குகை ஓவியங்கள் ஜாக்கிரதை

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : வரலாறு அரசியலின் முக்கியமான கருவிகளில் ஒன்று. ஒரு தேசத்தை/கலாச்சாரத்தை/மக்கள் குழுவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைப்பதும் அதன் கடந்த காலத்தை தன் கட்டுப்பாட்டில் வைப்பதும் ஒன்று தான். மேற்குலகம் இதை நன்கு அறிந்திருக்கிறது. இவ்விஷயத்தில் அதன் ஆண்டாண்டு கால அனுபவத்தை பிறரால் எவ்வகையிலும் ஈடு செய்யமுடியாது.
தன்னுடைய உண்மையான கடந்த காலத்தை அறியாத எந்த ஒரு மக்கள் குழுவும், தற்கால மாற்றங்களையும் பதட்டங்களையும் எதிர்கொள்ள போலியான ”பொன்னான கடந்தகாலத்தை” கட்டமைக்கும். தமிழ் சூழலில் லெமூரியா போன்ற கதைகளும், இந்திய அளவில் வேத காலம் குறித்த சில கதைகளும் இத்தகைய போலியான கட்டமைப்பே. இந்த போலியான கட்டமைப்பை கெக்கலித்து காட்டி அந்த மக்கள் குழுவை வளர்ச்சி படிநிலைகளில் கீழோராய் மேற்குலகம் காட்டும். இந்த கெக்கலிப்பிற்கான எதிர்வினை இன்னும் போலியான ஒரு கடந்த காலத்தை கட்டமைப்பதில் முடியும். இது தொடர்ச்சியாக நிகழும் ஆட்டம். இந்த ஆட்டத்தின் மூலம் தன்னுடைய ஆதிக்கத்தை மேற்குலகம் தொடர்ந்து நியாயப் படுத்தும்.
இந்த ஆட்டத்தில் மேற்குலகத்திற்கு பேருதவி புரிவது வரலாற்றாய்வாளர்கள். உண்மையான கடந்த காலத்தை மறைப்பது வரலாற்றாய்வாளர்கள் மட்டுமே செய்யக் கூடியது. இந்த ஆய்வாளர்களின் குருட்டுத்தனமான அரசியல் சார்பும், ஆய்வு முறைகளும் அவர்களின் ஆராய்ச்சியின் முடிவை வலிந்தே மாற்றுகின்றன. ஆனால் இத்தகைய ஆய்வு முடிவுகளுக்கு உலகளாவிய அங்கீகாரம் உடனே கிடைக்கும். ஒரு வகையில் இத்தகைய ஆய்வாளர்களும், அவர்களை எதிர்த்து போலி கட்டமைப்பை உருவாக்கும் எதிர் தரப்பும் ஒன்று தான். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். மேற்குலகம் இந்த நாணயத்தை சுழற்றி வீசி விளையாடும்.
அரவிந்தன் நீலகண்டனின் இந்தக் கட்டுரை சில வரலாற்றாய்வாளர்களின் அரசியல் நிலைப்பாட்டையும், அவர்களின் ஆய்வு முடிவுகளை ஆராய்ந்து இந்தியாவின் உண்மையான கடந்த காலத்தை அவர்கள் மூடி மறைக்க முயன்றதையும் காட்டுகிறது. இந்த பொய்யான ஆய்வு முடிவுகளை மறுத்து உண்மையான வரலாற்றை முன்வைக்கிறது.
வேத காலத்து விமானங்கள் குறித்த அபத்த கற்பனைகள் எப்போதும் இருந்து வந்திருந்தாலும் இந்திய பழமை குறித்த எந்த பேச்சையும் அந்த அபத்தத்துடன் இணைத்து ஒட்டுமொத்தமாக இந்திய பண்பாட்டையே மறுதலிக்கும் குரல்கள் உச்சமாக ஊடகங்கள் எங்கும் ஒலிக்கும் காலம் இது. இச்சூழலில் அரவிந்தனின் இக்கட்டுரை நம்மை சமநிலையில் வைத்திருக்க உதவும். இது நாள் வரை நம் போற்றதலுக்குரிய வரலாற்றாய்வாளர்களையும் அவர்களின் ஆய்வு முறைமைகளையும் கேள்விக்குட்படுத்துவதும் நமக்கு உதவும்.
இக்கட்டுரை ’ஸ்வராஜ்யா’ இணைய இதழில் வெளியானது. ராஜாஜியால் துவங்கப்பட்டு பின் நின்று போன இந்த இதழ் மீண்டும் வெளிவரத் துவங்கியிருக்கிறது. இக்கட்டுரையை மொழிபெயர்க்க அனுமதியளித்த கட்டுரை ஆசிரியருக்கும், ‘ஸ்வராஜ்யா’ இதழுக்கும் எனது நன்றி.

நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தற்போது ஐரோப்பா என்றறியப்படும் பகுதியில் உள்ள குகைகளின் உட்சுவர்களில் மனிதனின் படைப்பாற்றல் வெளிப்பட்டது. தொல் மதத்தின் கூறுகளும், தொல் வானியல் புரிதலும் கொண்ட குகை ஓவியங்கள் அவை. கலை – குறிப்பாக குறியீட்டுக்கலை – இக்குகை கருவறையிலும், ஐரோப்பாவின் தொல் மனித இன மூளையின் சாம்பல் நிற செல்களிலும்(grey cell) ஜனித்தது. உலகின் மற்ற பகுதிகள் மெல்ல மெல்ல இதை பின் தொடர்ந்தன.
இப்படித்தான் நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.
ஆனால், பிரிட்டிஷ் அறிவியல் இதழான ”நேச்சர்”, ஆஸ்திரேலிய தொல்பொருள் ஆய்வாளர்களின் கட்டுரை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்தோனேஷியாவில் உள்ள சுலவேசி(Sulawesi) குகை ஓவியங்கள் குறித்த இந்த ஆராய்ச்சி முற்றிலும் வேறு ஒரு உண்மையை சொல்கிறது. அந்த கட்டுரையின் ஒரு சிறு பகுதி :
ஆய்வாளர்கள் இரண்டு பெரிய மிருகங்களின் ஓவியங்களையும் அங்கிருந்த மனித கைகளின் வரையச்சைகள் பன்னிரெண்டையும் அவதானித்தனர். அவற்றை இந்த ஓவியங்களின் காலத்தை கணிக்க பயன்படுத்தலாமென கருதினர். எலும்புகளின் மேற்பகுதியை மட்டுமே தங்கள் ஆராய்ச்சியில் உபயோகித்ததால், யூரேனியம் அடிப்படையிலான கால அளவீட்டீன் மூலம் அப்பொருட்களின் குறைந்தபட்ச வயதை மட்டுமே கணிக்க முடிந்தது. 12 வரையச்சுகளில் மிகப் பழமையானதின் வயது 39,900 ஆண்டுகள். இது ஐரோப்பாவில் கண்டெடுக்கப்பட்ட கை வரையச்சைவிட 2,000 ஆண்டு பழமையானது. குச்சி போன்ற கால்களை கொண்ட aubergine-ஐ ஒத்த pig-deer-இன் ஓவியம் ஒன்று 35,400 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. ஐரோப்பிய குகைளில் காணக்கிடைக்கும் பெரிய மிருகங்களின் ஆரம்ப கால ஓவியங்களும் இதே காலத்தை சேர்ந்தவை.”[1]

sula
சுலவேசி குகை ஓவியங்கள் 1950-களின் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இருந்தும், மனித பரிணாம வளர்ச்சியின் கருத்துருவாக்கத்தில் Lascaux குகை ஓவியங்கள் பெற்ற முக்கியத்துவம் சுலவேசி குகை ஓவியங்களுக்கு கிடைக்கவில்லை. பிரிட்டிஷ் நாட்டின் ஒரு பிரபல அறிவியல் பத்திரிக்கை இந்த ஓரவஞ்சனைக்கான காரணத்தை வெளிப்படையாகவே சொன்னது :
ஆதி ஐரோப்பியர்கள் பிற நாட்டு மக்களை விட மதிநுட்பம் கொண்டவர்கள் என்ற குறுகியவாத எண்ணமே ஐரோப்ப மைய பார்வை இந்த ஆராய்ச்சியில் தென்படக் காரணம்.”[2]
ஜிம்பாபேவின் பெரும் சிதைவுகள்
(இன மேன்மை மட்டுமல்ல)இதில் அரசியலும் இருந்தது. ஜிம்பாபேயின் பெரும் சிதைவுகள் – அந்நாட்டு பழங்கதைகள் அதை அரசி ஷீபாவின் தலைநகரம் என்று சொல்கின்றன – கண்டுபிடிக்கப்பட்ட போது, கறுப்பினத்தவர்களை அப்பண்பாட்டின் உரிமையாளர்களாக அறிவிக்க காலனிய வரலாற்றாய்வாளர்கள் மறுத்தனர். ஆராய்ச்சியில் ஈடுபட்ட அனைத்து துறைகளும் ஒரே குரலில் பேசும் வகையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த இருப்பு திரை 1960களிலும், பின் 70களிலும் தொடர்ந்தது. ஜிம்பாபேயில் வசிக்கும் அத்தொல்லியல் ஆய்வு குழுவின் பொறுப்பாளர் பால் சின்கேள்ர் சொல்கிறார் :
சரியான தகவல்களை வெளியில் கசிவதை தவிர்க்குமாறு அரசு அழுத்தம் தருவதால், அருங்காட்சியகத்தின் சேவைகள் கடும் நெருக்கடியில் இருப்பதாக அறிவுறுத்தப்பட்டேன். அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் தகவல் தட்டிகள், விநியோகிக்கப்படும் பார்வையாளர் கையேடுகள், பாட புத்தகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், செய்தி பத்திரிக்கைகள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவை தணிக்கைக்கு உட்படுத்துப்படுவது தினசரி நிகழ்வானது. ஒரு முறை, ஜிம்பாபவே நாடு கறுப்பர்களால் கட்டியெழுப்பப்பட்டது என்ற தகவலை நான் வெளியே சொன்னால் என் வேலையில் இருந்து நீக்க படுவேன் என்று அருங்காட்சியகத்தின் அருங்காவலர்கள் குழுவை சேர்ந்த ஒருவர் என்னை மிரட்டினார். மஞ்சள் நிறத்தவரால் கட்டப்பட்டது என்று சொல்வதில் ஒன்றும் பிரச்சனையில்லை என்றும், ஆனால் கார்பன் அடிப்படையிலான கால அளவீட்டு தகவல்களை சொல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டேன்.“[3]
ஜிம்பாபே பல்கலைகழகத்தில் பணியாற்றும் ஒரு தொல்லியல் ஆய்வாளரான முனைவர். இன்னசெண்ட் பிக்கிராய்(Dr Innocent Pikirayi),பிபிசி-யுடனான ஒரு உரையாடலில், இந்த ஆய்வில் ஊடுபாவியிருந்த காலனிய அரசியலை குறித்து சொல்கிறார் :
1960-களில் ஆப்பிரிக்க தேசியவாதிகள் சுதந்திரம் கேட்டு போராடியபோது, இயன் ஸ்மித் அரசு வரலாற்றாய்வாளர்களை ஜிம்பாபேவின் வரலாற்றை – அதன் ஆப்பிரிக்க வேர்களை தவிர்த்துவிட்டு – பொய்யான ஒரு வரலாறாக உருவாக்கும்படி பணித்தது. இந்த பொய்யான வரலாற்றை 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் உருவாக்கப்பட்ட தொல்லியல் பொருட்களின் அருங்காட்சியகங்களுடன் ஒப்பிடலாம். அந்த அருங்காட்சியகங்கள் ஜிம்பாபேயின் வரலாற்றை Pheoenicia-வுடன், சபன் அரபியர்களுடனும், எகிப்தியர்களுடனும் மற்றும் பிற கிழக்கு பிரதேச நாடுகளுடனும் இணைத்தது.”[4]
இந்தியாவின் கதை
வரலாற்றை முன்முடிவுகளுடன் அணுகும் இத்தகைய செயல்பாடுகள் இந்தியாவிலும் நடந்துள்ளன. அது ஆரிய இனக் கோட்பாடாகவோ அல்லது காம்பே வளைகுடாவில் கடலுக்கடியில் மூழ்கிக் கிடக்கும் வாழ்விடங்கள் குறித்தோ அல்லது ஹரப்ப நாகரிகத்தின் தன்மை குறித்தோ அல்லது வேதகால சரஸ்வதி நதிக்கும் வறண்டு போன காகர்-ஹாக்ரா நதிக்கும் இடையே உள்ள விளங்கமுடியா புதிர் குறித்தோ, இந்த ஆய்வுகளில் இத்தகைய செயல்பாடுகள் மிக நுட்பமாக நடந்துள்ளன.
காம்பே வளைகுடாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் வெறும் இயற்கைச்சிதைவாக இருக்கலாம். காகர்-ஹாக்ரா நதிக்கும் சரஸ்வதி நதிக்குமான தொடர்பு குறித்த தரவுகள் தவறானதாக இருக்கலாம். ஆனாலும் ஆரம்பகால மனித வாழ்விடங்கள் காம்பே வளைகுடாவின் மோதி தளும்பும் நீர்நிலைகளின் அடியில் உறங்கிக் கொண்டிருக்கும் சாத்தியத்தை மறுக்க முடியாது. வேதகால சரஸ்வதி நதி காகர்-ஹாக்ராவின் தொல் கிளை ஆறாக இருக்கும் சாத்தியத்தையும் மறுக்க முடியாது. சில முடிவுகள் சரியா தவறா என்பது குறித்து இங்கு பேசப்படவில்லை. மாறாக, ஒரு சில ஆய்வு முடிவுகளை – அவை அந்த மண்ணின் மைந்தர்களின் முயற்சியால் மட்டுமே நிகழ்ந்த கலாச்சார மற்றும் சமூக சாதனைகளை அழுத்தமாக நிறுவ முற்படும் போது – உறுதியாக மறுத்து விட்டு, அதற்கு பதிலாக காலனிய பார்வையை மட்டும் மிக நுட்பமாக முன்னிருத்துவதை இங்கு கவனப்படுத்த வேண்டும்.
(ஒரு தேசத்தின்)வரலாற்று சித்திரத்தை கைப்பற்றி அதை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் அத்தேசத்தின் வருங்கால அரசியல் போக்குகளை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மேற்குலகம் மிக எளிதாக அடைகிறது. இந்த அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ள நடுநிலை வேஷமிடும் மேற்கத்திய ஆய்வு நிறுவனங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு உதவுகின்றன. ஆனால் இதன் விளைவுகள் பாதிக்கப்பட்ட நாட்டின் சமூக-அரசியல் இயக்க தளத்தில் பேரழிவை நிகழ்த்தும். துரதிருஷ்டவசமாக, அவை இன அழித்தொழிப்பில் சென்று முடியும். இந்த நிகழ்வு சங்கிலியை நாம் இன்றும் பல ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் காண முடியும்.
இப்போது இந்திய தொல்லியல்துறை வரலாற்றில் நடந்த இரு நிகழ்வுகளை பார்க்கலாம். இங்கு பேசப்படும் ஆராய்ச்சியும் அதன் விவாதங்களும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்டது, ஆனால் அதன் அடிநாதமாக இருக்கும் அரசியல் எத்தகையது என்பதில் சந்தேகமே தேவையில்லை.
சூர்கோட்டடா குதிரைப் பல் ‘சர்ச்சை’[5]
பிரிட்டிஷ் தொல்லியல் ஆய்வாளர் ரிச்சர்ட் மெடோ(Richard Meadow) 1987-ல் இப்படி எழுதுகிறார் : “தெற்காசியாவில் பொது யுகத்திற்கு முந்தைய இராண்டாயிரமாவது ஆண்டு(2000 BCE) இறுதிவரை குதிரைகள் வாழ்ந்தற்கான தடயங்கள் எதுவும் இல்லை. குதிரைகள் இருந்ததாக பல்வேறு ஆராய்ச்சிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன(உ.தா., சீவெல் 1931; நாத் 1962, 1968; சர்மா 1974). ஆனால் இதில் சில மட்டுமே பிற ஆராய்ச்சியாளர்கள் சுயமாக சோதித்து அறிந்துகொள்ளக் கூடிய வகையில் போதுமான அளவீடுகளுடன், வரைபடங்களுடன் மற்றும் புகைப்படங்களுடனும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது சீவெல்(Sewell) என்பவரை தவிர்த்து – இவர் காலனிய காலத்து ஐரோப்பிய ஆய்வாளர் – மற்ற இருவரும் காலனியத்திற்கு பிந்தைய இந்திய ஆய்வாளர்கள். சுருக்கமாக சொல்வதானால், மெடோ இந்திய ஆய்வாளர்களின் தொழில்திறனை கேள்விக்குட்படுத்துகிறார். குறிப்பாக, சர்மாவின் பெயர் உபயோகிக்கப்படுவதை இங்கு நாம் கவனப்படுத்த வேண்டும். சர்மா குதிரைகளின்(Equus caballus) வெட்டுப்பல் மற்றும் கடைவாய்பல்லையும், பல விரல் எலும்புகளையும் மேலும் பிற எலும்புகளையும் தன் கண்டுபிடிப்பில் வெளிக்கொண்டுவந்தார். ஆனால் இதை மெடோ முற்றிலும் மறுத்துவிட்டு, இப்படி எழுதுகிறார் :
…கண்டுபிடிக்கப்பட்ட விரல் எலும்புகளின் புகைப்படங்களை ஆராயும்போது, கச்(Kutch) வளைகுடாவில் உள்ள ஹரப்பன் நாகரிக பகுதியான சூர்கட்டோடாவில் கண்டுபிடிக்கப்பட்ட ’குதிரை’, உருவத்தில் பெரிதாக இருந்தாலும், உண்மையில் அது ஒரு கோவேறு கழுதை என்று தான் கருதப்பட வேண்டும்.
ஆனால் இருபது வருடங்களுக்கு பிறகு ஹங்கேரி நாட்டை சேர்ந்த Sándor Bökönyi அந்த எலும்புகளை ஆராய்ந்து விட்டு, அவை மனிதர்களால் வளர்க்கப்பட்ட உண்மையான குதிரையின் எலும்புகள் என்று அறிவித்தார். தன் கண்டுபிடிப்பின் உண்மை உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து ஏ.கே.சர்மா சொன்னவை முக்கியத்துவம் வாய்ந்தது. தன் கண்டுபிடிப்பு இருபது வருடங்களுக்கு பிறகு பெற்ற நியாயமான அங்கீகாரத்தை பற்றி அவர் சொன்னது :
இதுவே எனக்கு சோகமான நாள் ஏனெனில்…என் கண்டுபிடிப்பு இருபது வருடங்களாக அதன் அங்கீகாரத்திற்காக காத்திருந்து, இறுதியாக வேற்று கண்டத்து மனிதர் ஒருவரின் வருகையினாலும், அவரது ஆராய்ச்சியினாலும் ‘சர்மாவின் முடிவு சரியானது’ என்று அறிவிக்கப்படுகிறது. நம் கண்டுபிடிப்புகளுக்கான அங்கீகாரத்தை நாட்டு எல்லைக்கு அப்பாலிருந்து எதிர்பார்க்கும் எண்ணத்தை விட்டுவிடும் அறிவுசார் துணிச்சலை நாம் எப்போது கைக்கொள்ளப் போகிறோம்?
இந்நிகழ்வு சூர்கோட்டடா குதிரை ஆராய்ச்சியோடு முடியவில்லை. உதாரணமாக, லொத்தாலின் கப்பல் துறைமுகத்தை பாசன ஏரி என்று அறிவித்த கதையை பார்க்கலாம்.
லொத்தால் கப்பல் துறைமுக ‘சர்ச்சை’
குஜ்ராத்தின் செளராஷ்ட்ர பகுதியில் இருக்கும் தொழிற்சாலை மையமான லொத்தால் ஹரப்ப நாகரீகத்தின் சிறிய நகரமுமாக இருந்தது. எஸ்.ஆர்.ராவ் 1950-களில் இதை கண்டுபிடித்து, தன் அகழ்வாய்வை இப்பகுதியில் நிகழ்த்தினார். அவர் லொத்தாலில் 22×37 மீட்டர் அளவுடைய(4 முதல் 4.5 மீட்டர் ஆழமுடைய) சரிவகவடிவான(Trapezoidal) ஒரு செங்கல் படுகையை கண்டுபிடித்தார். அப்படுகையை 20×6 மீட்டர் அளவுடைய கப்பல்களை நுழையக்கூடிய துறைமுகம் என்று அறிவித்தார். இந்த கண்டுபிடிப்பு மனித குல கடற்சார் வரலாற்றில் லொத்தாலை ஒரு முக்கிய இடத்தில் – சொல்லப்போனால், முதன்மையான இடத்தில் – வைக்கிறது.
1968-ல் ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் நகரின் தெற்காசிய நிறுவனத்தில் பணிபுரியும் லாரன்ஸ் லெஸ்னிக்(Lawrence Leshnik) எஸ்.ஆர்.ராவின் இந்த கண்டுபிடிப்பை கேள்விக்குள்ளாக்கினார். ராவ் கண்டுபிடித்த அந்த இடம் ‘கப்பல் துறைமுகம் கொண்டிருக்க வேண்டிய அம்சங்களை கொண்டிருக்கவில்லை’ என்று எழுதினார். மாறாக ”மிதமான ஜனத்தொகை உடைய ஒரு கிராமத்தின் விவசாயத் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய ஒரு பாசனக் கண்மாயாக” மட்டுமே அது கருதப்பட வேண்டும் என்று சொன்னார். தன்னுடைய வாதங்கள் “ஐயமற்ற ஆதாரங்களை” கொண்டிருக்கவில்லை என்பதை லெஸ்னிக் ஒத்துக் கொண்ட போதும், லொத்தாலின் புவியமைப்பின் காரணமாக கடல் நீர் அந்த இடத்தை அடைந்திருக்க முடியாது என்பதே அவருடைய மைய கருத்து. ”தற்போது நாம் அறியும் கேம்பே வளைகுடா லொத்தாலில் இருந்து 23 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அந்த கப்பல் பட்டறை தற்போதைய கடல் மட்டத்திலிருந்து 12 மீட்டர் உயரத்தில் உள்ளது. தற்போதைய கடல் மட்டம் இப்போதைய அளவை விட 3 மீட்டர் உயரமானதாக இருந்தாலும், கடல் நீர் அந்த கப்பல் பட்டறையை சென்றடைந்திருக்கமுடியாது”, என்று சொன்னார்.
loth
உடனே ஹரப்பன் பகுதியில் அகழ்வாய்வு செய்த மேற்குலக ஆய்வாளர்களும், சில முக்கிய இந்திய ஆய்வாளர்களும் களத்தில் குதித்தனர். எஸ்.ஆர்.ராவின் கண்டுபிடிப்பு ‘சர்ச்சைக்குரியது’ என்றும், ராவ் எந்த ஒரு இந்திய கிராமத்திலும் பொதுவாக காணப்படக்கூடிய ஒரு பாசனக் கண்மாயை ‘உலகின் பழைய கப்பல் துறைமுகமாக’ காட்ட முயற்சிக்கிறார் என்று பேசத் துவங்கினர்.
உதாரணத்திற்கு, பெரிதும் மதிக்கப்படும் மானுடவியலாளரான Gregory Possehl, தன்னுடைய ஹரப்பன் ஆராய்ச்சியை தொடர்ந்து எழுதியதை கீழே படிக்கவும் :
(லொத்தால்) பகுதியில் அகழ்வாய்வில் ஈடுபட்ட எஸ்.ஆர்.ராவின் கண்டுபிடிப்பான பெரிய, செங்கல்-வரிசையால் சூழப்பட்ட துறைமுகம் என்றழைக்கப்படும் இடம் சர்ச்சைக்குரிய ஒன்று… கே.டி.எம்.ஹெக்டே சுட்டிக்காட்டியதைப் போல்(1991-ல் நிகழ்ந்த தனிப்பட்ட தகவல் பரிமாற்றத்தில்), லொத்தலில் ஒரு சேமிப்புகிடங்கு மற்றும் பிற கட்டிடங்களை கட்டுவதற்கு தேவையான மேடான ஒரு பகுதியை உருவாக்குவதற்காக மணல் தோண்டியெடுக்கப்பட்டதால் தான் இந்தப் பகுதி உருவானதென்று சொல்கிறார். ஆக எல்.லெஸ்னிக்(L.Leshnik) கூறியதைப் போல இந்த இடத்தை எந்த ஒரு தெற்காசிய கிணறாக மட்டுமே பார்க்க முடியும் என்பதில் எனக்கு முழு சம்மதம்.”[7]
1969-ல் நேருவிய மற்றும் மேற்கத்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட தன்னுடைய ‘இந்தியாவின் வரலாறு’ நூலை ரொமிலா தாப்பர் வெளியிட்டார். 2003-ல் பெங்குவின் நிறுவனத்தினரால் அப்புத்தகம் புதுப்பிக்கப்பட்டு ”பெங்குவின் (வெளியிடும்) பண்டைய இந்தியாவின் வரலாறு” எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது. இப்பதிப்பில் ரொமிலா தன்னுடைய வாசகர்களிடம் இப்படி சொல்கிறார் : “லொத்தாலில் கப்பல் துறைமுகம் என்று கருதப்படக் கூடிய இடம் ஒன்று இருக்கிறது, ஆனால் அதை துறைமுகம் என்று சொல்லக்கூடியதா என்ற சர்ச்சை தொடர்கிறது”.
ஆக வழக்கமான ஒரு முடிவு மீண்டும் நிறுவப்படுகிறது : ”தன் ஆராய்ச்சியின் மீதான மிகுகிளர்ச்சியால் உந்தப்படும் ஒரு இந்திய தொல்லியலாளர் தவறான முடிவை அறிவிக்கிறார். ஒரு மேற்கத்திய அறிஞர் இதை சுட்டிக் காட்டுகிறார். இதனால் விழித்துக் கொண்ட உலக ஆய்வாளர்கள் அந்த தவறை திருத்துகிறார்கள்.” லொத்தாலின் கப்பல் துறைமுகத்தை ‘சர்ச்சைக்குரியது’ என்று சொன்ன லெஸ்னிக், Posshel அல்லது பிற எண்ணற்ற ஆய்வாளர்களை நாம் நம் கற்பனையின் உச்சத்தில் கூட ‘இனவாதி’ என்றோ ’வல்லாதிக்கவாதி’ என்றோ சொல்லிவிட முடியாது. ஆனாலும், அவர்கள் முன்வைத்த வரலாற்று சித்திரத்தில், இந்திய-வெறுப்பச்சத்தை ஒட்டிய ஐரோப்பிய-மைய நோக்கு இருந்ததை மறுக்க முடியாது.
ரொமிலா தாப்பர் – இந்திய வரலாற்றை அறிவியல் பூர்வமாக முன்வைப்பதில் உறுதிகொண்டு செயல்படும் ”போற்றுதலுக்குரிய” மார்க்சிய வரலாற்றாசிரியர் – தொடர்ந்து லொத்தாலின் துறைமுகத்தை ‘சர்ச்சைக்குரியது’ என்று சொல்லிவருவதை பற்றி சில விளக்கங்கள் இப்போது.
மேலே சொன்னபடி தாப்பரின் இந்திய வரலாற்றை பற்றிய புத்தகத்தின் ‘திருத்தப்பட்ட பதிப்பு’ 2003-ல் வெளியிடப்பட்டது. ஆனால், கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பாகவே முனைவர். ராஜீவ் நிகம், இந்திய கடலியல் நிறுவனத்தின்(National Institute of Oceanography) புவிசரிதவியல்(Geology) துறையின் தலைவர், லொத்தாலின் ”சர்ச்சைக்குரிய” துறைமுகத்தில் கிடைத்த நுண்ணுயிரிகளின் வண்டல் மாதிரிகளை(sedimentary samples) பரிசோதித்து, இம்மாதிரிகள் ‘foraminifera என்றறியப்படும் கடல்வாழ் உயிரிகள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள்” என்றும், “இதனால் லொத்தால் ஒரு கடல்சார் சூழலை கொண்டிருந்தது” என்றும் அறிவித்தார்.
லொத்தால் துறைமுகத்தை மறுத்து சொல்லப்பட்ட வாதத்தில், கடல் நீர் அந்த இடத்தை வந்தடையமுடியாது என்று சொல்லப்பட்டதை, நிகாமின் ஆய்வு துளியும் சந்தேகம் இல்லாமல் மறுக்கிறது. அந்த இடத்தில் கடல் நீர் வந்தடைவதை நிகாமின் ஆராய்ச்சி நிறுவுகிறது. தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரையில் நிகாம் இது குறித்து சொல்வது :
Planktonic foraminifera மிதமான ஆழம் கொண்டு திறந்த கடற்பகுதியில் உயிர்வாழக் கூடியது. கடலின் பேரலைகளால் பிற பொருட்களுடன் சேர்ந்து இந்த உயிர்களையும் கடத்துவதால் கடற்கரையில் அபூர்வமாக இந்த உயிர்கள் காணக்கிடைக்கின்றன. அதனால் தற்போதைய அகழ்வாய்வில் காணக்கிடைக்கும் பொருட்களில் இந்த உயிர்கள் காணப்படுவதால் ஹரப்பன் காலகட்டத்தில் இக்கடலில் பேரலைகள் உருவானதை நாம் அறியலாம்.”[8]
ஹரப்பன் நாகரீக ஆராய்ச்சியில்(சில விதிவிலக்குகளை தவிர்த்து) மேற்கத்திய அறிவுலகத்திற்கு இயல்பாகவே படிந்திருக்கும் இந்திய-அச்சவுணர்வால் எழும் பாரபட்சமான ஆய்வுமுடிவுகளும், ஆனால் பல்துறை அறிவியல் ஆய்வுகள் முந்தைய ஆய்வுகளை மறுத்து உண்மையை நிறுவுவதையும் சொல்லும் மற்றுமொரு சிறந்த உதாரணம் இது.
தன்னை மார்க்ஸியராகவும் காலனியத்திற்கு பிந்தைய ஆய்வாளராகவும் சொல்லிக்கொள்ளும் தாப்பர் இந்த ஆராய்ச்சியின் பின்னணியில் உள்ள மேற்குலக சார்பான பாரபட்சத்தை ஏற்றுக்கொண்டோ அல்லது அந்த பாரபட்சத்தை தோலுரித்துக் காட்டும் சொந்த நாட்டு ஆய்வாளர்களின் அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகளை கண்டும் காணாமலோ இருக்க முடிகிறது. அவர் பின்பற்றும் மார்க்ஸியம் என்பதே ஐரோப்பிய-மைய வாத கருத்தியல் என்பது கூட இதன் பின்னணி காரணமாக இருக்கலாம். ஆனால், தற்போது அரசியல் மற்றும் பிற பாரபட்சங்களை மீறி எழுந்து வரும் புதிய அறிவுச்சுடர்கள் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. சிறந்த இந்திய வரலாற்றாய்வாளர்களில் ஒருவரான உப்பீந்தர் சிங், பண்டைய இந்தியா குறித்து 2008-ல் வெளிட்ட தன்னுடைய நூலில் இப்படி சொல்கிறார் :
லொத்தாலின் தனித்துவமான சிறப்புகளில் முக்கியமானது கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் அதன் துறைமுகம். சுடப்பட்ட செங்கல்களின் சுவரால் சூழப்பட்ட சரிவகவடிவான துறைமுகம். இதன் கிழக்கு மற்றும் மேற்கு சுவர்கள் முறையே 212 மற்றும் 215 மீட்டர். வடக்கு மற்றும் தெற்கு சுவர்கள் முறையே 37 மற்றும் 35 மீட்டர். குறிப்பிட்ட நீர்மட்ட அளவை பேணுவதற்கென்று மதகும்(sluice gate) மற்றும் வெள்ளக் கால்வாயும்(spill channel) இருக்கின்றன. மேற்குப் பகுதியில் மண்-செங்கலால் எழுப்பப்பட்ட மேடை சரக்கு ஏற்று துறையாக(wharf) செயல்பட்டிருக்கலாம். இதை துறைமுகமாக கருதாமல், வெறும் தண்ணீர் சேகரிப்பு தொட்டியாக காண்பது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.”[9]
உப்பீந்தர் சிங்கின் லொத்தால் துறைமுக வர்ணனையை தாப்பர் ‘சர்ச்சைக்குரிய’ கட்டிடம் எனக் சொல்லிச் செல்லும் ஒரு வரி குறிப்புடன் ஒப்பிட்டுப் பாருங்கள்!
தொல்லியல் மாயைக்கு அப்பால்
இந்திய தொல்லியலாளர்கள் தவறு செய்யமுடியாதவர்கள் என்று இங்கு யாரும் சொல்லப்போவதில்லை. பெரிதும் பேசப்பட்ட துவாரகை கடல் அகழ்வாய்வில் கூட, சில பிரச்சனைகள் இருக்கின்றன. சமீபத்திய அகழ்வாய்வின் அடிப்படையில் கவுர் முதலிய ஆய்வாளர்களின் கருத்து :
துவாரகையை சுற்றியுள்ள பிற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் கடலில் மூழ்கியுள்ள கட்டுமானங்களின் காலத்தை, முன்பு சொல்லப்பட்டதை விட, குறைவாகவே காட்டுகின்றன. ஆயினும், துவாரகையின் காலம் குறித்து விவாதம் தொடரக் கூடும். குஜரத்தி எழுத்துரு கொண்ட ஒரு கல் துண்டு இந்த கல் கட்டுமானங்களின் காலத்தை குறைத்தே சொல்கின்றன. சமீபத்தில் இந்திய பெருங்கடலின் பல்வேறு கரையோரப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கல் நங்கூரங்கள் 8 முதல் 15-ஆம் நூற்றாண்டு வரை நிகழ்ந்த இந்திய-அரபு வணிகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆயினும் இந்த கடல் நங்கூரங்களின் காலம் அந்நங்கூரங்களுடன் தொடர்புடைய அகழ்வாய்வு செய்யப்பட்ட இடங்களின் காலத்துடன் தொடர்புபடுத்தியே ஆராயப்படவேண்டும்.”[10]
துவாரகாவில் காணப்படுவது, இணையத்தில் சில இந்துத்துவவாதிகள் சொல்வதைப் போல், 23,000 வருடத்து மூழ்கிய நகரமல்ல. அதே சமயம், கிராகம் ஹான்காக் போன்றவர்கள் சொல்வதைப் போல் ”வேற்றுலக வாசிகளால் கட்டியெழுப்பட்ட பெருநகரம்” அல்ல. ஆனால் கிருஷ்ணரின் துவாரகையை ஏதோ ஒரு வகையில் ஏதேனும் ஒரு கடல்சார்ந்த தொல் நிலப்பகுதியுடன் இணைக்க விரும்புவோர் முற்றிலும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை.
துவாரகை தீவில் கடல்சார் அகழ்வாய்வில் ஈடுபட்ட சுந்தரேஷ் மற்றும் கவுர் தங்கள் ஆராய்ச்சி கட்டுரையில், பொது யுகத்திற்கு முந்தைய இராண்டாயிரமாவது ஆண்டின் துவக்கத்தில் ஹரப்பர்கள் துவாரகை தீவில் குடியேறினர் என்று சொல்கின்றனர் :
(துவாரகை)தீவின் தென்கிழக்கு பகுதியில் குடியேறியிருந்த மக்கள் கடல் அலையின் சீற்றங்களால் பாதிப்பிற்குள்ளானதை கடலை நோக்கியிருக்கும் செங்குத்துப்பாறை நமக்கு உணர்த்துகிறது. ஆழ்கடல் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் காணக் கிடைக்கும் பானைகள் இதை உறுதிசெய்கிறது. இந்த ஆதாரம் துவாரகாவின் கடல் நீர் மட்டம் உயர்ந்ததை நமக்கு உணர்த்துகிறது. ஆனால் கடல் நீர் மட்டம் உயர்ந்த காரணத்தை அறிவது கடினம். பின்னர் இந்த பகுதியில் பல காலத்திற்கு மக்கள் எவரும் வாழாமல், மீண்டும் பொதுயுகத்திற்கு முந்தைய 3-4-ஆம் நூற்றாண்டில் மீண்டும் மக்கள் குடியேற்றம் நிகழ்ந்தது.”[11]
‘கடல் கொண்ட துவாரகை நகரம்’ எனும் தொன்மம் மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் இருந்து முகிழ்த்திருக்கலாம். ஆனால் அந்நிகழ்வு பல பத்தாயிரம் ஆண்டுக்கு முந்தைய ஒரு யுகத்தில் நிகழவில்லை. மாறாக ஹரப்பன் நாகரிகத்தின் கடைசி காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கலாம்.
நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நம் கடந்தகாலம் குறித்த சித்திரத்தை யார் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பது என்றும் முக்கியமான விஷயம். இந்நிலையில், நம் கடந்தகாலத்தை கட்டமைக்கும் பொறுப்பை நம் முன்னாள் காலனிய ‘முதலாளி’களின் கையில் தாரை வார்த்துவிட்டு, அவர்கள் காட்டும் திசையில் மேய்ந்து, நம் கலச்சார மற்றும் தேசிய வலைப்பின்னலை சிதைத்துக் கொள்ளப் போகிறோமா அல்லது நம் கடந்தகாலத்தை நாமே ஆராய்ந்து அறியக்கூடிய, சுய-விமர்சனத்தில் வேரூன்றிய, வலுவான அறிவுசார் கட்டமைப்பை உருவாக்கப்போகிறோமா?
இது கடும் உழைப்பை கோரக் கூடிய, ஒற்றை கயிற்றின் மீது நடக்கும் செயலுக்கு ஒப்பானது. இந்த பணியில் நிகழப்போகும் ஒவ்வொரு சிறிய தவறைக் கூட ஊதி பெரிதாக்குவதற்காக மைக்கெல் விட்செல் போன்ற மேற்கத்திய ஆய்வுலகினர் கழுகுகாக காத்திருக்கின்றனர். மீரா நந்தா மற்றும் தாப்பார் போன்ற இந்திய காலட்படையினரின் உதவி இவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும். ஒவ்வொரு தவறையும், தவறான கற்பனையின் சிறு துளியின் கலப்பையும் ஒட்டுமொத்த இந்திய அறிவுசூழலையும் ‘போலி-அறிவியல்’ மற்றும் ‘அரசியல் உள்நோக்கம்’ கொண்டதென்றும் சொல்வார்கள்.
அதனால், லொத்தாலின் கப்பல் துறைமுக ‘சர்ச்சை’யை எதிர்கொண்ட நிகமின் ஆராய்ச்சியை போல, நம் கடந்தகாலம் குறித்த ஆய்வுமுறையை பல்துறைகளை உள்ளடக்கிய ஒன்றாக நாம் உருவாக்க வேண்டும். பின் வெகுஜன வீச்சுடைய அறிவியல் எழுத்தாளர்களைக் கொண்டு அனைத்து இந்தியர்களின் மனதிலும் பதியும் விதமாக இந்த ஆராய்ச்சி முடிவுகள் கொண்டு செல்லப் பட வேண்டும். இது ஒரு பகீரதப் பணி. பிம்பெட்கா(Bhimbetka) குகை ஓவியங்கள் இத்தகைய ஒரு பணிக்காக காத்திருக்கின்றன.
தற்போது இந்தோனேஷியாவின் சுலவேசி குகை ஓவியங்களுக்கு திரும்புவோம். சுலவேசி குகை ஓவியங்களின் கால கணக்கீடு ஆய்வு குறித்த ’நியூ சயிண்டிஸ்ட்’ இதழின் கட்டுரை தன்னுடைய சிறு முன்னுரையை இப்படி முடிக்கிறது :
இந்தோனேஷியா கூட தன்னை கலையின் பிறப்பிடமாக சொல்லிக் கொள்ள முடியாது. இந்த ஓவியங்கள் ஒரு உலகம் தழுவிய மானுடத்தன்மையை உரைக்கிறது. கை வரையச்சுகளும், மிருகங்களின் ஓவியங்களும் (அதே காலத்திய)ஐரோப்பிய குகைகளிலும் காணக் கிடைக்கின்றன. கலையின் முதல் சிசு கண்டிப்பாக நம் முதாதைகளின் தேசத்தில், ஆப்பிரிக்காவில், தான் நிகழ்ந்தது. அறிவியல் துறையைப் போல், கலையிலும், நாம் அனைவரும் ஒன்றே.
மேற்குலகின் மிகப் பெரும் விஞ்ஞானிகள் கூட இனம் என்பதை உயிரியல்(ஆராய்ச்சியில்) உண்மையான பகுப்பாகவும், இனமேம்பாட்டுயல்(eugenics) மனித குல முன்னேற்றத்திற்கான அறிவியல் முறையாகவும் முன்வைத்த அதே 1923-ஆம் ஆண்டில், இந்தியர் ஒருவரால் சொல்லப்பட்ட வார்த்தைகள் கீழே. ’நியூ சயிண்டிஸ்ட்’ இதழில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் இவ்வார்த்தைகளின் எதிரொலியே :
உண்மையை சொல்லவேண்டுமெனில், ஒருவர் தன்னை எப்படி அடையாளப்படுத்திக் கொண்டாலும், வரலாற்றுடன் தன்னை எப்படி பிணைத்துக் கொண்டாலும், அவருடைய ரத்த நாளங்களில் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் ரத்தமும் சுற்றி வருகிறது. துருவம் முதல் துருவம் வரை மானுடத்தின் அடிப்படை ஒற்றுமை ஒன்றே உண்மையானது. மற்றவை அனைத்தும் ஒப்பியல் தன்மை கொண்டவையே.”[12]
இந்த வரிகளை தன் ‘இந்துத்துவம்’ புத்தகத்தில் எழுதியவர் விநாயக் தாமோதர் சாவர்க்கர்.
(முற்றும்)
நன்றி : ‘ஸ்வராஜ்யா’ இதழ்
ஆங்கில மூலம் : Cave Art Caveat
குறிப்புகள்
[1] David Cyranoski, ‘World’s oldest art found in Indonesian cave‘, Nature, 08-Oct-2014
[2] ‘Art, a human universal’, New Scientist, 11-Oct-2014
[3] Paul Sinclair quoted in Julie Frederikse, ‘None but ourselves: masses vs. media in the making of Zimbabwe’, Raven Press, 1982, p.11
[4] Dr. Innocent Pikirayi interview, Story of Africa: Central African Kingdoms: BBC: URL: http://www.bbc.co.uk/worldservice/africa/features/storyofafrica/10chapter1.shtml (accessed on 14-Oct-2014)
[5] The entire episode in context can be read in: Edwin Bryant, The Quest for the Origins of Vedic Culture: The Indo-Aryan Migration Debate, Oxford University Press, 2001, pp.171-2
[6] Lawrence Leshnik and K.H.Junghans, The Harappan “Port” at Lothal: Another View, ‘American Anthropologist’ (Vol 70 Iss.5), Oct-1968, pp.911-922
[7] Gregory L. Possehl, Harappans and hunters, in Forager-Traders in South and Southeast Asia: Long-Term Histories, Ed. by Kathleen D. Morrison, Laura L. Junker, Cambridge University Press, 2002, p.66
[8] Rajiv Nigam, ‘Was the large rectangular structure at Lothal (Harappan settlement) a ‘dockyard’ or an ‘irrigation tank’?’, Marine Archaeology of Indian Ocean Countries, 1988, pp. 20-21
[9] Upinder Singh, A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century, Pearson Education India, 2008, p.154
[10] A.S.Gaur, Sundaresh and Sila Tripati, Ancient Dwaraka: Study based on recent underwater archaeological investigations, Migration & Diffusion, Vol.6, Issue Number 21, 2005
[11] Sundaresh and A.S.Gaur, Archaeology of Bet Dwaraka Island, Man and Environment, XXIII(2)-1998
[12] Vinayak Damodar Savarkar, Hindutva: Who is a Hindu?, Veer Savarkar Prakashan (1923: 1989), p.90

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.