பவளமல்லி

கதிரேசன் அங்கிள் போன் பண்ணிச் சொன்னதும் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தேன். யோசிக்க வேண்டிய நேரமோ விஷயமோ இல்லை இது உறுதியாக. அவரிடம் நம்பர் தரும் போதே சொல்லித் தான் கொடுத்திருந்தேன்.” ஏதாவது எமர்ஜன்சின்னா கூப்பிடுங்க அங்கிள்” என்று.
அதற்கு அர்த்தம் ஏதாவது எமர்ஜன்சி என்றால் மட்டுமே கூப்பிட வேண்டுமென்பது. இதை அவரும் புரிந்திருப்பார் என்பது என் புரிதல். அவரிடமிருந்து கால் வந்த போதே அனுமானித்தேன் இதுவாகத்தான் இருக்க வேண்டுமென்று. அனுமானிக்க முடிந்திரா விட்டாலும் அவர் சொன்ன சேதி சின்னதொரு திடுக்கிடலில் கிரகிக்கப் பட்டிருக்கும் என்னுள்.
ரகுவுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொன்னேன். பர்மிஷன் போட்டு விட்டு வருவதாகச் சொன்னான். உடனே போக வேண்டும் என்ற பரபரப்பு ஏனோ எழவில்லை. ரகுவுக்குக் காத்திருப்பதைத் தவிர வேறெதும் வேலை இல்லை இப்போதைக்கு.
அப்பா. அவரின் நினைவுகள். சரியாய்ச் சீரணிக்கப் படாத எண்ணெய்ப் பலகாரம் நெஞ்சில் கரிப்பது போல் சுழற்றி சங்கடப்படுத்தும் நினைவுகள். அடி மனசில் படம் போல் ஓடத் துவங்கியிருந்த நினைவுகள்.
அவர் கையைப் பிடித்துக் கொண்டு கோவிலுக்குப் போனது, அவரின் அலுவலகத்தின் மாடியில் இருந்த ரெக்ரியேஷன் ரூமில் சுற்றிலும் சிகரெட் புகை மண்டலம் சூழ்ந்திருக்க அதன் நடுவே அமர்ந்து அப்பா கேரம் போர்ட் ஆடிக் கொண்டிருந்தது, சித்தப்பா இறந்த போது அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த அப்பா அருகில் வந்து சாப்டியாடா என்று கேட்ட போது அவரிடமிருந்து வந்த மறக்க முடியாத துக்க வீட்டின் வாடை என்று படம் போல் தொடர்ச்சியாக ஓடிக் கொண்டிருந்த எல்லா நினைவுகளின் மீதும் பெரும் பாரம் கொண்டழுத்தியதைப் போல் அந்த ஒரு சம்பவத்தின் நினைவு படர்ந்து மூச்சு முட்டச் செய்யத் துவங்கியிருந்தது.
அந்த ஒரு நிமிடம் என் வாழ்வில் இருந்திருக்கா விட்டால் இந்நேரம் கதறியழுதபடி அவரைக் காண நான் ஓடிக் கொண்டிருந்திருக்கக் கூடும். பெருமூச்சுடன் தலையை உலுக்கிக் கொண்டு நினைவுகளிலிருந்து பிடிவாதமாய் மீண்டேன்.
ரகு வருவதற்கு நேரம் பிடிக்கும். கொஞ்சம் கிச்சனுக்குள் சென்று வேலை பார்க்கிற பாவனையில் உருட்டிக் கொண்டிருந்தேன். ஏதோ உள்ளே உந்தித் தள்ள, என்னிடமிருந்த ஒரே பழைய ஆல்பத்தை பீரோவின் அடிப் படியிலிருந்து உருவித் தூசு தட்டி,கொண்டு வந்து ஜன்னலருகே அமர்ந்தேன்.
போனது அப்பா. எனக்கேனோ அம்மாவின் முகத்தைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆல்பத்தைப் பிரித்தேன். தாத்தாவின் சதாபிஷேக ஆல்பம். அம்மா ஏதோ ஒரு போட்டோவில் அபாரமாக வெட்கப் பட்டுக் கொண்டிருந்தாள். லேசாகச் சிரிப்பு வந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் சிரிக்கலாமா என்ன? என்ன செய்ய? வருவதை அடக்க முடியாதே?
அம்மாவிடம் எல்லா விஷயத்தையும் சொல்லி இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று இப்போது நினைத்துப் பார்த்தேன். லேசாக மயிர்க் கால்கள் கூச்செறிந்தன.எப்படி வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம் என் வாழ்க்கை. தினம் தினம் சங்கடத்துடனும் அசூயையுடனும் கழிந்த அந்த சில வருடங்கள் என் வாழ்வில் நடக்காமலே போயிருக்கலாம்.

malli

எது என்னைத் தடுத்ததென்று தெரியவில்லை.சொல்லவில்லை. மீண்டும் நினைவுகளின் அலைக்கழிப்பு. இந்த முறை அம்மா அதிகமாக வந்து போனாள். ஜன்னல் வழியே பார்வையை ஓட விட்டேன். மழை வரும் போலிருந்தது. ஒரு காபி இதமளிக்கும் போல் தோன்றியது. ஓயாமல் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களின் மீது கம்பளி போர்த்தினாற் போல் அடக்க ஒரு காபியால் முடியக் கூடும்.
எழுந்து சென்று மிகப் பொறுமையாய்க் காபி கலந்து கொண்டு வந்து அமர்ந்தேன். மீண்டும் ஜன்னல். மழை தூறத் தொடங்கியிருந்தது.பக்கத்து வீட்டின் பவள மல்லி மரம் நனையத் துவங்கியிருந்தது. எல்லாமும் தான் நனைந்து கொண்டிருந்தன வெளியே. பவள மல்லியை மட்டும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
லேசான தூறலில் சிறிது சிறிதாக மேலே இருந்த இலைகள், நனையத் துவங்கி ஈரம் சிறிது சிறிதாய்ப் படர்ந்து கிளைகளின் வழி இறங்கி செடியை ஈரத்தில் அமிழ்த்திக் கொண்டிருந்தன. பூக்கள் ஏற்கனவே நீரில் துவள ஆரம்பித்திருந்தன.
தினமும் மாலை வீட்டுக்குள் நான் நுழைந்து ஜன்னல் திறந்ததும் என்னைத் தொடர்ந்து வீட்டுக்குள் நுழையும் இந்தப் பவள மல்லிச் செடியின பூக்களின் வாசனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். மனதை வருடுகிறாற் போன்ற வாசனை.சில சமயம் காற்று வலுவாக இருக்கையில் மல்லியின் மணம் படு தூக்கலாக இருக்கும். ஜன்னலுக்கு அருகே அமர்ந்து கொண்டு மெல்ல மெல்ல மூச்சை இழுத்து அந்த மணத்தை உள்ளிழுத்து நெஞ்சில் நிறைத்துக் கொள்வது பேரனுபவம்.
ஆனால் மழை பெய்த பின் பவள மல்லியின் வாசனை அடியோடு மாறி விடுவதாய் என் அனுமானம். பூக்கள் ஈரத்தில் ஊறிய பின் அவற்றின் வாசனை முற்றிலும் வேறானதாய்த் தோன்றும். மனதுக்கு ஒவ்வாத ஒரு வித அவஸ்தையான வாசனை.
அப்பாவும் அவரைப் பற்றிய நினைவுகளும் கூட அப்படித் தான். அந்த நாளுக்கு முன் வரையிலான அப்பாவுக்கும் எனக்குமான உறவு அவ்வளவு அலாதி. எல்லாப் பெண்களும் அப்பாக்களைப் பற்றி இவ்வாறே சொல்லக் கூடும். அவரவர்க்கு அவரவர் கதை சாஸ்வதம். என்னைப் போல்.
ஞாயிறு காலைகளில் நான் வெகு நேரம் தூங்க வேண்டும் என்பதற்காக என் அறைக் கதவை அழுந்த சாத்தி விட்டுப் பூஜை செய்வார். அவர் ஆறு மணிக்கு மேல் தூங்கி நான் பார்த்ததே இல்லை. நான் எழுந்து வரும் போது வீடு முழுவதும் சாம்பிராணி மணம் அடர்ந்திருக்கும். மற்ற நாட்களில் பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில் இதையெல்லாம் கவனிக்க நேரமிருக்காது.
அம்மா பெரும்பாலும் வரவில்லையென்று சொல்லி விடுவாள். நானும் அப்பாவும் மட்டும் தவறாமல் பீச்சுக்குப் போவோம்.அப்பாவின் ஸ்கூட்டரில். அப்பாவின் தோள் பற்றிக் கொண்டு. அப்பாவின் முதுகில் முகம் சாய்த்துக் கொண்டு கன்னத்தின் மறு பக்கம் மெலிதான காற்று படபடக்க ஸ்கூட்டர் செல்லும் போது ஏற்படும் பரவசம்.ஆனால் அந்த நாளுக்குப் பின் அப்பாவை நினைத்தாலே மழைக்குப் பின்னான பவள மல்லியின் மணம் போல் ஒவ்வாமையாகிப் போய் விட்டிருந்தது.
சட்டென்று ஞாபகங்கள் ரகுவுடனான திருமணத்திற்கு முன்பான நாட்களுக்குத் தாவியது. அது சரி. மனசுக்குக் காலக் கிரமமாக யோசிக்க வேண்டும் என்று கட்டளையிட முடியுமா என்ன?ரகு அப்பாவைப் போலவே தான். ரொம்ப மென்மை. அதிராமல் பேசுவான். இப்போதும் கூட அப்படித் தான்.
காதலை வீட்டில் சொன்ன போது அம்மா தான் முணுமுணுவென்றிருந்தாள். அது எதிர்ப்பெல்லாம் இல்லை. சின்ன அதிருப்தி. அவ்வளவே. அதற்கு மேல் ரகுவைப் பற்றி என்ன குறை கூறி நிராகரிப்பதென்று அவளுக்கும் தெரியாததால் வந்த அதிருப்தி. அப்பா எதுவும் சொல்லவில்லை. பயம் அவரைக் கட்டிப் போட்டிருந்திருக்கலாம்.
அவர் ஏதேனும் சொன்னால் அதை வேரோடு எதிர்த்துப் பேசி நாசமாக்குவதற்கும் சுய தற்காப்புக்கும் ஏகப்பட்ட பாயின்ட்டுகள் யோசித்து வைத்திருந்தேன், அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
அந்த நாளுக்குப் பின் அப்பாவுடனான பேச்சு வார்த்தை முற்றிலும் நின்று போனதும் ஒரு காரணமாய் இருந்திருக்கலாம் . ஆனால் கட்டறுந்தது போல் அப்படி இருக்க முற்றிலும் முடியவில்லை. அம்மா முன்னால் பேசிக் கொள்வது போல் நடிப்பதும் நடந்து கொள்வதும் தான் ஆகப் பெரிய கஷ்டமாக இருந்தது. அதுவும் கல்யாண வேலைகளின் போது இன்னும் கஷ்டம்.
திருமணத்துக்குப் பிறகான முதல் சில நாட்கள் நரக வேதனை. ரகு ஆசையாய்த் தொட நெருங்கி வரும் போதெல்லாம் அது வரை மனதில் ஊறிக் கொண்டிருந்த ஆசையெல்லாம் ஓரமாய் ஒதுங்கிக் கொண்டு அந்த நினைப்பே பூதாகாரமாக வந்து நிற்கும் முன்னே.
“ப்ச.. அப்பா… அப்பா…. எங்கப்பா கேண்டில்? இருட்டுல் ஒண்ணுமே தெரில”
“ அம்மா கிட்ட கேளுடா”
“அம்மா இல்லப்பா. கடைக்கு போயிருக்கா. வந்து எடுத்து குடுப்பா”
“ சரி எங்க நிக்கறே?”
“ ஷூ ஸ்டாண்ட் கிட்ட இருக்கேம்பா”
“ அங்க தாண்டா இருக்கு. அங்கேயே நில்லு வந்து எடுத்து தர்றேன்”
அப்பா வருவது தெரிந்தது விபூதி வாசனையில்.வாசனை மிக அருகில் வந்து விட்டது. அப்பா கேண்டிலைத் தேடிக் கொண்டிருந்தார்.நானும் தேடிக் கொண்டிருந்தேன். விரல் பட்டது யதேச்சையாக இருந்திருக்கக் கூடும். சட்டென்று அப்பாவின் கை மேலே நகர்ந்து…
ச்சேச்சே… தேடும் அவசரத்தில் இருட்டில் யதேச்சையாய்ப் பட்டிருக்கும். என்று நம்பத் துடித்தது மனம்.அடுத்த நொடி வரை.
அடுத்த முறை மீண்டும் மேலேறி இன்னும் தீர்மானமாய் அழுத்தமாய் அப்பாவின் கை. சட்டென்று ஏற்பட்ட கணத்தின் உந்துதலில் கையைப் படாரென்று தட்டி விட்டேன். வியர்த்தது. அந்த நொடி ஏற்பட்ட அதிர்ச்சி தாங்க முடியாததாய் இருந்தது. எப்போது வருமென்று கவலையில்லாமல் நினைவில் நிரடாமல் இருக்கும் மரணம் நம் கண் முன்னே நம்மை ஆட்கொள்ளக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருவதைக் காண்பதற்கொப்பான அதிர்ச்சி அது.
அருகிலிருந்த வாசற்கதவைத் திறந்து கொண்டு மாடிக்கு ஓடினேன்.அடுத்து என்ன செய்வதென்று தெரியாத வெற்று வெளிச் சூனியம். மனம் பதைப்பில் வாய் வழி வெளி வந்து விடும் போலிருந்தது. குமட்டிக் கொண்டு வந்தது.அப்பாவா அப்பாவா என்று ஆறாமல் துடித்தது. நினைப்பதற்குக் கூட வார்த்தை வரவில்லை.
மீண்டும் அந்த வீட்டுக்குள் போக வேண்டுமென்ற நினைப்பே ஒரு பிரம்மாண்டப் பாறை முதுகில் ஏறி அழுத்துகிறாற் போல் ரண வேதனையைக் கொடுத்தது. வீடு என்னும் இடம் பல்லாயிரம் நாவுகள் கொண்டு என்னை விழுங்கி ஏப்பம் விடக் காத்திருக்கும் கொடுவனம் போல் தோன்றியது.
வனத்தின் வாயினின்றும் தப்பும் பலவீனமான முயற்சியில் தலையை உலுக்கிப் பார்க்கும் போது ரகுவின் கை ஆசையோடு என் மீது படர்ந்து கொண்டிருக்கும். எப்போது மாடியிலிருந்து இந்த பெட் ரூமுக்கு வந்தேன்? சட்டென்று உள்ளுக்குள் எதுவோ உந்தித் தள்ள ஒவ்வாமையில் ரகுவின் கையை வேகமாகத் தள்ளி விட்டு எழுந்து விடுவேன். வியர்த்திருக்கும்.
ரகு அசாத்தியப் பொறுமை.எனக்கு ஏதோ பிரச்னை என்று தெரிந்ததும் ஓரிரு முறை பாந்தமாய்க் கேட்டுப் பார்த்தான். நான் சொல்ல விரும்பவில்லை என்று தெரிந்ததும் கேட்பதை விட்டு விட்டான். தொடுவதையும் கூட. என்னிடம் தெளிவாகப் பேசினான்.தன் தேவைகள் எதிர்பார்ப்பு என்ன என்று சொன்னான். அதில் உடல் தேவையும் இருந்தது. ஆனால் முதல் தேவையாய் இல்லை. காத்திருக்கத் தயார் என்றான்.
சொன்னபடியே நடந்தும் கூட கொண்டான். ரகுவை நினைக்கும் போதெல்லாம் மனம் சுரந்தது.இப்படியும் ஒரு ஆண். அப்படியும். இவனுக்காகவாவது நான் மாற வேண்டும். முயற்சி செய்து அவனுக்காக மட்டுமே கொஞ்சம் மாறினேன். அவன் தொடுதலை அனுமதித்தேன். அவ்வளவு மென்மை அவன் குணம் போலவே.
அப்பாவைக் கொஞ்ச காலம் மறக்க முடிந்தது. அம்மா போன போதும் பெரிதாக ஒன்றும் மாற்றம் வந்து விடவில்லை. அப்பாவுக்கு ஒரு முறை சீரியஸ் என்றதும் நானும் ரகுவும் போனோம். எப்படியோ சமாளித்து அப்பாவைப் பார்க்காமல் தவிர்த்தேன். ரகு தான் அப்படிப் பார்த்துக் கொண்டான் அப்பாவை.
ரகு அப்பாவை எங்களோடு வந்து விடுமாறு கேட்டுக் கொண்டிருந்தான். அவர் சரி என்று சொல்லி விடக் கூடாதே என்று ஆயிரம் வேண்டுதல்கள். அவர் மறுத்து விட்டார். ஊரிலேயே இருப்பதாகப் பிடிவாதமாக சொல்லி விட்டார். கதிரேசன் அங்கிளிடம் சொல்லி விட்டு வந்து சேர்ந்தோம். இப்போது இந்தச் செய்தி.
வாசல் மணி கவனத்தைக் கலைத்து நிகழுக்கு இழுத்து வந்தது. ரகு தான். அத்தியாவசியப் பேக்கிங் முடிந்து கிளம்பினோம். ஊருக்குப் போய்ச் சேர்ந்த நேரம் பகல் முடிந்து இரவு தொடங்கும் நேரம். ஒளி மயக்கம் தருவதாய் இருந்தது.இந்த சந்தர்ப்பத்தில் என்னால் இயற்கையைக் கூட ரசிக்க முடிகிறது. என்ன மாதிரிப் பெண் நான்?
வீட்டில் சொற்பக் கூட்டம் கூடியிருந்தது. கதிரேசன் அங்கிள் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். ஒப்புக்குக் கொஞ்ச நேரம் உள்ளே சென்று நின்றேன். முடிந்த வரை ஐஸ் பெட்டியைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். வெளியே வந்து திண்ணையில் அமர்ந்தேன். எதிர் வீட்டின் வேலிக்குள்ளிருந்து பவள மல்லிச் செடி வாசம் பரப்பிக் கொண்டிருந்தது.
ரகு வெளியில் வந்து என்னருகே அமர்ந்தான். என்ன என்பது போல் பார்த்தேன். விஷயம் இல்லாமல் இந்த மாதிரி அமர மாட்டான் அருகில் வந்து.
“வாட்ஸ் ராங் வித் யு?”
மீண்டும் என்ன என்பது போல் பார்த்தேன்.
“ லுக். அது உன் அப்பா. அவரை ஒரு நிமிஷம் நிமிர்ந்து கூட நீ பாத்த மாதிரி தெரியல. என்ன பிரச்னை உனக்கு? அவர் கூட ஏதும் சண்டையா? ஹெல் வித் இட். அவரே போயாச்சு. இனிமே என்ன?கமான். கொஞ்சம் மெச்சூர்டா நடந்துக்க ட்ரை பண்ணு”
சட்டென்று கோபம் வந்தது. ரகுவின் மீது. அதுவும் எனக்கு. காரணம் அப்பா. இப்பவும் அப்பா. ச்சட்… “ ரகு என்னை ப்ரொவோக் பண்ணாத. உனக்கு தெரியாது”
“என்ன தெரியாது?”
பொறுமை இழந்தேன். கடும் கோபத்தினூடே அடிக்குரலில் “ யு டோன்ட் நோ வாட் ஹி டிட் டு மீ” என்றேன். கண்கள் சிவந்திருந்தன.
“தெரியும்” என்றான் ரகு யோசிக்காமல்.
தொடர்ந்தான். “ தெரியும் . ஐ நோ. உன் அப்பா எல்லாம் சொல்லிட்டார். என் தோள்ல சாஞ்சு குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதார். கால்ல விழப் போனார். அந்த ஒரு செகன்ட் தப்பை செஞ்சுட்டு காலம் பூரா குற்ற உணர்ச்சியை தூக்கிச் சுமந்திருக்கார். ஹி ஹாஸ் லிவ்ட் அண்ட் டைட் வித் த கில்ட். செத்ததுக்கு அப்புறமாவது அவரை நீ மன்னிக்கலாம்”. சொல்லி விட்டு விருட்டென்று எழுந்து போனான்.
இதற்கு எப்படி ரியாக்ட் செய்வதென்று தெரியவில்லை. அப்பா மீது இன்னும் கோபம் அதிகமானது. இதைப் பற்றி ரகுவிடம் பேசியிருக்கிறார் என்று நினைக்கும் போதே கூசியது.
இந்த கணம் என் மனதின் அடியில் நிரந்தரத் தழும்பாய்த் தங்கி விடக் கூடும். ரகுவின் தொடுதல்கள் இனிமேல் என்னை சிலிர்க்க வைக்க முடியாமல் போகக் கூடும். யார் கண்டார்? அசூயை கூட ஏற்படலாம்.
“ செத்த்துக்கு அப்புறமாவது அவரை நீ மன்னிக்கலாம்.” ரகுவின் வார்த்தைகள்.
ஆண்கள். ஆண்கள், எல்லாரும் ஆண்கள்.
தூறலாய் இருந்த மழை வலுக்கத் தொடங்கியிருந்தது. எதிர் வீட்டின் பவள மல்லி ஈரத்தில் சொதசொதத்திருந்தது. மழையில் நனைந்த பூக்களின் வாடை நாசியை நெருடியது.
மழைக்குப் பின்னான பவள மல்லியை எனக்குப் பிடிப்பதேயில்லை.

0 Replies to “பவளமல்லி”

  1. எக்ஸ்ட்ராட்னரி ஸ்டோரி மேன். ரியலி சூப்பர்ப். ஒவ்வொரு இடத்திலும் மழையும் பவளமல்லி பூவின் வாசமும் மனதை நிறைக்கிறது. மிக அற்புதமான, சட்டென்று எவரும் சொல்லத்தயங்கும் கதை. மனதை பாரமாக்கிவிட்டது. யதார்த்தமான அந்த க்ளைமேக்ஸிற்காகவே ஒரு பெரிய ஹாட்ஸ் ஆப். வாழ்த்துக்கள நன்றியும்

  2. எந்தப் பெண் குழந்தையும் நம்பும் முதல் ஆண், அதன் தந்தை. அவரே வழி தவறும்போது அவள் ஆண் இனத்தையே வெறுக்க ஆரம்பிக்கிறாள், ஒருதலைக் காதலில் தோற்றவன், பெண் இனத்தை வெறுப்பதைப் போல. அவளின் மனதில் எத்தகைய ஆணும் முதலில் பவளமல்லியே, இத்தகைய நிகழ்வுகளுக்கு பின் எல்லா ஆண்களுமே சோரம்போன மழையில் நனைந்த பவளமல்லிகளே! வாழ்த்துக்கள் ஹரீஷ். மென்மேலும் வளர்க!

  3. எந்த சுவாரசியமும் இல்லாத மிக தட்டையான கதை. ட்விஸ்ட் என்ன என்பது முதலிலேயே தெரிந்து விடுகிறது. ஒரு பெண்ணின் பார்வையில் கதை சொல்லப்பட்டிருந்தாலும், அதை வார்த்தைகளில் உணர முடியவில்லை.

  4. கதையின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பது நாலாவது பாராவிலேயே புரிந்து விடுகிறது. அதற்கு மேல் வாசிப்பதற்கு சுவராஸ்யம் கூட்டும் சம்பவங்களோ சம்பாஷனைகளோ இல்லாதது கதையின் மைனஸ். அப்பாவை ஒரு பெண் வெறுக்கிறாள் என்றால் இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று கிரகிக்க முடியும். அப்படியொரு சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் கணவன். மன்னிக்கலாம் என்று சொல்லும் நிலை நம்பும் படியாக இல்லை. இப்படி ஒரு ஆண் இருப்பதே அபூர்வம். அப்படியிருக்கும் போது ஆண்கள் எல்லோரும் ஆண்கள் தான் என்பது எப்படிச் சரியாகும்?
    துணிவான கரு தான் என்றாலும் அதைக் கதாசிரியர் சாமர்த்தியமாகக் கையாளவில்லை என்பதே உண்மை.

  5. madhavan, madhuram, satish நன்றிகள் பல .
    meenakshi balganesh & lavanya many thanks
    naveen நன்றி. இது போன்ற கருத்துக்கள் தான் என் போன்ற கத்துக் குட்டிகளுக்கு மேலும் எழுத்தை செப்பனிட உதவும்.
    கனவு திறவோன் – கருத்துக்கு நன்றி. செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு விட்டால் எப்பேர்ப்பட்ட தவறும் மன்னிக்கப்பட்டு விடும் என்பது பொது நியதியாக இருப்பினும் ஒரு பெண் இது போன்ற விஷயங்களை அவ்வளவு சீக்கிரம் மன்னிக்க மாட்டாள் என்பது என் எண்ணம். ஆனால் ஆண் ஒருவன் அழுவது கண்டால் மற்றொரு ஆண் எளிதீல் மனம் இளகி விடும் சாத்தியங்கள் அதிகம். அவன் பார்வையில் அது பெரிய தவறாகத் தோன்றாமல் போகவும் கூடும். அதைத் தான் பதிவு செய்ய முயற்சித்திருக்கிறேன்.

  6. //எந்த சுவாரசியமும் இல்லாத மிக தட்டையான கதை. ட்விஸ்ட் என்ன என்பது முதலிலேயே தெரிந்து விடுகிறது. ஒரு பெண்ணின் பார்வையில் கதை சொல்லப்பட்டிருந்தாலும், அதை வார்த்தைகளில் உணர முடியவில்லை. -//
    சுவாரசியமும் இல்லை என்பது அவரவர் மனப்போக்கு..அது குறித்து ஏதும் சொல்வதற்கு இல்லை.
    ஆனால் //ஒரு பெண்ணின் பார்வையில் கதை சொல்லப்பட்டிருந்தாலும், அதை வார்த்தைகளில் உணர முடியவில்லை// இப்படி கூறியிருப்பது மிகுந்த ஆச்சரியம்…அப்படி உணர முடியாதது குறித்து அவருக்கு எனது அனுதாபங்கள். கதையின் வலிமையே அதை உணர்வதில் தான் இருக்கு. இதைவிட எப்படி உணர வைக்க முடியும் என்பதை அவர் எழுதி காட்டட்டும்..
    ஹரிஷ் மனமார்ந்த வாழ்த்துகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.