குஞ்சம்மா பாட்டியின் வியாழக்கிழமை
ஊரைவிட்டு ஒதுங்கி விட்ட
ஒற்றைக்குடிசையில் இருக்கும்
குஞ்சம்மா பாட்டி
எழுந்துவிட்டாள். அன்றும்
அதிகாலை ஐந்து மணிக்கு.
கண் விழித்தவுடன் பிரார்த்தனை. பிறகு
படுக்கையை சுருட்டி
பசுவுக்கு புண்ணாக்கு வைத்து
பால் கறந்து
அறையை பெருக்கினாள்.
வழமை போல்
அரிசியை உலையேற்றி
குளிக்கச்சென்றபின்
அவளை விடாமல் பற்றிக்கொண்டது
வியாழக்கிழமை.
இரவில்
பால் மோர் விற்றகணக்கு
சரிபார்த்து
உறையூற்றி மூடியபின்
கோணல்கால் வலிபோக
நீவிக்கொண்டே
நினைத்துக்கொள்கிறாள்.
ஐம்பது வருடம் முன்
காணாமல் போன கணவனை.
விளக்கொளி மினுக்கிட
கண்ணீர் உகுத்து
வெதும்பிய பின்
வருவான் ஒருநாள்
என கொதிப்படங்கி
போர்த்திக்கொண்டாள்
குஞ்சம்மா பாட்டி.
வியாழக்கிழமை போலத்தான்
வாரத்தின் எல்லா கிழமையையும்
வாரத்தை போலத்தான்
வருடத்தின் எல்லா மாதமும்.
குறட்டைஒலிக்க உறங்கும் முன்
மறக்காமலிருக்க
சொல்லிக்கொண்டாள்
குஞ்சம்மா பாட்டி.
கடைக்கு போகணும் காலையில்
புண்ணாக்கு வாங்க.
– வேணுகோபால் தயாநிதி
oOo
நினைவுகள்
வாலைச் சாமரமாக்கி
சுற்றி வரும்
ஈக்கு விசிறியபடி
எருமை இறங்கியது
நீருக்குள்..
முதுகு நனையாமல்
தெப்பமாய் நகர்ந்தது.
வைக்கோல் தேய்த்துத்
தண்ணியள்ளி அலசி
ஊற்றினான் மேய்ப்பன்.
சொறியக்கொடுத்த மாடு
மின்னியது மதியவெய்யிலில்.
மேய்ப்பனுக்குப் பசியெடுத்தபோது
நீர்விட்டு மேலேறி நடந்தது
தடங்களில் புழுதி சுமந்து.
நேரங்கிடைக்கையில் எல்லாம்
குளியல் கிடைத்தது
எருமைக்கு.
சுத்தமானோமோ இல்லையோ
என்பதறியாமல் அசைபோட்டபடி.
oOo
கறுப்பு வெயில்
வாசலில் பழியாய்க் கிடக்கும்
ஏறி ஏறி வீட்டுக்குள் எட்டிப் பார்க்கும் படிகளுக்கு பதில்.
ஒரு நாள்
ரொட்டித் துண்டை வீசி எறிந்தேன்.
இன்னொரு நாள்
பிஸ்கட்டைப் பிட்டுப் போட்டேன்.
மற்றொரு நாள்
மீந்த உணவை வட்டிலில் வைத்தேன்.
பிறிதொரு நாள் வீட்டுக்குள் படியைத் தாண்டி காலடி வைக்கும்
வைத்ததுந் தான் தாமதம்.
வார்த்தைகளில் குரைத்துத் துரத்துவேன் வெளியே.
கூனிக்குறுகி
கூப்பிடும் பக்கத்து மரத்தடியில் போய் படுத்துக் கொள்ளும்.
நிழல் மரம் கேட்கும் நெஞ்சு பொறுக்காமல் தெரு நாயிடம்-
‘வீட்டுக்குள் நிழல் கறுப்பு வெயிலா?’
– கு. அழகர்சாமி