உங்கள் கேள்விக்கு என் பதில்கள் – 8

goat

கேள்வி 18: கிடை என்றால் என்ன? கிடை போட்டால் விவசாயத்தில் லாபம் உண்டா? – – மயில்சாமி, நடுப்பட்டி

தமிழகராதியில் கிடை என்றால் படுக்கை. விவசாயத்தில் ஆடு, மாடு, பன்னி, வாத்து ஆகியவற்றை மண்ணில் படுக்கவிடுவதுதான். கிடை போடும் மரபு இன்று அழிந்துவிட்டது. நெல்வயல்களில் நீர்கட்டி வாத்துக்கிடை போடுவதுண்டு. டெல்டா மாவட்டங்களில் வாத்தையும் காணோம். வாத்து முட்டை கூட விலைக்குக் கிடைப்பதில்லை. வாத்து, வாத்து முட்டைகளைத் தேடிப்பிடிக்க ஒடிசா, வங்க மாநிலங்களுக்குத் தான் செல்ல வேண்டும். நீர்வசதியுள்ள இடங்களில் பன்றியும் உண்டு. “பன்றிக்காய்ச்சல்” என்று கூறிப் பன்றிகள் கொல்லப்பட்டுவிட்டன. பன்றிக்கிடை அசாமில் உண்டு. பொதுவாக வடகிழக்கு இந்தியாவிலும், நீர்ச் செழிப்புள்ள ஆந்திர மாநிலத்திலும் வாத்து, பன்றிக்கிடை இருக்கலாம். பன்றி வளர்ப்பதிலும் எருமை வளர்ப்பதிலும் அசாமியர்கள் வல்லவர்கள்.
ஆடு வளர்ப்பதில் சிவகங்கை ராமநாதபுர மாவட்ட மறவர்கள் வல்லவர்கள். கூட்டம் கூட்டமாக செம்மறி ஆடுகள் மேட்டு நிலங்களில் மேய்ப்பர். பிற மாவட்டங்களிலும் ஆடுமேய்க்கும் ராமநாதபுர மறவர்கள் புலம்பெயர்ந்து ஆடுகளுடன் திரிவதுண்டு. தென்னந்தோப்புகளில் ஆடு, மாடு, பன்றிக்கிடை போடப்படுவதுண்டு. மேய்ச்சல் நிலம் இல்லாததால் மாட்டுக்கிடை மிக அரிது. வனப்பகுதியை ஒட்டிய மலைப்பகுதிகளில் கிடைமாடுகள் மேய்வதுண்டு. மலைப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் மாடு வைத்துள்ளவர்கள் பாலைக்கறந்து விட்டு ஓட்டிவிடுவார்கள். மேய்ப்பதற்கு ஆட்கள் செல்வதில்லை. மலைப்பகுதியில் மேய்ந்துவிட்டு மாலையில் தானாகவே திரும்பிவிடும். தீனிச் செலவு இல்லை.
தென்னந்தோப்பு வைத்துள்ளவர்கள் கிடை போடுவதுண்டு. மாட்டுக்கிடை, வாத்துக்கிடை, பன்றிக்கிடை அற்றுவிட்டது. ஆட்டுக்கிடை மட்டுமே உள்ளது. இவ்வாறு கிடை போடும்போது பிராணிகளின் சாணம், மூத்திரம் மண்ணில் விழுந்து மக்கி மண்ணை வளப்படுத்துவதால் விளைச்சல் கூடுகிறது. மண்ணை வளப்படுத்த கிடைப்பிராணிகள் தேவைதான்.

கேள்வி 19: மாற்றுப் பயிர்த்திட்டம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வேளாந்துறை அறிவித்ததே. அது செயலாயிற்றா?
-ராஜீவ், ஸான்னமராவதி

விவசாயிகளுக்கு நிறைய லாபம் உண்டு என்ற நோக்கத்தில் தமிழ்நாட்டின் தட்பவெட்பம் பற்றிய உணர்வை மறந்து பீட்டுக்கிழங்கு, வனில்லா, மக்காச்சோளம், ஏற்றுமதிக்குரிய பலதரப்பட்ட மூலிகைகள் இவற்றில் அடக்கம். மக்காச்சோளம் தவிர மற்ற பயிர்கள் வெற்றி பெறவில்லை. மக்காச்சோளை சாகுபடியின் வெற்றிக்குப் பன்னாட்டு விதை நிறுவனங்கள் பின்புலம். வேளாண்துறை விதை வழங்கவில்லை. தமிழ்நாட்டில் இன்று அரிசிக்கு அடுத்தபடியாக மக்காச்சோள சாகுபடி உள்ளது. ரசாயன உரப்பயன்பாடு, பூச்சிமருந்து, களைக்கொல்லி ஆகியவை புஞ்சை நிலத்திலும் புகுந்து விளையாடுகிறது. ஆசை காட்டி மோசம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் வீரிய ஒட்டி – பிட்டி விதைகளால் நாம் மண் வளத்தை இழந்து வருவதைக் காணமுடிகிறது. இன்று ஆடு மாடு வளர்ப்பை விடக் கோழி வளர்ப்பே பெருகிவிட்டது. பெரிய பெரிய கூண்டுகளில் குஞ்சுகளை 10,000, 20,000 என்று வாங்கி எடை உயர்ந்த கோழிகளாக வளர்க்க அக்குஞ்சுகள் மீதே ஆண்டிபயாடிக் பூச்சி மருந்துக்கலவையை மழை போல தெளிக்கப்படுகிறது. கோழிகள் எடை கூடியதும் விற்பனைக்கு வரும். கொதிக்கும் நீரில் கோழியை அமிழ்த்தி இறகுகள் நீக்கப்பட்டு முழுக்கோழி உரித்த நிலையிலும் கிடைக்கும். துண்டுகளாகவும் கிடைக்கும்.
கோழி வளர்ப்போர்க்கு வேலை பராமறிப்பதுதான். கோழி நிறுவனங்கள் குஞ்சுகளைக் கொடுத்து தீவனம், மருந்து ஆகியவற்றையும் வழங்குவார்கள். எடை கூடியதும் வளர்ப்போர்க்கு கிலோவுக்கு இவ்வளவு என்று பணத்தை வழங்கிவிடுவார்கள். இறைச்சிக்கோழி வளர்ப்புக்கும் முட்டை கோழி வளர்ப்புக்கும் முக்கிய உணவு மக்காச்சோள மாவு என்பதாலும் மாட்டுத்தீவனத்தில் மக்காச்சோளம் பங்களிப்பு உள்ளதாலும் மக்காச்சோளத்திற்கு விலை உள்ளதால் விவசாயிகள் மீண்டும் மீண்டும் மக்காச்சோளம் பயிரிடுகிறார்கள். அதே சமயம், சிறுதானிய சாகுபடி பற்றிய திட்டம் சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்டு ஆங்காங்கே வறட்சியில் வளமை காண சிறுதானிய சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இன்று சிறுதானியங்கள் வரிசையில் சாமை, திணை, வரகு, குதிரைவாலி ஆகியவை புத்தாக்கம் பெற்று வருவதால் அரோக்கியமான மாற்றுப்பயிர்கள் நாம் மறந்து விட்ட சிறு தானியங்களே. சிறு தானியங்களைப் பற்றி மேலும் விவரம் பெற நான் எழுதியுள்ள “வறட்சியில் வளமை – சிறுதானிய சாகுபடி” என்ற நூலை வாங்கிப் படிக்கலாம். மாற்றுப்பயிர்கள் பற்றிய விவரங்கள் நிறைய உண்டு. இந்த நூலை நியூசெஞ்சரி புத்தக நிறுவனம் நூறு ரூபாய் விலையில் இந்த ஆண்டு வெளியிட்டுள்ளார்கள். என்னிடமும் கிடைக்கும்
(முற்றும்)

இந்த இதழுடன் “உங்கள் கேள்விகளுக்கான விடைகள்” விடை பெறுகிறது. அடுத்த இதழில் “இந்தியப் புராணவியல்” என்ற பெயரில் புதிய தொடரை எதிர்பார்க்கலாம். “ஆயிரம் தெய்வங்கள்” புதிய பெயரில் மீண்டும் ஆரம்பம். கிரேக்க புராஅணத்தை ஆராய்ந்த நாம் இந்திய புராணங்களை மறந்துவிடலாமா என்ற கேள்விக்கு விடை தேடுகிறது. நமது கலாச்சாரம் பற்றிய புரிதலை இக்கதைகள் நன்கு உணர்த்தும் என்ற நம்பிக்கையுடன்.

ஆர்.எஸ். நாராயணன்
24.1.2015

0 Replies to “உங்கள் கேள்விக்கு என் பதில்கள் – 8”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.