உங்கள் கேள்விக்கு என் பதில்கள் – 7

கேள்வி 16 – பனையின் பயன்களைக் குறிப்பிட வேண்டும். பனைகளை மீட்டுயிர்க்கும் வழி என்ன?

– கே. ஆர். முத்துசாமி, அவினாசி

பனைமரம் என்றால் எனது நினைவு அலைகள் பால்யப் பருவத்துக்குச் செல்லும். எனது பால்ய வாழ்வு 1942-ல் எனக்கு நாலு வயதில் துவங்கி பன்னிரெண்டு பிராயம் வரை – பனை மரங்கள் என்னை வாழ வைத்ததும் உண்டு. பயமுறுத்தியதும் உண்டு.
1942-ல் மன்னார்குடியில் நான் மூன்று வயதை முடிக்கும் முன்பே தந்தை இறந்துவிட்டார். தாய்ப்பாலை மறக்கடிக்க எனது அத்திம்பேர் வாழ்ந்த கிராமம் சித்திக்காட்டுக்கு அனுப்பப்பட்டேன். மூன்றாண்டுகள் மன்னார்குடி நினைவே மறந்துவிட்டது. சித்திக்காடு- பெயருக்கு ஏற்றாற்போல் வீட்டைச் சுற்றிலும் பனைமரக் காடுதான். அக்கிரகாரமே மன் சுவற்றில் எழுப்பப்பட்ட கூரை வீடுகள். மன்னார்குடியில் ஓட்டு வீடு உண்டு, எட்டுக்கட்டு வீடுகள். சித்திக்காட்டில் வீட்டுக் கூரைகள்கூட பனை ஓலைக்கொத்தால் பின்னப்பட்டிருந்தன. தென்னங்கீற்றைவிட பனை ஓலைக்கொத்து கெட்டி. ஐந்து வருடம் தாங்கும். எனக்கு ஐந்து வயது வந்ததும் என் அத்திம்பேர் அக்ஷராப்யாசம் செய்து வைத்தார். அப்போது அந்த கிராமத்தில் காகிதமே அறிமுகமாகவில்லை. முதலில் ஆற்று மணலைக் கொட்டி அதில், “ஹரி,” என்று எழுதிப் பழக்கினார். “ஹரி,” என்று எழுதியபின்தான் ஆனா, ஆவன்னா எல்லாம். அடுத்த கட்டமாக பனை ஓலை எழுத்தாணி வழங்கப்பட்டன- நான் படித்த ஹரிச்சுவடியே, பனை ஓலைகள்.
காகிதங்கள் வராத காலத்தில் பனை ஓலைகள்தான் காகிதங்கள். அச்சுத்தாள்களும் அவைதான். பனை ஓலைச் சுவடிகளே அன்று புத்தகங்கள். இது பற்றிய பழமொழியை நான் என் தாயிடம் கேட்டறிந்தேன்.-

“ஆதியில் பிறந்தவள். அப்பனை இழந்தவள். மேனி அறுபட்டுக் குத்துப்பட்டுச் சிதைந்தவள். அவள் சொல்லுக்கு ஆயிரம் பொன்…”

எனக்கு ஏழு வயதானபின் மன்னார்குடி நேஷனல் எலிமெண்டரி ஸ்கூலில் சிலேட்டுப் புத்தகங்களுடன் முதல் வகுப்பில் சேர்ந்தேன். விடுமுறை வரும்போது சித்துக்காடு செல்ல அடம பிடிப்பேன். மன்னார்குடி- பட்டுக்கோட்டை மணிக்கு ஒரு பஸ். பத்தணா டிக்கெட், அரை டிக்கெட் ஐந்தணா.
அடுப்புக்கரி வண்டி. கரி தணலாகிச் சூடானது முன்னால் சாவி போடுவார்கள். வண்டி புறப்படும். டிவிஎஸ் கரிவண்டியானாலும் நேரத்தில் புறப்பட்டு நேரத்தில் செல்லும். பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கிக்கு நான்கு டிரிப்தான். காலை பத்தரை மணிக்கு ஒன்று, பன்னிரெண்டு மணிக்கு ஒன்று, மதியம் மூன்று மணிக்கு ஒன்று, மாலை ஆறு மணிக்கு ஒன்று. பட்டுக்கோட்டையிலிருந்து சித்துக்காட்டுக்கு அரை டிக்கெட் மூன்றணா. வீட்டில் எண்ணி எட்டணாதான் கொடுப்பார்கள், காலணாகூட அதிகம் கிடைக்காது. பட்டுக்கோட்டை வந்தபின் ஒரு முறை மதியம் பன்னிரெண்டு மணி பஸ், மாலை மூன்று மணி பஸ் இரண்டிலும் இடம் கிடைக்கவில்லை. அன்று ஓவர்லோடு ஏற்ற முடியாது. 40 பயணிகளுக்கு மேல் அரை டிக்கெட்கூட ஓவர்லோடு வாய்ப்பு இல்லை. மிகவும் கண்டிப்பு.
பட்டுக்கோட்டைக்கும் சித்துக்காட்டுக்கும் 17 கி.மீ. தூரம். ஆறு மணி பஸ்ஸிலும் இடம் இல்லாவிட்டால் என்ன பண்ணுவது? அந்த வயதில் பஸ் கட்டணம்தான் தெரியுமே தவிர, தூரம் என்ற அறிவோ, முடியுமா என்ற கேள்வியோ இல்லை. நடந்தே போய் விடலாம் என்ற தைரியம் இருந்தது. பாதிவழியில் பசித்தால் எதையும் சாப்பிடலாம் என்று நினைத்தேன், கையில் மூன்றணா இருந்தது.
ஒரு மைல்தான் நடந்தேன். களைப்பாகிவிட்டது. ரொம்ப நாளாக ஒரு ஆசை. அப்போது வின்சென்ட் சோடா, கலர் பிரபலம். கலர் குடிக்க ஒரு ஆசை. மூன்றணாவுக்கு இரண்டணா கலர் குடித்து விட்டு ஓரணா மிச்சம். கலர் குடித்த சந்தோஷத்தில் நடந்தேன் ,நடந்தேன், நடந்து கொண்டே இருந்தேன். தூரத்தில் பனங்காடு தெரிந்தது. இரண்டு பர்லாங்கு நடந்தால் ஊர் வந்துவிடும். சித்துக்காடு சாலை வந்தபோது இருட்டி விட்டது. பனங்காட்டைத் தாண்டி அக்ரகாரம் செல்ல வேண்டும். நடுவில் ஒற்றையடிப் பாதை. பனங்காட்டைத் தாண்டி விட்டால் பயமில்லை. கொள்ளிவாய்ப் பிசாசு நடமாடுவதாக வேறு பேச்சு. யாராவது அரிக்கேன் விளக்கோடு நடந்தால் அது பிசாசாகதான் தெரியும். “ராமா, ராமா, ராமா,” என்று ஜெபித்தால் பிசாசு ஓடிவிடும் என்று அம்மா சொல்லிக் கொடுத்திருந்தார். அதுதான் வழி.
கீழே மினுக் மினுக் என்று தெரிந்த வெளிச்சத்தைப் பார்த்து ராமா, ராமா, ராமா என்று சொல்லிக் கொண்டே காட்டைக் கடந்து வீட்டுக்கு வந்தேன். என் தமக்கையும் அத்திம்பேரும் நான் ஆறு மணி பஸ்ஸில் வந்துவிட்டதாக நினைத்தார்கள். நடந்து வந்த உண்மையைச் சொன்னால், மிச்சம் பிடித்து வைத்திருந்த ஓரணா நஷ்டமாகலாம். அவர்களும் வருத்தப்படலாம். அன்று இரவு தூக்கம் வராமல் கால் வலித்தது மட்டும் நினைவிருக்கிறது. பயமுறுத்திய பனையின் கதை பொய்யல்ல. பனைமரத்தால் பணக்காரரான எங்கள் ஊர் ராமசாமித் தேவரின் கதையும் பொய்யல்ல.
சித்துக்காடு களத்தூர் ஜமீனுக்கு உட்பட்ட கிராமம். சித்துக்காட்டுக்குப் பிழைக்க வந்த தேவர், நான்கைந்து ஆட்டுக்குட்டிகளுடன் வந்தார். ஆடு மேயக்கும்போதே களத்தூர் எல்லையில் வரிசையாக பனங்கொட்டை நடும் வழக்கத்தை வைத்திருந்தார்.
களத்தூர் ஜமீன் மூன்று கிராமங்களை உள்ளடக்கியிருந்தது. காலப்போக்கில் களத்தூர் கிராமத்தின் தண்டல்காரர் ஆனார், தேவர். தண்டல்காரர் என்றால், விவசாயிகளிடம் வரி வசூலிக்கும் பொறுப்பு. இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில் அரசுக்குத் தர வேண்டிய தொகையைத் தராமல் ஜமீன்தார் திவாலாகி விட்டார். அப்போது ஜமீன்தாரி முறை ஒழிந்து ரயத்வாரி அறிமுகமாகி, செட்டில்மெண்ட் (சர்வே) நடந்தபோது, தேவர் தான் வளர்த்த பனை மரங்களைச் சுட்டிக்காட்டி, அந்த நிலங்கள் (500 ஏக்கர் வரை), தனக்குச் சொந்தம் என்று கூறி வரி கட்ட ஒப்புக்கொண்டதாக தகவல். ஜமீன் நிலத்தில் பனங்கொட்டை நட்டு, எல்லைகளைக் காண்பித்து, ஐநூறு ஏக்கர் நிலத்துக்கு மிராசுதார் ஆனார். அவர் மறைந்து நாலாவது தலைமுறைக்கும் பனைமரம் நட்டுச் சம்பாதித்த சொத்து இன்றும் எஞ்சியுள்ளது.
தேவரின் முதல் மகன் அவர் இறக்கும் தருவாயில், தன் பங்கை நிலை நாட்டிக் கொள்ள, தந்தையைப் போல், தானும் பனங்கொட்டை நட்டு, உயிர்வேலி அமைத்து அன்னியர் யாரும் நுழையாத வண்ணம் பாதுகாத்துள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்பு நான் அங்கு சென்றபோது, அந்த உயிர்வேலியைப் படம் பிடித்தேன் (படம் பார்க்க). பனைமர உயிர்வேலியை யானையாலும் கடக்க முடியாதாம். காடுகளை ஒட்டியுள்ள நிலங்களில் பனைமர உயிர்வேலி அமைக்கப்பட்டால் யானைகளிடம் இருந்து பயிர்களைக் காப்பாற்றலாம். சிங்கம், புலி, சிறுத்தைகளிடமிருந்து உயிரையும் காப்பாற்றிக் கொள்ளலாம். .
பனைமரம் தரும் கொடைகளில் பனங்கிழங்கு, பனம் நுங்கு, பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி ஆகிய உணவுகள் ஆரோக்கியமானவை. பனங்குட்டான், கூடை, விசிறி சந்தைப் பொருட்கள். நமது வீடுகளில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு செங்கல்லும் பனை அழிந்த கதை சொல்லும். மனிதன் மண் வீட்டில் வாழ்ந்தபோது, தேவையான பனை, கல்வீடு கட்டும்போது செங்கல் சூளைக்கு பலியானது. பட்டுக்கோட்டையில் தொடங்கி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி வரை கடற்கரைப் பகுதிகளில் இன்னமும் பனைமரங்கள் உள்ளன. திருப்பூர்- அவினாசியில் பனை மரம் வளர்க்க நீங்கள் ஆசைப்பட்டால், சிவகங்கை அருகே பாகனேரியில் ராஜேந்திர பிரசாத் வீதியில் வசிக்கும் பி ஆர் வி வரதராசனைத் தொடர்பு கொண்டால், ஒரு லோடு பனங்கொட்டை அனுப்பி வைப்பார். இழந்ததை மீட்கலாம்.

Palm_Tree_Reflections_Forest_Panai_Maram_Walkways_Sun_Ground_Parks

கேள்வி 17
நமது பாரம்பரியத்தில் பல்லுயிர்ப் பெருக்கம் போற்றப்பட்டது எப்படி? ஆன்மீக தொடர்பு என்ன?

– என் ஜி பழனிச்சாமி, கவுந்தம்பாடி

நமது பாரம்பரியச் சின்னமாக திருக்கோவில்கள் உள்ளன. மரங்களையும் செடிகளையும் பிராணிகளையும் பாம்புகளையும் பறவைகளையும் தெய்வீகப்படுத்தி உள்ளதை ஆலயங்களில் காணலாம். பிளளியார் யானை வடிவாய் இருக்கிறார். சிவனுக்கு நந்தி போல், பிள்ளையாருக்கு மூஞ்சூறு காவல். அரசமரத்தடி பிள்ளையாருக்கு நாகம் காவல். பிள்ளையார் சிலையுடன் நாகம் சிலையும் உண்டு.
தமிழ்த்தாத்தா உ வே சாமிநாத ஐயர் எழுதியுள்ள திருத்தல வரலாறு என்ற நூலில், உலகில் வாழும் சகல ஜீவனகளுக்கும் எறும்பு முதல் யானை வரை சிவபெருமான் முக்தி வழங்கிய கதைக்குறிப்பு உண்டு. உவேசா, 275 சிவத்தலங்களின் புராணங்களைத் தொகுத்து வழங்கியுள்ளார். அவர் ஏன் வைணவ திருத்தலங்களுக்குப் போகவில்லை என்பதன் காரணம் தெரியவில்லை. ஒருக்கால், அவர் தேடிவந்த சுவடிகள் சிவாலயங்களில் இருந்திருக்கலாம்.
கொல்லாமை தத்துவம் இந்து மதத்தில் உண்டு என்பதன் அடையாளமே திருக்கோவில்கள். உயிரினங்கள் எல்லாமே தெய்வங்கள் என்ற அடிப்படை ஊடுருவியுள்ளது., சிவனாகட்டும், பெருமாளாகட்டும், திருத்தலங்களில் தல மரங்கள் உண்டு. மரங்களும் தெய்வ வடிவில் உளளன, இயற்கை காப்பாற்றப்பட்டது.
நம் பாரம்பரிய கல்வி முறையான குருகுல வாசத்தில், பள்ளிகள் வனப்பகுதியில் அமைந்திருந்தன. நகரங்களில் வசித்த அரசகுமாரர்களை காட்டுக்கு அழைத்துச் சென்று ராஜகுரு கல்வியும் வில்வித்தையும் கற்றுத் தந்தார். ராம லட்சுமணர்களை விசுவாமித்திரர் காட்டுக்கு அழைத்துச் சென்றது பால ராமாயணம். சீதையை மணம் முடித்தபின் பன்னிரெண்டு ஆண்டுகள் யுவராமாயணம். பாண்டு கௌரவ புத்திரர்களும் காட்டில்தான் கல்வி பயின்றனர். காடுகள் இல்லாமல் காவியங்கள் ஏது?
பஞ்சபூத சக்திகளை வணங்கும் பாசுரங்களே வேதங்கள். வனதேவதைகள் பஞ்சபூத சக்தியின் புத்திரிகளே. வாழ்த்துப் பாசுரங்களே வேதசாரம். மண்ணும், விண்ணும், கடலும், வானும, செடியும், மரங்களும் பயிர்களும், பறவைகளும், பாம்புகளும், சிங்கம் புலி கரடிகளும், மான்களும் பசுக்களும், வாழ வேண்டும் என்று நம் முன்னோர்கள் தெய்வீகப்படுத்தியதெல்லாம் பல்லுயிர்ப் பெருக்கம் வாழ்ந்து புவி வாழத்தானே. மனித வாழ்வே ஆன்மீக ஆராதனை. உயிர்களில் உள்ள ஆன்மாக்களை போற்றுவது மனித தர்மம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.