துப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு – ஜாரேட் டயமண்ட் : மிகச் சுருக்கமான அறிமுகம்

Guns_Germs_Steel_Jared_Diamond_Book
வரலாற்றின் போக்கு பொதுவாக அரசியல், சமூக-கலாச்சார, பொருளியல் காரணிகளாலேயே விளக்கப்படுகிறது. இக்காரணிகள் வரலாற்றுக்காலத்தில் வலுப்பெற்றவையே. அண்மைக் காரணிகளான இவற்றுக்குப் பின் புதைந்திருக்கும் அறுதிக் காரணிகளைக் கண்டுபிடிப்பதற்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை நோக்கிச் செல்கிறார் ஜாரேட்.
கி.பி.1500ல் ஐரோப்பா, ஆசியா, வட ஆப்பிரிக்கா முதலிய பகுதிகள் தொழில்நுட்ப அடிப்படையில் முன்னேறியிருந்தன. அக்காலத்தில் அமெரிக்க கண்டத்தில் நிலவிய இன்கா, அஸ்டெக் பேரரசுகள் பெருநிலப்பரப்பை ஆண்டாலும் பழமையான கருவிகளைக் கொண்டிருந்தன. ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள், ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வாழ்ந்த மக்கள் விவசாயப் பழங்குடிகளாகவும், வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழங்குடித் தன்மை கொண்டவர்களாகவும் இருந்தார்கள்.
இந்த தொழில்நுட்ப, அரசியல் வேறுபாடுதான் ஐரோப்பிய ஆதிக்கத்திற்கு அடித்தளமிட்டது; இன்றைய சர்வதேச சமத்துவமின்மைக்கும் காரணமாக அமைந்தது. துப்பாக்கியும், எஃகும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவே. ஆனால் இவ்வேறுபாடு எப்படி ஏற்பட்டது?
இதற்கான பதிலாக சிலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் இரு கருத்துகளை ஜாரேட் நம்முன் வைக்கிறார்.
1. ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியப் பழங்குடியினத்தவர் பரிணாம வளர்ச்சியில் பின்தங்கியவர்; அறிவுத்திறனில் குறையுடையவர். இன மேன்மையை அடிப்படையாய்க் கொண்டிருக்கும் இக்கருதுகோள் பிழையானது என்று நிறுவுகிறார் ஜாரேட்.
2. காலநிலை ஏற்படுத்திய வாய்ப்புகள். இக்கோட்பாட்டை வாய்ப்புகள், சவால்கள் என இரண்டு வகையிலும் அணுகி வேறுபட்ட பதில்களைப் பெறலாம். அதனால் இக்கோட்பாடு குழப்பமானது என்பது ஜாரேடின் வாதம்.
துப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகுவினை அறுதிக் காரணிகளாக முன்வைக்கும் ஆசிரியர் அதனை விளக்குவதற்கு 13000 ஆண்டுகால வரலாற்றை அலசுகிறார். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய காரணம் உணவு உற்பத்தி. தென்மேற்கு ஆசியாவிலும், சீனாவிலும் முதன் முதலில் உணவுக்கான பயிர்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஏனென்றால் அங்கே தான் விதை எடை அதிகம் கொண்ட தானியங்கள் காட்டுப் பயிர்களாக வளர்ந்தன. முக்கியமாக அரிசி, கோதுமை முதலியன இப்பகுதிகளில் காட்டுப் பயிர்களாக வளர்ந்தமையால் அவற்றை பண்ணைப்பயிர்களாக மாற்றுதல் எளிமையாக இருந்தது.
இந்த முதல் படியை எடுத்து வைத்த பின் பழ மரங்களைப் பயிரிடுதல், வணிகப் பயிர்களைப் பயிரிடுதல் என அடுத்த படிகளில் எளிதாக ஏற முடிந்தது. முக்கியமான உணவு தானியங்கள் காட்டுப்பயிர்களாய் வளராத பகுதிகளில் மிகப் பிந்தியே உணவு உற்பத்தி தொடங்கியது. சோளம், கம்பு, கிழங்கு வகைகள் பிற இடங்களில் பயிரிடப்பட்டன.
யுரேசியப் பகுதியில் விவசாய தொழில்நுட்பம் எளிதாகப் பரவியது. ஓரிடத்தில் ஒரு பயிர் பண்ணைப் பயிராக மாற்றப்பட்டால் விரைவில் வேறு பகுதிகளும் அப்பண்ணைப் பயிரை உற்பத்தி செய்யத் தொடங்கின. மீண்டும் காட்டுப் பயிரைப் பல தலைமுறைகள் பயிரிட்டு பண்ணைப்பயிராக மாற்ற முயலவில்லை. மேற்கு கிழக்காக அட்சரேகைகளைப் பொதுவாய்க் கொண்டு இப்பகுதிகள் பரவியிருந்தன. தட்பவெப்பநிலை இப்பகுதிகளில் ஒரே போலிருந்தது. சூழியல் தடைகளும் இந்நிலப்பகுதியில் அதிகமில்லை. ஆனால் தெற்கு வடக்காகப் பரவியிருந்த ஆப்பிரிக்க, அமெரிக்கக் கண்டங்களின் பகுதிகளில் தட்பவெப்பநிலைகள் வேறுபட்டிருந்தன. ஓரிடத்தில் விளையும் பயிர்கள் இன்னொரு இடத்தில் விளைய முடியாது. இதனால் இந்நிலப்பகுதிகளில் விவசாயம் பரவ முடியவில்லை.
நாகரிகம் வளர வளர மனிதன் பெரிய காட்டுப் பாலூட்டிகளை வீட்டு விலங்குகளாக மாற்றினான். யுரேசியப் பகுதியில் தான் காட்டுப் பாலூட்டிகள் அதிக அளவில் இருந்தன. ஆப்பிரிக்கப் பகுதியில் காட்டுப்பாலூட்டிகள் அதிக அளவில் இருந்த போதும் அவை மனிதனின் வீட்டு விலங்குகளாய் மாறும் தன்மை கொண்டவையாக இல்லை. (வீட்டு விலங்குகளாய் மாறுவதற்குத் தேவையான சில குணாதிசயங்களையும் ஆசிரியர் பட்டியலிடுகிறார்) யானை போன்றவை பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளாக மாறினாலும் வீட்டு விலங்குகளாக மாறவில்லை.
(பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு: காட்டு விலங்காய் பிறந்து வளர்ந்து ஒரு கட்டத்தில் மனிதனால் பிடிக்கப்பட்டு அவனுக்குக் கீழடங்கும் விலங்கு; வீட்டு விலங்கு – பல தலைமுறைகள் மனிதனுடன் வளர்ந்து, மனிதனுடன் ஒத்துப் போகும் அளவுக்கு மரபணு மாற்றம் பெற்ற விலங்கு)
இந்த வீட்டு விலங்குகள் சுமையை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டுசெல்லவும், மனிதனைப் பாதுகாக்கவும், மனிதனுக்குத் தேவையான புரதச்சத்தைப் பால், மாமிசம் முதலியவற்றின் மூலம் அளிக்கவும் செய்தன. வீட்டு விலங்குகள் அதிகமாக இல்லாத பகுதிகளில் மனிதர்கள் வேட்டையாடுவதன் மூலமே தங்களுக்கான புரதச்சத்தைப் பெற முடிந்தது. இதனால் அப்பகுதிகளில் விவசாயம் முழுமையாக வேரூன்றவும் முடியவில்லை.
வீட்டு விலங்குகளிடமிருந்து மனிதனுக்குக் கிடைத்த மற்றொரு பரிசு- கிருமிகள். மனிதன் வீட்டு விலங்குகளுடன் நெருக்கமாக இருந்து, அவற்றின் பால், மாமிசம் முதலியவற்றை உட்கொண்டதால் அவற்றிடமிருந்த கிருமிகள் மனிதனுக்குப் பரவின. ஆரம்பத்தில் மனிதனைச் சுரண்ட வழியற்றிருந்த கிருமிகள் போகப் போக பரிணாம வளர்ச்சி பெற்று தங்கள் விருந்தாளியை விருந்தாக உண்ணத் தொடங்கின. மனிதனும் மரபணு மாற்றம் பெற்று நோயெதிர்ப்பு சக்தியை அதிகமாக்கிக் கொண்டான். இதனால் வீட்டு விலங்குகள் அதிகம் இல்லாத அமெரிக்க ஆப்பிரிக்க ஆஸ்திரேலிய மக்கள் வீட்டு விலங்குகளோடு வாழ்ந்து அவற்றின் கிருமிகளோடு பழகி நோயெதிர்ப்பு சக்தியும் பெற்றிருந்த யுரேசிய மனிதர்களைச் சந்தித்த போது நோயுற்று லட்சக்கணக்கில் மாண்டனர்.
தொடர்ந்து எழுத்துகளின் வளர்ச்சியும் விளக்கப்படுகிறது. மிகச்சில இடங்களில் தான் எழுத்துகள் சுயேச்சையாய் வளர்ச்சி பெற்றன. ஏனென்றால் எழுத்துமுறையை உருவாக்குவது மிகக் கடினமான விஷயம். சுமேரியா, அமெரிக்கா, சீனா, எகிப்து என இந்த இடங்களிலிருந்து தான் எழுத்துமுறை பிற இடங்களுக்குப் பரவியிருக்கும் என்கிறார் ஆசிரியர்.
தேவையே கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறது என்கிற கருதுகோளுக்குப் பதிலாக கண்டுபிடிப்புகளே தேவையை உருவாக்குகின்றன என்கிற மாற்றுக் கருதுகோள் முன்வைக்கப்படுகிறது. பல கண்டுபிடிப்புகள் அவற்றின் காலத்துக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டதையும், அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் பல அழிந்து போய் மீள் கண்டுபிடிப்பு செய்யப்பட்டதுமான நிகழ்வுகள் இக்கருதுகோளுக்கு சான்றாதாரமாக காண்பிக்கப்படுகின்றன.
மனிதர்கள் அதிகமான நெருக்கத்துடன், பிற சமுதாயங்களுடன் போட்டியாக வாழ்ந்த இடங்களில் புதுமைகள் விரைவாகக் கண்டுபிடிக்கப்பட்டன; பரவின; புதுமைகளை ஏற்றுக் கொள்ளாத சமுதாயங்கள் அழிந்து போயின. ஆனால் தனித்தியங்கிய சமுதாயங்களுக்கு புதுமையை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை; போட்டியும் இல்லை. தொழில்நுட்பம் தனித்தியங்கிய சமுதாயங்களில் அதிகமாக வளர்ச்சி பெறாததற்கு இது முக்கியமான காரணம்.
மக்கள் நெருக்கம் போதிய அளவிலிருந்த பகுதிகளில் இருந்தத இனக்குழுக்கள் தலைவருடன் கூடிய இனக்குழுக்களாக வளர்ச்சியடைந்தன. அவை பிற இனக்குழுக்களுடன் போரிட்டு அவற்றைத் தங்களின் கீழ் கொண்டுவந்தன. இல்லையென்றால் பிற சக்திகளின் அச்சுறுத்தலால் இக்குழுக்கள் ஒன்றிணைந்து வலுவான மைய அரசொன்றை உருவாக்கின. இம்மைய அரசின் உருவாக்கத்தால் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டன.
தொடர்நது சீன மொழியின் பரவலைப் பற்றியும், ஆப்பிரிக்க கறுப்பின மக்களின் பரவலைப் பற்றியும் ஆசிரியர் விளக்குகிறார்.
நூலின் இறுதியில் வரலாற்றை அதற்கேயுரித்தான அறிவியல் முறையோடு அணுக வேண்டும் என்கிற வாதத்தை முன்வைக்கும் ஜாரேட், அத்தகைய அறிவியல் முறை வலாறு சாராத அறிவியல் முறைகளிலிருந்து எவ்வகைகளில் வேறுபடும் என்பதையும் விளக்குகிறார். நூலுக்குள் முன்வைக்கப்பட்டிருந்த கோட்பாடுகளின் விதிவிலக்குகளும் அவை ஏன் விதிவிலக்குகளாய் மாறின என்பதும் இறுதிப்பாகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இவ்வணுகுமுறையின் நீட்சிக்கான வழிகளை விவாதிப்பதுடன் நூல் நிறைவடைகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.