கவிதைகள்

நேர்மை

Mask_Animal_camouflage_Lizard_Chameleon_Shape_Mingle_Transparent_Faceless_Body_Frog

உச்சரிப்பதைப் போல இலகுவாய் இல்லை
வாழ்க்கையில் கைக்கொள்வதும்
நித்தம் கடைப்பிடிப்பதும்.
பல நேரங்களில்
முகமாய் இல்லாமல்
முகமூடியாய் மாறி விடுகிறது.
ஏதோ ஒரு நிலையில்
எல்லா நாளும்
என்னிலிருந்து நழுவி நகர்கிறது.
மீட்டெடுத்து முகமாக்க
எத்தனிக்கும் போதெல்லாம்
பிழைக்கத்தெரியாதவன் என்ற வசையே மிஞ்சுகிறது.
ஆயினும் –
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது
முகமூடியை முகமாக்குவதற்கான யுத்தம்!

– மு. கோபி சரபோஜி

oOo

எட்டிப் பார்க்கும் வேற்றுக்கிரகவாசிகள்

மொட்டைமாடிகள்
நடப்பதற்கானவை.
அமரும்போது அமரும்
நிற்கும்போது நிற்கும்
நிழல்களை வரையும்
நிலாவை உடையவை.
முன்னெடுத்து விடப்பட்ட
முடியைப் போலச்
சிலும்பும் மரங்கள்
சிணுங்க நிற்பவை.
அமாவாசையில்
கண்கட்டித்தழுவும்
இரவுப் பறவைகளின்
சத்தத்தில் குலவுபவை.
வரத்துணியாய் வெய்யிலிலும்
நனைதுண்டாய் பனியிலும்
பாசப்பச்சை வெல்வெட்டாய்
சாரலிலும் நனைபவை.
மழையில் பாதத்தூசுகளையும்
பறவை எச்சங்களையும்
கழுவிக் கொள்பவை.
ஆண்டெனா பதித்து
வேற்று கிரகவாசிகளாய்
விழித்துப் பார்ப்பவை.
நாம் கீழே எட்டிப்பார்க்கும்போது
கூடவே எட்டிப் பார்த்துக்
கிறுகிறுத்து அங்கேயே கிடப்பவை.

தேனம்மை லெக்ஷ்மணன்

oOo

ஒரு பிணம் உறங்கும் இரவு

ஏன் சுவர் மூலையில் போய் திரண்டிருக்கும் இருள் போல் உட்கார்ந்திருக்கிறாய்?
தினம் தினம் நான் வைது தீர்த்த ‘கூர்க்கா’ என்னை வீட்டுக்குள் கிடத்த தூக்கி வரும் போதே பயப்பட்டு விட்டாயா?
கிட்ட வா.
தொய்யும் என் தலையைத்
தூக்கு.
நினைப் பொருந்திய என் மார்பை
நிமிர்த்து.
சட்டைப் பொத்தான்களின் இறுக்கத்தைக் கொஞ்சம்
தளர்த்து.
எல்லாம் முடிந்து விட்ட பின்
‘ஏன்’ என்கிறாய்?
எதுவுமே நடக்காதது போல் வாசல் வெறிச்சோடிக் கிடக்கிறதென்று பார்க்கிறாயா?
உலகம்
காத்திருப்பதில்லை.
திறந்திருக்க வாசல்
நடந்தது தெரிந்தும் நகர்பவரைப் பார்.
தகவலுக்காக
விசாரித்து விட்டு நடை கட்டுபவரைப் பார்.
நாளை தான் தூக்கிச் செல்வதால் நாளை காலையில் வந்தால் தலை காட்டிவிட்டு குளித்து விட்டுப் போக ஏதுவாக இருக்குமென்று கணக்குப் போட்டு போபவரைப் பார்.
வந்தவர்களும்
காத்திருந்து விட்டு வேளையாக வெளியேறுவதைப் பார்
நீயும்
எனக்காகக் காத்திருக்கவில்லை இப்போது.
வெகு தொலைவிருக்கும் உன் மகளுக்காகக் காத்திருக்கிறாய்?
(என் மகளுந் தான் என்பது எந்த விதத்தில் எனக்கு இப்போது ஆறுதலாய் இருக்கும்?)
வருவதற்கு அவளுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம்.
எப்போது
என்னை எடுத்துப் போடுவதென்பது எதிர்பார்ப்பாகி விட்டது?
இரைகிறார் குடித்தனக்காரர் ஒருவர்.
கேட்கவில்லையா?
வருத்தப்படாதே
அதற்கு.
யதார்த்தம்
பிறருக்கு நேர்ந்த போது உணராது தனக்கு நேரும் போது மட்டும் உணர்வது.
என்ன செய்வது
நான்?
எல்லாப் பொழுதும் இருளில் குகை கொள்ள
என்னால் சதா உறங்கிக் கொண்டே தான் இருக்க முடியும்.
உறங்கி மீளாத போது என்றும் காலம் அக்கரையில் நிற்கும் காலிப் படகு போல் தெரிகிறது.
எப்படிக் கடந்தேன் என்று தெரியவில்லை.
இன்றிரவு
இங்கு நான் உறங்கும் கடைசி இரவு.
கனவுகள் இல்லையென்பது பெரிய இழப்பென்று உனக்குத் தெரியுமா?
முதன் முதலாய்க் கெஞ்சுகிறேன்.
கொஞ்சம்
துணையாய் இரு.
நாளை
நீ தனியாய் -கடைசியாயல்ல -உறங்கிக் கொள்ளலாம் நிம்மதியாய்.
என்னை மன்னித்து விடுவது உனக்குப் புதிதல்ல
என் சகியே!
கு. அழகர்சாமி