டிசம்பர் நாற்காலிகள் – 2

அபிஷேக் ரகுராம், சிக்கில் குருசரண் இருவரும் சங்கீதா யூனிவர்ஸிடியில் batchmates. இரண்டு பேருமே பிறவி ஜீனியஸ்கள். இருந்தும் இருவருக்கிடையில் எத்தனை வித்தியாசம்… அபிஷேக், தன்னை ஏதோ ஜி.என்.பி அல்லது மதுரை மணி ஐயராகக் கற்பனை செய்துகொண்டுதான் பாடுகிறார் என்பது அவர் கழுத்தை வைத்துக்கொள்ளும் டிகிரியில் இருந்தே தெரிகிறது. “ப்ரோசேவ – நான் எப்படிப் பாடுகிறேன் பாரு ! – ரெவருரா – அந்த பிருகாவை கவனிச்சியா? – நின்னுவினா – ஆதி தாளத்தில் என்னை விட்டால் அத்தாரிட்டி வேறு யார் ? – ரகுவரா” என்பது போல் ப்ராக்கெட்டில் சுய குறிப்புகளுடன் பாடுவார் அபிஷேக்.
ஆனால் குருசரணுக்கு attitude ப்ராப்ளமே கிடையாது. பக்கத்திலேயே இருக்கும் உமையாள்புரம் சிவராமனின் unassuming personality இவருக்கும் வாய்த்திருக்கிறது. ஒரு மணி நேரம் பைரவியை ஆலாபித்துப் பாடி ஸ்வரம் போடுவதற்கு வேண்டிய தன்னம்பிக்கையும் பயிற்சியும் கற்பனைச் செறிவும் கண் கூடாகத் தெரிந்தது (பார்த்தசாரதி சபா). மோகன ஆலாபனையில் run of the mill பிடிகளைக் கைவிட்டு வித்தியாசமாகப் பாடினார். ஹமீர் கல்யாணியை இன்னும் கொஞ்சம் கேட்கவேண்டும் போல் ஏக்கமாக இருந்தது. வயலின் நாகை ஸ்ரீராம், தனியே கட்சி ஆரம்பிக்கும் விளிம்பில் நின்று மோகனத்தையும் பைரவியையும் சுகமாகப் பரப்பினார்.
 

Jannal_Kadai_Mylapore_Food_Restaurants_Chennai_Eatery_Spots

 

oOo

நாம் மயிலாப்பூர் வந்திருப்பதால், காலாற – வயிறாற ஒரு food walk போகலாம்.
பண்டைய மறந்து போன சுவைகளின் கடைசி standing bastion, மயிலை ராயர் மெஸ். இதுவும் பாஸ்தா-நூடுல்ஸ் கடையாக மாறுவதற்கு முன் அவசரமாக ஒரு முறை போய்ப் பார்த்துவிடுங்கள். பாசாங்கு இல்லாத காஃபி, இட்லி, பொங்கல், அடை, கத்தரிக்காய் கொத்சு… த்சு, த்சு !
பேயாழ்வார் சன்னிதி அருகே, முட்டுச் சந்தில் ஒரு A0 காகிதத்தின் பரப்பளவே இருக்கும் இந்தப் புகை படிந்த மெஸ்ஸைக் கண்டுபிடிக்க, லோக்கல் ஆட்கள் உதவி இல்லாமல் முடியாது. எனவே இதோ ராயரின் GPS ரேகைகள்: 13.035979, 80.272800.
அதே தெருவில் இருக்கும் தாயார் டைரியில் இஞ்சி முறப்பா சாப்பிடுங்கள். வினிகர் புளிக்காத ஊறுகாய் வகைகள் (நாரத்தங்காயை சிபாரிசு செய்கிறேன்), வற்றல் வடாம் கொஞ்சம் வாங்கிக் கொள்ளுங்கள். கச்சேரி ரோடைக் கடந்து கிழக்கு மாட வீதிக்கு வந்தால் சுபம் கணேசன் கடையில் முறுக்கு சீடை, அதிரசம். அதற்கு நாலு பில்டிங் தள்ளி, பிரபலமான கற்பகாம்பாள் மெஸ். பழைய அபிமானத்துக்காக ஏதாவது மென்று முழுங்கிச் சாப்பிட முயற்சிக்கலாமே தவிர, மற்றபடி சுகமில்லை. அதை விட, தேர் முட்டிக்குப் பக்கத்தில் மாலை வேளையில் பஜ்ஜி போட்டு விற்கும் அம்மாளே பரவாயில்லை.
இன்னும் சற்று நடந்தால் காளத்தி கடை. இதன் ரோஸ் மில்க் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஃபேஸ் புக்கில் ஒரு விசிறிக் கூட்டமே இருக்கிறது. ஆனால் காளத்தியின் பேரர்கள் தண்ணீரை ஊற்றித் தடியால் அடித்து, ரோஸ் மில்க்குடன் தாத்தா பெயரையும் நாசம் பண்ணி வைத்திருக்கிறார்கள். (ரோஸ் மில்க் என்பது, சற்றே மிகைப் படுத்திச் சொல்வதானால், கத்தியால் வெட்டி ஃபோர்க்கால் குத்திச் சாப்பிடப் படவேண்டியது. அதில் போய் யாராவது ஐஸ் கட்டியைப் போட்டு நிரப்புவார்களா ?)
கபாலி கோவிலுக்கு வாருங்கள். பக்தியைக் கொஞ்ச நேரம் ஒத்திப் போட்டு, கோபுர வாசலில் நின்று இடப் பக்கம் பார்த்தால் ப்ளெயின் சுவரில் ஒரு சின்ன ஜன்னல் தெரியும். அதற்குள்ளிருந்து ஒரு கை இட்லித் தட்டை நீட்டும். இதுதான் ஜன்னல் கடை. இங்கே தோசை, பொங்கல் சாப்பிடத் தகும். (நடுத் தெருவில் நின்றபடியே சாப்பிட வேண்டும், தண்ணீர் பாட்டில் எடுத்துப் போக வேண்டும்). அதற்குக் குறுக்குச் சந்தில் இருக்கும் மாமி மெஸ்ஸைத் தவிர்க்கவும்; மாமியின் தலைமுறை எப்போதோ முடிந்து போய்விட்டது. கோபுரத்துக்கு வலப்புறம், நாட்டு மருந்துக் கடையில் பன்னீர் சோடா அருந்திய பிறகு கோவிலில் நுழையலாம். இடப் பக்கம் மடைப் பள்ளியில் ஒரு தொன்னை புளியோதரை சாப்பிடலாம்; சுமாராக இருக்கும். இங்கே வந்து ‘கல்லாடை புனைந்தருளும் காபாலியைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே’ என்று அப்பர் பெருமான் பாடிய காலங்களில் புளியோதரை இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

oOo

Raayar_Rayar_Mess_Food_Eatery_Restaurant_Mylapore_Chennai_Temples

வயலின் கன்யாகுமரியின் டிலெம்மா இது: ஆண் பாடகர்களுக்குப் பக்க வாத்தியம் வாசிக்கப் போனால் அவர்களின் ஈகோ தடுக்கிறது, தள்ளுகிறது. பெண் பாடகிகளுக்கோ, தன்னை விட applause magnet- ஆக மற்றொருவர் பக்கத்தில் இருக்கப் பொறுக்கவில்லை. ஃப்யூஷன், ட்யூஷன் என்று கூத்தடிக்கும் இளைஞர்கள் இவரைக் கை நீட்டி வரவேற்பார்கள். ஆனால் அந்த மாதிரி Non-Veg எல்லாம் வாசித்தால் சரஸ்வதி தேவி விரல்களிலிருந்து வழிந்து இறங்கிப் போய் விடுவாள். கதிரி கோபால் நாத்துடன் கூட்டணி ஆரம்பத்தில் நன்றாக இருந்தது. ஆனால் கதிரியார் இப்போதெல்லாம் இசை எழுப்புவதற்கு பதிலாக, டைனமைட் வைத்து மேடையைத் தகர்ப்பதிலேயே குறியாக இருக்கிறார். ஸோலோவாக வாசித்தாலோ, கிழங்கள் கச்சேரிக்கு வர மறுக்கின்றன. பாதி நாற்காலிகள் காலியாக இருப்பதுடன், ஒவ்வொரு பாட்டு முடிந்த பிறகும் பாட்ச் பாட்ச்சாக எழுந்து போகிறார்கள். என்னதான் செய்வார் குமரி ? படபடவென்று ஆயிரம்வாலா கொளுத்திப் போடுவது தவிர வேறு வழியில்லை.
அன்று ஹரே கிருஷ்ணாவில் அவர் வாசிப்பைப் பார்த்தால், மானிடக் கை ஒன்று வாசிப்பது போலவே தெரியவில்லை. CNC மெஷின்களில்தான் அந்த மாதிரி precision சாத்தியம். நாதஸ்வரம், சாக்ஸஃபோன் போல என்ன ஒரு கம்பீரமான முழக்கம் ! என்ன பவர் ! என்ன authority !
கடைசியில் ஒரு ராக மாலிகை வாசித்தார். ஐபாகோ ஐஸ் க்ரீம் வண்டி கவிழ்ந்து தெருவெங்கும் கலர் கலராக, சுவை சுவையாக உருகி ஓடின மாதிரி இருந்தது. நித்திய கன்யா.

oOo

அகாடமியில் ரஞ்சனி-காயத்ரிக்கு டிக்கெட் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். “அதனால் என்ன, நான் சாப்பிடத்தானே வந்தேன்” என்று ஒரு ஏளனச் சிரிப்புடன் மிண்ட் பத்மநாப அய்யரின் காண்டீனில் புகுந்தேன். பந்தி பந்தியாக இலை போட்டுக் கல்யாண சாப்பாடு. முள்ளங்கி சாம்பார், சேப்பங் கிழங்கு மசியல், வெண்டைக்காய் காரக் குழம்பு. அருமையான பாதாம் கீர். ஆனால் சாதம்தான் நொய்ப் பொங்கல் போலக் குழைத்து வடிக்கிறார் அய்யர். கரும் பச்சை வாழை இலையில் பாதரச முத்துகளாகத் தண்ணீர் தெளித்து, மல்லிகை மொக்குகள் போல் பொல பொலவென்று அரிசிச் சோறு விழுவதைப் பார்ப்பதே ஒரு பரவசம் என்பது பல veteran-களுக்குக் கூடத் தெரிவதில்லை.
கல்யாணச் சாப்பாட்டுக்கு டோக்கன் வாங்கி கியூவில் நிற்கப் பொறுமை இல்லை என்றால், வைது வெளியேறி இரண்டு பில்டிங் தள்ளி இருக்கும் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ரச வடை சாப்பிடலாம். தாராளமாக பாதாம் பருப்புச் சீவல் தூவி, ஆண்டாள் சொன்னது போல் ‘மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ சூடான காரட் அல்வா கட்டாயம் சாப்பிட்டுப் பாருங்கள். 48 மணி நேரம் நாக்கிலேயே நிற்கும். லஞ்ச் நேரம் என்றால் உட்லண்ட்ஸ் மாடியில் தஞ்சாவூர் ரெஸ்ட்டாரெண்ட்டில் இலை போட்டுச் சாப்பாடு, பருப்பு, அப்பளம், பீடா கிடைக்கும். சாதாரண நாட்களில் வேறு போக்கிடம் இல்லாத சென்னையில், கொஞ்சம் பரவாயில்லாத சாப்பாடு இதுதான். ஆனால் அவர்களின் உருளைக் கிழங்குப் பொரியலில் மட்டும் தஞ்சாவூர் வாசனையே இருப்பதில்லை. ஒரே ஹைதராபாத் பிரியாணி நெடி ! இந்த மாதிரி கிச்சனுக்கு உள்ளே இருந்தே ISIS வேலை செய்வது யார் ?

oOo

Good governance day அன்று எங்கள் வீட்டிலேயே மணத்தக்காளி வத்தல் குழம்பு என்பதால், திருமதியின் கிச்சனில் அரைக் கீரைக் கூட்டு, டாங்கர் பச்சடியுடன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு உள்ளங்கையை முகர்ந்தபடியே நாரத கான சபா போனேன். வெளியே ஏகப்பட்ட மோட்டார் பைக்குகள் நிற்கும்போதே தெரிந்தது: உள்ளே டி.எம்.கிருஷ்ணா பாடுகிறார் என்பது. Social media-வில் பரபரப்பாக இருப்பதால் இளைஞர்கள் ஆரம்பத்தில் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் கிருஷ்ணாவுக்கோ, பாட்டுத் திறமையை விட பேச்சுத் திறமைதான் அதிகம் என்று சந்தேகிக்க இடம் இருக்கிறது. வலசி வலசியை வைத்துக்கொண்டு மலபார் அவியல் மாதிரி ஒரு RTP செய்தார். தனி ஆவர்த்தனம் கூட முடிந்து, கடைசி அரை மணி இருக்கும்போது சவுக்க காலத்தில் சாவகாசமாக ஸ்வரம் பாடுவது தன்னம்பிக்கை என்பதா, impertinence என்பதா ?

oOo

வாணி மகாலுக்கு வெளியே இன்றைய ஸ்பெஷல் கல்கண்டு பாத், ஆமை வடை. உள்ளே சஞ்சய் சுப்ரமணியம். ஆனந்த பைரவியையும் ஆபோகியையும் அவர் ஆனந்தமாக ஆலாபனை செய்தபோதும் வரதராஜன் வயலினில் கொஞ்சிக் குதித்த போதும் சபையில் ஊசி விழும் நிசப்தம். அதனால்தான் எல்லா வித்வான்களுமே இங்கே கவனமாகப் பாடுகிறார்கள்.
வாணி மகாலுக்கு வரும் elite கூட்டத்துடன் ஒப்பிட்டால் தேனாம்பேட்டை காமராஜ் அரங்கத்தில் திருவையாறு உற்சவம் நடத்துகிறார்களே, அது காணும் பொங்கல் திருவிழா ! தள்ளு முள்ளுக் கூட்டம், இரைச்சல், ப்ளாஸ்டிக் சாமான், பஞ்சு மிட்டாய்.

oOo

பார்த்தசாரதி சபாவில் ‘மவுண்ட் பேட்டன் மணி அய்யர் அநேக நமஸ்காரம்’ என்று தாத்தா எழுதின தபால் கார்டு போல வரவேற்கிறது பலகை. அய்யர் ஒவ்வொரு வருடமும் முன்னாள், இந்நாள் வித்வான்களின் portrait ஓவியங்களைக் கண் குளிர மாட்டி வைத்திருப்பார். இந்த முறை சந்தடி சாக்கில் சுப்புடுவுக்கும் ஒரு படம்.
மவுண்ட்பேட்டனிடம் கோதுமை அல்வா, கீரை வடை சாப்பிடலாம். காஃபியைத் தவிர்க்கவும். எல்லா நவீனத் தொழில் துறைகளுக்கும் உள்ள ஒரு பஞ்சம் இவருடைய சமயலறையிலும் தெரிகிறது: skilled man power. ஊத்தப்பம் முழுவதும் வெந்திருக்கிறதா என்று கூடக் கண்டுபிடிக்கத் தெரியாவிட்டால் என்ன சரக்கு மாஸ்டர் ?
அஸ்வதித் திருநாள் ராம வர்மாவைப் போல் டீம் ஸ்பிரிட்டுடன் பாடுபவர்கள் அபூர்வம். ஒவ்வொரு சாப்புக்கும் முத்தாய்ப்புக்கும், பக்கவாட்டில் பார்த்து சிரித்து சிரித்து உற்சாகப்படுத்துகிறார். (அந்தக் காட்சியைப் பார்த்து ரசிக்க, யூ ட்யூபில் ‘smara vaaram’ என்று தேடிப் பாருங்கள்). முத்து ஸ்வாமி தீட்சிதர் பிரிட்டிஷ் ஆட்சியில் வாழ்ந்ததால் மேல் நாட்டு சங்கீதத்தை அறிந்திருந்தார் என்று தெரிவித்தார் ப்ரின்ஸ். உதாரணத்துக்கு ‘ஸக ஸக ஸரிகம பா – மகரிஸ ரீ’ என்று தீட்சிதரின் western note ஒன்று பாடிக் காட்டினார். குந்தல வராளியில் தன் குருநாதர் பால முரளி இயற்றிய தில்லானாவை gusto என்று பாடினார். கேட்டுக் கேட்டு நைந்து போன நாட்டையைக் கூட என்ன ஓட்டு ஓட்டுகிறார் !
இந்த அரச பரம்பரைக்காரர், தன் திறமைக்கு ஏற்ற platform கிடைக்காமல் பாட்டு வாத்தியாராகவே காலத்தை ஓட்டிவிடுவாரோ என்று கவலையாக இருக்கிறது.

oOo

ஜேசுதாஸ் கச்சேரி என்றால் அரை மணி தாமதமாகப் போங்கள். குரல் பதப் படுவதற்கு அந்த நேரம் தேவைப்படுகிறது. (சாதகம் எதுவும் செய்வதில்லை போலிருக்கிறது). ஆனால், அதற்குப் பிறகு மூன்று ஸ்தாயியும் முழுசாகப் பேசுகிறது. தங்கக் குரல். ரிட்டையர்மெண்ட் வயது தாண்டியும் பல காலம் வரை பிடிவாதமாகப் பாடிப் படுத்திய வித்வான்கள் உண்டு (மதுரை சோமு et al). கௌரவத்தை இழக்காமல் சற்று சீக்கிரமாகவே voluntary retirement எடுத்துக்கொண்டவர்கள் உண்டு (பால முரளி). ஆனால் ரிட்டையர்மெண்ட்டே தேவைப்படாத பாக்கியசாலிகள் மிகச் சிலர். ஜேசுதாஸ் இந்த மூன்றாவது ரகம்.
தாஸ் எப்போதுமே கச்சேரியை நிறுத்தி நிறுத்தி ரசிகர்களிடம் பேசுவார். பிலஹரி ராக அவரோகணத்தில் நிஷாதம் எப்படி நுழைந்தது என்பதற்கு ஒரு குட்டிக் கதை சொன்னார். திருவனந்தபுரம் அரண்மனை நாதஸ்வர வித்வான், அதிகாலையில் அரசரைத் துயில் எழுப்புவதற்கு மங்கல இசை வாசிப்பார். ஒரு குளிர் நாளில் தூக்கக் கலக்கத்தில், அவருடைய மேல் ஷட்ஜம் சுருதி இறங்கி நிஷாதத்தில் வந்து நின்றதாம். ‘என்னடா இது புது ராகம் ? இது கூட நன்றாக இருக்கிறதே !’ என்றாராம் மகாராஜா. அதன் பிறகு அப்பீல் ஏது ?
கண்ணில் தண்ணீர் வரவழைப்பது போல் சுப பந்துவராளியை அருமையாக வாசித்த வயலின் மகாதேவ சர்மாவுக்கு வந்தனம்.

oOo

துக்கடா

திருச்சூர் சகோதரர்கள் இன்னும் தேங்காய் மூடிக் கச்சேரிதான் செய்துகொண்டு இருக்கிறார்களா என்ன ? பாமா மணி ஜானகி என்று அவர்கள் செய்த நிரவலில் நல்ல குரலும் தேர்ச்சியும் கற்பனையும் செறிந்திருந்தன. Rough edge-களை சற்றே பாலிஷ் செய்தால் பெரிதாக ஒரு ரவுண்டு வருவார்கள்.
சரவண பவனின் கிளைகள் விரிந்துகொண்டே போகின்ற அதே வேகத்தில் டிபன் சைஸ் சுருங்கிக்கொண்டே வருகிறது. விரைவிலேயே பவன் வடையைப் பார்க்க கடிகார ரிப்பேர் செய்யும் லென்ஸ் தேவைப்படலாம்.
யூத் ஹாஸ்டலில் நிஷா ராஜகோபாலின் கரகரப்ரியா ஆலாபனை கேட்கக் கிடைத்தது. 4 மணி நிஷாவுக்கு 7 மணி நிஷாவாக ப்ரமோஷன் கொடுக்க சபாக்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.
தி.நகர் கண்ணதாசன் சிலைக்கு எதிரே ‘இட்லி விலாஸ்’ என்ற ஜொள்ளு சொட்டும் பெயர்ப் பலகையைப் பார்த்துவிட்டு ஏமாந்துவிடாதீர்கள். ஜாக்கிரதை, ஜாக்கிரதை !
இளைஞர்களில் மிகவும் கவனிக்கத் தக்கவர் ஸ்ரீரஞ்சனி சந்தான கோபாலன். அப்பாவின் அகண்ட ஞானத்தையும் puritanical பாணியையும் மட்டும் எடுத்துக்கொண்டு, அவருடைய சூயிங் கம் பாட்டு ஸ்டைலை கவனமாகத் தவிர்த்து, மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.
ஒரு தனி ஆவர்த்தனத்தின் போது அளவுக்கு மீறிக் கொத்துக் கொத்தாக ரசிகர்கள் டிபன் சாப்பிட எழுந்து போவதைப் பார்த்த மிருதங்கம் பக்தவத்சலம், வெறுப்பில் ‘தமுக்கு தக்கும், தமுக்கு தக்கும்’ என்று டப்பாங்குத்து ஸ்டைல் நடை ஒன்று போட்டார். ‘நீங்களெல்லாம் பேசாமல் காமராஜ் அரங்குக்குப் போவதுதானேடா ?’ என்று நினைத்தபடியே மாட்டுத் தோலை அடித்து வெளுக்கிறார் போலிருக்கிறது.

oOo

இந்த வருஷமும் நிறையக் காலி நாற்காலிகள். அருணா, பாம்பே, சஞ்சய் போன்ற நாலைந்தே பேர்தான் விதிவிலக்கு. மற்றொரு பிரச்சினை, நாலா புறமும் கச்சேரிகள் நடப்பதால் பக்க வாத்தியப் பஞ்சம் ! மோர்சிங்குக்குத்தான் எப்போதோ RIP கல் நாட்டியாயிற்று. ஆனால் கடம், கஞ்சிரா கூட இல்லாமல் வெறும் வயலின், மிருதங்கத்தை வைத்தே சமாளித்தவர்களில் இந்த முறை சஞ்சய், அபிஷேக் போன்ற பெரிய பார்ட்டிகளும் அடக்கம். டிஜிட்டல் தம்புரா வேறு வந்துவிட்டதால் மேடையில் மூன்றே பேர்தான். அன்று செம்மங்குடி மாமாவுக்கெல்லாம் சிஷ்யர்களே பத்துப் பேர் உட்கார்ந்திருப்பார்கள். திருவையாறு கூட்டம் மாதிரி இருக்குமே !

சென்ற இதழில் டிசம்பர் நாற்காலிகள்

0 Replies to “டிசம்பர் நாற்காலிகள் – 2”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.