சுமித்ரா – அந்தம் இல் மனம்

சில மாதங்களுக்கு முன் படிக்கத் தொடங்கிய கல்பட்டா நாராயணின் ‘சுமித்ரா’ நாவல் (மலையாள மூலத்தில் “இத்ரமாத்ரம்”) நான் சமீபத்தில் படித்த வேறெந்தப் புனைவையும் விட மனதுக்கு மிக நெருக்கமாக அமைந்த ஒன்றாகிப்போனது. படித்து முடித்தபின்னும் மூடிய கண்ணுக்குள் நகரும் நிழல் உருவங்கள் போல கதையில் வரும் ஒவ்வொருவரும் மனதில் பதிந்துவிட்டனர். இந்த நாவலை “நல்லதொரு கதை” எனக் கொண்டாடுவதற்குக்கூட கொஞ்சம் குற்ற உணர்வாக உள்ளது. அந்தளவுக்கு இந்த நாவல் காட்டும் உலகம் கதை போலவே அல்ல; நம்மைச் சுற்றி நடப்பது போல உயிர்ப்போடு இருக்கிறது. மரணத்தின் வெறுமையையும் இன்மையின் மேன்மையையும் விசாரணை செய்யும் வாழ்க்கைக்கு நெருக்கமான படைப்பு. கதையாகவே இல்லை எனும்போது எவ்விதம் கொண்டாடுவது? நமக்கு நெருக்கமானவரின் மரணம் கொண்டாட வேண்டிய ஒன்று அல்லவே.
ஒரு சாவில் தொடங்கி எரியூட்டு நிகழ்வோடு முடியும் இந்தச் சின்ன நாவல் நிறமாலையை ஒத்திருக்கும் மனித இயல்புகளின் பலதரப்பட்ட வகைகளை மிகக் கச்சிதமாகக் காட்டுகிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் அறிமுகமாகும் கதாபாத்திரம் அந்த அத்தியாயத்தோடேயே முடிந்தும் விடுகிறது. ஆனாலும் ஒவ்வொரு சின்னஅத்தியாயத்திலும் மனித உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களையும் மீறிச் செயல்படும் பொத்திவைக்கப்பட்ட அன்பையும், மனித மனதின் அந்தரங்கமான உணர்வுகளையும் ஆழக்காட்டுகிறது.
sumithra
வயநாட்டு கல்பட்டாவில் தன் கணவன் வாசுதேவன், மகள் அனுசூயாவுடன் வசிக்கும் சுமித்ராவின் அக உலகம் அவளது மரணத்தைத் தொட்டுப் பிறரது நினைவுகளில் தொடர்கிறது. வாழ்க்கையில் நம்புவதற்கு இருக்கிறதைக் காட்டிலும் வாழ்வு முடியவே முடியாது எனும் பெருத்த நம்பிக்கை இருப்பதை யக்‌ஷனுக்கு பதிலாகச் சொல்வதோடு சுமித்ரா நாவல் தொடங்குகிறது. நம்பிக்கையின்மையில் கடப்பவர்களுக்குக் கூட நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் மரணத்தின் வருகை என்பது விலக்கிவைக்கப்பட்டதாக இருக்கிறது. வராது வந்துவிட்ட மரணத்தைப் பற்றி ஆழப்புரிந்துகொள்வதற்கு நமக்கு சில தூலப் பொருட்கள் அவசியமாகின்றன. முதலில் ஒருவரது உயிர் சந்தேகத்துக்கு இடமின்றி பிரிந்திருக்க வேண்டியது அவசியம். யாரோ ஒருவராக இல்லாமல் நமக்கு நெருக்கமானவராக இருந்தால் தாங்காத அழுத்தம் உண்டாகும். மரணவீட்டின் சூழல் அசாதாரணமானது. கல்பட்டா நாராயணன் கூறுவது போல “அங்கே பொய் சொல்வது சுலபமல்ல. தவறு செய்தவர்களின் தவறுகளின் சுமை ஏறும்.” பலருக்கு செய்து முடிக்க வேண்டிய காரியங்களை நினைவூட்டுகிறது. அல்லது செய்து முடித்த காரியத்தின் பரிமாணம் அசெளகரியமாக நினைவுக்கு வருகிறது.
சுமித்ராவின் மரணத்துக்குப் பிறகு அவளோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு வாழ்வு எவ்விதமான வரையறைக்கும் உட்படாமலாகிறது. சினேகத்துக்கு அளவுகள் அல்லாது ஆண் பெண் உறவுகள் பாவமாகக் கருதப்படாத நிலத்திற்குச் சொந்தக்காரி அவள். நாவலில் வரும் தாசனைப் போல களங்கமில்லாதவள். தாசனோடு பழகும் பெண்கள் அனைவரும் எல்லையில்லாத பாதுகாப்பை உணருகிறார்கள். ஒழுக்க மீறல்களையும், ஆழமான கசப்பையும், எல்லையற்ற அன்பையும் ஒன்றைப் போலவே மதிப்பவள் சுமித்ரா. தஸ்தாயெவ்ஸ்கி நாவலில் வரும் அதீத ஒழுக்க மீறல்களின் தரப்பிலிருந்து வெளிப்படும் உச்சகட்ட மனிதத்துவத்தை பிரதிபலிப்பவராக சுமித்ரா வருகிறார்.
கொஞ்சம் தப்பினாலும் தப்பர்த்தமாகக்கூடிய மெல்லிய பாதையில் சுமித்ராவின் நடத்தை இருக்கிறது. அதீதக் கருணையும் அன்பும் உணர்வு ரீதியாகச் சரியாகச் சென்று பிறரைச் சேர்வது எல்லாச் சமயங்களிலும் சாத்தியமல்ல. அவை சரியாகப் புரிந்துகொள்ள முடியாமலும் போகலாம். இரு மனிதர்களுக்கு இடையேயான உறவை ஒரு திருமண ஒப்பந்தம் போல திட்டவட்டமாக நிர்ணயிக்க முடியாத சூழலில், அதீத அன்பைக் காதலாகவும் ஏக்கமாகவும் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடியவர்கள் மிக அதிகமாக இருக்கும் சமூக அமைப்பு இது. ஆனால் சுமித்ரா காட்டும் காருண்யமும் அக்கறையும் தவறிழைப்பவரையும் மாற்றிவிடும் மனோபாவம் கொண்டதோ என எண்ண வைக்கிறது. சுமித்ராவின் தலையை அழுத்திவிடும் பொதுவாளுக்கு அவளது கருணை புரிந்திருப்பது சுமித்ராவின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அல்லது அவளது கருணையின் விளைவு என்றும் புரிந்துகொள்ளலாம். தலைவலி போக்க சுகமாக அழுத்திப் பிடிக்கும் பொதுவாளின் கையை எடுத்து உதடுகளில் வைத்து அழுத்தி அழுத்தி சுமித்ரா முத்தமிட்டபோது அவளது அளவற்ற காருண்யத்தை அவர் உணர்ந்ததை வேறு என்னவாகவும் புரிந்துகொள்ள முடியாது. அந்த அத்தியாயத்தின் தலைப்பு “எதிர்பார்ப்பின்மை”.
இந்தப் பகுதியைப் படித்தபோது நினைவுக்கு வந்த மற்றொரு படைப்பு சுந்தர ராமசாமியின் “மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்”. சுமித்ரா தனது வாழ்வைப் பற்றி ஒரு கதையோ கடிதமோ எழுதியிருந்தால் அது “மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்” போலத்தான் இருக்கும் எனவும் தோன்றியது. சுமித்ராவை விட சற்று கறாரான தர்க்கப் பார்வை கொண்டவள் மறியா. மற்றபடி சுமித்ரா தனது வாழ்வின் பக்கங்களை எழுதப்புகுந்தால் அது மறியாவின் அக உலகோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும். மறியா கலிஃபோர்னியாவில் வேறுவித சமூக யதார்த்தத்தோடு வாழ்வதால் தன்முனைப்போடு அவளது உலகோடு போராடுகிறாள். சுந்தர ராமசாமியும் தீவிரமான தர்க்கத்தோடு அதை ஆராய்கிறார். ஈரம் மிகுந்த வயநாட்டுப்பகுதியில் வாழும் சுமித்ராவுக்கு தடைகள் சமூக யதார்த்தத் தளத்தைச் சார்ந்தவை. கல்பட்டா நாராயணன் அதை கதை நெடுக உணர்த்திச் செல்கிறார். சுமித்ரா மற்றும் மறியாவின் அகப்போராட்டங்களை கவனிக்கும்போது பெண்களின் கருணையும் கனிவும் காலத்தையும் இடத்தையும் மீறிச் சென்று எல்லையற்ற அந்தரங்க உலத்தைத் தன்னுள் கொள்ளும் சக்தி படைத்ததாகத் தெரிகிறது.
“பாலபாடங்கள்” எனும் அத்தியாயத்தில் வயது காரணமாக அப்புகுருப்பு செய்யும் சில்மிஷங்களைப் பார்த்து அருகே படுத்திருக்கும் சுமித்ராவால் இயல்பாகச் சிரிக்கத்தான் முடிந்திருக்கிறது. பதின்மவயதில் வரும் பால் சார்ந்த திருகல்களையும் அவளால் மேன்மையாகவே எதிர்கொள்ள முடிந்திருக்கிறது. கீழ்மையான எண்ணங்களைக்கொண்டவர்களையும் அவர்களது குறைகளைக்கொண்டு மதிப்பவளாக இல்லாதிருக்கும் சுமித்ரா எத்தனை இரக்கமானவள். இதையும்மீறி சமூகப் பிரஞையோடும் யதார்த்தத்தோடு இருப்பவள்  “பொம்பளைங்க நாம என்ன செய்ய முடியும்? அப்படி எதுவும் நடக்காம பார்த்த்துக்கணும்” என கருப்பியிடம் சொல்லிவிட்டு மெளனமாக வெகுநேரம் அச்சிறுமைக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக, தலை குனிந்து அமர்ந்திருக்கிறாள்.
“புனிதமானவள்” எனும் தலைப்பில் சுமித்ரா வீட்டருகே வாழும் தோழி மாதவியின் கதை. வயநாட்டின் குளிர்காற்று, காப்பிக்கொட்டையில் விடாமல் பெய்யும் மழை, கருப்பு டீயின் நிறமுள்ள மழை நீர், மரவட்டை, அறுபடாத மெளனம் என எதுவும் பிடிக்காமல் புகுந்த வீட்டுக்கு வந்துசேர்ந்த மாதவிக்கு அன்னிய ஆடவர்கள் பார்வை பிடிக்கத் தொடங்கியது ஊராருக்கு ரகசிய செய்தியாயிற்று. அசிங்கம் பிடித்த பெண் என ஊராரால் முத்திரை குத்தப்பட்ட பெண்ணோடான சுமித்ராவின் சகவாசம் கணவன் வாசுதேவனுக்குப் பிடிக்கவில்லை. சுமித்ரா மாதவியை தரம்பிரித்து அணுகுவதில்லை. பொதுவாளுக்குண்டான காருண்யம் மாதவியிடமும் உண்டு. யாரும் மதிக்காத உன்னை அரவணைக்கிறேன் பார் எனும் பிச்சை போடும்படியாக அல்லாது மிகச் சகஜமாக மாதவியுடன் பழகுகிறாள்.
“இன்னைக்கு யாரெல்லாம் வராங்க?” என மாதவியிடம் கேட்கத் தொடங்கி எல்லாரும் போனதும் நான் வருவேன், நாம் பேசிக்கொண்டிருக்கலாம் என்கிறாள் சுமித்ரா. தனது கல்லூரிகால நட்புகளைப் போல சுமித்ராவால் இந்த உறவையும் அனிச்சையாக பேண முடிகிறது. மன குறுகுறுப்பினால் வரும் நட்பல்ல. தன் மகள் அனுசூயா மேல் இருப்பது போன்ற மிக ஆத்மார்த்தமான அன்பு. தேவைக்காகவும் சமூக கட்டாயத்துக்காகவும் உருவாகும் நட்பையும் அனிச்சையாக விரும்பி அமையும் நட்பையும் சமமாகப் பார்க்க முடிகிற மேலானவளாக சுமித்ரா இருக்கிறாள்.
சுமித்ரா இந்த நாவலைப் படித்தால், “பழங்கலம்” எனும் அத்தியாயம் அவளுக்கு நெருக்கமான ஒன்றாக இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் மீண்டு வந்து தனது பழங்கலத்துக்குள் புகுந்துகொள்வாள் எனத் தோன்றியது. ‘விஸ்தாரமான திண்ணைகளோடு மேற்கு பார்த்தபடியிருந்த புளிக்கல் வீட்டின் பழங்கலம்’ சுமித்ரா வீட்டுக்குள் இன்னொரு வீடு. பெண்பார்க்க நிச்சயிக்க வந்தபோது பிடித்துப்போன பழங்கலம் நெற்குதிருக்கு மட்டுமல்ல அவளது கனவுகள் ரகசியங்கள் ஆசைகளின் சேகரிப்புக்கலம். புத்தகம் படிக்கவும், நெருங்கிய தோழிகளோடு உட்கார வைத்துப் பேசுவதற்காகவும் உகந்த இடம். மாதவிலக்காகும் மூன்று நாட்களும் அவள் தான் பழங்கலத்தின் ராணி.
இதிலிருக்கிற அத்தியாயங்களின் எந்தத் தலைப்பையும் இந்த நாவலுக்கு பெயராக வைத்திருக்கலாம். பிறரது வாழ்வைக் கூடுதலாக அழகாக்கிய சுமித்ராவின் பாதிப்பைப் பற்றி அத்தனை அழகாக எழுதியிருக்கிறார் கல்பட்டா நாராயணன். விதவிதமான மனிதர்கள். சுமித்ராவின் அன்பில் முழுமையாகக் கரைந்து சரணடைந்த புருஷோத்தமன், கருப்பி எனும் பணிச்சியின் வேதனையை தனது வேதனையாக நினைத்து மெளனமாக சமாதானம் சொல்வதும் என சுமித்ராவின் உலகம் மிகச்சிக்கலான உறவுகளைப் பேணுகிறது. ஆனால் ஒவ்வொரு உறவுகளோடும் சுமித்ராவால் தன்னை முழுமையாக ஒப்படைக்க முடிந்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுமித்ராவுடனான உறவும் உண்டு; சுமித்ராவோடு பிரத்யேகப் பிணைப்பும் உண்டு. முழுமையாகப் பார்ப்பின் அவளது ஒவ்வொரு துடிப்பிலும் அன்பு எனும் செயலி மட்டுமே உள்ளது. அதைக்கொண்டு கீழ்மையான நொள்ளைக்கண்ணனையும் அவளால் மாற்ற முடிந்திருக்கிறது. நண்பி சுபைதாவைப்போல, கீதாவைப் போல தனக்குள் ரகசியங்களை மட்டுமே புதைத்து வைத்திருக்கும் உறவுகளை இணக்கமாகப் பார்க்க முடிகிறது. “ரகசியம்” எனும் அத்தியாயத்தில் வரும் மரியா அக்கா தங்க செயினைக்கூட கொடுத்து வைத்து அல்லல்படவைக்க முடிகிறது. வெந்நீர் ஊற்றியது போல நிலையில்லாமல் சாவு வீட்டுக்குள் தத்தளித்த மரியா அக்காவைப் பார்த்து சுமித்ரா சிரித்திருக்கக்கூடும்.
சின்னப் பையனாக புருஷோத்தமன் இருந்தபோது சுமித்ரா வீட்டில் நடக்கும் நிகழ்வுகளில் அவளது மன விரிவு நமக்குப் புலப்படுகிறது.
“எண்ணெய் தேய்ப்பதற்காகக் கால்சட்டையின் மேலாகத் துண்டைக் கட்டிய பிறகு கால்சட்டையை உள்ளேயிருந்து உருவி, அவனிலிருக்கும் ஆணிடம் அவள் காட்டிய மரியாதை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது..அவள் எண்ணெய் தேய்ப்பதிலிருந்த நிதானம் அவன் அகத்தைத் தொட்டது..இனியும் நிதானமாக்கினால் தான் உடைந்து அழுதுவிடுவோம் என்பதும் அவனுக்குப் புரிந்தது.”
தன் பிள்ளை போல வளர்ந்த புருஷோத்தமன் வேலைக்குச் சென்றபின்னும் கடிதம் எழுதுபவள் “நான் ஆசைப்பட்ட வேலை உனக்குக் கிடைத்ததில் எனக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. உன் பொருட்டு உன்னுடைய பாடங்களை நானும் படித்தவளல்லவா? புளிக்கல் வீட்டின் பழங்கலத்திலிருந்து என் வாழ்த்துகள். தேன் நிறமுள்ள உன் புதிய நிர்மலா செளக்கியமா?” சுமித்ரா அவன் காதலிகளின் நிறத்தையும், உடலைமைப்பையும், கூந்தலின் அழகினையும் தீர்மானித்து விட்டிருந்தாள். “மற்ற உடல்களில் இருந்துகொண்டு சின்னச் சின்ன சாயல்கள் வழியாக சுமித்ரா அவனை தினம் தினம் வழி நடத்தினாள்” எனும் வரி சுமித்ராவை அறிந்த ஒவ்வொருவருக்கும் எத்தனை கச்சிதமாகப் பொருந்துகிறது.
“உரையாடல்” எனும் கடைசி அத்தியாயம் சுமித்ராவுக்கு வெளியே நடக்கிறது. சுமித்ரா அறியாத  வேறொரு உலகம் தொடங்குகிறது. அதைக் கண்டிருந்தாலும் அவள் மனக்கலக்கம் அடைந்திருக்க மாட்டாள். பாவம் அவர்களுக்கு என்ன அவசரமோ என எண்ணியிருப்பாள். சுமித்ரா சுவாசிக்கமுடியாத சகித்துக்கொள்ளமுடியாத பார்க்கமுடியாத வடிவில் சாம்பலாக மாறிக்கொண்டிருக்கிறாள். “மரணத்தின் சந்நதியில் அதிக நேரம் நிற்பதற்கான திராணி மனிதர்களிடம் குறைந்துகொண்டே வருகிறது. சுமித்ரா தாமதிக்கச் செய்த காரியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருத்தருக்கும் ஞாபகம் வரத் தொடங்கியது..மரணத்திலிருந்து ஒளிந்து கொள்ளவும் அவர்கள் ஆசைப்பட்டார்கள்” என்பதாக உரையாடல் முடிவுக்கு வருகிறது.
கடந்த சில மாதங்களில் மட்டும் சுமித்ரா நாவலை மூன்று முறை படித்தேன். அவ்வப்போது அத்தியாயங்களின் தலைப்பை மட்டும் புரட்டிப்பார்ப்பேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும், இந்த நாவல் ஒரு பெண்ணின் மரணக்கதையல்ல,மரணம் கொய்துதரும் பலரது நினைவுகளின் தொகுப்புமல்ல; சின்னச் சின்ன சலனங்கள் மூலம் வாழ்வின் மேன்மைகளை பிறருக்கு அறியச்செய்த உயிர் பிரிந்ததும் மந்திர ஜாலமாக உருவாகும் வெற்றிடத்தை விசாரணை செய்யும் படைப்பு எனத் தோன்றியது. “சுமித்ராவின் கீதா” எனும் தலைப்பில் வரும் தோழி கீதாவின் பகுதியில் வரும் ஒரு வரி இதை சாராம்சப்படுத்துகிறது – “நீ எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தாய். என் கஷ்ட நஷ்டமெல்லாம் உனக்குத்தான் தெரியும்..நான் இறந்த காலம் இல்லாதவளானேன்.”
இதுவரை தமிழ் இலக்கியத்தில் அதிகம் சொல்லப்படாத அழகியலையும், கருப்பொருளையும், வடிவத்தையும் கொண்ட நாவல் இது. தேவையற்ற உறவுகள் என சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட மனிதர்கள் மீதான எதிர்ப்பார்ப்புமற்ற அன்பும் அக்கறையும் கிட்டத்தட்ட அழிந்துபோன காலத்தில் வந்திருக்கும் நாவல் இது. கல்பட்டா நாராயணன் வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்வது போல, மரணத்தை முன்வைத்துப் பேசியது  ‘மரணம் பலவிஷயங்களை நமக்கு அழுத்திச் சொல்வதற்காக’ இருக்கலாம். உணர்ச்சிபூர்வமான இந்த நாவல் ஒற்றை சரடில் அமைந்ததல்ல. மனித உறவுகளின் ஆகச்சிறந்த கனவுகளையும், நுண்மைகளையும் பேசும் ஒரு படைப்பு காருண்ய வெளியை முன்வைத்து மட்டுமே பேச முடியும். சக மனித உறவுகள் சென்று எட்டிப்பிடிக்க வேண்டிய கனவும் அதுதான். சிறுமை சிறிதும் அண்டாத தாசன், தீராத தாகத்தில் சாகும் அப்புண்ணி, ரகசியத்தை மட்டுமே கொண்ட கீதாவும், சுபைதாவும், மரக்கலமும், அணைக்கட்டில் சிவந்த மீன்கள் துள்ளிவிளையாடுவதை பார்த்து நின்றதில் சுமித்ராவுடன் ஒன்றாய் வாழும் நேரத்தை நீட்டித்த கணவன் வாசுதேவன், மகத்தான கருணையை சுமித்ராவின் கண்களின் கண்ட பொதுவாள் என சுமித்ராவின் அன்பு தொட்டு அணைக்கும் கூட்டம் பெரியது.
கல்பட்டா நாராயணன் இந்த நாவலை ஒரு நீள் கவிதையாகத்தான் பாவித்து எழுதியிருக்க வேண்டும். பித்தனும் புத்தனும் சேரும் இடங்கள் பல உண்டு. சுமித்ராவை ஒரு கதையின் பாத்திரமாகவோ, விடைபெற்றுச் சென்ற உயிராகவோ எண்ணத் தோன்றவில்லை. இது உணர்ச்சி வேகத்தில் கூறுபவர்களது கூற்று என விமர்சகர்கள் ஒதுக்கிவைக்கக்கூடும். ஆம், நாவலுக்கு வெளியே உள்ள வாழ்வு இயல்பற்றதாக ஈரமற்றதாக எதிர்நிற்கும்போது சுமித்ராவின் உலகின் மீது பொறாமை கூடத்தான் செய்கிறது. யாருக்காவது பிடிக்கும் படியும், அதைவிடத் தனக்கு அதிகமாக பிடிக்கும்படியான வாழ்க்கையை வாழ்ந்தவள் மீது யாருக்குத்தான் பொறாமை ஏற்படாது?
சுமித்ரா இறந்தபின்னும் அவளுடன் பரிச்சையமானவர்களின் நினைவில் இருக்கத்தான் செய்வாள். அவள் யாருடனும் இல்லாமலேயே எல்லாருடனும் இருக்கும் சூழல் நிகழ்வுகளை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது. அந்த சூழல் தரும் நிறைவுதான் சுமித்ராவின் இருப்புக்கு செய்யும் மரியாதையாக இருக்க முடியும்.
பிற மொழி இலக்கியங்கள் பலவும் தமிழுக்கு வந்தபடி தான் இருக்கின்றன. வருகையின் வேகம் இன்னும் துரிதமாக இருக்க வேண்டும் எனப் பலர் அபிப்ராயப்படுகிறார்கள். எண்ணிக்கையை விட மூல மொழியின் அழகியலுக்கு நெருங்கி வரக்கூடிய மொழியாக்கள் நிறைய வர வேண்டும். பிற நாட்டு இலக்கியங்கள் ஆங்கிலத்தில் உருமாறும்போது மூல ஆசிரியருக்கும் மொழிபெயர்ப்பாளர்க்கும் மிக நெருக்கமான தொடர்பு அமைந்திருக்கும். ஓரான் பாமுக், ஹருகி முரகாமி போன்றோரும் தத்தமது மொழிப்பெயர்ப்பாளருடன் சேர்ந்து செயல்படுகிறார்கள். கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒரு உறவு சுமித்ரா நாவலில் அமைந்திருப்பதைப் படித்து மிகவும் மகிழ்வாக இருந்தது. மொழிபெயர்ப்பாளர் ஷைலஜாவும் கல்பட்டா நாராயணனும் திருவண்ணாமலையில் சந்தித்து இந்த நாவலின் மொழியாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். எழுத்தாளர் ஜெயமோகனின் தூண்டுதலில் மலையாள மூலத்தில் நாவலைப்படிக்கத்தொடங்கிய ஷைலஜா பத்து நாட்கள் என்னவென்று சொல்லமுடியாத மனநிலையில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். தமிழில் படிக்கும்போதும் நமக்கும் அப்படிப்பட்ட உணர்வு உண்டாகிறது. இதுவே இந்த மொழியாக்கத்தின் தரத்துக்கு சான்றாக அமையும். சமகாலத் தமிழ் இலக்கியப் படைப்புகளில் வெளிப்படாத மிக அரிதான அக உலகை இந்த நாவல் நமக்குக் காட்டுகிறது. உலர் மொழியில்லாமல் செறிவான கவித்துவ சொல்லாட்சிகள் இதை வசீகரமான வாசிப்பாக்குகின்றன. இந்த முயற்சிக்காக மொழிபெயர்ப்பாளர் ஷைலஜா சகல நன்றிகளுக்கும் உரித்தானவர்.
*
சுமித்ரா
வம்சி பதிப்பகம்
மூலம்: இத்ரமாத்ரம்
மூல எழுத்தாளர் – கல்பட்டா நாராயணன்
தமிழில்: கே.வி.ஷைலஜா

0 Replies to “சுமித்ரா – அந்தம் இல் மனம்”

 1. திரைப் படத்தில் பாத்திர விற்பனையாளர் சித்திக்
  சுமித்ரை யுடன் உடல் உறவு கொள்வதாய் காட்சி உண்டு
  நாவலில் /எழுத்து வடிவில் அது உண்டா ,
  அது குறித்து நீங்கள் ஏதும் எழுத வில்லையே
  சுமித்ரை அது குறித்து மகிழ்வோ வருத்தமோ அடையாது
  காமத்தை எளிதில் பற்றறுக் கடந்து விடுவார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.