ராஸ்ப்பெர்ரிகள்

அப்பா இந்த நோட்டுப்புத்தகத்தை எனக்குக் கொடுத்தார்.  நான் தரைவிரிப்பு மேல் விளையாடிக் கொண்டிருந்தபோது, படுக்கையிலிருந்த அவர் சொன்னார், நீ வாழ்வை வரையத்தான் இது, பின்னால் நீ எழுதக் கற்றுக் கொண்ட பின், எழுதவும்தான், இதைச் சொல்கையில் அவர் கண்கள் ஆழ்ந்த குழி போலிருந்தன.
நான் அவரிடம் பாதசாரிகள் குறுக்கே கடக்குமிடத்தில் தெருவைக் கடந்த பறவையைப் பற்றியும், உணர்கொம்புகளோடு இருந்த சிவப்புச் சிலந்தி பற்றியும் சொன்னதுதான், எனக்கு இந்த நோட்டுப்புத்தகத்தை அவர் கொடுக்கக் காரணம். சிலந்திகளுக்கு உணர்கொம்புகள் கிடையாது, எனச் சொல்கையில் அவர் முறுவலித்தார், நான் சொன்னேன், இதற்கு இருந்தது என்று, அது ஒரு வேளை வேறேதோ பூச்சியாக இருக்கும், என்றார் அவர், அதற்கு நான் சொன்னேன், அப்படி இல்லை, அது சிலந்திதான், அவளிடமே நான் கேட்டிருந்தேன், அவள் தன் தலையிலிருந்து வெளியே நீட்டிய கருப்பு ஊசிகள் போல இருந்த உணர்கொம்புகளை அசைத்தாள், அது அவள் ஒரு சிலந்திதான் என்பதை எனக்கு உறுதி செய்தது என்றேன். நேற்று, ஆர்ந்த முனைப்புள்ள கைகளோடு, அவர் என்னிடம் இந்த நோட்டுப்புத்தகத்தைக் கொடுத்துச் சொன்னார், இந்த பிரபஞ்சத்தின் ஜோடிக் கண்களில் ஒரு ஜோடி என்னுடையவை, அவற்றால் நான் பார்க்கும் விஷயங்களைப் பதிவு செய்ய வேண்டியது என் கடமை என்றும், அவர் பல வருடங்கள் முன்பு பார்த்தாரே சாண்டா க்ளௌஸ் போல ஆடை அணிந்து கொண்டு,  கைப்பிடியில் சிறு மணி இணை ந்த ப்ளாஸ்டிக் கோப்பை ஒன்றை ஆட்டியபடி, ஏதாவது சில்லறை இருந்தால், கொஞ்சம்தான் சில்லறை என்றாலும் கொடுங்க, நானும் கிருஸ்துமஸைப் பார்க்கட்டும் என்று ஒரு குருட்டு மனிதர் கேட்டாரே அதுபோல நான் தெருவில் கேட்பனவற்றையும் பதிவு செய்ய வேண்டியது என் கடமை என்றார்.
அம்மா வீட்டின் பின்கட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறாள், வளர்ந்தவர்கள் விளையாடுவார்களே அதுபோலக் கணினி ஒன்றில் விளையாடுகிறாள். முன்னறையிலோ, படுக்கை அறையிலோ அப்பாவை விட்டு விட்டு நீங்கி, அவள் தன் படிப்பறை என்று அழைக்கிற அறைக்கு மறுபடி போன போது, அவள் அங்கு எதையும் படித்து நான் பார்த்ததில்லை, என்னிடம் அவள் நூறாவது தடவையாக -அதுதான் முதல் தடவை என்பது போல- தன் பண்ணையைப் பற்றியும், அதில் அவள் வளர்த்திருக்கிற பொருட்கள் பற்றியும் சொல்கிறாள், பிறகு அவள் நூறாவது தடவையாக எனக்கு விளக்குகிறாள், இல்லை, நாம் அந்த ராஸ்ப்பெர்ரிகளைச் சாப்பிட முடியாது என்று, ஏனெனில் நான் நூறாவது தடவையாக, நாம் அவற்றைச் சாப்பிட முடியுமா எனறு கேட்டிருந்தேன். நான் அவள் ஏன் ஆத்திரமடைகிறாள் என்று கேட்கிறேன், அப்போது அவள் என்னிடம் அப்பாவிடம் போ என்கிறாள். அவளிடம் அவளுடைய பண்ணையைப் பற்றியோ, அதிலுள்ள மிருகங்களைப் பற்றியோ கேட்காமல் நான் அப்பாவிடம் போகிற போது, அவள் குரல் மாறுகிறது, நான் அந்த படிப்பறையை விட்டுப் போகுமுன் அவள் ஏதோ சொல்கிறாள், அது என் ஐஸ்க்ரீமை டயானாவுக்குக் கொடுக்க  நான் மறுக்கும்போது டயானாவின் குரல் எப்படி இருக்குமோ அதே போல இருக்கிறது.
அப்பா தூங்கிக் கொண்டிருக்கிறார். நான் இன்று பார்த்ததை, தெருவில் நடந்து போகும் ஒரு அழுக்கான பெண்ணை, அப்பா பூஃபா பூஃபா என்று அழைப்பாரே அந்த விதமானவளை, வரைகிறேன். அவள் முறுவலித்துக் கொண்டிருந்தாள், அவள் முகத்தில் சூரிய ஒளி பட்டிருந்தது. அவள் ஒரு ஊதா நிற காலணிக் கயிற்றைக் கண்டெடுத்த அதே கணத்தில் நான் அவளைப் பார்த்திருக்கிறேன், அவள் புன்சிரிப்பு செய்தாள், கீழே குந்தி அமர்ந்து அதைப் பொறுக்கி எடுத்தாள், தன் முழங்காலைச் சுற்றிக் கட்டிக் கொண்டாள். அவளுடைய கால்கள் எங்கும் முழுதாகவே காலணிக் கயிறுகளும், பட்டை நாடாக்களும் கட்டப்பட்டிருந்தன, அவை அவளைப் போலவே அழுக்காகவும் இருந்தன. ஆனால் வண்ணமயமாக இருந்தன. அவளுடைய தலைமுடி எனக்கு அம்மாவின் முடியை நினைவூட்டியது, ஆனால் அழுக்காக இருந்தது. அதுதான் நான் வரைந்த முதல் படம். அப்பா விழித்துக் கொண்டபோது நான் அவரிடம் அதைக் காட்டினேன். வான்கோழி மாமிச சாண்ட்விச்சுகள் – பான்ஸ் கான் பாவோ- விற்கும் அந்தக் கடைக்கருகில், நான் பஸ்ஸிலிருந்து அவளைப்  பார்த்தேன் என்று அவரிடம் விளக்கும்போது அவர் மெல்லச் சிரித்தார், என் தலைமுடியைத் தடவிக் கொடுத்தார். அப்பாவுடைய சொற்கள் உலர்ந்த வாடை கொண்டவை, அவருடைய உதடுகளில் இருக்கும் உலர்ந்த தோலைப் போல. அப்போது நான் எழுந்து போனேன், அம்மாவிடமும் அதைக் காட்ட, அவளோ முனங்கினாள், திரும்பி என்னை ஒரு வினாடிககும் குறைவாக, அரை வினாடிக்கும் குறைவாகப் பார்த்தாள்.
அம்மா விளையாடிக் கொண்டிருக்கிறாள், திரையில் சில பசுக்கள் குரல் கொடுத்துக் கூப்பிடுகின்றன. என் நேரத்தை விரயம் செய்யாமலிரு என்று அம்மா என்னிடம் சொல்கிறாள், அவள் எழுநூறு லிட்டர்கள் பால் உற்பத்தி செய்ய வேண்டுமாம். அம்மா திரையிலிருக்கும் பசுக்களிடம் பால் கறக்கிறாள். இந்தப் பாலைக் கிட்டத்திலிருக்கும் நகரத்துக்கு அனுப்ப வேண்டும், இல்லையேல் பணத்தை இழப்பேன், என்கிறாள், என் படத்தைப் பார்த்ததன் பலன், தான் ஆயிரக்கணக்கில் நஷ்டப்படப் போவதாகச் சொல்கிறாள், அதுவும் அதை நீ அப்பாவுக்காகத்தான் வரைந்தாய் என்று சொல்கையில் அவள் தொனி டயானாவின் தொனியாய் ஒலிக்கிறது. நான் அங்கிருந்து போவதுதான் நல்லது என்று நினைத்துப் படிப்பறையை விட்டுச் செல்ல முயலும்போது, தன் பசுக்களை ஒரு நிமிடம் விட்டு விட்டு என்னிடம் அவள் இங்கேயே இரு என்று சொல்கிறாள், அப்பாவைத் தொல்லை செய்யாதே, என்று சொல்பவள் என்னைக் கதவைச் சாத்தச் சொல்கிறாள். எனக்குக் கதவை மூடுவது பிடிக்கவில்லை, அம்மாவின் புகை என்னை உபாதை செய்கிறது, என் கண்களைக் கடுக்கச் செய்கிறது, என்னை மோசமாக நாற வைக்கிறது. நான் ஒரு தடவை அம்மாவிடம் இந்த நாற்றம் எனக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னேன், பள்ளிக்கூடத்தில் மற்ற சிறுவர்கள் என்னைக் கேலி செய்கிறார்கள், என்னைக் கண்டால் மூக்குகளைப் பிடித்துக் கொள்கிறார்கள், ஒரு சுத்திகரிப்புத் தொழிலாளி போல என் வாடை இருக்கிறதென்று சொல்கிறார்கள், நான் சுத்தித் தொழிலாளியின் மகள் என்று உரக்கக் கத்துகிறார்களென்றும் சொன்னேன். அப்போது அம்மா கணினியில் இருக்கும் தன் பண்ணையை விட்டு விட்டு எழுந்து வருகிறாள், என் எதிரே உயரமாகத் தெரிகிறாள், பிரும்மாண்டமாக இருக்கிறாள். நான் அவளை விரும்பவில்லை என்று உரக்கக் கத்துகிறாள், இப்போது தெரிய வருவதோ எனக்கு அவளுடைய வாசனை கூடப் பிடிக்கவில்லை என்பதும், எனக்கு வேண்டியதெல்லாம் அப்பாவோடு இருப்பதுதான் என்பதும், எனவே என்னிடம் சொல்கிறாள், போ போ, வெளியே போய்த் தரை விரிப்பிலேயே  நிரந்தரமாக இரு. நான் வெளியே ஓடுகிறேன். அதைத்தான் அம்மா சொல்கிறாள், ஆனால் நான் அவளிடம் நான் வரைந்த படத்தைக் காட்டவே விரும்பினேன், அதனால் அந்த பெரிய அறைக்குச் செல்லும் நடையிலேயே சில ராஸ்ப்பெர்ரிகளை வேகமாக வரைகிறேன், படிப்பறைக்குத் திரும்பிப் போய் அவளிடம் சொல்கிறேன், இது அவள் படம்தான், முழுதும் வண்ண நாடாக்களைக் கொண்டது, அவளை முடியைப் பார் என்று சொல்கிறேன். அப்போது அம்மா முறுவலிக்கிறாள், பல வாரங்களில் முதல் தடவையாக, சிரித்தவண்ணம் என் தலையை வருடுகிறாள். நான் கதவை மூடுகிறேன், அந்தப் புகையை என் உடுப்புகளில் ஒட்டிக் கொள்ள விடுகிறேன். பசுக்கள் குரல் கொடுக்கின்றன. இது சனிக்கிழமை, எனவே எனக்குப் பள்ளிக்கூடம் இல்லை.

Denise Phé-Funchal_Spanish_Guatemala_Authors_Writersஸ்பானிஷ் மூலம்: டெனீஸ் ஃபெ–ஃபூன்ஷால்;
2014 ஆம் வருடம் இங்கிலிஷுக்கு மொழி பெயர்ப்பு: லீஸா டில்மான்;
தமிழாக்கம்: மைத்ரேயன்.
நியு ரைட்டிங் ஃப்ரம் குவாதெமாலா என்ற சஞ்சிகையின் அக்டோபர், 2014 இதழிலிருந்து பெறப்பட்டது. வோர்ட்ஸ் விதவுட் பார்டர்ஸ் பத்திரிகையில் மறுபதிப்பானது.
டெனீஸ் ஃபெ– ஃபூன்ஷால் (குவாதெமாலா, பி-1977) ஓர் எழுத்தாளர், சமூகவியலாளர். ஊனிவர்ஸிடாட் டெல் வாலெ டெ குவாதெமாலா என்ற பல்கலையில் தற்போது பேராசிரியராகப் பணியாற்றுகிறார். லாஸ் ஃப்ளொரேஸ் (2007) என்ற நாவல், மானுவல் டெல் மூன்டோ பாரையீஸோ (2010) என்ற தலைப்பிட்ட கவிதைத் தொகுப்பு, மேலும் பொய்னாஸ் கொஸ்டும்ப்ரெஸ் (2011) என்கிற சிறுகதைத் தொகுப்பும் இவர் எழுதியவை.
மொழிபெயர்ப்பாளர் லீஸா டில்மான் ஸ்பானிஷிலிருந்தும், காடலான் மொழியிலிருந்தும் இங்கிலிஷுக்கு மொழி பெயர்ப்பவர். அட்லாண்டா மாநகரில் உள்ள எமொரி பல்கலையில் போதனையாளர்.
இங்கிலிஷிலிருந்து தமிழாக்கம் செய்த மைத்ரேயன் சொல்வனம் பதிப்புக் குழு உறுப்பினர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.