படிப்பு அறை – ‘தாத்தாவும் பேரனும்': ‘டோட்டோ-சான்’ – பகுதி 2

சில புத்தகங்கள் நம் மனதைக் கவர்ந்து விடுகின்றன. அதற்கு ஒரு காரணம் தோற்றப் பொலிவு என்று சொல்லலாமோ என்னவோ. இத்தனைக்கும் புத்தகம், அப்படிப் புத்தம் புதிதாகவோ, பளபளப்பான அட்டை/ ஒளிப்படம் இத்தியாதிகள் கொண்டதாகவோ இருக்க வேண்டும் என்று கூட இல்லை. இந்தக் கட்டுரைப் பகுதியில் முன்பு பேசப்பட்ட ‘தாத்தாவும் பேரனும்’ புத்தகம் என்னிடம் கிட்டியபோது அது பல வருடம் படிக்கப்பட்ட, பழைய புத்தகக் கடையில் கிடந்த புத்தகமாகத்தான் இருந்தது. இருந்தும் அதன் ஏதோ தனித்தன்மைதான் என்னை அதைப் பார்க்க இழுத்திருக்க வேண்டும்.

totto-chanஅதில் படங்கள் இருக்கவில்லை. ஆனால், அதன் மஞ்சள் அட்டையும், தலையில் ஒரு அகல விளிம்பு கொண்ட ஹாட் (குல்லாய்) அணிந்த தாத்தாவும், தூண்டில் கம்பைக் கையில் பிடித்த ஒரு சிறுவனுமிருந்த ஒரு அட்டை ஓவியமும் இன்றும் நினைவில் இருக்கின்றன. இது முழுக்கப் பின்னாளைய கற்பனையாக இருக்கலாம் என்றும் தயக்கத்துடன் நான் ஒத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. வாழ்வில் ஒரு கட்டத்தில் நம் நினைவுகளில் எத்தனை கற்பிதம் என்று தெரியாத நிலை வந்தால், அது தொட்டு ஒரு ஜாக்கிரதை உணர்வு வர வேண்டி ஆகிறது. அந்தப் பிரசுரம் பெர்ல் பப்ளிகேஷன்ஸ் என்று நினைவு. அந்தப் பிரசுரத்தின் இன்னொரு வெளியீடு ஒன்றை முன்னதாக நூலகத்திலிருந்து எடுத்துப் படித்திருந்தேன். பெர்ல் எஸ். பக் என்பாரின் புத்தகம் அது, சீனாவைப் பற்றியது. நல்ல நிலம் என்று தலைப்பு.
பெர்ல் பிரசுரப் புத்தகங்கள் சில அன்று நூலகங்களில் எளிதே கிட்டின. இத்தனைக்கும் அவை மிக்க மலிவுவிலையில் கிட்டிய புத்தகங்கள். ஆனால் பள்ளிச் சிறுவனாக இருந்த எனக்கு எந்த விலையும் அதிகம், எந்தப் புத்தகமும் விலை கொடுத்து வாங்க முடியாத உயரம்தான். தமிழ் நாட்டு அரசின் பொது நூலகங்கள் பல ஊர்களில் அன்றே உண்டு, அவற்றில் பெருவாரி, ஓரளவு அழுக்கான, பழைய அறைகளில் ஒரு சில அலமாரிகளே சுமந்த புத்தகங்களோடு இருக்கும். (இது 60களிலிருந்த நிலை.) பொதுவாக எளிதில் சென்றடைய முடியாதபடி மாடிகளில், நெருக்கமான படிக்கட்டுகளைத் தாண்டியே சென்றடையக் கூடியவையாக இருக்கும். வயதானவர்கள் வந்து விடக் கூடாது என்று கவனமாகக் கட்டப்பட்ட நூலக அறைகளோ அவை என்று இன்று எனக்குத் தோன்றுகிறது. அன்று அந்த எண்ணம் எழுந்திருக்க அவசியம் இல்லை. வயது வந்தவர்களிலிருந்து முதியோர் வரை எல்லாரும் தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தவர்கள் என்றுதான் தோன்றி இருக்கும்.
அந்த நூலகக் காப்பாளர்கள் (நூலகர்கள் என்று சொல்வதற்கு அவர்களுக்கு வேறு சில தகுதிகள் இருந்திருக்க வேண்டும். அப்படி தகுதிகள் உள்ள நூலகர்களை நான் இந்த வகை நூலகங்களில் அதிகம் கண்டதில்லை.) பல அரசு அலுவலகங்களில் அன்று ஊழியம் செய்தவர்களை விடக் கொஞ்சமாவது கூடுதல் உயிர்ப்புடன் இருந்தார்கள். முக்கியமாக சிறுவர்களை, இளைஞர்களை உள்ளே அனுமதிக்கக் கை நீட்டவில்லை. ஏதும் சிறிய கட்டணம் இருந்ததா என்று நினைவில்லை. புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துப் போகத் தேவையான அட்டை ஒன்றுக்காக அந்தக் கட்டணம் இருந்திருக்கலாம். இத்தனைக்கும் அவர்களில் பெரும்பாலானார் புத்தகங்கள் படிப்பதில் அத்தனை ஆர்வமற்றவர்களாகவே இருந்திருப்பார்கள் என்பது என் ஊகம்.  ஆனால் புத்தகங்களைக் கூடிய மட்டில் நன்கு பாதுகாத்தார்கள் என்று சொல்லலாம். நானிருந்த சிற்றூரில் ஒருவர் ஓரளவு நூலகராக இருந்தார். சில புத்தகங்களை நான் எடுத்துப் போக முயன்ற போது அவை உன் வயதுக்கு அதிகம் என்று கொடுக்க மறுத்தார். ஆனால் வரிசையாக நான் எடுத்து வந்த புத்தகங்களைப் பார்த்து விட்டு, சிலவற்றைக் கொடுக்கத் துவங்கினார். அவற்றில் ஒன்றுதான் ‘கோரா’. அந்த வரிசைகளில் சிரஞ்சீவி என்பார் எழுதிய ‘பறக்கும் தட்டு’ என்ற புத்தகமும் இருக்கவே செய்தது. :)அரு.ராமநாதன் என்பவர் எழுதிய பல புத்தகங்கள் முதல் சில மாதங்களில் கொடுக்கப்படவில்லை. ஒன்று ‘அராபிய இரவுகள்’ என்ற புத்தகமாக இருக்கலாம். ஆனால் விக்கிரமாதித்தன் கதைகள் கொடுக்கப்பட்டன. நாளாவட்டத்தில் நான் உண்மையிலேயே உயர்நிலைப் பள்ளி மாணவன்தான், நடுப்பள்ளிக்காரன் அல்ல என்று ஏற்றுக் கொண்டார் போலும். நான் இன்னும் உயரமாகத் துவங்கவில்லை. பல தமிழ்வாணன் புத்தகங்கள் இங்கு கிட்டிப் படித்தேன்.
அங்கிருந்து கொணர்ந்து படித்த, ‘நல்ல நிலம்‘ என்ற மொழிபெயர்ப்புப் புத்தகம், பெர்ல் பிரசுரத்தின் வெளியீட்டின் மீது நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டும். அதனால், சில வருடங்கள் கழித்து, உயர்நிலைப் பள்ளி மாணவனாக ஆன போது என்று நினைக்கிறேன், ஒரு நடைபாதைக் கடையில் கிட்டி  மிக மலிவான விலையில் வாங்கிய அதே பெர்ல் பப்ளிகேஷன்ஸ் பிரசுரித்த ‘தாத்தாவும் பேரனும்’ புத்தகத்தைப் படிக்கத் துவங்கினேன். அதை நாலணாவோ என்னவோ கொடுத்து வாங்கினேன் என்று இப்போது தோன்றுகிறது.
60களின் துவக்கத்தில் நாலணா என்பது ஒரு பள்ளிப் பையனுக்குப் பெரிய தொகை. நான் இருந்த சிற்றூரில், ஒரு சினிமா கொட்டகையில் சனி, ஞாயிறு மாடினி காட்சிகளில் என்ன மொழி என்று புரியாத (மொழிபெயர்த்த பெயர்களால் இப்படிக் குழப்பம்) படங்களைக் காட்டுவார்கள். ஆங்கிலம், இந்தி, ரஷ்யன் இப்படி. சாட்டை ராணி என்று ஒரு படம் இருந்தது. ரயில் மீதெல்லாம் தாவி ஒரு பெண் சண்டை போட்டார். குதிரைகளில் சவாரி செய்தார். முகமூடி அணிந்திருந்தார். விழிகளுக்கு மட்டும் இடம் விட்டு கண்களைச் சுற்றி ஒரு பட்டி அணிந்திருப்பார். (சற்று தேடியதில், இது ஹண்டர்வாலி என்ற ஹிந்தி படத்தின் தொடர்ச்சியான ஒரு படம் என்று தோன்றுகிறது. இரண்டாவது ஹண்டர்வாலி படம் 1943 இல் வந்திருக்கிறது. இந்தப் படத்தை 60களில் இன்னும் மாடினி காட்சிகளில் காட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள் போலிருக்கிறது.)
அதே போல ரஷ்யாவிலிருந்து ‘தவளை’கள் பற்றி, குழந்தைகளுக்கான ஒரு படம். ஒரு இங்கிலிஷ் படம் -‘ To Chase a Crooked Shadow’. இதுதான் பிற்பாடு தமிழில் ‘புதிய பறவை’ என்ற படமாக வந்தது என்று நினைக்கிறேன். இன்னொன்று ‘Vertigo’ என்ற இங்கிலிஷ் படம். இது ‘கலங்கரை விளக்கம்’ என்று பின்னால் தமிழில் வந்தது என்று நினைவு.  தமிழில் முடிவை மட்டும் மங்களமாக ஆக்கி விட்டார்கள்!
இந்தப் படங்களைத் தரை டிக்கெட் எடுத்துப் பார்க்க ஒரு கொட்டகையில் இரண்டரை அணாதான் கேட்டார்கள். அதாவது என்ன கணக்கோ, 16 நயா பைசா. நயா பைசா என்பது இன்னும் எங்களுக்கு அத்தனை தெளிவாகப் புரிந்திருக்கவில்லை. ஆனால் அணா, பைசாவை விட எளிதாக இருந்தது கணக்கு. அதுவே வளர்ந்தவர்களுக்கு 25 பைசா டிக்கட் கட்டணமாக இருந்தது. ஆக ‘தாத்தாவும் பேரனும்’ ஒரு சினிமா பார்க்கும் செலவுக்கு நிகர்.
நானோ அப்போது வருடத்துக்கு ஒரு சினிமாவுக்குத்தான் போக அனுமதிக்கப் பட்டிருந்தேன். சனிக்கிழமை மாடினி காட்சிகள் அந்தக் கணக்கில் வராதவை. அவை முழு மூன்று மணி நேரம் ஓடாத சினிமாக்கள். ஒன்றரை மணி கூட இராதவை. சில பாதியோடு நின்று விடும். அறுந்த சினிமாத் துண்டுகளை ஒட்ட முடியாமலோ, பழைய ப்ரொஜெக்டர் பழுதானாலோ, காட்சியை ரத்து செய்து விடுவார்கள். அடுத்த வாரம் அதே டிக்கெட்டோடு வந்தால் அனுமதி கிட்டும். ஆனால் அது வேறு படமாக இருக்கும். அப்படி ஒரு சினிமாவுக்குச் சேர்த்து வைத்த காசில் வாங்கிய புத்தகமாக இது இருந்திருக்கலாம்.
அதன் ஓட்டமான தமிழும், கருப்பொருளின் நுதுனமும், கதை சொன்ன பாணியிலிருந்த லகுவான சகஜபாவமுமாக அப்புத்தகத்தை மறக்கவொண்ணா அனுபவமாக ஆகியிருந்தன.
இந்தக் காரணங்கள் எல்லாம் இருந்தன என்றாலும், அந்தக் கால கட்டத்தில் தமிழல்லாத எந்த அன்னிய இலக்கியப் புத்தகம் கையில் கிட்டினாலும் படித்திருப்பேன். நிறைய வங்காள மொழியிலிருந்து தமிழுக்கு மாற்றப்பட்ட புத்தகங்களை அப்படித்தான் படித்தேன். நினைவில் இருப்பது, தாகுரின் ‘கோரா’. கோராவில் தாகுர் நிறைய கருத்தியல் சர்ச்சைகளை முன்வைத்திருந்தார் என்றாலும் அன்று அவை எனக்குப் பிடிபட்டது ஓரளவாகத்தான் இருக்கும்.
அதே நேரம் காலனிய இந்தியாவிலிருந்த பிரச்சினைகளில் பல என் பிள்ளைப் பருவச் சிறு நகர வாழ்வுக்கு அப்படி ஒன்றும் அன்னியமாகத் தெரியவில்லை. பிற்காலத்தில் நான் படித்த ஆர்.கே நாராயணனின் ‘மால்குடி’ வாழ்க்கைச் சித்திரங்களில் கிட்டிய ஓர் ஊரைப் போலத்தான் இருந்தது நான் வாழ்ந்த அந்தச் சிற்றூர். தார்ச் சாலைகள் பத்தில் ஒரு பங்கு கூட இல்லாத அந்த ஊரில், பிரிட்டிஷ் ஆட்சியின் சுவடுகள் நிறையவே இருந்தன, இன்னமும் அவையே ஊரை நகர்த்தின. பஞ்சாயத்து என்று ஊராட்சி அலுவலகத்தின் பெயரை மாற்றினார்கள் என்றாலும் அது முனிஸிபாலிட்டியாகத்தான் எங்களுக்குத் தெரிந்திருந்தது. அதெல்லாமும் போய் இன்று ஊராட்சி அலுவலகமாக அது ஆனாலும் சற்று வயதானவர்களில் அனேகர் அதை முனிஸிபாலிட்டி என்று சொல்வார்கள் என்பது என் ஊகம்.
தாகுரின் பாத்திரங்கள் உலவிய கதைக்களன் அதிலிருந்து விலகி, எங்கோ தொலைவில் இருந்த என் சிற்றூரிலும் இருந்தது போன்ற என் உணர்வு பிரமைதான், ஆனால் நம்பகத்தன்மை இருந்த பிரமை. நம்பகத்தன்மை இருந்தால் அது எப்படி பிரமையாகும் என்று தர்க்கக் கேள்விக்குச் சரியான பதில் என்னிடம் இல்லை. தாகுரின் கோராவில் வரும் பிரம்ம சமாஜத்தினரின் கேள்விகள், கிருஸ்தவத்தின் சவால் ஆகியனவற்றுக்கு நிகராக மரபு இந்து சமுதாயத்தை எள்ளும் வசவு வாசகங்கள், உள்ளூரில் திராவிட இயக்கத்தின் சுவரெழுத்துகளாக, என் தெருவின் முனைச் சுவரிலேயே இருந்தன. கோரா அவற்றை விட மேலானதாக என் பள்ளிச் சிறுவ புத்திக்கும் தெரிந்திருக்க வேண்டும். கால இடைவெளியால், நிலப்பரப்பு இடைவெளியால் மாறித் திரிந்து போன கருத்தியலின் வேறுபட்ட தாக்கங்கள் பற்றி யோசிக்குமளவு விவர ஞானமோ, வழி காட்டிச் செலுத்தும் நபர்களின் தலையீடோ எனக்குக் கிட்டி இருக்கவில்லை.
அதே போல அன்று தாக்கம் கொடுத்த இன்னொரு புத்தகம், ரஷ்ய இலக்கியத்திலிருந்து தமிழாகி இருந்த ஷோலகோவின் ‘டான் நதி’ நாவல். தலைப்பில் மட்டும் அமைதியைக் கொண்டிருந்த புத்தகம் அது. மனிதர்களின் ரத்தக் களறியான வரலாற்று நகர்வுகளை அலட்சியம் செய்து தன் போக்கில் இயங்கும் இயற்கையின் உருவகமாக டான் நதி என்று ஒரு கருத்து எனக்குப் படிந்தது. இயற்கையின் பிரும்மாண்டம் என்பது என்ன வகைத்தது என்று வளர்ந்தவர்களின் அறிவில் கிட்டும் ஒரு பேருரு, அப்படி ஒரு தரிசனம் எனக்கு அன்று கிட்டியிருக்கவில்லை. ஆனால் புராணங்களில் கிட்டும் அண்ட பேரண்டம் என்பதை வைத்தும், தினசரி இரவில் எரிபொருள் கசடான மாசும், ஊரின் தெருக்களின் ஒளி மாசும் இன்னும் அண்டாத சிற்றூர் வானில் தெரிந்த ஏராளமான நட்சத்திரங்களை வைத்தும் இயற்கையின் பிரும்மாண்டம் புரியவே செய்தது.
தவிர அப்போது செயற்கைக் கோள் என்ற ஒரு கருத்தும், அதன் வான் வழி உலாவும் தெரியத் துவங்கி இருந்தன. சில நாட்கள் தெருவை எல்லாம் விட்டு நீங்கித் தடல்கள், ஆற்றுப் படுகை என்று போக நேர்ந்த போது வானத்தைத் தடைகள் இன்றிப் பார்க்க முடியும். இது அனேகமாக முதல் ஷோ எனப்படும், முன்னிரவு சினிமா காட்சியில் இருந்து இருண்ட தெருக்கள் வழியே திரும்புகையில் கிட்டும் காட்சியாக இருக்கும். விஸ்தாரமான தெப்பக் குளத்தின் மேலே வானம் தரை இருளால் ஒளியூட்டப் பட்டதாகத் தெரியும். கோடை விடுமுறையில் சில நாட்களில், குறிப்பாக நல்ல பௌர்ணமி இரவில், ஆற்றுப் படுகையில் இருக்கும் குளிர்ந்த மென் மணலில் சடுகுடு விளையாடுவோம். பிறகு அங்கு அமர்ந்து வம்பளக்கும்போது, வானில் மெல்ல ஒளிக் கோடிட்டு நகரும் எதையோ பார்த்து அது ஸ்புட்னிக் என்று கூச்சலிடுவோம். ஒரு வேளை அது ஸ்புட்னிக்காக இருந்திருக்கலாம்.
அப்போதே மனித எத்தனத்தால் விண்வெளிப் பயணம் சாத்தியம் என்ற நம்பிக்கை துளிர் விடத் துவங்கி இருந்தது. இருந்தும் நடசத்திர வெளி என்பது எத்தனை தூரம், கிரகங்கள் எத்தனை தூரம், ஒளிவேகத்தில் பயணிப்பது என்ன என்பதெல்லாம் தெரிந்திருக்கவில்லை. இன்னும் இந்து செய்தித்தாள் அளவு கூட இங்கிலிஷ் படிக்கத் தெரியாத நிலை. எட்டாம் வகுப்பில்தான் ஓரிரண்டு பத்தி இங்கிலிஷில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்த்து. கோரா போன்ற புத்தகங்களை அதற்கு முன்னரே படித்திருந்தேன். ஆனால் தாத்தாவும் பேரனும் கைக்கு எட்டிய போது, எட்டிலிருந்து ஒன்பதுக்குப் படிக்கப் போயிருந்தேன். உயர்நிலைப் பள்ளியில் இருந்த்தாகத்தான் நினைவு.
‘டோட்டொ-சான், ஜன்னலருகே ஒரு சிறுமி’ என்ற புத்தகத்தை எழுதிய டெட்சுகோ குரொயாநாகி என்ற ஜப்பானிய எழுத்தாளர், தம் நினைவு சக்தி பற்றி அப்படி ஏதும் ஜாக்கிரதை உணர்வு இல்லாதவராகவே, கூச்சமோ, தயக்கமோ இல்லாதே அப்புத்தகத்தை எழுதி இருக்கிறார் என்பது மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. வளர்ந்தவராகவும், புகழ் பெற்ற தொலைக்காட்சி ஆளுமையாகவும் இருந்த டெட்சுகோ குரொயாநாகி, தன் சிறுமிப் பிராயத்து நினைவுகளை மங்காமல் வைத்திருந்து, சிறிதே மெருகேற்றி ஒரு கதை போன்ற உருவோடு நமக்குக் கொடுத்திருக்கிறார். சம்பவங்களும், பாத்திரங்களும் அசல் வாழ்விலிருந்து கிட்டியவை என்றாலும், நடையும், அவை தொகுக்கப்பட்ட பாணியும், பாத்திரங்களின் மனவோட்டத்தை எழுத்தாளர் பதிவு செய்த வகையிலும் இது புனைவின் லட்சணத்தைக் கொள்கிறது.
இந்தப் புத்தகம் எதிரில் இருப்பதால், இதைப் பற்றி மங்கிய நினைவுகள் வழியே பார்க்கும் புல்லரிப்பு இல்லாமல், கற்பனையால் இடைவெளிகளை இட்டு நிரப்பத் தேவை இல்லாமல் இதைச் சொல்ல முடிகிறது. நேஷனல் புக் ட்ரஸ்டின் பல புத்தகங்கள் பார்த்தவுடன் வாங்கு என்று அழைக்காத வகை அலங்காரம் உள்ளன. ஆனால் இந்தப் புத்தகம் பார்த்தபோது, சிறிதும் யோசிக்காமல் வாங்கத் தோன்றியது. நீர்ச்சாயம் போன்ற அந்த நீல வண்ணமும், அது அட்டையின் மேற்புறம் சிறிது கருத்த நீலமாகவும், கீழ்ப்பக்கம் வெளிர் நீலமாகவும் இருந்ததும், அதிலிருந்த சிறுமியின் ஓவியத்திலும் அந்தச் சிறுமி ஊதுபத்திகளிலிருந்து எழும் புகையோடும், கையில் இருந்த ஒரு பூங்கொத்தோடும் இருக்கும் அந்தப் படம் உடனே ஈர்த்தது.
புத்தகத்தின் பின்பக்க அட்டையிலிருந்த விளக்க உரையில் இது ஜப்பானில் வெளி வந்த வருடம் (1981) இது 45 லட்சம் பிரதிகள் விற்றது என்றும் சொல்லப்பட்டிருந்தது இன்னுமே ஈர்ப்பாக இருந்தது. முதல் கருத்தாக, என்ன தைரியமாக இப்படி ஒரு எண்ணிக்கையை அள்ளி விடுகிறார்கள் என்று தோன்றியது. ஆனால், இது ஒரு வேளை நிஜமாக இருந்தால்? சோதிக்க ஒரு எண்ணம் இருந்தது. சோதித்ததில் உண்மையான தகவலாக இருக்கலாம் என்று தெரிந்தது. ஒரு மொழியில் மட்டும் இத்தனை பிரதிகள் விற்றது என்றால், இங்கிலிஷில் மொழி பெயர்த்தது எத்தனை விற்றிருக்கும்? பிறகு பத்து வேறுமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அதுவும் சீன மொழியில் வேறு. நிச்சயம் இன்னும் சில லட்சம் பிரதிகள் விற்றிருக்கும். தமிழிலும் மொழியாக்கம் நடந்திருக்கிறது. தமிழில் வருவதற்கு 13 ஆண்டுகள் ஆகி இருக்கின்றன. இதைத் தமிழில் கொணர யாருக்கோ தோன்றியதே அதிசயம் என்று கருதுகிற நிலையில் நாம் இருக்கிறோம் என்பது வேறு விஷயம்.
முன்பு சொன்ன ‘தாத்தாவும் பேரனும்‘ நாவல் மூல நாவல் வெளியாகி நான்காண்டுகளுக்குள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. அதுவும் ஆற்றொழுக்கான நடையில் படு சுலபமாகப் படிக்கக் கூடிய விதத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

(விரும்புவோர் இந்த வலை முகவரியில் மொத்த நாவலையும் தரவிறக்கிக் கொள்ளலாம். http://www.tamilvu.org/library/nationalized/pdf/81-vallikannan/173-taththaavumpaeranum.pdf. திரு வல்லிக்கண்ணனின் மொத்தப் படைப்புகளும் தேசிய உடமையாக்கப்பட்டதால் இந்தப் புத்தகம் இலவசமாக நமக்குக் கிட்டுகிறது.)

மாறாக இந்த ஜப்பானிய நாவல், அனேகமாக ரூவார்க்கின் மேற்கண்ட நாவல் அளவே உற்சாகம் தரக்கூடியதாகவும், இன்றைய சூழலுக்கு மிக்கப் பொருத்தமுள்ள ஒரு புத்தகமாகவும் இருக்கக் கூடிய ஒன்று, தமிழுக்கு மொழி பெயர்த்து வர 12 ஆண்டுகள் ஆகி இருக்கின்றன. அதுவும் கிட்டியது ஆங்கில மொழி பெயர்ப்பின் வழிதான்.
இப்படி ஒருவர் இருக்கிறார், இப்படி ஒரு புத்தகத்தை அவரால் எழுத முடிகிறது என்பனவும் மகிழ்ச்சியைக் கூடுதலாக்குகின்றன. நம்மில் எத்தனை பேரால் நம் துவக்கப்பள்ளி வருடங்களை நினைவு கூர முடியும்? அதுவும் அவற்றை விரிவாக, வண்ணங்களோடு, தம் ஆசிரியை, ஆசிரியர்கள் பற்றிய வருணனைகளோடும் அவர்கள் நம்மோடு நடத்திய பல உரையாடல்களின் சாரத்தோடு நினைவு கூர முடியும்? நம்மில் பலரும் தம் துவக்கப் பள்ளி ஆசிரியர்களைப் பெயரோடு நினைவு வைத்திருப்போம், ஆனால் அவர்கள் நம் வாழ்விற்குக் கொடுத்த கொடை என்ன என்பதை அத்தனை விவரமாகச் சொல்லத் தெரியாதவர்களாகவே அனேகமாக இருப்போம்.

(தொடரும்)

பி.கு: இந்தப் புத்தகம் பற்றி நியுயார்க் டைம்ஸில் வந்த ஒரு விமர்சனம்: GROWING UP JAPANESE By Susan Chira

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.