விதியின் பிழை காண்: இறுதி பாகம்

images-fort

உள்புறம் – அரண்மனையில் ஒரு பெரிய சபா மண்டபம் – இரவு
 

பாண்டியன் நெடுங்கோன் அந்த சபையின் ஒரு கோடியில் உள்ள மரச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறான். தனியாக இருக்கிறான். அவ்வளவு பெரிய சபையில் யாருமே இல்லை.சபையின் வாசலில் இருந்து அச்சுதன் நடந்து வருகிறான். அவன் காலடிச் சத்தம் “டக் டக்” என்று கேட்கிறது. பாண்டியன் தலை குனிந்து அமர்ந்திருக்கிறான். அவன் எதிரே வந்து நிற்கிறான் அச்சுதன்

 

அச்சுதன்

 

அரசே, படைகள் உங்கள் கட்டளைக்குக் காத்திருக்கின்றன

 

நெடுங்கோன் மெளனமாக இருக்கிறான்.

 

அச்சுதன்
(CONTD)

 

நாம் நாளை கிளம்பினால் மதுரை நம் கையில். தாமதம் செய்தால் களப்பிரனுக்குத் தகவல் சென்று விடும்.

 

நெடுங்கோன் நிமிர்ந்து அச்சுதனைப் பார்க்கிறான்

 

நெடுங்கோன்

 

அவள் எங்கே?

 

(beat)
அச்சுதன்

 

பொதிகை மலையில் சித்தர்களின் மடம் இருக்கிறது. அங்கிருந்து மிக அருகில் சேர நாடு

 

நெடுங்கோன்
(எழுந்து நிற்கிறான்)

 

உன் ஆட்கள் பத்து பேரைக் கூட்டி வா. பொதிகை மலைக்குக் கிளம்பலாம்.

 

அச்சுதன்

 

அரசே, மதுரையில்..

 

நெடுங்கோன்
(குறுக்கிட்டு)

 

அச்சுதா, மதுரை காத்திருக்கும். நூறு வருடங்கள் பொறுத்த நாம் இன்னும் சில வருடங்கள் பொறுத்தால் தவறில்லை.

 

அச்சுதன் மௌனமாகிறான்.

 

நெடுங்கோன்
(CONTD)

 

அவளை என் கையால் கொல்ல வேண்டும்
வெளிப்புறம் – ஒரு நந்தவனம் – பகல்

 

ராணியின் கனவில் வந்தது போலவே, ஒரு குழந்தையின் சிரிப்புச் சத்தம் கேட்கிறது. பச்சைப் பசேல் என்று செடி கொடிகள். அவற்றின் இடையே உள்ள கல் பாதை தெரிகிறது. மறுபடியும் குழந்தையின் சிரிப்புச் சத்தம். பாதையில் ஒரு வயதுக் குழந்தை ஒன்று நடந்து வருகிறது. தள்ளாடித் தள்ளாடி சிரித்தவாறே வருகிறது. சிரித்தபடி முன்னால் நிமிர்ந்து பார்க்கிறது. பார்த்து விட்டு அப்படியே நிற்கிறது.கல் பாதையின் முடிவில் ராணி நிற்கிறாள். குழந்தையைப் பார்த்தபடி நிற்கிறாள். அவள் கண்கள் கலங்கி இருக்கின்றன.
குழந்தைக்குப் பின்னால் ஒரு தாடி வைத்த வயதான சித்தர் ஒருவர் வருகிறார். ராணியைப் பார்த்து அவர் முகம் மலர்கிறது.
ராணி குழந்தையை நோக்கி நடந்து வந்து, அவன் முன்னால் மண்டியிட்டு அமர்கிறாள். சற்றுத் தள்ளிப் பறவைகளின் குரல்கள் கேட்கின்றன.

 
 

வெளிப்புறம் – மலையில், ஒரு மரம் சூழ்ந்த சோலை (பாபநாசம்) – பகல்

 

ஒரு பெரிய கல் திண்டில் மதிவாணச் சித்தர் அமர்ந்திருக்கிறார். நாம் நெல்வேலி மடத்தில் பார்த்த பெரிய சித்தரும் அருகில் இருக்கிறார். ராணி குழந்தையை மடியில் வைத்திருக்கிறாள். தென்னதரையன், தருமன், நாகை மூவரும் அருகே நிற்கிறார்கள்.

 

ராணி

 

நான் இங்கிருந்து சீக்கிரமாகக் கிளம்ப வேண்டும். மன்னர் கட்டாயம் இங்கே படைகளுடன் வருவார். இதற்குள் வந்திருப்பார் என்று கூடத் தோன்றுகிறது

 

மதிவாணர்

 

அம்மா, இங்கிருந்து எங்கே போவீர்கள்? குழந்தையைத் தூக்கிக் கொண்டு காட்டில் எவ்வளவு தூரம் போக முடியும்

 

ராணி குனிந்து மடியில் இருக்கும் குழந்தையின் உச்சி முகர்கிறாள்

 

ராணி

 

வஞ்சிக்குப் போகும் பாதை என்ன ஆயிற்று?

 

பெரிய சித்தர்

 

அந்தப் பாதை இப்பொழுது மூடியிருக்கும். மழை பெய்து பாதையே வெள்ளக் காடாக இருப்பதாகச் சொன்னார்கள்.

 

மதிவாணர்

 

அம்மா, நான் ஒரு யோசனை சொல்கிறேன், கேளுங்கள். இங்கிருந்து இரண்டு காத தூரத்தில், தாமிரபரணியின் முகத் துவாரம் இருக்கிறது. பாண தீர்த்தம் என்று அழைப்பார்கள். மனித நடமாட்டமே இல்லாத இடம். அங்கே எங்களைப் போன்ற சித்தர்களின் குகைகள் உண்டு. அங்கே போய் சில நாள் தங்குங்கள். சேர நாட்டிற்குப் போகும் பாதை தெரிந்தவுடன் உங்களை நானே வந்து அழைத்துச் செல்கிறேன்.

 

ராணி தென்னதரையனைத் திரும்பி பார்க்கிறாள்.

 

தென்னதரையன்

 

சித்தரே, பாண்டியர் அதைக் கண்டுபிடித்து வந்து விடுவார்.

 

மதிவாணர்

 

எங்களுக்கே அந்த இடத்தைக் கண்டுபிடிப்பது சிரமம்

 

ராணி

 

அவர் நினைத்த காரியத்தை முடிக்காமல் விட மாட்டார்.

 

மதிவாணர்

 

அம்மா, இதற்கு மேல் போர் வருவது சந்தேகம் தான். களப்பிரனுக்கு இதற்குள் செய்தி போயிருக்கும். குழந்தையை அரசரிடம் கொடுத்து விட்டால் என்ன தவறு?

 

ராணி
(சிரித்தபடி)

 

என்னைக் கொல்லாமல் அரசர் சாந்தமடைய மாட்டார்.

 

ராணி தருமனையும் நாகையையும் பார்க்கிறாள்.

 

ராணி
(CONTD)

 

பாவம், என்னோடு இவர்களும் மாட்டிக் கொண்டார்கள்.
வெளிப்புறம் – காட்டுப் பாதை – பகல்

 

மரங்களை விலக்கிக் கொண்டு, ஒரு சிறு ஓடை வழியாக மதிவாணர் முதலில் போகிறார். அவர் பின்னால் ராணி கவனமாக வருகிறாள். அவள் முதுகில் ஒரு பை கட்டி, அதில் மகனை வைத்திருக்கிறாள். இன்னும் சற்றுப் பின்னால் தருமனும் நாகையும் வருகிறார்கள். தென்னதரையன் கடைசியில் சுற்றிப் பார்த்தவாறு வருகிறான். அவன் முதுகில் சில அம்புகளை வைத்து ஒரு தூளி கட்டியிருக்கிறான். தோளில் வில் ஒன்று மாட்டியிருக்கிறான். இடையில் வாள்.

 

மதிவாணர்

 

பார்த்து வாருங்கள், வழுக்குகிறது

 

ஓடையைத் தாண்டிப் பழையபடி காட்டுக்குள் போகிறார்கள். சுற்றிலும் வினோதமான பறவைகளின் சத்தங்கள் கேட்கின்றன.

 

நாகை

 

ராணியம்மா, உங்களுக்கு வழுதியை முன்பே தெரியுமோ?

 

ராணி

 

அவனை அச்சுதருடன் பார்த்திருக்கிறேன். குற்றாலத்தில் இருந்து செய்தி வரத் தொடங்கியவுடன் அவன் தான் அனுப்புகிறான் என்று தெரிந்து கொண்டேன்.

 

நாகை

 

நான் அவனை நல்லவன் என்றே நினைத்து விட்டேன்.

 

ராணி

 

அவன் நல்லவன் தான். நாம் தான் கெட்டவர்கள்.

 

தருமன் அவர்களைத் தாண்டி முன்னால் போகிறான். மதிவாணர் அருகே நடக்கிறான்.

 

தருமன்

 

ஐயா, முன்னாலே கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நெல்வேலி மடத்தில் எல்லோரும் இங்கே வந்து விட்டார்களா?

 

மதிவாணர்

 

அங்கங்கே பிரித்து அனுப்பி விட்டோம். நீ எங்களைப் பார்க்க வந்தவுடனே ஆபத்து வந்து விட்டது என்று புரிந்து கொண்டோம்.

 

தருமன்

 

இப்பொழுது யார் அங்கே இருக்கிறார்கள்?

 

மதிவாணர்

 

யாரும் இல்லை

 

(beat)

 

ஒருவன் இருக்கிறான். உங்களுக்கு மடத்தைச் சுற்றிக் காட்டினான், தெரியுமா?

 

தருமன்

 

ஆமாம். நினைவிருக்கிறது

 

மதிவாணர்

 

அவனை மட்டும் அங்கே விட்டு வந்திருக்கிறோம். நமக்கு வேவு பார்த்துச் சொல்வான்.

 

தருமன் மெளனமாக நடக்கிறான். பிறகு,

 

தருமன்

 

அவருக்கு இந்தச் சித்தர் குகை இருக்கும் இடம் தெரியுமா?

 

மதிவாணர் நிற்கிறார். அவனைப் பார்க்கிறார். பின்னால் மற்றவர்கள் வந்து சேர்ந்து கொள்கிறார்கள்.
தருமன்

 

அவரைப் பாண்டியர்கள் பிடித்திருந்தால்?
வெளிப்புறம் – ஒரு உயரமான பாறைக்கு மேல் – பகல்

 

மதிவாணர் குப்புறப் படுத்திருக்கிறார். அவருக்கு அருகில் தென்னதரையன்.இருவரும் சற்றுத் தள்ளித் தெரியும் காட்சியைப் பார்க்கிறார்கள்.
அவர்கள் இருப்பது ஒரு மேட்டின் மேல் உள்ள பாறை. அதன் மேலிருந்து நல்ல தூரம் தெரிகிறது. சற்றுத் தள்ளிப் பெரிய மலைகள். மலைகளுக்கு முன்னால் வலது பக்கம் அடர்ந்த காடு. இடது பக்கம் ஒரு ஏரி நீளமாகத் தெரிகிறது. ஏரியைத் தாண்டி இன்னும் மலைகள்.
காடு ஏரிக்கு சற்று முன்னால் முடிகிறது. பாறையில் இருப்பவர்களுக்கு நேராக, காட்டில் ஒரு சிறு பாறைக் குன்று தொடங்குகிறது. அந்தக் குன்றின் அடிவாரத்தில் சில கரிய ஓட்டைகள் தெரிகின்றன. உற்றுப் பார்த்தால் குகைகள் என்று தெரிகிறது.
தென்னதரையன் அவற்றை உற்றுப் பார்க்கிறான்.

 

தென்னதரையன்

 

யார் நடமாட்டமும் காணோம்?

 

மதிவாணர்

 

பொதுவாகத் தவத்தில் இருப்பார்கள்.

 

தென்னதரையன் தான் படுத்திருக்கும் பாறையில் இருந்து மெதுவாகக் கீழே இறங்குகிறான். ராணியும், மற்றவர்களும் கீழே காத்திருக்கிறார்கள்.

 

தென்னதரையன்

 

யாரையும் காணோம். அது நல்லதா, கெட்டதா என்று தான் தெரியவில்லை.

 

ராணி

 

மேலே போகலாம். விதி விட்ட வழி.
வெளிப்புறம் – காட்டின் உள்ளே குகைகளுக்கு முன்னால் – பகல்

 

தென்னதரையன் கை வாளைப் பிடித்திருக்கிறது. மற்றொரு கை முன்னால் உள்ள இலைகளை விளக்குகிறது. எதிரே குகைகள் தெரிகின்றன. அந்த குகைகளில் இருந்து சில கல் படிக்கட்டுகள் சமதரைக்கு இறங்கி வருகின்றன. குகைகளின் முன்னால் உள்ள ஒரு மேடையில் சித்தர் ஒருவர் தவக் கோலத்தில் அமர்ந்திருக்கிறார்.தென்னதரையன் சுற்றிப் பார்க்கிறான். அங்கே வேறு யாருமே இல்லை.

 

ராணி
(மெதுவாக)

 

சித்தர் இருக்கிறாரே.

 

தென்னதரையன் காட்டில் இருந்து வெளியே காலடி எடுத்து வைக்கிறான்.சற்று முன்னால் போகிறான். பெரும் அமைதி.

 

தருமன்
(ராணியிடம்)

 

பறவைகளின் சத்தமே கேட்கவில்லை

 

அப்பொழுது தலைக்கு மேலிருந்து காக்கை ஒன்று பறந்து வருகிறது. சித்தர் தலை மேல் போய் அமர்கிறது.சித்தர் அசையவில்லை.
தென்னதரையன் சரேலென்று காட்டை நோக்கித் திரும்புகிறான். குகையின் உள்ளே இருந்து அம்பு ஒன்று பாய்ந்து வந்து அவன் காலைத் தைக்கிறது. அவன் கீழே விழுகிறான்.
ராணி நிமிர்ந்து பார்க்கிறாள். குகைகளின் வாசலில் சில வீரர்கள் நிற்கிறார்கள். நட்ட நடுவே பாண்டியன் நெடுங்கோன் நிற்கிறான். அவனுடைய உயரத்தால் எல்லோரிடம் இருந்தும் தனியாகத் தெரிகிறான். வழுதி, அச்சுதன், பெருமாள், கணியன் எல்லோரும் குகை வாசலில் நிற்கிறார்கள்.
அடிபட்ட தென்னதரையன் பாண்டியனைப் பார்த்து விட்டுக் கத்துகிறான்.

 

தென்னதரையன்

 

அம்மா, ஓடி விடுங்கள்.

 

ராணி வெளியே வர முயற்சிக்கிறாள். மதிவாணர் அவள் கையைப் பிடித்துத் தடுக்கிறார்.

 

மதிவாணர்

 

அவன் சொல்வது தான் சரி. இங்கே இருக்க வேண்டாம்.

 

வீரர்கள் இறங்கி ஓடி வருகிறார்கள். தென்னதரையன் அம்பைப் பிடுங்கிப் போடுகிறான். ரத்தம் கொட்டுகிறது. அதோடு எழுந்து விந்தியவாறே, சற்றுத் தள்ளி உள்ள பாறைக்குப் பின்னால் போய் ஒளிந்து கொள்கிறான். மின்னல் வேகத்தில் அவன் வில் அவன் கைக்கு வருகிறது. இறங்கி வரும் வீரர்களை நோக்கி அம்பு பாய்கிறது.ஒரு வீரன் அடிபட்டு விழுகிறான்.

 

தென்னதரையன்
(மறுபடிக் கத்துகிறான்)

 

ஓடி விடுங்கள்.

 

ராணி காட்டுக்குள்ளே புகுந்து இடது பக்கம் ஓடுகிறாள். செடிகளும் மரங்களும் அவர்கள் முகத்தில் அடிக்கின்றன. குழந்தை கத்துகிறான்.

 

(CONTINUOUS ACTION)

 

படிகளில் ஓடி வந்த வீரர்கள் தென்னதரையனின் அம்புகளுக்குப் பயந்து அப்படியே படுத்துக் கொள்கிறார்கள். நெடுங்கோன் பயமின்றி நிற்கிறான்.

 

நெடுங்கோன்
(இடிமுழக்கம் போன்ற குரலில்)

 

அரையா, உனக்கு ஒரு தனிக் கழு மரம் காத்திருக்கிறது.

 

தென்னதரையனின் கை நடுங்குகிறது.நெடுங்கோன் வழுதியைப் பார்த்துக் கண்ணைக் காட்டுகிறான். வழுதியும் பெருமாளும் குகைக்குப் பக்கவாட்டில் போகிறார்கள்.

 

நெடுங்கோன்

 

அரையா, இதோ நான் இங்கே நிற்கிறேன்.

 

எழுந்து வா.

 

பதிலுக்கு அம்பு ஒன்று அரசனைப் பார்த்துப் பறந்து வருகிறது. வந்து குகை வாசலில் விழுகிறது.

 

அச்சுதன்

 

அரசே, உள்ளே வந்து விடுங்கள்

 

நெடுங்கோன்
(கத்தி)

 

அரையா, காளி பலி கேட்கிறாள். தன் முன்னால் பொய்ச் சத்தியம் செய்தவனின் தலையைக் கேட்கிறாள்.

 

வழுதி குகைக்கு மேலே உள்ள பாறையில் ஏறத் தொடங்குகிறான். வெகு எளிதாகச் சரசரவென்று மேலே ஏறுகிறான். சற்று தூரத்தில் உள்ள ஒரு கல்லைப் பிடித்து ஏறி அதன் மேல் நிற்கிறான்.கீழே நூறு அடிக்கு மேல் இருக்கும். அவன் இருக்கும் இடத்தில் இருந்து தென்னதரையனின் முதுகு தெளிவாகத் தெரிகிறது.
வழுதி தன் தோளில் இருந்து வில்லை எடுக்கிறான். பின்னால் இருந்து அம்பை எடுத்துப் பொருத்துகிறான்.
தென்னதரையன் கடைசி வினாடி நிமிர்ந்து பார்க்கிறான். மேலிருந்து அம்பு பாய்கிறது.
திரையில் இருட்டு

 
 

வெளிப்புறம் – காடு மற்றும் ஏரி – பகல்

 

ராணியும் மற்றவர்களும் காட்டைத் தாண்டி ஏரிக் கரைக்கு வந்து நிற்கிறார்கள். அங்கே ஒரே ஒரு படகு இருக்கிறது. அதை நோக்கி மூச்சு இளைக்க ஓடுகிறார்கள்.படகை அவிழ்த்து விட்டு எல்லோரும் ஏறிக் கொள்கிறார்கள். மதிவாணர் படகைத் தள்ளி விடுகிறார். உள்ளே இருக்கும் துடுப்பை எடுத்துத் தள்ளுகிறார்.
அது சிறிய ஏரி தான். படகில் எல்லோரும் காட்டைப் பார்த்தவாறு இருக்கிறார்கள்.
திடீரென்று காட்டின் எல்லையைத் தாண்டி வீரர்கள் ஓடி வருகிறார்கள்.

 

ராணி

 

ஐயோ, அரையரே!

 

அவள் கண்கள் கலங்குகின்றன.
மதிவாணர் வேகமாகத் தள்ளுகிறார். வீரர்கள் இப்பொழுது ஏரிக்கரையில் சுற்றி நிற்கிறார்கள். காட்டுக்கு உள்ளிருந்து பாண்டியன் நெடுங்கோன் வெளியே வருகிறான். வீரர்களைப் பார்த்து ஏதோ கத்துகிறான்.கரையில் இருந்து திடீரென்று அம்புகள் பறக்கின்றன. மதிவாணர் வேகமாகப் போக முயற்சி செய்கிறார். அம்புகள் சுற்றி தண்ணீரில் விழுகின்றன.

 

மதிவாணர்

 

அம்மா!

 

முன்னால் சாய்கிறார். அவர் முதுகில் அம்பு பாய்ந்திருக்கிறது. ராணி முன்னால் வந்து அவரைப் பிடிக்கிறாள்.

 

ராணி
(குரல் அடைக்கிறது)

 

சித்தரே, இந்தப் பாவியை மன்னிப்பீர்களா?

 

மதிவாணர் சாய்ந்தபடி இருக்கிறார். படகு முன்னால் போகாமல் மிதக்கிறது. ஆனால் அவர்கள் அம்புகளின் வீச்சில் இருந்து தப்பி விட்டார்கள்.

 
 

வெளிப்புறம் – ஏரிக் கரை – பகல்

 

நெடுங்கோன் தூரத்தில் தெரியும் படகைப் பார்க்கிறான்.

 

நெடுங்கோன்

 

அச்சுதா, இப்போது வழி என்ன?

 

அச்சுதன்

 

அரசே, அவர்கள் எங்கும் போக முடியாது. ஏரியைத் தாண்டிப் பாண தீர்த்தம் இருக்கிறது. அங்கே பாதை முடிகிறது. அதற்கு மேல் போக வழி இல்லை.

 

நெடுங்கோன்

 

சரி, நாம் எப்படி ஏரியைக் கடப்பது? அவர்கள் படகைத் திருப்பி அனுப்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

 

அச்சுதன்

 

அதோ.

 

நெடுங்கோன் திரும்பிப் பார்க்கிறான். காட்டுக்குள் இருந்து வீரர்கள் இரு படகுகளை இழுத்து வருகிறார்கள்.

 
 

வெளிப்புறம் – அருவியும், சுற்றி உள்ள பாறையும் (பாண தீர்த்தம்) – பகல்

 

ஏரிக் கரையில் படகை இழுத்து விட்டு தருமன் மேலே பார்க்கிறான். சற்றுத் தள்ளி தாமிரபரணி ஆற்றின் அருவி ஏரிக்குள் விழுகிறது. அந்த இடம் அதல பாதாளமாய், பல பெரும் பாறைகளுடன் இருக்கிறது.ராணி திரும்பிப் பார்க்கிறாள். தூரத்தில் இரு படகுகள் வருவது தெரிகிறது.
அருவியை நோக்கிப் பாதை போகிறது. மூவரும் அதில் ஏறிப் போகிறார்கள். பின்னால் படகுகள் வேகமாக வருகின்றன.

 
 

வெளிப்புறம் – அருவிக்கு அருகில் (LATER) – பகல்

 

நெடுங்கோன் மலை மேலே மரக்கிளைகளை விலக்கிக் கொண்டு முன்னால் வருகிறான். மலை மேல், வெறும் பாறை. அந்தப் பாறையில் வளைந்து செல்லும் சிறு பாதை. அதற்கு அப்பால், அருவி தடதடவென்று விழுகிறது.அருவிக்கு இடது பக்கம், அந்தப் பாதையின் முடிவில், பாறைச் சுவரில் சாய்ந்து நிற்கிறாள் ராணி. அவளுக்கு வலது பக்கம் தருமனும் நாகையும் நிற்கிறார்கள். நாகை இளவரசனை வைத்திருக்கிறாள்.
ராணி கையில் ஒரு வாள்.
பாண்டியன் ஒன்றும் பேசாமல் அப்படியே நிற்கிறான். பிறகு அடி மேல் அடி வைத்து முன்னால் வருகிறான். அவன் பின்னால் பிற வீரர்கள்.

 

நெடுங்கோன்

 

தேவி, வீட்டுக்குப் போகலாம் வா.

 

ராணி மெளனமாக இருக்கிறாள்.

 

நெடுங்கோன்

 

இப்படி என் வேலைக்கார்களோடு நீ ஓடிப் போனால், எல்லோரும் என்ன நினைப்பார்கள், சொல்?

 

ராணி சற்று முயற்சி செய்து நிமிர்ந்து நிற்கிறாள்

 

நெடுங்கோன்

 

என்னுடன் சண்டையிடப் போகிறாயா, என்ன?

 

நெடுங்கோன் பின்னால் திரும்பி அவன் வீரர்களைப் பார்க்கிறான்.

 

நெடுங்கோன்

 

அடேய், பின்னால் தள்ளி நில்லுங்கள்.

 

வீரர்கள் பின்னால் போகிறார்கள். நெடுங்கோன் தன் வாளை உருவுகிறான்.

 

நெடுங்கோன்
(ராணியிடம்)

 

வா

 

ராணி மெதுவாக முன்னால் வருகிறாள். இருவரும் வாள் எட்டும் தூரத்தில் வந்து நிற்கிறார்கள்.

 

நெடுங்கோன்

 

நம் மகன் இந்தக் காட்சியைப் பார்க்கக் கொடுத்து வைத்தவன்.

 

ராணி கத்தியைத் தூக்குகிறாள். பாண்டியன் தன் முழு பலத்தையும் கொண்டு, தன் கத்தியை இறக்குகிறான். அவனுடையது பெரிய கத்தி. ராணி அதை நேருக்கு நேர் சந்திக்காமல் பக்கவாட்டில் நகர்ந்து கொள்கிறாள்.கத்திச் சண்டை தொடங்குகிறது. டனார், டனார் என்று சத்தம் கேட்கிறது. இருவரும் மெதுவாகச் சுற்றி வருகிறார்கள். ராணியின் மெலிதான வாள் ஒவ்வொரு முறையும் நெடுங்கோனின் வாளைப் பக்கவாட்டில் தாக்குகிறது.
சுற்றி வரும் நெடுங்கோன் இப்போது அருவிப் பக்கம் நிற்கிறான். ராணி சற்று முன்னே வந்து தாக்குகிறாள். பாண்டியன் பின்னால் ஒரு அடி வைக்கிறான். தண்ணீர் பட்டுப் பாசி பிடித்த பாறை வழுக்குகிறது. பாண்டியன் நிலை தடுமாறுகிறான். அச்சுதன் முன்னால் ஒரு அடி எடுத்து வைக்கிறான்.
ராணி நெடுங்கோன் நிலைக்கு வரும் வரை காத்திருக்கிறாள்.
பாண்டியன் இப்போது இன்னும் வேகம் கொண்டு தாக்குகிறான். ராணி பின்னால் நகர்ந்து பாறையின் விளிம்புக்கு வருகிறாள். சற்றுக் குதித்து முன்னால் வருகிறாள்.

 

நெடுங்கோன்

 

அச்சுதா, இளவரசனை வாங்கிக் கொள்.

 

ராணி திடுக்கிட்டு நிற்கிறாள்

 

நெடுங்கோன்

 

தாய் இறப்பதை அவன் பார்க்க வேண்டாம்.

 

அவன் கத்தி வேகமாக இறங்குகிறது.ராணி பல்லைக் கடித்தவாறே மறுபடி அதைத் தடுக்கிறாள். அவள் களைத்திருப்பது தெரிகிறது.

 

நெடுங்கோன்

 

அந்தச் சோதிடனையும் அவன் மனைவியையும் தனியாக அழைத்துப் போய் முடித்து விடுங்கள்.

 

ராணி கோபத்துடன் வாளை வீசுகிறாள். நெடுங்கோன், அவள் கையோடு சேர்த்து வாளை ஒரு சுற்றுச் சுற்றுகிறான். ராணியின் பிடி தளர்ந்து, வாள் பறக்கிறது.ராணி கையில் ஆயுதம் இன்றி நிற்கிறாள்.
நெடுங்கோன் உரத்துச் சிரிக்கிறான்.

 

நெடுங்கோன்

 

நான் உனக்குக் கற்றுக் கொடுத்தது எல்லாம் வீண்.

 

அச்சுதன் வழுதி, பெருமாளோடு நாகையை நோக்கிப் போகிறான். அவள் இளவரசனை அணைத்துப் பிடித்திருக்கிறாள். அச்சுதன் குழந்தையை வாங்கிக் கொள்கிறான்.

 

வழுதி

 

தருமா, உன் ஆயுள் ரேகை என்ன சொல்கிறது?

 

தருமனும் நாகையும் மெதுவாக வீரர்களுடன் போகிறார்கள். ராணி அவர்களைப் பார்த்தபடி நிற்கிறாள்.

 
 

வெளிப்புறம் – காட்டுக்கு உள்ளே – பகல்

 

காட்டுக்குள் தருமனும் நாகையும் நுழைந்ததும், வழுதி அவர்களை நிறுத்தி வைக்கிறான்.

 

வழுதி

 

யார் முதலில்?

 

தருமன் முன்னே வருகிறான்

 

நாகை
(வழுதியிடம்)

 

அய்யா, நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்களை விட்டு விடுங்கள்

 

வழுதி

 

திரும்பிப் போகப் படகில் இடமில்லை

 

பெருமாள் சிரிக்கிறான். பிறகு தருமனை பின் காலில் உதைக்கிறான். தருமன் மண்டியிட்டு விழுகிறான். வழுதியின் கத்தி பிடித்த கை மேலே ஓங்குகிறது.“பூக்” என்று ஒரு சத்தம் கேட்கிறது.

 
 

வெளிப்புறம் – அருவி அருகே, பாறை மேலே – பகல்

 

நெடுங்கோன் அருவியைப் பார்த்தபடி நிற்கிறான். ராணி அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

 

நெடுங்கோன்

 

மதுரையின் ராணியாக உன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

 

ராணி

 

செத்த உடல்கள் மேல் நின்று ராணியாக எனக்குப் பிடிக்கவில்லை.

 

நெடுங்கோன்

 

போர் என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா?
ஒருவன் கூட இறக்காமல் ஒரு யுத்தம் நடந்ததாகச் சரித்திரமில்லை.

 

ராணி

 

அரசே, உங்களுக்கு வீரம் என்றால் என்னவென்று தெரியுமா?

 

நெடுங்கோன் பல்லைக் கடிக்கிறான். கத்தியை ஒரு சுற்றுச் சுற்றுகிறான்.

 

நெடுங்கோன்

 

ஒழிந்து போ.

 

கத்தியை ஓங்குகிறான். ராணியின் கண்கள் பின்னால் பார்க்கின்றன. அவள் கண்கள் விரிகின்றன.“பூக்” என்று சத்தம் கேட்கிறது. நெடுங்கோனின் கழுத்தில் இரு முற்கள் வந்து தைக்கின்றன.

 

நெடுங்கோன்

 

ஏய்

 

அவன் கத்தி கீழே விழுகிறது. மண்டியிட்டு விழுகிறான். அவன் கண்கள் கொட்டும் அருவியைப் பார்க்கின்றன. பிறகு மல்லாந்து விழுகிறான்.
மெதுவாகத் தலையைத் திருப்புகிறான். வானத்தில் இருந்து அவன் கணங்கள் கீழே இறங்குகின்றன.மலையனும் அவனுடன் இரு குள்ளர்களும் நிற்கிறார்கள். அவர்களைச் சுற்றிப் பாண்டிய வீரர்கள் விழுந்து கிடக்கிறார்கள்.மலையன் கையில் இளவரசன் இருக்கிறான்.
நெடுங்கோனின் கை மெதுவாக இளவரசனை நோக்கி நீள்கிறது. அவன் கண்ணில் கண்ணீர் வழிகிறது. அப்படியே கண்கள் குத்திட்டு நிற்கின்றன. மலையனுக்குப் பின்னால் தருமனும் நாகையும் வருகிறார்கள்.
ராணி இறந்த மன்னன் அருகே மண்டியிட்டு அமர்கிறாள். அழத் தொடங்குகிறாள்.

 
 

வெளிப்புறம் கோவிலின் அருகில், ஆற்றுக் கரையில் – பகல்

 

சலசலவென்று தாமிரபரணி ஆறு ஓடுகிறது. தண்ணீரில் கால் நனைய நிற்கிறாள் ராணி.ஆற்றங்கரையில் தருமனும் நாகையும் இளவரசனுடன் நிற்கிறார்கள். பெரிய சித்தர் படித்துறையில் அமர்ந்திருக்கிறார். மலையன் சற்றுத் தள்ளி தண்ணீரைப் பார்த்தபடி இருக்கிறான்.
ராணி ஆற்றிலிருந்து சிறிது தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்துக் கொள்கிறாள். பிறகு கரைக்கு வந்து படித்துறையில் அமர்கிறாள்.

 

ராணி

 

மூன்று வருடத்துப் பாவங்கள் எல்லாம் தொலையட்டும்.

 

பெரிய சித்தர்

 

தேவி, உனக்காக நாடும் மக்களும் காத்திருக்கிறார்கள்.

 

ராணி

 

கணவனைக் கொன்று விட்டு என்னை அரியணை ஏறச் சொல்கிறீர்களா?

 

எல்லோரும் மெளனமாக இருக்கிறார்கள். ராணி ஓடும் ஆற்றை உற்றுப் பார்க்கிறாள். அவள் கண்களில் நீர் வடிகிறது

 

பெரிய சித்தர்

 

அம்மா, பாண்டியர் மகனுக்கு வயது வரும் வரை நீ தான் இந்த நாட்டைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

(beat)
ராணி

 

ஒரு மனிதனின் மண்ணாசையால் குள்ளர்களின் குலமே நசித்து விட்டது. தென்னதரையர், மதிவாணர், இன்னும் எவ்வளவு பேர் இறந்தார்களோ.

 

குழந்தை சிணுங்குகிறான். ராணி எழுந்து அவனை வாங்கிக் கொள்கிறாள். தருமனையும் நாகையையும் பார்த்துப் புன்னகைக்கிறாள்.

 

ராணி

 

தருமா, அரசவைச் சோதிடனாக வருகிறாயா?

 

தருமன்

 

அம்மா, என் சோதிடத்தால் வந்த வினை போதாதா?

 

மலையன் எழுந்து நிற்கிறான். ராணி அவன் அருகில் போகிறாள்.

 

ராணி

 

மறைந்த உங்கள் மக்களை என்னால் திருப்பிக் கொண்டு வர முடியாது. மலையரே, உங்கள் நாட்டை உங்களுக்குத் திருப்பி அளிக்கிறேன். மறுபடி உங்கள் குலம் வளரும்

 

மலையன்

 

அம்மா, எங்கள் கதை இந்த நாட்டில் முடிந்து விட்டது. நாங்கள் மேற்கே போகிறோம். கடலைத் தாண்டி, பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது

 

ராணி குழந்தையை அவனை நோக்கி நீட்டுகிறாள். மலையன் குழந்தையின் நெற்றியில் முத்தமிடுகிறான். குழந்தை சிரிக்கிறது.ராணி மெதுவாகப் படி ஏறிப் போகிறாள். அவள் பின்னால் தருமன், நாகை, பெரிய சித்தர் மூவரும் போகிறார்கள். மேலே வந்தால், பல வீரர்கள் அங்கே நிற்பது தெரிகிறது. குதிரைகள் சில நிற்கின்றன. சித்தர்கள் ஒரு ஓரமாகக் கூட்டமாக நிற்கிறார்கள். அரண்மனைப் பல்லக்கும் ஆயத்தமாக இருக்கிறது.
ராணி திரும்பிப் பார்க்காமல் பாண்டியர் மகனுடன் பல்லக்கை நோக்கிப் போகிறாள்.

 

தருமன்
(நாகையிடம்)

 

ராச குடும்பத்துடன் நமது தொடர்பு இத்தோடு முடிந்தது. நிம்மதி. போகலாம் வா.

 

பெரிய சித்தர்

 

தருமா, அப்படிச் சொல்லாதே. பின்னால் என்ன வருகிறது என்று யார் கண்டது?

 

ராணி பல்லக்கில் ஏறிக் கொள்கிறாள்.
(DISSOLVE TO:)
SERIES OF SHOTS – பகல்
A) வெளிப்புறம் – ஒரு சாலை – பகல்

 

தருமனும் நாகையும் திறந்த மாட்டு வண்டியில் போகிறார்கள். இருபக்கமும் பச்சைப் பசேல் என்று வயல்கள். குடியானவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் ஏதோ பேசியபடிப் போகிறார்கள். மலைகள் பக்கத்தில் தெரிகின்றன.

 

B) வெளிப்புறம் – ஒரு பெரிய புழுதிச் சாலை – பகல்

 

பல வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாகச் செல்கின்றன. மக்கள் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் போகிறார்கள்.எதிரே படை வீரர்கள் திரும்பிப் போகிறார்கள். முகத்தில் களைப்பு; ஆனால் சிரித்தபடிப் போகிறார்கள்.
C) வெளிப்புறம் – மற்றொரு சாலை – பகல்

 

திறந்த மாட்டு வண்டி. பலருடன் தருமனும் நாகையும் அமர்ந்திருக்கிறார்கள். வெளியே பார்த்தபடி வருகிறார்கள்

 

நாகை
(தருமனிடம், உரத்து)

 

ராணியுடன் குதிரையில் போனது பயமாக இருந்தது, தெரியுமா?

 

வண்டியில் மற்றவர்கள் சட்டென்று திரும்பிப் பார்க்கிறார்கள்.நாகை, தவறை உணர்ந்து உதட்டைக் கடிக்கிறாள். தருமன் அவளைப் பார்த்துப் புன்னகைக்கிறான். அவள் வெட்கத்துடன் தலை குனிகிறாள்.

 
 

வெளிப்புறம் – சாத்தூரில் தருமனின் வீட்டு வாசல் – பகல்

 

தருமனும் நாகையும் தோட்டத்துக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறார்கள். வாசல் திண்ணையில் பட்டத்திப் பாட்டி அமர்ந்திருக்கிறாள்.

 

பட்டத்திப் பாட்டி

 

வாடா அப்பா. போர் என்றவுடன் உன்னை ஆளையே காணோம்? இப்போது வந்து நிற்கிறாய். நல்ல வீரன் தான் போ.

 

தருமன்

 

பாட்டி, நான் எங்கெல்லாம் போனேன், யாரை எல்லாம் பார்த்தேன் என்று கேட்டால் நீ நம்ப மாட்டாய்.

 

பட்டத்திப் பாட்டி

 

ஆமாம், பெரிய ராசாவுக்கே வேலை பார்த்தது போலப் பேசு.

 

நாகை போய்க் கதவைத் திறக்கிறாள். பாட்டி தன் அருகே ஒரு பெட்டியை வைத்திருப்பதைப் பார்க்கிறான் தருமன்.

 

தருமன்

 

பாட்டி, இது என்ன பெட்டி?

 

பட்டத்திப் பாட்டி

 

இது தான், உன் தாத்தா தந்தது. இப்பொழுதாவது வாங்கிக் கொள்.

 

தருமன் பரபரப்புடன் நாகையைப் பார்க்கிறான். பிறகு பெட்டியை மெதுவாக எடுக்கிறான். தன் அருகே வைத்துத் திறக்கிறான்.உள்ளே ஒரே ஒரு தட்டையான கல் இருக்கிறது. தருமன் அதை எடுத்துத் திருப்பிப் பார்க்கிறான். வட்டெழுத்தில் ஏதோ எழுதி இருக்கிறது.
SUBTITLE: “மாயமுமில்லை மந்திரமுமில்லை”

 

தருமன் நாகையை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைக்கிறான்.
FADE OUT.

 

THE END

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.