பரணிலிருந்து வெளியே வரும் கலைப் பொருட்கள்….
தில்லியில் இருக்கும் National Gallery of Modern Art அரங்கில் கலை தொடர்பான கண்காட்சிகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அவ்வப்போது கலைப் பொருட்கள் மற்றும் பழமையான ஓவியங்கள் இவற்றை பாதுகாக்கும் அல்லது புனர் நிர்மாணம் செய்யும் வேலைகள் பற்றியும் விரிவாக கண்காட்சிகள் இருக்கும். அப்படி ஒரு கண்காட்சிக்குப் பின்னர், ஓவியங்கள் மற்றும் தொன்மையான அருங் கலைப் பொருட்களைப் பாதுக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வல்லுனர்கள் பற்றியும் 1993 ல் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் அது இங்கே….
வருடம் – 1993. டில்லி.
“அந்தப் பெண்ணின் கண்களில் கருணை வடிந்தது. உடை மடிப்புகள் நளினமாக அவள் மீது படர்ந்து இருந்தது. ஆனால் முகத்தில் அங்கங்கே ஏதோ ஒட்ட வைத்தது போல் கறைகள். ஒரு கையில் முழங்கைக்கு கீழ் ஒன்றுமில்லை. அவளுக்கு அங்கே சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார்கள். சுற்றியிருந்தோர் முகங்களில் ஆழ்ந்த எண்ணங்கள். அனைவருமே அவளுடைய சிகிச்சையில் முனைந்திருந்தனர்.
அவளுக்கு நடக்கும் இந்த வைத்தியம் பல நாட்கள் தொடரலாம். சிகிச்சையளிப்பவர்கள் அனைவருமே தங்கள் வேலையில் கைதேர்ந்தவர்கள். ஆனால் ஒன்று; அவர்கள் மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள் அல்ல. அந்தப் பெண்ணும் நிஜப் பெண்ணல்ல. ஒரு சலவைக்கல் சிற்பம். தொன்மையானது. அதைப் பழுது பார்ப்பவர்கள் திறமையான தொல்பொருள் மற்றும் கலைப்பொருட்கள் புதுப்பிப்பவர்கள் – Art Restorers. விதம் விதமாகப் பல பழமை வாய்ந்த ஓவியங்களையும் கலைப் பொருட்களையும் எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கிறார்கள். இன்று இது ஒரு பிரமாதமான தொழிலும் கூட.
முன்பெல்லாம் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக இது போன்ற புதுப்பிப்பவர்கள் இருப்பார்கள். பெரும்பாலும் கலை மீது கொண்ட ஆர்வத்தினால் மட்டுமே இப்படி ஆரம்பித்தவர்கள் இவர்கள். ஆனால் நாளடைவில் இவர்கள் செய்யும் வேலைக்கு வாய்ப்பு பெருகப் பெருக, கலைப் பொருட்கள் புதுப்பிக்கும் பணி தொழில்முறையில் வளர ஆரம்பித்து இன்று நல்ல லாபம் தரும் தொழிலாகவும் இருக்கிறது.
1980களின் கடைசியில் கலையார்வலர்கள் பலர் ஒன்றாக இணைந்து Indian National Trust for Art and Cultural Heritage <http://www.intach.org> INTACH என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். கலையில் ஆர்வமுள்ள பெரும் தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு துறைகளிலிருந்தும் கலை மற்றும் கலாசார ஆர்வலர்கள் தொடங்கிய இந்த நிறுவனம் கலைப்பொருட்கள் புதுப்பிக்கும் பணியில் ஒரு முக்கிய அங்கமாக உருப்பெற்றது. அன்று டில்லியில் இந்த அமைப்பின் தலைவராக செயல்பட்ட சுகந்த பாசுவுக்கு இந்திய கலைப் பொருட்கள் பல சரியான கவனிப்பில்லாமல் அழிந்து போகுமோ என்ற கவலை அரித்துக்கொண்டே இருந்தது. அவரே ஒரு சிறந்த ஓவியரும் கூட. “இந்தியாவில் ஏகமாக கலைப்பொருட்கள் உள்ளன. இவையனைத்தும் நம் வருங்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்பட வேண்டியது மிக அவசியம். பல அரும் பொருட்காட்சியகங்களில், மற்றும் கோவில்களில், பழமையான கட்டிடங்களில் இன்று இருக்கும் பல தொன்மையான கலைப் பொருட்கள் மிகப் பரிதாபமான நிலையில் உள்ளன. கவனிப்பாரற்றுச் சிதிலமடைந்த நிலையில் உள்ளவை எத்தனை எத்தனையோ. பலருக்கு இவை பாதுகாக்கப்பட வேண்டிய அரும் பொக்கிஷங்கள் என்ற உணர்வே கூட இருப்பதில்லை. கலைப் பொருட்களைப் பாதுகாக்கும் – மீட்டெடுக்கும் இந்தத் துறையில் இப்போதுதான் பலர் ஈடுபாடு காட்ட ஆரம்பித்துள்ளனர். ஓரளவு இன்று இந்தத் துறை லாபமான தொழிலாகவே மாறிவருகிறது.” என்று இவர் குறிப்பிடுகிறார்.
டில்லியில் உள்ள தேசிய அரும்பொருட்கள் காட்சியகத்தின் தலைவர் கே. கே. குப்தாவும் இதை ஆமோதிக்கிறார். “முன்பெல்லாம் மியூசியம் மட்டிலுமே இப்படி பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் இப்போது INTACH போன்ற நிறுவனங்களும் தனியாரான தன்னார்வலர்களும் இதில் நிறையவே ஈடுபடுகின்றனர். நாம் சுதந்திரம் வாங்கிய முதல் சில ஆண்டுகளில் கலைப் பொருட்கள் பாதுகாப்பது பற்றி சில மாறுபட்ட கருத்துகள் நிலவி வந்தன. அரசாங்க அலுவலகங்களிலும், சில தனிப்பட்ட முக்கிய பெரிய மனிதர் வீடுகளிலும் பல வெளி நாட்டு ஓவியங்களும் கலைப் பொருட்களும் இருந்தன. இவை இந்திய மரபைச் சார்ந்தவையல்ல; அதனால் இவை விற்கப்பட வேண்டும் என்று ஒரு சில கருத்துகளும் இருந்தது. இவை விற்ற பணத்தில் புதிதாக கலைப் பொருட்கள் வாங்கப்பட வேண்டும் என்று இவர்கள் சொல்லி வந்தனர். இதை எதிர்த்த பலர் அந்த பழமையான கலைப் பொருட்களும் ஓவியங்களும் இங்கிலாந்து நம்மை ஆண்டதற்கு அடையாளம்; எனவே இந்திய சரித்திரத்தின் இன்றியமையாத ஒரு அங்கம் அவை என்றனர். நல்ல வேளையாக பிந்தையக் கருத்து வலுப்பெற்று இந்தப் பொக்கிஷங்கள் இந்தியாவிலேயே இருக்க வேண்டும் என்று முடிவாயிற்று. பின்னர் அவை முக்கியமான மூன்று அரும்பொருட்கள் காட்சியகத்தில் – லக்னோ, டில்லி மற்றும் கல்கத்தா நகர்களில் – வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முடிவாயிற்று. அவற்றில் பெரும்பாலானவை மிகப் பழுதான நிலையில் இருந்தன. இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றும், பழைய நிலைக்கு திரும்பக் கொண்டு வர வேண்டும் என்றும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்தியாவில் இன்று கலைப் பொருட்கள் புனர் நிர்மாணம் செய்யும் துறை பெருமளவில் வளர இதுதான் முக்கிய ஆரம்பம்.” என்று குப்தா இந்தத் துறையின் இந்திய வரலாறை விவரிக்கிறார்.
மேற்குறிப்பிட்ட மூன்று நகர்களில் உள்ள அரும் பொருட்கள் காட்சியகங்கள் இதர நகரங்களில் உள்ள கலைப் பொருட்களின் புனரமைப்பு பணிகளை மேற்பார்வை செய்கின்றன. ஆனால் பொதுவாக இவை அரசாங்கத்தைச் சேர்ந்த கலைப் பொருட்கள் மட்டுமே. தனியார் வசம் இருக்கும் கலைப் பொருட்களுக்கும் இது போன்ற பாதுகாப்பு முறைகள் தேவையாக இருந்தன. தனியார் வசம் இருக்கும் பொருட்களும் தேசிய அளவில் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும் பட்சத்தில் அந்த வேலைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆனால் இவை மிகச் சிறிய அளவே. வெளியே ஆங்காங்கே தனியார் வசம் உள்ள கலைப் பொருட்கள் பலவும் மிக சீரழிந்த நிலையில் இருந்தன. உதாரணமாக தமேர்ல ராமா ராவ் என்பவர் புகழ் வாய்ந்த ஆந்திர ஓவியர். 1925ல் இவர் மறையும் வரை இவர் தீட்டிய ஓவியங்கள் ஆந்திராவில் மிகவும் பிரபலம். ஆனால் இவர் மறைந்த பின்னர் இவரது ஓவியங்கள் இவரது ஊரான ராஜ முந்திரியில் கவனிப்பாரற்று இருந்தன. அரசாங்கம் இவற்றை எடுத்து சீரமைக்கப் போதுமான பணம் இல்லை. இந்த நிலையில் “நாங்கள் இன்டாக்கில் இந்த ஓவியங்களை புனரமைக்க தயாராக இருக்கிறோம். ஆனால் குறைந்த பட்சம் இவற்றை சரிவர மூட்டை கட்டி எடுத்து செல்லும் செலவையாவது ஏற்றுக்கொண்டால் பரவாயில்லை. இதுவே இன்றைய தேதியில் 2 லட்சம் ஆகிவிடும்.” என்கிறார் சுகந்த பாசு.
ஆரம்பத்தில் அரும் பொருட்காட்சியகங்கள் இது போன்ற கலைப் பொருட்கள் சீரமைக்கும் பணியில் பணியாற்ற விஞ்ஞானம் பின்புலமும் கலைப் பின்ணனி உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து வந்தன. பாசு, மற்றும் குப்தா போன்றோர் ஆரம்ப கால முன்னோடிகள். “அடிப்படையில் நான் ஒரு கெமிஸ்ட்ரி மாணவன். ஆனால் கல்கத்தாவில் கலைக் கல்லூரியில் கலையும் படித்திருந்தேன். இந்த நேஷனல் காலரி ஆப் மாடர்ன் ஆர்ட் 1950ல் என்னைத் தேர்வு செய்யும்போது கல்கத்தாவில் ஒரு பள்ளியில் நான் டிராயிங் மாஸ்டராக இருந்தேன். அப்போதெல்லாம் இப்படி கலைப் பொருட்களைச் சீரமைப்பது என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. இங்கு சேர்ந்த பின்னர் என்னை இத்தாலியில் பயிற்சி பெற அனுப்பினார்கள். இன்று உலகில் பல இடங்களில் இப்படி கலைப் பொருட்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளேன்.” என்கிறார் குப்தா.
சீரமைப்பு என்பது பொதுவாக வெறும் ரிப்பர் வேலைதான் என்று நமக்குத் தோன்றுகிறது. பாசு போன்ற முழு நேர ஓவியர்களுக்கு எப்படி இப்படி சாதாரண ரிப்பேர் வேலையில் ஈடுபட மனம் வந்தது. இது ஒன்றும் ஓவியம் போன்று படைக்கும் தொழில் இல்லையே?
‘இதென்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்? எங்கள் தொழில் ஒரு மருத்துவப் பணிக்கு ஈடாகும்.” என்று பட்டென்று பதிலளிக்கிறார் பாசு. பாசு என்றில்லை; இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருமே தங்கள் வேலையை ஒரு மருத்துவப் பணி போல்தான் அணுகுகிறார்கள். பிரதீபா ஜலானி என்று ஒரு ஓவியர். இவரும் இன்று பெருமளவில் கலை நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ளார். சொந்தமாக கலை நிர்மாண நிறுவனம் ஒன்றும் வைத்திருக்கிறார். “இந்தத் துறையும் மருத்துவத் துறை போன்றதே. விலை மதிப்பில்லாத ஒரு அரிய பொக்கிஷம் உங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதுவும் மிகவும் பழுதான நிலையில். அதை நீங்கள் மீண்டும் பழையபடி அதன் உண்மையான நிலைக்குத் திரும்ப அமைக்க வேண்டும். நம்மிடம் அதைக் கொண்டு வருபவர்களின் ஆர்வமும், அக்கறையும் சக மனிதர்களிடம் காட்டும் அதே உணர்வுகள். எப்படியாவது திரும்ப பழைய நிலைக்குக் கொண்டு வாருங்கள் என்று வேண்டுவார்கள். நமக்கு அது ஒரு சவால். சொல்லப்போனால் இப்படி பழுது பார்ப்பதற்கு, புதிதாக ஒன்றைச் செய்வதைவிட இன்னும் அதிக நேரம் ஆகும். புதிதாக உருவாக்குவதைவிடவும் பழையதை அதன் பழைய நிலைக்கு கொண்டு செல்வது மிகக் கடினம்; நேரமும் கூட.” என்கிறார் இவர். ரூபிகா சாவ்லா என்னும் ஓவியர் மற்றும் கலை புனரமைப்பவர் சண்டைக்கே வந்து விடுகிறார் – தன் வேலையை யாராவது ரிப்பேர் வேலை என்று சொன்னால்! அதோடில்லை. இப்போதெல்லாம் இந்த புனரமைப்பு வேலை ஒரு பாப்புலர் தொழிலாக அமைந்துவிட்டது என்று சொல்லிப் பாருங்கள்….. வரிந்து கட்டிக்கொண்டு விளக்குவார்; “ஏதோ மாறிவரும் ரசனை என்று நினைக்காதீர்கள்; இது மிகவும் அவசியமான ஒரு பணியாகும். நாட்டில் எத்தனை கலைச் செல்வங்கள் அழியும் நிலையில் உள்ளன? இது ஒரு அத்யாவசியமான தொழில். மருத்துவத் துறையை பாப்புலர் துறை என்றழைப்பீர்களா? முன்பெல்லாம் மக்களுக்குத் தங்களிடம் உள்ள தொன்மையான கலைப் பொருட்களை மீண்டும் அதன் பழைய நிலைக்கு கொண்டுவர முடியும் என்பதே தெரியாமல் இருந்தது. பலர் தங்கள் வீட்டு பரணில் எத்தனையோ பொக்கிஷங்களைப் போட்டு வைத்திருப்பார்கள் – என்ன செய்வது என்று தெரியாமல். என்னிடம் வரும் பல வாடிக்கையாளர்கள் கூறுவார்கள் – இந்தப் பணி பற்றி முன்பே தெரிந்திருந்தால் இன்னும் எத்தனையோ கலைச் செல்வங்களை சரி செய்து பாதுகாத்திருப்பார்கள். வீணாகிவிட்டது என்று தூக்கிப் போடாமல் இருந்திருக்கலாம் என்று பலர் சொல்லுவார்கள் என்னிடம்.”
இந்த புனரமைப்பு பணியில் கலைப் பொருட்களை வைத்திருக்கும் வாடிக்கையாளரின் மன நிலையும் ஒரு முக்கிய அம்சம். பிரதீபா சொல்கிறார்: “சின்ன வயசிலேயே ஏதாவது பொருள் உடைந்துவிட்டாலும், பாழடைந்தாலும் நான் பதறிப் போவேன். எப்படியாவது அதை திரும்பச் சரி செய்து விட வேண்டும் என்றுதான் முனைவேன். தூக்கி எறிய மனம் வராது. இந்த சுபாவம் காரணமாகவே நேஷனல் காலரி ஆப் மாடர்ன் ஆரட் அமைப்பில் தன்னார்வ ஊழியராக சேர்ந்தேன். பிறகு பல வெளி நாட்டு வல்லுனர்களிடம் பயிற்சி பெற்று இன்று பல இடங்களில் இந்தப் பணியாற்றுகிறேன்” என்கிறார்.
இந்தப் பணியில் தொழில்முறைப் பயிற்சி மிக அவசியம். ஒரு அரிய பொக்கிஷம் வேலை தெரியாதவர் கையில் மாட்டிக்கொண்டால் இன்னும் அதிகம் பழுதாக வாய்ப்புண்டு. ரூபிகா சொல்கிறார். “ஏதோ நாங்கள் இரண்டு பிரஷ்களை கையில் வைத்துக்கொண்டு அங்கே ஒரு தட்டு, இங்கே ஒரு தட்டு தூசி தட்டிவிட்டு வேலை பார்க்கிறோம் என்று நினைக்கிறார்கள். இந்தத் துறையில் இப்போது எக்கச்சக்க விஞ்ஞான ரீதியான இயந்திரங்கள் செய்முறைகள் இருக்கின்றன. ஏற்கனவே உடைந்த நிலையில் இருக்கும் பொருட்களைக் கையாள்வது இன்னுமே கடினம். பலருக்கு இது புரிவதில்லை.”
பழைய கலைப் பொருளில் வேலை செய்யும்போது அதன் ஒரிஜினல் தன்மை கெடாமல் சீரமைப்பது மிக அவசியம்,” என்கிறார் புனரமைப்பு மற்றும் அரும்பொருள் காட்சியகம் துறையில் பேராசிரியராக இருக்கும் டாக்டர் பட்நாகர். “எங்கள் மாணவர்களுக்கு முதலில் நான் சொல்வது, பழுதுகளை மட்டும் முதலில் சரி செய்ய வேண்டும் என்பதுதான். ஒரு அழகிய சிலையில் அல்லது ஓவியத்தில் இருக்கும் ஓட்டைகள், கறைகள் இவை அந்தப் பொருளின் அழகைக் கெடுக்கின்றன. இப்படிச் சரி செய்யும்போது ஒரிஜினல் அழகு கெடாமல் இருக்கிறதா என்று பார்ப்பது மிக முக்கியம். நாங்கள் போடும் ஒட்டுகள் வெளியே தெரியாமலும் இருக்க வேண்டும்.
“ஒரு முறை ஒரு அழகிய போர்சிலின் சிலை 36 துண்டுகளாக என்னிடம் கொண்டு வரப்பட்டது. அதை ஒட்டி பழைய நிலைக்கு கொண்டுவருவது எனக்கு ஒரு ஜிக் ஸா புதிர் போல இருந்தது.” என்று தன அனுபவத்தை பகிர்கிறார் பிரதீபா.
கலை புனரமைப்புப் பணியின் ஆரம்பம் மேலை நாடுகளில்தான். அதனால் நம் நாட்டு கலைச் செல்வங்கள் பழுதடைவதற்கும் – அதற்கான சீரமைப்புப் பணிகளுக்கும் மேலை நாட்டுப பணிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நம்ம ஊர் சீதோஷண நிலையில் பூஞ்சக் காளான்; பாசி மூலமும் ஈரப்பசையின் மூலமும் வீணாகும் வாய்ப்புகள் அதிகம். நம் பக்கங்களில் ஒரு வித தாவர கோந்து உபயோகித்து ஒட்டு வேலைகள் இருக்கும். ஆனால் இவை பாசி வளரத் தோதானவை. இதனால் நம் பழையப் பொருட்களில் பாசி வளர்ச்சியினால் வீணாகிப் போனது அதிகம் இருக்கும். “என்னிடம் வினோத் பிஹாரி முகர்ஜியின் பட்டுத்துணி ஓவியம் ஒன்று சீரமைக்க வந்தது. அதன் மேல் படர்ந்த பாசியை அகற்றவே பல நாள் பிடித்தது. ” என்கிறார் பாசு.
பழைய ஓவியங்களின் உண்மையான நிலை மாறாமல் இருக்க பழங்கால வண்ணங்களையே உபயோகித்துச் சீரமைக்க முனைகிறார்கள் இந்த வல்லுனர்கள். இந்த வண்ணங்கள் கொஞ்சம் விலை அதிகம். ஆனால் நாள் பட அப்படியே நிறம் மாறாமல் இருக்கும். ஒரு கலைப் பொருளை சீரமைக்க ஆகும் சிரமம், கச்சாப்பொருட்களின் விலை, ஆகும் நாட்கள் என்று பல விதங்களில் இந்த வேலையின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
முன்பெல்லாம் உடைந்த பொருளை ஓட்ட வைக்கக்கூடாது என்று ஒரு நம்பிக்கையும் நிலவி வந்தது. ஆனால் மக்கள் இன்று பழையனவற்றை மதிக்கவும் காப்பாற்றவும் முனைகிறார்கள். தவிர தொன்மைப் பொருட்கள் – antiques – இன்று கொண்டாடப்படும் ரசனை. இதனால் இப்படி கலை புனரமைப்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு அதிகம் வேலையும் வருகிறது. இவர்கள் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துள்ளது. இதற்கென்றே இன்று நிறைய பயிற்சிக் கூடங்கள் உள்ளன. ஆனால் ஒரு முறை புனரமைப்பு பணியில் ஈடுபட்ட பிறகு பல ஒவியர்கள் தங்கள் படைப்புகளை நிறுத்திவிடுகிறார்கள். “ஏதாவது அழகிய ஓவியம் பார்த்தால் கூட அதில் இருக்கும் ஒட்டைகள்தான் முதலில் தென்படுகிறது. இதை எப்படிச் சரி செய்யலாம் என்று மனது ஓட ஆரம்பிக்கிறது,” என்று சிரிக்கிறார் பிரதிபா.
மொத்தத்தில் பரணிலிருந்து இறங்கி வரும் பொருட்கள் இன்று பலவிதங்களில் பொருளாதார மேன்மையை பறைசாற்றுகின்றன…!