலை விஷயமாகப் பழகியுள்ளார். இந்தியாவைப் பற்றி ஓரளவு சித்திரம் கிடைத்தாலும், இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் எனத் துளியளவு கூட எண்ணம் உருவாகவில்லை என்கிறார். அவருக்குத் தனிப்பட்ட வகையில் கிடைத்த சில கசப்பனுபவங்கள் கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

எந்த ஊருக்குச் சென்றாலும் தன் துறை சார்ந்த மக்களோடு மட்டும் பழகாமல், நிறைய பயணங்கள் செய்து ஊர் மக்களோடு பழகுவது, அங்கிருக்கும் அரசியல் நிலவரங்களைத் தெரிந்துகொள்வது, ஊரின் பிரத்யேக உணவுகளைப் பழகிக்கொள்வது போன்றவை ராயின் பழக்கமாக இருந்திருக்கின்றன. கலைப்பொருட்கள் விற்பதற்காகப் பல வருடங்கள் ஆப்ரிக்காவில் பயணம் செய்தார் ராய். மூன்றாம் உலக நாடுகளின் நிலவரங்கள், அடிமை முறைகளைப் பற்றிய நடைமுறைச் சிக்கல்களை அவர் இங்குதான் அறிந்துகொண்டார்.

இந்தியாவைப் பற்றியும் இந்தியர்களைப் பற்றியும் அதிகம் கேள்விப்படாதவர், அவற்றைப் பற்றி புத்தகம் எழுதும் அளவுக்கு மாறியது எப்படி?

***   ***  ***

கேள்வி – எங்களுடைய நேர்காணலுக்கு வர சம்மதித்ததுக்கு நன்றி ராய் மாக்ஸம். உங்கள் குடும்பப் பின்னணி, வளர்ப்புச் சூழல் பற்றி சொல்லுங்களேன்.

OLYMPUS DIGITAL CAMERA நான் பிறந்து வளர்ந்தது ஷேக்ஸ்பியர் பிறந்த ஸ்டிராட்ஃபோர்ட் அபான் ஏவன் நகரிலிருந்து பதினைந்து மைல்கள் தள்ளியிருக்கும் எவிஷாம் எனும் சிறு ஊர். எவிஷாம் அரசுப்பள்ளியில் ஆரம்பப்படிப்பும், பின்னர் அதே ஊரில் கிராமர் ஸ்கூலிலும் படித்தேன். எனது பத்தாவது வயதில் என் அப்பா இறந்துவிட்டார். சிறுவயது முதலே நான் மண்ணுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தேன். தோட்டம் போடுவது, செடிகள், மரங்கள் நடுவது என இயற்கையோடு இயைந்து வளர்ந்தேன். எவிஷாம் மாதிரியான சிற்றூர்களில் வாழும் பலரும் இப்படித்தான் இருந்தனர். இப்போது இந்த வேலைகளைச் செய்ய கிழக்கு ஐரோப்பியர்கள் வந்துவிட்டனர்.

வேதியல் பாடத்தில் சிறுவயது முதல் ஆர்வம் இருந்ததால் கல்லூரியிலும் வேதியல் துறையில் படிக்க விரும்பினேன். அதே சமயம் என் அம்மாவுக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. ஒரு வருடம் எங்காவது சென்று படிக்க வேண்டும்; அதற்கு பணம் வேண்டும் என்பதால் லண்டனில் இருந்த ஷெல் நிறுவனத்துக்கு வேலை கேட்டு எழுதினேன். இன்று போலல்ல, உடனடியாக வேலைக்கு வரச்சொல்லிவிட்டனர்! இந்த காலம் போலல்ல. அங்கு வேலை செய்து பணம் சேர்த்ததும் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் ‘வேளாண்மை வேதியல்’ துறையில் படிப்பதற்குச் சேர்ந்தேன். வேளாண்மை சார்ந்த படிப்பு என்பதால் ஹார்ட்ஃபோர்ட்ஷையர் பகுதியில் இருந்த பழப்பண்ணையில் விவசாயம் கற்றுக்கொண்டு ஒரு வருடம் வேலை பார்த்தேன். வடமேற்கு இந்தியாவின் கடைசி கவர்னராக இருந்த சர்.ஜேம்ஸ் அட்சர்சன் தான் அந்த பண்ணையின் முதலாளியாக இருந்தவர். அவர் வழியாக எனக்கு ஆப்ரிக்கா மீது ஒரு பிடிப்பு உண்டானது. அதுவரை எனது குடும்பத்திலோ, நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் யாருமே ஆப்ரிக்கா சென்றதில்லை.

அதே சமயம், ஷெல் நிறுவனத்திலிருந்து படிப்புக்காக உதவித்தொகை தரத்தயாராக இருந்தனர். நான் வேலை செய்துவந்த பண்ணையிலும் புது வேலைக்கு உதவுவதாகச் சொல்லியிருந்தனர். இந்த காலம் போலில்லாது, அக்காலத்தில் பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கான தேவை அதிகமில்லை. சான்றிதழ் இல்லாமலும் வேலை கிடைத்துவிடும். அதனால் ஆப்ரிக்கா பற்றி அதிகமாகப் படிக்கத் தொடங்கினேன்.

அந்தக் காலத்தில், டைம்ஸ் பத்திரிக்கை முதல் பக்கம் முழுவதும் விளம்பரங்களாக மட்டுமே இருக்கும். தனிநபர்களும் விளம்பரம் கொடுப்பர். “ஆப்ரிக்காவில் வேளாண்மை துறையில் வேலை வேண்டும்” என நான் விளம்பரம் கொடுத்தேன். உடனடியாக ஒரு வேலை கிடைத்தது. அப்படித்தான் நான் ஆப்ரிக்கா சென்றேன்.

கேள்வி – எந்த வருடம் இது

 1960 என நினைக்கிறேன். ஆம், ஏனென்றால் 1961இல் நான் ஆப்ரிக்காவில் இருந்தேன்.

கேள்வி – இந்தியா, ஆப்ரிக்கா, சைனா என பல பிரதேசங்களைப் பற்றி புத்தகங்கள் எழுதியுள்ளீர்கள். உங்களுக்குச் சிறுவயது முதலே பயணத்தில் ஆர்வம் இருந்ததா?

OLYMPUS DIGITAL CAMERAஆம். அது அப்படித்தான். ஆனால் இக்காலத்தில் சொல்லப்படும் அர்த்தத்தில் நான் அதை சொல்ல மாட்டேன். 1960களில் பயணம் என்பது மிகவும் செலவு பிடிக்கும் விஷயம் மட்டுமல்ல, உத்திரவாதமில்லாததும் கூட. அதுவும் பலரும் கப்பலில் பயணம் செய்யும் ஆப்ரிக்காவுக்கு நான் விமானத்தில் சென்றேன். கிட்டத்தட்ட என் ஒன்பது மாதச் சம்பளப் பணத்தில் ஒருவழி விமான டிக்கெட். வேலை சரிவரப் போகவில்லை என்றால் திரும்பி வர இயலாது போகும். மூன்றரை வருட காண்டிராக்டுக்குப் பிறகு திரும்புவதற்கான விமானச்சீட்டும், ஆறு மாத விடுப்பும்கொடுப்பார்கள். ஆனால் அதுவும் உத்திரவாதமல்ல. அப்படித்தான் நான் மலாவி நாட்டுக்குச் சென்றேன்.

கேள்வி – அந்த காலத்தில் பயணம் செல்வது, குறிப்பாக கீழை நாடுகளுக்குச் செல்வது பிரபலமாக இருந்தது இல்லையா? தனிப்பட்ட முறையில் அப்பயணம் பற்றி உங்களுடைய எண்ணம் என்னவாக இருந்தது?

OLYMPUS DIGITAL CAMERAஆம் பல ஆங்கிலேயர்கள் பயணம் செய்தபடி இருந்தனர். எனக்கு அது ஒன்றும் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஏனென்றால் பள்ளி நாட்களில், நாங்கள் அதிகம் விரும்பிப் படித்தது Boy’s Own Paper எனும் பத்திரிகை. இப்போதும் வருகிறதா எனத் தெரியவில்லை. அதில் காலனிய நாடுகளுக்குப் பயணம் செய்த அனுபவங்களைப் பலரும் எழுதியிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு பயணமாகத்தான் எனக்கு இது தெரிந்தது என்றாலும் அதற்கும் மேலான பொறுப்புகள் எனக்கு வந்தன. நான் வேலை பார்த்த நிறுவனத்தின் ஏற்பாட்டின்படி நான் காலனியச் சமாதான இயக்கத்திற்காக மலாவியில் வேலை பார்த்தேன். நான்கு வருடங்களுக்குப் பிறகு மலாவிக்கு சுதந்தரம் கிடைத்துவிட்டது.

பல எழுத்தாளர்கள் தங்களது பயண அனுபவங்களை எழுதியுள்ளனர். சாமர்செட் மாம் எழுதிய பல சிறுகதைகள் அந்நிய தேசக் கதைகள் தான். அவற்றைப் படித்து வளரும் போது மிக இயல்பிலேயே பிற நாடுகளைப் பற்றிய ஆர்வம் தொற்றிக்கொள்ளும் என நினைக்கிறேன்.

கேள்வி – ஆப்ரிக்காவிலிருந்து இந்திய ஆர்வம் எப்படி வந்தது? குறிப்பாக, உலகின் மாபெரும் வேலி பற்றி எழுதக் காரணமென்ன? உங்கள் புத்தக முன்னுரையில் குறிப்பிட்டது போல யதேச்சையாக அமைந்த ஒன்றா?

OLYMPUS DIGITAL CAMERAநான் பதிமூன்று ஆண்டுகள் ஆப்ரிக்காவில் பணி புரிந்திருக்கேன். அங்கு இருந்த ஒரு நாள் கூட இந்தியாவுக்குச் சென்று பார்க்க வேண்டும் எனத் தோன்றியது கிடையாது. அத்தனை இந்தியர்களோடு பழகியிருந்தாலும் ஏனோ இந்தியா என்னைக் கவராத நாடாகவே இருந்தது.

ஆப்ரிக்காவில் இருந்த காலம் முழுவதும் ஒவ்வொரு நாட்டுக்கும் பயணம் செய்தேன். நான் போகாத ஆப்ரிக்க நாடுகளே இல்லை எனலாம். திடீரென மலாவியிலிருந்து நைஜீரியாவுக்கு ஒருவழிப்பயண சீட்டு வாங்கிச் செல்வேன். பின் அங்கிருந்து தரைவழியாகப் பல நாடுகள் கடந்து வருவேன். ஆப்ரிக்க கலைப்பொருட்கள் விற்பனையில் சில வருடங்கள் கழித்தேன். ஆனால் கோவன்ட் கார்டனில் பெரியளவு வருவாய் இல்லாததால் அதை விட்டு புத்தகங்கள் கோர்க்கும் பணிக்குள் நுழைந்தேன்.

இங்கிலாந்தில் கேம்பர்வெல் கலைக் கல்லூரியில் புத்தகங்களை அச்சுக்கோர்ப்பது, பழைய பிரதிகளை பாதுகாப்பது தொடர்பாகப் படித்தேன். என்னுடைய நாற்பதாவது வயதில் இந்த படிப்பை முடித்துப் புதுத் துறைக்குள் காலடி வைக்கத்தொடங்கினேன்! இதுவரை எந்த பல்கலைக்கழகங்களிலும் படிக்காவிட்டாலும், இங்கேயும் முழு உதவித்தொகை கிடைத்தது. அதுமட்டுமல்லாது, நாற்பது வயது கடந்துவிட்டதால் தங்குவதற்கான உதவிப்பணமும் 50 சதவிகிதம் கூட்டிக்கொடுத்தனர்.

இங்கிலாந்தில் பிறந்தவன், ஆனால் அந்நிய மண்ணில் மட்டுமே வாழ்ந்தவன் எனும் கெட்டபெயரை சம்பாதிக்க விரும்பவில்லை. சரி, பதின்மூன்று ஆண்டுகள் ஆப்ரிக்காவில் வாழ்ந்த பிறகு இனிமேல் இங்கிலாந்திலேயே இருந்தால் என்ன எனத் தோன்றியது. ஏதாவது செய்ய வேண்டுமே! அதனால் Freelander எனும் நாவலை எழுதினேன்.

கேள்வி – இந்தியாவுக்குப் போகவேண்டும் என எப்படி உங்களுக்குத் தோன்றியது?

பதில் – நான் ஆப்ரிக்காவில் இருந்தபோது பலரும் நீங்கள் இந்தியாவுக்குப் போக வேண்டும் எனச் சொல்வார்கள்.  நிச்சயமாக என்னால் இந்தியாவுக்குப் போக முடியாது எனத் தோன்றியது. பரந்து விரிந்த நிலப்பகுதியான ஆப்ரிக்காவில் நான் அப்போது மிக ரம்மியமாக வாழ்ந்து வந்தேன். ஒரு நாள் கிளிமஞ்சாரோ நிலத்தில் இருப்பேன், மற்றொரு நாள் வனப்பிரதேசத்தில் அலைந்துகொண்டிருப்பேன். இன்னுமொரு நாள் விலங்குகளைப் பார்த்துக்கொண்டிருப்பேன். வாழ்க்கையே ஒரு கோலாகலமாக இருந்தது. நெரிசலான ஒரு ஊருக்குச் சென்று வாழ்வதை என்னால் அப்போது நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

கேள்வி – நீங்கள் ஆப்ரிக்காவில் 1960களில் வாழ்ந்திருந்தீர்கள். 90களின் தொடக்கத்தில் தான் இந்தியாவுக்கு வந்தீர்கள். ஒரு வேளை 60களில் இந்தியாவுக்கு வந்திருந்தால் உங்களால் பரந்து விரிந்த நிலப்பரப்பை மும்பையின் மத்தியில் கூடப் பார்த்திருக்க முடியும். பறவைகளைப் பற்றிய அவரது புத்தகத்தில் மும்பாய் பாந்திரா பகுதியில் புலிகள் சுற்றிக்கொண்டிருக்கும் எனக் கூறுகிறார் சலீம் அலி.

OLYMPUS DIGITAL CAMERA(சிரிக்கிறார்) ஆமாம் இருக்கலாம். ஆனாலும் 60களின் இந்தியா ஆப்ரிக்கா போல காலியாக இருந்திருக்குமா எனச் சந்தேகமே. ஏனென்றால் கிப்ளிங் எழுதிய புத்தகங்களில் “கல்கத்தாவில் நள்ளிரவு” என அமானுஷ்யமாக எழுதியுள்ளார். ஆனால் கிப்ளிங் காலத்தால் இன்னும் முற்பட்டவர்.

உண்மையில்  நார்மன் லூயிஸ் எழுதிய ஒரு புத்தகக் குறிப்பிலிருந்துதான் எனக்கு இந்தியாவைப் பற்றி முதலில் ஒரு துளி ஆர்வம் வந்தது. அவர் கேரளப்பகுதிகள் கிழக்கு ஆப்ரிக்க கடலோரப்பகுதிகளை நினைவூட்டுவதாக எழுதியிருந்தார். உடனடியாக எனக்கு இந்தியாவைப் பார்க்க வேண்டும் என ஆர்வம் வந்தது. மும்பையில் இறங்கினேன்..(சிறு இடைவெளி)

கேள்வி – ஆமாம். பந்த் எனச் சொல்லி உங்களை ஆட்டோவில் அழைத்துச் சென்று தாராவிப் பகுதிகளை சுற்றிக்காட்டி ஏமாற்றிவிட்டதாக “The Great Hedge of India” புத்தகத்தில் எழுதியிருந்தீர்களே!

OLYMPUS DIGITAL CAMERAநீங்கள் அந்த புத்தகத்தில் படித்தது போலவே நடந்தது (சிரிக்கிறார்). இப்போது கூட காதரீன் போ எழுதிய “Behind the Beautiful Forevers” எனும் நாடகம் நேஷனல் அரங்கில் நடத்தப்பட்டதே. முழுவதும் மும்பாய் தாராவியில் நடப்பதாகச் சித்திரிக்கப்பட்ட நாடகம். கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒன்று. எனக்கு இந்தியாவில் இறங்கியதுமே இதுபோன்ற துன்பச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது (சிரிக்கிறார்). ஆனால் நல்லவேளையாக நான் மைசூர் போவதற்காக ரயிலில் முன்பதிவு செய்திருந்தேன். அதனால் தப்பித்தேன் (சிரிக்கிறார்). இந்தியா அத்தனை மோசமில்லை எனப் பிறகு தெரிந்தது.

கேள்வி – பெரு நகரத்தின் மத்தியில் இத்தனை சேரி  வேறெங்குமே கிடையாது என உங்கள் புத்தகத்தில் எழுதியிருந்தீர்கள். பாகிஸ்தானில் கூட இல்லை, இல்லியா? உங்கள் இந்திய அனுபவங்களுக்குப் போவதற்கு முன், ஆப்ரிக்காவில் கலைபொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் இருந்ததைப் பற்றிச் சொல்லுங்களேன்?

OLYMPUS DIGITAL CAMERAஆமாம், ஆப்ரிக்கக் கலைப்பொருட்களைக் கொண்டு வர்த்தகம் செய்துகொண்டிருந்தேன். ஆனால் அவை தொல்பொருட்களோ அரிதான பொருட்களோ அல்ல. பொதுவாகவே உலகில் பிற நாடுகளில் உள்ளவர்களுக்கு ஆப்ரிக்கக் கைவினைப்பொருட்கள் மீது ஒரு ஈடுபாடு உண்டு. ஆனால், அது பெரியளவு வளரவில்லை. நான் வேலை பார்த்து வந்த துறையான ஐரோப்பியத் தேயிலை வேளாண்மை வர்த்தகத்தில் வீழ்ச்சி அடையத்தொடங்கியது. மலாவிக்குச் சுதந்தரம் கிடைத்த நான்கு வருடங்களுக்குள் எங்களுக்கு பெரியளவு வாய்ப்புகள் கிடைக்காமல் போயின. அப்புறம் தான் ஐரோப்பிய குடிமக்களுக்கான பொற்காலம் ஆப்ரிக்காவில் முடிவுக்கு வருவது புரிந்தது. ஆனால் மலாவியில் இன்றும் என்னுடன் வேலை பார்த்த ஆங்கிலேயர்கள் இருக்கிறார்கள். ஆப்ரிக்காவில் மலாவியில் மட்டுமே அந்த அதிசயம் நிகழும். எங்களுக்கான எதிர்காலம் இல்லை எனத் தெரிந்ததும்  நான் அங்கிருந்து வெளியேறினேன்.

கேள்வி – நீங்கள் மலாவி சுதந்திரம் அடைந்தபோது அங்கிருந்ததாகச் சொன்னீர்கள். 1964 இல்லையா? பக்கத்து நாடான ஜிம்பாப்வே (அன்று ரொடீஷியா) அடுத்த 15 ஆண்டுகளுக்கு சுதந்திரம் அடைய விரும்பவில்லை இல்லையா? தங்களைத் தற்காத்துக்கொள்ள அது தேவை என நினைத்திருக்கலாம். உங்கள் அனுபவம் அங்கு எப்படி இருந்தது?

OLYMPUS DIGITAL CAMERAஅப்போது உள்நாட்டுக்கலவரங்கள் பலமாக இருந்தன. அதனால்தான் பல நவீன ஓவியங்களும், கைவினைப்பொருட்களும் பணக்காரக் குடும்பங்களின் சிதைவிலிருந்து விலைக்கு வந்தன. நான் கலைப்பொருட்கள் விற்பனை செய்யத்தொடங்கியதும் அதனால் தான். உண்மையைச் சொல்லப்போனால், நான் ரொடீஷியாவுக்கு குடிபெயர்ந்தேன். அதனால் இங்கிலாந்தில் செய்யவேண்டிய ராணுவச் சேவைகளைச் செய்யாமல் தப்பித்தேன். ரொடீஷியாவில் 4 மாதங்கள் சேவை செய்தால் போதும்.

கேள்வி – ஆப்ரிக்கத் தேயிலை நிறுவனங்களில் தமிழர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அல்லது இந்தியர்கள்?

பதில் – அவ்வளவாக இல்லை. தேயிலைத் தொழிற்சாலைகளில் பல பொறியாளர்களைப் பார்த்துள்ளேன். சிலர் தமிழர்கள், சிலர் சீக்கியர்கள், நிறைய ஷீசெல்ஸ் மக்கள் இருந்தனர். இந்தியர்கள் என்றாலும் அவர்கள் பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு வேலை செய்ய வந்தவர்கள். பொதுவாக அங்குதான் அவர்களைப் பார்க்க முடியும்.

கேள்வி – ஆமாம். பதினெட்டாம் நூற்றாண்டில் புதுச்சேரியிலிருந்தும் பல தமிழர்கள் மொர்ரீஷியஸ் தீவுகளுக்கு வேலை விஷயமாகச் சென்றுள்ளார்கள்.

பதில் – ஆம் பல மொர்ரீஷியஸ் மக்கள் ஆப்ரிக்க தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்தனர். ஆனால், பொறியியல் வேலைகளை இந்தியர்கள் செய்தனர். ஆட்களைக் கண்காணிப்பது ஆங்கிலேயர்களின் வேலை. மலாவியில் பல இந்தியர்கள் இருந்தனர். நாங்கள் ஹாக்கி குழு வைத்து விளையாடியிருக்கிறோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

கேள்வி – 1960களிலும் 1970களிலும் ஆப்ரிக்காவிலிருந்து பலர் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்துள்ளனர் இல்லையா? தொடர்ந்து இந்த இரு பகுதிகளில் மக்கள் இடம் பெயர்ந்துகொண்டே இருந்திருக்கிறார்கள். இல்லையா?

பதில் – ஆம். குறிப்பாக உகாண்டா, கென்யா பகுதிகளிலிருந்து பல இந்தியர்கள் இங்கிலாந்துக்கு வந்துவிட்டனர். சொல்லப்போனால், இந்தியர்களைப் பற்றி எனக்கு உயர்வான அபிப்பிராயம் வராமல் போன காலகட்டம் அது. அவர்கள் ஆப்ரிக்கர்களை தங்கள் சுயநலத்துக்காக அதிகமாகச் சுரண்டினார்கள். குறிப்பாக பணம் கொடுத்த வட்டிக்கடைக்காரத் தமிழர்களுக்கும் எங்கள் தோட்டத்தில் வேலை பார்த்த ஆங்கிலேயர்களுக்கும் எப்போதும் பிரச்சனை தான். நானே பல முறை தலையிட்டு எங்கள் தோட்டத்துக்காரர்களுக்கு நியாயம் வாங்கிக்கொடுத்திருக்கிறேன். ஒரு விஷயத்தை நாம் மிக திறந்த கண்ணோட்டத்தோடு அணுக வேண்டும் – உலகம் முழுவதும் வட்டிக்கடைத் தமிழர்களுக்கு நல்ல பெயர் கிடையாது. அதனாலேயே இந்தியாவுக்குச் செல்ல வேண்டிய உந்துதலும் இல்லை.

கேள்வி – பணம் கடன் கொடுத்தவர்களில் குஜராத்திகள் இல்லையா?

பதில் – ஓ, ஆமாம். குஜராத்திகளும் இருந்தனர். கவலைப்படவேண்டாம், எனக்கு அவர்கள் மீதும் நல்ல அபிப்ராயம் இல்லாமல் இருந்தது (சிரிக்கிறார்). ஆப்ரிக்காவில் அதிகம் இருந்தது சீக்கியர்களும், குஜராத்திகளும் தான்.

கேள்வி – எப்படி முதல் இந்தியப்பயணம் சாத்தியமாயிற்று? The Great Hedge of India புத்தகத்துக்கான ஆய்வுக்காகத்தான் போனீர்களா?

OLYMPUS DIGITAL CAMERAஇல்லை. என் முதல் இந்தியப்பயணம் மும்பாய் மற்றும் மைசூரோடு முடிந்தது. அங்கிருந்த சேரியும், பணமில்லாதவர்கள் நிலையும் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. இங்கிலாந்துக்கு வந்த பிறகு அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்ன செய்யலாம் என மனம் யோசனையில் ஆழ்ந்தது. பணம் அனுப்பலாம், ஆனால் அந்தளவு தொடர்ந்து அனுப்பும் சக்தி எனக்குக் கிடையாது. அப்போதுதான் இங்குள்ள செய்திகளில் பூலான் தேவி எனும் பெயர் பிரபலமானது. அப்போது எனக்கு அவரைப் பற்றி ஒன்றுமே தெரியாது.

முன்னாடியே செய்திகளில் அவரைப் பற்றி வந்திருக்கலாம்; என் கவனத்தை அப்போது கவரவில்லை. ஆனால் இந்தியாவுக்குச் சென்று வந்தபின் இச்செய்தியைப் பார்த்ததால், அவரது சிறைப் போராட்டம் என் கவனத்தைக் கவர்ந்தது. எட்டு ஆண்டுகள் ஜெயிலில் இருந்த பின்னர் விடுதலை செய்வார்கள் என அரசு கொடுத்த வாக்குறுதியை நம்பிச் சரண் அடைந்தவர் பூலான் தேவி. ஆனால் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் அவரை விடுதலை செய்யவில்லை. பொதுமக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் ஜெயிலிலிருந்து மந்திரி பதவிக்குப் போட்டி போடப்போவதாக அறிவித்தார். இரு சினிமா நடிகர்களை எதிர்த்துப் போட்டி போடப் போகிறார் என்பதால் கண்டிப்பாக ஜெயிக்கப்போவதில்லை என அவருக்கே தெரியும்.

இந்தியாவுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் எனக் குழம்பிக்கொண்டிருந்த நான், இந்த பரிதாபமான பெண்ணுக்கு உதவி செய்ய நினைத்தேன்.  அவர் பெயருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவருக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியாது என்பதால் பதில் வராது என நினைத்திருந்தேன். ஆச்சரியம். எனக்கு உடனடியாக பதில் வந்தது. அதன் பிறகு நாங்கள் தொடர்ந்து கடிதத்தொடர்பில் இருந்தோம். அவரது பதில்களிலெல்லாம் ஒரு பதற்றம் இருக்கும். உத்திர பிரதேசத்துக்குக் கொண்டு சென்று சுட்டுக் கொன்று விடுவார்கள் என நினைத்துப் பயந்திருந்தார்.

அதற்கு அடுத்த வருடம் பூலான் தேவியைச் சந்திப்பதற்காக ஜெயிலுக்குச் சென்றேன். எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் என் முயற்சியின் பயனாக அவரது குடும்பத்தைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது அம்மாவைச் சந்தித்தேன். என்னை அவர்களது சொந்த கிராமத்துக்கு அழைத்தார்கள். அடுத்த வருடம் போக வேண்டும் என நினைத்திருந்தேன்.

இங்கிலாந்துக்கு வந்த பிறகு ஒரு நாள் சாரிங் கிராஸிலிருக்கும் பழைய புத்தகக்கடைக்குச் சென்றிருந்தேன். தற்செயலாக அங்கு கிடைத்த புத்தகம் Ramblings and Recollections of an Indian official. இந்தியாவுக்குக் குறுக்காக சுங்கவரிக்கான வேலி போடப்பட்டிருந்தது என அந்த புத்தகத்தின் ஓர் அடிக்குறிப்பில் இருந்தது. அந்த சமயத்தில் நான் இந்தியாவைப் பற்றி நிறைய படிக்கத் தொடங்கியிருந்தேன். அதனால் ஆக்ஸ்போர்ட் , கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட இந்திய வரலாற்று நூல்களில் இதைப் பற்றித் தேடினேன். ஒரு வரி கூட இல்லை. பல ஆய்வுகளுக்குப் பிறகு இந்த வேலியைப் பாதுகாத்து வந்த பிரித்தானிய அதிகாரிகளின் ஆண்டு அறிக்கையின் மூலம் மேலும் சில விபரங்கள் கிடைத்தன. பழைய வரைபடங்களில் இந்த வேலியின் பாதையைப் பார்க்கும்போது அது உத்திரப் பிரதேசத்தில் உள்ள பூலான் தேவியின் கிராமத்தை ஒட்டிப்போவது தெரிந்தது. ஆஹா! இரு விஷயங்களை ஒரே நேரத்தில் முடித்துவிடலாமே என நினைத்தேன். எப்படியும் அந்த கிராமத்துக்குப் போகிறேன், அப்படியே இந்த வேலியைக் காட்டுங்கள் என்றால் கூட்டிச்செல்லப்போகிறார்கள் என நினைத்தேன். ஆனால், இந்த வேலி இல்லை என்ற விபரங்கள் எனக்குத் தெரியாது. மேலும் அவரது கிராமத்திலிருந்து வெளியே வேறு இடங்களுக்குச் செல்ல பல பாதுகாப்பு வளையங்களைக் கடக்க வேண்டும், அங்கிருப்பவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்ற விபரங்களை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. கிராமத்திலிருப்பவர்களுக்குத் தெரியாது எனவோ, அந்த வேலியே கூட அழிந்திருக்கும் எனவோ நான் அங்கு சேரும்வரை துளியளவும் எண்ணவில்லை. இப்படித்தான் என் பயணம் தொடங்கியது.

கேள்வி – அந்த வேலியைப் பற்றி ஒருவருக்கும் தெரியவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். கிழக்கையும் மேற்கையும் பிரித்து நின்ற இந்தப் பெரிய வேலி மக்களின் ஞாபகத்திலிருந்து முழுவதுமாக மறைந்துவிட்டதை நம்பவேமுடியவில்லை.

பதில் – ஆமாம். அதிசயம் தான். நான் புத்தகத்தை வெளியிட்டவுடன் பல கடிதங்கள் வருமென்று நினைத்தேன். ‘நான் ஏற்கனவே அதில் ஆய்வு செய்துவிட்டேன், இந்தா பார். அல்லது எங்களுக்கு இதெல்லாம் தெரியுமே,’ எனத் தொடர்புகொள்வார்கள் என நினைத்தேன். ஹூம். ஒருவர் கூட எனக்கும் இது தெரியுமே எனச் சொல்லவில்லை.

கேள்வி – வரலாற்றாசியர்கள் யாரேனும் உங்களைத் தொடர்பு கொண்டார்களா? இந்தியாவிலிருந்து, பிற நாடுகளிலிருந்து?

OLYMPUS DIGITAL CAMERAயாருமில்லை. ஏனென்றால் யாருக்குமே அப்படி ஒரு வேலி இருப்பது தெரியவில்லை. ஆனால் நாங்கள் அந்த புத்தகத்துக்காக நிறைய விளம்பரம் செய்தோம். பல இடங்களில் உரை நிகழ்த்தினேன். வானொலி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். அப்போது, ‘இந்த வேலியின் வரைபடத்தையோ புகைப்படத்தையோ யாரேனும் வைத்திருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்’ என டைம்ஸ் பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்தேன். ஒரு இத்தாலிய வரலாற்றாசியர் என்னைத் தொடர்பு கொண்டார். இந்த வேலியைப் பற்றிய ஒரு குறிப்பு “The Romanization of Roman Britain” எனும் புத்தகத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார். நான்காவது நூற்றாண்டு ஜெர்மனியில் ரோமன் ஆட்சியாளர்களால் இயற்றப்பட்ட  சுங்கவரி முறைகளைப் பற்றி, 1911 ஆம் ஆண்டு பிரான்FullSizeRender (1)சிஸ் ஹாவர்ஃபீல்ட் எனும் வரலாற்றாசிரியர் குறிப்பிடும்போது அது இந்தியாவிலிருந்த பெரிய வேலியை ஒத்திருந்ததாக எழுதியுள்ளார். இப்போது இங்கிலாந்தில் இருக்கும் ஹேட்ரியன் அகஸ்டஸ் அரசனின் நீண்ட சுவர் போல இருந்தது என்றும் குறிப்பிடுகிறார். இந்த புத்தகத்தை எழுதும்போது ஹாவர்ஃபீல்ட் இந்திய வேலியின் புகைப்படத்தைக் கைப்பற்ற பெரும் முயற்சிகள் எடுத்துள்ளார். அவருக்கு இருந்த தொடர்புகள் அளவுக்கு அதிகமானவை. இந்திய சிவில் சர்வீஸஸ் தேர்வில் வென்றவர்கள் ஆய்வுக்காக இந்தியாவில் இருப்பவர்கள் என இவருக்குப் பல மாணவர்கள் இருந்தனர். அவர்களுடைய படிப்பும் ஆய்வும் ஆக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ் போன்ற மேலான பல்கலைக்கழகங்களின் கதவுகளைத் திறக்கும் திறமை கொண்டவை. அவர்களுக்குக் கூட இந்த வேலியின் புகைப்படங்கள் எங்குமே கிடைக்கவில்லை. லண்டனில் உள்ள இந்தியா ஆவணக்காப்பகத்தையும் அவர் அணுகினார்.  அவருக்குக் கிடைக்கவில்லை.

ஏதாவது புகைப்படம் கிடைத்தாலும் அது இந்த வேலிதானா என சந்தேகம் வரும். ஏனென்றால் ஜான்சி போன்ற உயரமான இடத்திலிருந்து இந்த வேலியின் நீளத்தை எடுத்திருந்தால் மட்டுமே இதன் விஸ்தாரம் புரியும்.

கேள்வி – ஆச்சரியமாக உள்ளது. பின்காலனிய ஆய்வுகள் அதிகமாகியுள்ள இக்காலகட்டத்திலும், கிழக்கிந்திய கணக்கு வழக்குகளைப் பற்றி ஆய்வு செய்த தாதாபாய் நவ்ரோஜி காலகட்டத்திலும் யாருமே இந்த வேலியின் விளைவுகளைப் பற்றியும், உப்பு வரியைப் பற்றியும் ஆவணப்படுத்தாதது ஆச்சரியமே!

ராய் – ஆமாம். காந்தி உப்பு சத்தியாகிரகத்தை தனது ஆயுதமாக எடுத்ததற்கு அதுவும் ஒரு காரணம். ஆனால் உப்பு சத்தியாகிரகத்தின் போது உப்பு மீதான வரி மிகவும் குறைவு. அவரைப்பொருத்தவரை உப்பு ஒரு அரசியல் ஆயுதம்.

கேள்வி – பெங்காலில் மட்டும் வசூலிக்கப்பட்ட வரிக்காக இவர்கள் 2000 மைல்கள் வரை செல்லும் இத்தனை பெரிய வேலியை கட்டினார்கள் என்பதும் கூட வியப்பாக இருக்கிறது.

ராய் – நாம் பெங்கால் என்று சொல்லும் போது ஒன்று நினைவில் கொள்ள வேண்டும். அது இன்றைய பெங்கால் மாநிலம் அல்ல. பெங்கால் பிரசிடென்சி என்று அழைக்கப்பட்ட நிலப்பரப்பு. அதாவது இந்தியாவின் மூன்றின் ஒரு பங்கு நிலம். இன்றைய பங்களாதேஷ், பிஹார், டெல்லியும் கூட அதில் அடக்கம். இந்த வேலி  ஒரு விதத்தில் பெங்கால் பிரசிடென்சியின் எல்லைக்கோடும் கூட. இதிலிருந்து பெங்கால் பிரசிடென்சியின் பரப்பளவை நீங்கள்  யூகிக்கலாம்.

கேள்வி – இந்த வரியை ஏன் அவர்கள் மெட்ராசிலோ பம்பாயிலோ அமுல்படுத்த நினைக்கவில்லை.

ராய் – பெங்காலின் நிரந்தர குடியுரிமை உடன்படிக்கை காரணமாக கிழக்கிந்திய கம்பனியால் அங்கு நிலவரியை உயர்த்த முடியவில்லை. ஆனால் அவர்களுக்கு சாலைகள் அமைக்கவும், ரயில் பாதை அமைக்கவும் பணம்  தேவைப்பட்டது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலவரியும் பணவீக்கம் காரணமாக அவர்களுக்கு போதாமல் ஆனது. அதனால் தான் அவர்கள் இதை செய்ய வேண்டியதாயிற்று.  இந்தியாவின் மற்ற இடங்களில் அவர்கள் நில வரியை உயர்த்துவதன் மூலமாக தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொண்டனர்.

கேள்வி – மேலும் தென்னிந்தியாவில் இரண்டு பக்கமும் கடல் இருந்ததால் அவர்கள் உப்பு விநியோகத்தை கட்டுப்படுத்தவும் முடியாமல் ஆகியிருக்கலாம்.

ராய் – ஆம். குஜராத்தில் உப்பு கடலிலிருந்து காய்ச்சப்பட்டது..ஆனால் பெங்காலில் கடலிலிருந்து உப்பை எடுப்பது அவ்வளவு எளிதல்ல. காரணம் கங்கையிலிருந்தும் பிரம்மபுத்திராவிலிருந்தும் வரும் நீர் பெங்கால் அருகே உள்ள நீரின் செறிவை குறைத்தது. இதனால் அதை வெறும் சூரிய வெப்பத்தால் ஆவியாக்க முடியாது. அதை கொதிக்க வைக்க ஏராளமான விறகுகளும் தேவைப்பட்டன. ஆக, அங்கு உப்பை எடுக்க முடியும் ஆனால் அது அதிக அளவில் உழைப்பு தேவைப்படும் செயல்.

இந்த உப்பு வரியின் காரணமாக இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, இந்தியாவில் காய்ச்சப்படும் உப்பைக் காட்டிலும்  காட்டிலும் விலை குறைவாக இருந்தது என்பது ஒரு பெரிய அபத்தம். ஆனால் அது அப்படித்தான் இருந்தது.

கேள்வி -: உங்கள் புத்தகத்தில் இந்திய வணிகர்களும், உயர்குடிகளும் எப்படி ஆங்கிலேயருடன் சேர்ந்து இந்த சுரண்டலில் ஒத்துழைத்தனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர் தேயிலைத் தோட்டங்களில்  வேலை பார்த்த போது இதற்கு இணையான  நிகழ்வுகள் பார்த்திருக்கிறீர்களா? சுரண்டல் இரு வேறு கண்டங்களில் எப்படிச் செயல்பட்டது என்பதில் ஓரு ஒத்த தன்மை இருந்ததா

ராய் – கிழக்கு ஆப்பிரிக்காவில் தனித்த உயர்குடியினர் என்று சொல்லும்படியாக யாரும் இருக்கவில்லை. மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்திருக்கலாம். உகாண்டாவில் இருந்திருக்கலாம். ஆனால் அப்படி ஒரு வர்க்கமே கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கவில்லை. அங்கும் சுரண்டல் இருந்தது. அதனால் இந்தியாவுடன் ஒப்புமைப்படுத்தக் கூடிய அம்சம் அங்கு இருக்கவில்லை.

கேள்வி – :அவர்கள் மற்ற இடங்களில் இருந்து படித்தவர்களை ஆப்பிரிக்காவுக்குக் கொண்டு வரவேண்டியிருந்தது அல்லவா? ஆங்கிலேயர்களின் தேவைக்கேற்ப படித்த மக்கள் அங்கு இருக்கவில்லை என்றே யூகிக்கவேண்டியிருக்கிறது.

ராய் – ஆமாம். அங்கு கல்வி இருக்கவில்லை. மலாவியில் பேசப்பட்ட மொழிக்கு எழுத்து வடிவமே இல்லை. ஆங்கில மிஷனரிகள் வரும் வரை.

கேள்வி –  இந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு இந்தியாவில் இதற்கு கிடைத்த எதிர்வினை பற்றி சொல்லியிருந்தீர்கள். இங்கிலாந்தில் இதற்கு எப்படிப்பட்ட எதிர்வினைகள் வந்தன?  இது ஆங்கிலேயர்களின் சுரண்டலைப் பற்றிப் பேசக்கூடிய நூல் என்பதால் இந்த கேள்வி.

ராய் – ஆம். எனக்கு மிகக் கடுமையான பல கடிதங்கள் வந்தன. அது என் பிரசுர நிறுவனத்தின் வழியாக எனக்கு வந்து சேர்ந்தது. எல்லாக் கடிதங்களின் தொனியுமே `உனக்காகப் பல போர்களில் சண்டையிட்டு மடிந்த கிழக்கிந்திய கம்பனியை ஏன் இப்படி இழிவு படுத்துகிறாய்?`  என்பது போன்றே இருந்தன.  இந்த முறை பயணத்தில் மெட்ராசில் பேச வேண்டி வந்தால் அதில் சிலவற்றைப் படித்துக் காட்டுகிறேன்.

கேள்வி –  அரசாங்கத்திடம் இருந்து ஏதாவது எதிர்வினை வந்ததா?

ராய் – இல்லை. அவர்கள் இதை பக்கச் சார்பற்ற ஒரு வரலாறாகவே பார்த்தார்கள். அது வெளி வந்த காலத்தில் நல்ல மதிப்புரைகள் வந்தன. ஆங்கில அரசாங்கம் இதற்கெல்லாம் எதிர்வினை ஆற்றாது.

கேள்வி -:ஆனால் சமீபத்தில் ஒரு விவாதம் வந்தது. இங்கிலாந்து அரசாங்கம்  காலனிய கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா என்று. அதற்கு டேவிட் காமரன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இங்கிலாந்து அரசு ஒரு ஆக்க பூர்வமான சக்தியாகவும் இருந்திருக்கிறது என்று சொன்னதாக ஞாபகம்.

OLYMPUS DIGITAL CAMERAம்ம்… எனது இரண்டு புத்தகங்களிலுமே ஆங்கில அரசாங்கம் மிக மோசமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தேனீரின் கதை மற்றும் இந்திய வேலி இரண்டு புத்தகங்களிலுமே. புதர்வேலி புத்தகத்தை விட டீ புத்தகத்தில் மிகக் கடுமையாக அந்த விமர்சனம் வெளிப்பட்டிருக்கும். காலனியாதிக்கத்தால் சில நல்லதும் நடந்துள்ளன. சில கெட்டதும் உள்ளன. அது எந்த காலனியைப் பற்றி பேசுகிறோம் என்பதைப் பொறுத்தும் உள்ளது. மலாவி போன்ற இடங்களில் அவர்களுக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால் கென்யா அப்படி இல்லை. ஆக ஓவ்வொன்றையும் தனித்தனியாக பார்க்க வேண்டும். பொதுவாக எதையும் சொல்ல முடியாது. ஒரு நல்ல வரலாற்றாசிரியர் ஒரு சமநிலையான பார்வையைத் தரக் கூடும்.லிண்டா கோலி போல.

நான்  பெங்காலியரிடம் ஓன்று சொல்வதுண்டு. முகலாய அரசுக்கு பின்னர் அவர்களுக்கு முன் இருந்த சாத்தியங்களில் ஆகச்சிறந்தது ஆங்கிலேயரின் ஆட்சி தான். ஏனென்றால் அந்த வெற்றிடத்தில் யாராவது ஒருவர் வந்தே தீர வேண்டும். அதில் டச்சுக்காரர்களை விட பிரிட்டிஷார்கள் எவ்வளவோ பரவாயில்லை. என்னுடைய பயணங்களில் ஒன்றைக் கவனித்திருக்கிறேன். பிரிட்டீஷார் மீது ஏனோ வெறுப்பு உருவாகவில்லை. ஆனால் டச்சுக்காரர்கள் வெறுக்கப்பட்டார்கள்.   இந்தோனேஷியா ஒரு நல்ல உதாரணம். நான் அது கிரிக்கெட் காரணமாக தான் என்று விளையாட்டாகச் சொல்வதுண்டு.

கேள்வி –  இந்தப் புதர் வேலியைப் பராமரிக்க அவர்கள் செலவிட்ட உழைப்பு பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது.

ராய் – ஆமாம். முதலில் அவர்கள் வறண்ட செடிகளை வைத்து இந்த வேலியை அமைத்தார்கள். ஆனால் அவை காற்றில் அடித்துச் செல்லப்பட்டோ அல்லது தீயில் கருகிப் போகவோ வாய்ப்புகள் இருந்தன. பின் அவர்கள் பச்சை வேலியை உருவாக்கினார்கள். உழைப்பு அதிகமாக தான் இருந்தது. 16000 சுங்க அதிகாரிகள் வேறு. ஆனால் அதில் அவர்கள் நல்ல லாபமீட்டினர். உப்பைத் தவிர வேறு சிலவற்றிலும் அவர்களுக்கு வருமானம் வந்தது. உதாரணமாக சர்க்கரை.

கேள்வி – அவர்கள் சர்க்கரையில் வரி விதித்திருக்கலாம்.

OLYMPUS DIGITAL CAMERAஆமாம்..அவர்கள் சர்க்கரையில் வரி விதித்திருக்கலாம். காரணம் ஏழைகளை விட பணக்காரர்களே சர்க்கரையை அதிகம் உபயோகித்தனர். மேலும் சர்க்கரையை யாரும் தினப்படி உட்கொள்வதும் இல்லை..

உண்மையில் நிலம் வைத்திருந்தவர்கள் பலர் இந்த உப்பு வரியை வரவேற்றனர். சிலர் அதை அதிகப்படுத்தவும் கோரினர். காரணம் அவர்களுக்கு நில வரியில் நல்ல பேரம் படிந்திருந்தது. அதனால் உப்பு வரியை அதிகப்படுத்தி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கோரிக்கை விடுத்தனர்.  இந்தியாவின் பெரிய மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் எல்லாம் மிக அற்பர்களாகவே இருந்தனர். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம்.

கேள்வி – இந்த உப்பு வேலி இருந்த சமயத்தில் தென்னிந்தியாவில் ஒரு மிகப்பெரிய பஞ்சம் வந்தது. இந்தப் பஞ்சத்தின் எதிரொலி வங்கத்தில் ஏதாவது இருந்ததா

ராய் – என்னுடைய டீ புத்தகத்தில் பஞ்சங்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். அந்த பஞ்சங்களால் தான் பல தமிழர்கள் ஸ்ரீலங்காவின் தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்க்கச் சென்றனர். உண்மையில் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் பஞ்சத்தில் மூழ்கியதேயில்லை. அதனால் உணவு கிடைத்தே வந்தது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களுக்கு உணவை வாங்கப் போதுமான பணம் இருக்கவில்லை.

கேள்வி –  முதலாம் உலக யுத்தத்தில் காந்தி பிரிட்டிஷாரை ஆதரித்தது குறித்து ஏதிர்ப்புகள் வந்தபோது அவர் பிரிடிஷ் அமைப்பில் தனக்கு உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார். நீங்கள் இதில் உடன்படுகிறீர்களா? தனிப்பட்ட அதிகாரிகளில் நேர்மையற்றவர்கள் இருக்கலாம் ஆனால் பிரிட்டிஷ் அமைப்பு காலனி நாடுகளின் முன்னேற்றத்திற்குத்தான் முயன்றது என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா.

ராய் – முதல் சிப்பாய் கலகம் வரை  கிழக்கிந்திய கம்பனியின் ஆட்கள் தான் கலெக்டர்களாக இருந்தார்கள். அதனால் ஊழல் சாத்தியம். பின் கிழக்கிந்திய கம்பனி நாட்டுடைமையாக்கப்பட்டு அரசாங்கம் அதை எடுத்துக்கொண்டது.  அதன் பின் மிக அர்ப்பணிப்புள்ள கலெக்டர்கள் அமைந்தார்கள்.   ஆனால் காலனி நாட்டை பிடிப்பதன் காரணம் அதன் நலன் கருதியோ அதை முன்னேற்றுவதற்கோ அல்ல. அப்படி நினைப்பது ஒரு வெகுளித்தனம் மட்டுமே. பொதுவாக இந்தியர்களைச் சுரண்டுவதில் சக இந்தியர்களுக்கு நிகர் யாரும் இல்லை. ஜாதியமைப்பு முதலியவற்றைப் பார்த்தாலே அதை தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி –  காந்தியைப் பற்றிய உங்கள் எண்ணம் என்ன?

ராய் – அவர் ஒரு மாமனிதன் என்றே நினைக்கிறேன். துரதிருஷ்ட வசமாக அவரது சிந்தனைகள் எதுவும் இந்தியாவில் பின்பற்றப்படுவதில்லை. சில விஷயங்களில் அவர் கொஞ்சம் வெகுளித்தனமாக இருந்தார் எனபதையும் மறுப்பதற்கில்லை.  பிரிடிஷ் அரசாங்கத்தின் சில செயல்கள் – இந்தியச் சந்தையை இறக்குமதி செய்யப்பட்ட ஆடைகளால் நிறைப்பது, பணமாற்று விகிதத்தை தங்கள் வசதிக்கேற்ப மாற்றியமைப்பது போன்றவை மிகுந்த வருத்தத்திற்குரியன.

அதிலும் 1943 பெங்கால் பஞ்சம் – அதைப் பற்றி பிரிடிஷ் ஏடுகளில் அதிகமாக காணக்கிடைப்பதில்லை.  மிகுந்த கொடூரமான பஞ்சம் அது. அதன் பின்னே இருந்தவர் சர்ச்சில். நான் சர்ச்சிலை ஒரு பெரிய நாயகராக எல்லாம் கருதுவதில்லை.

கேள்வி –  சர்ச்சில் இரண்டாம் உலகப் போரின் நாயகன் என்று போற்றப்படுகிறார்.

ராய் – ஆம். போரில் அவர் இங்கிலாந்தைக் காப்பாற்றினார். ஜெர்மனியர்கள் இந்தியாவை பிடித்திருந்தால் நல்ல ஆட்சியாளர்களாக இருந்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. டான்சேனியா ஜெர்மானியர்கள் பிடியில் தான் இருந்தது. உங்களில் யாருக்காவது தெரியுமா.

பிரிட்டிஷ் அரசு தான் இந்தியாவிற்கு ஓரளவு சாதகமான அரசும் கூட. டச்சுக்காரர்கள், பெல்ஜியம் எல்லாரும் மிக மோசமான ஆட்சியாளர்களாகவே இருந்திருக்கிறார்கள். பிரெஞ்சுக்காரர்கள் இருமாதிரியும் இருந்திருக்கிறார்கள்.

கேள்வி –  பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரி போன்ற சிறிய இடத்தில் செய்ததை வைத்து அவர்கள் மொத்த இந்தியாவையும் ஆண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யூகித்தால் அது இந்தியாவிற்கு அத்தனை சாதகமாக இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. அது ஒரு விதத்தில் பிரிட்டிஷ் அமைப்பில் காந்தி வைத்திருந்த நம்பிக்கையையும் ஊர்ஜிதப்படுத்துகிறது.

பதில் – ஆம். ஆங்கிலேயர்களுடையது மிகத் திறமையான ஒரு நிர்வாக அமைப்பு. அது இந்தியாவிற்கு அவர்கள் விட்டுச் சென்ற கொடையும் கூட.  இந்தியர்கள் அதை சரிவரப்  பேணினார்களா என்பது வேறு விஷயம். நான் சில வருடங்களுக்கு முன்பு மெட்ராசின் பழைய கலெக்டரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஊழல் என்பதே தெரியாத ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர் அவர். இப்போதைய நிலைமையைப் பற்றி பேசும் போது கிட்டத்தட்ட கண்ணீர் சிந்தினார்.

கேள்வி – வேலி அமலுக்கு வந்தபோது பலவிதமான லஞ்சங்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் நடந்ததாக உங்கள் புத்தகத்தில் எழுதியுள்ளீர்கள். உங்களது பூலான் தேவி புத்தகத்தை நான் படித்ததில்லை. ஆனால், உங்களைப் பொருத்தவரை இந்த லஞ்சங்களுக்கு அடிப்படையான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

ராய் – எனது அனுபவத்தில் இந்தியாவில் இருக்குமளவு லஞ்சம் பரவலாக இருக்கும் நாடுகள் குறைவுதான். நான் பார்த்து வரும் உலகில் லஞ்சம் பெருகிக்கொண்டே இருக்கிறது. இங்கிலாந்திலும் லஞ்சம் அதிகமாகிவிட்டது.

கேள்வி – இங்கிலாந்திலும் லஞ்சம் அதிகமாகிக்கொண்டிருக்கிறதா?

OLYMPUS DIGITAL CAMERAகண்டிப்பாக. ஆனால் நமக்குக் கண்ணுக்குத் தெரியும் வழிகளில் நடப்பதில்லை. மறைமுகமாக நடந்துவருகிறது. சில காலம் முன்வரை, பல்கலைக்கழகங்களில் வெளியேறுபவர்கள் சிவில் சர்வீஸ் பரீட்சை வழியாக ஏதேனும் அரசுப் பொறுப்பில் சேவை செய்து தனது அறுபதாவது வயதில் ஓய்வூதியத்தை வாங்கி மீதி காலத்தைக் கழிப்பார்கள். இப்போது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் அமர்கிறார்கள். பாதுகாப்பு மந்திரியின் அலுவலகத்தில் பணிபுரிந்த அரசு உயர் அதிகாரி ஓய்வு பெற்றபின் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் வேலை செய்யப்போகிறார். அப்போது அவர் அரசு ஊழியராக இருந்தபோது எடுத்த முடிவுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமளிக்கும்படியாகின்றன. பலர் நிறுவனங்களுக்குக் கடனளிக்கும் வணிக FullSizeRender (2)வங்கிகளின் உயர் அதிகாரிகளாகின்றனர். தான் வேலை பார்த்த அரசு அமைப்புக்குச் சாதகமாகவோ பாதகமாகவோ முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்குக் கிடைக்கிறது.

இன்று நேற்றல்ல, பல நூறு வருடங்களுக்கு முன்னாலிருந்தே இப்படிப்பட்ட மறைமுகமான ஊழல் அமைப்புகள் இங்கிலாந்தில் இருந்து வந்திருக்கின்றன. அதனால் தான் இவை அதிகமாக வெளியே தெரிவதில்லை. உதாரணத்துக்கு சர் லூயிஸ் நேமியர் என்பவர் எழுதிய “The Structure of Politics at the Accession of George III” புத்தகத்தில் அவர் ஊழலின் வேர்களை விபரமாக எழுதியுள்ளார். ஊழல் என்பது நேரடியாகக் கையாளப்பட்டதல்ல. சில வரலாற்று நிகழ்வுகள் நடந்த வகைகளை நேமியர் ஆய்வு செய்கிறார். அவற்றின் முழு பரிமாணத்தைத் தெரிந்துகொள்வதற்காக அதில் பங்குகொண்டவர்களின் கடிதத்தொடர்புகள், உறவினர்களின் கடிதங்கள், காதலிகளின் கடிதங்கள் போன்றவற்றை ஆய்வு செய்கிறார். அவற்றின் மூலம் வரலாற்று நிகழ்வுகள் போல் மேல்பூச்சுக்குத் தெரியும் பல நிகழ்வுகளுக்கு அடியில் எப்படி ஊழலும் லஞ்சமும் அன்பளிப்புகளும் கைமாற்றப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாக விளக்குகிறார்.

அந்த புத்தகத்தின் முன்னுரையில் நேமியர் குறிப்பிடுவது முக்கியமானது. காலத்துக்கும் பொருந்துவது –

“ஒரு பிறந்தநாள் கேக்கைக் கனவு காணும் ஒரு குழந்தை அந்தக் கேக்கைப் பிறர் சாப்பிடுவதாகக் கனவு காணும் எனும் நினைப்பு போன்றது மனித இனத்துக்கு நன்மை செய்யப்போகிறேன் என அரசியலுக்கு வருபவர்களது நிலை.”

அரசியலுக்கும் ஊழலுக்கும் அத்தனை நெருக்கமான உறவு உண்டு. இங்கிலாந்தில் ஊழல் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது. மந்திரி சபையிலிருந்து ஓய்வு பெறும் நபர்களை சற்று கூர்ந்து கவனித்தால் போதும். இன்று சுகாதார மந்திரியாக இருப்பவர் நாளை ஓய்வு பெற்ற பின் தனியார் சுகாதார நிறுவனங்களின் ஆலோசகராக மாறிவிடுவார். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. சில காலம் முன்னால் வரை சிவில் சர்வீஸ் துறையினருக்குத்தான் அதிக வருமானம் இருந்தது. ஆனால் இன்று அப்படியல்ல. லண்டன் நகரின் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரை விட மிகக் குறைவான ஊதியம் பெறுபவர்கள் சட்டசபை மந்திரிகள். இந்தியாவிலும் இதே காரணம் இருக்கலாம்.

குஜராத் நகரில் நான் சென்ற கொண்டாட்டங்களில் சந்தித்த பலர் “தொழில் தொடங்கப்போகிறேன், இந்த மந்திரியிடம் இவ்வளவு லஞ்சம் கொடுத்தேன்,” என என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்தியா சுதந்தரம் அடைந்த சமயங்களில் இருந்த இந்திய கலெக்டர்கள் மத்தியில் இந்தளவு ஊழல் இல்லை.

கேள்வி – வேலி பற்றி இன்னொரு கேள்வி. வேலி இருந்த காலத்தில் வெளியான இலக்கிய நூல்களில், கதைகளில் வேலி பற்றிய குறிப்பு இருந்ததா? பங்கிம் சந்திரர் உப்பு வரி பற்றி கொஞ்சம் எழுதியுள்ளார் என நினைக்கிறேன். அதைப் பற்றி ஆராய்ந்துள்ளீர்களா?

ராய் – நான் படித்தவரை வேலியைப் பற்றி எழுதிய படைப்புகள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

கேள்வி – பொதுவாக வரலாற்று நிகழ்வுகளைக் கோப்புகள் மூலமாகவோ, வரலாற்றாசியர்கள் மூலமோ தான் ஆவணப்படுத்த முடியும். ஆனால் வரலாற்று நிகழ்வுகளின் பிற பரிமாணங்களைத் தொகுத்துக் காட்டுவதற்கு இலக்கியமும் ஒரு அபூர்வமான ஆவணமாகும். குறிப்பாக நிகழ்வுகள் நடந்தபோது வெளியான இலக்கியங்களில்..

ராய் – ஆமாம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விவரங்கள் உண்டு. உப்பு வரி இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை மையமாகக் கொண்டு முன்ஷி பிரேம் சந்த் ஒரு கதை எழுதியுள்ளார் (“Namak Ka Daroga”). ரொமேஷ் தத்தின் புத்தகத்திலும் உப்பு வரி பற்றிய விபரங்கள் உண்டு. ஆனால் எங்குமே உப்பு வரியை அமல்படுத்தக் கட்டப்பட்ட வேலி பற்றிய குறிப்புகள் கிடையாது.

கேள்வி – பேட்டியின் முடிவுக்கு வந்துவிட்டோம் என நினைக்கிறேன். ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பொறுமையாக பதில் சொல்லியுள்ளீர்கள். நீங்கள் களைப்படைந்திருப்பீர்கள் என நினைக்கிறோம் (சிரிக்கிறார்). முடிப்பதற்கு முன் வேலி சம்பந்தப்படாத சில கேள்விகள்.

நீங்கள் நூலகங்களில் வேலை செய்தீர்கள் எனப் படித்திருந்தேன்.  செம்ஸ்போர்ட் தேவாலயத்தில் வேலை செய்ததாக..

ராய் – ஆமாம். ஆனால் நான் லைப்ரேரியன் அல்ல. என்னைப்பார்த்தால் லைப்ரேரியன் மாதிரியா தெரிகிறது? நான் காம்பெர்வெல்லை விட்டு வந்தபிறகு சில வருடங்கள் புத்தகப் பராமரிப்பு வேலைகள் செய்தேன். தேவாலயங்களைப் பாதுகாத்தல் பற்றிய குழு ஒன்றிற்காக செம்ஸ்போர்ட் தேவாலயத்தில் வேலை செய்தேன். அதில் ஒரு வேலையாக, செம்ஸ்போர்ட் தேவாலய நூலகத்தின் புத்தகங்களைப் பராமரிக்கும் வேலை செய்தேன். நீங்கள் அங்கு போயிருக்கிறீர்களா?

கேள்வி – ஆமாம் சென்றிருக்கிறேன்.

OLYMPUS DIGITAL CAMERAஅங்கு உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் இந்த நூலகம் இருக்கிறது. 1610ஆம் ஆண்டு என நினைக்கிறேன், அப்போதிருந்த தேவாலய அமைப்பினர் பல நூல்களைப் பாதுகாத்து வைத்திருந்தனர். நான் அவற்றை சேதாரத்திலிருந்து மீட்கும் வேலையைச் செய்தேன். மிக நல்ல புத்தகங்கள் பல அங்கிருந்தன. அவர்களது உபயோகத்துக்கு மட்டுமல்லாது பொது மக்கள் படித்துப் பயன்படும்படியாகவும் வைத்திருந்தது வினோதமாயிருந்தது.

அது மட்டுமல்லாது, நான் பல இஸ்லாமிய ஆவணங்களை மீட்கும் வேலைகள் செய்துள்ளேன். சதர்பேஸ் பல்கலைக்கழகத்தில் இருந்த இஸ்லாமியக் கோப்புகளில் வேலை செய்துள்ளேன். சொல்லப்போனால், ரீஜண்ட்ஸ் பார்க் காப்பகத்தில் இருக்கும் குரான் மூலக்கோப்புகளை நான் மீள்கோப்பாக்கினேன். பனிரெண்டாம் நூற்றாண்டில் வெளியான குரான் பதிப்பு. என் நண்பரொருவர் தாள்களை மீட்பதையும், நான் கோர்க்கும் பணியையும் மேற்கொண்டோம். பல பெர்ஷியன் மொழிப் புத்தகங்களிலும் வேலை செய்துள்ளேன்.

கேள்வி – எங்கும் எதிலும் டிஜிட்டல் மயமாக்கிக்கொண்டிருக்கிறது. கோப்புகளும், புத்தகங்களும் ரீடர்களில் கிடைக்கின்றன. பெரியவர்களும் சிறியவர்களும் அவற்றுக்கு அடிமையாகின்றனர். உங்கள் அபிப்ராயம் என்ன?

ராய் – சொல்லப்போனால் நான் வேலை பார்த்த மீட்டுருவாக்கப் பணி முழுவதும் இப்போது டிஜிட்டலாக மாற்றும் வேலையாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால், டிஜிட்டலாக மாற்ற நினைக்கும் எந்த புத்தகத்திலும் சில நகாசு வேலைகள் இருக்கும். கோர்த்த பக்கங்களை பிரிக்க வேண்டும், சில எழுத்துகளைத் திருத்த வேண்டும் என. ஆனால் பழைய முறைப்படி மீட்புப்பணி செய்யும் நிபுணர்கள் அரிதாகிக்கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி – சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் என் நண்பர் ஒருவர் பல வருடங்களாக புத்தகங்களை சேகரித்து வருகிறார். ஆனால் இந்தியாவில் அடிக்கும் வெயிலினால் புத்தகங்களில் பூச்சி வருவதை அவரால் தடுக்க முடியவில்லை. இங்கிலாந்தில் இவற்றை சரிசெய்ய ஏதேனும் வழி இருக்கிறதா எனக்கேட்டிருந்தார். அரிதாகிக்கொண்டிருந்தாலும், இந்த வேலைக்கான தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறதுதானே?

ராய் – கண்டிப்பாக. புத்தகங்களை டிஜிட்டல் வடிவில் மாற்றுவதற்கு முன்னர் புத்தகத்தைக் கோர்ப்பது, தாள்களை சீராக்குவது, எழுத்துகளை அச்சுக்கூட்டுவது என பல வேலைகள் முதலில் செய்ய வேண்டும். அது மட்டுமல்லாது, இப்போது மாறும் டிஜிட்டல் ஜூர வேகத்தைக் கவனிக்கும்போது மக்களுக்குப் பழைய புத்தகங்கள் எப்படி இருந்திருக்கின்றன என அறியும் ஆவல் கூடியுள்ளது தெரிகிறது. அவற்றைப் பார்ப்பதற்காகப் பழைய புத்தகங்களை மீட்கும் பணிகளும் கூடவே நடந்துவருகின்றன. டிஜிட்டலாக மாற்றுவதற்கும் ஒரு எல்லை உண்டுதானே?

கேள்வி – இது தொடர்பாக மற்றொரு கேள்வி..

ராய் – அதற்கு முன்னால் – இந்த டிஜிட்டல் உலகமே ஒரு நாள் வெடித்து அழிந்துவிட்டால் என்ன ஆகும். அணு உற்பத்தி தொடர்பான ஒரு கருத்தரங்கில் இதைப் பற்றிப் பேசினோம். ஒரு நாள் இந்த இணையம் முழுவதும் அழிந்துபோனால் என்ன ஆகும்? அழியச் சாத்தியங்கள் குறைவு என்றாலும் அழியவே அழியாது எனும் உத்திரவாதமும் இல்லை அல்லவா?

கேள்வி – ஆமாம். அது உண்மை தான். ஆங்கில இலக்கியத்தின் முக்கியமான மற்றொரு பகுதியாகக் குடும்ப வரலாறு, தன் வரலாறு, கடித இலக்கியம், டயரிக் குறிப்புகள் போன்றவை இருந்துவந்திருக்கின்றன. நவீன காலத்தில் அவற்றின் நிலை என்ன? சமூக ஊடகங்களில் கொஞ்சம் எஞ்சியிருக்கின்றன என்றாலும்..

OLYMPUS DIGITAL CAMERAஆமாம் அந்த வகைப் பதிவுகள் இப்போது இல்லை. நிறைய புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் பத்து வருடங்களுக்கு முன்னர் எடுத்தவை தொடர்பாக ஒரு சம்பவத் தொடர்ச்சி ஆவணமாக்கப்படுவதில்லை. தினமும் டயரிக்குறிப்புகள் எழுதும் பழக்கமும் குறைந்துவிட்டது. ஏன் என்று தெரியவில்லை. நான் தினமும் டயரிக்குறிப்புகள் எழுதுகிறேன். அந்த வழக்கமே அழிந்து வருகிறது என்றாலும் மின் அஞ்சல்களை சேகரித்துத் தொகுக்க முடிந்தால் நன்றாக இருக்கும். முன்னை விட இக்காலங்களில் அதிக மக்கள் எழுதுகிறார்கள் என்பதை இணைத்துப் பார்த்தால் எழுதப்படும் ஆவணங்கள் குறைந்துவரும் அபத்தம் புரியும். தொலைபேசியில் பேசி செய்தியைக் கொடுப்பது, தந்தி அடிப்பது போன்றவற்றுக்குப் பதிலாக இப்போது மக்கள் நிறைய மின் அஞ்சல்கள் எழுதுகிறார்கள். ஆனால் அவற்றிலிருந்து தனிப்பட்ட விஷயங்களை பிரித்துத் தொகுப்பது, தகவல் பாதுகாப்பு செய்வது போன்றவை மிகக்கடினமான வேலைகள் எனத்தோன்றுகிறது.

கேள்வி- நீங்கள் புனைவும் அபுனைவும் எழுதியுள்ளீர்கள். என்னவாக அறியப்பட விரும்புகிறீர்கள்? வரலாற்று ஆய்வாளரா, எழுத்தாளரா?

பதில் – நிச்சயமாக வரலாற்று ஆய்வாளர் இல்லை. எழுத்தாளர் எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

கேள்வி – புனைவு எழுதுவதற்கும் அபுனைவு எழுதுவதற்கும் உங்கள் சிந்தனை முறையில் என்ன வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறீர்கள்?

பதில் – நாவல்களுக்கு ஒரு வடிவம் உண்டு. ஆரம்பம், நடுப்பகுதி, முடிவு. அபுனைவுகள் அவை நடக்கும் வரிசையில் தொடர்ச்சியாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதவேண்டும். வரலாற்று நூல்கள் எழுதுவதற்கு அதிகச் சிந்தனை தேவைப்படும். இதிலும் ஒரு கதை இருக்கத்தான் வேண்டும், இல்லாவிட்டால் படிப்பவரின் ஆர்வத்தைத் தக்கவைக்க முடியாது.

எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த எழுத்தாளர் இந்திய எதிர்ப்புச் சிந்தனை அதிகம் இருந்த மெக்காலே.

கேள்வி – இயல்பாக இந்தக் கேள்விக்குள் நுழைந்துவிட்டோம். உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர் யார்?

OLYMPUS DIGITAL CAMERAஎனக்கு மிகவும் அலங்காரமான எழுத்துக்கள் பிடிக்காது. எளிமையாக நேரடியாக இருக்க வேண்டும். சாமர்செட் மாமின் சிறுகதைகளை அவற்றின் வரிகளின் வடிவமைப்புக்காக உன்னிப்பாகப் படித்துள்ளேன். எனக்கு மிகவும் உபயோகமாக இருந்துள்ளன.

இந்திய எழுத்தாளர்கள் பலருடைய ஆங்கில ஆக்கங்களைப் படித்துள்ளேன். அவர்களது வெளிநாட்டு அனுபவங்கள் நிறையப் பதிவாகியுள்ளன. ஆனால், இந்திய ஆங்கில எழுத்தாளர்களால் பல பிராந்திய மொழி இலக்கியங்களும் நாவல்களும் கவனத்துக்கு வராமல் போகின்றன. என்னைப் பொருத்தவரை பல நல்ல ஆக்கங்கள் பிராந்திய மொழிகளில் அமைந்திருக்கின்றன. ஶ்ரீ லால் சுக்லா எழுதிய ‘ராக தர்பாரி’ நாவல் எனக்கு மிகவும் பிடித்த இந்திய புத்தகமாகும். இந்தியாவின் அனைத்துவிதமான அரசியல்களும் அந்த புத்தகத்தில் உள்ளன. (சிரிக்கிறார்).

கேள்வி – இது தொடர்பாக மற்றொரு கேள்வி. உங்கள் ஆய்வுகளுக்கும், பயணங்களுக்கும் ஏதேனும் நிதி உதவி கிடைக்கிறதா?

OLYMPUS DIGITAL CAMERAஇல்லை. இல்லவே இல்லை. The Great Hedge of India புத்தகம் நன்றாக விற்றதால் கொஞ்சம் பணம் வந்தது. நிறைய பணம் வரவில்லை. ஆனால் என்னுடைய வேலையில் கிடைத்த பணம் இல்லாது என்னால் இந்த ஆய்வுகளைச் செய்திருக்க முடியாது. இப்போது அந்த புத்தகத்தைப் பதிக்கும் உரிமையை ஒரு பெரிய அமெரிக்க நிறுவனம் விலைக்கு வாங்கிவிட்டது.ஆனால் முதன்முதலில் இதைப் பதிப்பித்த இங்கிலாந்து பிரசுர நிறுவனர் சொன்ன ஒரு விஷயத்தை நான் மறக்க மாட்டேன் – ‘புத்தகங்களை விற்று யாராலும் பெரியளவு சம்பாதித்துவிட முடியாது’ என்றார். அது பெரும்பாலும் உண்மைதான். பல எழுத்தாளர்கள் பத்திரிகைகளுக்கு எழுதியும், தொலைக்காட்சி நிகழ்வுகளில் கலந்துகொண்டும் சம்பாதிக்கிறார்கள். ஆனால் நிறைய எழுத்தாளர்களுக்கு அது சாத்தியமல்ல.

கேள்வி – இந்தியாவில் இருப்பவர்களது எண்ணம் இதற்கு எதிர்மறையாக உள்ளது. புத்தக வாசிப்பு பரவலாக இருப்பதாலும், விற்பனை அளவும் அதிகமாக உள்ளதாலும் மேற்குலகில் எழுத்தாளர்களுக்கு நிறைய பணம் கிடைக்கிறது என்பதே எங்கள் எண்ணம். இந்தியாவில் பரவலான படிப்பு இல்லாததால், விற்பனையும் எழுத்தாளர்களுக்கு வருமானமும் கம்மி.

ராய் – இங்கு எழுத்தாளர்கள் சம்பாதிக்கவே இல்லை என்பது கிடையாது. கண்டிப்பாக ஜெஃப்ரி ஆர்ச்சர் கொஞ்சம் பென்னிகள் சில்லரைக்காசுகளைச் சம்பாதித்திருப்பார். உதாரணத்துக்கு, புக்கர் விருதில் கடைசி நிலையில் தேர்வாகும் ஆறு புத்தகங்களை எடுத்துக்கொள்வோமே. அவை ஒரு வருடமாவது பதிப்பில் இருக்கும். ஆனால், போன வருடம் கடைசி கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு புத்தகங்கள் எதுவுமே 15000 பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆனவை அல்ல.

கேள்வி – சில குழுக்கள் தங்களுக்குச் சாதகமானவற்றை எழுத வேண்டும் என்பதற்காக எழுத்தாளர்களுக்குப் பணம் கொடுத்து எழுதவைப்பது நடக்கிறது. அதனால் தான் அந்த தர்மசங்கடமான கேள்வியைக் கேட்க வேண்டியதாக இருந்தது.

ராய் – என்னை சந்திக்கும்படி அவர்களிடம் சொல்ல முடியுமா? (சிரிக்கிறார்)

கேள்வி – ஜெயமோகன் எழுதிய “காடு” நாவலைப் படித்திருந்ததாக நீங்கள் ஒரு மடலில் குறிப்பிட்டிருந்தீர்கள்..

OLYMPUS DIGITAL CAMERA ஆமாம். நான் ரொம்பவும் ரசித்த புத்தகம் அது. நல்ல வாசிப்பு அனுபவமாக இருந்தது. உங்களிடம் ஒரு கேள்வி – உங்களில் பலர் ஐடி துறையில் இருப்பவர்களாக இருப்பவர்கள் என எண்ணுகிறேன். நான் கிண்டிலில் படித்த காடு நாவலின் வடிவமைப்பு ஏனோ சரியாக இல்லை. ஏனென்று தெரியவில்லை. என் புத்தகமும் கிண்டிலில் இருக்கிறது, ஆனால் நல்ல முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை ஜெயமோகனின் காடு நாவல் மைக்ரோசாஃப்ட் வேர்ட் கோப்பாக வடிவமைத்தது இல்லையோ? ஏனென்றால், இந்தியாவில் பலர் திறந்த நிரலிகளைப் பயன்படுத்துகிறார்கள் இல்லையா? கிண்டிலுக்குக் கோப்புகளை அனுப்பும்போது ஒரு வடிவத்தில் அனுப்பவேண்டும், ஆனால் அது ரொம்ப சுலபமான ஒன்றுதான். நீங்களும் பாருங்களேன். உங்கள் தொழில்தானே, சரி செய்யுங்கள்!

ராய் – அவரது வேறு புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனவா?

பதில் – ஆம், யானை டாக்டர் எனும் சிறுகதை ஆங்கிலத்தில் உள்ளது. மேலும் சில சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நான் மின்கோப்புகளை உங்களுக்குத் தருகிறேன்.

ராய் – நிச்சயமாக. காடு கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. பொதுவாக அவர் எழுதும் கதைக் களன்கள் இப்படிப்பட்டவைதானா? அவர் காடு போன்ற நாட்டாரியக்கதைகளை எழுதுபவரா?

பதில் – அவர் பலதரப்பட்ட கதைகளை எழுதியுள்ளார். அவரது நாகர்கோவில், கேரளா பின்புலத்தில் நாட்டார் கதைகளின் நவீன நீட்சியைப் பற்றி நிறையக்கதைகள் எழுதியுள்ளார். அவர் சூழியல் குறித்த ஆழமான பார்வை கொண்டவர். காடுகளைப் பற்றியும், அவற்றின் அழிவு குறித்தும், இயற்கையைப் பற்றியும் அனுபவ பூர்வமாகப் பல கதைகள் எழுதியுள்ளார். அவரது முதல் நாவலான ‘ரப்பர்’ நாவல் ரப்பர் தோட்டங்களின் அழிவு மற்றும் சூழியல் குறித்த பதிவாகவும் வாசிக்கப்படுகிறது. 1878களில் ஏற்பட்ட பெங்கால் பஞ்சம் பற்றியும் ‘வெள்ளை யானை’ எனும் நாவல் எழுதியுள்ளார்.

ராய் – நான் இந்திய பஞ்சங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு செய்திகள் திரட்டியுள்ளேன். ஆனால் அந்த புத்தகத்துடன் சில வருடங்கள் கழிக்க வேண்டும். எனது இந்த வயதில் நான் அதனுடன் ஒரு வருடம் செலவு செய்யத் தயாரா எனத் தெரியவில்லை.

கேள்வி – 1943 ஆம் ஆண்டில் சர்ச்சிலின் உதாசீனத்தால் ஏற்பட்ட இந்திய பஞ்சத்தைப் பற்றிய புத்தகமும் தமிழில் வந்துள்ளது. 1878ஆம் ஆண்டு நிகழ்ந்த பஞ்சத்தைப் பற்றிய கதைகள் நெஞ்சை உருக்குபவை.

ராய் – ஆம். மிக மிகக் கோரமானவை. நான் இன்னொரு புத்தகம் எழுதியுள்ளேன். பதிப்பாளர் கிடைத்துவிட்டார் என நினைத்திருந்தேன், ஆனால் இன்னும் இல்லை போலத்தெரிகிறது. வாஸ்கோடகாமா முதல் ராபர்ட் க்ளைவ் வரை இந்தியாவைப் படையெடுத்தவர்களது கதை. அந்த புத்தகத்தில் ராபர்ட் க்ளைவ் காலத்தில் (1770கள்) ஏற்பட்ட பெங்கால் பஞ்சத்தில் இறந்த ஒரு கோடி மக்களைப் பற்றி பல கதைகளை எழுதியுள்ளேன். மனதை உருக்கும் கதைகள்.

**

RoyInterviewபேட்டி முடிந்ததும் ராய் மாக்ஸமுடன் மதிய உணவு சாப்பிட்டபடி பேசிக்கொண்டிருந்தோம். தென்னிந்திய சைவ உணவை ரசித்துச் சாப்பிட்டார். அவருடன் கழித்த நான்கு மணிநேரத்தில் அவருடைய ஐம்பது வருட வாழ்வைப் பற்றிய குறுக்குவெட்டுத் தோற்றம் கிடைத்தது. கோவண்ட் கார்டனில் இருக்கும் வீட்டிலிருந்து மரில்போர்ன் வரை நடந்து வந்திருந்தார். முடிந்தவரை எங்குமே நடந்தே செல்ல முயல்வதாகச் சொன்னார். இந்தியாவில் பூலான் தேவியுடன் தங்கியிருந்த நாட்களைப் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசினார். அவர் இறந்த செய்தியைக் கேட்டபோது லண்டன் நூலகத்தில் இருந்ததாகவும் அடுத்த ரெண்டு நாட்களுக்கு எதுவுமே செய்ய முடியாதபடி மரத்துக்கிடந்ததாகவும் தெரிவித்தார். மிகவும் எளிய மனிதராகத் தெரிந்த ராய் இந்தியாவில் ஒரு இந்தியரைப் போலவே சுற்றியதாகத் தெரிவித்தார். விடுதிகளில் தங்குவதை விட இந்தியர்களின் வீடுகளில் தங்குவதையும், நட்சத்திர விடுதி உணவை விட வீட்டு உணவை ரசிப்பதையும், காலார இந்தியாவில் பயணம் செய்வதையும் தனக்குப் பிடித்த விஷயங்களாகக் குறிப்பிட்டார்.

அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியாவுக்குக் கிளம்பும் வேகத்தில் தனது பயணத் திட்டங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார். இந்த முறை புலிகட் ஏரி, சென்னை, கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற இடங்களுக்குப் பயணம் செய்யப்போவதாகச் சொன்னார். மிகுந்த உற்சாகத்தோடு எங்களுடன் பொழுதைக் கழித்த ராய் மாக்ஸம் தனது மனதில் படுவதைச் செயல்படுத்திப்பார்க்கவேண்டும் எனும் தணியாத வேகம் மட்டுமே கொண்டவராக நினைக்கத்தோன்றுகிறது. அந்த வேகம் மட்டுமே அவரை ஆப்ரிக்காவுக்குக்கொண்டு சென்றது, பூலான் தேவிக்கு ஜெயிலில் ஒரு கடிதம் எழுதச் செய்தது, இந்திய பெருவேலியைத் தேடி ஓயாது அலைய வைத்தது.

**

பேட்டியின் காணொளி

0 Replies to “ராய் மாக்ஸம் நேர்காணல்”

 1. இப்பேட்டியெடுத்தவர், எடுக்கத் தூண்டியவர், இதை வெளியிட்ட இந்த இணைய தளத்தினர், அவர்தம் வம்சத்தினர் – இவர்கள் அனைவரையும் செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் கற்பகாம்பாள் காத்திருப்பாள்.
  நன்றிகள்.
  _/\_

 2. அன்புள்ள கிரிதரன், பிரபு இருவருக்கும்
  ராய் அவர்களுடன் நீங்கள் எடுத்திருக்கும் நேர்காணல் மிகச்சிறப்பாக உள்ளது. முழு நேர்காணலை ஒரே வாசிப்பில் ஒரு முறையும், கிழக்கிந்திய கம்பெனிபற்றிய செய்திகள், ஜப்பானின் உயிர் ஆயுத முயற்சிகள், பூலன் தேவிபற்றிய செய்திகள் என தேர்ந்தெடுத்த பகுதிகளை இன்னொருமுறையுமாக இருமுறை படித்துவிட்டேன். சமீபத்தில் நான் படித்த நேர்காணலில் இந்த அளவுக்கு எதுவும் என்னைக் கவரவில்லை. ஒரு புனைகதைபோல ஏராளமான திருப்பங்களோடும் நிகழ்ச்சிகளோடும் ராயுடைய வாழ்க்கை ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா என விரிந்துசெல்கிறது. இந்தியாவை நோக்கி அவர் கவனத்தைத் திருப்பிவிட்ட கணம் ஒரு முக்கியமான தருணம் என்றே சொல்லவேண்டும். அவருடைய இந்தியப்பயணம் நிகழ்ந்திருக்காவிட்டால், இந்த உப்புவேலியைப்பற்றிய தகவல் நமக்குத் தெரிந்திராமலேயே போயிருக்கும். பயணங்கள்மீது தீராத விருப்பத்துடன் உள்ள ராயின் அனுபவக்குறிப்புகள் நமக்கு நிச்சயம் துணையாக இருக்கும். அவருடைய உப்புவேலி நூல் வெளிவர உள்ள இத்தருணத்தில் இந்த நேர்காணல் அவரைப்பற்றி மேலும் பல விஷயங்களை அறிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துகள்.
  அன்புடன்
  பாவண்ணன்
  paavannan@hotmail.com

 3. மிக செறிவான பேட்டி. சரியான கேள்விகள் நேர்மையான பதில்கள். சரளமான, ஸ்வாரஸ்யமான உரையாடலை கூட சேர்ந்து கேட்ட அனுபவம். வாழ்த்துக்கள் ராய், கிரிதர் மற்றும் பிரபு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.