தனியும் தானும் அத் தையலும் ஆயினான்

இந்திய இதிகாசங்களில் ஒன்றான கம்பராமாயணப் பாடல்களை வைத்து நிறைய புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன; பட்டிமன்றங்கள், விவாதங்கள் நடைபெறுகின்றன; திரைப்படப் பாடல்கள் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன; குறிப்பிட்ட கம்பராமாயணப் பாடல் வரிகளும், கிட்டதட்ட தேய்வழக்கு (cliche) என்று சொல்லக்கூடிய அளவிற்கு, திருக்குறள் போல நம்மிடையே புழங்கிக் கொண்டிருக்கின்றன.

என்னது? தேய்வழக்கா?

பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதிய காப்பியத்தை  பிரம்மாண்ட பனி அடுக்குகளின் ஆயிரம் அடிகளுக்கு அடியில் வைத்துப் பாதுகாத்தது போல் இப்போது படித்தாலும் புத்தம் புதிதாய் இருக்கிறது. அத்தனை “கீழ்” இருந்தாலும் அதனை அடைய கொஞ்சம் மெனக்கெடல் மட்டுமே போதுமானது என்பது சில நண்பர்களுடன் சேர்ந்து ஒரு தேர்ந்த ஆசிரியர் துணையுடன் வாசிக்கத் தொடங்கிய போதுதான் தெரிந்தது.

இது நிச்சயம் எந்நாளும் தேயா வழக்கே.

வாசித்து வருகையில் குறிப்பிட்ட  சொற்களையும் அவை தரும் சித்திரங்களையும் அனுபவங்களையும் பற்றி இங்கு நான் சொல்ல விழைவது என்பது வீட்டிற்குள் வேகமாக ஓடி வந்து மூச்சு வாங்கிக்கொண்டே பள்ளியில் நடந்த சம்பவத்தைச் சொல்லும் சிறுவனின் முயற்சி மட்டுமே

***

இரு வருடங்களுக்கு முன் ஓர் இலையுதிர்கால மாலைக் கதிரவனை எனது ஐபோனில் சுட்டுத்தள்ளிக் கொண்டிருக்கும்போது ஆந்திர அறை நண்பன் ஆச்சரியமாக கேட்டான்  சிவா காரு, அதுதான் தினம் தினம் சூரியன் வந்து போயிக்கிட்டு இருக்கே, ஏன் இப்படி எடுத்துக்கிட்டே இருக்கீங்க, போரடிக்கலையாஎன்று.

சற்று நேரம் யோசிக்கவைத்துவிட்டான்.

ஆம், தினமும், தினந்தோறும் அதே சூரியன், சந்திரன்தான், மேகங்கள்தான்,  ஆனால் புதிது புதிதாக சலிக்கமாட்டாமல்.

கம்பராமாயணத்திலும் இருளும் சூரிய, சந்திர உதயங்களும் அஸ்தமனங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு முறை குறிப்பிடப்படும் போதும் அந்த வர்ணனைகளும் அன்றைய தினத்தைப் போல் புதிதாகவே இருக்கின்றன. நிலக் காட்சிகள், இயற்கை வருணனைகள் இங்கிலாந்தின் அடர் பசுமை (lush greenery) போல காப்பியத்தில் எங்கும் நிறைந்திருக்கின்றன.

இவற்றில் சிலவற்றைப் பற்றியாவது (பால காண்டத்தில் இதுவரை வாசித்தவைகளிலிருந்து) இன்றைய பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

இருள்:

விசுவாமித்திர முனிவரும் ராமனும் லட்சுமணனும் பொன் மதில்கள் சூழ்ந்த மிதிலை நகருக்குள் போகிறார்கள்.

காண்டம்: பால காண்டம்

படலம்: மிதிலைக் காட்சிப் படலம்

RLV

நகர வீதிகளில் பல்வேறு  காட்சிகள் காண்கிறார்கள். பின் அரண்மனையை நெருங்குகிறார்கள்.கன்னி மாடத்தில் கொல்லும் வேலும் கூற்றவனையும் என்ன என்று கேட்கும் மதர்க்கும் விழிகள் கொண்ட சீதை நிற்கிறாள்.

இராமனும் சீதையும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொள்ளும்அண்ணலும் நோக்கி அவளும் நோக்கும், பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ  பாடல் வரிகள்  மிகவும் புகழ் பெற்றவை எனவே இந்த வரிகளைப் பற்றி நான் இங்கு குறிப்பிடப்போவதில்லை.

பின், நின்றவர் நடந்து போய் ஜனக அரசனைக் கண்டு, உபசரிக்கப்பட்டு ஓர் மாட மாளிகையில் தங்க வைக்கப்படுகின்றனர்.

அன்றிரவு விசுவாமித்திர முனிவரும் தம்பி லட்சுமணனும் அவரவர்க்கு அளிக்கப்பட்டிருந்த படுக்கையறைகளுக்குப் போனவுடன், தனது அறையில் தனியாக இருக்கிறான், இருட்கனி போன்ற ராமன்.

முனியும் தம்பியும் போய் முறையால் தமக்கு

இனிய பள்ளிகள் எய்தியபின்

ராமனைத் தனிமை சூழ்ந்திருக்கிறது. இருள் சூழ்ந்திருக்கிறது. திங்கள் சூழ்ந்திருக்கிறது. பின்சீதையின் நினைவு சூழ்ந்திருக்கிறது.

தன்னைச் சூழ்ந்தவை எல்லாமாகவே ராமன் ஆகிறான். தனிமை, இரவு, திங்கள்அப்புறம் தையல்

…இருள்
கனியும் போல்பவன் கங்குலும் திங்களும்
தனியும் தானும் அத் தையலும் ஆயினான்

மாடத்தில் தெரிகின்ற திங்களாக ஆகிறான்.

அந்த இரவாகிறான்.

அங்கு சூழ்ந்திருக்கும் தனிமையாக ஆகிறான்.

பின் அந்தத் தையலாக, சீதையாக அவள் நினைவாகவே ஆகிவிடுகிறான்.

ராமன் அங்கிருந்த எல்லாமாகவே ஆகிறான்.

பின்னிரவில் மாளிகையில் ஒவ்வொரு விளக்காக அணைக்கப்பட்டு வருவதைப் போல் படிப்படியாக இரவாக, திங்களாக, அந்த தனிமையில் கலந்து தனிமையாக மாறிப் பின்னர் கடைசி சுவிட்ச்சும் அணைக்கப்பட்டு தன்னுணர்வு இன்றி சீதையின் நினைவாகவே மாறிவிடுகிறான் ராமன்.

அந்த இரவு நம் கண்ணெதிரில் விரிந்து படிப்படியாக ஒவ்வொன்றாக ஆகி வருவது அழகான காட்சி. கடைசியில் ஒன்று மட்டுமே எல்லாமாக இருக்கிறது.

ஒரு பாடல் தரும் வாசிப்பு அனுபவத்தை வாசகர்கள் நெருக்கமாக உணரும்போது அது அவரவருக்கான அனுபவமாக ஆகிவிடுகிறது. ஒரே appதான், ஆனால் அவரவருக்காகவே தனித் தனி session!

முனியும் தம்பியும் போய் முறையால் தமக்கு

இனிய பள்ளிகள் எய்தியபின், இருட்

கனியும் போல்பவன் கங்குலும் திங்களும்

தனியும் தானும் அத் தையலும் ஆயினான்.

இந்தப் பாடலில் எனது அடிக்கோடு வார்த்தை:

இருட்கனி போன்ற ராமன் கருத்த, ஆனால் சுவை மிக்க கனி! விளக்கம் தேவையில்லைஇருளின் திரட்சி.

***

நமது சுற்றுப்புறச் சூழ்நிலைகள் நம்மையேதான்,  நமது மனநிலையைத்தான் பிரதிபலிக்கின்றன. அதனால்தான் கொளுத்தும் வெயிலில் கொதிக்கும் கடற்கரை மணல் 10C போல் குளிர்கிறது. அதே சமயம் 21C மிதமான இளம் மாலையில் வண்ணவண்ணப்பூக்களும் புற்களும் புறாக்களும் இருக்கும் தோட்டத்தில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் தாத்தாவின் கண்களில் ஏனோ கண்ணீர்.

விசுவாமித்திர முனிவரும் இராமனும் லட்சுமணனும் சென்றபின் சீதை இராமனின் நினைவாக வாடுகிறாள்.  அப்போது என்ன நிகழ்ந்தாலும் அவளுக்குப் பிடிப்பதில்லை.

இருள் மெல்ல வந்து உலகின் மேல் கவிய ஆரம்பிக்கிறது. மேலும் மேலும் உலகைத் தன்னுள் செலுத்தித் தனதாக மாற்றிக்கொண்டிருக்கிறது.

ஆலகால விஷம் உலகம் முழுவதும் பரவுவதைப் போன்று….சற்றே நிறுத்தி யோசித்தாலே இருள் பூமிப்பந்தின் ஒரு பக்கத்தை விரைவாக விழுங்கிக்கொண்டிருப்பதை விஷம் பரவும் சித்திரமாகக் கண்டுகொள்ள முடிகிறது.

கருங்கடல் கிளர்ந்து எழுந்ததைப் போன்று.

ஆலம் உலகில் பரந்ததுவோ;
ஆழி கிளர்ந்ததோ, அவர் தம்
நீல நிறத்தை எல்லோரும்
நினைக்க அதுவாய் நிரம்பியதோ,
காலன் நிறத்தை அஞ்சனத்தில்
கலந்து குழைத்துக் காயத்தின்
மேலும் நிலத்தும் மெழுகியதோ,
விளைக்கும் இருள் ஆய் விளைந்தவே.

நீல நிற ராமனை எல்லாரும் நினைக்க நினைக்க, உலகமே கருநீல நிறமாக மாறிவிடுகிறது. அதுவும் எப்படி? எமனது   கருநிறத்தை மையோடு  குழைத்து வானத்தின் மீதும் பூமியின் மீதும் பூசியது போன்று.

இந்தப் பாடலில் எனது அடிக்கோடு வார்த்தை: அஞ்சனம்மை

***

அந்தி மாலை:

பின் வரும் பாடலில் சீதையின் அப்போதைய மனநிலையில் அந்தி மாலையை வர்ணிக்கும் விதம் சற்றே அதிரவைக்கிறது.

சீதைக்கு அந்தி மாலை வந்தது காலன் வந்தது போன்று தோன்றுகிறது!

விரி மலர்த் தென்றல் ஆம்
வீசு பாசமும்,
எரி நிறச் செக்கரும்
இருளும் காட்டலால்,
அரியவட்கு, அனல் தரும்
அந்திமாலை ஆம்
கரு நிறச் செம்மயிர்
காலன், தோன்றினான்.

மலர்ந்த பூக்களின் மீது வரும் தென்றல், காலனின் வீசு பாசக்கயிறாக தோன்றுகிறது.

செவ்வானம் செம்பட்டை மயிராக தோன்றுகிறது.

இருள் கரிய நிறமும் செம்மயிர்களும் உடைய காலன் அங்குத் தோன்றுகிறான்!

ஆம், காமநோயில் அந்தி செவ்வானம் செம்மயிர் காலனாக தோன்றுகிறது

இந்தப் பாடலில் எனது அடிக்கோடு வார்த்தை: கருநிறச் செம் மயிர்க் காலன்எந்த விளக்கமும் தரத் தேவையில்லாத, எளிய, இன்றைக்கும் பழக்கத்திலிருக்கும் வார்த்தைகள், இல்லையா

***

சந்திரன்:

சந்திரனை….எங்குதான், யார்தான் குறிப்பிடவில்லை. காப்பியங்களிலிருந்து, சினிமா பாடல்கள், நாஸா என்று சந்திரன் மனிதர்களால் பல்வேறு காலங்களில் குறிப்பிடப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

இங்கும் சந்திரன் மெல்ல எழுகிறான். நான் திங்களாக இருந்தால் சற்றே பயந்தபடிதான் அங்கே தலையைக் காட்டுவேன். திங்கள் பயந்தபடியே, சீதை சந்திரோதயத்தைத் தூற்றுகிறாள்.

பெருகிப் பெருகி, உலகை விழுங்கும் இருள் அல்லது கரு நெருப்பின் இடையில் எழுகிற வெண் நெருப்பே என்று பழிக்கிறாள்! பிரிவுக் கண்களுக்கு சந்திரனும்  வெண் நெருப்பாகத்தெரிகிறான்.

கரு நெருப்பு, வெண் நெருப்பு! வாட்டும் மனநிலைதான், அதற்காக வெண் நெருப்பா?!

நீங்கா மாயை அவர் தமக்கு
நிறமே தோற்றுப் புறமே போய்
ஏங்காக் கிடக்கும் எறிகடற்கும்
எனக்கும் கொடியை ஆனாயே,
ஓங்கா நின்ற இருளாய் வந்து
உலகை விழுங்கி, மேன் மேலும்
வீங்கா நின்ற கரு நெருப்பின் இடையே
எழுந்த வெள் நெருப்பே.

இந்தப் பாடலில் எனது அடிக்கோடு வார்த்தைகள்: கருநெருப்பு, வெண் நெருப்பு.  நிச்சயம் திரைப்படப் பாடல்களில் இந்த பிரயோகம் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும்.

===

சீதைக்குத்தான் இப்படியானால் ராமனுக்கு நிலவு எப்படித் தெரிகிறது?

உலகைக் கொள்ளை கொள்ளப் பொங்கி எழுகின்ற பாற்கடல், வெள்ளம் போல் படரும் நிலா, உயிரைத் துருவும் வெண் விஷம் போல்! அதுசரி, ராமனும் சளைத்தவனா என்ன?!

கொள்ளை கொள்ளக் கொதித்து எழு பாற்கடல்
பள்ள வெள்ளம் எனப் படரும் நிலா
உள்ள உள்ள உயிரைத் துருவிட
வெள்ளை வண்ண விடமும் உண்டாங் கொல்லோ.

இந்தப் பாடலில் எனது அடிக்கோடு வார்த்தை: படரும் நிலாமிகவும் பழகிய உதாரணம் என்றாலும் சலிக்காத உதாரணம்.  வெள்ளை வண்ண விடம்  வெள்ளையான விஷம் (வெள்ளையாக இருந்தால் நல்லது என்று அந்த காலத்திலெல்லாம் கிடையாது!)

***

அதிகாலை:

IMG_4503

ஒரு வழியாய் இராமன் கண்ணயர்ந்து அந்த இரவு கழிகிறது. மறுநாள் விடிகிறது. இராமனைக் கதிரவன் தனது இளங்கதிர் கரங்களால் வருடி எழுப்புகிறான்.

இந்தப் பாடலை இங்கு எடுத்துக் கொள்ளக் காரணம் ஆழி என்ற சொல் பயன்படுத்தப்பட்ட விதங்கள்

கொல் ஆழிஇங்கு ஆழி = சக்ராயுதம்

எல் ஆழிஇங்கு, ஒற்றைச் சக்கரத் தேர்.

அல் ஆழிஇங்கோ இரவுக் கடல்பின்

தொல் ஆழிதொன்மையான பாற்கடல், கடைசியாக

துயர் ஆழிதுயர் கடல்

தொல் ஆழிதொன்மையான பாற்கடலில் தூங்காமல் துயர்க் கடலில் தூங்கிக்கொண்டிருக்கிறான் ராமன்.

தொல் ஆழியிலிருந்து  துயர் ஆழிக்கு!

தொல் ஆழி tabலிருந்து சட்டென துயர் ஆழி tabற்கு சட்டென புரட்டிய விதமே இந்தப் பாடலை இங்கு குறிப்பிடக் காரணம்.

கொல் ஆழி நீத்து அங்கு ஓர்
குனி வயிரச் சிலை தடக்கைக் கொண்ட கொண்டல்,
எல் ஆழித் தேர் இரவி இளங்
கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப,
அல் ஆழிக் கரை கண்டான் :
ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கைத்
தொல் ஆழித் துயிலாதே,
துயர் ஆழி நெடுங்கடலுள் துயில் கின்றானே.

இதில் ராமனை அதிர்ந்து எழுப்பாமல் பாதங்களை வருடி எழுப்புவது என்பதே ஒரு சிறிய, ஆனால் அழகான கற்பனையாகத் தோன்றுகிறது. தோன்றலை சற்றே நீட்டித்தால், கதிரவன் நம் எல்லாரையுமே முதலில் தன் இளங்கரங்களால்தான் முதலில் வருடி எழுப்ப பார்க்கிறான். அப்படியும் எழுந்துகொள்ள மறுப்பவர்களுக்கு பின் சுளீர் அடி

0 Replies to “தனியும் தானும் அத் தையலும் ஆயினான்”

  1. ஆஹா. கம்ப ராமாயணத்தை எவ்வளவு நுணுக்கமாக ஆர்வமுடன் ரசித்திருக்கிறீர்கள்! அழகான கட்டுரை. திரும்பவும் நான் இப்பாடல்களைப் படித்து அவற்றின், ராமகாதையின் இனிமையை ரசிக்கத் தூண்டுகின்ற எழுத்து. வாழ்க! வளர்க!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.