மூன்று களவாணிகள்

teashop (2)
“எல கைலாசம் சார மழ வாரதப் பாத்தா கடயோடக் குச்சில மாத்திட்டு புதுசு கெட்டிருவ போலுக்க”சைக்கிள் ஸ்டாண்ட் போட்டவாறே வானத்தை ஏறிட்டுக் கூறினான் முருகன். ஒரு பெட்டி நிறைய நீரை சல்லடையில் அள்ளித் தெளித்தவாறே கிழக்கு நோக்கிக் கடந்தது சாரல்.மெல்லிய காற்று மேனிக்குள் அடர்த்தியாய் இறங்கியது.
“ஓங்கண்ணுல மண்ணள்ளித் தட்ட இப்போதான் தொடங்கிருக்கு அது பொறுக்கலியால.மழ வந்தா உம் கோழியளுக்கு சீக்கு வந்துருமுன்னு வார மழய வையலாமால? கோட்டிக்காரப்பயல. இன்னைக்கு நல்லா வசமா எங்கேயோ மாட்டிருக்கெ. பெட்டி புல்லா கோழியா தெரிதடே”என்ற கைலாசம் பாய்லருக்குள் மரக்கரியை நான்காவது முறையாக அள்ளித்தட்டினான்.
“அழுது அழுதே கெடுத்துட்டியல்லா. அக்காவ காங்கல”என்றவாறே வெளியில் கிடந்த பெஞ்சில் ஒருபுறம் அமர அதன் மறுமுனை தூக்கிக் கொண்டது.” எளவு இந்த பெஞ்சத்தான் மாத்தி தொலயம்ல. சம்பாதிக்க துட்டலாம் கொண்டு எங்கல வைக்க”
“என்னய்யா. போண்டா போட உள்ளி வெட்டிக்கிட்டு இருக்கென்”என்று அதனிடையே குரல் மட்டும் கேட்டது.
“ஓ செரி செரி நடக்கட்டும் நடக்கட்டும். எலெ ஒரு நல்ல டீயாப் போடு.காலேலப் போட்ட அதே தூள அவிச்சி ஊத்தாத. புதுத் தூளப்போட்டுத்தா”
கைலாசம் தோளிலிருந்த துண்டை எடுத்து உதறி மீண்டும் போட்டுக் கொண்டான். தேயிலையை மாற்றி சிறிது நேரம் வெந்நீருக்குள் ஊறப் போட்டான்.
“இன்னைய பேப்பரு எங்கவே. காலேல அவசரத்துல கோழியளுக்கு எங்கயோ சீக்குனு போட்டுருந்தான். படிக்காம பேட்டேன்?”
உள்ளுக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருந்த தினத்தந்தியை நீட்டினான். கோழியைப் பற்றிய செய்தி வந்திருந்த வட்டாரச் செய்திகளுக்கு மறுபுறம் சினிமா படம் இருந்ததால் ஏற்கனவே அதை வெட்டி கடைக்கதவில் ஒட்டி விட்டான் கைலாசம்.
“பேதியெடுக்க இந்த படத்துவள நாளைக்கு வெட்டுனா என்ன? தாயோளி எதாது மருந்து கிருந்து குடுக்கணும்னு போட்ருந்துருப்பான் கெடுத்திட்டியலே கரிப்பயல”
“ஓம் கோழியளுக்கு ஒருக்காலமும் சீக்கு வராதுல.மூக்கால அழுவாத”என்று ஆற்றிய டீக்கிளாஸை அவனருகில் வைத்தான் கைலாசம்.
“இந்த படுக்காளிப்பயலுவ நேத்து கிட்டப்பா அண்ணாச்சி கிணத்துல மோட்ர துக்கிட்டான்னு காலேல சத்தக்காடா இருந்துச்சு என்னாச்சுல”கேட்டவாறே எழுந்து சாரத்தை விலக்கி டவுசர் பையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த ஏவிடி தேயிலை பையிலிருந்து பீடியை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான் முருகன்.
“சவத்துப்பயலுவ என்னக்கி ஒத்துகிட்டானுவ இப்ப மட்டும் ஆமானு சொல்ல.போலிசுக்கு போவ பயப்புடுதான் கிட்டப்பா. எளவு போனது போட்டும் கிடக்க பச்சையள எப்பிடி காவுந்து பண்ணுததுன்னு பொலம்புதான். பாவமாதான் இருக்கு”என்ற கைலாசம் வெட்டிய உள்ளியை அள்ளி கடலை மாவோடு பிசைய ஆரம்பித்தான்.
கண்கள் எழுத்துக்களை மெதுவாக மூளைக்குக் கடத்த, டீயும், பீடியும் நரம்பை கிளர்ச்சியுறச் செய்தன முருகனுக்கு. சூரியன் எப்.எம்மில் வெற்றி நிச்சயம் பாடல் தெளிவில்லாமல் இரைந்து கொண்டிருந்தது.
”அந்த எளவ அமத்தித்தான் போடம்ல.என்ன கெடந்து ஒப்பாரி வக்கி”
கடைக்கு அடுத்தாற்போலுள்ள ஆலமரத்தின் விழுதைப் பிடித்து இழுத்து ஒருவர்மேல் ஒருவர் தண்ணீர் தெறிக்குமாறு கடைக்குள் நுழைந்தனர் காமராஜ், ராமு, பட்டாணி ஆகிய மூவரும்.
“மூணு டீ போடுவே மயிராண்டி”என்றவாறே முருகன் கையிலிருந்த பேப்பரை பிடுங்கினான் காமராஜ்.
“எல செத்தறுதலி கொண்டால படிச்சிட்டு தாரேன்”
“ஏழாப்பு படிக்கும்போது நீலா டிச்சரு அவ்ளொ சொன்னாவ படிக்கதுக்கு.பள்ளிக்கொடத்த அதுக்குபெறவே ஏத்தே பாக்காத நாயிலாம் இப்போ இப்டி கெடந்து படிக்கி பேப்பர”என்றான் ராமு பீடியைப் பற்றவைத்தவாறே.
“அதான் இந்த கோழியள பிடிச்சிகிட்டு அலய வேண்டியிருக்கு. நீயென்னமோ கிழிச்ச மாதி பேசுத.ஏழுக்கும் ஒம்போதுக்கும் என்னல பெரிய வித்தியாசம்.ஆமா காலேல என்னல சண்ட போட்டுக்கிட்டு கெடந்திய”
“அது ஒரு சப்ப மேட்டுரு பாத்துக்க.நம்ம கிட்டப்பா மோட்டர எவனோ தூக்கிட்டானாம். எவனோ இல்லாது பொல்லாது சொல்லி எங்க மூணு வேரையும் கோத்துவுடப் பாத்துருக்கானுவ.இவனும் நம்பிட்டான். செரி மயிரப்புடுங்கி பெருசா நீட்டாத.ஒரு கோட்டருக்கு தேத்து. கோழிலாம் இன்னக்கி கூடைக்கி அடங்காம கெடக்கு”என்று நெருங்கினான் ராமு.
மூவரும் காலையில் மோட்டார் பஞ்சாயத்து முடிந்ததும் பட்டாணி காசில் குடித்திருந்தார்கள்.அது மதியம் தெளியும் போது மாட்டு வியாபாரி சண்முகம் வர அவனிடம் தரகு பார்த்து ஒரு கோட்டருக்கு தேற்றினார்கள். அதன்பிறகு தாயம் விளையாடியதில் போதையெல்லாம் இறங்கவே கைலாசம் டீக்கடையை நோக்கி வந்தனர். அங்கு வந்ததற்கு முக்கியமான காரணமே எப்படியாவது யாரிடமாவது குடிக்கக்காசு பார்த்துவிடலாம் என்பதே.
“எல கைலாசம் இந்த பயலுவ குடிச்ச டீக்கு நானே காசக் குடுத்துருதேன். நான் கெளம்புதேன் ஆள விடுங்கப்பா.நாலு போண்டா கெட்டுல சின்னப் பிள்ளியளுக்கு”
“உங்கிட்ட என்ன பிச்சையால எடுக்கோம்”என்றான் பட்டாணி.
“இத நான் என் வாயாலவேற சொல்லணுமால” என்று கட்டிய போண்டாவை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான் முருகன். இதற்குள் கிழக்கிலிருந்து கடையை நோக்கி தள்ளாடியவாறே வந்து கொண்டிருந்தான் குட்டி. அது பக்கத்து ஊரிலிருந்து வரும் கிளைச்சாலை.
“எல இந்தக் கூயிமொவன் நம்மள வுட்டுட்டு போயி குடிச்சிட்டு வாராம் பாரேன். இவன இப்பிடியே வுட்டா நம்மள மதிக்கமிண்டாம்ல. இன்னக்கி ஒரு வழி பண்ணுதென் பாரு”என்று கத்தினான் ராமு.
“எப்பா சண்ட கிண்ட போடுததா இருந்தா ஊருக்கிள போங்க. எங்கட மின்னாடி போடாதங்க. போனதடவ செல்லப்பாண்டியன் கூடபோட்ட சண்டையில ஒடஞ்ச இந்த பால் பாத்திரத்தயே மாத்தல இன்னும்”என்றவாறே வெளியே வந்தான் கைலாசம். முழங்கை அருகில் கொஞ்சம் மாவு ஒட்டிக்கொண்டிருந்தது.
“”எல நாங்கலாம் வந்து டீ குடிக்கலனா ஓம் கடைக்கி நாயி கூட வராதல”என்றுவாறே சிரித்துக் கொண்டனர் மூவரும்.
“என்ன அண்ணாச்சி யாவாரம் நடக்கோ”என்று எந்த பதிலுக்கும் எதிர்பார்க்காமல் சைக்கிளில் கடந்தார் கீழத்தோட்டத்து செட்டியார். ராமு காமராஜ் தோளை இடித்து செட்டியார் சென்ற திசையில் கண்காட்டினான்.
இவனுவட்ட வாயக்குடுத்தமுன்னா நம்ம பொழப்புல மண்ணள்ளிப் போட்டுறுவானுவ என்றெண்ணியவாறே “என்னணியும் போங்க. எனக்கு ஒய்த்திரியம் பண்ணாம இருந்தா சரி”என்றான் கைலாசம். செட்டியாருக்கு “ஆமோய்”என்ற பதில் போதுமானதாக இருந்தது.
அதற்குள் கடையை நெருங்கி விட்டிருந்தான் குட்டி. கருவிழிகள் ஒரு இடத்தில் நிலைகொள்ளாமல் திணறிக்கொண்டிருந்தன. இடது கையை முழங்கைக்கு மேல்வரை மடித்து விட்டிருந்தான்.வலது கையும் காலையில் அப்படியே மடிக்கப்பட்டிருந்திருக்க வேண்டும். அது இப்போது நீண்டு தொங்கிக் கொண்டிருந்தது.பத்து ரூபாய் தாள் ஒன்று பையிலிருந்து வெளியே துருத்திக் கொண்டிருந்தது.
“தாய்ளி எங்கள வுட்டுட்டு போயி குடிக்க அளவுக்கு நீ பெரிய மயிராயிட்டியோல?”என்று நாக்கைக் கடித்துக்கொண்டே குட்டியின் சட்டையைப் பிடித்தான் காமராஜ்.
“எல காமராசு உங்கிட்ட எந்த வம்புக்கும் நா வரல. என் வழில நீ வராத.மொத சட்டயிலருந்து கைய எடு”
“ஓன் வழில ஓன் வீட்டு நாய்கூட வராதுல கோட்டிக்காரப்பயல. இனும எண்ணக்காது வா குடிக்கபோணும்னு அப்ப விச்சிக்கிடுதேன்”
“களவானிப்பயலுவட்ட எனக்கு என்னல சவாசம். என் நாயப்பத்தி உனக்கு என்னல தெரியும்.சம்மங்குளத்துல இருந்து கொண்டுவந்த வேட்ட சாதில. அதமாரி மொச பிடிக்க இந்த ஊர்ல நாய் இருக்கால.ஒங்கள மாதி அடுத்தவன் சாமான களவாண்டு திங்கமாட்டம்ல”
“மயிரப்புடுங்கி செருப்பு பிஞ்சிரும் இதுக்குமேல எதாது பேசுன்னா. நாங்க களவாண்டத நீ பாத்தியால?”காமராஜ் உட்கார்ந்திருந்த பெஞ்சிலிருந்து எழும்பி அடிப்பதுபோல் அருகில் சென்றான்.
“எல சண்ட கிண்ட போடாதிய.நீ வீட்டுக்குப் போயேம்ல.ஒம்பொண்டாட்டி தேடுனா எதோ பிரச்சினயாம்லா”என்றான் கைலாசம் போண்டா மாவைவை எடுத்து எண்ணெய்க்குள் போட்டவாறே.
“என்ன பிரச்சின. எம்பொண்டாட்டிய ராணி மாதி வச்சிருக்கென்.ஒன்னமாதி அடுப்படில போட்டு கொல்லல”என்று அவர்களை விட்டுவிட்டு கைலாசத்திடம் நெருங்கினான் குட்டி.
“செரிப்பா நான் என் பொண்டாட்டிய கொடுமதான் படுத்துதேன். நீ உத்தமபுருசன் வீட்டுக்குப்போ”
“போல சின்னப்பயல.நீ மயிரு வீட்டுக்கு போன்னா போயிரணுமோ”
அவர்கள் மூவரும் சிரித்துக் கொண்டிருந்தனர் இவனது செய்கைகளை ரசித்தவாறு.
“உம்பொண்டாட்டி மூணு தேரம் வந்து தேடிட்டு பேட்டா.போல வீட்டப்பாத்து “என்றாள் கைலாசத்தின் மனைவி கடைக்குள் இருந்தவாறே.
“முப்புடாதியக்கா உள்ளதான் இருந்தாவளாங்கும்.ஓஹோ போண்டாவுக்கு உள்ளி வெட்டு நடக்கோ?”எட்டிப்பார்த்து கூறினான்.
“ஒம் மொவளுக்கு காச்ச அடிக்கினு சொன்னா.வீட்டுக்கு போயி என்னனு பாருல”
“நீ சொன்னா நான் கேப்பேன். இதயே உம் புருஸன் இன்னொருதடவ சொன்னானு வையி கொதிக்க தண்ணிய தூக்கி மூஞ்சில ஊத்திப்புடுவேன்”
இந்தா என்று நான்கு போண்டாக்களைக் கட்டி கையில் கொடுத்தாள் முப்புடாதி.
“நீ ஒருத்தி இந்த ஊருல இருக்கதாலதாம் இந்த ஊர்க்கு மழயே பெய்யிது பாத்துக்க.இல்லனா இந்தா நிக்கானுவளே தீஞ்சபயலுவ இவனுவ இருக்க எடத்துலலாம் மழ வருமா?”
“இந்தா ஒங்களத்தான”
“யோயா ஒங்களத்தான”
“எல கோட்டிக்காரப் பயல உம் பொண்டாட்டி கூப்டுதா பாரு”என்றான் காமராஜ்.
தள்ளாடியவாறே போண்டா பார்சலோடு கடந்தான்.
மூவரும் ஏதோ தீர்மானித்தவர்களாய் குளத்துக்கரை கடந்து செட்டியார் தோப்பு வேலிக்குள் பட்டு நின்ற கள்ளியை முறித்து பாதை செய்து நுழைந்தனர். நுழைந்த இடத்தில் கடலைச்செடிக்கு அப்போதுதான் நீர் பாய்ச்சப்பட்டிருந்தது. பாத்திக்குள் மிதிக்காமல் வரப்பையடைந்து அருகிலிருந்த பெரிய மாமரத்தின் அடியில் அமர்ந்துகொண்டனர். காட்டுப்பூச்சிகள் நிசப்தம் கலைத்தன.
“எல. செட்டியான் இப்பதான் பேருக்கான். கிட்டப்பா பயலப் பாத்தா பாவமாத்தான் இருக்கு.ஓடைக்கிள மறச்சி போட்டுருக்க அவன் மோட்டர திருப்பி அங்க கொண்டு வச்சிட்டு,செட்டியான் மோட்டுர தூக்கிருவோம் என்னல”காமராஜ் கூறியத ஆமோதிப்பதுபோல் தலையாட்டினர்.
“இப்பம் எடுத்தம்னா மாட்டிக்கிடுவோம்.நல்லா இருட்டட்டும்.மேல மாங்கா கெடந்தா பறில பட்டாணி திம்போம்”என்ற ராமுவிடம் “இது எளவு புளிச்சி கெடக்குமே”நசுக்கிய கணேஸ் புகையிலையை உதடுக்குள் திணித்துக்கொண்டே ஏறத்தொடங்கினான் பட்டாணி.
“எல வேலிப்பக்கம் ஒரு கண்ணு இருக்கட்டும்.செட்டியான் திரும்பி வந்துறப்போறான்”
“நீ ஏறி பறிடே. அதெல்லாம் நாங்க பாத்துக்கிடுதோம்.பெருசா நீட்டாத”என்ற காமராஜ் குத்தவைத்தவாறு பீடியைப் பற்றவைத்தான்.
விறுவிறுவென பட்டாணி மரத்திலேற காமராஜ் மெல்ல பம்ப்செட் அருகில் நகர்ந்து மோட்டாரை எடுப்பதற்கான வழியைத் தேடினான். கதவிற்கு தாழ்ப்பாள் ஒன்றும் இல்லை.கதவைத் திறந்ததும் எலிகள் அங்கும் இங்கும் ஓடின.மூலையில் இருட்டிற்குள் ஏதோ நெளிந்தது. மோட்டார் அறைக்குள் இல்லை.வேகமாக வெளியே வந்து கிணற்றுக்குள் தேடினான். நீர் அடியில் தரையொட்டி கிடந்ததால் முப்பதடிக்கு கீழே உள்ள திண்டில் இருந்தது மோட்டார்.
“எல பட்டாணி மோட்டுரு கெணத்துக்கிளலா இருக்கு.நீதான் எறங்கணும் பாத்துக்க”
“அதுக்கென்னடே எறங்கிட்டா போச்சி”என்று கூறியவாறு தொப்பென்று குதித்தான் பட்டாணி. துண்டில் நான்கைந்து மாங்காய்கள் முணியப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தன. அவசர அவசரமாக வாயிலிருந்த புகையிலையை துப்பிவிட்டு ஒரு மாங்காயைக் கடித்தான் பட்டாணி.
“ஏ அப்பா புளிப்பு உச்சிய புடுங்குத”
“இப்பதானல போயில வச்ச. கொஞ்ச தேரம் கழிச்சி தின்னா என்ன குடிமொழுவி போயிருமாங்கும்.போ அந்த கதவுகிட்ட உப்பு பொதிஞ்சி வச்சிருக்கானுவ,எடுத்துட்டு வா”என்று மிதித்து பட்டாணியை விரட்டினான் காமராஜ். கடித்த மாங்காயோடு சென்று உப்பு பொட்டலத்தை எடுத்துவந்து தின்றனர்.
“எல ஓடை வழியா ஒரு மையிலு நடந்தாதான் கிட்டப்பா பம்ப்செட்டுக்கு போ முடியும். அதுக்கு இடையில நாலு வயலு இருக்கு. செம்புலிங்கம் மட்டும் எத்தின மணி வர இருக்கானு சொல்ல முடியாது. அதனால பட்டாணி நீ விறுவிறுனு போயி செம்புலிங்கம் நிக்கானா பேட்டானானு பாத்துட்டு வா”கடைசி வாய் மாங்காயை கடித்துக்கொண்டே கூறினான் காமராஜ்.
“என்னயே ஏம்ல ஏவுத.ராம போ சொல்ல வேண்டியதான”
“புண்டேமயிறு போன வாரம் குத்தபாஞ்சான்ல ஐனூறு மீட்டரு வொயர வெட்டி ஒத்தையில கொண்டு வந்தென்.நீயும் தான பொடையில ஊத்துன. கணக்கு மயிறு பாத்தனா இதோட எந்திச்சி பேறு”ராமு அடிப்பதுபோல் கூறினான். அதோடு எதுவும் பேசாமல் விறுவிறுவென ஓடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் பட்டாணி.
“எல அவன் ஒரு லூசு பய அப்பிடிதான் பேசுவான்.சும்மா இருப்பியா.அவன் போயி யாருட்டயாது போட்டு குடுத்துட்டானு வையி. பெறவு உள்ளதான் இருக்கணும்.அஜித்துனு புது இன்ஸ்பெக்ட்ராம். வடலம்பட்டில நாலு வேற பிடிச்சி அடி கொன்னு எடுத்துருக்கான் தெரியும்ல”கிசுகிசு குரலில் கூறினான் காமராஜ்.
தூரத்தில் ஓடை முகட்டில் பீடிக்கங்கு மட்டும் ஒற்றைப் புள்ளியாய் தெரிந்தது.”ச்ச ச்ச. நம்ம பட்டாணிய என்ன வையிதாலும் அந்த விசயத்துல மட்டும் யாருட்டய சொல்லமிண்டாம்ல. செரி வரட்டும் பாப்பம்”ராமு சமாதானப் பட்டுக்கொண்டான்.
சிறிது நேரத்திற்குள் தடதடவென ஓடி வரும் சத்தம் தூரத்தில் கேட்கவே ராமுவும்,காமராஜும் எழுந்து நின்று கொண்டனர். அதற்குள் அவர்களை நெருங்கிவிட்டான் பட்டாணி.”எல செம்புலிங்கம் பேட்டான் பாத்துக்க. ஆனா அங்க வேற ஒரு குருப்பு ஓடைக்கிள என்னமோ பேசிட்டு இருக்கானுவ.சத்தத்த கேட்டா தெக்குத்தெரு செல்லப்பாண்டி குருப்பு மாதி இருக்குல”
“என்ன பேசுனானுவனு கேக்காம இங்க எதுக்குல வந்த. நம்ம மோட்டரு வேற அது கிட்டதான கெடந்துது. சரி வாங்கல போவோம்”காமராஜ் கோபத்தில் வரப்பை எட்டி உதைத்தான்.
சத்தம் வராமல் மெல்ல நடந்து அந்தப்பகுதியை அடைந்தனர். நிசப்தம். யாரையும் காணவில்லை.இரண்டு கருங்கல்லுக்கு இடையில் புதருக்குள் மோட்டார் மூடி வைக்கப்பட்டிருந்த இடத்தைத் துலாவினர்.மோட்டார் எங்கும் அகப்படவில்லை.
“அப்பமே சொன்னேன் எல மோட்டர இங்க வைக்கண்டாம்.பேசாம தெக்குமேட்டு வேலிக்கி கொண்டுபேருவோம்னு கேட்டாதான”ராமு விரக்தியானான்.
“இங்கருந்து தெக்குமேடு அஞ்சி மைலு. தூக்கிட்டு போமுடியாமதான இங்க வச்சோம். பெறவு நிதானமா வந்து எடுத்துக்கிடலாம்னு. இந்த மயிராண்டிய இதவந்து எடுப்பானுவனு என்னத்த கண்டோம். சரி வா. கிட்டப்பாவுக்கு குடுத்து வைக்கல.செல்லையா மோட்டரையாது தூக்குவோம்”
“இங்க மோட்டரு இருக்கது எப்படில கண்டுபிடிச்சிருப்பானுவ. இவனுவளுக்கு இருக்கு ஒரு நாளைக்கி”காமராஜ் தொடர்ந்தான்.
அசைபோட்டவாறே கிணற்றை அடைந்தனர்.
“எல பட்டாணி மயிறு சீக்கிரம் எறங்கு.ஸ்பேனர் பைய எங்கல வச்ச”
“இந்தா எங்கிட்டதான் இருக்கு”என்று கிணற்று திண்டிலிருந்து இறங்கத் தொடங்கினான் பட்டாணி. பாதி இறங்கும்வரை சிதிலமடைந்த படிக்கட்டுகள் இருந்தன. அதன்பின் பெரிய திண்டிலிருந்து சரிவாக சுவற்றில் புதைக்கப்பட்ட கல்லைப் பற்றிக்கொண்டுதான் மோட்டார் இருந்த திண்டிற்கு செல்ல வேண்டும் என்பதை தீக்குச்சியைப் பற்றவைத்து தெரிந்து கொண்டான். அதற்குள் பம்ப்செட்டுக்குள் கிடந்த கயிற்றை தயார் படுத்தினர் இருவரும்.
பம்ப் செட் வாசலில் இருட்டுக்குள் சிக்காகிக் கிடந்த கயிற்றை பிரித்துக் கொண்டிருக்கையில் பொத்தென்று கேட்டது. கயிற்றை அப்படியே போட்டுவிட்டு கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தனர். நீரின் சலம்பல் மட்டும் கேட்டது.
”பட்டாணி”
“பட்டாணி”
“பட்டாணி”
எதிர்குரல் இல்லாது போகவே இருவரும் கயிற்றைப் போட்டுவிட்டு அவசர அவசரமாய் கிணற்றுக்குள் இறங்கினர். தீக்குச்சியைப் பற்றவைத்துப் பார்க்கையில் தரையொட்டிக்கிடந்த நீரோடு அசைவற்று மல்லாக்கக் கிடந்தான் பட்டாணி.
 
 

0 Replies to “மூன்று களவாணிகள்”

  1. ராம்ஜி கதையில் வரும் அனைத்து வழக்கு மொழியும் இன்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களில் பயன்பாட்டில் இருக்கின்றன.நன்றி 🙂

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.