அர்த்தநாரீச்வரம் தேவம் பார்வதீ ப்ராண நாயகம்
நமாமி சிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யுர் கரிஷ்யதி– மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்
‘உண்ணாமுலை உமையா ளடும் உடனாகிய ஒருவன்’, ‘பாதியோர் மாதர்’, ‘பெண் ஓர் கூறினர்’, ‘பரநாரிபாகர்’ என்றெல்லாம் பாடிப் பரவுகிறார் திருஞானசம்பந்தர்.
‘பாதியோர் மாதினன்’, ‘உமையரு பாகர்’ ‘மங்கை தன்னை மகிழ்ந்து ஒரு பால் வைத்துகந்த வடிவம்’ என்கிறார் நாவுக்கரசர்.
உமையரு பாகனாக விளங்கும் இந்தக் கோலத்தை, ‘தொன்மைக் கோலம்’ என்று போற்றுகிறார் மாணிக்கவாசகர்!
மாதொருபாகன், உமையொருபாகன், அர்த்தநாரீஸ்வரர் இந்தத் தெய்வங்களெல்லாம் ஏறத்தாழ ஒன்றே. சிவபெருமான் தன்னில் சரிபாதி இடத்தை இறைவிக்குக் கொடுத்ததான கருத்து அது என்றும் சொல்வோர் உண்டு. ஆண் பாதி பெண் பாதி என்றால். இரண்டும் சரிசமமான அளவில் இருக்கிறதென்றால் உமைக்கு இடம் கொடுத்ததாக வந்திருக்காது. இருவரும் ஒன்றானதாக அல்லது ஒன்றில் இடம்பிடித்ததாகவே வந்திருக்கும் அல்லவா?
முதலில் ஒன்று இருந்ததாகவும், பின் அதில் இன்னொன்று சரிபாதி இடத்தைப் பிடித்ததாகச் சொல்லப்படுவதே சரியான லாஜிக்.
ஆக சிவம், சக்திக்கு இடம் கொடுத்ததான கருத்து லாஜிக்படி சரி அல்ல என்று தோன்றினாலும்…அப்படிச் சொல்லப்பட்ட காலத்தின் தேவை என்னவாக இருந்திருக்கும்?
முதலில் அர்த்தனாரீஸ்வரர் கோவிலின் தலவரலாறு சொல்லும் கதையைப் பார்ப்போம்.
ப்ருங்கி முனிவர் பெரும் சிவபக்தர். அவர் சிவனை மட்டும் சுறறி வந்து வழிபடுவார். சக்தி உடனிருந்தால் சக்தியைச் சுற்றுவதைத் தவிர்க்க வண்டு உருவெடுத்து சிவனை மற்றும் சுற்றி வந்து வழிபடுவார்.
இதனால் சக்தி கோபமுற்று ப்ருங்கி முனிவரின் உடலிலிருந்து சக்தி எல்லாவற்றையும் எடுத்துவிட,
சிவமும் சக்தியும் இணைந்ததே செயல் எனும் இறைமை என்பதை சக்திக்குள் தன்னில் ஒரு பாதி கொடுத்தாட்கொண்டார் என்கிறது திருச்செங்கோட்டுத் தல வரலாறு.
உண்மை எதுவாக இருந்திருக்கலாம்…? ’எப்போதெல்லாம் தீமை விளைகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்’ – ஸ்ரீக்ருஷ்ண உவாச:
தீமை எனில்..? …”:இஃது இவ்வாறு தொடர்ந்து இருக்க, எதுவெல்லாம் நிகழ வேண்டுமோ அவற்றை நிகழ்த்த எதோ ஒன்று வேலை செய்யும்.” அதன் பெயர் இறைவன்.
ஆனால் நாம் சொல்லும் தீமை /நன்மை என்பதெல்லாம் மனித இன இருப்பைக்குறித்தே இருக்கிறது. அந்தப் பொருளில் பார்த்தாலும்.. மனித இருப்புக்கு எவை தேவையோ அவற்றை அவன் சொல்வதை விட அவனது சுப்பீரியர் சொன்னால் இன்னும் எடுபடும் அதனாலேயே சொல்ல வேண்டிய அறிவுரைகளை / மனித சமூகம் எப்படி இருக்க வேண்டுமென சொல்ல நினைக்கிறானோ அப்படி இருந்து காட்டுவதாக இறைவன் ஒருவனைப் படைக்கிறான். அல்லது அப்படியான இறைவன் ஒருவன் வருகிறான்.
அளவுக்கதிகமான சாத்வீகத்துடனும் சாது மனப்பான்மையுடனும், இல்லற வாழ்வில் பெரும் ஈடுபாடின்றி இருப்பதே பெருமை என மனித கூட்டம் நம்பி இருந்த காலத்தில் அந்த டிமாண்டை பேலன்ஸ் செய்யவே க்ருஷ்ணாவதாரம் வந்திருக்கலாம்
அது போலவேதான் குடும்ப வாழ்க்கையில் ’பெண்ணுக்கு சரி இடம் கொடு’ எனும் அறிவுரையைச் சொல்ல வேண்டிய நேரத்திலேயே மாதொருபாகன்/அர்த்தனாரீஸ்வரர்/உமையொருபாகன் வந்திருக்கக்கூடும். ஏனெனில் இந்த மதங்கள் பல சமயங்களில் உட்பொருளோடேயே பேசி வந்திருக்கின்றன. உடைத்துப் பேசினால் சாட்சிகள் காட்ட வேண்டும். ஆக உணர்ந்ததை மறைபொருள் வைத்தே பேசி இருக்கின்றன.
இது இப்படியே இருக்கட்டும்.
சமீபத்தில் மாதொருபாகன் என்றொரு தமிழ் புதினம் வந்தது. சில நம்பிக்கைகளை வைத்து அந்தப் புதினம் எழுதப்பட்டிருந்தது. பிள்ளைப் பேறில்லாத பெண்கள் அந்தக் கோவிலுக்குச் சென்றால், பேறு உண்டாகும் எனும் நம்பிக்கையை வைத்து எழுப்பப்பட்ட புதினம் அது.
அந்தப் புதினப்படி பதினைந்து நாள் திருவிழாவின் பதினான்காம் நாள் திருவிழா கூட்டத்தில் பிள்ளை வரம் வேண்டி வரும் பெண்களுக்கு சாமியே பிள்ளை தரும். அதாவது அங்கே உள்ள விடலை ஆண்களே சாமி.
இது உண்மையில் நடந்ததா (அந்தப் புதினத்தை எழுதிய எழுத்தாளர் தான் கள ஆய்வு மேற்கொண்டதாகச் சொல்லி இருந்தாலும், அது நம்பிக்கை சம்பந்தப்பட்டது) எனும் கேள்வி இருந்தாலும் இல்லாவிட்டாலும், சமீபத்தில் பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்தது. புத்தகத்தை எரிப்பதும், எழுத்தாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் என…
இறுதியில் அவர் தன் புதினத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
பிரச்சனை அந்த புத்தகமோ, அதில் இடம் பெறும் கருத்துகளோ, அல்லது ஒரு சாதி பெயர் குறிப்பிட்டிருந்தமையாலோ எதிர்ப்பு கிளம்பியது என்பதை விட..இதில் ஆண் பெண் நுண்ணரசியலே ஒளிந்திருகிறது.
நமக்குத் தெரிந்தே ஆண் பல இடங்களில் பெண் துய்ப்பதும், காரணம் எதுவாகவும் இருப்பதும் ஏற்றே வந்திருக்கிறோம். அதை கூடாது என மறுத்தாலும் அப்படி ஒன்று நடந்தே வந்திருக்கிறது.
இந்தப் புதினத்தின் மீதான இத்தனை வெறுப்புக்குக் காரணம் பிள்ளை வரம் வேண்டி ஒரு பெண் “செல்வதாக” படைக்கப்பட்டிருப்பதே.
கலாசாரக் காவலர்கள், எந்தக் கலாசாரத்தையுமே பெண்ணை பொட்டலம் கட்டி சிறை வைப்பதிலிருந்தே ஆரம்பிக்கிறார்கள்.
பிள்ளை இல்லை என ஒரு ஆண் வேறு பெண்ணிடம் போய் பெற்றிருந்தால் அது கதையாகக் கூட ஏற்கப்பட்டிருக்க்காது. “அதான் எங்கேயும் நடக்குதே” என தாண்டி இருப்போம்.
அப்படி இருக்கும் ஆணின் மனைவியும் ‘அதுவும் என் குழந்தைதானுங்க” என்று சொல்லி வளர்ப்பார்கள்.
சரி. ஆண் அப்படி நடப்பதை இயற்கை எனச் சொல்லும் ஒரு லாஜிக்கும் உண்டு எனில் இயற்கையான இதை ஏற்க ஏன் மனம் வருவதில்லை. நம் விதிகளுக்குள் வராத ஒன்று என்பதால் அடுத்தவரையும் அதைக் கைக்கொள்ளக்கூடாது, எந்த இக்கட்டிலும் எனச்சொல்வது ஒரு முரட்டுத்தனமாகவே தெரிகிறது.
இதே போன்ற கருவை வைத்து கி. ராஜ நாராயணன் ஒரு கதை சொல்லி இருந்தார். ஆனால் அந்தக்கதை பிரச்சினை வளையத்தினுள் சிக்காமல் போனதற்கு இன்ன ஜாதியில் அப்படி நடந்தது எனச்சொல்லாமல் இருந்ததே என முதலில் தோன்றினாலும் ஆழ வாசித்தால் உண்மை புலப்படும். கி.ரா. கதையில் ஒரு பெண், அப்படிப்போனதான சித்தரிப்பு இருக்கும். பெண்கள் என இருக்காது. ஆக அது இயல்பாக எடுக்கப்பட்டது போலும்.
ஆதி காலந்தொட்டே இயற்கை செய்த விதிகளுக்கும், மனிதன் செய்யும் விதிகளுக்க்கும் முரண்பாடு இருந்துகொண்டே இருப்பின் மனிதன் செய்த ஆர்டிஃபிசியல் விதிகளை மாற்றித்தான் ஆக வேண்டும். அல்லவெனில் அதில் கள்ளத்தனம் மட்டுமே புகும். அதைப் பெண்ணால் சுலபமாக மறைக்க முடியும் என்பதாலேயே அவளுக்குக் கட்டுப்பாடு அன்றிருந்திருக்கும்போல. ஆனால் ஏற்கும் மனது ?
மனித விதி என்பது மனித உயிர் மட்டும் பிழைத்துக்கிடப்பதை நோக்கமாகக் கொண்டது. இயற்கை விதிக்கு மனித பிழைப்பு மட்டும் நோக்கம் அல்ல.
ஆக இயற்கை விதியின்படி, மனித உயிர் முடிவுக்கு வருவதால் அதற்கொரு பிரச்சினை இல்லை.
ஆனால் மனித உயிரின் நோக்கம் தான் பிழைத்துக் கிடப்பதே.
மனித உயிர் பிழைத்துக்கிடக்க இது போன்ற காரியங்கள் மறைவாகவோ, வெளிப்படையாகவோ இருந்து கொண்டே வந்திருக்கின்றன. ஆக, பெண் ‘போய்’பிள்ளை பெற்று வரும் தேவை இருந்தால் அது நடந்தே தீரும். அந்தத் தேவையையே இயற்கை விதி (rule) என்றோ தலைவிதி (fortune) என்றோ சொல்கிறோம்.
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. அது இயற்கை விதியோ நம் தலைவிதியோ.
Best Thoughts !!!!!!!