அலகுடை நீலழவர் – பெருமாள் முருகனின் 'ஆளண்டாப் பட்சி'

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்

Intriguing என்ற இங்லிஷ் வார்த்தைக்கு என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தைத் தூண்டக்கூடிய அல்லது குறுகுறுப்பை உண்டாக்கக்கூடிய என்றும் பொருள் கொள்ளலாம்.

ஆளண்டாப்பட்சி என்ற தலைப்பை படித்ததும் இந்த  வார்த்தை மனதில் தோன்றியது.  எதிர்பார்த்தது போலவே படைப்பைப் படித்து முடிக்கையில் தலைப்பு பொருத்தமாகவே பட்டது. எந்த கதாபாத்திரத்திற்கு இந்தத் தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று படித்து முடித்ததும் வெகு நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன். இதைப் பற்றி பின் பேசுவோம்.

காட்டைத் தேடி மாட்டு வண்டியில் போய்க்கொண்டிருக்கையில் வடமலை என்ற ஊருக்கு அருகில் திடீரென வலத்து மாடு மேலும் நடக்காமல் பாதையில் படுத்துக்கொண்டதை,  வண்டி அடியில் செருகி வைத்திருந்த திருச்செங்கோட்டு செங்கோட்டையான் திருநீறு பொட்டலம் மணலில் விழுந்து கலந்துவிட்டதை ஒரு நல்ல சகுனமாக எடுத்துக்கொண்டு, திருச்செங்கோட்டு செங்கோட்டையானே இங்கு வடமலையானாக மாறி வழிகாட்டியிருக்கிறான்,  இனி இந்த இடத்தில்தான் தான் வாழப்போகிறோம் என்று முடிவு செய்கிறான், முத்தண்ணன்.

AalandaP1

இப்படி முத்தண்ணன் என்கிற குடியானவனின் குடும்பம் தான் பிறந்து வளர்ந்து உருவான நிலத்திலிருந்தும் தன் கூடப்பிறந்த உறவுகளையும் விட்டுத் தள்ளி இன்னொரு இடத்தில் நிலை கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகளை படைப்பு பேசுகிறது.

இந்த இடப்பெயர்தல்  பல்வேறு நெருக்கடிகள் காரணமாக வலியுடன் நிகழ்கிறது.

திருச்செங்கோட்டிலிருந்து நாலு கல் தொலைவில் பதினோரு ஏக்கர் விவசாயக்காட்டை வாழ்வாதாரமாகக் கொண்ட பெரிய விவசாய குடும்பத்தில் முத்தண்ணன் கடைசி பையன். அவனுக்கு நான்கு சகோதரர்கள். பெற்றோருடன் அனைவரும் தத்தம் மனைவி மக்களுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து விவசாயக் காட்டில் உழைத்து வரும் விவசாயக் குடும்பம்.

மனித மனம் மிக விசித்திரமானது. எவ்வளவு அருகிலிருப்பினும் அடுத்தவரிடமிருந்து விலகியே இருக்கிறது. அந்தப்பெரிய விவசாயக்காட்டில் மொத்த குடும்பமும் பெரியவர்களும் குழந்தைகளும் உழைத்தாலும், ஒரே வீட்டில் உண்டு உறங்கினாலும் ஒவ்வொருவரும் மனதளவில் விலகியே இருக்கின்றனர்.

வேனைக் கால இரவுகளில் வீட்டிற்கு வெளியில் பத்து பதினைந்து கட்டில்கள் இருக்கும். நிலவு, நட்சத்திர வெளிச்சத்தில் குழந்தைகள் அனைவரும் கத்திக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தாலும் பெரியவர்களின் மனதில் வேனை தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறது. அது அவ்வப்போது வார்த்தைகளின் வழியே கொதிக்கக் கொதிக்க வெளிவரவும் தவறுவதில்லை.

மூத்த மகன் குடும்பத்தின் தூண்டலின் பேரில் குடும்பச் சொத்துகளை பிரித்துக்கொடுக்கிறார்கள். மூத்தவருக்குத்தான் அதிகம் பிரிகிறது (குடும்பத்திற்காக உழைத்தது மற்றவர்களை விட அதிகம் மற்றும் மிச்சமிருக்கும் உழைக்கும் வயது மற்றவர்களை விட குறைவு  என்ற லாஜிக்கின் பேரில்). கடைசிப் பையனான முத்துவிற்கு நிலத்தின் கடைசிப் பகுதியை ஒதுக்கிவிடுகிறார்கள்.  விவசாயத்திற்கு பயனில்லாத, கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவருவதில் சிரமங்கள் கொண்ட நிலத்தை தனக்குத் தள்ளி, ஏமாற்றி விட்டார்கள் என்று முத்தண்ணன் அதிர்ந்துபோகிறான். அவன் மனைவி பெருமாவிற்கோ சற்றும் தாளமுடியவில்லை. எந்நேரமும் அதைப்பற்றி, தனது குடும்பத்தின் வருங்காலத்தைப் பற்றிய ஆதங்கத்தை,  வார்த்தைகளாலும் தனது நடவடிக்கைகளாலும் வெளிப்படுத்தி, கொதித்துக்கொண்டே இருக்கிறாள்.

பின்னர் நடக்கும் இன்னொரு சம்பவத்திற்குப் பின் அந்தக் கொட்டாயிலிருந்து வெளியேறி பெருமாவின் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். பிரிந்த சொத்தை வைத்துக்கொண்டு, இந்த உறவு சங்காத்தமே வேண்டாம் என்று வேறு காட்டை தேடி முத்தண்ணன், பெருமாவின் குடும்ப பண்ணையாளான குப்பன் என்கிற குப்பண்ணாவுடன் பயணிக்கிறான்.

வழியில் பல்வேறு ஊர்கள், நிலங்கள், மனிதர்கள், வெவ்வேறு சாதிகுடிகள், மண்வெவ்வேறு காரணங்களால் திருப்தியுறாமல் (“மேடு பாங்கான நிலங்கள், மாசி மாதத்திலேயே கிணற்றைத் தேடி குடத்துடன் பெண்கள், ஏற்றங்காலில் நின்று தண்ணீர் சேந்துபவர்களிடம்சாமி, கொஞ்சம் மனசு வையுங்க சாமிஎன்று கெஞ்சிக்கொண்டிருக்கும் சக்கிலியப் பெண்கள்ஒரு கண்டத்திலிருந்து தப்பி இன்னொன்றில் விழுவதா?) போய்க்கொண்டிருக்கும் பயணம் வடமலையில் முடிகிறது.

கொங்கு வட்டார நடை, அந்த வட்டாரத்திற்கே உரித்தான சொற்கள் கதை முழுவதும் விரவிக்கிடக்கின்றனமுத்தண்ணன் வாங்கிய வடமலை காட்டில் தென்படும் கற்கள் போல்.  அந்தக்காட்டில் அவர்கள் தோண்டும் ஊற்று போல் கதையோட்டம் தெளிவாக  ஊறிக்கொண்டே போகிறது.

கதையின் காலம் வெளிப்படையாக சொல்லப்படவில்லை. ஆனால் எளிதாக  ஊகித்துவிட முடியக்கூடிய  ஒன்றுதான்கிராம டீக்கடையில் டீ பத்து பைசா! (சக்கிலியருக்கு தனிகொட்டாங்குச்சி“)

ஆசிரியர் கதையில் எல்லாவற்றையும் “சொல்லி”விடுகிறார்.  இருந்தும் ஒரு நகர வாசியாக அல்லது காங்க்ரிட் வன வாசியாக இந்தப் படைப்பைவெளியேஇருந்து பார்ப்பது. படிப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

இருபது இருபந்தைந்து வருடங்களுக்கு முன் தாராபுரம் என்ற ஒரு நகரமில்லாத, கிராமமும் இல்லாதடவுனில்சில வருடங்கள் வாழ்ந்திருந்தேன்.

தாராபுரத்திலிருந்து ஓரிரு மணிநேரங்களில் அடைந்துவிடக்கூடிய பல நகரங்கள் சுற்றி இருக்கும்கோவை, உடுமலைப்பேட்டை, ஈரோடு, பொள்ளாச்சி.

அந்த ஊர்களுக்கு எத்தனையோ தடவைகள் பஸ்களில் பயணிக்கும் போது இரு நகரங்களுக்கு நடுவில் சிற்றூர்களின் பெயர்ப் பலகைகள் கண்களில் பட்டிருக்கின்றன. இமைத்துப் பார்த்தால் போய்விடும். கள்ளி வலசு 2 கிமீ, ஏதாவது வலசு 4 கிமீ, ஏதோ ஒரு பட்டி அல்லது பிரிவு/விலக்கு 3 கிமீ என்று மைல்கற்கள் கண்களில் பட்டுக்கொண்டே இருக்கும்.  இந்த பெயர்ப் பலகை நிறுத்தத்தில் பஸ் நின்று சிலர் இறங்குவார்கள். அவர்கள் இந்த நான்கு கிலோமீட்டர்கள் நடக்கவேண்டுமா, அதற்குள் கால் வலிக்காதா, இருட்டிவிடுமே என்றெல்லாம் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

ஆனால் நான்கைந்து கிமீகள் தள்ளி இந்த காடு, வலசு, பட்டிகளிலும் மனிதர்கள் இருக்கிறார்கள். உயிரினங்கள் இருக்கின்றன. சாதாரண மனிதர்கள் அல்ல, அலகுடை உழவர்கள்.

சக்கிலியர், கவுண்டர், சானர், குடிமகன் (நாவிதர்) என்று பல்வேறு சாதி பிரிவினர் இயல்பாக அவரவர் வட்டங்களில் இருக்கின்றனர்.

என்னைப் போய் குப்பண்ணான்னு, கவுண்டர் நீங்க சொல்லாமா சாமி, டேய் குப்பான்னே கூப்பிடுங்கஎன்று சக்கிலியர் குப்பன் சொல்கிறார். இருந்தும் முத்தண்ணன் வயதில் பெரியவரை அண்ணா போட்டுத்தான் அப்படித்தான் அழைக்கிறான்.  கவுண்டர் வீட்டிற்குள் தண்ணீர் எடுப்பதற்காக நுழைந்துவிட்ட குடிமகனைத் திட்டித் தள்ளுகிறார்கள். தன் காட்டில் வழக்கமாக பனையேறுபவர்களிடம் கோபித்துக் கொண்ட அப்பா கவுண்டர், அவர்களை இனிமேலும் சார்ந்திருக்காமல் இருக்க, கவுண்டர் வீட்டுப் பையன் என்ற அடையாளத்தை மறைத்து கடைசி மகனை பனையேறும் தொழில் கற்றுக்கொள்ள வைக்கிறார்.

திருச்செங்கோடு வைகாசித் தேர்த் திருவிழாவின்போது குமார மங்கலம் மிட்டாதார் வீட்டு அல்லையில் பத்து பதினைந்து நாள்களிலும் அன்னதான பந்தி நடந்துகொண்டே இருக்கிறது. ஊர்சனம் முழுவதும் வந்து நெல்லாஞ்ச்சோறு தின்றுவிட்டு போகிறது.  வாழ்நாள் முழுவதும் வயல்களில் உழுபவர்களுக்கு நெல்லாஞ்சோறு என்பது திருவிழா உணவுமட்டும்தான். எளிய சாதிகளுக்கு தனிப்பந்தல். தங்கள் சாதிக்குரிய பந்திகளுக்கு அவரவர் தானே போய்விடுவார்கள்.

பந்தி மாறி வரும் இளவட்டங்களை அடையாளம் கண்டுபிடித்து துரத்தும் சிறு ரவுசும் உண்டு.

எதற்கும் ஒரு வியாக்கியானம் கொடுக்கும் மாமியார் கிழவிக்கு சுருக்சுருக்கென பதிலளிக்கும் பெருமா மருமகள்.

நகரநாசூக்குகள்எதுவும் இல்லை – “ஏழு எட்டு வயசு வரை ஒனக்கு பால் கொடுத்துதான் எனக்கு  மொலையே தொங்கிப் போச்சு கண்ணுஎன்கிறாள் அம்மா

தன்னிடம் தவறாக நடந்துகொண்ட மூத்த மச்சாண்டாரைப் பற்றி குற்றம் சொல்லப்போனால் மாமியார் கிளவிநாயம்பேசுகிறாள்.

தம்பி பொண்டாட்டியை அண்ணன் கையைப் பிடிச்சு இழுக்கறதெல்லாம் ஒரு நாயமா? எங்காலத்துல எல்லாம் தாலிதான் ஒருத்தனுக்கு. அண்ணந்தம்பி ஆரா இருந்தாலும் புருசந்தான். ஆறு பிள்ளப் பெத்தனே, ஆறும் உங்கப்பனுக்கேவா பொறந்தது? அதாருக்குத் தெரியும். மேலே போறவன் கொடுத்த பொறப்பு. எல்லாம் நாகரீகம் பெருத்துப் போன காலமாயிருச்சப்பாஎன்று தன்நாயம்பேசுகிறாள்….

ஆளண்டாப்பட்சி என்ற சொல்லாட்சி கொங்கு நாட்டுப் புற கதைகளில் உண்டு என்று ஆசிரியர் சொல்கிறார். அந்த பறவை மனிதர்களை தன் பக்கம் அண்டவிடாது மட்டுமல்ல, கெட்டவர்களைக் கொன்றுவிடுமாம். நாட்டுப்புற கதை நாயகனை தன் மீது ஏற்றி ஏழு கடல்கள், ஏழு மலைகள் தாண்டி கொண்டு போய் காரியத்தை முடித்துவிட்டு (“சிறைப்பட்ட இளவரசியை விடுவித்தல்/ ராசாவின் நோய்க்கான முறிமருந்து“) நாயகனை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்துவிடுமாம்.

படைப்பில் முத்தண்ணாவின் மனைவி பெருமாவே ஆளண்டாப்பட்சி  என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அவளிடம் ஒருவரையுமே அண்ட விடுவதில்லை. மாமியார், சக மருமகள்கள், கணவன், குழந்தைகள் என்று அனைவரிடம் சீறிக்கொண்டே இருக்கிறாள். ஆனால் அவள் சீற்றம் நன்மையிலேயே முடிகிறது.

சக்கிலியர் குப்பன் வெளி உலகம் காணாமல், ஊரும் காடும் உலகம் என்றிருப்பவர். ஊரைவிட்டு ஒரு சில கல் தொலைவு தாண்டியவுடனே அவருக்கு உலகம் புதிதாக, அதிசயமாகத் தெரிகிறது.  ஆனால் மண்ணைத் தெரிந்துவைத்திருக்கிறார். உலகளவிற்கு உலகைத் தெரிந்துவைத்திருக்கிறார்.

கல்யாணம் ஆகி ஒரு மாதத்திற்கு குப்பனை காட்டுப்பக்கமே காணோம். ஒரு மாதத்திற்குப் பின் கோமணத்தை இறுக்கிக்கிட்டு காட்டுக்கு வேலைக்கு வந்துட்டான். அப்புறம் பாத்தா அவன் பொண்டாட்டி தங்கா மாசமாயிட்டா. மொதக் குழந்த பொறந்து கொஞ்ச நாளைக்குப்புறம் குப்பனைக் காணோம், அடுத்த குழந்தையை தயார் பண்ணபோயிட்டாரு. ஆட்டுக்கு மாட்டுக்கு இருக்கறாப்பல குப்பனுக்கும் பருவமுண்டப்பா  என்ற கிண்டலுக்கு  குப்பனிடமிருந்து பதில் இப்படி வரும்.

ஆமாங்க சாமீ. வருசம் முழுக்க நேரங்காலம் இல்லாம எப்பப் பார்த்தாலும் தூக்கிட்டுத் திரியவன் இந்த மனுசந்தான் சாமீ. காக்கா குருவி ஆடு, மாடுவ இதெல்லாம் அந்தந்தப் பருவத்திக்கு அதததைச் செய்யும். மனுசனும் அப்படித்தான் இருக்கோணும் சாமீ. இல்லைன்னா எப்பப் பாரு மனசுல இதேதான் ஓடிக்க்கிட்டு இருக்கும்என்ற பதில் வருகிறது.

காடு மேட்டுல கிடந்துகிட்டு எப்பப்பா இதெல்லாம் கத்துக்கிட்ட? என்ற கேள்விக்குஅங்கதான் சாமீ. காக்கா குருவியெல்லாம் அங்கதானே குடும்பம் நடத்துதுஎன்று பதிலளிக்கும் குப்பனும் ஒரு விதத்தில் முத்தண்ணாவிற்கு ஆளண்டாப்பட்சிதான்.

மண்ணோடு எந்நேரமும் உறவாட, உரையாடிக்கொண்டே இருக்கின்ற இனம் உழவரினம். ஆதி மனிதனின் இன்றைய வாழும் தொடர்பு  இந்த அலகுடை உழவன்தான், நம் மூதாதையர்.   

Ulavan

பொன்னாத்தா பாட்டியிலிருந்து பத்து வயது ராசம்மா பெண் வரை, முத்தண்ணாவுடன் மொத்த குடும்பமே வாங்கிய காட்டைச் சீர் செய்வதில் இறங்குகிறது. அதை நெல் வயலாக மாற்ற, முத்தண்ணாவை அலகுடை நிழலில் வைப்பதற்காக அவரவருக்கு முடிந்த வேலைகளில் இறங்குகிறது.

பொன்னாத்தா, பெருமாவின் பாட்டி, ஒரு நெகிழ்வான, செந்தேள் கடித்த வலி குறைந்த ஆசுவாச சூழ்நிலையில்நான் செத்துப்போனா ரெண்டு நாளு வெச்சிருந்து ஊருல இருந்து ஆளெல்லாம் வரட்டுமின்னு இந்தக் காட்டுக்குள்ளயே  என்ன பொதச்சுடுங்க, வெள்ளாமைக்கு எருவாயி வெருசா வெருசம் பயிராகவும் செடிகொடியாவும் மொளச்சு வந்து உங்க முகம் பாத்துக்கறன் என்று சொல்லும் போது அந்த ஆத்தா கையைப் பிடித்து கண்களில் ஒற்றிக்கொள்ளத் தோன்றுகிறது.

வடமலையில் காட்டை வாங்கிய அன்று மாலை, முத்தண்ணாவிற்கு வானம் ஒரு குடையாகச் சுருங்கித் தன் நிலத்தின் மேல் வந்து அமர்ந்துகொண்டதாக தோன்றுகிறது. காட்டுக்குள் வானம் சுருங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு வானத்தைத் தொட்டுவிட ஓடுகிறான். அன்றில்லாவிடிலும் என்றாவது ஒரு நாள் முத்தண்ணன் தன் கனவு வானத்தை தொட்டுவிடுவான் என்று எண்ணிக்கொண்டேன். சந்தோஷமாக இருந்தது.

நாவல் : ஆளண்டாப்பட்சி
ஆசிரியர் : பெருமாள் முருகன்
வெளியீடு : காலச்சுவடு
விலை : 195

0 Replies to “அலகுடை நீலழவர் – பெருமாள் முருகனின் 'ஆளண்டாப் பட்சி'”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.