மொட்டு விரியும் சத்தம்- நூல் அறிமுகம்

This entry is part 42 of 48 in the series நூறு நூல்கள்

திரு.கா.நல்லதம்பி அவர்களின் மொழிபெயர்ப்பில் கன்னடக் கவிஞர் பி.லங்கேஷின் கவிதைகள் படிக்கக் கிடைக்கின்றன. கன்னடத்தின் ‘நவ்யா’ இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான லங்கேஷ் இடதுசாரி/ சோஷலிஸக் கருத்துக்கள் கொண்டவர். 70களின் இறுதியில் அவர் தொடங்கிய ‘லங்கேஷ் பத்ரிகே’, கன்னடத்தின் முதல் தலித்திய வார இதழ் என்று சொல்லப்படுகிறது. தன் பத்திரிகை மூலமாகவும் எழுத்துக்கள் மூலமாகவும் கன்னட அரசியலில் பெரிய பாதிப்பு செலுத்தியவர், லங்கேஷ். 1976-இல் தன் நாவலைத் தழுவி அவர் இயக்கிய ‘பல்லவி’ என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
‘நீலு’ என்ற பெண் பெயரில் லங்கேஷ் பத்ரிகே-யில் லங்கேஷ் இருபது ஆண்டுகளாக எழுதிய கவிதைகள் ‘நீலு காவ்ய’ என்று தொகுக்கப்பட்டன. அவற்றிலிருந்து திரு.நல்லதம்பி அவர்கள் தேர்ந்தெடுத்த கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். இவை கன்னடத்தில் லங்கேஷ் அவர்களின் கையெழுத்தில் பல ஓவியர்களின் சித்தரிப்புகளுடன் வெளிவந்தவை. ஒரு பெண்ணின் பார்வையில் வெளிவந்த இக்கவிதைகள் பெரும்பாலும், காதலைப் பற்றியும் காதலர்களைப் பற்றியும் பேசுகின்றன. விதவைகளின் ஆதங்கம், விவசாயிகளின் துன்பங்கள், மாறிவரும் வாழ்க்கைச் சூழல் பற்றிய கருத்துக்களும் பதிவாகியுள்ளன. இரண்டிலிருந்து நாலு வரிகளுக்குள் இருக்கும் இப்பதிவுகள் கவிதைகள் என்பதைவிட கருத்து வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன.
KOLAM_0001பழமொழி போன்ற வாழ்க்கை கவனிப்புகள்,
‘நீரோடை போல்
சரளமான உண்மை
ஆணின் கொடூரமும்
பெண்ணின் சஞ்சலமும்’
நொடிப்பொழுதின் உணர்வெழுச்சிகள்,
‘அனல் பறக்கும் வெயிலிலும்
துளிர்க்கும் செடி
காதலர்களுக்கு பாடம் அல்லவா?’
அறிவுரைகள் போன்ற கருத்துக்கள்,
‘ரோஜா மணத்தை
வேர்களில் தேடாதே
வேரும், பூவும்
வெவ்வேறு’
சமுதாய நிலைகள் குறித்தும் மாறி வரும் இயற்கைச் சூழல் குறித்தும் பேசும் கவிதைகள் ஆச்சரியமான எளிமைப்படுத்துதல்களாக இருக்கின்றன. புரட்சி நோக்கிய சோஷலிஸ பார்வையின் பாமரத்தனமான முன்முடிபுகளுடன்,
“தன் குடும்பத்தின் மூன்று வயிறுகளுக்காக
மூட்டை மூட்டையாய் நெல் பயிர் செய்யும்
விவசாயியைப் பார்த்து ஆச்சரியமடைந்து
உட்கார்ந்திருக்கிறது ஒரு பறவை”
பெண் குரலில் எழுதப்பட்ட காதல் கவிதைகள், ஓரளவு பெண் பார்வையின் பிரதிநிதித்துவமாகவும் பெரும்பாலும் ஆணின் கனவுப் பெண்மையின் வெளிப்பாடாகவும் இருக்கின்றன. கவிதைகளாக ‘சிந்திக்கப்பட்டு’ இவை எழுதப்பட்டிருந்தாலும், சில அன்றாடத்தின் நேர்மையான கவிதைகளில் கவித்துவம் வெளிப்படவே செய்கிறது.
“வாழ்க்கையின் நிலையற்ற
தன்மையை யோசிக்க வைத்தது
நேற்றைய என் பல்வலி”
“நான் எவ்வளவு நீர் பாய்ச்சிப்
பார்த்துக் கொண்டாலும்
மொட்டையாய் நின்ற
எலுமிச்சை மரம்
நேற்று பெய்த அடை மழைக்குத்
துளிர்விட்டதைப் பார்த்து
எனக்கு வெறுப்பேறியது”
“மொட்டு விரிவதைப் பார்க்க
பிடிவாதம் பிடித்து தூக்கம்
மெல்லத் தழுவி – எழுந்த பொழுது
பூ மலர்ந்து, இதழ்கள்
வாடத் தொடங்கியிருந்தன.”
கன்னடத்தில் நவீன இலக்கிய முன்னெடுப்புகளின் முக்கிய பங்களிப்பாளரான லங்கேஷ் அவர்களின் எழுத்துக்களை தமிழில் கொண்டுவந்திருப்பது முக்கியமான முயற்சியாகும். இதை மிக அழகான தரத்திலும் வடிவத்திலும் பதிப்பித்திருப்பது இன்னும் மகிழ்ச்சியளிப்பது. இப்புத்தகத்தில், இரண்டு விதமான கவிதைச் சரடுகள் ஓடுகின்றன. ஒன்று லங்கேஷ் அவர்களின் எழுத்துக்கள் மூலமாகவும், இன்னொன்று திரு. நல்லதம்பி அவர்களின் புகைப்படங்கள் மூலமாகவும். கன்னட மொழியில் நல்ல பரிச்சயம் உடையவரும், கர்நாடகத்திலேயே பிறந்து வளர்ந்தவருமான திரு.நல்லதம்பி அவர்கள், தமிழுக்கு இது போல மேலும் பல முக்கியமான கன்னடப் படைப்பாளிகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
*
மொட்டு விரியும் சத்தம், பி. லங்கேஷ்,
தமிழாக்கம், கா. நல்லதம்பி,
விழிகள் பதிப்பகம், சென்னை 41
94442 65152, 94442 44017
விலை ரூ. 165

Series Navigation<< புத்தக அறிமுகம்: முருகவேளின் ‘முகிலினி’தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமி >>

0 Replies to “மொட்டு விரியும் சத்தம்- நூல் அறிமுகம்”

  1. கன்னடத்தில் பெரிய ஆளுமை இவர், என்று சொல்லித் தரப்பட்ட முன் அறிமுகங்களால் பாதிக்கப்படாமல், தனக்குத் தரப்பட்டதில் தான் படித்து அறிந்ததையும் அனுபவித்ததையும் தயங்காமல் எழுதியுள்ள அனுக்கிரஹாவைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் எப்பவோ எழுபதுகளின் கடைசியிலோ அல்லது எண்பதுகளின் ஆரம்பத்திலோ பல்லவி படத்தை தில்லியில் பார்த்தபோது அது என்னை கவரவில்லை. ஒரு வித வெறுமை உணர்வு தான் மிஞ்சியது. அதற்கு முன் சத்திய நாத் என்னும் தில்லி பல்கலைக் கழக கன்னட பேராசிரியர் லங்கேஷ் பற்றி என்னிடம் சொல்லியிருந்ததால், பல்லவி பார்க்கவேண்டும் என்று ஆவலோடு போனேன் .ஏமாற்றமே மிஞ்சியது. ஒர்றை அனுபவத்தை வைத்துக்கொண்டு முடிவு செய்யக் கூடாது தான். ஆனால் என் அபிப்ராயம் சரிதானோ என்று என்ண வைக்கிறது, அனுக்கிரஹா அவர் கவிதை பற்றி எழுதியுள்ளது. இருந்தாலும்,மொழிபெயர்ப்பை வைத்து ஒரு முடிவுக்கு வரலாமோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.