பன்னிரண்டு ஆண்டுகள் தலைமறைவாக வாழும் பாண்டவர்களைப் பற்றிய செய்தி ஐந்து இரவுகளுக்குள் தெரிய வந்தால் அவர்களுக்குரிய பாதி அரசாட்சியைத் தருவேன் என்ற துரியோதனனின் நிபந்தனையை முன் வைத்து நாடகம் அமைவதால் பஞ்சராத்ரம் (ஐந்து இரவுகள்) என்னும் தலைப்பு நாடகத்துக்கு மிகப் பொருத்தம் ஆகிறது.
இந்நாடகம் ரூபகம் என்பதின் கீழ் சமவகாரா என்னும் பிரிவில் அமைகிறது. மகாபாரதப் பின்புலத்தில் அமைந்த ஆறு நாடகங்களுள் இது ஒன்று மட்டும் மூன்று அங்கங்களைக் கொண்டதாகும்.
நாடகத்தின் முதல் காட்சியில் துரியோதனன் செய்த மிகப் பெரிய யாகத்தை சூத்திரதாரன் அறிவித்த படி வர மூன்று அந்தணர்கள் யாகத்தின் உயர்வையும் , துரியோதனனின் சிறப்பையும் பேசுகின்றனர். அவையில் உள்ள அனைவரும் அவனைப் பாராட்டிப் பேசுவதான நிலையில் நாடகம் தொடங்குகிறது. பீஶ்மர், துரோணர் மற்ற பெரியவர்கள் அனைவரும் அவனைப் புகழ்கின்றனர். இளம் வயதில் பெற்றோர் குழந்தைகளை குருவிடம் ஒப்படைத்து விட்டால் அவன் செய்யும் தவறுகளுக்கு குருதான் பழிக்கப் படுவார் எனவும் தன் மாணவன் இந்த யாகத்தின் மூலம் தனக்குப் புகழைத் தேடித் தந்து விட்டான் என்றும் குரு துரோணர் சொல்கிறார். தனக்கு அவன் குருதட்சிணை தர வேண்டும் எனகிறார். எதையும் அவருக்குத் தருவதாக உறுதி அளித்து விட்டு விருப்பத்தைச் சொல்லுமாறு வேண்டுகிறான். அஞ்ஞாத வாசம் மேற்கொண்டு இருக்க இடமின்றி தவிக்கும் பாண்டவர்களுக்கு உரிய பாதி ராஜ்யத்தை அவர்களுக்குத் தந்து விட வேண்டும் என்பதுதான் தனது தட்சிணை என்கிறார். தனக்காக அதைக் கேட்கவில்லை என்பதையும் தெளிவு படுத்துகிறார். சந்தர்ப்பத்தை அவர் பயன் படுத்திக் கொள்வதாக சகுனியின் குற்றச் சாட்டு அமைகிறது. துரியோதனன் மற்றவர்களோடு ஆலோசனை செய்கிறான். தலைமறைவான வாழ்க்கை நடத்தும் பாண்டவர்களைப் பற்றிய செய்தி ஐந்து இரவுக்குள் தெரிந்தால் தான் பாதி ராஜ்யம் தரப்படும் என சகுனி ஆலோசனை கூறுகிறான். பன்னிரண்டு ஆண்டுகள் கௌரவர்களால் கண்டு பிடிக்க முடியாத போது ஐந்து இரவுகளுக்குள் எப்படி சாத்தியம் ஆக முடியும் என்று துரோணருக்குத் தோன்றுகிறது.
அப்போது விராடன் நாட்டிலிருந்து தூதன் வருகிறான். தன் யாகத்திற்கு விராடன் வந்தானா என்று துரியோதனன் கேட்கும் போது .விராடனன் துன்பத்தில் ஆழ்ந்தி ருப்பதாகச் சொல்கின்றனர். விராடனுடைய நாட்டில் நூறு கீசகர்களை யாரோ கொன்று விட்டதாகவும், எந்த ஆயுதமும் இல்லாமல் வெறும் கையால் யாரோ அதைச் செய்திருப்பதாகவும் செய்தி கிடைக்கிறது. பீஶ்மருக்கு அது பீமனின் செயல்தான் என்று உடனடியாகத் தெரிந்து விடுகிறது. எனவே துரோணரிடம் நிபந்தனைககு ஒப்புக் கொள்ள வேண்டுகிறார்..குழப்பம் அடையும் குருவுக்கு இது பீமனைத் தவிர யாராலும் செய்ய முடியாத செயல் எனத் தனியாகப் புரிய வைக்கிறார். நிபந்தனைக்கு ஒப்புக் கொள்வதாக துரோணர் சொல்கிறார். அவையில் எல்லோர் முன்பும் துரியோதனன் பாதி ராஜ்யம் தர ஒப்புக் கொண்டதைச் சொல்லி அவர்கள் முன்பு அவனிடம் உறுதி கேட்கிறார்.அவனும் ஒப்புக் கொள்கிறான். விராடன் நாட்டில் இருந்து கால்நடைகளைக் கவரும் சண்டைக்குத் தயாராகும் படி கௌரவர் படைக்கு பீஶ்மர் ஆணையிடுகிறார். தன் சீடனான விராடன் நாட்டோடு சண்டை எதற்கு என்று ரகசியமாக துரோணர் கேட்கும் போது தன் நோக்கம் சண்டை அல்ல என்பதையும், பாண்டவர் இருக்கும் இடம் கண்டு பிடிப்பது மட்டுமே என்றும் மற்றவர் அறியாமல் பீஶ்மர் சொல்கிறார்.
விராடன் பிறந்த நாளைக் கொண்டாடும் நிகழ்வோடு இரண்டாம் அங்கம் தொடங்குகிறது. ஆயர்களும் ,ஆய்ச்சியர்களும் மன்னனைப் போற்றி பாடியும் ஆடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்துகின்றனர்.அப்போது கால்நடை களை திருடர்கள் போல வந்து திரிதராட்டிரன் மகன்கள் வந்து வேட்டை ஆடுவதாக ஒரு வீரன் வந்து சொல்கிறான். விராடனால் நம்ப இயல வில்லை. யாகத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதற்காக துரியோதனன் தன் மீது கோபம் கொண்டானா? அல்லது பாண்டவர்கள் மீது நான் காட்டும் ரகசிய அன்பை அறிந்து விட்டானா? கீசக சகோதர்கள் இறந்திருக்கும் நேரத்தில் என்னால் எப்படி அங்கு போயிருக்க முடியும்? எப்படியானாலும் நான் அவர்களை எதிர்த்தாக வேண்டும். என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறான். பிறகு பகவானிடம் (யுதிஶ்டிரன்) கௌரவர்கள் செயலைச் சொல்கிறான். அப்போது பீஶ்மர் உள்ளிட்ட அனைவரும் சண்டைக்கு வந்திருப்பதாக ஒரு வீரன் சொல்கிறான். தன்னுடைய தேரில் அவ்விடத் திற்குப் போக விராடன் தயாராகிறான்.அதற்குள் மகன் உத்தரா பிருகன் னளையோடு (அர்ஜுனன்) விராடனின் தேரில் எதிரிகளைச் சந்திக்கச் சென்று விட்டதாக தேரோட்டி தெரிவிக்கிறான். அந்தச் செய்தியைக் கேட்ட பகவான் இனியொரு குழப்பமும் இல்லை என்று விராடனைச் சமாதானம் செய்கிறான். சிறிது நேரத்தில் பீஶ்மர். ,துரோணர், கர்ணன் உள்ளிட்ட அனைவரும் தங்கள் முயற்சியில் தோற்று ஒடி விட்டதாகவும் சிறுவன் அபிமன்யு மட்டும் பயமின்றிச் சண்டை போட்டதாகவும் உத்தரா வெற்றியோடு திரும்புவதாகவும் செய்தி வருகிறது. போர் பற்றிய எல்லா விளக்கமும் தர பிருகன்னளை அழைக்கப் படுகிறாள். தான் செய்த போர் திறத்தை பிருகன்னளை விளக்கு கிறாள். அதே நேரத்தில் அபிமன்யு அரண்மனைச் சமையல்காரனால் (பீமன்) பிடிபட்டதாகச் செய்தி வருகிறது. பிருகன்னளைக்கு மட்டும் பீமன்தான் அபிமன்யுவைப் பிடித்தது என்பது தெரியும்.விராடன் அபிமன்யுவை அவைக்கு அழைத்து வரச் சொல்கிறான்.பிருகன்னளை அவனை அழைத்து வருகிறாள்.. அங்கு பாண்டவர் வெவ்வேறு வேடங்களில் இருந்து செயல்பட்ட அனைத்து செய்தியும் தெரிய வருகிறது.விராடன் தன் மகள் உத்திராவை அபிம்ன்யுவுக்கு மணம் செய்து தர முடிவு செய்கிறான்,.இந்தச் செய்தியை பீஶ்மர் முதலானவர்களுக்குத் தெரிவிக்க உத்தரா அனுப்பப் படுகிறான்.
அபிமன்யு பிடிபட்ட விதத்தை அவன் தேரோட்டி கௌரவர் படைக்குச் சொல் வதாக மூன்றாம் அங்கம் அமைகிறது, எதிரி வெறும் கையால் அபிமன்யு வைப் பிடித்து விட்டதை விவரிக்கிறான்.இச்செய்தி துரியோதனனுக்கு வருத் தம் தருகிறது. பெரியவர்கள் சண்டையில் அபிமன்யு சிக்கிக் கொண்டதை அவன் விரும்பவில்லை.அபிமன்யுவைப் பிடித்தவன் பீமனாகத்தான் இருப்பான் என்று பீஶ்மருக்குத் தெரிகிறது.அந்த நேரத்தில் அங்கு வரும் பீஶ்மரின் தேரோட்டி தேரைத் தாக்கிய அம்பை அவரிடம் தருகிறான்..அதில் அர்ஜுனனின் பெயர் பொறிக்கப் பட்டிருக்கிறது.சகுனி இதை நம்பாத நிலையில் துரியோதனன் தான் பாண்டவர்களை தான் நேரடியாகச் சந்திக்க வேண்டும் என்கிறான். அப்போது விராடனின் மகன் தூதுச் செய்தியோடு அங்கு வருகிறான்.தான் யுதிஶ்டிரனிடம் இருந்து பீஶ்மருக்கு . அபிமன்யு – உத்திராவின் திருமணச் செய்தி கொண்டு வந்திருப்பதாகத் தெரிவிக்கிறான் . ஐந்து இரவுகள் முடிவதற்குள் விரும்பிய செய்தி கிடைத்து விட்டதாக துரோணர் மகிழ்கிறார். துரியோதனன். பாண்டவர்கள் முன்பு ஆண்ட ராஜ்யத்தை அவர்களுக்குத் தருவதாகச் சொல்கிறான். தன் உறுதி மொழியை நிறைவேற்றுகிறான். பாண்டவர்களுக்கு நாடு கிடைக்க அனைவரும் மகிழ்ந்ததாக நாடகம் முடிகிறது.’ நம் அரசன் இந்த பூமியை நன்றாக ஆளட்டும் “ என்ற பரத வாக்ய வாழ்த்தோடு நாடகம் முடிகிறது
மகாபாரதப் பின்புல நாடகங்கள் யுத்த வீரம், தர்ம வீரம், தான வீரம் என்ற ரீதியில் பாஸனால் அமைக்கப் பட்டு உள்ளன. கருணைப் பார்வையும் அங்கங்கே இடம் பெறுகிறது. பயம்,ரௌத்ரம் , அற்புதம், ஹாஸ்யம் என்ற கலவையையும் பார்க்க முடிகிறது. மகாபாரதத்தைப் பின்புலமாகக் கொண்ட மத்யம வ்யாயோகம், ,தூத கடோத்கஜம் ,தூத வாக்யம், கர்ணபாரம், உறுபங்கம் பஞ்சராத்ரம் என்ற ஆறு நாடகங்களில் முதல் ஐந்து ஓரங்க நாடகங்களாகவும் பஞ்சராத்ரம் மூன்று அங்கங்களைக் கொண்ட சமவாகரா என்ற பிரிவில் அடங்கும் நாடகமாகவும் உள்ளன சமவகாரா இலக்கண முறையின் அடிப்படியில் நாடகம் நீண்ட முகவுரையோடு (விஸ்கமபகா) தொடங்குகிறது. பதினெட்டுக்கும் மேற்பட்ட பாத்திரங்கள் இடம் பெறுகின்றன.
பஞ்சராத்ரம் மகாபாரத விராட பருவத்தை அடிப்படையாகக் கொண்டது. எனினும் பாஸன் தன் நாடகப் போக்கிற்கு ஏற்றபடி பல மாற்றங்கள் செய்துள்ளான். துரியோதனனின் யாகம், அபிமன்யுவை சிறைப் பிடித்தல் ஆகியவை மூல கதையில் இல்லை. இங்கு சகுனி மட்டுமே வில்லனாக காட்டப் பட்டு உள்ளான். கர்ணன் இந்த நாடகத்தைப் பொறுத்த வரை இரக்கம் உடையவானாகவும், அமைதியை விரும்புபவனாகவும் சித்தரிக்கப் பட்டு இருக்கிறான். சிறுவன் அபிமன்யு தன் தந்தையையும், அவர் சகோதர் களையும் கண்டு பிடிக்க இயலாத காட்சி நாடக ஆசிரியனின் நகைச்சுவை கலந்த கற்பனையாகும்..இது நாடக ரசிகனைக் கவரும் அம்சமாக ஆசியர் கருதி இருக்கலாம் என விமரிசகர்கள் கருதுகின்றனர். கீசகர்களின் வதம் செய்தியாகச் சொல்லப்படுகிறதே தவிர விவரிக்கப் படவில்லை.இந்த நாடகம் போருக்கு முன்னால் நடக்கும் ஒரு முன்னோடி நிலை என்பதாகவும் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஒரு நாடகத்திற்கான கூறில் இசைக்கும், நடனத்திற்கும் பங்கு உண்டு என்பதை உறுதி செய்யும் வகையில் இந்நாடகத்தின் இரண்டாவது அங்கத்தில் விராட அரசனின் பிறந்த நாள் விழாவின் போது இடையர்கள் ஆடியும்,பாடியும் மகிழ்வதாக ஆசிரியர் காட்டி உள்ளார். மற்றொரு குறிப்பிடத் தக்க நிலையாக இந்த நாடகத்தில் துரியோதனன் வாக்குத் தவறாதவனாகவும் ,பெருந்தன்மை கொண்டவ னாகவும் இருக்கிறான். யாகத்தை நம்பிக்கையோடும், நல்ல எண்ணத்தோடும் நடத்துகிறான். ராஜ்யம் தரும் போது ஒரு சிறு முணுமுணுப்பும் இல்லாத வனாக பாண்டவர் பற்றி செய்தி அறிந்தவுடன் தன் உறுதி மொழியை நிறைவேற்றுகிறான். .
ஐந்து இரவுக்குள் பாண்டவர் இருக்கும் இடம் தெரிய வேண்டும் என்ற நிபந்தனையும் பாஸனின் நயமான கற்பனைதான்.துரோணர் கேட்கும் பாதி ராஜ்யம் பற்றிய செய்தி அல்லது கதை மகாபாரதத்திலோ ,மற்ற புராணக் கதைகளிலோ இல்லை
பதிமூன்று நாடகங்களிலும் நாடக முகவுரை பகுதி.ஸ்தாபனா என்று அழைக்கப் படுகிறது. பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் முன் அறிமுகம் (Prologue) என்ற பகுதியில் நாடக ஆசிரியன் பெயர், குறிப்பு ,பிற செய்திகள் ஆகியவற்றை கண்டிப்பாகப் பெற்று உள்ளது.ஆனால் பாஸனின் பதிமூன்று நாடகங்களிலும் அக்குறிப்பு இல்லை.இந்த நாடகங்கள் அனைத்தும் மேடை ஏற்றத்துக்கான அமைப்போடு இருப்பதும் குறிப்பிடத் தக்க அம்ச மாகும்.பாஸன் அந்த எண்ணத்தில் தான் நாடகங்களைப் படைத்ததான ஒரு கருத்தும் விமர்சகர்கள் இடையே இருக்கிறது.
விராட அரசனின் பணியாளன் பகவான் (யுதிஶ்டிரன்) விராடனின் தேரோட்டி பிருகன்னளை (அர்ஜுனன்) விராடனின் அரண்மனைச் சமையல்காரன் (பீமன்) என்று பாண்டவர்கள் மூவர் மட்டுமே இந்நாடகத்தில் இடம் பெறுகின்றனர். நகுலன்,சகாதேவன் பற்றிய செய்தி எதுவும் இல்லை மூல மகாபாரதத்தில் அவர்கள் தேரோட்டிகளாக இடம் பெற்று உள்ளனர்
அபிமன்யு தன் தந்தையையும்,அவர் சகோதர்களையும் அடையாளம் காண முடியாமல் விராடன் நாட்டில் சிறைப் பட்டு அவைக்குக் கொண்டு வரப் பட்ட போதான காட்சியிலிருந்து சில பகுதிகள் இங்கே:
அபி : (பீமனைப் பார்த்து தனக்குள்) இது யாராக இருக்க முடியும்? குறுகிய இடுப்பும், பரந்த தோளும்…. ஒரே கையால் என்னைத் தூக்கிக் கொண்டு வந்தாலும் எந்த துன்பமும் தரவில்லையே!
அங்கு பெண் தோற்றத்தில் இருக்கும் பிருகன்னளையைப் (அர்ஜுனன்) பார்த்து:
இது யார் ? பெண்கள் மட்டுமே அணியக் கூடிய நகைகளை அணிந்து அழகாக, பிரகாசமாக..
பிருக: அபிமன்யு ! அபிமன்யு!’
அபி : நான் உனக்கு அபிமன்யுவா ? தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் வீர்ர்களைப் பெயர் சொல்லி அழைப்பதா? இதுதான் இந்த நாட்டு நாகரிகமா? அழகா ? அல்லது இது என்னை சிறைப் படுத்தியதற்கான அவமான அடையாளப் பேச்சா?
பிருக: தாய் நலமா?
அபி : என்ன ? என் தாய் பற்றி எப்படி நீ கேட்கலாம்? நீ என்ன தர்மனா ? பீமனா? அல்லது அர்ஜுன்னா? என் தந்தையைப் போல அதிகாரமாகப் பேசுகிறாய்! எங்கள் வீட்டுப் பெண்களைப் பற்றி விசாரிக்கிறாய் !
பிருக: அபிமன்யுவே! தேவகி புதல்வன் நலமா?
அபி : என்ன? நீ அவர் பெயரையும் சொல்கிறாய்? ஆமாம்.உன்னோடு பழகி இருந்தால் அவரும் நலம்தான். (பீமனும்,அர்ஜுனனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுதல்)
என்ன ?இருவரும் என்னைக் கேலி செய்கிறீர்களா?
பிருக : இல்லையில்லை. அர்ஜுனன் தந்தை: ஜனார்தனன் மாமன்
அபி : போதும் இந்தப் பொருத்தமில்லாத பேச்சு!
இளம் வயதும் ,வேகமும் , வீரமும் அபிமன்யுவின் பேச்சில் வெளிப்படுமாறு உரையாடல் அமைக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது. ,
“உயர்ந்த மனிதர்கள் எந்த நாளிலும் தனக்கென எதையும் தேடிக் கொண்டதில்லை”
“உண்மை வாழும் போதுதான் மனிதன் வாழ்கிறான்.” என்பன போன்ற எளிமை உண்மையும் நாடக ரசிகனுக்குத் தரப்பட்டிருக்கிறது.
“பாஸன் மரணம் அடைந்து எத்தனையோ நூற்றாண்டுகளாகி விட்டன.
ஆனால் இன்னமும் தன் நாடகங்களால் வாழ்கிறான்.
காலத்தால் அழிக்க முடியாதவை அவை “
என்று தண்டி தன் ’அவனி சுந்தர கதாவில் ’பாஸனின் நாடகங்களைப் பற்றிச் சொல்லி இருப்பது நினைவுகூரத் தக்கது.