காலையில் எழுந்ததும் பில்டர் காபியுடன் செய்தித்தாளில் தலையை மூழ்கி வெளிவந்தால்தான் நம்மவர்களுக்கு அன்றைய பொழுது ஒழுங்காக ஆரம்பித்தது என்று ஆகும். இந்த இரண்டில் எது ஒன்று சரியாக இல்லையென்றாலும் பிரளயமே வந்தாற்போல் இருக்கும். நம் ஊர் பக்கம் இப்படியென்றால் வட இந்தியாவில் காபி இடத்தை தேநீர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.
சிங்கப்பூரில் இருந்தபோது ஒரு முறை ஜப்பானில் தேநீர் போடும் முறைகள், தேநீர் ரகங்கள், மற்றும் அதற்கு உபயோகிக்கப்படும் உபகரணங்கள் என்று ஒரு கண்காட்சியைப் பார்க்கப் போயிருந்தேன். அந்த சமயத்தில்தான் சென்னையில் பரவலாக டீ மட்டுமே குடிக்கும் வட இந்திய தகவல் தொழில் நுட்ப இளைஞர்களும் அதிகமானார்கள். அவர்களுக்கு சென்னையில் காபியே பிரதானமான பானமாக இருப்பதால் தேநீர் அவர்கள் விருப்பம்போல் கிடைப்பதில்லை என்று ஒரு குறை இருந்தது. இந்த சூழ்நிலையைப் பின்புலமாக வைத்து அன்று எழுதிய தேநீர் புராணம் இங்கே….
வருடம் 2001
“சென்னையில் தேநீர் குடிப்பவர்கள் சங்கம் என்று ஆரம்பிக்கும் நிலை வரலாம். பின் என்ன? எங்கே போனாலும் காபி ஷாப் என்று சொல்கிறார்களே தவிர தேநீர் ஷாப் என்று ஒரு கடையாவது இருக்கிறதா? தெரு ஓரத் தேநீர் கடைகளைத் தவிர…? அலுவலகங்களில் வேலை செய்யும் பல வட இந்தியர்கள் ஆற, அமர, உட்கார்ந்து சாப்பிட, பெருகி வரும் “காபி டே” போன்று பிரத்யேகமாக தேநீர் கடைகளும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
எங்கு திரும்பினாலும் காபிக் கடைகள். சௌகரியமான சூழ்நிலையில் காபி குடித்துக்கொண்டு சுவாரசியமாக அமர்ந்து அரட்டை அடிக்கலாம்; சிந்திக்கலாம்; தனியாகவோ, நண்பர்களுடனோ விவரமாக ஆலோசனைகள் செய்யலாம். சுமார் 300 க்கும் மேல் காபி இயந்திரங்கள் / கடைகள் இருக்கின்றன சென்னையில். ஆனால் அதுபோல் தேநீர் இயந்திரங்கள் பரவலாக இல்லை. சில இயந்திரங்களில் தேநீர் கிடைக்கிறது. ஆனால் அது வெறும் சூடு பால். நீங்களாகவே அதில் தேநீர் பையைப் போட்டுக் கலக்கி உங்கள் தேநீரை செய்து கொள்ள வேண்டும். அது தேநீர் ரசிகர்களுக்கு சரிவராது. சிலருக்கு அது தேநீரை அவமதிப்பதாகக் கூட தோன்றுகிறது !!
பல அலுவலகங்களில் தேநீர் இயந்திரங்கள் இல்லாததால் “காபிக்கான இடைவேளையில், பலர் தேநீரைத் தாங்களே செய்து கொள்ள வேண்டிய நிலை. அல்லது தெருமூலையில் டீ கடையைத் தேடி போக வேண்டும். காபி ரசிகர்கள் சுகமாக சோபா போட்டு அருமையான சூழ்நிலையில் காபி குடிக்கும்போது நாங்கள் ஏன் ஒரு வாய் டீக்கு இப்படி அவஸ்தை பட வேண்டும் என்பது தேநீர் ரசிகர்களின் வயிற்றெரிச்சல் :-)) அதுவும் மார்கழி மாதம் குளிரில் சுடச் சுடச் சாப்பிடும் தேநீரின் சுகமோ சுகம்…. அலுவலகத்தில் தாங்களே தேநீர் போட்டுக்கொள்ள வேண்டும்; அல்லது இரண்டாம் பட்சமான காப்பி சாப்பிட வேண்டும். “என் உதவியாளர்கள் டீ போட்டு தருகிறேன் என்பார்கள். ஆனால் அவர்கள் டீ போடும் விதம் நாங்கள் எங்கள் ஊரில் டீ போடும் முறையிலிருந்து மிகவும் வித்தியாசப்படும். அந்த டீக்கு பதிலாக காப்பியே தேவலை என்று தோன்றும்.” என்கிறார் ஒரு வட இந்திய அதிகாரி. மற்றொருவர் கூறுகிறார்: “ரெஸ்டாரெண்ட் போனால் இங்கே போடப்படும் டீயின்
தரம் வித்தியாசப்படுவதால் நான் பேசாமல் காப்பியையே தேர்வு செய்வேன். அதென்னவோ தேநீர் இலைகளின் தரமா, தேநீர் பயிரிடப்படும் விதமா, பாலும் தேநீரும் கல்லாகும் விதமா, தேநீர் இலையைக் கொதிக்க வைக்கும் விதமா… எது என்று புரியவில்லை. ஆனால் வித்தியாசம் என்னவோ இருக்கிறது. காப்பி போடுவது போல் டீ டிகாக்ஷன் இறக்குகிறார்களோ என்னவோ…!”
“நாங்கள் வடக்கே போகும்போதும் இதே கதைதானே….சென்னையிலிருந்து டில்லிக்குப் போகும் ரயிலிலேயே வழியில் காப்பி காணாமல் போய், எங்கு திரும்பினாலும் “சாய்…” தானே… என்று இங்கே சிலர் கலாய்ப்பார்கள்…..
வட இந்தியர்கள் இப்படித் தங்கள் தேநீர் பெருமையை சொல்லிக்கொண்டாலும், புலம்பினாலும் தேநீர் போடுவதில் அவர்கள் ஜப்பானியர்களை மிஞ்ச முடியாது. ஜப்பானில் தேநீர் போடுவதும் அருந்துவதுமே ஒரு கலையாகக் கொண்டாடப்படுகிறது. “ச்சடோவ்,” “சடோ,” “சநோயு” என்று பலவிதமாக அழைக்கப்படும் இந்த தேநீர்
சடங்கு ஜப்பானிய கலாசாரத்தில் மிக முக்கியமான ஒன்று. வரப்போகும் மருமகளுக்கு இந்த தேநீர் சடங்கு முறை தெரியுமா என்று மாமியார்கள் விசாரிப்பார்கள் என்று சொல்லுவார்கள்.
ஜப்பானியர்களைப் பொறுத்த வரையில் இந்த தேநீர் சடங்கு என்பது வெறும் டீ குடிப்பதற்காக அல்ல. மாறாக, இது மனதையும் உடலையும் ஒருமிக்க ஆன்மீகத்தில் செலுத்தும் ஒரு பயிற்சியாகும். தேநீர் விருந்து அல்லது சடங்கு அளிப்பதற்கு முன்னாள் அதை அளிப்பவர் பல பயிற்சிகள் செய்து ஒத்திகை பார்த்துக்கொள்வார். கைகளை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும், எந்த வித கோப்பைகளை எந்த எந்த விதத்தில் பிடித்துக்கொண்டு உபயோகிக்க வேண்டும் என்பது போன்று பலவித நுணுக்கமான அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டும். சிறிது நழுவினாலும் விருந்தினர்களுக்கு அது அவமானமாக கருத வாய்ப்புண்டு.
இந்த டீ கெட்டில்கள் பலவித டிசைன்களில் இருக்கும். மூடிகளின் கைப்பிடியில் இருக்கும் உருவங்கள் பலவிதம். ஒரு புத்தர் அல்லது ஏதாவது அதிர்ஷ்டக் குறிகள் இருக்கும். அல்லது பூ வடிவங்கள் இருக்கும். கெட்டில்களின் வடிவமும் மிக வித்தியாசமான வடிவங்களில் இருக்கும். வளைந்து நெடிந்து இருக்கும் மூக்கிலிருந்து டீ வடிவதைப் பார்க்கவே மனசில் ஒரு உற்சாகம் துள்ளும்.
தேநீர் அளிக்கும் சூழ்னிலையும் எளிமையாக, ஒரு சில படங்களுடன் கிராமிய அமைப்புடன் இருத்தல் முக்கியம். விருந்தினர்கள் உள்ளே நுழையும் போது பனி படர்ந்த புல்தரை மீது நடந்து வருவார்கள். கால் தூசுக்களை வெளியேயே விட்டுவிட்டு வருவதாக இந்த ஐதீகம் குறிக்கிறது. புனித ஸ்தலங்களில் வாசலில் பெரிய கல் தொட்டியில் நீர் இருக்கும். கைகளையும் வாயையும் சுத்தம் செய்துகொண்டுதான் உள்ளே நுழைவார்கள். அதுபோல் இந்த தேநீர் சடங்கிற்கு முன்னாலும் வெளியே இருக்கும் கல் தொட்டி நீரில் சுத்தம் செய்துகொண்டு விருந்தினர்கள் உள்ளே வர வேண்டும். விருந்தினர்கள் நுழையும் வாசல் சற்று தாழ இருக்க வேண்டும் – வருபவர்கள் தங்கள் தலையைத் தாழ்த்தி நுழையும் வண்ணம்.
வந்தவுடன் விருந்தாளிகளும் வீட்டுக்குரியவரும் ஒருவருக்கொருவர் சிரம் தாழ்ந்து வணங்குவர்.
இப்போது தேநீர் சடங்கு ஆரம்பம். முதலில் டீ அருந்தும், செய்யப்படும் கோப்பைகளும் கெட்டில்களும் நன்கு வெந்நீர் விட்டு கழுவப்படும். இந்த சடங்கிற்காக உபயோகிக்கப்படும் கோப்பைகளும் கெட்டில்களும் பிரத்யேக கையில் வரையப்பட்டு உருவாக்கபட்ட பீங்கான் வகைகள். தேநீர் சடங்கு பற்றி நடந்த கண்காட்சியில் பலவித கோப்பைகளும் தேநீர் தயாரிக்கும் கெட்டில்களும் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. எத்தனை விதமான அழகான கெட்டில்கள்!!! ஒவ்வொன்றும் ஒவ்வொரு
வடிவம். இதைத் தயாரிக்க எடுத்துகொள்ளும் களி மண் கூட குறிப்பிட்ட வகையைச் சார்ந்தது.
தேநீர் இலைகளும் பலரகம். பெரும்பாலும் இந்தத் தேநீர் பச்சை வண்ணத்தில் இருக்கும் தேநீர்தான் இந்த சடங்குகளில் அருந்தப்படும். இந்த ஜப்பானிய க்ரீன் டீ க்கு “மாச்சா” என்று பெயர்.
சடங்கு பற்றி அந்தக் கண்காட்சியில் என்னிடம் விவரித்த ஒரு ஜப்பானியர் சொன்னார்.
“மிகச் சிறிய 5 கோப்பைகள் சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்வோம். பின்னர் தேநீர் கெட்டிலில் முதலில் தேநீர் இலைகளைப் போடுவோம். அதன் மேல் கொதிக்கும் நீரை ஊற்றிவிட்டு அதன் மூடியின் மேலும் சிறிது ஊற்றுவோம். கொஞ்ச நேரம் தேநீர் இல்லை உள்ளே ஊறியபின், உடனே அந்த நீரை கொட்டி விடுவோம். முதலில் ஊற்றிய தேநீரை உபயோகிக்க மாட்டோம். இதே சமயத்தில் அருகிலேயே சிறு தணலில் மேலும் நீர் கொதித்துக்கொண்டிருக்கும். ஆனால் அது ரொம்பவும் கொதிக்கவும் கூடாது. மீண்டும் தேநீர் இலைகளின் மேல் வெந்நீர் ஊற்றி இன்னும் ஓரிரண்டு முறை கொட்டிவிட்டுப் பின்னரே அருந்துவதற்கு தேநீர் எடுத்துக்கொள்ளப்படும்.”
தேநீரை தயாரிப்பவர் இப்படி சில நெறி முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றால், அருந்தும் விருந்தினருக்கும் ஒரு கலாசாரம் இருக்கிறது. அருந்தும் முன் தேநீர் கோப்பையை நளினமாக சுழற்றி அதன் கைவேலைப்பாட்டை, நிறத்தை ரசித்துவிட்டு பின்னர் ஒரு வாய் அருந்தி ருசியைப் பாராட்டிவிட்டு, அடுத்த விருந்தினரிடம் கோப்பையை அளித்து, அவரும் அதேபோல் பாராட்டுகளை அளித்து…….என்று கோட்பாடுகள் நீளுகிறது.
எல்லாக் கலைகளையும் போலவே இந்த தேநீர் சடங்கும் வாழ்க்கையில் அழகை ரசிக்கவும், தினசரிக் கவலைகளிலிருந்து மாறுதல்கள் பெறவும் மற்றும் வாழ்க்கையில் பணிவு பொறுமை நிதானம் போன்ற குணங்களை வளர்த்துக்கொள்ளவும் உதவுகிறது என்றும் சொல்வதுண்டு.
தேநீர் ஆரம்பத்தில் ஜப்பானில் பயிரப்படவில்லை. சீனாவிலிருந்துதான் அறிமுகப்படுத்தபட்டது. ஆரம்பக் காலங்களில் சீனாவில் தேநீர் ஒரு மருந்து போலவும் மதக் குருக்கள் அருந்தும் பானமாகவும் இருந்தது. 8 ம் நூற்றாண்டில் “சா சிங்” என்கிற சீன மதகுரு தேநீர் தயாரிக்கும் மற்றும் அருந்தும் முறைகளைப் பற்றி ஒரு புத்தகம் எழுதினர். அந்தப் புத்தகம்தான் இன்றைய தேநீர் சடங்கின் ஆதாரம் என்று கூறுகிறார்கள். மருந்தாக இருந்த தேநீர் சீனாவில் மெள்ள சாதாரணர்கள் அருந்தும் பானமாக மாறிற்று. ஆனால் அதற்குள் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த உறவு மோசமாகியதால் இந்த மாறுதலும் இடம் பெயரவில்லை; சீனாவிலிருந்து தேநீர் வருவதும் குறைந்தது.
இந்த சமயத்தில் ஜப்பானில் தேநீர் என்பது ஒரு அரிதாக கிடைக்கும் பானம் ஆனது. ஜப்பானியர்கள் தாங்களாகவே தேநீர் பயிருடுதல், பராமரிப்பு என்று தங்களுக்காகவே ஒரு கலாசாரம் உருவாக்கிக் கொண்டார்கள். தேநீர் ஒரு அரிய கிடைக்கும் பானமாக இல்லாமல் எளிதாக கிடைக்கும் பொருளாக இருந்திருந்தால் அது பொக்கிஷமாக கருதப்பட்டு தேநீர் சடங்கு கொண்டாடும் அளவு சூழ்நிலை உருவாகியிருக்காது என்றும் சொல்லுகிறார்கள்.
வருடம் 2014
சென்னையில் இன்று அருமையாக உட்கார்ந்து அருந்தும் தேநீர் கடைகளுக்குப் பஞ்சமே இல்லை. காபி கடைகள் போல பிரபலமான தேநீர் கடைகளும் பெருகி வருகின்றன. ஆனாலும் காப்பிக் கடைகளை மிஞ்ச முடியாதுதான். என்ன இருந்தாலும் காப்பியின் தலை நகரம் இந்தியாவைப் பொறுத்தவரையில் சென்னைதான் என்பது என் எண்ணம்.