இரு சுருள் வளைய சர்ச்சை மற்றும் மூலக்கூறு உயிரியல் வளர்ச்சி – இறுதிப் பகுதி

Molecular_Biology_DNA_enzyme_RNA_Cell

மரபணுவின் வேலை என்ன?
இதன் வேலை என்ன என்பதை விஞ்ஞானிகள் ஓரளவிற்கு விளக்கி விட்டார்கள். ஆனால், அந்த வேலைகளை எவ்வாறு இந்த அமைப்பை வைத்து இயற்கை செய்து முடிக்கிறது என்பது முழுவதும் விளக்கப்படாத ஒரு விஷயம். இந்த வேலைகளை விளக்கும் விஷயத்தில் உள்ள சிக்கல், என்னவென்றால், சில வேலைகளை, இயற்கை செய்து கொண்டே இருக்கிறது. ஆனால், சில வேலைகளை, ஒரு காலகட்டத்தில் மட்டுமே நிகழ்த்துகிறது (உதாரணம், சுவேதா மோகனின், இன்றைய இனிமையான குரல்).
முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இது- உயிரணுக்கள் அதிக நாட்கள் வாழ்வதில்லை. உதாரணத்திற்கு, சிவப்பு ரத்த உயிரணுவின் (red blood cell) காலம் நான்கு மாதங்கள். வெள்ளை ரத்த உயிரணுவின் (white blood cell) காலம் 1 வருடம். தோல் உயிரணுக்களின் (skin cell) காலம், வெறும் 2 முதல் 3 வாரங்கள்.
ஒரு கணிப்புப்படி, உடலில் உள்ள உயிரணுக்கள் யாவையும் 7 வருடங்களில் முழுவதும் புதுப்பிக்கப்படும் – அதாவது, 37 டிரில்லியன் உயிரணுக்களும்! விஷயம் இப்படியிருக்க, மரபணு எப்படி சரியாக ஒருவருக்கு அவ்வாறே இருக்கிறது?ஒருவர் குற்றம் ஒன்றைச் செய்து தப்பிவிட்டால், 7 வருடத்திற்குப் பின், அவரது உட்கரு அமிலம் (DNA) மாறிவிடுமா?
இல்லை.
ஆனால் எப்படி உட்கரு அமிலம் சற்றும் சிதையாமல், அப்படியே இருக்கிறது? இளையராஜா 40 வருடங்களுக்கு முன் எழுதிய அதே அடிப்படை இசைக் குறிப்புகளையேதான் இன்றும் எழுதுவதைப் போன்ற ஒரு விஷயம் இது. 4 மில்லியன் ஆண்டுகளாக, மனித மரபணுவில் மாற்றமில்லாமல் இயற்கை பாதுகாத்து வருகிறது.
ராஜாவின் 40 வருடங்களில் நாம் பார்த்த 5,000 வித விதப் பாடல்களைப் போல, பல வித மனிதர்களையும்,  பல கோடி குணாதிசயங்களையும் உருவாக்கிய இயற்கை, அடிப்படைக் கட்டமைப்பைச் சற்றும் மாறாமல் பார்த்துக் கொண்டுள்ளது ஒரு வியக்கத் தக்க விஷயம். 4 மில்லியன் ஆண்டுகளாய், மனிதர்களுக்கு இரண்டு கால்கள், இரு கைகள், ஒரு தலை, இரு கண்கள், ஒரு வாய், இரு காதுகள், ஒரு மூக்கு என்று எதுவும் மாறவில்லை. அரிதாக, இயற்கை சிறு தவறுகளைச் செய்து சிலருக்கு, குறையுள்ள உறுப்புகளையோ, அல்லது எண்ணிக்கையில் குறைந்த உறுப்புகளையோ உருவாக்குகிறது.
ஆக, உயிரணுக்கள் மாறிக் கொண்டே இருக்கையில், எப்படியோ மரபணு மட்டும் இந்த மாற்றங்களிடையே மாறாமல் பாதுகாக்கப்படுகிறது. இதற்குக் காரணம், சிக்கலான, குழப்பமான உயிரணுத் தொழிற்சாலையின் பாகங்கள். இதைச், சென்னை பாண்டி பஜார் மற்றும் ரங்கநாதன் தெருவுடன் ஒப்பிடலாம். வருடத்திற்கு, 20,000 கோடி ரூபாய்க்கு மேல் கைமாறும் இந்த வணிக மையம், ஆசியாவிலேயே பெரியது, குழப்பமானது. தென்னிந்தியாவில் திருமணம் என்ற விஷயம் இருக்கும் வரை, இந்தக் குழப்பமான வணிக மையம், அதன் தேவைகளை எப்படியோ பூர்த்தி செய்கிறது. காலத்திற்கேற்ப மாறிக் கொண்டு வந்தாலும், அந்தப் பழைய திருமணம் என்ற அமைப்பைச் சார்ந்தே வளர்ந்துள்ளது. இங்கு விற்பனையாகும் பொருள்கள் காலப்போக்கில் வேறுபட்டாலும், அடிப்படையில் ஆபரணம் மற்றும் திருமணப் பட்டு என்ற விஷயத்திலிருந்து மாறவில்லை.
முதலில், கட்டமைப்பு விஷயத்திற்கு வருவோம்.

 1. மூலக்கூறு உயிரியல் (molecular biology), ஆரம்ப காலத்தில் (அதாவது, 1950 -களில்), புரத மூலக்கூறுகளை உருவாக்கும் குறியீடுகள் மரபணுவில் உள்ளதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
 2. அதுவும், நேரடியாக அல்ல – மாற்று உட்கரு அமிலம் (RNA) என்ற ஒரு தூதுவன் மூலம். உட்கரு அமிலம் (DNA) மிக நீளமான ஒரு மூலக்கூறு. இது, ஒரு இரு சுருள் வளைய (double helix) அமைப்பைக் கொண்டது என்று பார்த்தோம். மாற்று உட்கரு அமிலம், ஒற்றை சுருளுடன் (single helix) , குறைவான நீளத்துடனும் இருக்கும். அத்துடன், இது மூன்று பேஸ்கள் (அதாவது A, C, G, ) மட்டுமே கொண்டது. புரத மூலக்கூறுகளை உருவாக்கும் ஆணைகளை உட்கரு அமிலத்திலிருந்து , உட்கருக்காரைக்குள் (cytoplasm)  எடுத்துச் செல்லும் வேலை மாற்று உட்கரு அமிலத்தின்  (RNA) வேலை. இது, முந்தைய ராஜா இசை உதாரணத்தில், அவரது நடத்துனர் புருஷோத்தமன், ராஜா எழுதிய இசைக் குறிப்புகளை இசைக் கலைஞர்களிடம் எடுத்துச் சென்று அவரவருக்கு ஏற்ற குறிப்புகளை பிரித்துத் தரும் வேலை போன்றது.
 3. புரத மூலக்கூறுகளை (protein molecules) , உருவாக்கும் செய்முறை உட்கரு அமிலத்தில் (DNA) உள்ளது என்று பார்த்தோம். அந்த செய்முறை ஆணைகள் மட்டுமே தாங்கிய ஒரு சின்ன நகலே மாற்று உட்கரு அமிலம் (RNA). மாற்று உட்கரு அமிலம், உயிர்க்கருவிலிருந்து (nucleus) உட்கருக்காரைக்கு (cytoplasm) பயணிக்கும் தன்மை கொண்டது. தேவைப்பட்ட போது உயிரணுவை விட்டு வெளியேறும் தன்மையும், இதற்குண்டு.
 4. உட்கருக்காரை ஏராளமான விஷயங்கள் நடக்கும் ஒரு தொழிற்சாலை போன்றது. புரத மூலக்கூறுகளை உருவாக்க, இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று, நவச்சியவமிலம் (amino acid). மற்றொன்று, நொதியம் (enzyme). நம் உடலில், 20 வகை நவச்சியவமிலங்கள் உள்ளன. மனித உடலில் 1,000 வகை நொதியங்கள் உள்ளன. பல மில்லியன் புரத மூலக்கூறுகள் உள்ளன. உடனே போயிங் தொழிற்சாலை ஞாபகம் வந்தால், நான் பொறுப்பல்ல! நவச்சியவமிலம், ஒவ்வொன்றும், ஒவ்வொரு கட்டமைப்பைக் கொண்டது. ஆனால், இவை புரத மூலக்கூறுகளை விடச் சிறிய மூலக்கூறுகள்.
 5. உயிர்க் கருவிலிருந்து சிறு துவாரங்கள் மூலம் வெளியேறிய, மாற்று உட்கரு அமிலம், புரத மூலக்கூறுகளை உருவாக்கும் ஆணைகளைக் கொண்டது. இந்த ஆணைகளைத் தன்னுள் அடக்கிய நவச்சியவமிலத்தைக் கொண்டு புரத மூலக்கூறுகளை புரத உருவாக்கியுறு உருவாக்குகிறது.  ராஜாவின் பாடலின் இடையிசை ஒன்றில் புல்லாங்குழலும், கிடாரும், தபேலாவும் உபயோகிக்கக் குறிப்பு எழுதியுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். இந்த இடையிசையை உருவாக்க, நடத்துனர் புருஷோத்தமன் என்ன செய்வார்? புல்லாங்குழல் நெப்போலியனையும், கிடார் சதாவையும் தபேலா பிரசாத்தையும் அக்குறிப்புகளுக்கு ஏற்றவாறு வாசிக்கச் செய்து ஒத்திகை பார்ப்பார். எதிர்பார்ப்புக்கேற்ப சரியாக வந்தால், அந்தக் குறிப்புக்கேற்ற இசை ஒலிப்பே பதிவு செய்யப்படும். இந்த இடையிசை என்பது புரத மூலக்கூறு போன்ற விஷயம். கிடார், புல்லாங்குழல், தபேலா ஒலிக்கள் நவச்சியவமிலம் போன்றவை. இந்த மூன்று ஒலிக்களையும் தொகுத்து வழங்கும் புரத உருவாக்கியுறு (ribosomes) போன்றது, புருஷோத்தமன் நடத்தும் இசை.
 6. இது மிக சிக்கலான விஷயம். இப்படித்தான் தலை முடியின் நிறம், தோலில் நிறம், குரல் வளம், ஞாபக சக்தி என்று ஏராளமான மனித தோற்றங்கள் மற்றும் இயல்புகள் உருவாகின்றன

இதை க்ரிக்கும், வாட்ஸனும், இப்படிச் சொல்லிப் பிரபலமடைந்தனர்:

உட்கரு அமிலம், நம் உடலின் கட்டமைப்பு க் குறியீடுகளைக் கொண்டது. மாற்று உட்கரு அமிலம் மூலம், நொதியம், நவச்சியவமிலம் கொண்டு, புரத மூலக்கூறுகளை உருவாக்குகிறது. புரத மூலக்கூறுகள், சில ரசாயனங்களோடு உயிரணுவை உருவாக்குகின்றன. உயிரணுக்கள் திசுக்களை (tissues) உருவாக்குகின்றன, திசுக்கள் கொண்டு, நம் உடலின் பாகங்களை உருவாக்குகிறது. உடல் பாகங்கள் நம் உடலை உருவாக்குகின்றன. இதுவே, படைப்பின் ரகசியம்!”

இப்படி, பல வித நவச்சியவமிலங்களைக் கொண்டு, பல கோடி புரத மூலக்கூறுகளை, உடல் உருவாக்குகிறது. இந்த நவச்சியவமிலங்கள், நம்முடைய ராஜா உதாரணத்தில், கிடார் சதாவோ, புல்லாங்குழல் நெப்போலியனோ வாசிக்கும் இசை பாகங்கள் போன்றன. சில பாடல்களில், கிடார் சதாவுக்கு வேலை கிடையாது. ஆனால், சில பாடல்களுக்குச் சதாவும் தேவை, நெப்போலியனும் தேவை. இது, ராஜாவின் இசைக்குறிப்பைப் படித்த புருஷோத்தமனின் முடிவு.
மேலே சொன்ன விஷயங்களை அழகாக விளக்கும் விடியோ இங்கே:

மேலே சொன்ன படிகள், சில விஷயங்களை அழகாக விளக்கினாலும், பல புதிய கேள்விகளை எழுப்புகின்றன.

 1. இந்த விளக்கம், ஒரு நொதியம், ஒரு புரத மூலக்கூற்றை உருவாக்குவது போல உள்ளது.
 2. இந்த விளக்கம், எப்படி உயிரினங்களின் உட்கரு அமிலம் பல கோடி உயிரணுக்கள் மாறியும், பாதுகாக்கப்படுகின்றது என்று சரியாக விளக்கவில்லை.
 3. சில கால கட்டங்களில் மட்டும், சில விஷயங்கள் எப்படி வேலை செய்கின்றன என்றும் இது விளக்குவதில்லை. உதாரணத்திற்கு, ஆண்களுக்கு, எப்படி 15 வயதிற்கு மேல், மீசை முளைக்கிறது?

முதல் கேள்விக்குப் பதில் இது- படிப்படியாக இந்த ஆராய்ச்சி தொடர்கையில், இந்த ஒரு நொதியம், ஒரு புரத மூலக்கூறு என்று ஒற்றைப்படையில் இவற்றை விவரிப்பது உண்மையல்ல என்று தெரிய வந்தது. ஒரு புரத மூலக்கூறு உருவாக பல நொதியங்களின் ஒருங்கிணைப்பு தேவை என்று தெரிய வந்தது.
அடுத்தது இரண்டாம் கேள்விக்கு வருவோம். அடிப்படையில், உயிரணு ஒவ்வொன்றும் இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்டது. ஒரு உயிரணு தன்னுடைய ஆயுள் முடியுமுன், தன்னுடைய பிரதியைத் தோற்றுவிக்கிறது. இதில் உள்ள வியக்கத் தகுந்த விஷயம் என்னவென்றால், மரபணு மற்றும் நிறவுறுக்கள் அனைத்தையும் பிசகு இல்லாமல், புதிய உயிரணுவிற்கு மாற்றி விடும் அதன் செயல்திறன். இந்த வேலையைச் செய்யும் உயிரணுவின் பாகங்கள் அத்தனை செயல்திறன் படைத்தவை அல்ல. ஆனால், ஒட்டு மொத்தமாக, அவை இந்தச் செயலை, 4 மில்லியன் ஆண்டுகளாக, மனிதர்களுக்குச் செய்து வந்துள்ளன; சுறா மீன்களுக்குப் பல கோடி வருடங்களாகச் செய்து வந்துள்ளன.
இங்கு, உயிரணுவில் உள்ள நொதியங்கள் செய்யும் வேலை அதிசயிக்கத் தகுந்த ஒன்று. ஒரு நொதியம், உருவாக்கப்பட்ட மரபணுவின் குறியீடுகள் சரியாக இருக்கிறதா என்று பார்க்கிறது; மற்றொன்று, தவறிருந்தால், சரி செய்கிறது. இப்ப நம் உயிரணு என்பது அருமையான, கட்டுக் கோப்பான ஒரு தொழிற்சாலை. பாண்டி பஜார் ஜவுளி மற்றும் நகைக் கடைகள், இந்த பல நூறு கோடி உயிரணுக்களின் செயல்பாட்டிலிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்.
“பாரம்பரிய நகை மற்றும் பட்டுப் புடவைகளுக்கு…” என்று விளம்பரம் செய்வோருக்கு உண்மையான பாரம்பரியம் (மரபணு) பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எப்படி உயிரணுக்கள் புதுப்பிக்கப் படுகின்றன என்ற அருமையான வீடியோ இங்கே…

 
இந்த சமயத்தில், இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். ஒரு உட்கரு அமிலத்தின் தொடரில் பல்லாயிரம் பேஸ் ஜோடிகள் உள்ளன. இவற்றின் முழுக் காரணமும் இன்னும் நமக்கு விளங்கவில்லை. இதில் தேவையில்லாதவற்றை குப்பை உட்கரு அமிலம் (Junk DNA) என்று சொல்கிறார்கள். உயிர் தொழில்நுட்பம் வளர முக்கிய காரணம், தடை நொதியம் (restriction enzyme) என்ற நுட்பம். இதனால், ஒரு உட்கரு அமிலத்திலிருந்து தேவையான தொடரை மட்டும் வெட்டி வெளியே எடுத்து, இன்னொரு தொடருடன் இணைக்க முடியும். இதை வைத்துதான், இன்று மரபணு மாற்றப்பட்ட (genetically modified or GM) பொருட்களை உருவாக்க முடிகிறது.
கடைசிக் கேள்விக்கு வருவோம். நாம் ஒதுக்கும் குப்பை உட்கரு அமிலத்தில், எப்பொழுது எந்த புரத மூலக்கூறுகளை உருவாக்க வேண்டும் என்ற ரகசியம் அடங்கியிருக்கிறதோ? இப்படிப் பல கேள்விகளுடன் தொடங்கிய ஆராய்ச்சி முழுவதும் நிறைவு பெறவில்லை என்றாலும், சில முக்கியப் புரிதல்கள் இன்று நமக்கு உண்டு:

 1. நிறவுறு என்பது ஒரு வகை மரபணுக்களை மட்டும் கொண்டதல்ல. இதில் கட்டமைப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் (structural genes) ஒரு வகை. இவை ஒரு உயிரினத்தில் புரத மூலக்கூறுகளை உருவாக்கும் குறியீடுகளைத் தாங்கியவை. மற்றொரு வகை, கட்டுப்படுத்தும் மரபணுக்கள் (regulatory genes) எனப்படுவன – இவற்றின் வேலை, கட்டமைப்பு மரபணுக்களின் வேலை வேகத்தைக் கண்காணித்து நேர்ப்படுத்துவது. இவை, எப்பொழுது எந்த புரத மூலக்கூறுகளை உருவாக்க வேண்டும், எப்பொழுது உயிரணுவின் பிரதியை உருவாக்க வேண்டும் என்ற விஷயங்களைக் கட்டுப்படுத்துவன.
 2. உட்கரு அமிலத்தில் உள்ள மரபணுக்களில் மூன்று சதவீத மரபணுக்களே, புரத மூலக்கூறு உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளன. அதாவது, ஒரு தொழிற்சாலையில், தொழிலாளர்கள் தவிர ஏனையோர், பல நிறுவனத் தேவைகளைப் பார்ப்பது போன்ற விஷயம் இது. அடுத்த ஆண்டின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமா? அல்லது, வேறு பொருட்களை உற்பத்திச் செய்ய வேண்டுமா? இப்படி, எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்து செயலாற்றும் திட்ட சமாச்சாரம் மரபணுவில் எங்குள்ளது? அதாவது, அடுத்த ஆண்டு, 14 வயது முருகனின் முகத்தில், மீசை முளைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமே. அது எங்கே துவங்கி நடக்கிறது?
 3. வளர்ச்சி மரபணு ஆராய்ச்சி (developmental genetics research) மிகவும் சிக்கலானது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஆரம்ப மரபணுத் தொடரில் சில தொடர்கள் பயன்படுத்தப் படுவதில்லை. பல உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும், ரசாயன மாற்றங்களோடு, சில தொடர்களைத் தக்க சமயத்தில், உடல், பயன்படுத்திக் கொள்கிறது. இதற்காக, பல சேர்மானங்களில், ஆரம்பத் தொடரிலிருந்து பல தளங்களில் இவ்வேலை நடைபெறுகிறது
 4. இது, ராஜாவின் வரவிருக்கும் படத்துக்கான இசைக்குறிப்பு போன்றது. ஒரு உதாரணத்திற்கு, ராஜா, 2017 -ல் வரவிருக்கும் திரைப்படத்திற்கு, இன்றே இசை எழுதி வைத்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம். அந்த இசையை வாசிக்கும் வரை, அது வெறும் இசைக்குறிப்பு தான். 2017 -ல், அதை வாசித்து, நாமெல்லாம் கேட்போம். அது போலத்தான் இந்த வளர்ச்சி சார்ந்த குறியீடுகள், பல மரபணுக்களில் மறைந்து கிடக்கின்றன. தகுந்த நேரத்தில், அவை இயங்கி, புதிய மாற்றங்களை, உயிரணுக்கள் மூலம் உயிரினங்களில் வெளிப்படுத்துகின்றன.

இப்படி, இரு சுருள் வளையத்தில் தொடங்கிய இத்துறை இன்று பல அடிப்படைக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இன்று, ஆரம்ப காலத்து எளிய புரிதல்களைத் தாண்டி முன்னேற, கணினி மற்றும் தகவல் விஞ்ஞானம் பெரும் உதவி புரிந்துள்ளன என்பதில் சந்தேகமில்லை.
முடிவுரை
இந்தக் கட்டுரைத் தொடர், தமிழில் மரபணு ஆராய்ச்சியின் ஆரம்பம் மற்றும் வளர்ச்சி பற்றிய ஒரு பருந்துப் பார்வை மட்டுமே. இத்துறை, இன்று ராட்சச வேகத்தில் வளர்ந்து, பல பயன்பாடுகளை உண்டாக்கி மனிதர்களுக்கு நன்மையும், தீமையும் செய்து வருகிறது. இக்கட்டுரை, இயற்கையின் படைப்பு ரகசியம் முழுவதையும் விஞ்ஞானம் அறிந்து கொண்டுவிட்டதாக நம்பப்படும் எண்ணத்தை மாற்றவே எழுதப்பட்டது. விஞ்ஞானிகள் என்றும் இவ்வகைப் பிரகடனங்கள் செய்வதில்லை. பிரபல ஜனரஞ்சக விஞ்ஞான பத்திரிகைகள் செய்யும் கூத்து அது. எல்லா மரபணு சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கும் இக்கட்டுரைத் தொடர் பதிலளிக்காது. ஆனால், சில அடிப்படைக் கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் கிடைத்தால், அதுவே நிறைவு அளிக்கும். இத்தொடரில் தவறுகள் இருந்தால், சுட்டிக் காட்டவும். மேலும், உயர் தொழில்நுட்ப – மருத்துவ, விவசாய, வளர்ச்சிகள் பற்றி எழுத விருப்பம் உண்டு. இத்தொடருக்குக் கிட்டும் வரவேற்பைச் சார்ந்த விஷயம் அது.

தமிழ்ப் பரிந்துரை

தமிழ்ச் சொற்கள் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். இச்சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்
 

ஆங்கிலச் சொல் தமிழ் பரிந்துரை
cell உயிரணு
heredity மரபுத்தொடர்
chromosome நிறவுறு
protein molecule புரத மூலக்கூறு
gene மரபணு
DNA உட்கரு அமிலம்
nucleotide உட்கரு அமிலமூலம்
human genome மனித மரபணுத்திரள்
mitochondria ஆற்றல் உரு
cytoplasm உட்கருக்காரை
sex chromosomes பால் நிறவுறு அணுக்கள்
optical microscope ஒளி நுண்ணோக்கி
electron microscope எலெக்ட்ரான் நுண்ணோக்கி
nuclear membrane உயிர்க்கரு சவ்வு
nucleus உயிர்க்கரு
cell membrane உயிரணு சவ்வு
Junk DNA குப்பை உட்கரு அமிலம்
restriction enzyme தடை நொதியம்
genetically modified or GM மரபணு மாற்றப்பட்ட
tissues திசுக்கள்
ribosomes புரத உருவாக்கியுறு
enzyme நொதியம்
amino acid நவச்சியவமிலம்
molecular biology மூலக்கூறு உயிரியல்
red blood cell சிவப்பு ரத்த உயிரணு
white blood cell வெள்ளை ரத்த உயிரணு

மேற்கோள்கள்

இந்த கட்டுரைத் தொடரை எழுத பல புத்தகங்களும், இணைய தளங்களும், யுடியூபும் உதவின.
புத்தகங்கள்:

 1. Biotechnology Unzipped: Promises and Realities, Revised Second Edition: 9780309096218: Medicine & Health Science Books : அருமையான ஆரம்ப நிலை உயிர் தொழில்நுட்பப் புத்தகம்
 2. The Century of the Gene: Evelyn Fox Keller: 9780674008250: இக்கட்டுரையை எழுதத் தூண்டிய அளவிற்கு அவ்வளவு சுவையான புத்தகம்
 3. The Double Helix: A Personal Account of the Discovery of the Structure of DNA – Kindle edition by James D. Watson: மரபணு ஆய்வில் வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த ஒரு புத்தகம்
 4. The Information: A History, A Theory, A Flood (8601401171638): James Gleick: தகவல் விஞ்ஞான வளர்ச்சியைப் பற்றிய அருமையான புத்தகம். இரு சுருள் வளைய சர்ச்சை பற்றிய அழகான ஒரு அத்தியாயமும் உண்டு

யுடியூப் விடியோக்கள்
0 Replies to “இரு சுருள் வளைய சர்ச்சை மற்றும் மூலக்கூறு உயிரியல் வளர்ச்சி – இறுதிப் பகுதி”

 1. மிகவும் பயனுள்ள கட்டுரை.
  “மாற்று உட்கரு அமிலம், ஒற்றை சுருளுடன் (single helix) , குறைவான நீளத்துடனும் இருக்கும். அத்துடன், இது மூன்று பேஸ்கள் (அதாவது A, C, G, ) மட்டுமே கொண்டது.”
  RNA வும் நான்கு பேஸ்கள் கொண்டதே. ஒரே வேறுபாடு U (Uracil) மட்டுமே. அதாவது A U G C. DNA வில் இது A T G C.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.