உலக வங்கிக்கு விடை கொடுக்கும் நேரம் வந்தாயிற்று

சொல்வனம் இந்தக் கட்டுரையைக் கொடுத்துதவிய தளத்துக்கு நன்றி தெரிவிக்கிறது:

கடந்த சில பத்தாண்டுகளில் உலகவங்கியின் உதவி பெறும் செயல்திட்டங்கள் மூலம் மிகப் பெருமளவில் பலனடைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதனால் பல உடல்நல முன்னேற்றம், கல்வி ஆகியன சம்பந்தமான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், ஒவ்வொரு நாட்டின் வாழ்விலும், ஒரு கட்ட்த்தில் இனி எங்கள் தேவைகளை நாங்களே கவனித்துக் கொள்ள முடியும் என்று சொல்லக் கூடிய நிலை வரும், அதுவும் ஒரு முக்கிய சக்தியாக உலகரங்கில் எழவேண்டும் என்ற அவா உள்ள ஒரு நாட்டுக்கு அது நிச்சயம் வரும். உலக நாடுகளில் சக்திவாய்ந்தவற்றோடு சேர்ந்து கருதப்பட விரும்பும் அதே நேரம் உதவி கேட்டு நிற்கும் ஒரு நாடாகவும் இருப்பது சாத்தியமில்லை என்பதால், உலக வங்கியிடம் உதவி பெறுவதைத் தேவையில்லை என்று சொல்லும் நிலை இந்தியாவுக்கு வந்திருக்கிறது எனலாம்.

தேசிய ஜன நாயகக் கூட்டணி (NDA) முன்பு ஆட்சி புரிந்த காலத்தில், பல நாடுகளிடமிருந்து இருநாட்டு ஒப்பந்தம் மூலம் உதவி பெறுவதை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில், இப்படி நிறுத்துவதில் பலருக்கும் நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் அப்போது பெருகிக் கொண்டிருந்த அன்னிய செலாவணி வைப்புத்தொகை இப்படி உதவி பெறுவதை நிறுத்துவதற்குச் சரியான காரணமாக இருந்த்தோடு, சில மேலும் ஏழை நாடுகளுக்குக் கூடுதலான உதவித் தொகைகள் கிட்ட இது உதவியது.

World_bank_221010

அன்று நிதி அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் 2003-2004 ஆம் வருட்த்திற்கான நிதித்திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்தபோது சொன்னது இது:

“முதலாவதாக, வளமாக இருக்கும் அன்னியச் செலாவணி வைப்புத்தொகை நிலையையும், குறைவாக இருக்கும் கடன் வட்டிவிகிதத்தையும் பயன்படுத்திக் கொண்டு, உலக வங்கிக்கும், ஆசிய வளர்ச்சி வங்கிக்கும், “அதிக அடக்கவிலை” கொடுக்க வேண்டி இருந்த 3 பிலியன் டாலர்கள் மதிப்புள்ள பல நாணயத் தொகுப்புக் கடன்களை கெடுவுக்கு முன்னதாகவே திரும்பச் செலுத்தி விட அரசு முடிவு செய்துள்ளது. மேலும் தொடர்ந்து நாட்டின் அன்னியக் கடன்களை இப்படி சமயோசிதமாக நிர்வகிக்க முடிவு செய்திருக்கிறோம் என்பதோடு, நம் அன்னியக் கடன்களின் தொகுப்பில் உள்ளவற்றில் ஒப்பீட்டில் அதிக அடக்கவிலை கொடுக்க வேண்டி இருக்கும் கடன்களை முன்னதாகச் செயல்பட்டு ஒழித்துவிடவும் தீர்மானித்திருக்கிறோம்.”

ஜஸ்வந்த் சிங், மேலே சொன்ன கருத்துகளடிப்படையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி அரசு தீர்மானித்தவை இவை-

1) ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா, யூரோப்பிய ஒன்றியம், ஃப்ரான்ஸ், இத்தலி, கானடா, தவிர ரஷ்யக் கூட்டமைப்பு ஆகிய 9 நாடுகள்/ அமைப்புகளைத் தவிர பிற நாடுகளிடமிருந்து உதவி பெறுவதை நிறுத்துவது

2) மேற்சொன்ன நாடுகளைத் தவிர பிற நாடுகளிடமிருந்து பெற்றிருந்த எல்லா இரு நாட்டுஒப்பந்தக் கடன்களையும் கெடுகாலத்திற்கு முன்னதாகத் திருப்பிக் கொடுத்து கடனை ஒழிப்பது.

முன்பு உலகவங்கியிடமியிடம் கடனாளியாக இருந்த இந்தியா, ஜூலை 2003 இலிருந்து உலகவங்கிக்கு பணம் அளிக்கும் நாடாக மாறி விட்டது. ஃபிப்ரவரி 2003 இல் அறிவிக்கப்பட்ட ‘இந்தியா வளர்ச்சி ஊக்குவிப்பு முயற்சியின் கீழ், மிகவும் கடன் தொல்லையால் அழுத்தப்பட்டிருந்த ஏழு நாடுகளின் கடன்களிலிருந்து 30 மிலியன் டாலர்களை இந்தியா விட்டுக் கொடுத்து விட்டது. கடன்களுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டு, இப்போது சுமார் 6% ஆக உள்ளது. கடந்த 30 வருடங்களில் இதுவே மிகக் குறைந்த வட்டி விகிதம் என்பதோடு, இது நுகர்வை ஊக்குவித்து, முதலீட்டையும் வளர்க்கிறது. இந்த முன்னெடுப்புகள் வரவேற்கப்பட்ட அதே சமயம், சூழலில் நிலவும் “வளர்ச்சி”க் கருத்தியல் மீது இந்த நடவடிக்கைகளுக்கு எந்த்த் தாக்கமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

ஆனால் பல வளரும் நாடுகள் இந்தியாவை நல்ல நாடாகப் பார்க்கும்படி செய்ய இது உதவியது என்பது எதார்த்தம். இதைப் போன்ற வாதங்கள் வழியே உலக வங்கியின் கடன்களில் லகுவான வகைகளையும், இடரான வகைகளையும் பற்றி நாம் யோசிக்கலாம். நமது அன்னியச் செலாவணிக் கையிருப்பையும், அதில் வருடாந்தர நிலுவையையும் கருத்தில் கொண்டால், உலக வங்கியிலிருந்து வாங்கிய கடன்களை ஒழித்துக் கட்ட இது நல்ல தருணம் என்று தோன்றுகிறது.

world-bank-headquarters

அட்டவணை-1 இல், மொத்த அன்னிய உதவி பற்றிய தகவல் இருக்கிறது. இது கடன்களையும், உதவித்தொகைகளையும் சேர்த்த தகவல். அங்கீகாரிக்கப்பட்ட தொகைகளையும், பயன்படுத்தப்பட்ட தொகைகளையும் காட்டும். இதில் 2012-13 ஆம் ஆண்டில் உதவித்தொகைகளின் பங்கு சுமார் 350 மிலியன் அமெரிக்க டாலர்களாகவும், மொத்தமாக 8674 மிலியன் அமெரிக்க டாலர்களாகவும் இருப்பதைப் பார்க்கிறோம். ரூபாய்க் கணக்கில் இது 52378 கோடி ரூபாய்கள் போல இருக்கும். ஒப்பீட்டில், நமது வருடாந்தர மொத்த உற்பத்தி சுமார் நூறு லட்சம் கோடி ரூபாய்கள், 2012-13 ஆம் ஆண்டில் மட்டும் மொத்த சேமிப்பு ரூ. 30 லட்சம் கோடி. எனவே இந்த உதவித்தொகைகள் நமது தேசத்தின் மொத்தத் தொகைகளில் சிறு பங்கு மட்டுமே. அது மட்டுமல்லாமல், பயன்படுத்தப்பட்ட உதவித் தொகையைப் பார்த்தால், அது இந்தக் காலகட்டம் பூராவுமே அனுமதிக்கப்பட்ட தொகையை விடக் குறைவாகவே இருந்திருக்கிறது, சில சமயங்களில் 60%தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

அட்டவணை-1 மொத்த வெளிநாட்டு உதவி (அமெரிக்க மிலியன் டாலர்களில்)

table-1-overall-external-assistance

குறிப்பு: *தற்காலிக

ஆதாரம்: அட்டவணை 8.1(A) & 8.1(B); பக் 96&97, பொருளாதார சர்வே 2013-14, நிதி அமைச்சகம், இந்திய அரசு.

அட்டவணை-2 இல் வெளிநாட்டு உதவி எங்கிருந்து கிட்டியது, அதில் எதை இந்தியா பயன்படுத்தியுள்ளது என்ற தகவல்களைக் கொடுத்திருக்கிறோம். IBRD, அதாவது உலக வங்கி மற்றும் இதர வளர்ச்சி ஏஜென்ஸிகள் கொடுத்த உதவிகள் அனேகமாக கடன்களாகத்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்றும், இவை 3093 மிலியன் அமெரிக்க டாலர்களாக 2013-13இல் இருந்ததையும் காண்கிறோம். இது உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), மற்றும் பன்னாட்டு வளர்ச்சி சங்கம் (IDA) ஆகியவற்றிலிருந்து கிட்டியதை எல்லாம் சேர்த்தது.

அட்டவணை-2: அன்னிய உதவி கொடுத்த அமைப்புகளும், பயன்படுத்தப்பட அளவும் (மிலியன் அமெரிக்க டாலர்களில்)

table-2-utilization-of-external-assistance-by-source

குறிப்பு:* இங்கு ரஷ்யாவிலிருந்து கிட்டிய 28.5 மிலியன் அமெரிக்க டாலர்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. P- தர்காலிக

ஆதாரம்: அட்டவணை 8.2(A) & 8.2(B); பக்கங்கள் S-99 & S-101, மேலும் பொருளாதார சர்வே 2005-6யின் அட்டவணை 8.3(A) &8.3(B); பக் A-103 & 105, பொருளாதார சர்வே 2013-14, நிதி அமைச்சகம், இந்திய அரசு.

அட்டவணை 3 இல் கொடுக்கப்பட்ட அன்னிய செலாவணி நிலைமையைப் பார்த்தோமானால், மார்ச் 2014 இல் அது 304 பிலியன் டாலர்களாக (1 பிலியன்=1000 மிலியன்) இருப்பதைக் காண்போம். எனவே நமது அன்னியச் செலாவணி கையிருப்பைப் பார்த்தால், இந்த அமைப்புகளில் இருந்து கிட்டும் அன்னிய உதவி அத்தனை முக்கியமானது அல்ல என்று தெரிகிறது, தொழில் நுட்பமோ அல்லது வேறு செயல்திட்டங்களுக்கான தேவைகளையோ பெறுவதற்கு நாம் பன்னாட்டுச் சந்தையில் அப்போது நிலவும் விலையைக் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

அட்டவணை-3 அன்னிய செலாவணி கையிருப்பு (மிலியன் அமெரிக்க டாலர்களில்)

table-30-3-foreign-exchange-reserves

குறிப்பு: @ = கூறு போடக்கூடிய காப்பு ரொக்க நிலை (Reserve Tranche position); + = கடன் பெறச் சிறப்புரிமைகள்; * = காப்பு ரொக்கக் கூறுகளின் நிலைமையை உள்ளடக்கியது;

ஆதாரம்: அட்டவணை 6.1(A) & 6.1(B); பக் S-60 & S-62, பொருளாதார சர்வே, 2013-14, நிதி அமைச்சகம், இந்திய அரசு.

80களில் ஒரு கட்டத்தில் நமக்கு ரூபாய்ச் செலவுக்கே அன்னிய செலாவணிக் கடனுதவியும், ஆதரவும் தேவைப்பட்ட நிலை இருந்தது. இன்று நமது அன்னியச் செலாவணிக் கையிருப்பு பெருகி வரும் நிலையில், நமக்கு கொடை வழங்கும் அன்னிய நாடுகள்/ அமைப்புகளின் விதிகளால் கட்டுப்பட வேண்டிய கட்டாயம் நமக்கில்லை. அமெரிக்க டாலர்களில் 300 பிலியன்கள் கையிருப்பாக வைத்திருக்கையில், இரண்டு இலக்க வளர்ச்சியை அடைய வேண்டும் என்று நாம் விரும்புகிற இன்றைய நிலையில், சுய-உதவி என்பது கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒரு நல்ல கொள்கைதான் என்பதில் என்ன ஐயம் இருக்க முடியும்?

உலக வங்கியின் உதவியைத் தொடர்ந்து நம்பி இருப்பதில் வேறு சில முக்கியமான பிரச்சினைகள் இருக்கின்றன. உலகப் பெரும் சக்திகளில் ஒன்றாக நாம் கருதப்பட வேண்டுமென்ற நம் விருப்பத்தோடு சம்பந்தப்பட்டது அது. ஜி-7 போன்ற குழுக்களில் நாமும் சேர்க்கப்பட வேண்டுமென நாம் விரும்புகிறோம். அப்படி ஆக வேண்டுமென்றால் அந்தக் குழுவில் பங்கெடுக்கும் பிற நாடுகளிடமிருந்து உதவியைப் பெறுகிற நாடாக நாம் இருக்க முடியாது. உலகப் பெரும் சக்திகள் தமக்குச் சமமான நாடுகளையே அக்குழுவில் பார்க்க விரும்பும், தம்மிடம் கையேந்தும் நாடுகளை அல்ல. சமீபத்து ஆண்டுகளில் (2010 ஆம் வருடத்தில்) நாம் உலகவங்கி மூலம், யூரோப்பிய-வட்டார நாடுகளுக்கு 1 பிலியன் அமெரிக்க டாலர்கள் போல கடனுதவி வழங்கியுள்ளோம், அது சுமாராக நமது 2010 ஆம் ஆண்டுக்கான மொத்த உற்பத்தியில் கிட்டத்தட்ட 1% போல இருக்கும்.

இத்தகைய கடனுதவிகளோடு சேர்ந்து வரும் நிபந்தனைகளையும், அவற்றூடாகச் சில கருத்துகளை நம் மீது திணிக்க முற்படும் ஆலோசகர்களையும் நாம் யோசித்துக் கருத வேண்டிய இதர பரிமாணங்கள் எனப் பார்க்க வேண்டி இருக்கிறது. உலக வங்கி தேகநலம் சம்பந்தப்பட்ட சில திட்டங்களுக்கான தன் உதவியை நிறுத்தி விட்டதாகவும், அதற்குக் காரணம் அந்தத் திட்டங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் இருந்த ஊழல்தான் என்றும் செய்தி கிட்டியிருக்கிறது. நிதி அமைச்சர் உலக வங்கிக்குத் தன் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு எழுதியிருப்பதாகவும் செய்தி வந்தது. இந்த ஒரு விஷயத்தில் உலக வங்கி கொடுக்கும் அழுத்தம் தேவையானது என்று நாம் ஏற்றாலும், மொத்தமாகப் பார்க்கையில், இந்த நிறுவனத்தின் விதிகளும், முன் நிபந்தனைகளும், உலகளவில் முக்கியமான சக்தியாக எழுந்து கொண்டிருக்கும் நம் நாட்டுக்கு அத்தனை பொருத்தமானதாக இல்லை என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.

ஒரு செயல்திட்டத்தின் உருவமைப்பு, அதை நிறைவேற்றும் முறை, அதன் நல்விளைவுகளைச் சீர்தூக்கும் வழிகள் என்று எதை எடுத்தாலும் அதெல்லாம் உலகவங்கியின் வழியிலும், சொல்வழக்கிலுமே அமைந்திருக்கிறது. வளர்ச்சி என்பதோடு சம்பந்தப்பட்ட பல முக்கியமான பிரச்சினைகளைப் பற்றித் தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் சிந்தித்து முடிவு காணும் திறனை நாம் இழந்து விட்டிருக்கிறோம். தேசத்தின் பெருவளர்ச்சியை அடைவதற்கான வழிகள் பற்றி அரசுக்கு யோசனை கூறும் அமைப்பாக அமைக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுதான் (NITI Ayog) செயல்திட்டங்களை உருவமைக்கவும், சீர் தூக்கவும், தரநிர்ணயங்களை நிறுவவும் முக்கியப் பங்கு வகிக்கத் தக்கது. நாட்டின் முக்கியமான அடிப்படைக் கட்டுமானங்களுக்கான செயல்திட்டங்களைப் பொறுத்த வரை, கட்டுமான வளர்ச்சி நிதிக் குழுமம், மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனைக் குழு (NITI Aayog) ஆகியனவே முக்கியமான பங்காற்ற வேண்டும்.

மிகக் குறைவாக வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒரு பெரும் எண்ணிக்கையினர், நாம் உலகவங்கியிடம் உதவி பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து வெளியேறினால் நம்மிடம் நன்றியுணர்வு கொளவர், ஏனெனில் அப்போது அவர்களுக்குக் கிட்டக் கூடிய வசதிகளின் அளவு பெருகும்.

இப்படிச் செய்வதால் வாஷிங்டனிலும், புதுதில்லியிலும் சிலருக்கு வேலை போகும், அவர்கள் எதிர்ப்புக் குரல் கொடுப்பார்கள் என்பது நடக்கவே செய்யும். உலக வங்கிக்கு இந்தியா ஒரு முக்கிய வாடிக்கை நாடு, ‘இந்தியாவின் கதை’ என்பது அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. இந்தியா ஒரு வாடிக்கை நாடாக இல்லையெனில், அப்போது இந்த இந்தியக் கதை என்பது இன்னும் கூடுதலாகவே கவர்ச்சியுள்ளதாகவும், கவனத்தை இழுப்பதாகவும் ஆகலாம். உலகவங்கியிடம் கடன் வாங்கிய ஒரு நாடு, வளர்ச்சியுற்று இனிக் கடன் தேவையில்லை என்ற நிலைக்கு வந்ததாகக் காட்ட முடியும். உலகவங்கி தன்னை இனித் தேவையில்லை என்று சொல்லும் அளவு வளர்ச்சியுற்ற நிலைக்குச் சில கடனாளி நாடுகளைக் கொணர்ந்ததை உலகவங்கியின் சாதனையாகக் காட்ட முடியலாம். இப்படி உலக வங்கியைக் கழற்றி விடுவது இடது சாரிகளுக்கும் மகிழ்வைத் தரும். இதைத்தான் ஒரு பெரும் முடிவிலிருந்து கிட்டும் பல எதிர்பாராத விளைவுகள் என்று நாம் சொல்கிறோம்.

வறுமை நிவாரணம் என்பது இந்தியாவிடம் இருக்கும் சக்தி, வளங்கள், தவிர நிபுணத்துவம் ஆகியனவற்றைக் கொண்டுதான் சாதிக்கப்பட வேண்டும். வாஷிங்டன் டி.ஸி நகரில் 1818, H தெரு என்ற முகவரியில் கிடைக்கும் நிதியும், நிபுணத்துவமும் வேறு ஏதாவது வளர்ச்சி குறைந்த நாடுகளில் நிவாரணத்துக்குப் போகட்டும்.

இந்தியாவின் பெரு நிறுவனங்களும் இதனால் பயனடையலாம், ஏனெனில் அவை இனித் தம் தேவைக்கேற்றபடி, தமக்கு உகந்த வகையில் பன்னாட்டுச் சந்தையில் கடன் வசதிகளைப் பெற முடியும், ஏனெனில் இனிமேல் ‘கப்பரை’ ஏந்திய நாடாக இனிமேல் உலகில் உலவ மாட்டோம். அதைவிட முக்கியமாக, இந்தியாவின் நிறுவனமாகாத தொழில்களுக்கும் (சிறு தொழில்கள்) நல்ல பயன் கிட்டும், ஏனெனில் உலகத்துப் பெருநிறுவனங்கள் இந்தியாவை வெறும் சந்தையாக மட்டும் பார்க்காமல், உற்பத்தி ஸ்தலமாகவும் பார்க்கத் துவங்கும். வேறு விதமாகச் சொன்னால், தன் காலிலேயே நிற்கக் கூடிய நாடாக இந்தியா அறியப்படத் துவங்கும். ஆஃப்ரிக்காவில் வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு நாம் அளிக்கக் கூடிய கடனுதவி இந்தியாவின் நிறுவனமாகாத சிறு தொழில்களுக்கு ஆஃப்ரிக்காவில் சந்தைகள் திறப்பதும், அவற்றுக்கு ஏற்றுமதி செய்வதும் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். நம் ஏற்றுமதி வியாபாரத்தில் இந்தியாவின் நிறுவனமாகாத தொழில்களுக்கு ஏற்கனவே கவனிக்கத் தக்க அளவு பங்கிருக்கிறது. இது ‘இந்தியாவில் தயாரிப்போம்” என்பதோடு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஒரு உத்வேகத்தைக் கொணரும்.

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஆர். வைத்தியநாதன், பேராசிரியர் (நிதித்துறை), இந்திய மேலாட்சிப் பல்கலை (IIM),பங்களூரு – கட்டுரை அவரின் தனிப்பட்ட கருத்து)