உலகெலாம்…

It is therefore easy to see why the churches have always fought science and persecuted its devotees. On the other hand, I maintain that the cosmic religious feeling is the strongest and noblest motive for scientific research. – Albert Einstein

Interstellar

சில ஆண்டுகளுக்கு முன்னர் டைம் பத்திரிகை, அறிவியலாளரும் இறை மறுப்பாளருமான ரிச்சர்ட் டாகின்ஸ் மற்றும் அறிவியலில் தொடங்கி கிறுத்துவப் பிரசங்கியான ஃபிரான்ஸிஸ் காலின்ஸ் இருவரையும் அழைத்து ஒரு சுவையான விவாதம் நிகழ்த்தியது.1 இறைவனும் அறிவியலும் (God Vs. Science) என்று நீண்ட அந்த விவாதத்தின் முடிவில் முத்தாய்ப்பாய் டாகின்ஸ் இப்படிச் சொல்லி முடித்தார்:
“பிரபஞ்சத்தின் தோற்றத்தைக் குறித்து பற்பல நம்பிக்கையாளரின் புனைவுகளுக்கு மாற்றாய் பொருத்தமான பல விஞ்ஞான விளக்கங்களைக் கொடுத்தாகி விட்டது. ஆயினும் நீங்கள் சொல்வதைப் போல் பிரபஞ்சம் கடந்த பேரறிவு என்று ஒன்று இருக்குமாயின் நீங்கள் எண்ணுவதைப் போல் அந்தப் பேரண்ட அற்புதத்தை எளியதோர் ஒலிம்பிய தேவனாகவோ அல்லது மானுடத்தை உய்விக்க இறங்கிவந்து சிலுவையில் மரித்த ஏசுவாகவோ என்னால் பார்க்கவியலாது. அது குறுங்குழு மனப்பான்மையே. அத்தகைய இறையென்று ஒன்று இருப்பின் அது உலகின் எந்தச் சமயத்தின் இறையியலாளர் எவரும் இதுவரை அறிந்திராத, புரிந்திராத பெருவல்லமையாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது!”
இதைப் படித்தவுடன் எனக்கு திருமந்திரப் பாடலொன்றே நினைவில் ஓடியது.

பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணல்அள வாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியும் அண்டாசனத் தேவர் பிரானே!

‘ஏழுகடல் மணற்துகள்களின் எண்ணிக்கையென மிகுந்திருக்கும் – பேரண்டத்திலிருந்து பரிணமித்து விலகி ஒளிரும் – அண்டங்கள் யாவும் அந்த அண்டர்பிரானின் இருக்கைக்கு அணிசெய்யும் ஆபரணங்களைப் போல் திகழ்கின்றன’2 என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மண்ணில் அந்தப் பிரம்மாண்டத்தைக் கண்டுணர்ந்து சொல்ல முடிந்திருக்கிறது.
சில ஆயிரம் ஆண்டுகள் தொடக்கமே கொண்ட மீச்சிறு கோளமென்று இப்புவியைக் கொண்டால் அதற்கு ஏன் அண்டர்பிரான், சிறு தேவதையே போதுமே என்றொரு வரி 3 கார்ல்சகனின் நாவலான காண்டாக்டில் (Contact) வரும். இந்தப் பிரபஞ்சப் பிரக்ஞையே ஆர்தர் க்ளார்க்கின் ‘2001: A Space Odyssey’ தொடங்கி பல மேற்கத்திய அறிவியல் புதினங்களின், அவற்றை ஒட்டி எடுக்கப்படும் திரைப்படங்களின் அடிநீரோட்டமாயிருக்கிறது.
நோலனின் ‘இண்டர்ஸ்டெல்லார்’ படத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. ஒரு வகையில் கார்ல்சகனின் காண்டாக்ட் கதையின் தொடர்ச்சி எனலாம். இதற்கு முன்பே ஹாலிவுட்டிலிருந்து வெளிவந்த பிரபஞ்சத் தேடல் படங்களில் காணும் சில பொது அம்சங்களான பன்னுலகக் கோட்பாடு4, விண்ணுயிர் தேடல், புழுத்துளையூடே அண்டப்பயணம்5 என்று இதிலும் அமைத்திருந்தாலும் இந்தப்படத்தின் சிறப்பம்சமாய் நான் கருதுவது நோலன் கையாண்டிருக்கும் அறிவியல்பூர்வமான தகவல் நுணுக்கம், குறிப்பாய் சுருங்கி நீளும் காலம் குறித்த அறிவியல் பார்வையும், அதைப் படமாக்கியிருக்கும் விதமும்.
மழை பொய்த்து, பூமியின் பெரும்பான்மைப் பயிர்கள் வாடிக்கருகி புழுதிப்புயலூடே மக்கள் நைந்து வாழ்ந்திருக்கும் ஒரு காலகட்டத்தில் கதை தொடங்குகிறது. நாசாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்று விவசாயம் செய்துகொண்டு குடும்பத்துடன் தன் பண்ணையில் வாழ்ந்திருக்கும் கூப்பர் கண்ணெதிரே பயிர்கள் அழிந்து வருவதைக் கண்டு வருந்தியிருக்கிறான். தன் செல்ல மகள் அறையில் ஏதோ அமானுட நடமாட்டம் இருப்பதாகச் சொல்ல, அது புழுதியில் வரைந்து செல்லும் சங்கேதத் தகவல்களின் மூலம் நாசாவின் ரகசிய அமைப்பொன்றுக்கு சென்று சேர்கிறான் கூப்பர். அங்கே அந்த அமைப்பின் தலைவர் – கூப்பருக்கு முன்னரே அறிமுகமுள்ள – டாக்டர் ப்ராண்ட் அவனை வரவேற்று அவர்கள் திட்டத்தைச் சொல்கிறார். இனியும் புவியில் தொடர்ந்து வாழ்வதற்குச் சாத்தியமில்லை என்றும், மானுடம் வாழத்தகுந்த சில வேற்று கிரகங்களைத் தேடிக் குடிபெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதையும், ஏற்கனவே அத்திட்டத்தின் கீழ் மூன்று கிரகங்களை அடையாளம் கண்டிருப்பதாகவும் சொல்லி அங்கிருந்து முன்னரே அனுப்பப்பட்டுள்ள சமிக்ஞைகளை உறுதிப்படுத்த கூப்பர் தலைமையில் ஒரு குழு விண்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறார்.
சனிக்கிரகத்தின் அருகே ஒரு புழுத்துளைத் திறப்பினூடே அக்குழு பயணித்து இறுதியில் கூப்பர் மட்டும் மீள்வதாகவும் அவன் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் பின்னர் உலகத்தோர் ஒட்டுமொத்தமாய் இடம் பெயர்வதாகவும் கதை சென்று முடிகிறது.
[stextbox id=”info” caption=”அண்டப்பயணம் 1″]
அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்,
அளப்பருந்தன்மை வளப்பெருங் காட்சி,
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்,
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இல்நுழை கதிரின் துன் அணுப் புரைய..
திருவண்டப்பகுதி – மாணிக்கவாசகர்
[/stextbox]

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் இதன் அறிவியல் ஆலோசகரான கால்டெக் பல்கலையின் விஞ்ஞானி கிப்தோர்ன். நோலன் சகோதரர்கள் கிப்தோர்னின் அறிவுரைப்படியே பல விண்வெளிக் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.6 குறிப்பாய் படத்தின் இறுதியில் கருந்துளைக்குள் பொது இயற்பியல் விதிகளுக்கு முரணான அதன் ஒருமைத்தன்மையை7 அறிய வேண்டி என்னவானாலும் சரி என்று குதித்துவிடும் கூப்பர் காலத்தைக் கடக்கும் அனுபவத்தைக் காட்சிப்படுத்தியிருப்பது.
கடந்த காலத்தை டெஸரெக்ட்(Tesseract)8 என்னும் (இதுவும் ஒரு பாகன் தொன்மம்தான்) எண்கனசதுரப்படிமக் காட்சிகளாய்க் காண்கிறான் கூப்பர். அதன் மூலமே மகள் மர்பியிடம் பூமியிலிருந்து மீளும் வழியை காலப்பயணத்தில் வந்து சுட்டிப் போகிறான். இந்த டெஸரெக்ட் தொன்மத்தை வைத்து Madeleine L’Engle போன்றோர் முன்னரே (A Wrinkle in Time) கிறுத்துவப் பார்வையில் அறிவியல் புதினங்களை எழுதியுள்ளனர். இந்தப்படத்தில் சுருங்கி நீளும் காலம் என்பது அறிவியல்ரீதியாய் மட்டுமே அணுகப்படுகிறது.
காலம் என்பது நேர்க்கோடல்ல என்றும் அது முன்பின் நகரவல்ல முடிவிலி என்பதும் நம் தொல்நூல்கள் சுட்டுவதே. நாள் என ஒன்று போல்‘காட்டுவதே’ 9 அன்றி அது உண்மையில் இராப்பகலற்றது என்றும், ஜாக்ரத்-அதீதம்10 எனும் அறிதுயில் நிலையினை எட்டவல்ல யோகியால் மூன்றுகாலத்தையும் கடக்கவியலும் என்றும் மணிமேகலை11, தேவாரம்12, திருக்களிற்றுப்படியார்13 என்று பல நூல்களில் காண்கிறோம். எட்டின் வடிவில் பாம்பினைப்போல் வளைந்துறைந்திருக்கும் காலப்படுகையில் விரும்பிய கட்டத்தில் புகுவதற்கு சில பேருயிர்களால் முடியும் என்றும் உலகளாவிய பாகன் தொன்மங்கள் யாவிலும் தெளிவாகவே காணக் கிடைக்கிறது. அப்படி விரும்பி இறங்கிவந்த திருஞானசம்பந்தரை ‘காலம் பெற அழுதவர்’14 என்று சேக்கிழார் சுட்டுகிறார்.
என்றாவது நம் மண்ணின் தொன்மங்கள் சுட்டும் மெய்ப்பொருளை அறிவியல்பூர்வமாய் அணுகும் காலமும் வரும் என்று நம்புவோம்.
[stextbox id=”info” caption=”அண்டப்பயணம் 2″]
சிவனியல் விளங்கி நிற்கும்;
நாளுநற் செல்வங்கள் – பல
நணுகிடும்; சரதமெய் வாழ்வுண்டாம்.
இக்கதை யுரைத்திடுவேன் உளம்
இன்புறக் கேட்பீர், முனிவர்களே!
நக்கபி ரானருளால்- இங்கு
நடைபெறு முலகங்கள் கணக்கிலவாம்;
தொக்கன அண்டங்கள் – வளர்
தொகைபல கோடிபல் கோடிகளாம்!
இக்கணக் கெவரறிவார்? புவி
எத்தனை யுளதென்ப தியாரறிவார்?
நக்கபி ரானறிவான்; மற்று
நானறியேன், பிற நரரறியார்;
தொக்க பேரண்டங்கள்- கொண்ட
தொகைக்கெல்லை யில்லையென்று சொல்லுகின்ற
தக்கபல் சாத்திரங்கள்; – ஒளி
தருகின்ற வானமோர் கடல்போலாம்;
அக்கட லதனுக்கே எங்கும்
அக்கரை யிக்கரை யொன்றில்லையாம்.
இக்கட லதனகத்தே- அங்கங்
கிடையிடை தோன்றும்புன் குமிழிகள்போல்
தொக்கன உலகங்கள் திசைத்
தூவெளி யதனிடை விரைந்தோடும்;
மிக்கதோர் வியப்புடைத்தாம் – இந்த
வியன்பெரு வையத்தின் காட்சி கண்டீர்
மெய்க்கலை முனிவர்களே இதன்
மெய்ப்பொருள் பரசிவன் சக்தி கண்டீர்
எல்லையுண்டோ இலையோ – இங்
கியாவர் கண்டார்திசை வெளியினுக்கே?
சொல்லுமோர் வரம்பிட்டால் – அதை ..
– பாரதி இப்பாடலை வேண்டுமென்றே முடிக்கவில்லையோ என்றுதான் தோன்றுகிறது. மேலே பாரதியின் வரிகளுக்கு உயிர்தரும் அண்டவெளிக் காட்சிகள் இங்கே கார்ல்சனின் காண்டாக்ட் படத்திலிருந்து:
[/stextbox]

oOo

அடிக்குறிப்புகள் / உசாத்துணை:
1. God vs. Science – TIME:
When we started out and we were talking about the origins of the universe and the physical constants, I provided what I thought were cogent arguments against a supernatural intelligent designer. But it does seem to me to be a worthy idea.
Refutable–but nevertheless grand and big enough to be worthy of respect. I don’t see the Olympian gods or Jesus coming down and dying on the Cross as worthy of that grandeur. They strike me as parochial. If there is a God, it’s going to be a whole lot bigger and a whole lot more incomprehensible than anything that any theologian of any religion has ever proposed.
2. பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணல்அள வாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியும் அண் டாசனத் தேவர் பிரானே.
திருமந்திரம் – 8-2297 – அண்டாதி பேதம்
In the vast spaces of Cosmos
Are universes numberless
That evolved and separated;
Countless are they
Unto the sands that are
On the shores of seven seas;
Sparkling as a jewel of gold
That dazzles
They form His Seat of Throne
-For Him, the Lord of Celestials
3. One paltry planet, a few thousand years – hardly worth the attention of a minor deity,
much less the Creator of the Universe.
– Carl Sagan in Contact
4. Multiverse – Wikipedia
5. Wormhole – Wikipedia
6. Time Travel and Wormholes: Kip Thorne’s Wildest Theories & Parsing the Science of Interstellar with Physicist Kip Thorne | Observations, Scientific American Blog Network
7. Singularities – Black Holes and Wormholes – The Physics of the Universe & The Singularities of Gravitational Collapse and Cosmology | Proceedings of the Royal Society of London A: Mathematical, Physical and Engineering Sciences
8. Tesseract – Wikipedia
9. நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்
வாள துணர்வாற் பெறின் – குறள் 334
10. திருமந்திரம் – 8-2253, 2265
11. மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த
ஆன்ற முனிவன் அதன் வயிற்று அகத்து..
மணிமேகலை – பாத்திரங் கொண்டு பிச்சை புக்க காதை – 15-010
12. மூன்று காலமும் தோன்ற நினறனை..
திருப்பிரமபுரம் – சம்பந்தர் தேவாரம் – திருஎழுகூற்றிருக்கை
13. உணராதே யாதும் உறங்காதே உன்னிற்
புணராதே நீபொதுவே நிற்கில் – உணர்வரிய
காலங்கள் சொல்லாத காத லுடன்இருத்தி
காலங்கள் மூன்றினையும் கண்டு
திருக்களிற்றுப்படியார் – பாடல் 31
14. விண் நாயகன் கூத்து வெட்ட வெளியே திளைத்துக்
கண்ணார் அமுதுண்டார் காலம் பெற அழுதார்
பெரிய புராணம் – இரண்டாம் காண்டம் – 2061