கணக்குவழக்கு (அல்லது தொலைபேசி)
–கேரா பென்ஸன்
எப்பவாவது
நான் தொலைபேசியை எடுக்கிறேன்
மறுமுனையில் ஒரு நபர்
நபர் பேசுகிறார்.
சில நேரங்களில்
நான் முந்திக்கொண்டு
சொல்வதுண்டு
இங்கிருப்பது நான்
அங்கே யார் என.
சில நேரங்களில்
கவலைகொள்கிறேன்
சில சமயங்களில்
மிக அதிகமாகவும்.
கவலைகள் மிகும் சமயங்களில்
தொலைபேசியை எடுக்கிறேன்
என் கவலைகள் பற்றி
எவரிடமாவது சொல்ல.
சில சமயங்களில்
என்னை பேசித்தேற்றுவர். ஆனால்
சில சமயங்களில்
பயனளிப்பதில்லை
என்பதால் போனை வைக்கிறேன்.
என்னை தேற்றும் முயற்சிகள்
பயனளிக்காதபோது
தேற்ற முயன்றவரை
மன்னிப்பு கேட்கவென
மீண்டும் அழைக்கிறேன்
மன்னிப்புக் கேட்டபின்
அது ஏற்று கொள்ளப்படுமா
என்று கவலை கொள்கிறேன்.
என் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படுகையில்
நிம்மதியடைகிறேன்
இருந்தும்
ஆரம்ப கவலையை
நினத்துக்கொள்கிறேன்
என் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட காரணம்
நான் ஏற்கனவே இப்படி செய்திருக்கிறேன்
பல முறைகள்
என்பதும்.
நான் அழைத்தபின்
கவலையுற்று மன்னிப்புக்கோராதபோது
எதிர்முனையில் இருப்பவர்
கவலை கொள்கிறார்.
நிறைய பேசியும்
குறைவாகவும் மன்னிப்பு கேட்கிறேன்.
தொலைபேசியில்
சில சமயங்களில்
நான் தன்னம்பிக்கையுடன்
தொனிப்பதும் உண்டு.
சில நேரங்களில்
வெளி மாநிலங்களில் அழைத்து
செய்தியிடுகிறேன்
மீண்டும்
பேச விரும்பாதவர்களிடம்
எண்கள் தராமலும்.
என் எண்களை எப்படியாயினும்
கண்டுபிடிக்கமுடியும்
தொழில் நுட்பத்தினால்
அவர்கள் விரும்பினால்.
என்மேல்
கவலை கொள்ளாதவர்கள்
என்பதால்
அவர்கள் என்னை
அழைப்பதுமில்லை.
நான்
மன்னிப்புக் கோருவதுமில்லை
அவர்களிடம்
ஒருபோதும்.
– வேணுகோபால் தயாநிதி
கேரா பென்ஸனின் படைப்புகள் நியூயார்க் டைம்ஸ், பாஸ்டன் ரிவ்யூ, பெஸ்ட் அமெரிக்கன் பொயட்ரி, ஃபென்ஸ் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. சில கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். நியூயார்க், பென்ஸில்வேனியா போன்ற பல்கலைக்கழகங்களில் பணியாற்றியதுடன் “சிறைக்கைதிகளுக்கு கவிதை” இயக்கத்தின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
oOo
வெளிவாயில்
ரீடா டோவ்
நம்பிக்கை உதிரும் கணத்தில், விசா வழங்கப்படுகிறது
திரைப்படங்கள் போன்றதொரு தெருவுக்குக் கதவு திறக்கிறது,
சுத்தமாய் மனிதரும், பூனைகளும் இன்றி; இங்கே புறம்பானது
நீ நீங்குவது உன் தெருவை என்பது. விசா வழங்கப்பட்டுள்ளது,
‘தற்காலிகமாய்’ – அச்சுறுத்தும் ஒரு சொல்.
உன் பின்னே நீ மூடிய ஜன்னல்கள்
இளம் ரோஜா வண்ணமாகிக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு காலையையும் போலவே..
இங்கே சாம்பல் வண்ணம். டாக்ஸியின் கதவு
காத்திருக்கிறது. இந்தத் துணிப்பெட்டி
உலகத்திலேயே மிகச் சோகமான பொருள்.
ஆகட்டும், உலகம் திறந்து கிடக்கிறது. இதோ இப்பொழுது காரின்
கண்ணாடியினூடே வானத்தின் முகம் சிவக்கத் தொடங்குகிறது.
உன்னைப் போலவே அன்று உன் தாய்
இவ்வுலகில் ஒரு பெண்ணாய்
இருப்பதெனில் என்னவென்று சொன்னபோது.
– உஷா வை.