கவிதைகள்

அன்பும் பண்பும் மிக்க சகோதரிக்கு

வாய்ப்பின் சுடர் தேடி
ராவோடு ராவாக ஊரைவிட்டு என்னிடம் வந்தார்
வண்ண வெளிச்சமும் நவயுகப் பூச்சும்
கண்களைக் கூச மயங்கி நின்றார்
தேடித் திரிந்தார் வளம் கண்டார் வசதி பெற்றார்

City_Village_Windmill_Rural_Landscape_Time_Flow_Rotate_Circle_Round_Life_Move

சேதி கேட்ட சுற்றம் சிலர்
மூட்டை முடிச்சோடு சேர்ந்தே வந்தார்
வந்தோரை அரவணைத்து உபசரித்தேன்
வனைந்த விரல்கள் காட்டிய திசையில்
வளைந்து சென்றேன்
நிறம் மாறினேன் உருத் திரிந்தேன்

கூடிச் செழித்தார் ஆடிக் களித்தார்
உள்ளறைச் சாளரம் அகலத் திறந்து
அக்கம் பக்கம் உறவில் திளைத்தார்
மயக்கம் தெளிந்து ஒரு நாள்
புதிதாய்க் கண்விழித்து எனைக் கண்டவர்
வனப்பு கெட்டதாய்த் திகைத்து நின்றார்
நெரிசல் தாளாமல் புழுங்கித் தவித்தார்
சொந்த மண்ணின் சுகந்தம் மூக்கை நமைக்க
கிளம்பிவிட்டார் இன்று உன்னிடம் சேர

ஊர் எல்லையில்
நகராது நிற்கும் பெயர்காட்டி
அன்புடனே அவரை வரவேற்கட்டும்

எம். ராஜா

oOo

ஓலை

ஒரு பறவையை
தூதனுப்ப நினைக்கிறேன்.
தன் காலை உடைத்துக் கொள்கிறது.
தீனி தின்ற வயிற்றுப் புடைப்பைக் காட்டுகிறது.
அலகின் கூர்மை மழுங்கியதாகச் சொல்கிறது.
முன்பு சென்ற தடம் ஓர்மையில்இல்லையென்கிறது.
காற்றின் திசையில் ஏழுலோகத்துக்குள்
எந்த லோகம் என்று திரும்பத் திரும்ப விசாரிக்கிறது
கடலில் அலையும் பாய்மரம் போல
இறகை விரித்து விரித்துக் கோதி
விரிவு பத்தாதென்கிறது.
கால் நகங்களை வெட்டியதால் வழுவிவிடுமோவென்ற
அச்சத்தைத் தாறுமாறாகக் கீறுகிறது.
ஒரு சுருட்டப்பட்ட ஓலையின் கயிறு
தனக்கான தூக்குக்கயிறாகிவிடுமோவென்ற பயத்தில்
பறப்பதை மறந்து விட்டிருக்கின்றது.
முன்பு சென்ற இடத்தில் குவிந்திருந்த
தன்னுடல் பாகம் போன்ற எலும்புகள்
அதற்குக் காய்ச்சல் ஏற்படுத்திக் குளிரூட்டுகின்றன.
அவ்வளவு ஒன்றும் அவசரமில்லை என
ஒலையை ஒரு புகைபோக்கியினுள் போடுகிறேன்.
இன்னும் காலக்கெடு மிச்சமிருக்கிறது
இவை இரண்டும் போய்ச்சேர.
புகைபடிந்த ஒட்டடையோடு ஓலையும்
அதன் மாடத்தில் ஒடுங்கிய புறாவும்
அஸ்தமன வெய்யிலை வெறித்தபடி இருக்கின்றன.
தேனம்மை லெக்ஷ்மணன்

oOo