விதியின் பிழை காண் – பகுதி 5

விதியின் பிழை காண் – பகுதி 5
 

வெளிப்புறம் – குள்ளர்களின் மறைவிடம் – இரவு

 

காவல்காரக் குள்ளனின் குரல்

 

அய்யா, எழுந்திரும்.

 

தருமன் கண்ணைத் திறக்கிறான். மெதுவாக சுற்றிப் பார்க்கிறான். அவன் எதிரே ஒரு குள்ளன் நிற்கிறான். நாகை பக்கத்தில் அமர்ந்திருக்கிறாள்.

 

காவல்காரக் குள்ளன்

 

மலையன் வந்து விட்டான். உங்களைப் பார்க்க வேண்டுமாம்.

 

தருமன் எழுந்து நிற்கிறான். அவன் கையில் கட்டுக்கள் இல்லை. குள்ளன் பின்னால் அவனும் நாகையும் நடக்கிறார்கள்.சில மண்டபங்களைத் தாண்டிய பின்னால் ஒரு பெரிய திறந்த வெளி தெரிகிறது. அதில் கிட்டத்தட்ட நூறு குள்ளர்கள் கூடி இருக்கிறார்கள். அந்த திறந்தவெளியின் ஒரு பக்கம் ஒரு பெரும் கல் மேடை. அதன் மேல் சில குள்ளர்கள் நிற்கிறார்கள். அதில் மலையன் ஏதோ கத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறான்.
மேடையில் மலையனுக்குச் சற்றுப் பின்னால் தென்னதரையனும் வழுதியும் நிற்கிறார்கள். தருமனை முன்னால் அழைத்துச் செல்கிறான் அவனுடைய காவலாள்.

 

நாகை
(மெதுவாக; தருமனிடம்)

 

தருமா, மேடையில் பார்த்தாயா? இவர்கள் எப்படி இங்கே?

 

தருமன்

 

பார்த்தேன்.

 

மேடையில் வழுதி அவர்களைப் பார்க்கிறான். தென்னதரையனைக் தொட்டுக் கூப்பிட்டுக் கையைக் காட்டுகிறான்.

 

மலையன்
(உரத்து)

 

பாண்டியர்கள் இந்த இடத்தைக் கண்டுபிடிக்க அதிக நேரம் ஆகாது. நாம் எல்லோரும் இங்கிருந்து கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. இன்னும் இரண்டு நாளில் நான் வேறு இடம் பார்த்து வருகிறேன். அது வரை நீங்கள் யாரும் கோட்டைக்கு வெளியே போக வேண்டாம்.

 

தருமன் மேடையின் முன்னால் வந்து நிற்கிறான். மலையன் அவனைக் குனிந்து பார்க்கிறான்.

 

காவல்காரக் குள்ளன்

 

மலையா, இவர்கள்..

 

தருமன்
(குறுக்கிட்டு)

 

இருங்கள். நீங்கள் தான் மலையனோ?

 

மலையன்

 

ஆமாம். இவர்கள் யார்?

 

தருமன்
(மறுபடி குறுக்கிட்டு)

 

உங்களுக்கு இரண்டு நாட்கள் வரை நேரம் இல்லை. பாண்டியர்கள் இந்நேரம் இங்கே வந்திருப்பார்கள்.

 

கூட்டத்தில் “ஆ” என்று பலர் கூவும் சத்தம் கேட்கிறது.

 

மலையன்
(நிதானமாக)

 

நீங்கள் யார்? பாண்டிய ஒற்றர்களா?

 

தருமன்

 

இல்லை. நாங்கள் சாத்தூரில் இருந்து வருகிறோம். சில நாட்களுக்கு முன்னால் அங்கே சில குள்ளர்களைப் பார்த்தோம். அவர்களைத் தேடி
வந்தோம்.

 

மலையன்

 

நான் தான் சாத்தூர் வந்திருந்தேன். எங்களை எதற்காகத் தேடி வந்தாய்?

 

தருமன் தயங்குகிறான். தென்னதரையனையும் வழுதியையும் பார்க்கிறான்.

 

தருமன்

 

பாண்டியர் மகன் எங்கே?

 

மௌனம் நிலவுகிறது. தென்னதரையன் ஆச்சரியத்துடன் தருமனைப் பார்க்கிறான்.

 

மலையன்

 

பாண்டியர் மகனைக் களப்பிரர் எடுத்துச் சென்று விட்டதாகச் சொல்கிறார்கள்.

 

தருமன்

 

நீங்கள் பொய் சொல்கிறீர்கள். சாத்தூரில் பாண்டியர் மகனை எடுத்து வந்தது நீங்கள் தான்.

 

குள்ளர்களில் ஒருவன்

 

மலையா, இது என்ன விந்தை? இவன் என்ன உளறுகிறான்?

 

மலையன்
(தருமனைப் பார்த்து)

 

உன் பெயர் என்ன?

 

தருமன்

 

தருமன்.

 

மலையன்

 

தருமா, பாண்டியர் மகனைத் தேடியா இவ்வளவு தூரம் வந்தாய்?

 

தருமன்

 

ஆமாம்

 

மலையன்

 

இளவரசனை நாங்கள் எடுத்து வரவில்லை. நாங்கள் இருக்கும் நிலையில் எங்கள் குழந்தைகளைக் காக்கவே எங்களுக்கு நேரமில்லை.
(beat)
(சுற்றி உள்ள குள்ளர்களைப் பார்த்து)

 

இவர்களை எங்கே பிடித்து வந்தீர்கள்?
காவல்காரக் குள்ளன்

 

மலையா, நம் ஆட்கள் சிலரைப் பாண்டியர்கள் பிடித்து வைத்திருந்தார்கள். அவர்களைப் போய் மீட்டு வரும் போது, இவன் ஒளிந்திருந்ததைப் பார்த்தோம். ஒரு பெண்ணோடு இருந்ததால் பிடித்து வந்தோம்.

 

தருமன்

 

நீங்கள் தவறு செய்து விட்டீர்கள். இந்த இடத்தைக் கண்டுபிடிக்க பாண்டியர்கள் போட்ட நாடகம் அது.

 

வெளிப்புறம் – இடிந்த கோவிலுக்கு வெளியே, காட்டில் – இரவு

 

மரங்களுக்கு இடையே பாண்டிய வீரர்கள் மெதுவாக நகர்கிறார்கள். சற்றுத் தள்ளிக் கோவில் சுவர் தெரிகிறது.திடீரென்று காட்டில் “தொம், தொம்” என்று பறை அடிக்கும் சத்தம் சுற்றிக் கேட்கிறது.
வீரர்கள் திடுக்கிட்டுச் சுற்றிப் பார்க்கிறார்கள்.
“தொம், தொம்” என்று காட்டில் சத்தம் பரவுகிறது.

 

வெளிப்புறம் – குள்ளர்களின் கோவிலுக்குள்ளே திறந்தவெளி – இரவு

 

“தொம், தொம்” என்று சத்தம் கேட்டவுடன் கூடியிருக்கும் குள்ளர்கள் திடுக்கிட்டுச் சுற்றிப் பார்க்கிறார்கள்.

 

மலையன்

 

நேரம் வந்து விட்டது.

 

வெளியில் இருந்து தீ அம்புகள் பறந்து கோவிலுக்குள் விழுகின்றன. மதில் மேலே பாண்டிய வீரர்கள் தெரிகிறார்கள்.
குள்ளர்கள் நாலு பக்கமும் சிதறி ஓடுகிறார்கள்.

 

மலையன்

 

தருமா, அரையரே, என்னுடன் வாருங்கள்.

 

தென்னதரையன், வழுதி, தருமன், நாகை, நால்வரும் மலையன் பின்னால் ஓடுகிறார்கள். மலையன் சில மண்டபங்களைத் தாண்டி, ஒரு இருட்டுச் சந்நிதி உள்ளே போகிறான். அங்கே உள்ள பெரும் சிலைக்குப் பின்னால், ஒரு பாதை கீழே இறங்கிச் செல்கிறது.

 

மலையன்

 

தப்பிச் செல்லுங்கள்.

 

தென்னதரையன்

 

நீங்கள் வரவில்லையா?

 

மலையன்
(சிரித்தபடி)

 

எவ்வளவு நாட்களுக்குத் தான் தப்பி ஓடுவது? நீங்கள் இப்போது போவது நல்லது. எங்கள் கதையை வெளியில் இருக்கும் மக்களிடம் சொல்லுங்கள்.

 

தென்னதரையன் பாதையில் இறங்கிச் செல்கிறான். நாகை, வழுதி இருவரும் பின்னால் செல்கிறார்கள்.

 

தருமன்

 

மலையா, உண்மையைச் சொல். பாண்டிய இளவரசன் எங்கே?

 

மலையன்

 

என்னை நம்பு. இந்தக் கோவிலில் இளவரசனை மறைத்து வைக்க முடியுமா?

 

தருமன்

 

உங்கள் மக்கள் வேறு எங்காவது மறைத்து வைத்திருக்கலாம் இல்லையா?

 

மலையன்

 

அப்பா, தருமா, நீ இப்போது அந்த மேடைக்கு எதிரே பார்த்தாயே, அவ்வளவு பேர் தான் இருக்கிறோம். இந்த மலை நாட்டில், ஏன், இந்தப் பெரும் பாரத நாட்டில் எங்கள் சரித்திரம் முடிந்து விட்டது. மீதி இருப்பவர்கள் வாழ்வா, சாவா என்று போராடுகிறோம். இந்த நேரத்தில் பொய் சொல்வேனா?

 

தருமன் ஒரு படி இறங்குகிறான்.

 

மலையன்

 

உன்னிடம் ஒன்று சொல்கிறேன். சாத்தூருக்குத் தெற்கே ஒரு சத்திரத்தில், ஒரு குழந்தையைச் சிலர் எடுத்துச் செல்வதைப் பார்த்தோம். அது இளவரசன் தானா என்று தெரியாது.

 

தருமன்
(திகைப்புடன் நின்று)

 

யார் அவர்கள்?

 

மலையன்

 

எனக்குத் தெரியாது. நாங்கள் அன்று அதிகாலைச் சத்திரத்துக்கு வரும் போது, அவர்கள் இரவு தங்கிக் கிளம்பி விட்டார்கள்.
வெளிப்புறம் – ஒரு ஓடையின் அருகே, காட்டில் – இரவு

 

ஒரு ஓடையின் அருகில் உள்ள மேட்டில் செடிகள் படர்ந்திருக்கின்றன. அவற்றை ஒரு கை மெல்ல விலக்குகிறது. பிறகு வழுதியின் முகம் தெரிகிறது. தூரத்தில் சில சத்தங்கள் கேட்கின்றன. வீரர்கள் கத்துவதும், அலறுவதும் கேட்கிறது.ஓடை இருட்டில் கருப்பாக இருக்கிறது. செடிகளை விலக்கிக் கொண்டு தென்னதரையன், வழுதி, தருமன், நாகை, நால்வரும் கரையில் நிற்கிறார்கள்.
திடீரென்று பின்னால் இருந்து பெரும் ஓலம் ஒன்று கேட்கிறது. அது மலைகளில் முட்டி எதிரொலிக்கிறது.
அவர்கள் நால்வரும் ஓடையைத் தாண்டிச் செல்கிறார்கள்.
வெளிப்புறம் – குள்ளர்களின் கோவில் – பகல்

 

அந்தப் பழங்காலக் கோவில் எரிந்து புகைகிறது. அங்கங்கே குள்ளர்களின் சடலங்கள் விழுந்து கிடக்கின்றன. புகையினூடே மூன்று வீரர்கள் நடந்து வருகிறார்கள். வீரர்கள் இரு பக்கமும் பார்த்தவாறே வருகிறார்கள். அவர்களில் முன்னால் வருபவன் அச்சுதன். அந்த வீரர்களில் ஒருவன் முந்திய நாள் நாம் குற்றாலீஸ்வரர் கோவிலில் பார்த்தவன். காட்டில் குள்ளர்களைக் கொடுமை செய்தவன்.

 

அச்சுதன்

 

மாறா, யாரும் தப்பவில்லையே?

 

மாறன்

 

இல்லை, தலைவரே. கோவிலைச் சுற்றி வளைத்து இருந்தோம்.

 

அச்சுதன் மெதுவாக நடக்கிறான். ஒரு சந்நிதியின் வாசலில் ஒரு உடுக்கு ஒன்று உருண்டு கிடக்கிறது. அதைப் பார்த்தவாறு செல்கிறான்.

 

மாறன்

 

ஐயா, நேற்று இவர்கள் இடத்தை கண்டுபிடிக்கத் தூண்டில் போட்டோம் இல்லையா? அப்பொழுது எங்களுக்கே தெரியாமல் இரண்டு பேர் காட்டில் இருந்தார்கள். கணவனும் மனைவியும் என்று நினைக்கிறேன். குற்றாலீஸ்வரர் கோவிலில் கூட அவர்களைப் பார்த்தேன்.

 

அச்சுதன்

 

யார் அவர்கள்?

 

மாறன்

 

எங்களுக்குத் தெரியாது. நீங்கள் அனுப்பி வைத்த ஒற்றர்கள் என்று நினைத்தோம்.

 

அச்சுதன்

 

மர்ம மனிதர்கள்

 

கோவிலின் விழுந்த கொடிக் கம்பத்தின் அருகே வந்து நிற்கிறார்கள்.

 

அச்சுதன்
(சிரித்தபடி)

 

அந்த முட்டாள் தென்னதரையன் வேறு இங்கே சுற்றிக் கொண்டிருக்கிறான்.

 

மாறன்

 

ஐயா, அவரை முடித்து விட உங்கள் கட்டளைக்குத் தான் காத்திருக்கிறோம்.

 

அச்சுதன்

 

இன்னும் அவன் நேரம் வரவில்லை
உள்புறம் – தென்காசியில் வழுதியின் வீடு – பகல்

 

திரையில் இருட்டு. பல குழப்பமான சத்தங்கள். வாளோடு வாள் மோதும் சத்தம். குதிரைகளின் அலறல். அவற்றிடையே ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. மற்ற சத்தங்கள் பெரிதாகி அந்த அழுகுரல் அமுங்கிப் போகிறது.
வெளிச்சம். ஒரு அறையின் மேற்கூரை தெரிகிறது. தென்னதரையன் மெதுவாக எழுந்து உட்கார்கிறான். ஒரு ஜன்னல் வழியே வெளியே தெரு தெரிகிறது. நல்ல வெயில். பலர் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தென்னதரையன் தலையை உதறி எழுந்து அமர்கிறான். கொல்லையில் பேச்சுச் சத்தம் கேட்கிறது. தென்னதரையன் குனிந்தவாறே அங்கே செல்கிறான்.

 

(CONTINUOUS)

 

வெளிப்புறம் – வழுதியின் வீட்டுக் கொல்லைப்புறம் – பகல்

 

ஒரு திறந்த கிணறு. அதனருகே ஒரு புன்னை மரம். சுற்றிப் பல செடி கொடிகள். கீழே துவைக்கப் போட்டு வைத்திருந்த கற்களில் தருமன், நாகை, வழுதி மூவரும் அமர்ந்திருக்கிறார்கள்.மூவரும் தென்னதரையனைத் திரும்பிப் பார்க்கிறார்கள்.
தென்னதரையன் கீழே இறங்கி வருகிறான்.

 

வழுதி

 

அரையரே, இவர்களுக்கு அரசாங்க வேலையின் சிரமங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். நம் சோதிடனுக்கு வாள் சுற்ற வேண்டுமாம்.

 

தருமன்

 

ஐயா, நன்றாகத் தூங்கினீர்களா?

 

தென்னதரையன் ஒன்றும் பேசாமல் பக்கத்தில் உள்ள மண் கலயத்தில் இருந்து தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்துக் கொள்கிறான். பிறகு தலையைச் சிலுப்பிக் கொண்டு தருமனைப் பார்க்கிறான்.

 

தென்னதரையன்

 

சோதிடா, இளவரசன் எங்கே?

 

தருமனும் நாகையும் அவனையே பார்க்கிறார்கள்.

 

தென்னதரையன்

 

சொல், இளவரசன் வடக்கே போனதாக ஏன் பொய் சொன்னாய்?

 

தருமன்

 

ஐயா, நான் சொன்னது பொய் தான். ஆனால்..

 

அவன் முடிப்பதற்குள் தென்னதரையன் அவனை நோக்கிப் பாய்ந்து வருகிறான். வழுதி மின்னல் வேகத்தில் எழுந்து தென்னதரையனைத் தடுக்கிறான். நாகை எழுந்து தருமன் முன்னால் நிற்கிறாள்.

 

தென்னதரையன்
(கத்துகிறான்)

 

அற்ப நாயே!

 

வழுதியை விட்டுத் திமிருகிறான்.

 

வழுதியின் அம்மாவின் குரல்

 

என்ன சத்தம்?

 

வீட்டின் உள்ளிருந்து எட்டிப் பார்க்கிறாள்.தென்னதரையன் தளர்ந்து நிற்கிறான். வழுதி அவனை விட்டு,

 

வழுதி

 

அம்மா, ஒன்றுமில்லை. கிளித்தட்டு விளையாடுகிறோம்.

 

அவன் அம்மா உள்ளே போகிறாள். தென்னதரையன் அப்படியே நிற்கிறான்.

 

நாகை

 

நாங்கள் சொல்வதை சற்றுப் பொறுமையுடன் கேளுங்கள்.

 

தருமன் எழுந்து நின்று அவளை நகர்த்துகிறான்.

 

தருமன்

 

ஐயா, என்னை அடியுங்கள். கொல்லுங்கள். இளவரசனை உங்கள் கையில் கொடுத்த பின்னால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.

 

தென்னதரையன் மெளனமாக இருக்கிறான்.

 

வெளிப்புறம் – வழுதியின் வீட்டுக் கொல்லைப்புறம், LATER – பகல்

 

மஞ்சள் வெயில் மாலை நேரம். வெளியே கோவில் மணி அடிக்கிறது.
தென்னதரையன் தலையைக் குனிந்தவாறே அமர்ந்திருக்கிறான்.

 

தென்னதரையன்

 

நெல்வேலியில் அரண்மனையின் அருகே தாமிரபரணி நதி ஓடுகிறது. அங்கே, மாலை வேளைகளில் அரசர போவார். ராணியும் உடனிருப்பாள். இளவரசன் நடக்க முயற்சி செய்வான். மெதுவாக நடந்து வந்து என் காலைக் கட்டிக் கொள்வான். “தூக்கு, தூக்கு” என்று கையைக் காட்டுவான்.

 

அவன் நிமிர்ந்து பார்க்கும் போது அவன் கண்கள் கலங்கி இருக்கின்றன.

 

(CONTD)
இப்பொழுது எங்கிருக்கிறானோ?

 

(beat)
நேற்றுக் குள்ளர்களின் படுகொலையை பார்க்கும் பொழுது, இந்த அரசனை நினைத்து எனக்கே அவமானமாக இருக்கிறது.

 

(beat)
சோதிடா, உன்மேல் எனக்குக் கோபம் இல்லை. நீ இது வரை சாதித்ததே பெரிய விஷயம்.ஆனால் இப்போது இந்தப் போரை நாம் நிறுத்தியே தீர வேண்டும். பாண்டியரின் மண்ணாசைக்கு இந்த நாடு பலியாகக் கூடாது.
இளவரசன் எங்கே? உனக்கு என்ன தோன்றுகிறது?

 

தருமன்

 

ஐயா, மலையன் என்னும் அந்தக் குள்ளன் நேற்று என்னிடம் ஒன்று சொன்னான். யாரோ சிலர் ஒரு குழந்தையோடு ஓட்டஞ்சத்திரத்தை விட்டுச் செல்வதைப் பார்த்திருக்கிறான்.

 

வழுதி

 

யார் அவர்கள்? இது நடந்து பத்து நாட்கள் ஆகிறதே? அவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது?

 

தருமன்

 

சில வழிகள் இருக்கின்றன.

 

வழுதி

 

மறுபடி மை போட்டுப் பார்க்கப் போகிறாயா?

 

தருமன் சிரிக்கிறான்.

 

தருமன்

 

ஒரு காவிக் கட்டி இருக்கிறதா?
வெளிப்புறம் – வழுதி வீட்டின் கொல்லைப்புறம் – பகல்

 

காவிக் கட்டியால் வெளுத்த தரையில் வரைபடம் ஒன்று தெரிகிறது. ஒரு புள்ளியில் வட்டெழுத்தில் ஏதோ எழுதியிருக்கிறது. இன்னொரு புள்ளியில், மறுபடி வட்டெழுத்தில் எழுதியிருக்கிறது. வடக்கே ஒரு கோடு நீள்கிறது. தெற்கே இரு பாதைகள் பிரிகின்றன.தருமனின் குரல் கேட்கிறது. கேட்கக், கேட்க, கோடுகளை உற்றுப் பார்க்கும் நால்வரும் தெரிகிறார்கள். துவைக்கும் கற்களில் அமர்ந்து குனிந்து கோடுகளைப் பார்க்கிறார்கள்.

 

தருமன்

 

முதலாம் ஜாமம் முடியும் நேரம், கூத்துப் பார்த்து விட்டு எல்லோரும் தூங்க போனோம். மூன்றாம் ஜாமம் தொடங்கும் பொழுது இளவரசன் காணாமல் போய் விட்டான். அவனை எடுத்துச் சென்றவர்கள் சாத்தூரில் இருந்து கிளம்பி விட்டார்கள் என்று வைத்து கொள்வோம்.

 

தென்னதரையன்

 

மறுநாள் காலையில் அவர்களை சத்திரத்தில் குள்ளர்கள் பார்த்து இருக்கிறார்கள், இல்லையா?

 

வழுதி

 

குள்ளர்கள் சொல்வது உண்மையாக இருந்தால் சரி.

 

தருமன்

 

அதை விடுங்கள். இந்த படத்தைக் கவனியுங்கள். சாத்தூரில் இருந்து சத்திரத்திற்கு இரண்டு காத தூரம். நடந்து சென்றால் ஒரு சாமத்திற்கு மேல் நேரம் ஆகும். குள்ளர்கள் மூன்றாம் சாமம் கிளம்பி சத்திரத்திற்கு வந்து சேரும் பொழுது அங்கே இளவரசன் ஏற்கனவே இருந்திருக்கிறான். கூத்து முடிந்த சிறிது நேரத்திலேயே இளவரசனை திருடியவர்கள் கிளம்பியிருக்க வேண்டும்.

 

வழுதி

 

இரு, இரு. அந்தக் களப்பிரர் ஒற்றனை நினைவிருக்கிறதா? அவன் தான் இளவரசனைத் தூக்கி சென்றிருக்க வேண்டும்.

 

தென்னதரையன்

 

வழுதி, அவன் ஒற்றனே அல்ல.

 

தருமன், நாகை, வழுதி மூவரும் அரையனை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

 

வழுதி

 

பின்னே?

 

தென்னதரையன்

 

அவன் அச்சுதனின் ஆள் தான்.

 

சுற்றி எல்லோரையும் பார்க்கிறான்.

 

தென்னதரையன்

 

நீங்கள் யாரும் பாண்டியரின் ராச தந்திரத்தை புரிந்து கொள்ளவில்லை. பாண்டியருக்கு மதுரை வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய அவர் துணிந்திருக்கிறார். அதற்குத் தான் இந்த மலைகளில் இரண்டு வருடமாகப் படை சேர்த்து வருகிறார். அதே போல, தாம் போகும் இடங்களில் எல்லாம் களப்பிரர் தம்மை துரத்துவது போல ஒரு மாயையை உருவாக்குகிறார்.

 

நாகை

 

அதற்காக அவருடைய ஆளே அவரை தாக்குவது போலக் காட்டுவாரா என்ன?

 

தென்னதரையன்

 

அதில் என்ன சந்தேகம்? பாண்டியர் களப்பிரரைத் தாக்க ஒரு காரணம் வேண்டாமா?

 

வழுதி

 

அடடா. இது தெரியாமல் அந்த ஒற்றனைப் போய் நானும் நான்கு போடு போட்டேனே.

 

தென்னதரையன்

 

அவன் வெறும் அம்பு. அவ்வளவு தான். எல்லோரும் நம்ப வேண்டுமானால் அவனைக் கொலை கூடச் செய்யத் தயங்க மாட்டான் அச்சுதன்.

 

தருமன்
(மேலே பார்த்து)

 

இருட்டி கொண்டு வருகிறது. நாளை பேசலாமா?

 

தென்னதரையன்

 

இல்லை, இல்லை. நீ சொல்ல வந்ததைச் சொல்லி முடி.

 

நாகை

 

சாத்தூரில் இருந்து இரவு கிளம்பி சத்திரத்தில் போய் இருந்தவர்கள் யார்? தருமா, உனக்கு தெரிகிறதா என்ன?

 

தருமன்

 

அந்தப் பொதிகை மலைச் சித்தர்கள் நினைவிருக்கிறதா? அவர்கள் சத்திரத்தில் இருந்ததாக அங்கே ஒருவன் சொன்னான்.

 

வழுதி

 

அட. இப்போது குள்ளர்களை விட்டு சித்தர்களைப் பிடித்துக் கொண்டாயா?

 

தென்னதரையன்

 

தருமா, நீ சொல்வதை நம்ப முடியவில்லையே.

 

வழுதி

 

முதலில் இப்படி உட்கார்ந்து பேசுவதே எனக்குப் பிடிக்கவில்லை. நேராகப் போவோம். அந்தச் சித்தர்கள் தாடியைப் பிடித்து உலுக்குவோம். தானாகப் பதில் சொல்வார்கள்.

 

நாகை

 

இப்போது அந்தச் சித்தர்களை தேடி எங்கே போவது?

 

தென்னதரையன் எழுந்து நிற்கிறான்.

 

தென்னதரையன்

 

தருமா, உனக்கு அவர்கள் மேல் தான் சந்தேகமா?

 

தருமன்

 

ஆம். அவர்கள் தான் என்று எனக்குத் தோன்றுகிறது. எனக்கு இந்தக் கடைசி வாய்ப்புக் கொடுங்கள்.

 

தென்னதரையன்

 

நெல்வேலியில் அவர்களுடைய மடம் இருக்கிறது. முதலில் அங்கு போய்ப் பார்ப்போம். பொதிகை மலைக்கு இங்கிருந்து போவது எளிதல்ல.
(beat)

 

நம்முடைய தவறுகளுக்கு நெல்வேலியில் மன்னிப்புக் கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

 

வெளிப்புறம் – ஒரு நந்தவனம் – பகல்

 

ஒரு குழந்தையின் சிரிப்புச் சத்தம் கேட்கிறது. பச்சைப் பசேல் என்று செடி கொடிகள். அவற்றின் இடையே உள்ள கல் பாதை தெரிகிறது. மறுபடியும் குழந்தையின் சிரிப்புச் சத்தம். பாதையில் ஒரு வயதுக் குழந்தை ஒன்று நடந்து வருகிறது. தள்ளாடித் தள்ளாடி சிரித்தவாறே வருகிறது. சிரித்தபடி பின்னால் திரும்பிப் பார்க்கிறது.
பிம்பம் மங்கலாகிறது. குழந்தையின் முகம், புல்வெளி யாவும் மறைகிறது.

 

உள்புறம் – அரண்மனையில் ராணியின் படுக்கை அறை – பகல்

 

விடியும் நேரம்.நல்ல பெரிய அறை. ஒரு ஓரத்தில் விளக்குகள் மங்கலாக எரிகின்றன. அறைக்கு நடுவே ஒரு பெரிய கட்டில். மங்கலான வெளிச்சத்தில் மெதுவாக எழுந்து அமர்கிறாள் பாண்டியன் மனைவி.
அருகே பாண்டியன் தூங்குகிறான். அவன் நெஞ்சு ஏறி இறங்குகிறது. ராணி மெதுவாக எழுந்து நடந்து மாடத்தில் வந்து நிற்கிறாள். லேசாக விடியும் நேரம். பறவைகள் கத்துகின்றன. மாடத்திற்கு வெளியே தோட்டம் தெரிகிறது. சற்றுத் தள்ளி தாமிரபரணி ஆறு பளபளக்கிறது.
பின்னால் இருந்து ஒரு குரல் கேட்கிறது.

 

பாண்டியன்

 

அடுத்த முறை நாம் சந்திக்கும் பொழுது நீ மதுரையின் அரசியாகி இருப்பாய்

 

ராணி மெளனமாக இருக்கிறாள்.

 

பாண்டியன்

 

வைகையின் புதுப் புனலில் இந்த வருடம் ஆடிப் பெருக்கு கொண்டாடலாம்

 

ராணி

 

மன்னர் நம் மகனை, இளவரசனை மறந்து விட்டது போல இருக்கிறது?

 

பாண்டியன்

 

யுத்தம் சில கவலைகளை மறக்கச் செய்கிறது

 

ராணி அவனைத் திரும்பிப் பார்க்கிறாள். அவன் நேராக தாமிரபரணியைப் பார்த்தவாறு நிற்கிறான்

 

பாண்டியன்

 

கேள் ராணி. தஞ்சாவூரிலும், காஞ்சியிலும், ஏன், சேர நாட்டில் இருந்தும் கூட நம்மை கவனமாகப் பார்த்து வருகிறார்கள். எல்லோருக்கும் கவலை. நெடுஞ்செழியன் வம்சத்தை நினைத்துப் பயம் . நீயே பார், இந்தத் தமிழ் நாடே நம்மைப் பார்த்து நடுங்கும்

 

ராணி

 

அரசே, நம்முடைய சொந்தக் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த நேரத்தில் யார் நம்மைப் பார்த்து நடுங்கினால் என்ன?

 

பாண்டியன் ராணியின் தோள் மேலே கை வைக்கிறான். கையை மெதுவாக இறுக்குகிறான். ராணி வலியில் நகர்கிறாள்.

 

பாண்டியன்

 

ருக்மிணி, கவனமாக இரு. மதுரையில் பல அரசகுமாரிகள் ஆயத்தமாக இருக்கிறார்கள்

 

பாண்டியன் திரும்புகிறான். பிறகு நின்று,

 

பாண்டியன்

 

இன்று நாம் பார்ப்பது கடைசியாக இருக்கலாம். நாளை போர்களம் செல்கிறேன்

 

ராணி மெளனமாக வெளியே பார்த்தபடி இருக்கிறாள். பாண்டியன் மாடத்தில் இருந்து உள்ளே செல்கிறான்.

 

வெளிப்புறம் – நெல்வேலிச் சந்தைத் தெரு, சித்தர் மேடம் எதிரே – பகல்

 

சந்தைத் தெரு. பலர் வந்து போகிறார்கள். தெருவின் இரு பக்கத்திலும் சில வணிகர்கள் கடை விரித்து இருக்கிறார்கள். பல வீடுகள் அடுத்தடுத்து தெரிகின்றன. அவற்றில் ஒன்றின் கதவுகள் பெரிதாக இருக்கின்றன. அந்த வீட்டின் எதிர்ப் பக்கம் தருமன், நாகை, வழுதி, தென்னதரையன் நால்வரும் நிற்கிறார்கள்.

 

வழுதி

 

முற்றும் துறந்தவர்கள் வீடு பிரமாதமாக இருக்கிறது.

 

தென்னதரையன்

 

ராணிக்கு சித்தர்கள் பேரில் ஒரு அபிமானம். இந்த வீடு அவர்கள் நிவந்தமாகக் கொடுத்தது

 

நாகை

 

இப்பொழுது என்ன செய்வது? நேராக உள்ளே போய் குழந்தை எங்கே என்று கேட்டால் கொடுத்து விடுவார்களா?

 

தருமன்

 

அதில் தவறு ஒன்றுமில்லை. யாராலும் உண்மையை முகத்தில் இருந்து மறைக்க முடியாது. முகத்திற்கு நேராக “நீ திருடன்” என்று சொல்லிப் பார்க்கப் போகிறேன்.

 

வழுதி

 

சரி. நீ அடி வாங்கிக் கொண்டு வரும் வரை நாங்கள் இங்கேயே இருக்கிறோம்.

 

தருமனும் நாகையும் தெருவை மெதுவாகத் தாண்டி சித்தர்களின் மட வாசலில் போய் நிற்கிறார்கள்.”டோக் டோக் டோக்” என்று கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. அந்தப் பெரிய கதவில் ஒரு சிறு கதவு ஒன்று திறக்கிறது. ஒரு இளம் வாலிபன் ஒருவன் நிற்கிறான்.

 

வாலிபன்

 

யாரைப் பார்க்க வேண்டும்?

 

தருமன்

 

அய்யா, சித்தர்களை தேடி சாத்தூரில் இருந்து வருகிறோம்.

 

வாலிபன்

 

உள்ளே வாருங்கள்.

 

தருமனும் நாகையும் கதவில் குனிந்து செல்கிறார்கள்.

 

உள்புறம் – சித்தர் மடத்தின் உள்பகுதி – பகல்

 

ஒரு பெரிய முற்றத்தின் வழியாக அவர்கள் போகிறார்கள். இரண்டு பக்கமும் தாழ்வாரத்தில் சிலர் அமர்ந்திருக்கிறார்கள். சிலரைச் சுற்றிப் பல இலைகளும் வேர்களும் இருக்கின்றன. வேறு சிலர் ஓலைச் சுவடி வைத்து கொண்டு முணுமுணுக்கிறார்கள்.அந்த முற்றத்தின் முடிவில் ஒரு பெரிய திண்ணை. வாலிபன் அவர்களை அதன் அருகே அழைத்துச் சென்று நிறுத்துகிறான்.

 

வாலிபன்

 

இங்கே சற்று நேரம் அமர்ந்திருங்கள். எங்கள் பெருமான் வருவார்.

 

தருமனும் நாகையும் அமர்ந்து சுற்றிப் பார்க்கிறார்கள்.

 

நாகை

 

மருத்துவம் படிக்கிறார்கள் போலிருக்கிறது. பச்சிலையும் மூலிகையுமாய் வாசனை அடிக்கிறது.

 

தருமன்

 

மந்திரமும் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். திருமூலர் வானத்தில் ஏறி பறப்பாராம்.

 

பெரிய சித்தர் ஒருவர் உள்ளிருந்து வெளியே வருகிறார். வெள்ளை உடை அணிந்திருக்கிறார். நெற்றியில் குங்குமப் பொட்டு. அவருடன் நடு வயதுச் சித்தர், மதிவாணர், வருகிறார். தருமனையும் நாகையையும் உற்று பார்த்தபடி திண்ணைக்கு அருகே நிற்கிறார். பெரியவர் திண்ணையில் உட்கார்ந்து கொள்கிறார்.

 

பெரிய சித்தர்

 

வணக்கம் தம்பி. என்ன காரியமாக வந்தாய்?

 

தருமன்

 

அய்யா, நான் தருமன். இவள் என் மனைவி. சாத்தூரில் இருந்து வருகிறோம். ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்

 

பெரிய சித்தர்

 

சாத்தூரில் இருந்தா? பாண்டியர் படை அந்த வழியாக அல்லவா போகிறது? ஊரில் எல்லோரும் நலம் தானே?

 

தருமன்

 

நான் அங்கிருந்து கிளம்பி பத்து நாட்களுக்கு மேல் ஆகிறது. சித்தர்களைப் பார்க்கத் தான் ஊரில் இருந்து புறப்பட்டோம்.

 

மதிவாணர் தொண்டையைக் கனைக்கிறார்.

 

மதிவாணர்

 

சாத்தூரில் உன் தொழில் என்ன தருமா?

 

தருமன்

 

அய்யா, நான் ஒரு சோதிடன்

 

மதிவாணர்

 

நாங்கள் சோதிடத்தில் நம்புவதில்லை. இருந்தாலும் சரி. என்ன உதவி வேண்டும், சொல்.

 

தருமன்

 

அய்யா, நான் உதவி கேட்டு வரவில்லை. உதவி செய்ய வந்தேன்.

 

மதிவாணர் சிரிக்கிறார்.

 

பெரிய சித்தர்

 

என்ன தான் சொல்கிறான் கேட்போம். மதிவாணா, சற்றுப் பொறு.

 

தருமன்

 

அய்யா, பத்து நாட்களுக்கு முன்னால் நான் ஓட்டஞ்சத்திரத்தில் இருந்தேன். அப்பொழுது நான்கைந்து சித்தர்கள் என்னுடன் சத்திரத்தில் தங்கினார்கள்.

 

தருமன் நிறுத்தி விட்டு அவர்களைக் கூர்ந்து பார்க்கிறான். சித்தர் முக பாவத்தில் மாற்றம் எதுவுமில்லை.

 

மதிவாணர்

 

மேலே சொல்.

 

தருமன்

 

அவர்களுடன் ஒரு குழந்தை இருந்தது. குழந்தைக்குச் சொந்தமான பொருள் ஒன்றை விட்டு விட்டுக் கிளம்பி விட்டார்கள். அதைக் கொடுத்து விடலாம் என்று வந்தேன்

 

பெரிய சித்தர்

 

குழந்தையா? மதிவாணா, நீ சாத்தூர் சென்றிருந்தாய் அல்லவா? குழந்தை எதுவும் எடுத்து வந்தாயா என்ன? ஏதாவது பெண் சகவாசமா?

 

மதிவாணர்
(முகத்தில் குழப்பத்துடன்)

 

அப்படி ஒன்றும் இல்லை. சோதிடா, நீ சொல்வது புரியவில்லையே.

 

தருமன்

 

அய்யா, நீங்கள் சத்திரத்தில் தங்கினீர்கள் அல்லவா?

 

மதிவாணர்

 

ஆமாம்

 

தருமன்

 

உங்களிடம் ஒரு குழந்தை இருந்ததே.

 

மதிவாணர்
(சலிப்புடன்)

 

இதோ பார். தாடி வைத்தவர்கள் எல்லோரும் சித்தர்கள் கிடையாது. வேறு யாரையோ பார்த்திருக்கிறாய். இதற்காகவா சாத்தூரில் இருந்து இவ்வளவு தூரம் வந்தாய்?

 

பெரிய சித்தர்

 

பராசக்தி! சோதிடா, தப்பான இடத்திற்கு வந்து விட்டாயே அப்பா. நாங்கள் திருமணம் புரிவதில்லை. குழந்தையைக் கையில் கொடுத்தால் என்ன செய்வது என்று கூட எங்களுக்குத் தெரியாது.

 

தருமன் ஏமாற்றத்துடன் நாகையை பார்க்கிறான்.

 

மதிவாணர்
(கை கூப்பி)

 

இன்னும் சற்று நேரத்தில் உச்சி ஜாமப் பூஜை உண்டு. இருந்து பார்த்து விட்டுப் போகிறீர்களா?

 

தருமன் யோசிக்கிறான். பிறகு,

 

தருமன்

 

சரி ஐயா. பார்த்து விட்டுப் போகிறோம்

 

மதிவாணர் அந்த வாலிபனை அருகே அழைக்கிறார். அவனைத் தனியாக அழைத்துப் போய் ஏதோ சொல்கிறார்பெரியவர் கண்ணை மூடி தியானத்தில் அமர்கிறார். மதிவாண சித்தர் உள்ளே போகிறார்.
வாலிபன் அவர்களிடம் வருகிறான்.

 

வாலிபன்

 

என்னுடன் வாருங்கள். மடத்தைச் சுற்றிக் காட்டுகிறேன்

 

வாலிபன் ஒவ்வொரு அறையாக அவர்களை அழைத்துச் செல்கிறான்.

 

வாலிபன்

 

பொதிகை மலையில் அருமருந்தான மூலிகைகள் இருக்கின்றன. அங்கே பெரும் சித்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு வாரமும் அவற்றை இங்கே அனுப்பி வைப்பார்கள். நாங்களே மருந்துகள் செய்கிறோம்.

 

ஒரு அறையைத் திறந்து காட்டுகிறான். அது முழுவதும் ஓலைச் சுவடிகள்.

 

வாலிபன்

 

பழங்காலச் சித்தர்களின் மருந்துகள் எல்லாம் இங்கே இருக்கின்றன. பித்தம், கபம், வாதம் என்று மூன்று நாடிகள்..

 

நாகை
(குறுக்கிட்டு)

 

இங்கே எந்தச் சித்தருக்குப் பறக்க வரும்?

 

வாலிபன்
(குழப்பத்துடன்)

 

பறக்கவா?

 

தருமன்

 

நாகை சும்மா இரு. அய்யா, நாங்களே சுற்றி பார்த்துக் கொள்கிறோம். உங்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும்.

 

வாலிபன் தலையாட்டி விட்டுச் செல்கிறான். அவன் சென்ற பின்

 

நாகை

 

இளவரசன் இந்த அறைகளில் எதிலாவது இருப்பானோ? தேடிப் பார்க்கலாம் வா.

 

தருமன்
(மெதுவாக நடந்து கொண்டே)

 

இல்லை, நாகை, இரு. மடத்துக்குள்ளே வருகிற எல்லோரையும் இப்படிச் சுற்றிக் காட்டுவார்கள் என்றா நினைக்கிறாய்?

 

நாகை

 

வேண்டுமென்றே நம்மை இப்படி அனுப்புகிறார்களோ?

 

தருமன்

 

அப்படித் தான் தோன்றுகிறது. இளவரசன் இங்கே இருந்தால் நம்மை இப்படி அனுப்பி வைக்க மாட்டார்கள். நம் சந்தேகத்தைத் தணிக்க இப்படிச் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

 

வெளியே இன்னொரு தாழ்வாரத்தில் நிற்கிறார்கள்.

 

நாகை

 

தருமா, ஒரு வேளை உண்மையாகவே இவர்களுக்கும் இளவரசனுக்கும் சம்பந்தம் இல்லையோ என்னவோ. அவர்கள் முகத்தில் கள்ளத்தனம் இல்லை.

 

தருமன்

 

இருக்கலாம். இருந்தாலும் என்னிடம் இன்னும் ஒரே ஒரு தந்திரம் இருக்கிறது.

 

உள்புறம் – சித்தர் மடத்தின் உள்ளே பூஜை அறை – பகல்

 

ஒரு பெரிய அறையில் பலர் நிற்கிறார்கள். தீபங்களின் மஞ்சள் வெளிச்சம். “டான் டான்” என்று மணி அடிக்கிறது. ஒரு சிறு அம்மன் சிலைக்குப் பூஜை நடக்கிறது. பெரிய சித்தர் உரத்து மந்திரங்கள் ஏதோ சொல்கிறார். “போற்றி போற்றி” என்று எல்லோரும் கத்துகிறார்கள்.மணியடித்து முடிந்ததும் பெரிய சித்தர் கையில் தீபத்தை எடுத்துச் சுற்றி வருகிறார். தருமனும் நாகையும் அவர் காலைத் தொட்டுக்
கும்பிட்டு வெளியே வருகிறார்கள்.
பெரிய சித்தர் தீபத்தை வாலிபன் கையில் கொடுத்து விட்டு அவரும் வெளியே வருகிறார்.
தருமன் பின்னால் இருந்து குரல் கேட்கிறது.

 

மதிவாணர்

 

தருமா, சித்தர்களுடன் சேர்ந்து கொள்கிறாயா?

 

தருமன் திரும்பி சித்தரைப் பார்க்கிறான். புன்னகையுடன்,

 

தருமன்

 

என் மனைவியையும் சேர்த்துக் கொண்டால்…

 

மதிவாணர் சிரிக்கிறார்.

 

மதிவாணர்

 

நாங்கள் எவ்வளவோ சித்திகளை அடைந்திருக்கிறோம். ஆனால் பெண்களைக் கண்டால் இன்னும் கை, கால் நடுங்கத் தான் செய்கிறது. நீ தான் உண்மையில் சித்தன்.

 

தருமன்

 

அய்யா, நீங்கள் சிலைகளை வழிபாடு செய்ய மாட்டீர்கள் என்று கேள்விப்பட்டேன்

 

மதிவாணர்

 

நல்ல கேள்வி கேட்டாய். ஒரு காலத்தில் அப்படித் தான் இருந்தோம். இப்பொழுது அரச குடும்பத்தின் பார்வை எங்கள் பக்கம் விழுந்து விட்டது. குடிமக்களும் வருகிறார்கள். சிலை வேண்டாம் என்றால் எங்களுக்கே பூஜை செய்யத் தொடங்கி விடுவார்கள்.

 

மூவரும் சற்று நேரம் தாழ்வாரத்தில் போவோர் வருவோரைப் பார்க்கிறார்கள்.

 

தருமன்

 

அய்யா, நீங்கள் இப்படிக் கஷ்டப்பட்டு மூலிகை வைத்து மருத்துவம் செய்கிறீர்கள். எங்கள் ஊரில் பூசாரி மந்திரம் ஒன்று சொல்கிறார். வியாதி பறந்து போய் விடுகிறது.

 

மதிவாணர்

 

நாங்கள் மந்திரங்களையும் நம்புவதில்லை.

 

நாகை

 

அது என்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள்? மந்திரங்களால் நடக்காதது ஒன்றுமே இல்லை. தருமனே ஒரு மந்திரவாதி தான்.

 

தருமன்

 

நாகை, சும்மா இரு. அய்யா, நாங்கள் கிளம்புகிறோம்.

 

மதிவாணர்

 

நானும் வாசல் வரையில் வருகிறேன்.

 

மூவரும் நடக்கிறார்கள்

 

மதிவாணர்

 

அப்படி என்ன தான் மந்திரம் போடுவாய், தருமா?

 

தருமன்

 

ஊரில் பசு மாடு காணோம், நகை காணோம் என்றால் என்னிடம் வருவார்கள். இதெல்லாம் சிறு பிசாசுகளின் வேலை. அவற்றை மந்திரத்தால் கட்டி போட்டால் உண்மையை தானாகச் சொல்லும்.

 

சித்தர் சிரிக்கிறார்.

 

தருமன்

 

அய்யா, உண்மையாகத் தான் சொல்கிறேன்

 

மதிவாணர்

 

பிசாசுகளுடன் பேசுவாயா?

 

நாகை

 

பிரமாதமாகப் பேசுவார். ஏன், இந்த வீட்டை கண்டுபிடித்ததே அப்படித் தான்.

 

மதிவாணர் சட்டென்று நிற்கிறார்.

 

தருமன்

 

நாகை, சும்மா இரு.

 

மடத்தின் வாசல் கதவை மெதுவாகத் திறக்கிறார் சித்தர்.

 

மதிவாணர்

 

எந்தப் பிசாசு உனக்கு இந்த வீட்டை போய் காட்டியது? அதுவும் தப்புத் தப்பாகச் சொல்லி இருக்கிறது.

 

தருமன்

 

அய்யா , பிசாசுகளுக்குப் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. குழந்தைக்குச் சொந்தமான பொருள் ஒன்று கிடைத்தது இல்லையா? அதைக் காட்டிக் கேட்டேன். இந்த வீடு தான் கண்ணெதிரே வந்தது.

 

மதிவாணர் உரத்துச் சிரிக்கிறார்.

 

மதிவாணர்

 

தருமா, நீ பெரிய சாமர்த்தியக்காரன் தான்.

 

தருமன் அவரையே பார்த்தபடி நிற்கிறான்.

 

மதிவாணர்

 

அப்படி அந்தக் குழந்தை விட்டுச் சென்ற பொருள் என்ன? உன்னிடம் இருக்கிறதா?

 

தருமன் தன் அரைப் பைக்குள் கையை விட்டு இளவரசனின் வெள்ளி அரை ஞானை எடுக்கிறான்.
மதிவாணர் அதை அவன் கையில் இருந்து வாங்கிப் பார்க்கிறார். அவர் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. தருமனிடம் அதைத் திருப்பிக் கொடுக்கிறார்.

 

மதிவாணர்

 

சீக்கிரத்தில் இதை உரியவரிடம் சேர்ப்பாய், கவலைப்படாதே.

 

தருமன் வெளியே போகிறான். அவன் பின்னால் கதவு மூடுகிறது.

 

வெளிப்புறம் – சந்தைத் தெரு. சித்தர் மடத்திற்கு வெளியே – பகல்

 

தருமனும் நாகையும் வெளியே சாலையில் நிற்கிறார்கள். நண்பகல் நேரம். சுற்றிப் பார்கிறார்கள். வெளியே பலர் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
இருவரும் அந்தத் தெருவில் இருந்து பிரதான சாலைக்கு வருகிறார்கள்.

 

நாகை

 

அது என்ன சத்தம்?

 

தூரத்தில் துந்துபியின் ஓலி கேட்கிறது. அத்துடன் “தம் தம்” என்று முரசின் ஓலி கேட்கிறது.சாலையில் நடப்பவர்கள் நின்று கேட்கிறார்கள். முரசின் ஓலி பெரிதாகிக் கொண்டே வருகிறது.
இருபக்கமும் கூட்டம் சேர்கிறது. சில குதிரைகள் வேகமாக அவர்களைத் தாண்டிச் செல்கின்றன. சற்று தூரத்தில் ஒரு யானை அசைந்தபடி வருகிறது. அதன் மேல் முரசு அடிப்பவன் அமர்ந்திருக்கிறான். பின்னால் இன்னும் சில யானைகள். முரசுகள் பல சேர்ந்து அடிக்கின்றன. தருமனும் நாகையும் நல்ல கூட்டத்தின் இடையே நிற்கிறார்கள்.
பின்னால் பெரும் குதிரை வரிசை ஒன்று வருகிறது. பாண்டிய மன்னன் ஒரு வெள்ளை நிறப் போர்க்குதிரையில் அமர்ந்து முன்னால் வருகிறான். முரசுகள் தொடர்ந்து அடிக்கின்றன.
கூட்டத்தில் சிலர் “களப்பிரன் ஒழிக”, “பாண்டியர் நெடுங்கோன் வாழ்க” என்று கத்துகிறார்கள். குதிரை வரிசை மெதுவாகத் தாண்டிச் செல்கிறது.
சற்று தூரத்தில் சாலையில் இருந்து திரும்பும் இன்னொரு தெருவின் வாசலில் தென்னதரையனும் வழுதியும் நிற்கிறார்கள். குதிரை படையின் வரிசை முடியும் பொழுது அச்சுதனும் இன்னும் சில வீரர்களும் அந்தத் தெருவைத் தாண்டிச் செல்கிறார்கள்.
அச்சுதன் திரும்பி நேராக அரையனைப் பார்க்கிறான். தென்னதரையன் திரும்பிக் கொள்கிறான். பிறகு வேகமாக தெருவின் உள்ளே செல்கிறான். வழுதியும் அவனுடன் வருகிறான்.
வழுதி

 

அச்சுதர் நம்மைப் பார்த்து விட்டார் என்று தோன்றுகிறது.

 

தென்னதரையன் பதில் சொல்லாமல் தெருவின் முடிவுக்கு வருகிறான். குதிரை குளம்பொலி கேட்கிறது. இரு வீரர்கள் அவனை நோக்கி வருகிறார்கள்.தென்னதரையன் திகைத்து நிற்கிறான்.

 

வழுதி

 

அரையரே, இப்படி வாருங்கள்

 

தென்னதரையன் திரும்புகிறான்

 

குதிரை வீரன்

 

அடேய் நில்.

 

வழுதி தென்னதரையனின் கையைப் பிடித்தபடி திரும்பி ஓடுகிறான். குதிரைச் சத்தம் பின்னால் கேட்கிறது. இருவரும் வேகமாக ஓடுகிறார்கள். வலது பக்கம் சிறு சந்து ஒன்றில் புகுந்து, திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறார்கள். பின்னால் குதிரை வரும் சத்தம் நின்று விடுகிறது, இளைக்க இளைக்க சாலையோரம் உள்ள ஒரு மரத்திற்குப் பின்புறம் நிற்கிறார்கள்.”தம் தம்” என்று முரசுச் சத்தம் இன்னும் கேட்கிறது. தென்னதரையன் தலை குனிந்தபடி நிற்கிறான்.
SERIES OF SHOTS – பகல்முரசுச் சத்தம் மட்டும் கேட்கிறது.

 

A) வெளிப்புறம் – அரண்மனைச் சாலை – பகல்

 

தருமனும் நாகையும் கூட்டத்தின் நடுவே நிற்கிறார்கள். கூட்டத்தின் சத்தம் மறைந்து வெறும் முரசு சத்தம் மட்டும் பெரிதாகக் கேட்கிறது.CUT TO:

 

B) வெளிப்புறம் – அரண்மனை மாடம் – பகல்

 

ராணி ஒரு மாடத்தில் நின்று கீழே பார்க்கிறாள். முரசுச் சத்தம் தொடர்கிறது.CUT TO:

 

C) உள்புறம் – சித்தர் மடம் – பகல்

 

பெரிய சித்தர், மடத்தில் கண் மூடி அமர்ந்திருக்கிறார். முரசுச் சத்தம் தொடர்கிறது.CUT TO:
வெளிப்புறம் – அரண்மனைச் சாலையில் ஊர்வலத்தின் முன்னால் – பகல்

 

பாண்டிய மன்னன் புன்னகைத்தபடி குதிரையில் அமர்ந்திருக்கிறான்

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.