கர்வம் பிடித்தவள்
தினம் தினம்
அல்லல்களில் உழலும் நீ நினைப்பது எனக்குப் புரிகிறது.
கல்லாக இருக்கலாம்.
புல்லாக இருக்கலாம்.
புழுவாக இருக்கலாம்.
பூடாக இருக்கலாம்.
பட்ட மரமாய்க் கூட இருக்கலாம்.
ஒரு பெண்ணாய் இருக்கக் கூடாது.
அதற்காக
ஒரு ஆணாயிருக்கலாம் என்று நினைக்கிறேனென்று மட்டும் நினைத்து விடாதே’ என்று நீ உணர்த்துவது முள் தைக்கிறது எனக்கு
ஒரு பெண்ணாயிருக்கலாம் என்று நினைக்கக் கட்டாயமில்லாத எனக்கு ‘நீ கர்வம் பிடித்தவள்’ என்று நான் சொன்ன போது
நீ கொஞ்சமும் ஆச்சரியப்படவில்லை.
– கு.அழகர்சாமி
oOo
என் வீட்டு முற்றத்தின் டைனோஸர்
என் வீட்டு முற்றத்தில்
காத்து நிற்கிறது
ஒரு டைனோஸர்
எனக்கு பழக்கமானது
எப்படி அதைப்பழக்கினேன்
எதுவும் இல்லை நினைவில்
எப்படியோ
பழகிக்கொண்டோம்
ஒருவருக்கொருவர்.
எல்லோரையும் போல்
எனக்கும் பயம்தான்
நடுநடுங்க வைத்தது முதலில்
கொடுங்கனவில் அலறிக்கொண்டு எழுவேன்,
மீண்டுவர சில நாளாவது ஆகும்.
கொஞ்சம் கொஞ்சமாக
புறக்கணிக்க பழகியதில்
என்னை தொந்தரவு செய்வதை
குறைத்து கொண்டது
எப்போதாவது
பற்களைக்காட்டி ஒலி எழுப்பும்
உறுமி என்னை பயமுறுத்தும்
தைரியமாக இருப்பதுபோல் நடித்து
காதடைக்க கத்துவேன்
உறுமலை விழுங்கியபடி
நாய்க்குட்டியைப்போல
பதறிவந்து பதுங்கிகொள்ளும்
என் கால்களுக்குள்.
தூக்கம் கப்பிய விழிகளுடன்
காலையில் எழுந்து
கடுங்காப்பி சமைக்கையில்
ஆசீர்வதித்து
என் காப்பிக்குவளையில்
கோமியமளிக்கும்.
தாகத்தில் சாய்ந்திருக்கையில்
களைப்பில் ஓய்வெடுக்கையில்
திடீரெனத் தோன்றும்
குளிர்ந்த நீரோ
எலுமிச்சை சாறோ
ஏந்திய கையுடன்.
எப்போதாவது
மனம் தளர்கையில்
கவலையுற்று சோர்ந்து கிடக்கையில்
தயக்கமே இன்றி மணிக்கட்டை அறுத்து
மதுக்கிண்ணத்தில்
தன் குருதியை நிரப்பும்.
இன்னும் கூட புரியாத மர்மம்.
எதற்காய் என்னை காவல் காக்கிறாய்?
என்றேன் ஒருநாள்.
அது உடனே சொன்ன
குறிக்கோள் வாசகம்:
விசுவாசம், தைரியம், உறுதி!
அதன் கோபாவேசம்,
இன்னும் என்னை பயமுறுத்துவது
என்தைரியம் முழுதும்
திரட்டியபடிதான்
அதை எதிர்கொள்ளுவது.
-அதனால் என்ன?
என் வீட்டு முற்றத்தில்
காத்து நிற்கிறது
ஒரு டைனோஸர்
எந்த நேரத்திலும்
விரலைச் சொடுக்கி
ஆணையிடலாம்
என் விருப்பம்போல.
oOo
ஸ்வயம்
குளக்கரை
ஓ.
உன்னுள் ஏன்
இத்தனை மிதக்கும் குழப்பம்.
மேலோட்டத்தில்
அலைமோதும்
அழுக்குச் சில்லுகள்
எருமைகளின் கால்படாத
ஆழ்குளம்.
கரையோரங்களில்
மனித எச்சில்
மரங்களின் எச்சங்கள்
ஸ்லாகைகளாய் உறுத்த
அலைகள் தவழ்வது
மனிதம் துவையும் கரைகளிலும்
அழுக்குகளின் வடிசல்களிலும்.
கற்களால் உறுத்தப்படாத
எச்சங்கள் படாத
இன்னும் இளகாத ஆழ்குளம்.
நடுவில்
சுயம் விரிந்தும்
சுயம் அடங்கியும் ஆழ்குளம்.
– தேனம்மை லெக்ஷ்மணன்