முன்னுரை
நதிமூலம்
சமீபத்தில் எழுதப்பட்ட கதைகளை கொண்ட இத்தொகுப்பில் ஐந்து 2014ல் எழுதப்பட்டன. இரு கதைகள் `சொல்வனம்` என்ற இணையதளப் பத்திரிகைக்காக எழுதப்பட்டவை. முதல் கதை வெளியிட்டவுடன் திரு வேலுமணி எனும் வாசகர் நான் பெயர் குறிப்பிடாது எழுதிய கோட்டை எது என்று கண்டுபிடித்துவிட்டார்.
திரு ராஜேஷ் என்ற வாசகர் பொதுவாக என் எல்லா கதைகளையும் ஆராய்ந்து, என் முக்கிய உந்துதல் எதுவாக இருக்கும் என்று அவருடைய ஊகத்தை தெரிவித்திருந்தார். என் கதைகளில் முப்பத்தொன்று நான் என் சிறுபிராயத்தை கழித்த ஊரைக் களமாக கொண்டவை என்று கூறி, அக்கதைகளை பட்டியலிட்டிருந்தார். அக்கட்டுரை எழுத அவர் எவ்வளவு நேரம் எவ்வளவு நேரம் யோசித்திருக்க வேண்டும், தகவல்களைக் குறிப்பிட்டு கூற எவ்வளவு முயற்சி மேற்கொண்டிருக்க வேண்டும். அக்கட்டுரையை எந்த அச்சுப்பத்திரிகை வெளியிட்டிருக்கும் என்று யோசித்த போது எனக்கு உடனே விடை ஏதும் தோன்றவில்லை.
திரு. வேலுமணி இன்னொன்றும் கூறினார்- “நான் பிறந்த ஊரை விட்டு வந்திருக்க கூடாது.”
பொதுவாக, புனைகதைகளைப் புனைக்கதைகளாகவே கருதுவதுதான் எக்காலத்திற்கும் ஏற்றது. புனைக்கதை அரை நிஜத்தைத்தான் கூறுகிறது. அரை நிஜம் நிஜமாகாது. ஆனால் புனைக்கதையின் ஒரு தனிக்குணமான அந்த அரைநிஜம்தான் புனைக்கதைக்கு உயிரூட்டுகிறது.
அசோகமித்திரன்
சென்னை
23.10.2014