செல்லம்மாவின் குறுக்குவலி

Indian_Old_Lady_Eyes

“என்னளா கெடந்து உருண்டுட்டு வாற? செப்புல மிதிச்சம்னா இப்பம் எல்லாம் சரியாயிரும்,”முற்றத்தில் பனை மட்டையிலிருந்து நார் கிழித்துக்கொண்டே கத்தினான் மாரி. வீட்டிற்குள் கால்களை மடக்கியவாறு சுருண்டு கிடந்தாள் செல்லம்மா.
“பொசக்கெட்டப்பயல ஒன்னிய பெத்ததுக்கு ஒரு பொட்டச்சிய பெத்துருந்தேம்னா,. என்னன்னாது கேக்கும்.நல்லா கிடா மாதி தின்னுப்புட்டு வேலைக்கு ஒண்ணும் போவாம மலத்திட்டு இப்பிடி இருந்திருக்காது.”
“தாயோளி நாப்பது வயசாவப்போது இன்னும் கல்யாணம் பண்ணி வைக்க துப்பில்ல. அந்தக் கூயிமொவன் ஊரச்சுத்தி கடன வாங்கி வச்சிட்டு தங்கரளிக் கொட்டைய அரச்சி குடிச்சிட்டு போய் சேந்துட்டான். ஒனக்கு என்னடான்னா குறுக்கு வலிக்கி. மயித்த வலிக்கின்னுட்டு.”
“ஓம் வாய்ல மண்ணுதான் உளப்போது வேணும்னாப்பாரு,”என்றவள் தட்டுத்தடுமாறி எழும்பினாள். மாலையில் களஞ்சியம் வயலில் தக்காளிக்கு களை வெட்டிவிட்டு வந்ததிலிருந்து குறுக்குவலி தொடங்கியிருந்தது.எப்படியோ கஸ்டப்பட்டு தண்ணீர் பிடித்து முடிக்க மூச்சு விடமுடியாதபடி வலி விசமாய் உடலெங்கும் பரவ வீட்டிற்குள் வந்து படுத்திருந்தாள்.ஒருவாரம் கழித்து அன்றுதான் யாருக்கோ பனை ஓலை வெட்டச் சென்றவன், அப்போதுதான் வந்து மட்டையிலுள்ள நாரை கிழித்துக் கொண்டிருந்தான்.
ஜன்னல் இடுக்கிலிருந்த சாராயக்குப்பியில் செய்திருந்த மண்ணெண்ணெய் விளக்கை பற்றவைத்துவிட்டு மெல்ல எழும்பி வெளியே வந்தாள்.கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. அடுப்பில் சோற்றை வைத்துவிட்டு “ஏல சோத்தப் பாத்துக்கிடு. இந்தா வாறேன்,”என்று கிளம்பினாள். வடக்கு முனையிலுள்ள அவள் வீட்டிலிருந்து ஊரின் பிரதான தெருவை அடைய சிறிது தூரம் நடக்க வேண்டும். வலிக்கு கடையில் மாத்திரை வாங்கிப் போடலாமா?அல்லது தெக்குத்தெரு மூக்கியிடம் காத்துக் குத்து பிடிக்கலாமா என்று யோசனையில் அருகிலிருந்த முருங்கமரத்தைப் பற்றி நின்றாள்.
பக்கத்து வீட்டு ராணி கூட்டிற்குள் அடைய மறுத்து முருங்கை மரத்தில் ஏறி நின்ற கோழியை திட்டிக்கொண்டே விரட்டினாள்.அது அங்கிருந்து தாவி பக்கத்திலிருந்த கொடுக்காப்புளி மரத்தில் பற்றியது.செல்லம்மா கடப்பதைக் கண்டவள்”ஏ கெளவி எங்களா போற?” என்றாள்.
பிறகு வந்து சொல்கிறேன் என்பதுபோல் கையசைத்துவிட்டு,தெக்குத்தெரு மூக்கியிடம் சென்று காத்துக்குத்து பிடிக்கலாம் என்று தீர்மானித்தவளாய் நடக்க ஆரம்பித்தாள்.இருள் கவிய மார்கழி மாதக்குளிர் அடர்த்தியாய் இறங்கியதால் ஜன நடமாட்டம் குறைந்திருந்தது.சேலையை உடலை சுற்றி இழுத்து மூடிக்கொண்டாள். வடக்குத்தெருவிலுள்ள மூன்று தெருவிளக்குகளில் நடுவிலுள்ளது மட்டும் வெட்டிக்கொண்டிருந்தது. இவள் வீட்டிலிருந்து வந்து தெருவில் இணையும் புள்ளியிலுள்ள கடையில் மட்டும் காதைக்கோர்த்து கட்டிய தலைப்பாகையுடன் மூவர் பேசிக்கொண்டிருந்தனர்.அவர்களைச் சுற்றி பீடிப்புகை மண்டிக்கிடந்தது.
“ஏ செல்லம்மா..எங்க போற இந்த இருட்டுக்கிள?”சுருட்டு பிடித்துக்கொண்டிருந்த சுடலைமாடன் பேச்சுக்கொடுத்தார்.
“எய்யா இந்தா தெக்குத்தெரு மூக்கிட்ட போயி காத்துக்குத்து பிடிக்கலாம்னு போறேன். என்ன எளவோ தெரியல சவம் குறுக்க வலிச்சிக்கிட்டு கெடக்கு”என்றவள் குறுக்கைப் பிடித்துக்கொண்டு அவர்களை நோக்கியவாறு நின்றுகொண்டாள்.
“கைல ஒரு பேட்ரி கீட்ரி வச்சிக்கிடலாம்லா.இருட்டுல பூச்சி பொட்டக்கிடக்கும்,”என்ற சுடலைமுத்துவின் கண்கள் சுருட்டு கங்கு வெளிச்சத்தில் மினுங்கியது.
“பேட்ரிக் கடனுக்கு எங்க போவ?”என்றவாறே மெல்ல நடக்கத் தொடங்கிவிட்டாள்.பெயர்ந்திருந்த சரளைக்கற்கள் காலை ஊசியாய்க் குத்த நடைபழகும் குழந்தையென நடந்துகொண்டிருந்தாள்.மூக்கி வீட்டு வாசலை அடையும் முன்னே மூக்கி புருசன் கெட்ட வார்த்தையில் திட்டுவது அரைகுறையாய் காதில் விழுந்தது.மூக்கி வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த பூவரச மரத்தைப்பற்றி நின்றுகொள்ள “யாரே அது”என்று கூறிக்கொண்டே வீட்டைவிட்டு வெளியே வந்தான் மூக்கியின் புருசன்.
மெல்ல முற்றத்தில் நடந்து வெளிச்சத்தில் முகம் தெரிய நின்று கொண்டாள்.
“அடேயப்பா செல்லம்மக்காவா.வா வா வா. வடக்கு முக்குலயிருந்து இந்த இருட்டுக்கிள வந்துருக்கிய என்ன செய்யிது”
“எய்யா குறுக்குவலி தாங்கல. அதான் காத்துக்குத்து பிடிச்சிப் பாக்கலாமேன்னு வந்தேன்”
“நல்ல நேரத்துல வந்தபோ.பொழுதண்ணைக்கும் கல்லு உடைச்சிட்டு பசியோட வந்தா தேவிடியா இப்பதான் அடுப்பே பத்தவச்சிருக்கா.”
அவன் பேசிக்கொண்டிருக்கையில் வெளியே வந்தாள் மூக்கி.”வாங்க மைனி.இந்தக் கொடும எங்கியாது நடக்குமா?நானும் நாத்து நடப்பேட்டு இப்பதான் வந்து நிக்கென். அதுக்கு வந்த நேரத்துல இருந்து புடைல ஊத்திட்டு வந்து இந்தப் பேச்சு பேசிக்கிட்டு இருக்காரு. வாரவட்டிக்காரன் பின்னால அலையுதான் துட்டுக்கு. அதுக்கு அஞ்சி பிசா குடுக்கல. இவருக்கு குடிக்க மட்டும் எப்பிடியாது துட்டு கெடச்சிருது”
“ம்ம் என்னளா செய்ய வீட்டுக்கு வீடுக வாசப்படி,”என்றவள் இடுப்பைப் பற்றிக்கொண்டு அடுப்படி வாசலில் அமர்ந்தாள்.
“மைனி நீங்க வந்ததே மறந்துட்டேன் பாத்தியளா,”என்றவள் தொடர்ந்து “யோவ் ஒங்களத்தான ஒரு வாசமடக்கி குச்சி வெட்டுங்க, காத்துக்குத்து பிடிக்க,”என்று வாசலில் இருந்து புகைத்துக் கொண்டிருந்தவனை ஏவினாள்.
வீட்டின் கிழக்கு வேலியில் நின்ற வாதமடக்கி மரத்தின் ஒரு சிறிய கிளையை வெட்டி இரண்டாகப் பிளந்து அவர்களிடம் கொடுத்தான்.அதுவரை அடுப்படியில் சத்தமே வராமல் குசுகுசுவென பேசிக்கொண்டிருந்தவர்கள் அவன் குரல் கேட்டு வெளியே வந்தனர். ”இதப்பிடிக்க இன்னொரு ஆளு வேணும்லா”என்றான்.
அதற்குள் பக்கத்து வீட்டு விஜயா அங்கு வந்து சேர்ந்தாள்.”ஏ பாட்டி என்னபிள செய்யிது?”என்று செல்லம்மையை வந்து கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டாள்.
“ஏடி குறுக்குவலி பாத்துக்க”
பிளக்கப்பட்ட வாதமடக்கிக் கிளையை இருவரும் இணையாக இடுப்பில் இடுக்கிக்கொள்ள, நடுவில் நின்றுகொண்டு மணலை திரித்து உதிர்த்துக்கொண்டே மூக்கி ஏதோ மந்திரத்தை வாய்க்குள்ளே முனங்கினாள். சிறிது நேரத்திற்குள் பிளக்கப்பட்ட கிளைகள் இரண்டும் நடுவில் வந்து பொருந்த,பின் விலக்கி மந்திரம் ஓதினாள். இப்படியே மூன்று முறை செய்து நடுவில் குச்சியை முறித்து இடுப்பில் தடவி விட்டாள்.
“நல்லா வாயு பிடிச்சிருக்கு மைனி.நல்லா வென்னி வச்சி குளிங்க. நாளக்கி ஒருதேறம் பிடிச்சா சரியாப் பேறும்”
சற்று நேரம் அமர்ந்து பேசிவிட்டு கிளம்பிவிட்டாள்.வடக்குத்தெரு கடக்கையில் ஊர்கிணற்றில் மாரியின் குரல் கேட்டது.
“எல மாரி….எல மாரி….எல மாரி…”
“என்னளா..”
“சோத்தப்பாத்தியா அப்பிடியே போட்டுட்டு வந்துட்டியா”
“சவத்த வடிச்சி போட்டுருக்கேன். கறி வயி சீக்கிரம் பசி உயிரு போது”என்றவன் அருகிலிருந்தவர்களிடம் பேசத் தொடங்கினான்.
வீட்டை அடைந்ததும் புளியைக்கரைத்து ரசம் மட்டும் வைத்துவிட்டு கொடி அடுப்பில் வெந்நீர் வைத்து சுடச்சுட முதுகில் ஊற்றினாள்.சற்று ஆறுதலாய் தோன்ற கொஞ்சம் சாதம் பிசைந்து உண்டுவிட்டு குப்புறப் படுத்துக்கொண்டாள். அவன் எப்பொழுது வந்து சாப்பிட்டுவிட்டு படுத்தான் என்பதை அறிந்திருக்கவில்லை. வெந்நீரின் ஒற்றடம் நல்ல உறக்கத்தைக் கொடுத்தது.
அதிகாலை முதல்சேவல் கூவ விழித்து விட்டாள். உடல்மேல் பாறாங்கல்லை வைத்து அழுத்தியதுபோல் வலித்தது. நிமிரக்கூட திணறினாள். வாசலில் குறட்டை ஒலி மட்டும் ஒரு ராகமாய் மீண்டும் மீண்டும் கேட்டது.மூத்திரப்பை நிரம்பி அடிவயிற்றில் மேலும் அழுத்தத்தைக் கொடுத்தது.தட்டுத்தடுமாறி எழும்பினாள்.வாசலில் கிடந்தவனை மிதிக்காமல் மெல்ல சுவரைப் பற்றி வளவில் சென்று ஒதுங்கிவிட்டு திரும்பும்போது அவன் காலில் எங்கோ மிதித்து விட்டாள்.
“யாம்ளா ராப்பாட்டாளி மாதி சுத்திட்டு அலையித,”
“என் ஒடம்புக்கு வார வரத்து ஒனக்கு என்னத்தெரியும்.இப்பிடி எறக்கமத்த சனியன பெத்துருக்கன,”என்று புலம்பிக்கொண்டே படுத்துக் கொண்டாள். வரிசையாக சேவல்கள் கூவத்தொடங்கின.சாணி தெளிக்க எழும்ப முடியவில்லை.நன்கு விடியும்வரை அப்படியேக் கிடந்தாள். டீக்கடைக்கு சென்றுவிட்டு வந்தவன் “ஒனக்கு இப்பம் என்னயிதுன்னு சொல்லித்தொலையேன்,”என்றான்.
“குறுக்கு வலிக்கின்னு நேத்துல இருந்து கத்திக்கிட்டு கெடக்கேன். காது மந்தமாப் போச்சாங்கும்.இன்னக்கி கள வெட்ட வேறப்போணும்”
“களையும் வெட்டண்டாம்.ஒரு மயிறும் வெட்டண்டாம். குத்தாலிங்கத்துக்கு போன் போடுதேன்.வந்து ஒரு ஊசி போட்டாம்னா சரியாயிரும்”என்றவன் பக்கத்து வீட்டு தங்கப்பூவிடம் கைப்பேசியை வாங்கி அழைத்தான்.
“எல ரெண்டு ரூவாதான் கெடக்கு கரைச்சிப்புடாத”என்ற தங்கப்பூவை முறைத்துக்கொண்டே காதில் பொருத்திக்கொண்டான்.
“அண்ணாச்சி மடத்தூர்லருந்து வடக்கு ஓரத்து வீட்டு மாரி பேசுதேன்.அன்னக்கி வயித்தவலிக்கி ஊசி போட வந்தியள்ளா அதே வீடுதான். எங்க அம்ம குறுக்கு வலிக்கினு கெடக்கா.கொஞ்சம் வாங்களேன்”
“லெச்சுமியூர்ல நிக்கென். ஒரு அரமணி நேரத்துல வாரேன்.கொஞ்சம் வென்னி மட்டும் வச்சி வைங்க”என்றான்.
“பரவால்லயா எப்ப கூப்டாலும் வந்துருதாம்லா. கெட்டிக்காரன்.”என்று கைப்பேசியை தங்கப்பூவிடம் கொடுத்தான்.
“இவன் என்ன டாக்டருக்கு படிச்சிருக்கானாங்கும்.ஏதோ மாத்திர கிளிச்சிக்கிட்டு இருந்த பய போக்கத்துப்பொயி ஊசி போட்டுட்டு அலையிதான்.”
“என்னனாலும் போட்டா கேக்குல்லா”என்றவன் வீட்டிற்கு வந்து வெந்நீர் வைத்தான்.
கட்டிய சாரத்தோடு வழக்கமாக கொண்டு வரும் பழுப்பு நிற தோல் பையுடன் சரியாக அரைமணி நேரத்திற்குள் வந்துவிட்டான் குத்தாலிங்கம். “என்ன ரெம்ப முடியாம இருக்காவளோ”என்றவாறு திண்ணையில் அமர்ந்தான்.
“ஆமா.ராத்திரிலருந்து முனங்கிட்டு கெடக்கா”என்பதற்குள் மெல்ல எழும்பி அமர்ந்தாள்.
“குறுக்குத்தான்யா நிமிரவே முடியல.செக்கு இழுத்த மாதி வலிக்கி.சவத்த காத்துக்குத்து பிடிச்சேன்.வலி உட்டமாதி இருந்திச்சி பழையடியும் வந்துட்டு”
“செரி செரி படுத்துக்கிடுங்க ஒரு ஊசி போடுதேன்.நல்லா இன்னக்கி ரெஸ்ட் எடுங்க சரியா பேரும்”என்றவன் மருந்தை ஏற்றினான்.
“இவாளா ரெசுட்டு எடுக்கது? நல்லா சொன்னிய. இப்ப எந்திச்சிட்டானா கள வெட்டப் பேறுவா”என்றான் மாரி.
“அது சரி.மாரியண்ணாச்சி நீங்க என்ன வேலக்கி போறியளா இல்லியா”என்று கூறிக்கொண்டே ஊசியைக்குத்தினான் இடது இடுப்பில்.
“இங்க என்னய்யா வேல இருக்கு .ஒரு நாளக்கி போனா மூணு நாளு சும்மாதான் கெடக்க வேண்டியிருக்கு.நேத்துதான் ஓல வெட்ட போனேன்.இனும எவனாது கூப்டாதான் வேலயப்பாக்கணும்”
“செரி செரி”என்றவன் நான்கு மாத்திரைகளை பொதிந்து கொடுத்துவிட்டு முப்பது ரூபாய் கேட்டான்.
சேலையில் முடிந்து வைத்திருந்த ஐம்பது ரூபாய் தாளைக் கொடுத்தாள்.மீதி இருபது ரூபாயை மறக்காமல் வாங்கிக்கொண்டான் மாரி.
“செரி நல்லா படுத்து தூங்குங்க எல்லாம் சரியாயிரும்”என்றவன் கிளம்பினான்.
அவள் மீண்டும் படுத்துக்கொள்ள சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளிக் கிளம்பினான் மாரி.சிறிது நேரத்திற்கெல்லாம் வலி நின்றுவிட எழும்பிவிட்டாள்.வாசலில் சாணி தெளித்து பெருக்கினாள். களை வெட்டச் செல்லலாம் என்ற எண்ணத்தைக் கைவிட்டு விட்டு கிழிக்காமல் கிடந்த பனமட்டையிலிருந்து நார் கிழிக்கத் தொடங்கினாள்.
“என்ன பாட்டி பண்ணுதிய?”என்றவாறே வடக்குத்தெரு சரஸ்வதி மகள் வந்தாள்.
“ஏ செறுக்கி ஒனக்கு நான் பாட்டியாங்கும்.பெரியம்ம மொற வரும்ளா. ஒங்க அம்ம என்னயிதா?”
“மொறலாம் தெரியாது நான் பாட்டின்னுதான் கூப்பிடுவேன்”என்றவள் கிழித்துப்போட்ட நாரை எடுத்து நுகர்ந்தாள்.
“நீ அடங்காதவால்லா எப்பிடியும் கூப்பிட்டுட்டுப் போ,”என்பதற்குள் சரஸ்வதி சேலைத்தலைப்பை இடுப்பில் செறுகியவாறு வந்தாள்.
“செல்லம்மக்கா குறுக்கு வலியாம்லா.தண்ணி பிடிக்க எடத்துல மூக்கி சொன்னா.நம்ம என்னத்தக் கண்டோம் இங்க வடக்கு முக்குல என்ன நடக்குன்னு”என்று அருகில் அமர்ந்தாள்.
“அத யான் கேக்க.நான் பட்ட பாடு அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்.இப்பம் தான் குத்தாலிங்கம் வந்து ஒரு ஊசி பொட்டப்பெறவு எந்திரிக்க முடிஞ்சிருக்கு”
“அந்த பிச்சக்காரப்பயட்ட வயித்த வலிக்கி பத்து நேரம் ஊசி போட்டும் கேக்காமத்தான் மேலூரு தெய்வக்கனிட்டப் போயி குறி கேட்டு திருனாறு வச்சிட்டு வரலாம்னு இருக்கென்”
தெய்வக்கனி சகல நோய்களுக்கும் கைபார்த்து குறி சொல்வாள்.திருநீறு வைத்தால் சகல வியாதியும் நீங்கிவிடும் என்று அவர்களுக்கு ஒரு அலாதி நம்பிக்கை.
“ஆமாளா தெய்வக்கனி குறி சொன்னான்னா ஒடனே கேட்டுக்கிடும்.இரு அப்பம் நானும் கெளம்புதேன்”என்றவள் பத்து நிமிடத்திற்குள் கிளம்பி விட்டாள்.
“சவம் அங்கப்போவ பஸ் ஏற மூணு மைலு நடக்கணுமே”வீட்டை அடைக்கையில் கூறினாள் செல்லம்மா.
”பெறவு என்னய்ய நம்ம ஊருக்கு என்ன நெனச்ச நேரம் போய்ட்டு வர பஸ் வசதியா இருக்கு?11மணிக்கு வற நாப்பத்தி மூணு பஸ்ஸ பிடிச்சி பேட்டு மூணு மணிக்கி அதே பஸ்ல திரும்பி வரணும்”
வயல்காட்டு வரப்பு வழியே நடக்கத் தொடங்கினர்.நெல்வயலில் களை பறித்துக் கொண்டிருந்தவர்கள் தலை நிமிர்த்தி பார்த்துவிட்டு மீண்டும் குனிந்துகொண்டனர். ஆங்காங்கே கொக்குகள் அமர்ந்து அவர்களை வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தன. வெயில் சுள்ளென்று அடித்தாலும் அதில் குளிர்ச்சி பொதிந்திருந்தது.வயல்காட்டைக் கடந்து தெக்குமேட்டு ஏற்றம் ஏறுகையில் செல்லம்மாவிற்கு குறுக்கு வலிக்கத் தொடங்கியது. ஏற்றம் ஏறி முடிந்து பேருந்துக்காக விலக்கில் காத்திருக்கையில் வலி உக்கிரமடைந்தது.
“ஏளா திருப்பியும் வலி வந்துட்டே.பேசாம வீட்டுல கெடந்தேமில்ல”
“கொஞ்ச தேறம் தானக்கா தெய்வக்கனிட்ட திருனாறு வச்சா சரியாயிரும் பாருங்க”
பேருந்தின் ஒலி தூரத்தில் கேட்க எழும்பி நின்று கொண்டாள்.ஒரு பக்கமாக சாய்ந்தவாறு வந்து சேர்ந்தது பேருந்து. நிற்பதற்கு இடம் கிடைத்தால் நல்லது என்ற அவள் எண்ணம் பொய்த்துப்போகும் அளவிற்கு கூட்டம் என்றாலும் எப்படியோ ஏறி நின்று கொண்டனர். மேலூரில் அவர்களை உமிழ்கையில் குறுக்கைப் பிடித்து சாலையோரத்தில் அமர்ந்துவிட்டாள் செல்லம்மா. திகுதிகுவென ஜனத்திரள். சைக்கிளை உருட்டிக்கொண்டும், சைக்கிளில் சாக்கு மூட்டைகளுடனும் லுங்கி கட்டிய மனிதர்கள்.கழுத்தில் எதுவுமற்ற பெண்ணொருத்தி அவள் அமர்ந்த இடத்தையொட்டிய டீக்கடையில் கைக்குழந்தைக்கு பால் ஆற்றிக்கொண்டிருந்தாள்.
“ரெம்ப வலிக்காங்கும்.இன்னும் பத்து நிமிசம் நடந்தம்னா பேறலாம்.வா நடப்போம்”
மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.நான்கைந்து வெள்ளாட்டுக் குட்டிகள் கழித்துப் போட்டிருந்த வாழை இலையை தின்றுகொண்டிருந்தன. ஒருவழியாக தெய்வக்கனி வீட்டை அடைய வாசலில் மூன்று நான்கு பெண்கள் சோகமாக அமர்ந்திருந்தனர்.ஒல்லியான கருத்த பெண்ணுக்கு கண்ணில் நீர் கோர்த்திருந்தது. அவர்களை நோட்டமிட்டவாறு அருகிலிருந்த திண்டில் அமர்ந்துகொண்டனர். நால்வரும் பார்த்து முடிய உள்ளே சென்றனர்.ஏதேதோ சாமி படங்களுக்கிடையில் சாம்பிராணி புகை மணக்க நெற்றியில் குங்குமத்தோடு சிவப்புக்கலர் சேலையில் அமர்ந்திருந்தார் தெய்வக்கனி. முதலில் சரஸ்வதி பதினோரு ரூபாய் காணிக்கை செலுத்த அவளுக்கு அருள்வாக்கு கூறி திருநீறு கரைத்த நீரைக் கொடுத்தாள். மூன்றுமுறை உறிஞ்சிக்கொண்டாள். செல்லம்மாவுக்கும் அதே செய்முறை. பத்து நிமிடங்களில் முடிந்தது மருத்துவம்.
நடந்து மீண்டும் பேருந்து நிலையத்தை அடைகையில் மயக்க நிலையில் இருந்தாள் செல்லம்மா.காலையில் கஞ்சி மட்டும் குடித்திருந்தாள்.அவள் இருக்கும் நிலையைக் கண்டதும் அருகிலிருந்த பழக்கடையில் ஒரு பழஜூஸ் வாங்கிக் கொடுத்தாள். அதைக்குடித்ததும் மயக்கம் தெளிந்தாலும் வலி சற்றும் குறையவில்லை. இரண்டு மணி நேரம் அந்தப் பேருந்து நிறுத்தத்திலேயே காத்துக்கிடந்து மூன்று மணி பேருந்தில் ஏறினர்.மீண்டும் அதேபோல் கூட்டம்.விலக்கில் இறங்கி வயல்காட்டில் நடந்து வீடு அடையும்வரை ஏனோ இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. வீட்டினுள் நுழைந்த வேகத்தில் குத்தாலிங்கம் கொடுத்த மாத்திரையில் இரண்டை விழுங்கிவிட்டு படுத்துக்கொண்டாள்.
ஆறரை மணிக்கு மாரி வந்து எழுப்பும்போதுதான் சுயநினைவுக்கு வந்தாள்.அவள் குறி கேட்க சென்ற விபரம் மதியம் வீட்டிற்கு வரும்போதே அறிந்திருந்ததால் திட்டித்தீர்த்தான்.வலித்துக்கொண்டே இருந்தது.
மீண்டும் வலி நிரம்பிய இரவு.காலை பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.எக்ஸ்ரே,ஸ்கேன் எடுத்தால்தான் கிட்னியில் ஏதாவது பிராப்ளமா என்று பார்த்து சரிசெய்யமுடியும் என்றனர்.அங்கு அந்த வசதி இல்லாததால் பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு மருத்துவமனைக்கு எழுதிக்கொடுத்தனர்.தற்போதைக்கு இரண்டு ஊசி போட்டு மாத்திரையும் கொடுத்தனர்.எழுதிக்கொடுத்த சீட்டைப் பற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.களஞ்சியம் வீட்டு வாசலில் நின்றிருந்தான்.
“ஏ களஞ்சியம் இந்த எளவு குறுக்கு வலில கெடந்து அல்லல்படுதேன் பாத்துக்க.ரெண்டு நா கழிச்சி வாறேன் என்றாள்.
“செரிக்கா.ஒடம்ப பாத்துக்கிடுங்க என்று கிளம்பிவிட்டான். இரவு மாத்திரையை தின்றுவிட்டு படுக்க வலி முற்றிலும் நீங்கியதுபோல் இருந்தது.
மறுநாள் காலை ஹைகிரவுண்டு செல்ல வேண்டும் என்று அழைத்தான் மாரி.
“போல பொசக்கெட்டப்பயல.அவா கிட்டினினு அழுவுதானு நீ நம்புதியோ. சிராசுங்கா கேனுங்கா.எனக்கு ஒண்ணுஞ்செய்யாது நீ ஓன் வேலயப்பாத்துட்டுப் போ. களஞ்சியம் தேடி வேற வந்துட்டான் நேத்து”என்றவள் தொழுவத்தில் கிடந்த களைவெட்டியை எடுத்துக்கொண்டு விறுவிறுவென தெற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.அவள் கடந்து செல்வதை நோக்கியவாறு பேச ஏதுமற்று நின்றுகொண்டிருந்தான் மாரி.
களஞ்சியம் வயலை அடைகையில் அடி முதுகில் ஒரு மெல்லிய வலி கிளர்ந்தெழுந்து தண்டுவடத்தினூடே இறுகப்பற்றி மேல்நோக்கி ஊர்ந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.