ச. தமிழ்ச்செல்வனின் ’பேசாத பேச்சு’

This entry is part 36 of 48 in the series நூறு நூல்கள்

Thamizh_selvan__Sa_Uyirmmai_Books_Pesaatha_Pechu_Ellaam_Tamil_Read

எப்போது எழுத்தாளர்களைப் பற்றிய பேச்சு வந்தாலும் கிரா, நாஞ்சிலோடு மறக்காமல் ச.தமிழ்ச்செல்வனும் எனது ஆதர்சம் என நண்பர்களிடையே பீற்றிக்கொள்வதுண்டு. ஆனால், உண்மையைச் சொல்லவேண்டுமானால் அப்படிச் சொல்லிக்கொள்வதற்கு எனக்கு எந்தத் தகுதியும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், நான் ஒரு பெரிய வாசிப்பாளி என்பது போல நண்பர்களிடமும், இணையத்தில் எழுதுகையிலும் காட்டிக்கொள்வதே ஒரு பச்சைப் பொய்தான்.
எப்போதோ வாசித்த ஓரிரு கட்டுரைகளின் வாயிலாகவே தமிழ் சாரை என் மனதோடு ஒட்டிக்கொண்டுவிட்டேன். பின் தொடர்ந்து அவரது எழுத்துகளை விரட்டி விரட்டிப் படிக்கவோ, அவரது பேச்சை ஓடி ஓடிக் கேட்கவோ இல்லை. ஆனால், ஒரு பிளாகராக இருப்பதால், அவர் என் சகஹிருதயர் என்றெல்லாம் கூட கற்றுக்குட்டித்தனமாக எழுதிக்கொள்ளலாம், தவறில்லை. ஒரு எழுத்தாளரை விமர்சிக்கவும், பாராட்டவும், ஏன்.. சற்றே குறிப்பெழுதவும் கூட ஒரு தகுதி வேண்டும் என நினைப்பவன் நான். ஆனால், சிலருக்கெல்லாம் அந்த வாய்ப்பை நாம் தரத் தேவையில்லை. மூப்பு, பெருந்தன்மை, அனுபவம் எல்லாவற்றிலும் சிறியவனாக இருந்தாலும் தந்தையை/ ஒப்பாரை நாம் சகஹிருதயராக ஏற்கிறோம் அல்லவா? போலவே, என் சின்னஞ்சிறு பையனும் எனக்கு சகஹிருதயன்தானே? அவ்வாறு, ஏதோ ஒரு வகையில் தமிழ்ச்செல்வனையும் என் சகஹிருதயர் என நான் சொல்லிக்கொள்கிறேனே.! இன்னொரு வகையிலும், ஒரு சகஹிருதயரை அடையாளம் கண்டுகொள்ள ஒரே ஒரு கட்டுரை, ஒரே ஒரு சொல்லாடல் போதாதா என்ன?
சமூக நலன் என்பது என்ன? அது ஏதும் ஒரு வகையான கற்பனைப் பண்டமா? எத்தனைக் கிலோ இருக்கும்? நமக்கும் அதுக்குமெல்லாம் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்ன?
உன்னதமான எழுத்துகளைப் படிக்கும் போதெல்லாம் அழுகை, படபடப்பு, வேதனை, புன்னகை, நெஞ்சுகொள்ளாத பூரிப்பு, வெடிக்கும் சிரிப்பு, கேள்விகள், சுய பரிசோதனை என உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுவோம். அது எதுவானாலும் இறுதியில் ஒரு நிம்மதியும், வாழ்க்கையின் மீதான ஒரு நம்பிக்கையும் துளிர்க்கும். இன்னும் இந்த பூமியில், இழிவுகள் கண்டு வருந்தும், சக மனிதனுக்காக இரங்கும், தவறுகள் கண்டு திருத்த முனையும் மனிதர்கள் மிச்சமிருக்கிறார்கள் என்ற ஆசுவாசம் தரும் விளைவு அது. தளைகளில் சிக்கி, சிந்தனை முதிர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்தில் அநீதி ஆட்சி செய்வது இயல்புதானே! அந்தப் பயத்தை, வேதனையை போக்குவது அப்படியான எழுத்துகள்தானே! அதிலும் தமிழ் சார் போன்றோர் எழுதுவதோடும், பேசுவதோடும் நின்றிடாது களப்பணியிலும் சோர்வுறாது இயங்குவது நிச்சயம் ஆறுதலை வழங்கும். இணைப்பாய், உறுத்தும் உன் பங்கென்ன இச்சமூகத்துக்கு என்ற கேள்வியும் கிடைக்கும்.
மேற்சொன்ன இந்த உணர்வைத்தான் “பேசாத பேச்செல்லாம்..” என்ற புத்தகத்தின் கட்டுரைகள் தருகின்றன. கட்டுரைகள் உயிர்மை இதழில் தொடராக வெளிவந்து, உயிர்மை வெளியீடாக புத்தக வடிவம் பெற்றவை.
கட்டுரைகளைப் பற்றி பேசுகிறேன் பேர்வழி என்று அச்சுப்பிச்சென்று எதையாவது எழுதிவைக்காமல், இத்தோடு இதை முடித்துக்கொள்ளலாம்தான். ஆனால் முடியவில்லை.
80களின் பிற்பகுதியில் நெல்லை மாவட்டத்தில் அறிவொளி இயக்கத்தின் வீச்சு ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த என் வரை நீண்டது. அவ்வியக்கத்தின் தூண்களில் ஒருவர் தமிழ் சார். அப்போது யார் ச.தமிழ்ச்செல்வன் என்பதையெல்லாம் நான் அறிந்திருக்கவில்லைதான். ஒருவேளை நான் அவரைப் பார்த்திருக்கக்கூடும். அவர் என் பள்ளிக்கு வந்திருக்கக்கூடும். அறிவொளி இயக்கமெனும் அந்தப் பெரியக் கடலின் ஒரு துளியாக நான் இருந்திருக்கிறேன். இதை நினைக்கும் போதே என் மனம் நெகிழ்கிறது. நான் எழுதப்படிக்கத் தெரியாத இரண்டு பெண்களுக்கான ஆசிரியனாக அப்போது இருந்தேன். அதில் ஒருவரை என்னால் கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை, அந்த வயதிற்கான பொறுப்பும், ஆளுமையும் எப்படி இருந்திருக்கும் என்பதை இப்போது சிந்திக்கிறேன். இன்னொரு பெண் எனது சித்தியாக இருந்தபடியால், அவருக்கு என்னளவில் உண்மையாக கற்பிக்க முயற்சித்தது இப்போதும் நினைவில் இருக்கிறது. அதில் நான் தோல்வியுற்றாலும் அந்த முயற்சி உண்மையானது.
மட்டுமல்லாது இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையுமே என்னுள் பலவிதமான சிந்தனையை ஏற்படுத்திக்கொண்டேயிருந்தன.
எழுதுவதில் இருக்கும் சலிப்புக் காரணமாக, ‘தீம்தரிகிட’ இதழ் நின்றபோது ‘அப்பாடா’ என மகிழ்ந்ததாகக் கூறும் தமிழ் சாரின் வார்த்தைகள் தரும் சிரிப்புடன் புத்தகத்தைத் துவங்கினேன். முதல் கட்டுரையில், கல்லூரிப் பேச்சுப்போட்டியில் கடைசி நேரத் தலைப்பு, நடுவரின் விதி காரணமாக ஒரு வார்த்தைக் கூட பேச இயலாமல் திக்கித்திணறி மேடைக்குப் பின்புறம் குதித்து ஓடிப் போனதாக சொல்லியிருக்கிறார். அந்த நடுவர் பேராசிரியர் நா.வானமாமலை என்று அவர் முத்தாய்ப்பு வைக்கையில் இன்னொரு பெரும் சிரிப்பை தவிர்க்க இயலவில்லை. இத்தனைப் பெரிய பேச்சாளருக்கு, துவக்கத்தில் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கையில், ஒருநாள் காலைவணக்கக் கூட்டத்தில் ’குறளும் பொருளும்’ ஒப்புவிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டேன். அது என் ஆர்வத்தால் கூட கிடைத்திருக்கலாம். தயாரிப்பெல்லாம் சிறப்பாகத்தான் செய்துகொண்டுபோனேன். ஆனால், அப்படியொரு பின்விளைவை நானே கற்பனை கூட செய்திருக்கவில்லை. அத்தனைக் கூட்டத்தின் எதிரில், பின்டிராப் அமைதியில், பிரமாண்டமானதொரு ஹெட்மாஸ்டர் மிக அருகில் நிற்க என் வாய் உலர்ந்து மூடிக்கொண்டது. வகுப்பாசிரியர் முதலில் கிசுகிசுப்பாய் அதட்டினார், வண்டி நகரவில்லை. பின்பு ஒவ்வொருவராக அதட்டி, கெஞ்சி, கொஞ்சியும் பார்த்தனர். ஊஹூம். பிற ஆசிரியர்கள், தலைமையாசிரியர், கடைசியில் மொத்தப் பள்ளியே என்னைக் கெஞ்சிற்று. வாய் திறந்தால்தானே ஆச்சு? நானோ சகலமும் ஒடுங்கிப் போயல்லவா நின்றுகொண்டிருந்தேன். கடைசி முயற்சியாக ஒரு ஆங்கிலப்புலவரான எங்கள் ஹெட்மாஸ்டரே, அதுவும் திருமுதல் குறளான ‘அகர முதல’வைப் பிராம்ப்டிங் செய்தார். சமீபத்தில் ஒரு சினிமா படப்பிடிப்பில் ஒரு நடிகருக்கு பிராம்ப்டிங் செய்யப்பட்டபோது இந்த சம்பவம் நினைவிலாடி சிரித்துக்கொண்டேன்.
உலகைக் காணவும், உணரவும் உதவிய பஸ் ஸ்டாண்டுகளின், ரயில்வே ஸ்டேஷன்களின் இன்றைய மாற்றத்தை அவர் விவரிக்கையில் நாம் ஏன் இத்தனை சுயநலமாக மாறிவிட்டோம், நாம் ஏன் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்ற கேள்விகள் எழுகின்றன. திருநெல்வேலி பஸ்ஸ்டாண்டில் கிடைத்த அவர் குறிப்பிடும், மொச்சை மசாலை நானும் உண்டிருக்கிறேன், எனும் நினைவு வந்து மனம் கனத்துப் போய்விட்டது. அவரது கட்டுரையில், ஒரு ரூபாய் வாடகையில் பஸ்ஸ்டாண்ட் கட்டிடங்களின் மொட்டைமாடிகளில் தூங்கி எழும் நபர்கள், எத்தனை எளிமையான வாழ்க்கையை எத்தனை கடினமானதாக மாற்றிவிட்டீர்கள் என்று கேட்கும் கேள்விக்கு நமது பதில் என்ன?
ஒருநாள், திருச்செந்தூர் மக்கள் கூட்டத்தில் என் தம்பி, ஒரு ஐந்து நிமிடம் தொலைந்து போன உணர்வு இப்போதும் நடுக்கத்தை உள்ளுக்குள் கொண்டுவரும். தமிழ்ச்செல்வன், ஆறாவது படிக்கும் தன் தம்பி, கோணங்கியை தொலைத்துவிட்டு பத்து நாட்களாக தேடிக்கொண்டிருந்திருக்கிறார். தங்கையின் மீதும், தம்பிகளின் மீதும் பாசம் ஆறாகப் பெருகிவழிகிறது அவருக்கு. அது சுயநலம் சார்ந்தது மட்டுமேயல்ல, யாரையும் தம்பியாக, தங்கையாக, மகளாக, மகனாகப் பார்க்கும் பெருமனம் அது. இல்லாத அக்காவை யார் யாரிடமோ பார்த்திருக்கிறார். நானும் அத்தகைய அக்காக்களை இப்போது நினைத்துக்கொள்கிறேன். அவருக்கொரு அழகர்சாமியின் அக்கா இருந்ததைப்போலவே எனக்கொரு சுந்தர்வேலின் அக்கா இருந்திருக்கிறாள். கையைப் பிடித்து கடைக்குக் கூட்டிச்செல்ல அவருக்கொரு சாந்தா இருந்ததைப்போலவே எனக்கொரு நங்கையார் இருந்திருக்கிறாள். ஆனால், இன்றைய குழந்தைகளுக்கு? என் பையனுக்கான அக்கா இருக்கிறாளா? அவளை நாம் இழந்துவிட்டோமா? கேஸ்ஸ்டவ்வும், மிக்ஸியும், கிரைண்டரும் பெண்களை சற்றேனும் விடுதலை செய்தமைக்காக மகிழ்வதா? அல்லது, விறகடுப்பும், அம்மியும், திருகையும் தந்த மனநிலையை நாம் இழந்துவிட்டதற்காக வருந்துவதா? தோசைக்கான அவரது பல்லாண்டு ஏக்கம் ஒருவகையில் மூத்தவனான எனக்கும் உரியதுதானே? அவர் தன் காதலை நினைவுகூர்கையில் மனம் மிதந்தது எனக்கு. அவரது ஜெயமேரியிடம் எனது ராஜேஸ்வரி இருந்தாள். ராஜேஸ்வரி புன்னகைத்த போது அவரைப்போல நானும் பதறிப்போய் ஓடித்தான் வந்துவிட்டேன்.
அவரது டாக்டர் ராமானுஜ மோகனைப்போலவே எனக்கும் ஒரு செல்வசண்முகம் இருந்திருக்கிறார். அவருக்கென நோயாளிகளே இல்லாத துவக்கக் காலத்தில் நோயாளியாகப் போய் பின்பு நண்பனாக மாறியிருக்கிறேன். எத்தனை மாலை வேளைகளில் இசைவான விஷயங்களை நாங்கள் பேசியிருக்கிறோம், புத்தகங்களைப் பறிமாறிக்கொண்டிருக்கிறோம் என்பதெல்லாம் நினைவுக்கு வருகிறது. ஆத்திகத்தில் நிகழ்வுகளும், சுவாரசியங்களும் சற்று தூக்கல்தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன் சார். காணாமல் போய்விட்ட அக்ரஹாரம் ஒன்று எங்கள் ஊரிலும் இருக்கிறது. நான் வாசலோடு நிறுத்தப்பட்ட என் நண்பன் பாலகிருஷ்ணன் வீடென்றும் எனக்கு ஒன்று இருந்தது. நான் பள்ளியில் ஒட்டி விளையாடிய, உணவைப் பகிர்ந்துகொண்ட தலித் நண்பர்களையும், சிறுபான்மை நண்பர்களையும் இப்போது நினைவுகூர்கிறேன். +2வில் கணிதத்தில் வழக்கமாக 100 மதிப்பெண்கள் எடுக்கும், எந்நேரமும் கேலியும், கிண்டலுமாக சிரித்த முகமாக இருக்கும் ஒரு நண்பன் அடுத்த சில ஆண்டுகளில் மனப்பிறழ்வுக்கு ஆளாகியதும், கல்லைப் போல இறுகிப்போய்விட்டிருந்த அவன் முகமும், அவனது தாயின் கண்ணீரும் இப்போது நினைவிலாடுகிறது.
ஒவ்வொரு கட்டுரையிலும், ஒவ்வொரு வரியிலும் உண்மையும், உணர்வும் நிரம்பியிருக்கின்றன. The other side of Silence எனும் ஊர்வசி புட்டாலியாவின் புத்தகத்தைப் படிக்கமுடியாமல் கீழே விழுந்து அழுததாக அவர் குறிப்பிடுகையில், அந்தப் புத்தகத்தை நான் இன்னும் படித்திருக்காவிடினும் என் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்ததை கட்டுப்படுத்திக் கொள்ளமுடியவில்லை. மனிதம் சிதைந்து அழுகிப் போகும் சூழல், வரலாறெங்கும் இருப்பதை அறிகிறோம். ஆனால், அவை ஏன், எப்படி ஏற்படுகின்றன என்பதை உணர்ந்துகொள்ளமுடியாத தவிப்பு கண்ணீரைத் தருவிக்கிறது. எனக்கான 1947ம், மார்புகள் அறுத்தெறியப்பட்ட ஒரு பெண்ணின் 1947ம் வேறு வேறானது என்பது அழுகையைத்தான் வரவைக்கிறது. தெரிந்தும், தெரியாமலும் தலித்துகளையும், சிறுபான்மையினரையும், பெண்களையும் எந்த வகையிலாவது நாம் ஒவ்வொருவரும் அடிமைப் படுத்தவோ, காயப்படுத்தவோ செய்துகொண்டுதான் இருக்கிறோம் இன்னும் என்பது உண்மைதானே!
சரிதான், ஆக்கிரமிப்பைத் தவிர உண்மையில் வேறேதும் உருப்படியாய் ஆண்களுக்குச் செய்யத் தெரியவில்லைதான் தமிழ் சார்!

பேசாத பேச்செல்லாம்…
ச. தமிழ்ச்செல்வன்
உயிர்மை பதிப்பகம்
ரூ. 80

Series Navigation<< திருவரங்கன் உலாஅஃகம் சுருக்கேல் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.