'அருந்தவப்பன்றி' – சுப்பிரமணிய பாரதி

பாரதி கிருஷ்ணகுமார் எழுதிய “அருந்தவப்பன்றி” சுப்பிரமணிய பாரதி எனும் நூல் பாரதி எனும் மனிதனைப் பற்றிய குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டுகிறது. கவிஞனாக அறியப்பட்ட பாரதியின் வாழ்க்கையிலிருந்த இடைவெளிகளை அவரது படைப்புகள் மூலம் நிரப்பும் சிறப்பானத் தொடக்கத்தை பாரதி கிருஷ்ணகுமார் செய்துள்ளார்.
பாரதியின் வாழ்வு பற்றி அவருடன் வாழ்ந்தவர்களான யதுகிரி அம்மாள், மனைவி செல்லம்மாள், நண்பர்கள் வ.ரா போன்றப் பலரும் தத்தமது அனுபவங்களை தொகுத்து எழுதியுள்ளனர். பாரதியுடன் பழகியவர்கள் எழுதிய குறிப்புகளில் நேரடியாக அவரது படைப்புகளின் தாக்கங்கள் குறித்து எழுத்தப்பட்டவை குறைவே. “இந்தியா” பத்திரிக்கை ஆசிரியரான மாண்டையம் ஶ்ரீனிவாசன் அவர்களுடைய புதல்வி யதுகிரி அம்மாளின் குறிப்புகள் தந்தையைப் பற்றிய குறிப்புகள் போல மிகவும் வாத்ஸல்யத்தோடு அமைந்திருக்கும். கனவுலகில் சஞ்சரித்த மகாகவிஞனான பாரதியோடு வாழ்ந்த மனைவி செல்லம்மாள் குறிப்புகள் அவரது லெளகீகச் சங்கடங்களை நமக்குக் காட்டும். நண்பர் வ.ராவின் குறிப்புகள் பாரதியின் தேச சேவையைப் பற்றியும் அவரது ஆளுமை பற்றியும் நமக்கு அறியத் தரும்.

IMG_20141211_140159

அந்த வரிசையில், பாரதி கிருஷ்ணகுமாரின் அருந்தவப்பன்றி ஆய்வு பாரதிக்கு கவிதாதேவியின் அருள் கிட்டாத ஆறு வருடங்களைச் சுற்றி அமைந்திருக்கிறது. பிறரின் அனுபவக்குறிப்பிலிருந்து நாம் இதை அறிவதில்லை. பாரதி எழுதிய “கவிதாதேவியின் அருள்” எனும் நீள்கவிதை மூலம் கவிதை அருள் கிட்டாத ஆறு வருடங்கள் பற்றி நமக்குத் தெரியவருகிறது. பாரதியின் வாழ்வு பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடக்கும் செய்திகளை அவரது கவிதைகள் மூலம் கோர்த்து முழு சித்திரத்தை அடைய முனைகிறது.
1896ஆம் ஆண்டு எட்டையபுர சமஸ்தானத்தின் ஆசுகவியாக இருந்த பாரதி தனது பதவியிலிருந்து விலக நேர்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்றாலும், சின்ன சங்கரன் கதையில் பாரதியே விளக்குவதுபோல, ஜமீனின் சின்னத்தனமான வாழ்வின் மீதான ஒவ்வாத்தன்மையே அவரை அங்கிருந்து துரத்தியிருக்கிறது. சரசப் பாட்டுகளும், விடலை துணுக்குகளும், சித்தம் கலங்கச் செய்யும் லேகியங்களும் தன்னை கீழ்மையை நோக்கித்தள்ளுவதை பாரதி உணர்ந்திருக்கிறார். தேச விடுதலை, மனித சமத்துவம், பெண்ணுரிமை எனும் உயரிய சிந்தனைகளைப் பேணுவதற்கு ஜமீன் சரியான இடமல்ல என்பதால் நிரந்தர ஊதியத்துக்கு உத்தரவில்லாத ஆசிரியர் பணியை ஏற்றுக்கொண்டார். தனது முழுமையை அங்கும் அவர் அடையவில்லை என்பதனால் மனவிரக்தியுடன் காசிக்குச் சென்றார்.
பாரதி காசியில் 1904 வரை ஆறு வருடங்கள் இருந்தார். மிகவும் ரசமான காலகட்டம். ஜார்ஜ் மன்னரின் பட்டமளிப்பு விழாவுக்காக நாடு முழுவதும் அமளி துமளியாக்கிக்கொண்டிருந்தது. வெள்ளைய அரசாங்கம் லார்ட் கர்சன் தலைமையில் அதற்குண்டான செலவுகளை சேகரிக்கத்தொடங்கின. காங்கிரஸ் கட்சியின் மிதவாதிகளும், புரட்சியாளர்களும் ஒருசேர இந்த விழாவை எதிர்த்து கண்டனம் தெரிவித்தனர். பெங்கால் மாகாணம் முழுவதும் பரபரப்பான காய்நகர்த்தல்கள் நடந்தன. பிபின் சந்திர பால், திலகர் போன்றோர் தலைமையில் சின்னதும் பெரியதுமாக பல புரட்சிக்குழுவினர் விழாவை குலைப்பதற்கு திட்டங்கள் பல தீட்டினர். அக்கொந்தளிப்பு பாரதி வாழ்ந்த காசியிலும் பலமாக இருந்தது. ஆனால் அந்த காலகட்டங்களில் பாரதி கவிதைகள் புனைந்ததாகத் தெரியவில்லை. சீனிவாசன் தொகுத்த காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகளில் காசியில் இருந்த சமயத்தில் ஒன்றும் இல்லை. அதுமட்டுமல்லாது, காசி அனுபவங்களை பாரதி மிகச் சொற்பமாகவே எழுதியுள்ளார். தனது பூணூல், குடுமியைத் துறந்ததும், மீசை தாடி வைத்ததும், ஐரோப்பிய சிந்தனைகளும், ஷெல்லியின் கவித்துவத் தாக்கமும் அக்கொந்தளிப்பின் விளைவு என ரகுநாதன் எழுதியுள்ளார்.
லார்ட் கர்சன் அவர்களின் அபிமானத்தைப் பெறுவதற்காக காசிக்கு வந்த எட்டையபுர ஜமீந்தார் மீண்டும் அழைத்ததன் பேரில் பாரதி எட்டையபுரத்துக்குத் திரும்பினார். பெங்கால் சுதந்தர எழுச்சி பாரதியின் நெஞ்சில் மூட்டிய தீயில் தனது முழுமையான வேகத்தை அவர் அடைந்தார் எனச் சொல்வது மிகையல்ல. எட்டையபுரத்துக்குத் திரும்பியதும் அவரால் முழுமையாக ஜமீந்தாரோடு பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை. இயல்பிலேயே அலைச்சலான ஆன்மாவான பாரதி தன்னை தேச சேவையில் ஈடுபடுத்தும் முழு முயற்சியில் இறங்கினார். அரசியல் கட்டுரைகள் எழுதுவதும், பத்திரிக்கைத் துறையில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியதும் அவரது முயற்சியின் விளைவு.
கவிதாதேவியின் அருள் கிட்டாத ஆறு வருடங்கள் பாரதியின் கவிதை ஊற்றுக்கானத் தடை. எட்டையபுரம் ஜமீன் வாழ்வில் அவளது அருளை தவறாகப் பயன்படுத்தியதன் விளையே இந்த விலகல் என பாரதி கவிதையில் எழுதுகிறார். பன்றியாகும்படி சபிக்கப்பட்ட ஞான முனிவன் அப்பன்றி வாழ்க்கையிலிருந்து மீள வழியிருந்தும் அடைந்துகிடந்ததை அருந்தவப்பன்றி எனும் அழகான வார்த்தையில் கூறுகிறார். அந்த பன்றி போல கீழ்மையில் உழன்று தனது முழுமையான கவித்துவ அருளை வீணாக்கியதன் பயனாகவே தன்னை விட்டு விலகிவிட்டாயா என கவிதாதேவியில் இறைஞ்சுகிறார். கவிதை புனையாது, தன்னிலிருந்து விடுபட முடியாது காசியில் வாழ்ந்த ஆறு வருடங்கள் பாரதிக்கு எத்தனை கொடியதாக இருந்திருக்க வேண்டும்?

கவிதா தேவி அருள் வேண்டல்

கவிதைத் தேவி, நின் காதலை மறந்தேன்.
ஆங்கதன் பினரிவ் வவனிமீ தளியேன்.
சில்லாண் டுள்ளே, பன்னா டேகிப்
பலரொடு வைகிப் பலபல புரிந்து
பலபல கண்டு பலபல வருந்தி
வாணாள் கழிந்தேன், வார்கட லதனிடை

 
 
bharathiபாரதியில் பாடல்களைக் கொண்டு அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களை பாரதி கிருஷ்ணகுமார் எழுதியுள்ளார். விடுபட்ட அந்த ஆறு வருடங்களில் நடந்த சம்பவங்கள் நமக்கு இன்று கிடைக்குமா எனத் தெரியவில்லை. 1981 ஆம் ஆண்டு நடந்த பாரதி ஆண்டுவிழாவில் தமிழ்நாட்டு பல்கலைக்கழகம் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை முழுவதும் கொண்டுவரும் செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டது. ஆனாலும் இன்றுவரை அப்படிப்பட்ட ஆய்வு நடக்கவில்லை என்கிறார் பாரதி கிருஷ்ணகுமார். எந்தொரு மகுடங்களையும் பாரதியின் தலையில் ஏற்றிவைக்காமல், ஒரு கவிஞனாக அவனது அக அலைச்சல்களைப் பற்றிய முழுமையான பார்வை நமக்குக்கிடைக்கவேண்டியது அவசியம்.  பாரதி கிருஷ்ணகுமாரின் இந்த சிறு புத்தகம் அப்படிப்பட்ட ஆய்வுக்கானத் தேவையை ஆணித்தரமாக நிறுவுகிறது. முப்பத்து ஒன்பது வருடங்கள் மட்டுமே வாழ்ந்த பாரதியின் வாழ்வில் மொத்தம் 12 வருடங்கள் மட்டுமே அவன் கவிதை புனைந்திருந்தான். ஒரு மேன்மையான கவியின் வெளிப்பாட்டும், செழுமையும் கூர்மையும் தீட்டப்பட்டதாக மாற்றப்பட்ட மொழிக்கும் இடையே உள்ளது இந்த ஆறு வருடங்கள். இந்த ஆறு வருடங்களுக்குப் பிறகு நம் உடைநடையும், பத்திரிக்கை மொழியும், அரசியல் மொழியும் முற்றிலும் வேறொரு தளத்தில் பயணம் செய்யத் தொடங்கியது. அதுமட்டுமல்லாது, தமிழ் சிந்தனையும் அக்காலத்திய தேசிய சிந்தனையோடும் இணைந்தது. அங்கிருந்து ஐரோப்பிய சிந்தனையை எட்டிப்பிடித்தது. இத்தனைக்கும் தொடக்கமாக பாரதியின் படைப்புகள் இருந்திருக்கின்றன. சமத்துவம், பெண்ணுரிமை, ஆன்ம தரிசனம் போன்றவற்றைப் பேசிய படைப்புகளோடு அவரது வாழ்வையும் ஆழ நோக்குவதன் மூலமே முழுமையாக அவரைப் புரிந்துகொள்ள முடியும் என்பதை வலியுறுத்தும் நூல்.

“அருந்தவப்பன்றி” சுப்ரமணிபாரதி.
பாரதி கிருஷ்ணகுமார்
The Roots பதிப்பகம்
2014 வெளியீடு.