ஷமிதாப் – அரசின்மைவாதியின் அராஜகம்

ir
 
சமீபத்திய நினைவில், ஷமிதாப் போல் ராஜாவின் வேறெந்த ஆல்பமும் அவர் ரசிகர்களைச் சரியாக நடுமத்தியில் இரு எதிரெதிர் அணிகளாகப் பிரித்து நிறுத்தவில்லை. ஒரு பக்கம், “முருகா, ராஜாதானா இது!” என்று சந்தேகப்படுகிறார்கள், இன்னொரு பக்கம், “முருகா, இதுதாண்டா ராஜா,” என்று ஆச்சரியப்படுகிறார்கள். ரசிகர்கள் அனைவரும் ஷமிதாப்பில் பார்ப்பது ஒரு புதிய ராஜா, ஆனால் அவரது இசையை நெருக்கமாகப் பின்தொடர்ந்து வந்தவர்கள் இப்போது சற்றே பின்னோக்கித் திரும்பிப் போனால் தெரியும், ஷமிதாப்பில் வெளிப்படும் ராஜா நமக்கு ஏற்கனவே பழக்கமானவர், நாம்தான் கவனிக்கவில்லை என்பது.
ஷமிதாப்பைப் புரிந்து கொள்ள ராஜாவின் இசையின் இரு இயல்புகளைப் புரிந்து கொண்டாக வேண்டும்: நவீனத்துவத்தையும் ட்ரெண்ட்களையும் அவர் எப்படி அணுகுகிறார் என்பது ஒன்று, அவரது நகைச்சுவை உணர்ச்சி மற்றொன்று. ரஹ்மான் தொடங்கி நவீன இசைக்கு ராஜா ஆற்றியுள்ள எதிர்வினை சீரானதாக இருந்திருக்கிறது. ஸிந்தசைஸர்களை ரஹ்மானும் அவருக்குப் பின்னர் வந்தவர்களும் பயன்படுத்தியது போல் ராஜா பயன்படுத்துவதில்லை. ராஜாவின் சிந்த்தில் ஒரு அடர்த்தி எப்போதும் இருந்து வந்திருக்கிறது, ரஹ்மான் மற்றும் அவரது அடியொட்டி வாசிப்பவர்கள் சிந்த்தை இந்த அளவிற்கு அடர்த்தியாக இல்லாமல் எளிய பயன்பாட்டுக்குதான் உட்படுத்துகின்றனர். அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ராஜாவின் ஸிந்தசைஸர் இசை ரஹ்மான், ஹாரிஸ், யுவன் அளவுக்கு ஹெப்பாக இல்லை என்றால், அதற்கு ஒலிப்பதிவின் தரமும் ஒரு காரணம். ஆனால் ஒலிப்பதிவின் தரத்துக்கு அப்பால் ஸிந்தசைஸரை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த ராஜாவின் சிந்தனை பிற இசைக்கலைஞர்களைப் போலில்லை, வேறுபடுகிறது.
ஆனால் மாறுபட்டு இருக்கிறது என்ற காரணம் வெற்றிக்கு இட்டுச் செல்வதில்லை. ஸிந்தசைஸர்களையும் லூப்களையும் பயன்படுத்தி முதலில் ரஹ்மானும பின்னர் ஹாரிஸ், யுவன் மற்றும் பலரும் அடைந்த வெற்றி நமக்குத் தெரியும். ஆனால் ராஜா எப்போதும் தன் பாணியிலேயே இசையமைத்து வந்திருக்கிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவரது அண்மைய பாடல்களில் பலவும் பெருவாரி மக்களைச் சென்று சேரவில்லை, வெகு சிலரே அவற்றை அறிந்திருக்கின்றனர்.
இதற்குச் சில உதாரணங்களைத் தருகிறேன்: “இளவயது” (மத்திய சென்னை), “வானம்பாடிகள்” (கண்ணுக்குள்ளே), “பாட்டுக் கேட்டுச் சுத்துது பூமி (கண்ணுக்குள்ளே), “இளமைக் கனவுகள் (தனம்), “நிலவு வரும் நேரம்” (ஜகன்மோகினி). “ஹே மாமு மச்சி” (கண்களும் கவி பாடுதே), “இஷ்டக்காரிக்கு” (சூரியன், மலையாளம்), “தென்னிப்பாயும்” (வினோதயாத்ரா, மலையாளம்), நான் ஒந்து கோம்பே (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, கன்னடம்), “ஹொடதவனே” (பிரேம் கஹானி, கன்னடம்), “ஜில்லுமந்தி” (குன்டெல்லோ கோதாவரி, தெலுங்கு). பலரும் இந்தப் பாடல்களைக் கேட்டிருக்க மாட்டார்கள், இரண்டாம் முறை கேட்டவர்கள் அதைவிடக் குறைவாக இருக்கும் (இவற்றில் ஹொடதவனே, என்ற பாடல் மட்டும் ஓரளவு கவனம் பெற்றது). ஆனால், கொஞ்சம் கவனமாக இந்தப் பாடல்களைக் கேட்டால், இவற்றில் உள்ள பல கூறுகள் ஷமிதாப்பில் இருப்பதைப் பார்க்கலாம், ஆனால் இந்தப் படத்தில் ராஜா அவற்றை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்று விடுகிறார்.
ராஜாவின் நகைச்சுவை உணர்ச்சி பற்றியும் பேச வேண்டும். அவரது துவக்க காலத்திலிருந்து இது தொடர்ந்து வந்திருக்கிறது. எப்போதெல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ, அது எதையும் ராஜா தவற விட்டதில்லை. ஜக்கம்மா (சொல்ல மறந்த கதை) பாடலைக் கேட்டுப் பாருங்கள், இன்னும் வெளிவராத “காதல் ஜாதி” திரைப்படத்தில் உள்ள “அண்ணே அண்ணே”, “அச்சடிச்ச காச” (வால்மீகி), “பாட்டெல்லாம்” (சூரியன், மலையாளம்), “ஸ்வல்ப சவுண்ட்” (சூரியகாந்தி, கன்னடம்) என்று எந்தப் பாட்டையும் கேட்டுப் பாருங்கள், ராஜாவின் நகைச்சுவை உணர்வு முழு வீச்சுடன் வெளிப்படுவதைக் காணலாம். வழக்கமான வேடிக்கைப் பாடல்கள் சொற்கள் அல்லது கிறுக்குத்தனமான கருவிப்பயன்பாட்டை நம்பி இருந்திருக்கின்றன. ராஜா பாடல்களின் ட்யூனே நம்மைப் புன்னகைக்க வைக்கிறது. சில பாடல்களில் ஆர்க்கெஸ்ட்ரேஷன் இதைச் செய்கிறது- “கள்வனே கள்வனே “(மேகா), “காற்றைக் கொஞ்சம்” (நீஎபொவ) பாடலில் வரும் ஸாக்ஸ், “நிலவு வரும் நேரம்” (ஜெகன்மோகினி) பாடலின் குறுக்கே வந்து போகும் கிடார் சில உதாரணங்கள். ராஜாவுக்கு உள்ள நகைச்சுவை உணர்வு இந்தியாவில் வேறெந்த இசையமைப்பாளருக்கும் இருந்ததில்லை என்பதை அடித்துச் சொல்லலாம். ராஜாவைத் தவிர வேறு யாராலும் ஷமிதாப்பில் உள்ள பாடல்களைச் செய்திருக்க முடியாது.
ராஜா ரசிகர்களில் பலரும் இந்த ஆல்பத்தை நிராகரிக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணம்,  அவர்கள் அறிந்த ராஜாவை இதில் காணவில்லை. பொதுவாகவே, ராஜா ஸிந்தசைஸர்களைப் பெருமளவு பயன்படுத்திய ஆல்பம்களில்கூட ஓரிரண்டு மெலடி பாடல்களோ, உணர்ச்சிகரமான பாடல்களோ அவரது ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் அளவில் இருக்கும். ஆனால் இதில் அது போன்ற பற்றுகோல் எதுவுமே கிடையாது. ராஜாவின் இசை குறித்து நாம் எதையெல்லாம் நெருக்கமாக உணர்கிறோமோ அது அத்தனையையும் அவர் உடைத்தெறிகிறார், நமக்கு குழப்பம்தான் மிஞ்சுகிறது. அவருக்கு நாம் எழுப்பிய கோவில்கள் அத்தனையையும் இடித்துத் தள்ளுகிறார் இந்த அரசின்மைவாதி. சிறிதுகூட இரக்கமில்லாமல், தன் ரசிகர்களின் உணர்வுகள் குறித்து கொஞ்சம்கூட கவலைப்படாமல் இதைச் செய்கிறார் அவர். ஆனால் இந்த மனிதரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? இசை எவ்வளவுதான் உயர்வாக இருந்தாலும் அது திரைப்படத்தின் நோக்கத்துக்குக் கீழ்படிந்தாக வேண்டும் என்று எப்போதுமே சொல்லி வந்திருப்பவர் இவர். உணர்ச்சிகரமான காட்சிகள் எதுவும் தருவதில்லை பால்கி, ஆனால் விளையாடிப் பார்ப்பதற்கான மேடையை அளிக்கிறார், ராஜாவும் அதில் முழுமையாகக் களிக்கிறார். இன்னொரு பா அல்லது சீனி கம் போன்ற ஆல்பம் இது என்று நினைத்துக் கொண்டுதான் இந்த ஆல்பத்தைக் கேட்கிறோம், ஆனால் நாம் நினைப்பதற்கு நேர்மாறாக இது இருக்கிறது.
“இஷ்க்-இ பில்லம்” என்ற முதல் பாடலின் ப்ரிலூட், அடுத்து வரப்போவது குறித்து மூச்சு விடுவதில்லை. நாமறிந்த ராஜா இந்த ஆல்பத்தில் தென்படும் மிகச் சில இடங்களில் இந்தப் ப்ரிலூடும் ஒன்று. பியானோ அழகாக ஒரு ஆட்டம் போட்டு ஓய்கிறது. ஆனால், அங்கிருந்து கிளம்பும் ட்யூன் வேறொரு திசையில் புறப்படுகிறது, அருமையாகப் பாடியிருக்கிறார் சூரஜ் ஜெகன். பல்லவியில் உள்ள மிகவும் நுட்பமான தாள இடைவெளிகள் பாடலுக்கு ஒரு எனர்ஜி கொடுக்கின்றன. ராஜா தன் வழக்கமான பாணி ப்ரிலூடை சீக்கிரமாகவே குலைத்து விடுகிறார், சரணம் நல்ல எனர்ஜியோடு போகிறது. சரணத்தின் முடிவில் பிற குரல்கள் வெகு இயல்பாக வந்து சேர்ந்து கொள்கின்றன. இரண்டாம் இடையிசையின் தாளத்தில் ராஜா தன் வழக்கமான சோதனை முயற்சியை மேற்கொள்கிறார். ஆல்பத்தைத் துவக்க நல்ல ஒரு பாடல்.
இரண்டாம் பாடலின் துவக்கமும் நமக்குப் போக்கு காட்டுவதாகத்தான் இருக்கிறது. மகத்தான பாடல் ஒன்று வரப்போகிறது என்று நினைக்க வைக்கும் ஸாக்ஸ் ஒலி (அல்லது இதுவும் ஸிந்தசைஸரில் இசைத்த சாக்ஸ் ஒலியா?)- துவக்கத்தில்தான் இது, ராஜா வெகு சீக்கிரமாகவே இதை முறித்துப் போட்டு ஸிந்தசைஸரை முடுக்கித் தாளத்தையும் பாஸ் முழக்கத்தையும் பாட்டுக்குள் கொண்டு வருகிறார். அண்மையில் இது போல் சில தெலுங்குப் பாடல்களில் இசையமைத்திருக்கிறார் ராஜா. “மசகெனுக மத்லப்” (கயம் 2), “ஜில்லுமநதி” (குண்டெல்லோ கோதாவரி) போன்ற பாடல்கள் இப்படிப்பட்டவை. பல்லவியில் மிக அழகாக மெலடியைக் கட்டமைக்கிறார், “ஆஸ்மான்” என்ற இடத்தில் குரல் நிற்கும்போது, பின்னணியில் ஹம்மிங்கோடு இணைந்து ஒலிக்கிறது பியானோ. இந்த ஆல்பத்தின் மிகச் சிறந்த இடம் இதுவென்று சொல்லலாம். முதல் இடையிசையில் குரல், ஸிந்தசைஸர் என்று எல்லாமே கட்டற்று ஒலிக்கின்றன. சரணத்தில் வரும் கோரஸ், மற்றும் முடிவில் ஒலிக்கும் பியானோ ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை. இரண்டாம் இடையிசையில் ஒரு மகோன்னத தொனியுடன் துவங்கும் பியானோ ஸிந்தசைஸரின் தாளத்துக்கு வழி விட்டு ஒதுங்கிக் கொள்கிறது, ஆனால் அதற்கு முன்னர் சில அழகான ஸாக்ஸ் சங்கதிகள் நமக்குக் கிடைக்கின்றன. காரலிசா மான்டைரோவின் குரலினிமையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
ஒரு முறை நான் என் ஸ்டாஃபிங் மானேஜரிடம், ஏன் கிளையண்ட்கள் அதிகரிப்பதில்லை என்று கேட்டேன். “கிளையண்ட் மட்டன் பிரியாணி கேட்கிறார், நாம் வெண்பொங்கல் தருகிறோம்,” என்றார் அவர். இந்த ஆல்பத்தின் வெண்பொங்கல் “பிட்லி” பாடல்தான். பொறுப்பில்லாத சகோதரர்கள் உள்ள குடும்பத்தில் முன்வரிசையில் உட்காரும் படிப்பாளி. இதில் ராஜாவின் முத்திரைகள் பல இருக்கின்றன, எனவே இதை ரசிப்பதில் பிரச்சினை இல்லை. அமிதாப் பாடியுள்ளவற்றில் மிகச் சிறந்த பாடல்கள் என்ற பட்டியலில் இது நிச்சயம் இடம் பெறும், அவரும் ஓரளவு பரவாயில்லையாகத்தான் பாடியிருக்கிறார். ஆனால் அங்கங்கே கொஞ்சம் சிரமப்படுவது தெரிகிறது. இந்த ஆல்பத்தில் மெலடியான பாடல் இதுதான், இதுவரை இதற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்தல் ஹிட் என்றுதான் சொல்லவேண்டும்.
“சன்னாட்டா” பாடலில் அரசின்மைவாதியும் விளையாடிப் பார்ப்பவனும் இணைகிறார்கள். “தும்பி வா” பாடலைப் போலவே “ஆசைய காத்துல” என்ற பாடலையும் ராஜா பல முறை பயன்படுத்தியிருக்கிறார். அண்மையில், குண்டெல்லோ கோடாரி படத்தில் இதைச் செய்தார். புதிய வரிகளுடன் பழைய பாடலுக்கு மிக நெருக்கமாக இது இருந்தது. அதே தாளத்தை டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார், பொன்முடிபுழையோரத்து பாடல்களிலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்தப் பாடலில் ஆசைய காத்துல என்ற பழைய பாடலை முழுமையாகவே ஒழித்துக் கட்டிவிடுகிறார்.. இத்தனை நாட்கள் சிரமப்பட்டு கட்டமைத்த ஒரு பாடலை இப்படி அழிக்கும்போது, நம்மையும் உடன் சிரிக்க அழைக்கிறார் ராஜா. சிலர் இதற்காக கோபப்படுகிறார்கள், ஆனால் என்னைப் போன்ற சிலருக்கு இது வேடிக்கையாகவும் இருக்கிறது. என்ன ஒரு அராஜகம். உன் பிம்பம், உன் கோவில், எல்லாவற்றையும் அழித்து உன் படைப்பே புனிதமில்லை என்று காட்டுவது இது. காற்றில் பறப்பது போன்ற உணர்வை அளிக்கும் பாடல் நமக்குக் கிடைக்கிறது. முதலில் குரலைக் கொண்டு ரிதம் உருவாக்குகிறார், பின்னர் வேறு சில குரல்களைக் கொண்டு ஹார்மனி உருவாக்குகிறார், இவற்றுடன் கிறுக்குத்தனமான ஸிந்த் சத்தம் சேர்ந்து கொள்கிறது. ஸ்ருதி இந்தப் பாடலைப் பாடத் தகுந்தவர். முதல் இடையிசையில் பலதரப்பட்ட ரிதம்கள் ஸிந்த்துடன் இணைந்து ஒலிக்கின்றன. பாடல் வரிகளும் விளையாட்டாகவே இருக்கின்றன, பாடலுக்குத் தகுந்தவைதான். இரண்டாம் இடையிசையில் இது இன்னும் பெரிய விளையாட்டாகிறது. ஸிந்த்தும் குரல்களும் அருமையாய் பயன்படுத்தப்பட்டுள்ளன, நடுவே வந்து போகும் கிடாரும் தன் வேலையைக் காட்டுகிறது. எழுபது வயது கடந்த மனிதரிடமிருந்து இது!
தப்பட் என்ற அடுத்த பாடல் படு அராஜகம். இசை, பாடல் வரிகள், பாடிய விதம் எல்லாமே அராஜகம்தான். முதலில் ராப் மாதிரி துவங்குகிறது, பாடல் முழுவதும், எனக்கு எதுவும் முக்கியமில்லை, என்றுதான் சொல்கிறது. பாடகர்கள் பிரமாதமாகப் பாடியிருக்கின்றனர். முதல் இடையிசை பாடலின் உணர்வுக்கேற்ப எளிமையாக இருக்கிறது. சரணம் வேகம்கூடி உச்சத்தில் பல்லவியுடன் இணைகிறது. இரண்டாம் இடையிசைதான் நம்மை அசத்துகிறது.. முதலில் வயலின் ஒரு பாட்டம் வாசித்து ஓய்ந்ததும் கிடார் பெருங்கூச்சலாய் கும்மாளமிடுகிறது. ராஜா ரசிகர்கள் இது ராஜா போலில்லை என்று சொல்கின்றனர், ஆனால் கவனமாகப் பார்த்தால் ராஜாவின் பிடி இந்தப் பாடல் நெடுக இறுக்கமாக இருப்பதைப் பார்க்க முடியும். ஒரு கணம்கூட தொய்வடைவதில்லை. பல்லவிக்குப்பின் உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும் பெண்குரலைத் தனியாகச் சொல்ல வேண்டும்.
லைஃப்பாய் பாடலைக் கேட்கும்போதும் சிரிப்பை நிறுத்த முடிவதில்லை, அதுவும் அராஜகம்தான். ராஜாவின் நகைச்சுவை உணர்வு உச்சம் தொடும் இடம் இது. சொற்களில் மட்டுமல்ல, ட்யூனிலும் அப்படி ஒரு விளையாட்டு. உலகெங்கும் மதிக்கப்படும் இசைக்கலைஞர் ஒருவர் இப்படிச் செய்வார் என்று யார் நினைத்திருக்க முடியும்? ராஜா செய்கிறார், அதிலும் பிஸ்த்து கிளப்புகிறார்.
இந்த படத்தின் பாடல் வரிகளும் பாடல்களுக்கு ஏற்றது போல் இருக்கின்றன. கவிதை தேடிப் போகும் பலர் மண்டை காய்கிறார்கள். ட்விட்டரில் பலர் கொதித்தெழுந்தார்கள். ஆனால் இந்த பாடல்களுக்கு இந்த வரிகள் தான் கச்சிதமாகப் பொருந்துகின்றன. இதில் அதிகப் பாடல்கள் எழுதிய ஸ்வானந்த் கிர்கிரேவுக்கு ஒரு ஷொட்டு வைக்கலாம்.
மொத்தமாகப் பார்த்தால் இந்த ஆல்பம் விளையாட்டுத்தனங்கள் நிறைந்தது, அராஜகம் டன் கணக்கில் இருக்கிறது. உனக்கும் எனக்கும் நடுவிரலை உயர்த்திக் காட்டும் ஆல்பம் இது, வேண்டுமானால் பாராட்டலாம் அல்லது கோபப்படலாம். ராஜா இரண்டையும் ஏற்றுக் கொள்வார் என்று தோன்றுகிறது. நகைச்சுவை உணர்வு இல்லாமல் இப்படிப்பட்ட ஒரு ஆல்பம் செய்திருக்க முடியாது. புகழாகட்டும் புனித பிம்பமாகட்டும் எதைக் காட்டிலும் தன் கலைக்கு நேர்மையாக இருப்பதே முக்கியம் என்று நினைக்கும் தன்னடக்கம் இருக்கும் ஒருவரால் மட்டுமே இதைச் செய்திருக்க முடியும். தனியாய் நிற்கும் துணிச்சல் உள்ளவன், அரசின்மைவாதி, இவனால்தான் முடியும். ராஜா இது எல்லாமாகவும் இன்னும் பலவாகவும் இருக்கிறார் என்பது நம் நல்லூழ்.

0 Replies to “ஷமிதாப் – அரசின்மைவாதியின் அராஜகம்”

  1. உண்மையில் நீங்கள் (கட்டுரை ஆசிரியர்) சங்கீத ரசிகராய் இருப்பதால் இப்படி நுனுக்கமாக ரசிக்க முடிந்திருக்கிறது. ஒரு சாதாரன ராஜா ரசிகனுக்கு ஷமிதாப் இசை ஏமாற்றமே. அவரை விதவிதமான சோதனைகள் செய்யக்கூடாது எனச் சொல்வதல்ல இது. 7 பாட்டு போட்டா ஏழும் ஹிட்டு என்றிருந்த எங்கள் ராஜா இந்தப்படத்தில் இல்லை என்பதே வருத்தம். கனடாவிலோ, லண்டனிலோ மேடையில் எந்தவிதமான வாத்யக்கருவியும் பயன்படுத்தாமல் உடனடியா டியூன் போட்டு பாடிய “நான் பொறந்து வந்தது ராஜ வம்சத்துல” பாடல் போல கலக்கலாக பாடல்களை இடதுகையால் தருபவர் ராஜா. ஷமிதாப்பில் தப்பட் தவிர வேறு எந்த பாடலும் மனதில் நிற்கவில்லை என்பதே உண்மை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.