திருவரங்கன் உலா

This entry is part 35 of 48 in the series நூறு நூல்கள்

 

Ula

சிறுவயதில் சரித்திரத் தொடர்கதையாகப் படித்த ‘திருவரங்கன் உலா’ எனும் புத்தகத்தை சமீபத்தில் மீண்டும் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ஒரு சாகசக் கதையாக சிறுவயதில் தோன்றிய இக்கதையானது இம்முறை முற்றிலும் புதியொதொரு பரிமாணத்தை எனக்கு அளித்தது சற்று வியப்பாகவே இருந்தாலும் அதன் காரணங்களை என்னால் சுலபமாக அறிந்து கொள்ள முடிந்தது.
இப்புத்தகத்தை இம்முறை படிக்கும் முன்னரே பதினான்காம் நூற்றாண்டில் குமாரகம்பணரின் மனைவியான கங்காதேவியால் எழுதப்பட்ட ‘மதுரா விஜயம்’ என்னும் சமஸ்கிருதக் கவிதையின் ஆங்கில மொழியாக்கம் சுல்தானிய ஆக்கிரமிப்பில் சிக்கித் தவித்த மதுரை நகரைப் பற்றிய ஒரு அவல சித்திரத்தை ஏற்கெனவே என் மனதில் வரைந்திருந்தது. அதற்கு வலுச் சேர்க்கும் விதமாகவே ஓராண்டுக்கு முன்னர் படித்த ‘Ibn Batuta’ என்னும் இஸ்லாமிய அறிஞரின் சுல்தானிய மதுரை பற்றிய பயணக் குறிப்புகளும், ‘Robert Sewell’ என்னும் ஆங்கிலேய வரலாற்று அறிஞரின் ‘Vijayanagara , a forgotten empire’ என்னும் புத்தகமும், பதினான்காம் நூற்றாண்டில் துருக்கிய படையெடுப்பின் காரணமாக தென்னிந்தியாவில் நிலவிய அவல நிலையினை எனக்கு நன்கு உணர்த்தியிருந்தன.
இந்த சரித்திர ஆவணங்களின் பின்னணியில் வேணுகோபாலனின் ‘உலா’ தமிழில் எழுதப்பட்ட முக்கியமான ஒரு நாவலாகத் தோன்றியது. சாண்டில்யன் கதைகள் போன்று கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு வேயப்பட்ட கதை எனினும் ‘உலா’ கற்பனை உலகில் நிகழ்கிற கதை அல்ல. பதினான்காம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் உண்மையாகவே நடந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து தொடங்கும் இந்த அவலக் கதையானது பல சரித்திர சான்றுகளுடனேயே பயணிக்கிறது.
முகம்மது பின் துக்ளக் என்று பின்னால் அறியப்பட்ட உலுக் கானின் ஆக்கிரமிப்பைச் சித்திரிப்பதில் ஆரம்பிக்கும் இக்கதை முழுவதும் எங்கெல்லாம் சரித்திர சான்றுகள் வலுச் சேர்க்குமோ அவ்வாறே ஆசிரியர் வேணுகோபாலன் மிக நுணுக்கமாகக் கோர்த்து செறிவான ஒரு புத்தகமாகப் படைத்துள்ளார். மாலிக் கஃபூரின் படையெடுப்பில் தொடங்கிய தென்னிந்தியச் சூறையாடல் அதற்குப் பின்னரும் இரு முறை தொடர்ந்தது. மூன்றாவது முறையாக நடந்த சூறையாடலில் மதுரையில் நாற்பது வருடத்திற்கு சுல்தானிய ஆட்சியையும் நிறுவியது. திருவரங்கத்தில் ஆரம்பித்து மதுரை வரை இந்த ஆட்சியில் நிலவிய சோக வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் கற்பனை கலந்த ஒரு சரித்திர ஆவணமாகவே ‘உலா’ அமைகிறது.
மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே போர் செய்வதென்பது அவனுடனே உடன்பிறந்ததாகும். இந்திய மண்ணிலும் போர் புதிதான ஒன்றாக என்றுமே இருந்ததில்லை. ஆனால், ஒரு வாழ்க்கை முறையையே அடியோடு அழித்தொழித்து நாசம் ஒன்றே குறிக்கோளாக கொண்டிருந்த துருக்கியரின் படையெடுப்பானாது மிகப்பெரிய கலாச்சாரச் சீரழிவை ஏற்படுத்தியது. ஹொய்சளர்களை முறியடித்த அலாவுதீன் கில்ஜி அவர்களின் செல்வத்தைக் கவர்வதுடன் நின்று விடவில்லை. தங்கள் மதத்திற்குப் புறம்பான ‘அந்நிய’ரின் கலாச்சாரத்தை வேரறுக்கும் எண்ணத்துடன் கோவில்களை நிர்மூலம் செய்ததோடு, பொது மக்களுக்குத் தாங்க இயலாத கொடுமைகளை இழைத்தான். துருக்கியர் தொடங்கி முந்நூறு வருடங்கள் தொடந்த இந்த அழித்தொழிப்பைத் தடுத்து நிறுத்தியது விஜயநகரப் பேரரசு ஆகும்.
வேணுகோபாலன் கதை எவ்வாறு விஜயநகர அரசு அப்படிப்பட்ட அரணாக பிற்காலத்தே செயல்பட்டது என்பதையே விவரிக்கிறது. இந்த இருண்ட காலத்தின் அவல வாழ்க்கையை ஆசிரியர் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார். போர் தொடுக்கப்பட்ட கிராமங்கள் மட்டுமன்றி அதன் சுற்றுப்புற கிராமங்களும் எரிக்கப்படுகின்றன. அப்பாவிப் பொது மக்கள் சிரச்சேதம் செய்யப்படுகின்றனர். எஞ்சியோர் புலம்பெயர நேருகிறது. உயிர் துறக்காத பெண்கள் அரண்மனை வேசிகளாகத் தள்ளப்படுகின்றனர். மக்களின் உயிர்நாடியாக இருந்த கோவில்கள் சிதைக்கப்படுகின்றன.
உலுக் கானின் வருகைக்கு ஒருநாள் முன்னதாக இக்கதை ஸ்ரீரங்கத்தில் துவங்குகிறது. துருக்கியரின் ரத்தவெறியைத் தென்னிந்திய மக்கள் ஏற்கெனவே அறிந்திருந்ததால் பொது மக்கள் அனைவரும் திருவரங்கத்தை விட்டுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஊர் பாதுகாப்பிற்காக இருக்கும் சிறுபடையுடன் மோதும் இப்பெரும்படையானது வெற்றிக்குப் பின்னர் செய்த சூறையாடலும், கோவில் சிதைப்பும், ஊரில் எஞ்சியிருந்த பன்னிரெண்டாயிரம் மக்களின் சிரச்சேதமும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியைத் தன் கற்பனையின் வாயிலாக விவரிக்கும் அதே நேரத்தில் அப்போதைய திருவரங்க நகரம், அதன் கோட்டைச் சுவர்களின் அமைப்பு போன்ற சரித்திரத் தகவல்களின் வாயிலாக படிப்பவர்களை சம்பவங்களோடு ஒன்றிவிடச் செய்து விடுகிறார்.
கற்களால் ஆன கோவில்கள் மற்றும் அவற்றின் மூலவர் சிலைகளை உடைப்பதுடன் விலை உயர்ந்த உலோகங்களால் செய்யப்பட்ட உற்சவர் சிலைகளையும் செல்வங்களுடன் கொள்ளையடிப்பது துருக்கியரின் வழக்கமாக இருந்தது. மதுரையில் அவர்களின் ஆட்சிக்காலத்தில் மீனாட்சி அம்மனும் நாகர்கோவிலில் பாதுகாப்பாக இருக்க வேண்டியிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அரங்கநாதரைத் துருக்கியரிடமிருந்து காப்பாற்ற, ஸ்ரீவைஷ்ணவர் குழுவொன்று எவ்வாறெல்லாம் தங்கள் உயிரைப் பணையம் வைத்துப் பல இடங்களில் பாதுகாத்து, விஜயநகர ஆட்சி மலர்ந்த பின்னர் திருவரங்கத்தில் மீண்டும் ஸ்தாபித்தனர் என்பதே ‘உலா’வின் மையக்கதையாகும். நிஜத்தில் வாழ்ந்த மகாபுருஷர்கள், காதல், வீரம், எதிர்பாரா திருப்பங்கள், கற்பனைப் பாத்திரங்கள் என பலவும் கலந்து விறுவிறுப்பாகவே கதை நகருகிறது.

Pushpa-thangadurai
வேணுகோபாலன்

இரண்டு பாகங்களாக எழுதப்பட்ட இக்கதை முதல் பாகத்தில் திருவரங்கத்தில் இருந்து அரங்கருடன் கிளம்பிய ஸ்ரீவைஷ்ணவர் குழு எவ்வாறு சிறிதுசிறிதாகச் சிதறிக் கடைசியாக ஒருவராகக் குறைந்து அவரும் அரங்கருடன் சத்தியமங்கலம் அருகே உள்ள காடுகளில் காணாமல் போவதில் முடிகிறது. சத்தியமங்கலம் சேருவதற்கு முன்னால் அரங்கர் அவருடைய குழாமுடன் தங்கியிருந்த பல கோவில்களில் இன்றும் கல்வெட்டுச் செய்திகளை காணலாம்.
திருவரங்கத்தை கைப்பற்றிய பின் மதுரையில் துருக்கியர் ஆட்சி புரிந்த நாற்பது ஆண்டுகள் தமிழ்நாட்டின் இருண்ட காலங்களில் ஒன்றாக அமைந்தது. இவர்களை அகற்ற கடைசி ஹொய்சள மன்னரான வீரவல்லாளார் மற்றும் அப்போதைய பாண்டிய மன்னர் தொடுத்த போர் தோல்வியில் முடிகின்றது. வல்லாளர் தொடுத்த போர் மிக விரிவாக இக்கதையில் விவரிக்கப்பட்டுள்ளது. வெற்றியின் விளிம்பில் எவ்வாறு ஒரு கூலிப்படையின் வஞ்சகத்தால் தோல்வியை அடைய நேர்ந்தது என்பதும், வல்லாளரின் சடலம் கோரமாக காட்சிப்பொருளாக்கப்பட்டது என்பதும் உண்மையான சரித்திர நிகழ்வுகளாகும்.
விஜயநகரத்தை தோற்றுவித்த சகோதரர்களில் ஒருவரான புக்கராயரின் மைந்தன் குமாரகம்பனரின் அரசாட்சிக் கால கட்டத்திற்கு கதை நகருகிறது. அவருடைய மனைவி கங்காதேவி எழுதிய ‘மதுரா விஜயம்’ என்ற சம்ஸ்க்ருத கவிதையின் பெயருடனே இரண்டாம் பாகம் தொடங்குகிறது. கோபண்ணா எனும் பிராமண தளபதி ஒருவரின் உதவியோடு திருவரங்கத்தையும், மதுரையையும் சுல்தானியர்களிடமிருந்து மீட்பதாக தொடருகிறது. கற்பனையும் நிஜமும் கலந்து அரங்கரைக் காடுகளில் இருந்து மீட்பதாகத் தொடரும் கதை, விஜயநகர ஆட்சியில் திருவரங்கத்திற்கே வந்து சேர்வதாக முடிகிறது. திருவரங்கத்திற்கு வந்து சேரும் முன்னே சில காலம் திருப்பதியிலும் இருந்ததாகச் சரித்திர குறிப்புகள் உள்ளன. கதையிலும் அவ்வாறே நடக்கிறது.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பல சரித்திரத் தகவல்களை ஒன்று கூட்டி ஒரு சரித்திர நாவலாக மட்டுமன்றி வரலாற்று உணர்வினையும் அளிக்கும் ஒரு சிறந்த படைப்பாகக் கொடுத்துள்ளார். விஜயநகர எழுச்சியானது திருவரங்கத்திற்கும் மதுரைக்கும் மட்டுமே மலர்ச்சி அளிக்கவில்லை. அன்னியரின் படையெடுப்பால்நிலைகுலைந்துபோன ஒரு கலாசாரத்தையே மீட்டு எடுத்தது. மதுரையில் சுல்தானியரின் அகற்றுகைக்கு பின்னர்தென்னிந்தியா முழுவதுமே ஒரு வசந்த காலம் உருவாகிறது. ஆனால் அத்தகைய ஒரு வசந்தத்திற்கு எத்தகைய ஒரு தியாகம் தேவைப்படுகிறது என்பதையுமே இந்த கதை உணர்த்துகிறது.

Series Navigation<< வெங்கட் சாமிநாதன் – தொடரும் பயணம்ச. தமிழ்ச்செல்வனின் ’பேசாத பேச்சு’ >>

0 Replies to “திருவரங்கன் உலா”

 1. மிகவும் அழகான, பொருத்தமான மதிப்புரை. அந்தக் காலத்து மீ.ப.சோமு, அகிலன், நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், கல்கி, விக்கிரமன் இவர்களின் சரித்திர நாவல்களுக்கு அப்புறம் என்னை மிகவும் கவர்ந்த எழுத்து ஸ்ரீ வேணுகோபாலனுடையது. இந்தத் திருவரங்கன் உலாவை நானும் சமீபத்தில் இன்னும் ஒருமுறை திரும்பப் படித்தேன். அற்புதமான சரித்திர நாவல். ஒவ்வொரு பகுதி கண்களில் நீரையே வரவழைத்து விடும். அடியார்கள் ஸ்ரீரங்கன் பால் கொண்ட ஆழ்ந்த அன்பா, இல்லை, மிக நுணுக்கமான சரித்திர விளக்கங்களா, ஆசிரியர் அவற்றை விவரித்துள்ள முறை மனதைத் தொடும். அவருடைய ‘கள்ளழகர் காதலி’ இன்னொரு அற்புதமான எழுத்தோவியம்.
  இந்த மதிப்புரைக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.

 2. ஓப்லா விஸ்வேஷ்சின் திருவரங்க உலா என்பதை இன்னும் சில வரலாற்று தரவுகளுடன் நாம் காண வேண்டும். துருக்கியர்களின் படையெடுப்புகளின் போது, தமிழர்கள் வணிகத்தின் மூலம் (அவர்கள் மலேசியா தாய்லாந்து இந்தோனேசியா யவனம் கிரேக்கம் வரை) சென்று ஈட்டிய பெரும் செல்வம் கொள்ளையடிக்கப் பட்டது, உண்மைதான். கோயில்களுக்குத் தானமாக கொடுப்பது என்பது இன்று வரை தமிழர்களிடம் இருக்கும் கலாச்சார பழக்கம் என்ற வகையில், கொள்ளையர்கள் செல்வம் கொழிக்கும் கோயிலுக்குள் சென்றுதான் அதை எடுத்துச் சென்றார்கள் என்பது உண்மைதான்.
  இருப்பினும் கலாச்சார ரீதியில் தமிழகத்தில் பெரும் பாதிப்பை உருவாக்கியவர்கள் விஜய நகர பேரரசர்களே. தமிழ்நாட்டில் உள்ள மக்களில் பாதிக்கு நிகராக தெலுங்கு பேசுபவர்களாக மாற்றிய கலாச்சார மாற்றத்தை உருவாக்கியது விஜயநகர பேரரசு என்பதை நாம் மறந்தார் போல் பேசக்கூடாது. ஒரு விஷயத்தை இந்து X இந்து அல்லாதவர் என்று பார்ப்பது போலவே, தமிழர் x தமிழர் அல்லாதவர் என்றும் பார்க்க வேண்டும்.

 3. அருமையான விமர்சனம் செய்திருக்கிறார் ஓப்லா விஸ்வேஷ்.
  புத்தக, திரைப்பட விமர்சனங்கள் என்றால் புத்தகத்தின் அல்லது திரைப்படத்தின் கதையை சொல்லுவது என்கிற தவறான வழக்கத்தை இந்த விமர்சனம் தகர்த்து எறிந்திருக்கிறது.
  ஒரு படைப்பின் பின்புலம், கட்டமைப்பு, அதன் பின் உள்ள உழைப்பு, அப்படைப்பு சார்ந்த மற்ற தகவல்கள் இவை இவ்விமர்சனத்தில் பேசப்பட்டு ஒரு விமர்சனத்தின் சில கூறுகளோடு இது அமைந்திருக்கிறது.
  ஸ்ரீரங்கம் கோயிலை முகமதியர் மட்டுமல்ல டச்சுக்காரர்களும் ஆக்கிரமித்து இருந்தார்கள். சமயபுரம் மாரியம்மன் கோயிலையும் அவர்கள் ஆக்கிரமித்து இருந்தார்கள். இந்த நாவலின் முன்னுரையில் அது பற்றிய தகவலைத் தந்திருக்கிறார் ஸ்ரீரங்கம் வேணுகோபாலனாக அவதாரம் எடுத்த அந்த உயிரோட்டமுள்ள மனிதர்.
  புஷ்பா தங்கத்துரையாக தன் நாவல்களில் தசையாட விட்டவர் தானாடா விட்டாலும் தசையாடியதால் உருவான இந்நாவல் கலாச்சார மீம்களின்மேல் நம்பிக்கையை, எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.
  இந்த நன்னம்பிக்கையை நினைவுபடுத்தும் ஓப்லா விஷ்வேஷுக்கு நன்றிகள்.
  இதைப் போன்ற நேர்மறை உணர்வுதரும் விமர்சனங்களையும், விமர்சகர்களையும் சொல்வனம் ஊக்குவிக்காவிட்டால் வேறு யாரும் ஊக்குவிக்கப் போவதில்லை.
  தாய்த் தமிழ் மரபிற்காக நம் முன்னோர்கள் பட்ட வேதனைகளைப் படித்து உளம் உகுக்கும்போது, அந்த உன்னத உணர்வில் கழிவுநீர் கொட்டியதுபோன்ற சமகாலக் கருத்து இருப்பது, நம் முன்னோரின் உழைப்பு வீணாகியதோ என்று வேதனை தருகிறது.
  கொலை, கொள்ளை, கற்பழிப்புகளில் இருந்து தமது முன்னோரைக் காப்பாற்றிய சக மனிதரைக்கூட தமிழரல்லாதவர் என்கிற ஒரே காரணத்திற்காக வெறுக்க வேண்டும் என்கிற நிலையில் தற்காலக் கால்வெல்ட் தமிழகமும், மெக்காலேபுத்திரத் தமிழர்களும் இருப்பது வெட்கத்தையும், வேதனையையும் தருகிறது.
  வேற்று இன, மொழிகள் புழங்கும் இலங்கையிலும், வியட்நாமிலும், மலேசியாவிலும், மும்பையிலும், டெல்லியிலும், இந்தோனேஷியாவிலும், கனடாவிலும் தமிழர் ஆதிக்கம் அதிகம் இருப்பதைக் கண்டு பெருமையுடன் சிலிர்க்கும் இக்காலத் தமிழர்களுக்கு மற்ற இன, மொழியினர் தமிழ்நாட்டில் இருப்பதே குமட்டலைத் தருகிறது என்பது முள்முரணாக இருக்கிறது.
  தாய்த் தமிழ் மரபு செத்துப்போன இந்த மண்ணில் இனி கற்றாழையும் விளையாது.
  ஓம் கலாச்சார மீம்களே சரணம், சரணம் !

 4. Mr. Obla Visvesh has done a good job with both the language as well as the motivation to this much needed work.
  The period these mahAmoodans destroyed our temples etc., is the “second dark age” in Tamil Nadu history and darker and more cruel than the first one during kalappirars.
  In addition, this history is still affecting us and is shaping the future of our original Tamil culture — and more importantly, our children, and most importantly, negatively.
  Much can be done based on this novel. Vishvesh Obla has done what he could do in the limited time he has had. My thanks and salutes to him.
  – See more at: http://solvanam.com/?p=38507#comment-2303

 5. When Mohammedans barged inside Srirangam temple, Sri hey ran and finally reached a place close to MadhyaRangam(near SivasamudVedanta Desikar and his son hid themselves with the idol along with dead bodies posing themselves as dead ! Very wise and apt decision. After the invaders went off Desikar and son ran off in darkness ..whole night traM Falls in Karanataka and settled at Satyaakaalam (Satyagalam) at Cauvery banks. It is a wonderful place with a lot of history behind. After some 12 years of Desikar’s prayers to Lord Hayagreeva, peace came back to Srirangam with the return of the Lord over there.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.