படிப்பு அறை – 'தாத்தாவும் பேரனும்'; 'டோட்டோ-சான்'

ஜனவரியில் சென்னையில் புத்தக விழா நடந்தது. வருடா வருடம் இதில் கூட்டம் கூடிக் கொண்டே போகிறது. அளவு பெருக்கவும், ஒரு மனிதரால் உணர்வில் கைப்பற்ற முடியாத அளவு சிதறிப் போய், கண்காட்சி உருக் குழப்பமடைகிறது. எக்கச் சக்கமான கடைகள், ஏராளமான புத்தகங்கள், திருவிழாத் தெருக்கள் போல திரளான மனிதர்கள். இத்தகைய சிதறலில், தனிமனிதர் வழக்கமாகக் கடைப்பிடிக்கும் ஒரு உத்தி, புத்தித் தெளிவுக்கும், காரிய சித்திக்கும் தேவையானது- குறிப்பிட்ட சில கடைகள், சில வகைப் புத்தகங்கள், சில வட்டாரங்களில் தகவல் தேடுவதோடு தம் ஆர்வத்தைக் குறுக்கிக் கொள்ளுதல். பிற இடங்களைப் போகிற போக்கில் நோட்டம் விடுவதோடு கடந்து விடுதல்.
இதைத்தான் நானும் செய்தேன். பல நண்பர்களும் இதைப் போன்ற ஒரு நடைமுறையைக் கடைப்பிடித்ததைக் கவனித்தேன். சுழலும் மனிதத் திரள் நடுவே ஒரு சிலர் அதிகம் அலையாது அசைவு கூடக் குறைந்து ஓரிடத்திலேயே அமர்ந்திருந்தனர். சும்மா இல்லை, காரியப் பைத்தியம்தான்!
இராசேந்திர சோழன், தமிழினி பிரசுரகர்த்தர் வசந்தகுமார். நாஞ்சில் நாடன், அருண் நரசிம்மன் ஆகியோர் ‘தமிழினி’ பிரசுரத்துக் கடை வாசலில் அப்படி அமர்ந்திருந்தனர்.  அவர்களிலும் இராசேந்திர சோழன் மிக அமைதியாக அமர்ந்திருந்தார். அத்தனை களேபரம் சுற்றி நடக்கையில், நால்வர் அமர்ந்திருந்த இடம் அமைதித் தீவு போல இருந்தது. அவர்களில், மிக்க உயிர்ப்போடு இருந்தவர் நாஞ்சில் நாடன் அவர்கள். மூவரும் தமிழினி பிரசுரத்தின் மூலம் புத்தகங்களை வெளியிட்டிருக்கும் எழுத்தாளர்கள் என்பதால் அப்புத்தகங்களை வாங்கும் வாசகர்களுக்குப் புத்தகங்களில் தம் கையெழுத்திட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தனர். இப்படி ஒரு நாளில் பெரும்பகுதி அமர்ந்திருப்பது எளிதான செயல் அல்ல. ஆனால் இளைஞரான அருண் நரசிம்மனுக்குத் தொல்லை அத்தனை இருந்திராது. முந்தைய தலைமுறை எழுத்தாளர்களான மற்ற இருவருக்கும் இப்படி அமர்ந்திருப்பது கடினமாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் முகமலர்ச்சி குன்றாது அமர்ந்து கையெழுத்திட்டனர்.
இதே போல விருட்சம் கடையில் அம்ஷன் குமார் அமர்ந்திருந்தார். அவரைப் பல வருடங்கள் முன்பு நியுஜெர்ஸியில் ஒரு தடவை சந்தித்ததோடு சரி. அதனால் இப்போது மறுபடியும் சந்தித்தது மகிழ்வாக இருந்தது. கடைசி நாளன்று சென்றதால் இந்த வருடம் போன வருடத்தைப் போல அல்லாது அதிகம் பிரமுகர்களைச் சந்திக்க நேரவில்லை.
09THLANDMARK_625881fசென்ற வருடம் வாங்கிய புத்தகங்களைச் சென்னையிலிருந்து எடுத்துப் போக முடியாமல் விட்டு விட்டுச் சென்றிருந்தேன். அவற்றை எடுத்துப் போவதே பிரச்சினை என்பதால், இந்த வருடமும் மேலும் புத்தகங்களை வாங்கினால் குவியலை ஒரு சிறு வீட்டில் வைத்திருப்பது பெரிய பிரச்சினையாகும் என்று கருதி ஏதும் வாங்கப் போவதில்லை என்ற முடிவோடு காட்சிக் கூடத்துக்குப் போயிருந்தேன். மதுவுக்குத்தான் அடிமையாவர் மனிதர் என்றில்லை, புத்தக அடிமைகளும் ஒன்றும் வித்தியாசப்பட்டவர் இல்லை. தமிழினி, விருட்சம், காலச்சுவடு, ஓரியண்ட் ப்ளாக்ஸ்வான், நர்மதா, சந்தியா என்று சில இடங்களுக்குப் போவதற்குள்ளேயே கையில் பை கனத்து விட்டது. பர்ஸும் இலேசாகி விட்டதால் மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு வெளியே செல்வது தவிர்க்க முடியாததாகியது. சென்ற வருடத்துக்கு இந்த வருடம் புத்தக போதையை மிகக் குறைத்து விட்டதாக ஒரு பிரமையோடு வீடு திரும்பினேன். எடை தூக்கும் சக்தி குறைந்திருப்பதோடு, பணப்பையின் மெலிவும் காரணங்கள்- புத்தகம் அதிகம் வாங்காததற்கு என்பதுதான் உண்மை. போதைக்கான தீவிரம் ஒன்றும் குறையவில்லை. விழா முடிந்து பல நாட்களான பிறகும், என்னென்ன பார்க்காமல் கூட விட்டோமோ என்றுதான் மனதில் அடித்துக் கொண்டிருக்கிறது.
குறைவாக வாங்கினாலும், இந்த வருடமும் புத்தகங்களைப் பின்னே விட்டுச் செல்ல வேண்டி இருக்கும். இன்னும் சென்னையில் இருக்கப் போகிற ஒரு மாதத்தில் எத்தனை படிக்க முடியுமோ அதைப் படித்து விட முயற்சி நடக்கிறது.  வாங்கியவற்றில் ஏழெட்டைப்  படித்தாயிற்று. மீதம் படித்துக் கொண்டிருக்கிறேன்.
என்ன இலக்கிய ஆர்வம் இருந்தாலும் சிறுவர்களுக்கான புத்தகங்களைப் படிப்பதுதான் ஆர்வத்தின் உச்ச கட்டம் என்பதால் அங்கேயே துவங்கினேன்.  இரண்டைப் படித்ததில் ஒன்று குறிப்பிடத்தக்க புத்தகம். அது பற்றிச் சில பத்திகள் இங்கே.
*****   ******
நான் சிறுவனாக இருந்த போது வல்லிக்கண்ணன் மொழி பெயர்த்து, ‘தாத்தாவும் பேரனும்’ என்ற ஒரு புத்தகம் எனக்குக் கிட்டி இருந்தது. அதன் மூலப்புத்தகம் அமெரிக்காவில் வெளியான ஒரு இங்கிலிஷ் புத்தகம்.
அது பற்றிய விவரங்களுக்குப் பார்க்க: http://books.google.co.in/books/about/The_Old_Man_and_the_Boy.html?id=uHltqfegl38C
இது அந்தப் புத்தகத்தின் முதல் பதிப்புகளில் ஒன்றின் அட்டை.
இது வெளியானது 1957 இல். ஆனால் ஒரு சில வருடங்களுக்குள்ளேயே மொழி பெயர்க்கப்பட்டுத் தமிழில் கிட்டி இருந்திருக்கிறது.
contentசிறுவனான எனக்குப் பல நாட்களில் மிக்க ஆனந்தத்தைக் கொடுத்த ஒரு புத்தகம் இது.  கோடை விடுமுறைகளில் நான் வசித்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு சிற்றூரில், நண்பர்கள் வராத கடும் வெப்பம் நிறைந்த மதிய வேளைகளில் துவங்கி மாலை வரை, பல நாட்கள் இதை மறுபடி மறுபடி வாசித்து இன்புற்றிருக்கிறேன். இதில் இருந்த அனைத்துத் தகவல்களும் எனக்குச் சற்றும் தொடர்பில்லாத ஒரு அன்னிய கிரகத்திலிருந்து வந்தது போன்ற தோற்றம் கொண்டிருந்தன என்பது அடிப்படையிலேயே பிரமாத ஆகர்ஷண சக்தி கொண்ட விஷயம். பின்னாளில் கல்லூரி விடுமுறை மாதங்களில் ஏராளமாக அறிவியல் நவீனங்களைத் தேடித்தேடிப் படித்ததற்கு வித்திட்டது இந்தப் புத்தகம் என்று நினைக்கிறேன்.
அமெரிக்கா என்ற நாடு பற்றி நான் அன்று அறிந்திருந்தது மிக மிகக் குறைவு. ஆறாம் வகுப்பில் பூகோளம் என்ற பிரிவில் அப்போதுதான் கண்டங்கள் என்பன ஆறு என்று சொல்லிக் கொடுக்கத் துவங்கி இருந்தனர். ஆனால் அந்தப் புத்தகத்தில் இருந்த கனவானான தாத்தாவும், அவரிடம் மிக்க மரியாதையும், அன்பும் கொண்டிருந்த பேரனும் சேர்ந்து நடத்திய பற்பல வகை மிருக வேட்டைகள், குளிர்ந்த ஏரிகளில், ஆறுகளில் படகுகளில் போய் மீன் பிடித்தல், கடலோரங்களில் நள்ளிரவில் துவங்கி விடிகாலை வரை ஆமை முட்டை சேகரித்தல் போன்ற ஏதேதோ நடவடிக்கைகளை அற்புதமாகச் சித்திரிக்கிறது இப்புத்தகம். அல்லது, அன்று அப்படித் தோன்றியது எனக்கு.
ஒரு சிறுவனும், அவனைச் சூழ்ந்த பெரியவர்களும் சகஜமாக, இயற்கையை ஒட்டி உணவு தேடும் இத்தனை வகையான நடவடிக்கைகள் எனக்கு உலகில் மக்கள் சமூகங்களிடையே இருந்த பிரமாதமான மாறுபாடுகள் பற்றி மிகத் துரிதமாக, மிக நயமாக, மிக இனிமையாகப் போதித்தன. சம காலத்தில் திரள் சமூகத்திற்கான பிரபலப் பத்திரிகைகளில் பிலோ இருதயநாத் என்பவர் தமிழகத்திலும் இந்தியாவில் பிற இடங்களிலும் இருந்த பல பழங்குடி மக்களைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரங்களை எழுதிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் அம்மக்களின் உணவு தேடும் நடவடிக்கைகள் பற்றி இத்தனை வசீகரமாக எழுதியதாக எனக்கு அன்று தெரியவில்லை. ஒரு வேளை அக்கட்டுரைகளோடு வெளியான மங்கலான கருப்பு வெளுப்பு ஒளிப்படங்கள் அந்தக் கட்டுரைக்கு அணி சேர்க்காமல் சுவையைக் குறைத்தனவோ என்னவோ?
இத்தனைக்கும் நான் ஒரு சாக பட்சிணிச் சிறுவன். என் சூழலிலும் அப்படி மரக்கறி அல்லாத உணவை உண்பவர் சிலரே இருந்தனர். அவர்கள் என் வகுப்புத் தோழர்கள், என்னுடன் விளையாடுபவர்கள் என்றாலும் அவர்களின் குடும்ப வாழ்வெனும் உலகம் எனக்கு அத்தனை பரிச்சயமற்றதாகவே இருந்தது. அவர்களும் வேட்டையாடியோ, மீன் பிடித்தோ தம் உணவைப் பெற்றவர்கள் அல்ல. அங்காடிகளில், கூடை வியாபாரிகளிடம் இருந்து உணவைப் பெற்றவர்களாகத்தான் இருந்தனர். இப்புத்தகமோ, தம் உணவைத் தாமே தேடும் சாகஸக்காரர்கள் பற்றியதாக இருந்தது. அல்லது நான் அவர்களை அப்படித்தான் புரிந்து கொண்டேன். இருந்தும் அந்தப் பாத்திரங்கள் உண்மையானவர்கள், அந்தக் கதை ரூவார்க்கின் இளமைப்பருவம் பற்றியது என்றுதான் நான் நம்பினேன். அந்த நம்பிக்கை தவறல்ல என்று பிற்பாடு நானே அமெரிக்கப் பல்கலை ஒன்றில் மேல்படிப்பு படிக்கப் போனபோது மூலப் புத்தகத்தைத் தேடிப்படித்ததில் தெரிந்து கொண்டேன்.
9 வயதிலிருந்து 15 வயது வரை எனக்கு மறுபடி மறுபடி வாசிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்த அந்தப் பிரதி, நான் பற்பல ஊர்களிலும், சில நாடுகளிலும் வசித்ததான நாடோடி வாழ்க்கையில் புத்தகங்களைச் சுமந்து திரிய இயலாமல் விட்டுச் சென்ற சில நூறு புத்தகங்களில் ஒன்றாக இருந்தது. அதை இழக்க வேண்டி வந்தது, எனக்கு இன்னமும் சிறிதாவது சோகத்தைக் கொடுக்கிறது.
இன்றும் நான் சாகபட்சிணிதான் என்றாலும் அந்தப் புத்தகம் விவரித்த இயற்கைக்கு அத்தனை அருகாமையில் நடத்தப்பட்ட அன்றாட வாழ்க்கை, இயற்கை என்பது மனிதனுக்குக் கொடுக்கும் கொடை அளப்பரியது என்பதை எனக்கு ஆழமாக உணர்த்தியிருந்தது என்று இப்போது புரிந்திருக்கிறது. என் பல பத்தாண்டுப் பழக்கமான சூழல் நலம் பேணுவது சார்புடைய சிந்தனைக்கு ஒரு அடித்தளம் அப்போது இந்தப் புத்தகத்தால் கட்டப்பட்டது என்று கூட இன்று தோன்றுகிறது.
பின்னாளில், வளர்ந்த மனிதனாக ஆங்கில வடிவைத் தேடிப்படித்தேன். அப்படித் தேடுகையில் மிஷிகன் மாநிலத்தில் ஒரு ஆய்வு மாணவனாகப் பல்கலை ஒன்றில் சேர்ந்திருந்தேன். சேர்ந்த சில நாட்களில் அங்கிருந்த பெரும் பல்கலை நூலகத்தைப் பார்த்துப் போதையேறி இருந்த எனக்கு இந்தப் புத்தகம் நினைவு வந்து அதை எடுத்து வந்து படித்தது இன்றும் நினைவிருக்கிறது.
விசித்திரமான விஷயம் என்னவென்றால், மொழி பெயர்ப்பில் எனக்குக் கிட்டிய அத்தனை மகிழ்ச்சி மூல நூலில் அப்போது கிட்டவில்லை. மூல நூல் வேறொரு உலகை எனக்கு அறிமுகப்படுத்தியது என்றாலும், அதுவும் நன்றாக இருந்தது என்றாலும், மொழி பெயர்ப்பும் அது விரித்த உலகும்தான் என் மனதில் ஆழப்பதிந்திருந்தன. பின்னாளில் மொழி பெயர்ப்பை மறுபடி தேடிப்படித்த போது மொழி பெயர்ப்பு என்பது எனக்குமே ஒரு பிடித்த கலையாக, நானும் பயில்கிற ஒரு விஷயமாக இருந்ததால், இந்த முறை அந்த மொழி பெயர்ப்பின் போதாமைகள் புரியத் துவங்கி இருந்தன. ஆனாலும் அப்புத்தகத்தின் வாசகர்கள் யாரென்று யோசித்து அவர்களுக்கு வாசிப்பு சௌகரியம் இருக்க வேண்டுமென்று கருதி வல்லிக்கண்ணன் அந்த மொழி பெயர்ப்பைச் செய்திருக்க வேண்டும் என்பது எனக்குப் புரிந்தது.
என் இளம்பிராயத்தில் அத்தனை மகிழ்ச்சியைக் கொடுத்த வல்லிக்கண்ணனுக்கும், மூல ஆசிரியர் ராபர்ட் ஸி. ரூவார்க்குக்கும் காலம் கடந்து என் நன்றியைத் தெரிவிக்க வேண்டி இருக்கிறது.  ரூவார்க் 1965 இலேயே மறைந்து விட்டார். வல்லிக் கண்ணன் 2006 வரை இருந்திருக்கிறார்.  அவர் இருந்தபோது ஒரு கடிதம் எழுதி என் நன்றியைத் தெரிவித்திருக்கலாம். ஒரு எழுத்தாளருக்கு இத்தகைய கடிதங்கள் எத்தனை மகிழ்ச்சி கொடுக்கும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை, ஆனால் அப்படி எழுதி இருப்பது என் கடமை என்று தோன்றுகிறது. இது அப்படிப்பட்ட ஒரு கடிதம்தான். எழுத்தாளர்களுக்குப் போகாமல் வாசகர்களின் கவனத்துக்குப் போகிறது என்பது ஒரு மாற்றுக் குறைவுதான், ஆனாலும் இதையாவது செய்வது நல்லது.
[இந்தப் புத்தகம் வலைத்தளமொன்றில் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளக் கிட்டுகிறது என்று தெரிகிறது. அது என்ன அளவுக்குப் பாதுகாப்பானது என்பது எனக்குத் தெரியாது. அதன் முகவரி இது:
https://archive.org/details/ThathavumPeranum   ]
*****
இங்கு அடுத்துக் காணவிருக்கும் புத்தகமும் புதுப் புத்தகம் அல்ல. இந்த வருடப் புத்தக விழாவில் நான் கண்டெடுத்தேன் என்றாலும் இதன் முதல் பதிப்பு 1996 இல் என்றும் நான் வாங்கியது 2008 இல் வெளியான நான்காம் பதிப்பு என்றும் தெரிந்து எனக்குக் கொஞ்சம் மகிழ்வாகவும், சிறிது துன்பமாகவும் இருந்தது. நான்கு பதிப்புகள் வெளியாகிறது குறித்து மகிழ்வு, 2008 இல் வெளியிடப்பட்ட நான்காம் பதிப்பு இன்னும் விற்றுத் தீரவில்லை என்பதில் மனச் சோர்வு. ஆனால் இந்த முறையாவது இது என் கண்ணில் பட்டதே என்பது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சிதான்.
இதைப் படித்து முடித்த பின், என்னிடம் போதிய வசதி இருந்தால் இதில் ஒரு 1000 பிரதிகளை வாங்கிப் பல பள்ளிகளில் உள்ள சிறுவர் சிறுமியருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம் என்று கூடத் தோன்றியது.  பிரதியின் விலை 50ரூபாய்தான். இதன் பக்கங்கள் 161. இதை வெளியிட்டிருக்கும் நேஷனல் புக் ட்ரஸ்ட் இதை விற்று முதலீட்டைக் கூடத் திரும்பிப் பெற முடியாது என்று தோன்றியது.  புத்தக விவரம் இதோ.
டோட்டொசான்     
          –ஜன்னலில் ஒரு சிறுமி
டெட்சுகோ குரோயாநாகி 
தமிழாக்கம்: சு வள்ளிநாயகம், சொ. பிரபாகரன்
(மூலம் ஜப்பானிய மொழி.  டாரதி பிரிட்டன் என்பாரின் ஆங்கில மொழியாக்கத்திலிருந்து  தமிழாக்கம் பெறப்பட்டிருக்கிறது]
பிரசுரகர்: நேஷனல் புக் ட்ரஸ்ட், இந்தியா. ISBN 978-81-237-1919-1
நான்காம் பதிப்பு 2008; விலை: ரூ.50
[மேலும் சில பிரதிகளை, வலைத்தளத்தில் வாங்க முயன்று அந்தத் தளத்தில் தேடினால் கிட்டவே இல்லை. தமிழ் பட்டியலில் இருக்கிறது, ஆனால் தேடலில் கிடைக்காது. தமிழில் தேட முடியாது, சரி, ISBN எண் மூலமாவது தேடலாம் என்றால் அதையும் அந்தத் தளம் இல்லை என்று கை விரிக்கிறது. சும்மாவா, அரசு அமைப்பாயிற்றே. அப்படி எல்லாம் வாசகருக்கோ, நுகர்வோருக்கோ வசதி செய்து கொடுத்து விட்டால் அப்புறம் பெருமை என்ன இருக்கும்? அச்சடித்த புத்தகங்களை வாசகருக்குக் கிட்டாமல் கிடங்கில் வைத்திருந்தால்தான் பெருமை என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது. ]
இதையும் வல்லிக்கண்ணனின் மொழிபெயர்ப்புப் புத்தகத்தையும் ஒப்பிட நினைத்ததால் அதை முதலில் கொடுக்கவில்லை. சிறு பிராயத்தில் நாம் படித்த சில புத்தகங்கள், நம் அபிமானப் புத்தகங்கள் முதுமையை எட்டும் தருணத்தில் வந்த நிலையில் கூட நினைவில் இருப்பதோடு அவை எப்படிப் பசியதொரு காலத்தை நம்முள் விட்டுச் சென்றிருக்கின்றன என்பதை நன்றியுணர்வுடன் நாம் நினைக்கிறோம் என்று சுட்டத்தான் அந்தப் புத்தகத்தைப் பற்றி முதலில் எழுதினேன்.
சில நேரம் தற்செயல் நிகழ்வுகளும் வியப்பைக் கொடுக்கின்றன.
அதை மொழி பெயர்த்தவர் வல்லிக் கண்ணன் என்றால் இந்த ஜப்பானியப் புத்தகத்தை மொழி பெயர்த்தவர் வள்ளிநாயகமும், பிரபாகரனும். அது அமெரிக்கச் சிறுவனின் இளம்பிராயம் பற்றிய புத்தகம் என்றால் இது ஜப்பானியச் சிறுமி ஒருத்தியின் இளம்பிராயம் பற்றிய புத்தகம். அமெரிக்கப் புத்தகம் பள்ளியில் படித்தாலும், அதைப் பற்றிச் சிறிதும் பேசாது, தான் தன் பாட்டனார்களுடன் ஒரு பெரும் நில வெளியில் திரிந்தலைந்து இயற்கையோடு பொருந்தி இருந்து பல உயிரினங்கள், தாவரங்கள் பற்றித் தெரிந்து கொண்ட பால்யப்பருவம் பற்றி பின்னாளில் ஒரு இளைஞர் நினைவு கூர்ந்து எழுதியது. ஜப்பானியப் புத்தகமோ, முழுக்க முழுக்க தன் பால்யப் பருவத்தில் தனக்குக் கிட்டிய அபூர்வமான ஒரு பள்ளி பற்றி, அதை மறக்க முடியாததான, தன் வாழ்வையே ஒழுங்குபடுத்தி அமைத்ததான அனுபவமாகக் கருதிய ஒரு ஜப்பானியப் பெண்மணி, நினைவு கூர்ந்து எழுதியது. இவரும் தனக்கு அப்பள்ளியில் கிட்டிய அசாதாரணமான சுதந்திரம், குழந்தைகளின் கற்பனை வளத்தைச் சிறிதும் சிறைப்படுத்தாத ஒரு கல்வி முறை, இவை தவிர அவர்களுக்கு அப்பள்ளியில் கொடுக்கப்பட்ட வாழ்க்கையை ஒட்டிய கல்வி ஆகியனவற்றைப் பற்றியே எழுதி இருக்கிறார்.
ஆனாலும் ஜப்பானியப் புத்தகம் கல்வியைப் பற்றியது, கல்விக்கான ஒரு பள்ளியைப் பற்றியது. அப்பள்ளியோ சமகால ஜப்பானில் மட்டுமல்ல, உலகில் இருக்கும் பல நாடுகளிலும் இருக்கும் பெரும்பாலான பள்ளிகளைப் போல அல்லாத மிகவுமே படைப்புத் திறனுள்ள வழியில் அமைக்கப்பட்ட ஒரு பள்ளி. தொழிற்சாலை போல உலகப் பள்ளிகள் ஆக்கப்பட்டு விட்ட நிலை உலகின் பல நாடுகளில் நிலவும் இந்நாளில் இந்தப் புத்தகம் இந்தியாவில் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டிருப்பதும், தமிழிலும் நிறைய விற்றிருக்கிறது என்பதும் நல்ல செய்திதான். தவிர நான் பேசிய சில பள்ளி ஆசிரியர்கள் டோட்டொ சான் என்றதும் உடனே அது பற்றித் தமக்குத் தெரியும் என்று சொன்னார்கள் என்பதும் ஒரு நல்ல செய்திதான்.  ஆனால் இது வரை பள்ளிச் சிறுவர்களோ, இளைஞர்களோ எவரும் இந்தப் புத்தகம் பற்றி என்னிடம் பேசியதில்லை என்பது அத்தனை நல்ல நிலைமையை எனக்குச் சுட்டவில்லை.
புத்தகத்தை வாசித்து முடித்து, இதன் மூல நூல் வலையில் கிட்டுகிறதா என்று பார்க்கத் தேடியபோது தெரிந்தது இந்த நூல் பலநாடுகளில் பல மொழிகளில் பிரபலமான ஒரு நூல் என்று. இதை இத்தனை வருடங்கள் ஏன் ஒரு இடத்தில் கூட நான் பார்க்கவில்லை என்பது எனக்குப் புரியாத புதிர்.
இனி இந்தப் புத்தகத்தைப் பற்றிக் காண்போம்.
(தொடரும்)

0 Replies to “படிப்பு அறை – 'தாத்தாவும் பேரனும்'; 'டோட்டோ-சான்'”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.